உள்ளடக்கத்துக்குச் செல்

பிள்ளையார் கதை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





சிறப்புப் பாயிரம்

[தொகு]
செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையிலுள் ளதுவும்
இலிங்க புராணத் திருந்தநற் கதையும்
உபதேச காண்டத் துரைத்தநற் கதையுந்
தேர்ந்தெடுத் தொன்றாய்த் திரட்டியைங் கரற்கு
வாய்ந்த நல்விரத மான்மிய முரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாத னளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண்டிதனே.

காப்பு

[தொகு]
கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்
கணபதியே யிக்கதைக்குக் காப்பு.
திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
வருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

விநாயகர் துதி

[தொகு]
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.
ஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொமுதுங்
கொண்டக்கால் வராது கூற்று.

சப்பாணி

[தொகு]
எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.
சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.

சரஸ்வதி துதி

[தொகு]
புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல் இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.

அதிகாரம்

[தொகு]
பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.

நூல்

[தொகு]
மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர்
இந்துவளர் சோலை இராசமா நகரியில்
அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்
கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்
புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடு நாளின்
மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப்
பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென
அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில்
மைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப
எப்பரி சாயினும் எம்பொருட்டு ஒருசுதன்
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென
எமையா ளுடைய உமையாள் மொழிய
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு
பெண்சொற் கேட்டல் பேதைமை யென்று
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப்
பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
மாதுஉமை யவளும் மனந்தளர்வு உற்றுப்
பொன்றிடு மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்
கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்
சென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால்
மன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று
விடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும்
பெடைம யிற்சாயற் பெண்மக வாகித்
தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்
பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற இயல்பின ளாகி
ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும்
மையார் கருங்குழல் வாள்நுதல் தன்னை
மானுட மறையோற்கு வதுவை செய்திடக்
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்
பிறப்பிறப் பில்லாப் பெரியோற்கு அன்றி
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என
மற்றவன் தன்னைஉன் மணமக னாகப்
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச
அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக்
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து
மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்
பணியணி பற்பல பாங்கியர் சூழ
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் பயில
அரிவைதன் அருந்தவம் அறிவோம் யாமென
இருவரு மறியா விமையவர் பெருமான்
மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து
மானிட யோக மறையவன் ஆகிக்
குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு
மடமயில் தவம்புரி வாவிக் கரையில்
கண்ணுதல் வந்து கருணை காட்டித்
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி
மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்
கொன்றை வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும்
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும்
மாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக்
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்
பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ்
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்
பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை
நச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப்
பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்
ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச்
சேடியர் வந்து செழுமலர் குழலியை
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச்
சிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த்
தந்தைதா யிருவர் தாளினை வணங்கி
வாவிக் கரையில் வந்தொரு மறையோன்
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந்
தோடு அலர்கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன
மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி
நீடிய புகழாய் நீஎழுந்து அருள் என
மைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில்
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும்
பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்
சிவனை இகழ்ந்த சிற்றறி வுடையோன்
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று
சிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி
நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லதென்
பொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்
மானிட வேட மறையவன் தனக்கு
யான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப
மலையிடை வந்த மாமுனி தன்னை இணையடி
தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்
தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து
தாய்சொல் மறுத்தல் பாவமென்று அஞ்சி
ஆயிழை தானும் அவனெதிர் சென்று
சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து
ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி
ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப் பாத
பூசனைகள் பண்ணிய பின்னர்ப்
போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை
தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து
அந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச்
சந்தனங் குங்குமச் சாந்துஇவை கொடுத்துத்
தக்கோ லத்தொடு சாதிக் காயும்
கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின்
ஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச்
சிவனெனப் பாவனை செய்து நினைந்து
தவமறை முனிவனைத் தாளிணை வணங்கத்
தேனமர் குழலி திருமுக நோக்கி
மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்
நெற்றியில் நயனமும் நீல கண்டமும்
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்
கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல்
வரந்தரு முதல்வன் மடமயில் காணக்
கரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப
மரகத மேனி மலைமகள் தானும்
விரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்
கருடர் கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்
பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க்
கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும்
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின்
மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்
பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி
மாணிக் கத்தால் வளைபல பரப்பி
ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப்
பக்திகள் தோறும் பலமணி பதித்துத்
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப்
பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப்
பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக்
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்
பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்
குலவிய திருமணக் கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்
திருமணக் கோலஞ் செய்தன ராங்கே
எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும்
உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக்
கடலென விளங்கும் காவணந் தன்னில்
சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல்
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்
பறையொ லியோடு பனிவளை ஆர்ப்ப
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே
சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத்
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்
சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து
பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே
ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக
ஏரார் வழியில் எண்திசை தன்னைப்
பாரா தேவா பனிமொழி நீயென
வருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத்
திருந்துஇழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு
ஒளிர்மணிப்பூணாள் உரவோ னுடனே
இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென
அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு
மதகரி யுரித்தோன் மதகரி யாக
மதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக்
கூடிய கலவியில் குவலயம் விளங்க
நீடிய வானோர் நெறியுடன் வாழ
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்
செந்தழல் வேள்விவேத ஆகமம் சிறக்க
அறம்பல பெருக மறம்பல சுருங்கத்
திறம்பல அரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு
ஐங்கர தலமு மலர்ப்பதம் இரண்டும்
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந்
தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும்
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும்
பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங்
கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந்
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்
ஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும்
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்
மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும்
மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க
ஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித்
தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரண மாகப் பலகனி யருந்தி
ஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்
காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து
தெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின்
வான வராலும் மானு டராலும்
கானமர் கொடிய கடுவி லங்காலுங்
கருவி களாலுங் கால னாலும்
ஒருவகை யாலும் உயிர ழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்
வரம் பெறுகின்ற வலிமை யினாலே
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக்
கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி
இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி
அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி
முறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன்
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே
அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி
ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன்
சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி
வென்றுவா வென்று விடைகொ டுத்தருள
ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப்
பாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின்
தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற்
கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்
குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே
சோர்ந்த வன்வீழ்ந்து துண்ணென எழுந்து
வாய்ந்த மூடிகமாய் வந்துஅவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி
எந்தை விநாயகன் ஏறினன் இப்பால்
எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில்
செறிந்தது மற்றுஅவன் திருக்கரத் தினிலே
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்
வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே
ஓகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ
வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும்
திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக்
கணபதீச் சுரம் எனுங் காரண நாமம்
கணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ
இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி
இணங்கிய பெருமைபெற்றுஇருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்
யாவரும் வந்துஇவண் ஏவல் செய்திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்
மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி
மனாதிகள் களித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள்
ஒப்பரும் விரதத்துஉறும்ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்
போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை
மருமலர் தூவும் வானவர் முன்னே
நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற
வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமுந்
தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங்
கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்
உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்
அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான்
விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக்
கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்
மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்
இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்
வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த
தருமனும் இளைய தம்பி மார்களுந்
தேவகி மைந்தன் திருமுக நோக்கி
எண்ணிய விரதம் இடையூ றின்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண் டாகவுஞ்
செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும்
எந்தத் தெய்வம் எவ்விர தத்தை வந்தனை
செய்யில் வருநமக்கு உரையெனப்
பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்துத லுற்றான்
அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி
ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்
கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன்
சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்
ஒருகையில் தந்தம் ஒருகையிற் பாசம்
ஒருகையின் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்
உத்தம மாலையோன் உறுநினை வின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்
என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்
புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும்
வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்
ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தாற்
தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண் டாகும்
கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்
சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்
மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு
நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்
விரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்
தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்
முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும்
வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்தன்
ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
விந்தைசேர் சித்தி விநாயக னுருவைச்
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி
ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம்
வாகார் ஆச மனம்வரை கொடுத்து
ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக்
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்
ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால்
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்
பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால்
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப்
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே
உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
குமார குரவன் பாசாங் குசகரன்
ஏக தந்தன் ஈசுர புத்திரன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்
சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி யென்னும் நாமங்களால்
ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி
மோதகம் அப்பம் முதற்பணி காரந்
தீதுஅகல் மாங்கனி தீங்கத லிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு
தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்
விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால்
நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நா னான்கு உப சாரமும்
மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு
உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச்
சந்தன முத்துத் தானந் தக்கிணை
அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்
தரித்த வத் திரத்துடன் தானமாக் கொடுத்து
நைமித் திகம் என நவில்தரு மரபால்
இம்முறை பூசனை யாவர் செய்தலும்
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்
திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்
புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி
விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான்
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்
பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்
ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேரறக் களைந்து
தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான்
பகிரத னென்னும் பார்த்திவன் இவனை
மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்
உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்தான்
கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
வண்டு பாண்மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்
தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம்
புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்
இப்புவி தன்னில் எண்ணிலர் உளரால்
அப்படி நீவிரும் அவனை யர்ச்சித்தால்
எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்றுகன் றெரிந்தோன் எடுத்திவை உரைப்ப
அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை
நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்சிந்தையில்
நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு
அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார்.
ஈங்கு இது நிற்க இவ்விர தத்துஇயல்
ஓங்கிய காதைமற் றொன்று உரை செய்வாம்
கஞ்சநான் முகன் தரும் காசிபன் புணர்ந்த
வஞ்சக மனத்தாள் மாயைதன் வயிற்றிற்
சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி
ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அழித்தே
சீருடைச் சுவர்க்கத் திருவளங் கெடுத்தும்
புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும்
நிரந்தரந் தீய நெறிநடத் துதலால்
ஆயிரங் கண்ணனும் அமரரும் முனிவரும்
நீஇரங்கு எமக்கென நெடுங்கரங் கூப்பி
இரசத கிரிஉறை இறைவனை வணங்கி
வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச்
சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக்
கதிர்விடு வடிவேல் கரதலத்து ஏந்தும்
புதல்வனைத் தருவோம் போமின் நீர்
என அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச்
சமரவேல் விழித் தையலுந் தானுங்
கூடிய கலவியிற் கூடாது ஊடலும்
ஓடிய வானோர் ஒருங்குடன் கூடிப்
பாவகன் தன்னைப் பரிவுடன் அழைத்துச்
சூரன் செய்யுந் துயர மெல்லாம்
ஊர் அரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக்
காமனை யெரித்த கடவுளென் றஞ்சிப்
பாவகன் பயமுறப் பயமுனக்கு ஏதென
உற்றிடுங் கரதலத்து உன்னையே தரித்தான்
நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற்
குற்றம் அடாது கூறுநீ சென்றென
வானவர் மொழிய மற்றவன் தானுந்
தானும் அச் சபையில் தரியாது ஏகி
எமைஆளுடைய உமையா ளுடனே
அமையா இன்பத்து அமர்ந்துஇனிது இருந்த
பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும்
ஒள்ளிய மடந்தை ஒதுங்கி நாணுதலுந்
தெள்ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே
ஆறுமுகப் பிள்ளையை அவன்கையில் ஈதலும்
வறியவன் பெற்ற வான்பொருள் போலச்
சோதி நீண்முடிச் சுடரோன் கொணர்ந்து
வாத ராசன் மலர்கையிற் கொடுப்ப
நீதி யோடு நின்று கையேந்திப்
போதநீள் வாயுவும் பொறுக்க ஒண்ணாமல்
தரும்புனற் கங்கை தன்கையில் கொடுப்பத்
தரும்புனற் கங்கையுந் தாங்கவொண் ணாமற்
பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத்
தண்ஆர் வதனத் தாமரை ஆறுங்
கண்ஆறு இரண்டுங் கரம் ஈராறுந்
தூண் எனத் திரண்ட தோள் ஈராறும்
மாண் அயில் ஆதி வான்படை யுங்கொண்டு
அறுமுகக் கடவுள் அங்கு அவதரித் திடலும்
மறுகிய உம்பர் மகிழ்ந்துஉடன்கூடி
அறுமீன் களைப்பால் அளித்தீர் என்றுஅனுப்ப
ஆங்கவர் முலையுண்டு அறுமுகன் தானும்
ஓங்கிய வளர்ச்சி யுற்றிடு நாளில்
விமலனும் உமையும் விடையுகைத்து ஆறு
தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து
முருகுஅலர் குழல் உமை முலைப்பால் ஊட்ட
இருவரும் இன்பால் எடுத்துஎடுத்து அணைத்துத்
தேவர் தம்படைக்குச் சேனா பதியெனக்
காவல்கொண்டு அளிக்கக் கதிர்முடி சூட்டி
அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத்
திசையெலாஞ் செல்லுந் தேருமொன்றுஉதவிப்
பூதப் படைகள் புடைவரப் போய்நீ
ஓதுறும் அவுணரை ஒறுத்திடு என்றனுப்ப
இருளைப் பருகும் இரவியைப் போலத்
தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக்
குருகுபேர் பெறுங் குன்றமுஞ் சூரன்
மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே
யாவரும் வியப்புற இந்திரன் மகளாந்
தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு
அமரர் கோனுக்கு அமருலகு அளித்துக்
குமர வேளுங் குவலயம் விளங்க
அமரா வதியில் அமர்ந்து இனிது இருந்தான்
சமரவே லுடைச் சண்முகன் வடிவுகண்டு
அமரர் மாதர் அனைவரும் மயங்கி
எண்டருங் கற்பினை யிழந்தது கண்டே
அண்ட ரெல்லாம் அடைவுடன் கூடி
மாதொரு பாகனை வந்துஅடி வணங்கி
மருமலர்க் கடம்பன் எம் மாநகர் புகாமல்
அருள்செய வேண்டும்நீ அம்பிகா பதியென
இமையவர் உரைப்ப இறையவன் தானுங்
குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக்
காவல்கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ்
சேவலங் கொடியோன் தேசம் போகத்
திருந்திழை உமையாள் அருந்துயர் எய்தி
வருந்திமுன் னிற்க மங்கையைப் பார்த்து
மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி
அங்கையாற் சூதெறிந்து ஆடுவோம் வாவென
வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக்
குன்றமென் முலையாள் கூறிய சமயம்
புற்றுஅரவு அணிந்த புனிதனைக் காணஅங்கு
உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற்
சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து
மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச்
சாயக நேருந் தடநெடுங் கருங்கண்
நாயகி வெல்ல நாயகன் தோற்ப
இன்பவாய் இதழ் உமை யான்வென்றேன் என
எம்பெரு மானும் யான்வென்றேன் என
ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி
இருவருஞ் சாட்சியம் இவனைக் கேட்ப
மாமனை வதைத்த மால்முகம் நோக்கிக்
காமனை யெரித்தோன் கண்கடை காட்ட
வென்ற நாயகி தோற்றா ளென்றுந்
தோற்ற நாயகன் வென்றா னென்றும்
ஒன்றிய பொய்க்கரி உடன் அங்கு உரைப்பக்
கன்றிய மனத்தொடு கவுரி அங்குஉருத்து
நோக்கிநீ இருந்தும் நுவன்றிலை யுண்மை
வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய்
மைக்கரி யுரித்தோன் வதனம் நோக்கிப்
பொய்க்கரி யுரைத்த புன்மையி னாலே
கனலென வயிற்றிற் கடும்பசி கனற்ற
நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க்
கடகரி முகத்துக் கடவுள் வீற்றிருக்கும்
வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள்
முளரிகள் பூத்த முகி்ல் நிறத்து உருப்போய்த்
துளவு அணி மருமனுந் துணைவிழி யிழந்தே
ஆண்டு அரைக் கணத்தில் ஆயிரம் யோசனை
நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து
வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல் வீற்றிருக்குங்
கிளர்சினை ஆலின் கீழ்க்கிடந் தனனால்
திரிகடக் கரியின் திருமுகக் கடவுளும்
வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே
எழில்பெறு வடமரத் தின்கீழ் இருந்தான்
கம்ப மாமுகத்துக் கடவுள்தன் பெருமையை
அம்புவி யோருக்கு அறிவிப் போம் என
உம்பர் உலகத்து ஓர் எழு கன்னியர்
தம்பநூல் ஏணியில் தாரணி வந்து
கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக்
கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்தபின் னாளில்
ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி
இருபத் தோர் இழை இன்புறக் கட்டி
ஒருபோது உண்டி உண்டு ஒரு மனமாய்
வேதத்து ஆதியும் பூமியில் எழுத்தும்
ஆதி விநாயகற்கு ஆன எழுத்தும்
மூன்றெழுத்து அதனால் மொழிந்த மந்திரமும்
தேன்தருங் குழலியர் சிந்தையுட் செபித்தே
உரைதரு பதினாறு உபசா ரத்தால்
வரைமகள் மதலையை வழிபாடு ஆற்றி
இருபது நாளும் இப்படி நோற்று
மற்றைநாள் ஐங்கர மாமுகன் பிறந்த
அற்றைநாள் சதயமும் ஆறாம் பக்கமுஞ்
சேரும் அத் தினத்தில் தெளிபுனல் ஆடி
வாரண முகத்தோன் வதிபெருங் கோயில்
சீர்பெற மெழுகித் திருவிளக் கேற்றிக்
குலவுபொற் கலைகள் கொடு விதானித்து
உலர்பல தொடுத்திடு மாலைகள் ஆற்றிக்
கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை
மலைமுகக் கடவுளை மஞ்சனம் ஆட்டிப்
பொற்கலை நன்னூற் பூந்துகில் சாத்திச்
சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிக்
செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு
குருத்து மல்லிகை கோங்கொடு பிச்சி
கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி
மருவிரி ஞாழல் மகிழ் இரு வாட்சி
தாமரை முல்லை தழையவிழ் கொன்றை
பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை
காந்தள் ஆத்தி கடம்பு செவ்வந்தி
வாய்ந்த நல்எருக்கு மலர்க்கர வீரம்
பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு
முத்தளக் கூவிளம் முதலிய சாத்தித்
தூப தீபங்கள் சுகம்பெறக் கொடுத்தே
அப்பம் மோதகம் அவல் எள் ளுண்டை
முப்பழந் தேங்காய் முதிர்முழுக் கரும்பு
தேனுடன் சர்க்கரை செவ்விள நீருடன்
பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன்
பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி
நோற்பது கண்டு நோலாது இருந்த
பாப்புரு வாகிய பஞ்சா யுதனும்
யாப்புறு கொங்கையீர் யானும் நோற்பேன் என
ஆங்கு அவன் தனக்கும் வேண்டுவது அளித்துப்
பாங்கொடு இவ்விரதம் பரிந்து நோற்பித்தார்
அண்டர் நாயகனாம் ஐங்கரன் அருளால்
விண்டுவும் பண்டுஉள வேடம் பெற்றே
உஞ்சைமா நகர்புகுந்து உமையொடு
விமலன் கஞ்சநாள் மலர்ப்பதங் கைதொழு திடலும்
பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின்
வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி
யானிடுஞ் சாபம் நீங்கியது ஏதென
மானெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப
இறையவன் இதற்குக் காரணம் ஏதென
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்
பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளைஅன்று
எனக்குத் தந்தருள் புரிந்த தவப்பயன் ஈதெனச்
சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும்
பூங்கொடி அடைத்த பொன்தாழ் நீங்கச்
சாங்குமுன் உரைத்த சக்கர பாணி
இக்கதை சொல்ல அக்கணி சடையனும்
மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின்
மாதுஉமை அடைந்த வன்தாழ் நீக்கி
நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான்
தானோ வந்தது நகையா னதுவெனத்
தேன்நேர் மொழியாள் தெளியக் கூறென
நன்மதி நுதலாய் நானிலந் தன்னில்
உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து
சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென
அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப்
பொருஞ் சூர் அறவேல் போக்கிய குமரன்
வரும்படி யானும் வருத்தி நோற்பேனென
இறையவன் கதைசொல ஏந்திழை நோற்றபின்
குறமட மகளைக் குலமணம் புரிந்தோன்.
சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து
தாதுமை வண்டுஉழுந் தாமத் தாமனை
மாதுமை யாளை வந்து கண்டனனே
கண்ணநீ கண்ணிலாக் கட்செவி ஆகுஎனக்
தண்நறுங் குழலுமை சாபமிட் டதுவும்
அக்கு நீறணியும் அரன்முதல் அளித்த
விக்கின விநாயகன் விரதம் நோற்றுஅதன்பின்
சுடர்க்கதை ஏந்துந் துளவ மாலையன்
விடப்பணி யுருவம் விட்டு நீங்கியதும்,
பவுரிகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக்
கவுரிஅன்று அடைத்த கபாடந் திறந்ததும்,
வாசமென் குழலுடை மாதுமை நோற்பத்
தேசம் போகிய செவ்வேள் வந்ததும்,
வானவர் நோற்று வரங்கள் பெற்றதும்,
நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே
இந்நிலந் தன்னில் இவ்விர தத்தை
மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக்
காயத் தெழுந்த கடும்பிணி தீர்த்து
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து
தடமுலைத் திலோத்தமை தனைமணம் புரிந்து
மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான்
பரிவொடு இவ்விரதம் பாரகந் தன்னில்
விரைகமழ் நறுந்தார் விக்ர மாதித்தன்
மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள்
மற்றவன் காதல் மடவரல் ஒருத்தி
இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி
மெத்த அன்புடன் இவ் விரதம் நோற்பேனென
அத்தந் தன்னில் அணியிழை செறித்துச்
சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின்
உற்ற நோன்பின் உறுதி மறந்து
கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து
வற்றிய கொவ்வையின் மாடே போட
ஆங்குஅது தழைத்தே அலருந் தளிருமாய்ப்
பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு
வேப்பஞ் சேரியிற் போய்ச் சிறையிருந்த
பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி
அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற்
கொவ்வை அடகு கொய்வாள் குறுகி
இழையது கிடப்பக் கண்டுஅவள் எடுத்துக்
குழைதவிழ் வரிவிழிக் கோதை கைக்கட்டி
அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச்
செப்ப முடனே திருந்திழை நோற்றிடக்
கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து
பண்டையில் இரட்டி பதம் அவட்கு அருள
கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான்
விக்கிர மாதித்தன் விழிதுயில் கொள்ள
உக்கிர மான உடைமணி கட்டித்
தண்டையுஞ் சிலம்புத் தாளினின்று ஒலிப்பக்
கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன்
மனமிகக் கலங்கு மன்னவன் தன்னிடங்
கனவினில் வந்து காரண மாக
இலக்கண சுந்தரி இம்மனை யிருக்கிற்
கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத்
துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக்
கண்ணுறக் கண்ட கனவின் காரணம்
அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில்
ஆனை குதிரை அவைபல மடிவுற
மாநகர் கேடுறும் வகையது கண்டு
இமைப் பொழுதுஇவள் இங்கு இருக்க லாகாதுஎன
அயற் கடைஅவனும் அகற்றிய பின்னர்
வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப
மணியும் முத்தும் வலிய கல்லாய்விட
அணியிழை தன்னை அவனும் அகற்ற
உழவர் தம்மனையில் உற்றுஅவள் இருப்ப
வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற
அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க்
குயவன் மனையிற் கோற்றொடி செல்லக்
குயக்கலம் உடைந்து கொள்ளை போக
அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்த்
தூசுதூய்து ஆக்குந் தொழிலோர் மனைபுகத்
தூசுக ளெல்லாந் துணிந்து வேறாகத்
தூசரும் அவளைத் தூரஞ் செய்ய
மாலைக் காரன் வளமனை புகலும்
மாலை பாம்பாம் வகையது கண்டு
ஞாலம் எல்லாம் நடுங்கவந்துஉதித்தாய்
சாலவும் 'பாவிநீ தான்யார்?' என்ன
வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா
அம்மனை அவனும் அகற்றிய பின்னர்
அவ்வை தன்மனை அவள்புகுந் திருப்ப
அவ்வை செல்லும் அகங்கள் தோறும்
வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர்
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர்
அவ்வை மீண்டுதன் அகம் அதிற் சென்று
இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக்
காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட
மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி
எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி
சொல்லு விக்கிரம சூரியன் மனையெனச்
சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி
நீரது கொண்டு நிலம்மெழு கிடுகஎனச்
சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றாள்
சாணியும் புழுத்துத் தண்ணீர் வற்றிப்
பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற
மானேர் விழியாள் வருந்துதல் கண்டு
தானே சென்று சாணி யெடுத்துத்
தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு
மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப்
புத்தகம் எடுத்து வாவெனப் புகலப்
புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட
மெத்தஉள் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக்
கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி
அவ்வை தானே அகமதிற் சென்று
புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து
வித்தக நம்பி விநாயக மூர்த்தி
கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென
உத்தமி அவ்வை உணர்ந்து முன்அறிந்து
தவநெறி பிழைத்த தையலை நோக்கி
துவலரும் விநாயக நோன்பு நோற்றிடுகஎனக்
கரத்து மூஏழுஇழைக் காப்புக் கட்டி
அப்பமும் அவலும் மாம் பல பண்டமுஞ்
செப்ப மதாகத் திருமுன் வைத்தே
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு
மத்தகக் களிற்றின் மகா விரதத்தை
வித்தக மாக வியங்குஇழை நோற்றுக்
கற்பக நம்பி கருணை பெற்றதன்பின்,
சக்கர வாள சைனி யத்தோடு
விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று
தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி
எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே
அவ்வை தன்மனை அங்குஅவர் அணுக
எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு
செவ்வே அவற்றைத் தீர்க்க வெண்ணி
இலக்கண சுந்தரி என்பவள் தன்னை
அப்பமும் நீரும் அரசற்கு அருள்எனச்
செப்பிய அன்னை திருமொழிப் படியே
உண்நீர்க் கரகமும் ஒரு பணிகாரமும்
பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ
ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும்
அப்பசி தீர அருந்திய பின்னர்
ஆனை குதிரை அவைகளும் உண்டுந்
தான்அது தொலையாத் தன்மையைக் கண்டே
இவ்வகை சமைத்தநீ யாரென வினவ
மவ்வல்அம் குழலாள் மௌனமாய் நிற்ப
அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள்
கணபதி நோன்பின் காரணங் காண்இது
குணமுடை இவள்உன் குலமனை யாட்டி
இலக்கண சுந்தரி என்றுஅவ்வை கூற
மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து
திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக்
கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும்
ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன்
சிந்துர நுதலார் சென்றுஅடி பணியச்
சுந்தரி இருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே.

காப்பு

[தொகு]
கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்
கணபதியே யிக்கதைக்குக் காப்பு.
திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
வருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.


நூற்பயன்

[தொகு]
பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும்
மன்னும் நவமணியும் வந்துஅணுகும் - உன்னி
ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின்
திருக்கதையைக் கேட்கச் சிறந்து.
பொற்பனைக்கை முக்கண் புகர்முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்
கற்றவரும் நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.
வெள்ளை எருதுஏறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகுஇருந்து
கேட்டோர்க்கும் வாராது கேடு.
சூலிலார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார்
காலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் - மேலைப்
பிறப்புஎல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து.


வெளி இணைப்பு: நூலகம் திட்டம்

[தொகு]
"https://ta.wikisource.org/w/index.php?title=பிள்ளையார்_கதை&oldid=1885457" இலிருந்து மீள்விக்கப்பட்டது