புகழேந்தி நளன் கதை/கலிதொடர் காண்டம்

விக்கிமூலம் இலிருந்து

2
கலிதொடர் காண்டம்

திசை முகந்த தெருவும், இசைமுகந்த வாயும், இயல் தமிழ் தெரிந்த நாவும் கண்ட அவன் அந்நாட்டுச் சோலை கள், செய்குன்றுகள், பொய்கைகள், அருவிகள், ஆறுகள் அங்கெல்லாம் அவளுடன் சென்று ஆடி மகிழ்ந்தான். இன்பத்தில் திளைத்த அவன் கடமை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான்.

கட்டியவளை அழைத்துச் சென்று ஒட்டி உறவாடும் புதிய வாழ்க்கையை விரும்பினான். தம் இல் இருந்து தமது வருவாயில் வாழ்ந்து தம்மவரோடு கலந்து உறவாடும் இன்பம் தனித்தன்மையது. சொந்த நாடு திரும்ப விரும்பினான். அவளைத் தன் வீட்டில் வைத்து இன்புறுத்தி மகிழவைக்க விரும்பினான். நாடு திரும்பும் நற்கருத்தை அவளிடம் நவின்றான்.

தேரைப் பூட்டினான். அருகில் அவள் அமர்ந்தாள். நகருக்கு வந்தபோது தனியனாக வந்தான். இப்பொழுது இனியனாகத் திரும்பினான். பக்கத்தில் பத்தினி ஒருத்தி அமர்ந்திருந்தாள். காணிநிலம் கேட்டுக் கேணி அருகே ஒரு குடிசையில் வாழும் கவிதை போன்ற வாழ்க்கையை அவன் கண்டான்.

“தேன் போன்ற மொழியாளே அங்கே ஒரு காட்சியைப் பார்” என்று கூறிக் காட்டினான்.

புல்லும் வரிவண்டைக் கண்டு அது பேதுறாமல் இருக்கப் பெண் ஒருத்தி அதனை விட்டு அகல்கிறாள். காற்சிலம்பு ஒலி அதற்கு அதிர்வு தரக் கூடாது என்பதற்காக அதன் ஒலியை அவிக்கிறாள். மெல்ல நடக்கிறாள். பூவைப் பறிக்காமல் தளிரை மட்டும் கொய்து திரும்புகிறாள். மயில் போன்ற அழகி அவள் என்பதைச் சுட்டிக் காட்டினான். காதல் நெஞ்சு அது மென்மையது என்பதைக் குறிப்பாக உணர்த்தினான். .

காதலன் ஒருவன் பூவினைப் பறிக்கிறான். காதலி தன் கூந்தலில் வைக்க நினைக்கிறான். அருகில் செல்கிறான். அவள் சுமை தாங்காள்; இடை மெல்லியள் என்பதால் அப்பூமலரை அவள் பாதத்தில் வைத்துச் சூட்டி மகிழ்வு காண்கிறான். பாதத் தாமரைக்கு அவன் வணக்கம் செய்வது போல் இருக்கிறது என்று சுட்டிக் காட்டினான்.

மணல் மேடுகளில் பூக்களும் முத்துகளும் சிதறிக் கிடக்கின்றன. புலவிக் காலத்தில் பிணக்குக் கொள்ளும் மாதராள் சீற்றத்தில் சிதறச் செய்யும் அணிகலன்கள் மலர் மாலைகள் போல அவை உள்ளன என்று எடுத்துக் கூறினான். படுக்கை அறையை அவளுக்கு நினைவுப் படுத்தினான். இவன் அவளோடு புலவி கண்ட நிலவுகளை நினைவுப்படுத்தினான்.

மகளிர் பூக்கொய்து அகற்றும் அக்கொம்புகள் தளர்ந்து சிதைந்து சாய்ந்து கிடந்தன. அதனைக் காட்டிக் களிப்பில் மகிழ்வு கண்ட மாதர் பின் தளர்வுற்றுச் சாய்ந்து கிடக்கும் நிலையை நினைவுப்படுத்தினான். பழைய நினைவுகளை அவள் கண்முன் கொண்டு வந்து வைத்தான். கிளர்ச்சியுறப் பேசினான்.

மங்கை ஒருத்தி அங்கைபட்டு வாய் நெகிழ்ந்த ஆம்பற் பூ, அவள் அதனை தன்முகத்தில் சேர்க்க அது சந்திரன் என்று கருதி அது மலர்கிறது. மூடிக் கிடந்த இதழ்கள் விரிந்து பூத்தன என்று கூறினான்.

கொய்த குவளை மலரினை ஒருத்தி தன் குறு நெற்றியில் வைத்து அழகு பார்க்கிறாள்; அவள் நெற்றிக் கண் படைத்த சிவன் போல் காட்சி அளிக்கின்றாள் என்று சுட்டிக் காட்டினான். அப்பெண்ணின் கண்கள் கருங்குவளை என்று பாராட்டிப் பேசினான்.

மற்றொருத்தி தன் கணவன் வாரி இறைக்கும் நீரைத் தடுக்க வண்ண மலரை ஏந்தினாள். அது தாமரைப் பூ முகத்தோடு அப்பூவினைச் சேர்த்து வைக்கிறாள். பூ மகளுக்குத் தன் காதலன் இழைக்கும் குற்றங்களைக் சொல்வது போல் அது காட்சி அளிக்கிறது என்றான்.

பொய்கையில் இருந்த தாமரை மலர்கள் இரண்டனைப் பறிக்கிறாள். அவற்றைத் தன் செவிகள் இரண்டில் தனித்தனியே செறித்து வைக்கின்றாள். இப்பொழுது அவளுக்கு மூன்று முகம் ஆகிவிட்டது என்று சுட்டிக் காட்டினான். இவளும் தெய்வப் பெண் ஆகி விட்டாள் என்று கூறினான்.

காதலி ஒருத்தியோடு குளத்தில் முழுகுகிறான். தாமரைத் தடாகம் அது. உள்ளே முழுகி எழுந்த தன் காதலியை அவன் கண்டு கொள்ள முடியவில்லை; அங்குள்ள பூ மலர்களில் ஒன்று என்று தவறாகக் கருதி அவளைக் காணாது துடிக்கிறான். ஏங்குகிறான். கலங்குகிறான். அவள் சிரிக்கிறாள். பின்பு இவன் கண்டு களிக்கிறான். அவள் மலர் அல்ல மங்கை என்பதை அறிகிறான். தாமரைப் பூ போல் உள்ளது மங்கையர் முகம் என்பதை இவளுக்கு அறிவித்தான். சில சமயம் இரண்டுக்கும் வேறுபாடே காண முடிவதில்லை என்று புகழ்ந்து பேசினான்.

சிறுக்கின்ற ஒளிமுகம்; செங்காந்தள் போன்ற கைகள்; முறுக்கு உடைய நெடுங் கூந்தல் இவற்றைக் காட்டி இவை கரும் பாம்பு பற்றிக் கொள்ளும் திங்கள் என்று காட்டினான். அவள் முகம் சந்திரன்; முறுக்குடைய கூந்தல் பாம்பு என்று உவமைப் படுத்திக் கூறினான்.

பெண்ணொருத்தி நீரில் முழுகி எழுகிறாள். முகத்தில் படிந்த கூந்தலை நீவி வாரித் தள்ளுகிறாள். அவள் முகம் மதிபோல் காட்சி அளிக்கிறது. மேகத்தைக் கிழித்துக் கொண்டு வெளிப்படும் மதி அவள் முகம் என்று பாராட்டிக் கூறினான். அழகை ரசிப்பதில் அவன் கொண்ட ஆர்வத்தைப் புலப்படுத்தினான்.

மகளிர் அழகைப் பாராட்டிப் பேசுவது அவளுக்கும் மகிழ்வையே தந்தது; அவள் இளம் உள்ளம் அவனை மகிழ்வித்தது.

அங்கே ஒரு பெண் செங்குவளை பறிக்கச் செல்கிறாள். இவள் நீலவிழிகள் அவற்றைப் பார்க்க அதன் கோல அழகும் மாறிவிடுகிறது; செங்குவளை கருங்குவளை யாகிறது. தன் கண்ணைப்போலவே அவை விளங்கியதால் பறிக்க மனம் இல்லாமல் நின்று விடுகிறாள். இப்படியும் ஒரு பெண் இருக்கிறாள் என இவன் செப்புவது கேட்டு அவளும் மகிழ்வு அடைந்தாள். பேதைப் பெண் அவள் என்று இரக்கம் காட்டினாள். நீல விழிகள் பெண்களுக்குக் கோல அழகு தருகிறது என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசினான்.

மகளிர் முகம் மதி; தாமரை என்று பேசினான். கண்கள் குவளை என்றான். கைவிரல்கள் காந்தள் முகை என்றான். கண்கள் கருங்குவளை என்றான். காதல் நெஞ்சம் இத்தகையது என்று அக்காட்சிகளைக் காட்டி உணர்த்தினான்.

அவர்கள் வழி நெடுகச் சோலைகளையும் பொய்கைகளையும் கண்டு மகிழ்ந்தனர். அங்குக் காதல் புரிந்த இளைஞர்களைக்கண்டு அவர்கள் செய்கைகளில் புதுச்சுவை கண்டனர்.

மற்றும் அங்கே தங்கி இளைப்பாறினர். களைப்பு நீங்கக் குளத்திலும் ஆற்றிலும் நீராடி மகிழ்ந்தனர். கங்கை நதி அவர்களைக் கவர்ந்தது. அதில் நீராடி மகிழ்வது சிந்தைக்கு இனிமை தந்தது. புனிதம் மிக்கது என்பது மட்டும் அல்ல; வெள்ளம் மிக்கது; குளிர்ச்சி தந்தது. அலைகள் அவர்களை அழைத்தன. அதில் நீராடிக்கரை ஏறினர்.

அங்கே ஒரு பூ மரச் சோலை; அதனை இளமரச் சோலை என்றனர். அதைக் கண்டு தமயந்தி வியந்தாள். பூவும் தளிரும் எழில் மிக்கவையாகக் காட்சி அளித்தன. மகளிர் தம் காதலருடன் களித்து மகிழ்ந்தனர். இளம் மங்கையர் அங்கும் இங்கும் திரிந்து அழகு சேர்த்தனர்.

இவன் வாய் வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம். அந்தச் சோலையை அவன் பாராட்டினான். இதுபோல் தன் நாட்டிலும் சோலைகள் உள்ளன. அங்குத்தான் தான் ஆடி மகிழ்வது உண்டு என்று கூறினான்.

“இந்தப் பொழில் எங்கள் எழில் நகரில் உள்ள சோலையைப் போல் உள்ளது” என்று அவளிடம் பேசுவதற்கு இதனை ஒர் வாய்ப்பாகக் கொண்டான். அவள் புன்முறுவல் பூப்பாள் என்று எதிர்பார்த்தான்.

அவள் கற்பனை எங்கோ சென்றுவிடுகிறது. இந்த இளைஞர்கள் தம் காதலியரைச் சந்தித்துக் கலந்து உரையாடும் கலகலப்பு அவளுக்குச் சிலிர் சிலிப்பை உண்டு பண்ணியது.

நளனை அழகிய மகளிருடன் வைத்துப் பார்த்தாள். அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “கோட்டுப்பூச் சூடினும் காயும்” நிலையை அடைந்தாள். “நீர் யாரை ஒப்பிட்டுப் புனைகின்றீர்” என்று கேட்பது போன்ற நினைவு எழுந்தது.

“அப்படி என்றால் நீயும் இளமகளிருடன் வளமுடன் உரையாடி மகிழ்ந்தீரா?” என்று கேட்டாள். தொடர்ந்து பிணக்குக் கொண்டாள். அவள் முறுக்கு மாற்ற வேண்டியது; அவள் சிணுக்கு அது; தான் சறுக்கவில்லை என்று சொல்லிப் பார்த்தான்.

அப்பு அழுக்கு இல்லாத வாழ்க்கை என்று செப்பிப் பார்த்தான். அவள் ஒப்புக் கொள்வதாக இல்லை.

அணைக்கச் சென்றான் அவன்; அவள் இணக்கம் காட்டவில்லை; சினந்தாள்; கண் சிவந்தாள்.

“வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல” என்பதை அறிந்தான். ஊடல் தீர்வதற்கு ஒரே மருந்து அவள் காலில் விழுந்து மன்றாடுவது. கொஞ்சுவதற்கு வழி அவளைக் கெஞ்சுவதுதான். அப்பொழுதுதான் அவள் மிஞ்சுவதைத் தவிர்க்க முடியும் என்று கொண்டான். அவள் காற்சிலம்பு அதனைத் தன் முடி மீது வைத்தான்; சீறடியைத் தொட்டு அதனைத் தன் மணிமுடி மீது வைத்தான். பேரிடி மாறியது; சிவப்பு நீலம் ஆகியது. அவள் சிவந்த கண்களின் சினக்குறிப்பு மாறியது. அவள் கண்கள் நீலநிறம் பெற்றன. பழைய கருங்குவளையை வளையல் அணிந்த அந்த இளைஞியிடம் கண்டான்; உறவு கொண்டான்.

ஊடல் தீர்ந்தது; கூடி மகிழ்ந்தான்; அவள் அவன் விருப்புக்கு உடன்பட்டாள். அவன் மார்பு அவள் உழும் நிலம் ஆயிற்று; கொங்கை ஏர் பூட்டிக் குறுவியர் நீர் அங்கு அடைத்துக் காதல் என்னும் வரப்பினை அமைத்து அவள் காமப் பயிர் விளைவித்தாள். அவள் அணைப்பு அவனுக்குப் பிணைப்பு ஆகியது; காமம் தணிப்பு பெற்றது.

வாவியும் ஆறும் குடைந்தாடிச் சோலைகளில் தங்கி இன்புற்றுப் பயணம் முடித்தான். நிடத நாட்டின் கங்கைக் கரையை அவர்கள் அடைந்தனர்.

நகர்புறச் சோலை ஒன்றில் நளன் தேரில் இருந்து இறங்கி அங்குத் தங்கினான். அங்கிருந்து எழில் மிக்க நகரின் மதில்களையும், விண்ணுயர்ந்த மாடங்களையும் மதிலிற் பறந்த கொடிகளையும் காட்டினான்.

“அதோ தெரிகிறதே அதுதான் நம் நகர்” என்று உணர்வு படக் கூறினான்.

தான் செல்லும் நகர் நோக்கி அவள் எல்லையற்ற மகிழ்வு கொண்டாள். மிகப் பெரிய நகர்; அவன் மாமன்னன் அவள் பட்டத்து அரசி தமயந்தி.

அவள் உள்ளம் மகிழ்வு பெற்றது. கணவன் வீட்டை அடையும் புதுமணப் பெண் அடையும் மகிழ்ச்சி, மன எழுச்சி அவள் பால் தோன்றின. அங்குச் செல்வதை அவள் எதிர்நோக்கி இருந்தாள். நகரத்தை அடைந்தனர்; அரண்மனை வாழ்வு அவளுக்கு அரண் தந்தது.

தன் சொந்த நாட்டை அடைந்ததில் அவனுக்குப் பெரு மகிழ்வு; இளமை மிக்க அவன் வளமை மிக்க வாழ்வு நடத்தினான்.

மகிழ்வு என்பது மாளிகையில் இல்லை. கதவு அடைப்புச் செய்து கொண்டிருப்பதால் மட்டும் மகிழ்வு காண்பது இல்லை; சுற்றித் திரிந்து ஆடி மகிழ்வதில் அவர்கள் இன்பம் அடைந்தனர். அவன் தன் நாட்டில் இருந்த சோலைகளுக்கு அவளை அழைத்துச் சென்றான் பொய்கைகளில் அவளோடு நீராடி மகிழ்ந்தான். செய்குன்றுகளில் திரிந்து சுற்றி மகிழ்ந்தான். இன்ப வாழ்வு இடையீடு இல்லாமல் தொடர்ந்தது.

ஆண்டுகள் பன்னிரண்டு அவர்கள் இன்ப வாழ்வு தொடர்ந்தது. எந்த இடையூறும் அவர்கள் இன்பத்துக்குத் தடை செய்யவில்லை. மனைமாட்சி சிறப்புற மக்கட் பேறுதேவை; அது இல்வாழ்வின் நற்பேறு; அதனையும் அவர்கள் பெற்றனர். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் மக்கள் இருவரைப் பெற்றனர். மூத்தவன் மகன், இளையவள் மகள்.

மக்களைப் பெற்ற மகராசியாகத் தமயந்தி விளங்கினாள். அந்தக் குடும்பம் ஒரு பூங்காவாகத் திகழ்ந்தது. பூத்துக் காய்த்த மரமாக அவர்கள் விளங்கினர். கனிகள் காய்த்துக் கவின் தந்தது.

இல்லற வாழ்வு இனிது தொடர்ந்தது. இந்த ஆண்டுகள் பன்னிரண்டும் வழுக்கி விழாமல் வாழ்வு நடத்தினான்.

ஏதாவது சறுக்கு ஏற்பட்டால் அவனை இறக்கித்தள்ளக் கலியன் காத்திருந்தான், ஏதாவது சிறு தவறு செய்தால் போதும் அவனை வளைத்துப் பிடிக்கலாம் என்று காத்திருந்தான். தெய்வக் குற்றம் ஏதாவது செய்வான் என்று காத்திருந்தான். நீதி வழுவுவான் என்று எதிர் பார்த்தான்.

செங்கோன்மை தவறவில்லை; நேர்மை குறையவில்லை; இமயம் போல் உயர்ந்து விளங்கியது அவன் வாழ்வு. காத்திருந்தான் கடன்காரன் அவன் உடைமையைக் கவர.

நாளும் தெய்வச் சடங்கு இயற்றுபவன் நளன். அந்திப் பொழுது வந்ததும் இறைவணக்கம் செய்து வந்தான். கால் கழுவிப் பின் இறைவணக்கம் செய்வது வழக்கம்.

அவசரப்பட்டான்; சிறு தவறு; காலில் சிறுமறு; மாசு அகலவில்லை; தூசு ஒட்டிக் கொண்டிருந்தது. சடங்கில் அவன் இடர் உற்றான்; நியமத்தில் நிந்தை ஏற்பட்டு விட்டது. இனி அது வாய்க்கால் வழி ஆகக் கலியனுக்கு அமைந்தது. பற்றுவதற்கு அது பற்றுக் கோடு ஆகியது.

அவனைக் கெடுப்பதற்கு அது ஆரம்ப நிகழ்வாக அமைந்தது. விழா எடுக்க அது தோற்றுவாயாக அமைந்தது. கால்கோள் விழாவாக அதனைக் கலியன் கொண்டான்.

கெடுப்பது என்று மனம் கொண்டு அடுத்துக் கெடுக்க முனைந்தான். திண்ணிய அவன் மனத்தை நெகிழச் செய்தான். எதிலும் எந்தத் தவறும் செய்யாதவன் தொடர்ந்து தவறுகள் செய்யத் தூண்டினான். தளர்ச்சி அவன் செயற்பாட்டில் உண்டாக்கினான். விழிப்பு உணர்வை அவன் வழி அடைத்தான். அயர்ந்தான் என்று கூறவேண்டி உள்ளது.

கலி அவனைத் தொடர்ந்தான். இறைவன் வழிபடாதவரைத் துயர்கள் வந்து அடைவதைப் போலக் கலி அவனை அடைந்தான். அவனைக் கெடுப்பதற்கு வழி யாது? அவன் தமையன் உறவினன்; அவனை அணுகினான் அவனுடன் பேசினான்.

“உனக்குப் பரிசுச் சீட்டுக் காத்திருக்கிறது” என்றான்.

அவன் அதை நம்பவில்லை; “ஒன்றுவைத்தால் நூறு பெறலாம்” என்றான்.

அது அவனுக்கு வியப்புத் தந்தது.

ஏதோ புதுப்படம் எடுத்துக் கோடி கணக்கில் பணம் ஈட்டலாம் என்று தூண்டி விடுவதுபோல் அது இருந்தது. அதில் சறுக்கி விழுபவர் பலர். அந்த மாதிரி ஏதோ வழிகாட்டுகின்றான் என்று நினைத்தான்.

“குறுக்கு வழிகள் பல இருக்கின்றன பொருள் ஈட்ட” என்றான்.

“அரசியலுக்கு அறிமுகம் செய்கிறான்” என்று நினைத்தான் புட்கரன். அவன் அந்நாட்டு மன்னன்.

“காய் உருட்டு; அதன் வழி பொருள் திரட்டு” என்று கூறினான் கலி.

“சூது ஆடுவது தீது” என்று சுட்டிக் காட்டினான் புட்கரன்.

“உழைப்பது என்பது உத்தமர் செயல்; நம்மைப் போன்றவர் உழைக்க முடியாது. யுத்தம் செய்வது வீரர் செயல்; அது நமக்குப் பழக்கம் இல்லை.”

“கத்தியின்றி ரத்தமின்றிச் செய்யப்படும் யுத்தம் ஒன்று உள்ளது. அதுதான் சூதாட்டம்” என்றான்.

ஏதோ நாமக்கல்லார் கவிதையைக் கூறுகிறான் என்று எதிர்பார்த்தான். நாமம் சார்த்தும் செய்தியாக அது இருந்தது. "புத்திசாலித்தனம் அதற்குத் தேவைப்படும்” என்று சுட்டிக் காட்டினான் புட்கரன்.

“அதற்குப் பஞ்சமில்லை; இந்த நாட்டில் புத்திசாலிகள் எல்லாம் புவியில் உயர்வாக இல்லை; செல்வர்கள் எல்லாம் புத்திசாலிகள் இல்லை” என்று கூறினான். திரைப்பாடலின் எதிர்ஒலியாக அது இருந்தது.

“ஆடத் தெரியாது” என்று கூறினான்.

“நடிக்கத் தெரிந்தால் போதுமானது. பின் குரல் கொடுத்துப் பேச வைத்தால் அது நடிப்புக்கு உதவியாகும்; இன்று இரவல் குரல், இரவல் பாட்டு; எல்லாம் இரவல்தான்” என்று எடுத்துக் கூறினான்.

“நான் இருக்க பயமேன்?” என்று அபயம் தந்தான். “நீ காயை உருட்டு; அதுபோதும். அந்தச் சூது கருவி அதாவது ‘கவறு’ அது விழுவது என் கையில் உள்ளது. நான் அதன் வடிவில் புரள்வேன்; இது புரட்சி” என்றான்.

“தெய்வம் தமக்குத் துணை இருக்கிறது” என்பதால் அவன் அக் கூற்றுக்கு இசைந்தான்.

தேர்கொண்டு வந்து நிறுத்தினான். குதிரை ஒன்று கொண்டு வந்து பூட்டினான்.

“எதற்காக?”

“நிடத நாடு செல்ல” என்றான்.

“போருக்குச் செல்வது என்றால் தேரில் செல்ல வேண்டும். அந்த ஆண்மை அது நமக்கு இல்லை; அது நீ செய்த நன்மை; நீ எருதின்மேல் ஏறிச் செல்க” என்றான்.

அவ்வாறு கூறுவதே விளையாட்டாக இருந்தது. எருமை மீது சிறுவயதில் ஏறி ஊர்ந்து இருக்கிறான். அந்த நினைவு வந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு வாகனம் உண்டு. அதே போல் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஓர் ஊர்தி உண்டு என்பது அறிந்தான்.

மயில் முருகனுக்கு; கருடன் திருமாலுக்கு; எருது சிவனுக்கு; பெருச்சாளி பிள்ளையார்க்கு; இப்படித் தெய்வங்கள் தனித்தனி ஊர்திகள் பெற்றுள்ளமையை நினைத்துப் பார்த்தான்.

கலி தன்னைத் தூண்டப் புட்கரன் நிடத நாட்டுப் புறச்சோலையை அடைந்தான். அங்கிருந்து கொண்டு செய்தி சொல்லி அனுப்பினான்.

எருமைமேல் வந்திருந்தால் அவனை எமன் என்று நினைத்திருப்பான்; எருதின் மேல் வந்ததால் “சிவன்” என்று கருதினான்.

யானை மீது வந்திருந்தால் அவன் அரசனாக மதிக்கப்பட்டு இருப்பான். எருது ஏறி எவரும் வந்தது இல்லை. புதுமையாக இருந்தது.

கொடி தாங்கி இருந்தான்; அதில் என்ன எழுதி இருந்தது பார்த்து வரச் சென்றான். எழுத்து ஒன்றும் இல்லை; எழில் உடைய சித்திரமும் இல்லை; வெள்ளைத் துகில் அது. அதனால் அமைதிக் கொடி என்பதை அறிந்தான். மற்றும் கூர்ந்து பார்த்தான். உன்னிப்பாகப் பார்த்தான். அதில் சூதாடும் பலகை வரையப்பட்டு இருந்தது.

நளன் அவனைச் சென்று சந்தித்தான். தன்னிலும் அவன் மூத்தவன் என்பதால் யாத்த நட்புக் காட்டினான்.

“எங்கே இவ்வளவு தூரம்? செய்தி யாது?” என்றான்.

“பொழுது போகவில்லை. உன்னோடு அளவளாவ வந்தேன்” என்றான்.

இது வியப்பாக இருந்தது. பேசுவதற்காகவா வர வேண்டும். இது தன்னை ஏசுவது போல இருந்தது.

“சூது ஆடுவோம் வா” என்றான்.

வம்புக்கு அழைக்கிறான் என்பது தெரிந்தது. “வம்பை விலைக்கு வாங்க் கூடாது. வந்த வம்பைவிடக் கூடாது” என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.

“மறுத்தால் அது இழிவாகும்” என்று நினைத்தான்.

வெற்றி தோல்வி அதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை. இவன் மானத்தை அவன் தூண்டி விட்டது போல் தோன்றியது.

“குது ஆடுவது தீது” என்று மனத்தில் பட்டது.

அவன் கெட்ட காலம்; அதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவில்லை.

“வாழ்க்கையில் தவறுகள் செய்தால்தான் அது சுவையுடையதாக அமையும்” என்று சிந்திக்கத் தொடங்கினான்.

ஆடினால் என்ன? பொருள் இழப்பு ஏற்படலாம்; அதற்காக அவன் அஞ்சவில்லை.

அறிவுரை சொல்லவே ஒருசிலரை அமைச்சர் என்று வைத்திருந்தான். அவர்கள் நல்லது கூறியதால் நல்லமைச்சர்கள் என்று நவிலப்பட்டனர்.

அறிவுரை கூறவே அகராதிகளை அவர்கள் கற்றிருந்தனர். “சூது அதனால் வரும் தீது” என்ற தலைப்பில் நூல்களைப் புரட்டினர். அடுக்கடுக்காகச் சான்றுகள் கிடைத்தன. அவற்றின் தீமைகளை அவனிடம் ஒப்புவித்தனர்.

சூதோடு ஏனைய மயக்கங்களையும் உடன் சேர்த்துக் கூறினர். “காதல் அது தீது” என்று கூறினார்கள். தன் மனைவியை அல்ல; பிற மாதரை விரும்புவது தீது என்று

விளக்கம் தந்தனர். கள் உண்பது; பொய் பேசுதல்; ஈவதைத் தடுப்பது இவை எல்லாம் செம்மை நீங்கிய நெறிகள்” என்று கூறினார்.

“இதனை அறிவாளிகள் நெருங்கவே மாட்டார்கள். இவை செய்யும் தீமைகள் இவை” என்று எடுத்துக் கூறினார்.

“அறத்தை அழிக்கும்; நரகிற் சேர்க்கும்; அருள் உள்ளத்தை மாய்க்கும். பகைமையை உண்டாக்கும். அதனால் பொய்ச் சூதினை அறிவாளிகள் நாட மாட்டார்கள்” என்றும் கூறினர்.

“அது மட்டும் அன்று; உருவை அழிக்கும். உயர்வினைச் சிதைக்கும். செல்வத்தை ஒழிக்கும். மானம் சிதைக்கும். நட்பினைத் தகர்க்கும். அன்பினை அழிக்கும். இன்னும் எவ்வளவோ தீமைகளைக் கூற முடியும்” என்றனர்.

“அது மட்டும் அன்று; சூதும் மாதும் வேதனை செய்யும்” என்று அறிவித்தனர். பொது மாதர், சூது இவற்றில் தொடர்பு கொண்டால் விடவே முடியாது; பற்றிக் கொள்ளும்” என்று கற்ற அந்த அமைச்சர்கள் கூறினர்.

அமைச்சர்கள் அவர்கள் தம் தொழிலைச் செய்து முடித்தனர். அரசன் இவன்; அவர்கள் அறிவுரை கேட்பது அவன் தொழில்; கடமை. அரசர்களுக்கு அறிவுரை கூறுவது அவர்கள் தொழில்; கடமை. அதற்குரிய மதிப்பைத் தந்தான்.

அவர்கள் கூறுவது தக்கதுதான்; ஏற்கத்தக்கவை; என்றாலும் அவன் வார்த்தை தந்து விட்டான். அவசரப் பட்டு ஆடுவதாக அறிவித்தான். பின்பு அதை மாற்றுவது என்றால் அது மன்னனுக்கு இழுக்கு என்பதை உணர்ந்தான். அவர்களுக்கு அதை உணர்த்தினான்.

அவனை மீட்க முடியாது என்பதால் அவர்கள் அடங்கி நின்றனர்.

“நல்லது நடக்கட்டும்; தீயது தொடரட்டும்; வெற்றியோ தோல்வியோ எதைப் பற்றியும் கவலை யில்லை. வார்த்தை தந்துவிட்டேன். மீள மாட்டேன்” என்று தன் மன உறுதியை வெளிப்படுத்தினான்.

“என்னைத் தடுக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தினான்.

அமைச்சர்கள் தம் கடமையைச் செய்தனர். “ஆகுவது ஆகுங் காலத்து ஆகும்; அழிவது அதை யாரும் தடுத்த நிறுத்த முடியாது. போகுவது அவன் புத்தி செல்லும் வழி” என்று கூறிக் கொண்டு ஆறி அடங்கினர்.

மேடை ஒன்று அமைக்கப்பட்டது. மெத்தைகள் விரிக்கப்பட்டன. எதிர் எதிர் அமர்ந்தனர். சூது பலகை விரிக்கப்பட்டது. புரட்டும் கவறு முன்கொண்டு வந்து வைக்கப்பட்டது. ‘கவறு’ என்று அதனைக் கழறினர். கையில் அதனைப் புட்கரன் எடுத்தான். உருட்டுவதற்கு முன்னால் தொடக்கவுரை நிகழ்த்தினான்.

“ஒட்டுப் பந்தயம் யாது?” என்று கேட்டான்.

“காசு வைத்து ஆடாவிட்டால் இந்த ஆட்டம் மாசுபடும்” என்று கூறினான்.

“காசு வைத்து ஆடினால்தான் ‘காரமே’ பிறக்கும்; சூடு பறக்கும்; ஆடுவதற்கும் பிடிக்கும்” என்று கூறினான்.

நளன் செல்வம் மிக்கவன்; கழுத்தில் அணிந்திருந்த மாலையைக் கழற்றினான்; பூண்டிருந்த பொன் மாலையை முன் வைத்தான்; “இதற்கு நிகர் நீ என்ன வைக்கிறாய்” என்று கேட்டான்.

புட்கரன் வெறுங்கையைக் கொண்டு முழம் போட்டான். வைப்பதற்கு அவனிடம் எந்தப் பொருளும் இல்லை; பொன்னும் இல்லை; ஆரமும் இல்லை. அவன் கொண்டு வந்தது யாதும் இல்லை. ஏறி வந்த எருது அதைக் காட்டினான்.

“எருது என் பணயம்” என்றான்.

அவனிடம் உள்ளது அதுதான் என்பதால் நளன் மறுப்புக் கூறவில்லை; ஆடுவதில் காட்டிய வேகம் அவன் அறிவை மயக்கியது.

கவறை உருட்டினான்; அது இவனுக்கு எதிராகப் புரண்டது. மணியாரம் அவன் கைக்குச் சென்றது.

கலி கவறாகப் புரண்டான்; இவனுக்கு முரணாக அது விழுந்தது.

“வைத்த மணியாரம் வென்று விட்டேன்; மறு பணயம் இதற்கு நிகரானது கூறுக” என்று அழைத்தான். தொடர்ந்து அவன் வைத்திருந்த நிதி அத்துணையும் வைத்தான்; இழந்தான்.

பதுமை நிகர் பாவையர் இருந்தனர். அவர்களையும் வைத்து ஆடினான். அவர்கள் எதிர்கட்சியில் சேர்ந்தனர்.

படைகளை வைத்தான்; அவை எதிரிக்குக் கை மாறினர் தேர் வைத்தான்; யானை வைத்தான் ஏறுவதற்கு என்று ஒன்றும் இவன் வைத்துக் கொள்ளவில்லை.

ஆட்சியை வைத்தான். தன் மாட்சிமையை இழந்தான். வீழ்ச்சியினை அடைந்தான். படிப்படியாகச் சரிந்தான். பாதாளத்தில் விழுந்தான். பரமபதம் ஆட்டம் அதில் பாம்பின் வாயில் விழுந்தான். அது கீழே கொண்டு போய் விட்டது. எல்லாம் இழந்து எளியன் ஆயினான்.


“வைப்பதற்கு இனி யாதும் இல்லை” என்பதால் செயல் இழந்தான்.

“வைப்பு என்பது யாதும் இல்லை” என்று கை விரித்தான்.

“மனையாள் அவள் ஒருத்தி அவளையும் வைத்து ஆடலாமே” என்றான்.

சுருக்கு என்று தைத்தது; எதிரியின் துணிவு அவனை அதிர வைத்தது.

காதல் மனைவி அவள் உயிரோடு ஒன்றியவள்; அவளையும் வைக்க என்றது அவன் உள்ளத்தில் சென்று தைத்தது.

“இனி இந்த இடம் நமக்குத் தகாது; பொன்மகளே; எழுக” என்றான். அருகில் இருந்த தன் மனையாளை நோக்கி “மிகவும் கொடியவன் அவன்” என்பதை அறிவித்தான்.

உடைமைகள் அனைத்தையும் இழந்தான். அதற்காக அவன் கலங்கவில்லை; மீட்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மாசு இல்லாத மனைவியை அவன் தூசுப்படுத்த நினைத்தது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எழுந்தான்; உடன் எழுந்தாள்; நடந்தான். அந்த அரங்கை விட்டு அகன்றான். மனையைவிட்டு நீங்கினான்.

நேற்றுவரை அவன் அரசன்; இன்று அவன் ஒரு குடிமகன்; அந்தக் குடிமையையும் புதியவன் மறுத்தான். நாட்டை விட்டு நீங்குவது தவிர வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.

தாமரை மலரில் தங்கும் அன்னம் அது அமரும் இடத்தில் ஒரு காக்கை அதைக் கவர்ந்து விட்டது; அங்கு அமர்ந்து விட்டது.

அரசன் ஆட்சியை இழந்தான்; நாட்டை மற்றொருவன் கவர்ந்தான்; இனி எப்படி வாழ்வது? இந்த அவலம் நாட்டவரை நலிவித்தது.

அழுகை என்பது அனைவரையும் ஆட்கொண்டது. பால் அருந்தும் குழந்தையும் பால் குடிக்க மறுத்தது. ஆவும் அழுத; பூவும் அழுத; புனல் அழுத; புள் அழுத என்று கூறும்படியாயிற்று. கருப்புக் கொடி எங்கும் மாட்டப் பட்டது. கொடி இறக்கப்பட்டது. துக்க நாள் என்று மக்கள் அறிவித்தனர்.

அவனை மக்கள் சூழ்ந்தனர். துயரத்தில் ஆழ்ந்தனர்; “ஆருயிரின் தாயே! அறத்தின் பெருந்தவமே! அருளின் திருஉருவே! பெருமகனே! நீ சென்று விட்டால் யார் இந்தப் பாரினைக் காப்பர்?” என்று கேட்டனர். கண்களில் நீர் ஒழுகியது; அவன் கால்களை நனைத்தது.

செங்கோல் மன்னன் அறம் திறம்பி விட்டால் அதைவிட அழிவு வேறு இல்லை என்று அறிவித்தனர்; அவலமுற்றனர்.

“கடல் கரையைக் கடக்காது; வேதம் நெறி பிறழாது; உலகம் நடுநிலைமை பிறழாது; அரசர்கள் செம்மை கெடக்கூடாது; இனி இந்த நாட்டின் நிலைமை என்ன ஆகுமோ?” என்று அஞ்சினார்கள். “யார் இனி நல்லாட்சி தரப்போகிறார்கள்” என்று பேசி வருந்தினார்கள்.

சுகவாசம் புரிந்த அவன் வனவாசம் மேற் கொண்டான். நாட்டில் வாழ இடம் இல்லாதவர்கள் காட்டுக்குச் செல்வது பழங்காலத்து மரபு; சந்நியாசிகள் மனைவாசத்துக்கு அஞ்சி இங்கே தங்கினார்கள். அது அவர்களுக்கு மலை வாசமாக விளங்கியது. இப்படித்தான் பழங்கதைகள் பேசுகின்றன. முதியோர் இல்லங்களாக அங்கு வதித்தலை அவர்கள் மேற்கொண்டனர்.

‘காடு’ இன்னார்க்கு உரியது என்று பட்டயம் இல்லாத நாள் அது; வேறு வழியில்லை; தலை தப்புவது என்றால் வேற்று நாட்டை அடைவதுதான் வழி; அதற்காகவாவது காடு கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மனைவி மக்கள் அவன் உடன் தொடர்ந்தனர். இராமன் பின் சீதை நடந்தாள். இலக்குவன் பின் தொடர்ந்தான். இது இராமாயணக் கதை. இவன் மனைவி மக்களோடு புறப்பட முன் நின்றாள்.

ஆட்சியை எதிர்த்து மக்கள் புரட்சி செய்யும் நிலையில் அன்று இல்லை. இன்று உண்ணாவிரதம் இருக்கச் சுதந்திரம் உள்ளது. குறளகம் முன் கொடி பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அன்று குரல் கொடுத்து அழ முடிந்ததே அன்றி எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் இல்லை.

அவனை வேண்டிக் கொண்டனர். “இன்று ஒருநாள் தங்கிச் செல்க; இது எம் வேண்டுகோள்” என்று அவன்முன் வைத்தனர். பிரிவு உபசாரம் வழங்க அல்ல; பிரிய மனம் இல்லாத நிலை.

அவர்கள் வேண்டுகோளைக் கேட்டான். அவர்கள் கண்ணீரைக் கண்டான். மற்றும் தன் மனையாளைப் பார்த்தான். அவளுக்கு அது இதம் தரும் என்று எண்ணினான். மாற்றத்துக்கு இடைவெளி அமையுமே என்று அதற்கு இசைந்தான்.

நளன் நாட்டு மக்களோடு தங்குகிறான் என்பதைப் புட்கரன் கேட்டான். ஆட்சி அவன் கையில்; மக்கள் பழையவனை மதிப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“போகட்டுமே இருந்து” என்று எண்ணவில்லை. “ஒருநாள் தானே” என்று விட்டிருக்கலாம். இரக்கம்

என்பது அரக்கனிடம் இருப்பது இல்லை. இரக்கம் என்பதுஅவன் செயலில் இடம் பெறவில்லை.

“இந்த மக்கள் நன்றி கெட்டவர்கள்; ஆள்பவன் யான்; அநாதை அவன்; அவன் பக்கம் இவர்கள் சாய்கின்றனர்"என்று கூறினான். அவனால் பொறுக்க இயல வில்லை.

“முரசு அறைக"என்றான். விழுந்துபட்ட அரசனுக்கு விருந்து தர யாராவது முன் வந்தால் அவர்கள் தலை அவர்கள் இழக்க வேண்டியதுதான். சிரசு நீக்கம் செய்யப் படும்” என்று அறிவித்தான்.

நாட்டுப்பற்று உடைய மக்கள் உயிர்ப் பற்று உடையவர்கள் ஆயினர்; முதலில் தம்மைக் காத்துக் கொள்வது முதற்கடமை என்று முடிவு செய்தனர்.

அழுவதை நிறுத்தினர்; அரசன் இருந்த இடம் நோக்கியும் அவர்கள் கால் நீட்டிப் படுக்கவில்லை. அவன் அந்நியன் ஆயினான்.

“மக்களைக் கூறிப் பயன் இல்லை; தவறு என்னுடையது தான். அவசரப்பட்டு அறிவு இழந்தேன். பாதை தவறினேன்; என்னால் என் குடி மக்களுக்கு இக்கட்டு வந்தது; இனி இங்கு இருப்பதால் அவர்களுக்குக் கேடு வரும். கேடு வருவதற்கு முன் புதிய இடம் தேடுவதே தக்கது” என்று அரசு எல்லையைக் கடந்தான். வாயிலை விட்டு வெளியேறினான்.

“கொற்றவன் பால் செல்வோர் இருந்தால் அவர் களைக் கொல்லுக” என்று பறை அறிவித்தான். அதுகேட்டு ஊரே இழவுபட்டதுபோல் அவலத்துள் ஆழ்ந்தனர்.

வீடுகளில் குழந்தைகள் பால் உண்ண மறுத்தனர்; ஏதோ சாவு விழுந்தது போல் அவ்வீடுகள் விளங்கின.

அழுவதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தது. அதை நன்கு பயன்படுத்தினர். பத்திரிகைகள் தலையங்கம் தீட்டுவது போல் உள்ளக் குமுறலை அழுகையில் வெளிப்படுத்தினர்.

மாநகரே தன்னை விட்டுச் சென்றதுபோல் தோன்றியது; திரும்பிப் பார்த்தான்; வெகுதூரம் வந்துவிட்டதை அறிந்தான்.

வழியில் முள்ளும் கல்லும் அவர்களுக்குப் புதிய முயற்சியைத் தந்தது. காலில் தோல் அணிந்து நடந்தவர்கள்; தேர் தவிர அவர்கள் கால்கள் தெரு மண்ணை மிதித்தது இல்லை. கல்லும் முள்ளும் அவர்கள் கால்களை வருத்தின.

“யார் இவற்றைக் கொண்டு வந்து போட்டார்கள்?” என்று அந்தச் சிறுவர்கள் கேட்டனர்.

“ஏன் நம் நகரில் இவை தெருக்களில் இல்லை” என்றும் கேட்டனர்.

அவர்களுக்குக் கூறுவதற்கு விடை தெரியவில்லை.

“காடு என்றால் இப்படித்தான் இருக்கும்” என்றான் நளன்.

“நாம் செல்லும் வழியெல்லாம் கடந்து விட்டோமா” என்று கேட்டனர்.

அவர்களுக்கு என்ன விடை தருவது? உலகம் உருண்டை என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? தட்டை என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார்கள். துன்பம் என்பது வாழ்வின் மறுபக்கம் என்பது யாரும் அவர்களுக்கு அறிவித்தது இல்லை. பசி அவர்களை வாட்டியது. கனிகள் அவர்கள் பசியை அடக்கவில்லை.

வேளைக்குச் சோறு கண்டவர்கள் காயும் கனியும் தின்னும் புதுமை அவர்களுக்கு வியப்பு அளித்தது.

இந்தப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு எப்படிச் செல்வது? எங்கே செல்வது. அரும்புகள் அவை வாடக் கூடாது என்று சிந்தித்தான்.

விதியை எண்ணி நொந்தான். நினைவு அலைகள் அவனை வாட்டின. வாய் திறந்து பேச அவனுக்குக் கருத்துக்கள் துணை செய்யவில்லை. சித்திரம் போல் அசைவற்று நின்றான். வாழ்க்கையின் விசித்திரங்கள் அவனை வதை செய்தன.

கடந்த காலத்தை எண்ணிப் பார்த்தான். ‘விதி’ என்று முடிவு செய்தான். எதிர்காலம் அவன் முன் நின்று கேள்விகள் எழுப்பியது.

இந்தக் காட்டில் இவர்களை எங்கே இழுத்துச் செல்வது? தான் செய்த தவறுக்குத் தன் துணைவி ஏன் துயர் உற வேண்டும்.

அவர்களை அல்லல் நீங்க வாழச் செய்வது என்று முடிவு செய்தான். தாரம் அவள்; உண்மைதான்; என்றாலும் அவள் வீமன் மகள்; அரசமகள்; அவள் தன் சொந்த நகர்க்குச் செல்வதுதான் உகந்தது என்று நினைத்தான்.

மாலையிட்ட மங்கை அவளைப் பிரிய எண்ணினான். அவர்களை அவள் தந்தை நகருக்கு அனுப்புவது தக்கது என்று கருதினான்.

அன்பு மக்களை வலியச் சுரம் வழி அழைத்துச் செல்வது தரம் அன்று; அவர்களுக்கு அது தீமை பயக்கும். என்ன உண்டாகும் என்று கூறமுடியாது. காதம் நடக்க அவர்கள் கால்கள் இடம் தராது. ஏதம் உடைத்து இப் பெருவழி என்று கூறினான்.

“மக்களை அழைத்துக் கொண்டு நீ மாநகர் செல்க; விதர்ப்பன் நகர் அடைக; பாட்டன் வீட்டில் இவர்கள்

வளரட்டும்; பிறகு அழைத்துக் கொள்ளலாம்” என்று கூறினான்.

மக்களை அனுப்புவதற்கு அவள் மறுப்புத் தெரிவிக்க வில்லை. விட்டுப் பிரியாத கணவனைத் தனித்துவிட அவள் விரும்பவில்லை.

சுகத்தில் பங்கு கொண்ட அவள் துயரத்தில் பங்கு கொள்ள விரும்பினாள்.

அன்று சீதை எண்ணினாள். இராமன் தனிமைக்கு வருந்தினாள்.

“அருந்தும் மெல் அடகு யார் இட அருந்தும்” என்று நினைத்துப் பார்த்தாள்.

“விருந்து கண்டபோது அவன் எப்படி வருந்துவான்” என்றும் எண்ணிப் பார்த்தாள்.

உற்ற துணைவி அவள்; அவனைத் தனியேவிட விரும்பவில்லை.

“மனைவிக்குக் கணவன்தான் முதன்மை; பிள்ளைகளை யார் வேண்டுமானாலும் கவனித்துக் கொள்வார்கள். மனைவி ஒருத்திதான் கணவனுக்கு இதம் அளிக்க இயலும். அவள் ஒருத்திதான் துணையாக இருக்க முடியும். நிலவு இல்லாத வானம் ஒளி பெறாது. நீ இல்லாமல் யான் வாழ முடியாது” என்று கூறினாள்.

இந்தக் கருத்தைச் சிறிது மிகைப்படுத்திக் கூறினாள்.

“மக்களை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள முடியும். காதலனை இழந்தால் மனைவி அவனைப் பெற முடியாது"என்று கூறினாள்.

அதற்கு அவனால் மறுப்புக் கூறமுடியவில்லை. என்றாலும் மக்கள் செல்வம் மதிப்பு உடையது. அவர்களுக்கு

எந்தத் துன்பமும் வராமல் காப்பது நம் கடமை; பொறுப்பு என்று கூறினான்.

“மக்கள் பேறு உயரிய செல்வம்; அதற்கு நிகரானது வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறினான்.

“பொன்னைப் பெற முடியும்; புகழை ஈட்ட முடியும். பெருநிதிச் செல்வராயினும் சரி; புகழ்மிக்க சான்றோராயினும் சரி; அவர்களுக்குக் குழந்தை இல்லை என்றால் அவர்கள் வாழ்வு பயனற்றது. எந்த உடைமையும் இதற்கு ஈடாகாது” என்றும் கூறினான். கலைகள் தரும் இன்பத்தை விட இந்த இளஞ்சிறுவர்கள் மழலைச் சொல் கேட்க இனிது என்றும் கூறினான்.

அதனால் இந்தச் சிறுவரையாவது பெருமைக்கு உரிய திருநகரில் சேர்ப்பது நம் கடமை; அதைச் செய்வோம் என்று கூறினான்.

சிந்தித்தாள்; சீர்மிகு கருத்தினை உரைத்தாள். “விதி நம்மைச் சதி செய்து விட்டது. சூதினால் பொருள் இழக்க நேர்ந்தது. இதை நாம் எதிர்பார்க்கவில்லை. இழப்பு அதனை ஈடு செய்து கொள்ளலாம். அரச வாழ்வு நம்மை விட்டு அகலவில்லை; என் தந்தை இருக்கிறார்; பிறந்த மண் உள்ளது. திறந்த கதவு அங்கு உள்ளது. பிள்ளைகளோடு நாம் அனைவரும் அங்குச் செல்வோம். மறுக்காது ஏற்க” என்று கேட்டாள். மெல்ல எடுத்துக் கூறினாள்.

பாரதப் போர் வராமல் காக்க வழி சொன்னான் சகாதேவன். திரெளபதிக்கு மொட்டை அடித்துவிட்டால் பாரதப் போரை வராமல் தடுத்து விடலாம் என்று கூறினான்.

பாரதப் போர் தவிர்க்க வழியைச் சகாதேவன் கூறினான். துன்பத்தினின்று விடுபடத் தமயந்தி இவ்வாறு கூறினாள். “நாம் ஏன் இப்படிக் கஷ்டப்பட வேண்டும்?

இஷ்டமுள்ளவர்கள் நமக்கு இருக்கும்போது நிஷ்டை செய்வது ஏன்?” என்று கேட்டாள்.

இந்த எளிய வழி நளன் அறிந்தது. மாமனார் அவர் மதிக்கத் தக்கவர் என்றாலும்கூட உறவு ஊனம் பெறக் கூடாது என்றான்.

இல்லாமை அதன் காரணமாகச் செல்வது என்பது ஒன்று. மற்றொன்று அவர் பேரரசர்; அவர் கீழ் இருந்து வாழ்வது மற்றொன்று. இந்த இரண்டும் தனக்கு ஒவ்வாது என்று கூறினான்.

“இல்லை என்று சொல்லி இரந்து கேட்பது இழிவானது. மானம் கெட்டு வாழ்வது இனியது அன்று” என்று கூறினான்.

மற்றும் மன்னன் ஒருவன் மற்றொரு அரசன் நிழலில் வாழ்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அது பித்தர் செயல் ஆகும்; அல்லது பேடியர் செயலாக இருக்க வேண்டும். அந்த நிலைக்கு யான் செல்லவில்லை. என்னால் செல்ல இயலாது; அது கூடாது” என்று பெருமை குறையாமல் பேசினான்.

ஆண்டுகள் பல பழகியவள்; அவனை நன்கு அறிந்தவள்; அறங்கிடந்த நெஞ்சும், மறங்கிடந்த தோளும், திண்தோள் வலியும் அறிந்தவள். செம்மனத்தான்; செங்கோலான்; அவன் தன் நிலை சாயான் என்பதை அறிந்தவள். அதனால் அதற்குமேல் அவள் சொல் ஆடவில்லை.

இருவரும் தம் மக்களை மட்டும் அனுப்பி வைப்பது என்ற முடிவுக்கு வந்தனர். தம்மோடு வந்த கூட்டத்தில் மறை கற்றவன் அந்தண வகுப்பினன்; நம்பிக்கைக்கு உரியவன்; அவனிடம் மக்களை ஒப்புவித்தனர்.

பெற்றவர்கள் பேசும் உரைகேட்டு மற்று அச்சிறுவர்கள் மனம் கலங்கினர். பிரிதற்கு வருந்தினர்.


“எம்மை விட்டு நீங்கள் பிரிகின்றீரோ” என்று கேட்டனர். தந்தையின் முகத்தைப் பார்த்தனர். தாயின் குளிர் முகத்தைப் பார்த்தனர். அவர்கள் விழிகளில் கண்ணீர் ஆறாகப் பெருகியது; அழுதனர்.

பிள்ளைகளை அவன் கொண்டு செல்லவில்லை. இவர்கள் உயிர்கள் இரண்டனையும் பறித்துக் கொண்டு செல்வது போல் அவர்களுக்கு இருந்தது. பாசக் கயிறு கொண்டு வந்து எமன் அவர்கள் பாசக் கயிற்றை அறுத்துச் செல்வது போல் இருந்தது. அந்த அந்தணனை அவர்கள் வெறுப்போடு பார்த்தனர். அவன் விருப்போடு அவர்களை அழைத்துச் சென்று வீமன் திருநகரை அடைந்தான். ஒப்புவித்த கடமையைத் தப்பு ஏதும் இல்லாமல் செய்து முடித்தான். பெட்டகத்தில் வைக்கும் நிதிபோல் அவர்கள் பாதுகாப்பான இடத்தை அடைந்தனர்.

சுமை பாதி நீங்கியது. இனி அவர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாயினர். நாட்டு மக்களும் அவரவர் தம் வீட்டை அடைந்தனர். வழி விடவும் அஞ்சினர். பற்றற்ற துறவிகளாக அந்தப் பாசமுள்ள குடிமக்கள் அவனை விட்டு நீங்கினர்; ஞானியர் ஆயினர்.

வழிப் பாதையை அவர்கள் விழிகள் நோக்கின. எங்கும் கள்ளிச் செடிகள்; நெகிழ்ந்து செல்லும் அரவுகளும் இருந்தன. அவை தெறித்த மாணிக்கங்கள் சிவப்புக் கற்கள் என ஒளி வீசின. சருகுகள் எரிந்து சாம்பல் எங்கும் தெரிந்தது.

அந்தப் பொட்டல் காட்டில் பொன் நிறத்துப் பறவை ஒன்று தெரிந்தது; பறந்து வந்து அவர்கள் முன் இருந்தது. கலியன்தான் அந்தப் பறவையாக வந்தான் என்பதை அவர்கள் அறியவில்லை. மாயையால் தோற்றுவித்த தோற்றம் அவர்களை மயக்கியது.

மான்பிடிக்கச் சொல்லி மாலை வற்புறுத்தினாள் மங்கை ஒருத்தி; இது இராம காதை. அதேபோல் இங்கே இவள் பொன் பறவையைப் பிடித்துத்தா என்று மழலை மொழி பேசி அவனைக் குழைய வைத்தாள்.

காட்டில் இதுவாவது செய்யக் கூடாதா என்று எண்ணினான். அன்னத்தைப் பிடித்து வரச் சொன்னாள். அதனால் அவனுக்கு நன்மையே கிட்டியது. இந்தப் பொன் நிறத்துப் பறவையைப் பற்றித்தர விரும்பினான்.

அதுமிகவும் எளிதில் சிக்கிவிடும் என்று நினைத்தான். அது அவனிடம் ஆட்டம் காட்டியது; ஒட்டம் பிடித்தது; இவன் விடாது நாட்டம் செலுத்தினான். கைக்குள் படுவது போல் அவனுக்குச் சாடை காட்டியது. சுழன்று ஒடியது. இளைத்துக் களைத்ததுபோல் இருந்த அதனை வளைத்துப் பிடிக்க அருகில் சென்றான்.

அதனை வளைத்துப் பிடிக்க வலை ஒன்று தேவைப்பட்டது. பறவை வேட்டுவன் ஆக விரும்பினான். வலை வீச அவன் வடிவுமிக்க துகில் தேவை என்பதை அறிந்தான். அவளைப் பார்த்தான்.

“பங்கிட்டுக் கொள்வோம்” என்றான்.

உமை ஒரு பாகத்தாள்; சிவன் பாதி ஒருத்திக்குத் தந்தான். பாதியில் இவன் நின்றான். அந்த உருவம் அவன் கண்முன் நின்றது.

ஒற்றைத் துகில் போதும். மற்றையதைக் கொண்டு உற்ற அந்தப் பறவையைப் பிடித்து விடலாம் என்று கூறினான்.

தான் கட்டி இருந்த வேட்டியைக் கையில் கொண்டான். தன்னை மறைக்க அவள் முந்தானையைக் கேட்டான். ஒரே புடவை; இருவருக்கும் உடுத்தும் துகில்

ஆகியது. இருவர் ஒன்று ஆயினர் என்று கூறினால் அதற்கு இது ஒரு புதுவழியாயிற்று; கூறை ஒன்றை உடுத்திக் கொண்டு அந்தப் பறவையை வலை வீசிப் பிடிப்பதுபோல் மற்றைத் துகில் கொண்டு வளைத்தான். அதனைக் கூரிய அலகால் கவ்வியது; காற்றாடி எனப் பறந்தது. பறவை அதனோடு அவன் உடுத்தியிருந்த உடையும் உடன் கட்டை ஏறியது.

அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை. ஏய்த்து விட்டது அந்தப் பறவை என்பதைக் கண்டனர். உயரத்தில் பறந்தது; “மகனே! யான் கலியன்; உன்னைப் பிடித்து ஆட்டும் சனியன். பார் தோற்றுவிக்கச் செய்தவனும் நான் தான். உன் உடையைப் பறித்துக் கொண்டு உன்னைப் பதற வைப்பதும் நான்தான்” என்று கூறியது.

இது கலியன் சூழ்ச்சி, அதனால் தனக்கு ஏற்பட்டது வீழ்ச்சி என்பதை அறிந்தான். என் செய்வது? அவன் தெய்வ சாதியினன். வேலியே பயிரை மேய்ந்தால் வேலிக்கு ஒரு வேலியா போட முடியும்!

வயிறு எரிந்து வாய்க்கு வந்தபடி அவனை வைது தீர்த்தாள். “நீ நரகத்துக்குத்தான் போவாய்” என்று கூறினாள். அதுவும் இந்த இந்தத் தீமை செய்பவர் நரகத்துக்குச் செல்வார்கள் என்று குறிப்பிட்டு அந்த வகையை அவன் சார்ந்தவன் என்று குறிப்பிட்டாள்.

“அறம் பிழைத்தவர்கள், பொய் கூறியவர்கள், அருளைச் சிதைத்தவர்கள், மானம் கெட்டவர்கள், தெய்வம் இகழ்ந்தவர்கள், பிறர்மனை நயந்தவர்கள் இவர்கள் புகும் நரகத்தை நீ அடைவாய்” என்று சாபம் தந்தாள்.

பிழைகள் இவை என்று எடுத்துக் கூறினாள்; கொடுமை மிக்கவை இவை என்று குறிப்பிட்டாள். இது வஞ்சகம் செய்தது; ஏய்த்தது என்று கூறினாள்.


“நாட்டை இழக்கச் செய்தாய்; காட்டிலும் நிம்மதியாக வாழவிடவில்லை. இது மிகவும் கொடிது” என்று கூறினாள்.

“முதலில் இந்த இடத்தை விட்டு அகல்வோம்"என்று அவனிடம் முறையிட்டாள்.

“தெய்வமே தீமை இழைத்தால் நாம் என்ன செய்ய முடியும்” என்று கூறி வருந்தினாள். அடுத்து என்ன நடக்கும் என்று அஞ்சினாள்.

எங்காவது தங்க வேண்டும். என்ன செய்வது என்று கவலை கொண்டனர். அதற்குள் பொழுதும் சாய்ந்தது. பேய்க்கும் வழி தோன்றாத இரவு வந்து சேர்ந்தது.

இரவு தங்குவதற்கு ஒரு கூரை தேவைப்பட்டது. வன விலங்குகள் அவை அரசு புரியும் இடம். அரவுகள் ஊர்ந்து செல்லும் இடுக்குகள், முள்புதர்கள்; எங்கே உறங்குவது?

மண்டபங்கள் எழுப்பி மாநிலத்தை ஆண்ட அரசன் யாரோ ஒருவன்; அங்கு ஒரு பாழ் மண்டபம் அவர் களுக்காகவே விட்டு வைத்தான். இடிந்து விழுந்து சில தூண்கள் துணையாகத் தாக்குப் பிடித்துக் கொண்டு விழாமல் இருந்தது. இடி பாடுகள் கொண்ட கற்களால் எழுப்பிய கட்டிடம்; ‘கூரை’ இருந்தது மழை வந்தால் தடுப்பதைத் தன் கடமை என்று கருதுவதை மறந்து விட்டது. வெடிப்புகள் காலத்தின் வடுக்கள்; மானம் மறைக்கக் கந்தல் ஆடையும் சில சமயம் உதவுகிறது; வானத்தை மறைக்க இந்தப் பாழ் மண்டபம் நிலைத்து நின்றது.

“இந்த மண்டபங்கள் ஏன் பாழ்பட்டுக்கிடக்கின்றன?” என்று கேட்டாள்.

“படிப்பாரற்று நூல்கள் சில செல்லுக்கு இரையாகின்றன; அதுபோலத்தான் இவையும்’ என்றான்.

“மனித சஞ்சாரம் இல்லாவிட்டால் அனைத்தும் பாழ்தான். மானுடம் மதித்தால்தான் எதுவும் நிலைத்து நிற்கும்” என்றான்.

“இந்த மண்டபங்கள் அரசர்கள் வாழ்ந்த பழைய சின்னங்கள்; இங்கே இருந்துதான் அவர்கள் பீடத்தில் இருந்து ஆட்சி செய்திருப்பார்கள்” என்றான்.

“வரலாறு இது அதன் தனிச் சிறப்பு” என்று அதன் பெருமையைப் பேசினான்.

அவர்கள் கண்முன் இந்த அரசர்கள் கண்ட போர்க் களங்கள் நின்றன. இவர்கள் மானம் வீரம் இவற்றைப் பேசிப் பகைமை கொண்டனர். தம்மைத் தாம் மாய்த்துக் கொண்ட நினைவுகள் நிழலாடின.

“மனிதன் அவன் தன்னை நேசிக்க மறந்து விட்டதால் அதன் விளைவால் நேர்ந்த நாசம் இது” என்று கூறினான்.

இதைப் பற்றி எல்லாம் கேட்டுக் கொள்ள அவளுக்குப் பொழுது இல்லை; எங்கே தங்குவது? இரவு எப்படிக் கழிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்.

அந்த மண்டபம் அந்த இரவுக்கு அவர்களுக்கு நட்சத்திர விடுதியாக அமைந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னுவதை அங்கிருந்து காண முடிந்தது. அதனால் அதனை ‘நட்சத்திர விடுதி’ என்று கூறினாள். அங்கு அவளோடு சேர்ந்து நகைத்தான்.

தெய்வ கீதம் கேட்ட செவிகள்; ‘மகர யாழ்’ ஒலி கேட்டவள் அவள்.

“இசை பாடுவோர் இல்லையே” என்று கேட்டாள்.

பழக்கம்; இது புதிய சூழல்; உறக்கம் அவள் காண முடியவில்லை.

ஏதோ புதிய நாதம் கேட்டது. இது என்ன புதிய ‘பண்’ என்றாள்.

“கொசு அது ரீங்காரம் செய்கிறது” என்றாள்.

சில இசைப் பாடகர்கள் பாட்டை மறந்து விட்டுப் பண்ணில் லயம் காட்டுவது அவள் நினைவுக்கு வந்தது.

தேர்ந்த இசை கேட்ட செவிகள் இப்பொழுது இந்தக் கொடுமைக்கு ஆளாக நேர்ந்ததே என்று வருந்தினாள்.

அவள் தொலைக்காட்சி சங்கீதங்கள்; கூத்துகள் கண்டது இல்லை; கண்டிருந்தால் வருத்தப்பட்டிருக்க மாட்டாள். பழகிப் போய் இருக்கும்.

பல இசைகளைக் கேட்டுப் பழகி விட்டால் எல்லாம். இசை மயம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அவளுக்கு இது புது அனுபவம்.

மகர யாழ் கேட்ட தெய்வக் காதுகள் இந்தக் கொசுவின் சிள்ளொலி கேட்க நேர்ந்ததே என்று வருந்தினாள்.

அவனுக்கு என்ன கூறுவது என்பது தெரியவில்லை. ஆறுதல் கூற அவனுக்குக் கிடைத்தது இதுதான் “பழைய வினை"என்றான்.

“விதி விதிப்பதை யாரும் கடக்க இயலாது” என்று ஆறுதல் கூறினான்.

பாழ் மண்டபம் அதைப் பார்க்கும்தோறும் அவள் ஆழ் துயரில் அழுந்தினாள். நேற்று அவன் நிலை யாது? இன்று அவன் நிலை யாது? மாளிகையில் அவன் ஆளுமை அதை நினைத்துப் பார்த்தாள். மலர்ப் படுக்கை உடைய பள்ளி அறை அங்கே; இங்கே இடிப்பட்ட கற்கள் விரிக்கப் பட்ட அறை; கற்கள்மிக்க அறை. பள்ளியறையில்

வெளியே எத்தனை காவல்! இங்கே இது கல்லால் அமைந்த கல்லறை.

அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்சக் காவல் காத்து நின்றனன் இராமனின் தம்பி இலக்குவன்.

அந்தக் காட்டில் பன்னக சாலையின் வெளியே காவல் காத்திருந்தான் காகுத்தனின் இளவல் இலக்குவன்.

தரையில் படுத்துத் தலையணையின்றித் தனித்துத் தமயந்தி உறங்கும் காட்சியைக் கண்டான். அதைப் பார்க்கும் தோறும் அவன் உள்ளம் குமுறினான்; இந்த நிலைக்குத் தான்தானே காரணம் என்று புழுங்கினான். அவன் இவள் நிலை கண்டு கலங்கினான்.

அவள் அவனைப் பார்த்தாள். இருந்த புடவையும் பாதியாயிற்று. அது அவனுக்கு ஆடை ஆயிற்று. விரித்துப் படுக்கத் தன் முந்தானையாவது பிரித்துத் தரலாம் என்றால் அது ஏற்கெனவே பறிபோய் விட்டது. அவனுக்குக் கீழ் விரிக்க எந்தத் துப்பட்டியும் இல்லை. அணையில்லை; தான்தான் உண்டு; அவள் கை, அவள் கால்கள் அவனுக்குச் சாய்வு அணைகள் ஆயின. அதை நினைத்து அவள் கண்ணீர் சோர்ந்தாள்.

வீமன் ஒரே மகள்; குலத்துக்கு அவள் தீபமாக விளங்கியவள்; தாமம் தனக்குச் சூட்டியவள்.

விண்ணவரும் பெற வந்த மாலையை இவனுக்கு அளித்தாள். அவள் தரையே படுக்கையாக அவள் துயில நேர்ந்ததே என்று வருந்தினான்.

இந்த நினைவுகள் அவனை அலைக்கழித்தன. இந்த நிலை தொடரத்தான் வேண்டுமா? மண்டபங்கள் எத்தனை கிடைக்கும்? வழியில் இனி எங்கே தங்குவது? சோற்றுக்கு

வழியாது? அடுத்த வேளைக்கு என்ன செய்வது? ஆட்சி செய்யத் தெரியுமே அன்றி உழைத்துப் பழகியது இல்லை. அடிமையாகக் கிடந்தால்தான் மிடிமை தீரும். மடியில் பூனையை வைத்துக்கொண்டு எங்கே போவது; அவள் அவனுக்குச் சுமையாகப் பட்டாள். சுவையாக இருந்தவள் அவள் அவனுக்குச் சுமையாக மாறினாள்.

“இவள் எங்கே கேட்கிறாள். நிம்மதியாகத் தாய் வீடு செல்க என்றால் தத்துவம் பேசுகிறாள். கொள்கைகளை அடுக்குகிறாள். விளக்கங்கள் தருகிறாள். மனைவியின் மாட்சிகள் இவை என்று ஒப்புவிக்கிறாள். எனக்கு அவள் தேவைதான்; முதலில் அவளுக்கு அவள் தேவை; அதை நிறைவேற்றட்டும்".

“வெளிச்சம் வந்தால் அவள் எங்கே சொல்லிக் கேட்கப் போகிறாள்? போகாதே போகாதே என் கணவா என்று பாடப் போகிறாள். முதலில் அவளை விட்டுச் செல்வதுதான் தக்கது” என்று நினைக்கத் தொடங்கினான்.

நிழல் போல் இவனைத் தொடர்ந்து வந்த கலியன் புழுவாக அவன் மூளையைக் குழப்பினான். அவன் அவளோடு வாழக் கூடாது என்பது அவன் கோட்பாடு. அவர்கள் ஒன்றிய வாழ்வு கண்டு வயிறு எரிந்து வந்தான். பிரிப்பது அவன் வேளை. ‘கூட்டு’ என்பதற்கு வேட்டு வைப்பதே அவன் நாட்டம். அவனும் இவன் மனத் திரிபுக்குக் காரணமாக இருந்தான்.

நளன் கண்ணுக்கு ஒரு புதையல் கிடைத்தது; அது பொன் அல்ல; ஒளிவிட்ட கத்தி, அந்தக் கத்தியாக மாறியவன் கலியன். அதை எடுத்தான்; தன்னையும் அவளையும் பிணித்துக் கொண்டிருந்த உடை அதனைக் கிழித்தான். அறுத்தான்; இரு கூறாக ஆக்கினான். அவள்வேறு தான்வேறு என்று ஆயினான். ‘விடுதலை’

அவளுக்கு விடுதலை என்று எண்ணினான். ‘விடுதலை விடுதலை’ என்று அவன் வாய் முணுமுணுத்தது.

இது கொடுமை; கணவனுக்காக அவன் மனைவி துயர்படுவது என்பது கொடுமை என்பதை உணர்ந்தான். அவள் சுகப்படட்டும் என்று முடிவுக்கு வந்தான்.

புத்தன் தன் மனைவியை விட்டுப் பிரிந்தான். அவன் பட்ட வேதனை அதற்கு ஈடே கூறமுடியாது. வெளியே செல்வான்; மறுபடியும் வண்ண நிலவை அவள் முகத்தில் காண்பான். கவலையற்ற அந்த முகம் சலனமற்ற வாழ்க்கை; துணிந்து பிரிந்தான். அவன் தேவன் ஆயினான்; உலகுக்கு ஒளி கூட்டினான்.

நளன் தமயந்தியைப் பிரிந்தான். அவன் பட்ட வேதனை எழுத்தில் எழுத முடியாது. மொழி உதவும் நிலையில் இல்லை. ஒருகால் ஏகுவான். மறுமுறை வந்து மீள்வான்; அலை மோதினான்.

அவள் விழித்து எழுவதன் முன் கழித்து விடுவது என்று துணிந்தான். போயினான்; நடந்தான்; நடந்து கொண்டே இருந்தான். அந்தப் பாழ் மண்டபத்தில் நடு இரவில் கொடிய கானகத்தில் அவளைத் தனியே விட்டுச் சென்றான். உண்மையில் இதைவிடக் கொடுமை வேறு இருக்க முடியாது. ஏன் இவன் புத்தி தடுமாறியது? ஏன் இந்த முடிவுக்கு வந்தான். அவனுக்கே கிடைக்காத விடை அது.

தெய்வங்களிடம் முறையிட்டான். “வீமன் தன் மகளை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று செயலற்றுப் பேசினான்.

அரசியலில் முடிவு எடுப்பதற்குக்கூட தெய்வங்களை நம்புகின்றனர் ஒரு சிலர்; காரணம்? அவர்களுக்குத் தனிப்பட்டவர்கள் மீது உள்ள பற்றுகள்; நெறியில்

நம்பிக்கை இல்லாதவர்கள் தெய்வத்திடம் முறையிடுவது வழக்கம்.

தன்னம்பிக்கை அவன் இழந்துவிட்டான். தான் இருந்து அவளுக்கு உதவ முடியாது என்பதை அறிந்தான். தான் இல்லாமல் இருப்பதுதான் அவளுக்கு நல்லது என்று நினைத்தான். அவளை வீமன் மகள் என்று முத்திரை இட்டு அவளை நித்திரையில் பிரிந்தான். “காதல் அன்பு உடையவளைக் காரிருளில் கைவிட்டு இன்று யாரோபோல் நீங்குகின்றேன் யான்” என்று கூறினான்.

முதியவள் அல்லள் அவள். பதி அடைந்து செல்வதற்கு. இளநங்கை அவளை விட்டுச் சென்றால் அவளுக்குப் பாதுகாப்பு இல்லை; தண்ணளியான் என்று பேசப்பட்டவன் இன்று அருள் நீங்கிச் செல்கின்றான். உயிர் போன்றவள்; அவளை எப்படித்தான் விட்டுச் செல்ல மனம் வந்தது! கசப்பு ஏற்பட்டு வசவு பேசி அவளை விட்டு அவன் நீங்கவில்லை; ஈர்ப்பு அவள் வார்ப்பு; அந்த நிலையில் அவளை விட்டுச் சென்றான். இடையிருளில் கானகத்தே அவளை விட்டுச் சென்றான். இது வியப்புக்கு உரியதுதான்.

இவன் மட்டும் எந்த ஊறும் இல்லாமல் ஏகினான் என்று கூற இயலாது. கூர் இருளில் நகம் சிதைய நடந்தான்; பரல் கற்கள் அவன் நகத்தைச் சிதைத்தன. அரச மகள் பட்டத்து அரசி அவளை விட்டுவிட்டு வெங்கானகத்தில் மனம் வெந்து சென்றான். இது அவன் நிலை.

விழித்து எழுந்தாள், கைகளால் தடவினாள்; அடுத்து இருந்தவன் அங்குப் படுத்துக் கிடந்தவன். உடுத்த துகிலோடு வெளி ஏறினான்.

அங்குத் தேடினாள்; அவன் அவள் கையகப் படவில்லை; ‘'எங்கே சென்றாய்?” என்று வாய்விட்டுக்

கேட்டாள். பதில் கிடைக்கவில்லை. நீலமலர் போன்ற அவள் கண்கள் முத்துகளை உதிர்த்தன; கண்ணிர் விட்டாள். கொடியிடையாளாகிய அவள் துவண்டாள்; மனம் மருண்டாள்.

“மன்னவனே!” என அழைத்தாள். மாற்றம் அவள் கண்டிலள்; “இஃது என்னே என்னே” என்று அங்கலாய்த்தாள்.

தரைதான் அவர்கள் படுத்த படுக்கை; அதைத் தடவிப் பார்த்தாள்; எவ்விடத்திலும் அவனைக் கண்டிலள்; ‘ஐயகோ’ என்று கதறி அழுதாள்; விழுந்தாள்; வீமன் மகள் கொடிபோல் துவண்டு விழுந்தாள்; வேடன் விடும் அம்புக்கு அலறும் மயில்போல் நாற்புறமும் ஒடினாள். அவள் கண்ணிர்த் துளிகள் அவள் காதில் அணிந்திருந்த குழைகளை நனைத்தன.

வான் மேகமும் மின்னலும் வெறும் நிலத்தில் விழுந்ததுபோல் கூந்தல் சரிய விழுந்தாள். மேகம் போன்றது கூந்தல், மின்னல்போல் விளங்கினாள் தமயந்தி.

ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று அன்றே நளன் கூறிச் சென்றான். செயலற்றுப் போகும் நிலையில் கடவுளுக்கு அழைப்பு விட்டான்; ஒரு சிலர் இந்த நாட்டைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று செயலற்றுப் பேசுவது போலத் தமயந்தியைத் தெய்வங்கள் காக்க வேண்டும் என்று முறையிட்டான்.

இந்த நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது என்றால் ஒரு பெண் நடு இரவில் தனியாகப் போக வேண்டும். அவளுக்கு எந்த வலிப்பும் யாராலும் வரக் கூடாது என்று கூறினார் தேசப்பிதா.

எந்தக் காலத்திலும் இந்தத் திருநாட்டில் பெண் தனித்துச் சென்றது இல்லை.

தமயந்திக்கு முதல் வேதனை; அதிலிருந்து தப்பியது அவள் மாபெரும் சாதனை.

சாலையைப் பார்த்து நடக்கவில்லை; என்றாலும் மெதுவாக இடித்துவிட்டுப் போகிற பேருந்துகள் உண்டு; இடித்தது யார் என்று கூடத் தெரியாது; விபத்துகள் என்று பேசும் காலம் இது.

இவள் குகைக் கோயிலைக் கண்டாள்; அது வெளிநாட்டினர் சுற்றி வரவும், கண்டு களிக்கவும்; அங்கே இருந்தது ஒரு மலைப்பாம்பு.

அது ஒரு யானையை விழுங்கிவிட்டு அளவுக்கு மீறி லஞ்சம் வாங்கி அகப்பட்டுத் திண்டாடுபவரைப்போல அதனை விழுங்க முடியாமல் வேதனைப்பட்டுக் கொண் டிருந்தது. பசித்து உண்ட உணவுதான் என்றாலும் பாறாங் கல்லை விழுங்கிவிட்டு அதனை உள்ளே தள்ள முடியாத நிலை.

இவளாக வந்து விழுவாள் என்று அது எதிர்பார்க்க வில்லை. பாதி உடம்பு உள் சென்றது; கொங்கைக்கு மேல் அம்மங்கை வெளியே தோன்ற அது விழுங்கியது; அது பெண் என்பதை அறிய முடிந்தது.

யாரிடம் முறையிடுவது? அவளுக்குப் பழக்க மானவன் நளன்தான். ஆதிமூலமே என்று அழைத்தது அன்று முதலை வாய்ப்பட்ட களிறு. திருமால் கையில் சக்கரம் கொண்டுவந்து காத்தான். முதலை மடிந்தது; யானை பிழைத்தது.

நளன் திருமால் அல்ல; இவள் குரல் அவனுக்குச் சென்று அடைய வாய்ப்பு இல்லை. அதைப் பற்றி அவள் சிந்திக்கவில்லை.

“அரவுக்கு இலக்காகி நிற்கின்றேன்; உன் தோள் வலியால் விலக்காயோ” என்று முறையிட்டாள். அவன்

கண்டால் அதைக் கண்டதுண்டமாக வெட்டிப் பிளந்து இருப்பான்.

நளன் வந்தபாடு இல்லை; பயணத்துக்காக வந்து வழி அனுப்பக் கூடாதா என்று ஏங்கினாள். வெளியில் கைநீட்டி வண்டிபோகும் வரை ‘டாட்டா’ சொல்ல அவள் முயற்சித்தாள். அவனுக்கு எப்படித் தெரியும் இப்படி அவள் ஒரு பாம்பின் வாயினுள் அகப்படுவாள் என்று.

தான் அவனைக் காணவில்லை. மக்களை நினைத்துக் கொண்டாள்; “நீங்களாவது அவரைக் காண்பீரோ!” என்று இறுதிச் சொற்கள் பேசினாள். பிள்ளைகளாவது தந்தைக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பது அவள் இறுதி விருப்பாக இருந்தது.

கை கூப்பி அவள் உள் செல்லப் புறப்பட்டாள். வண்டி நகரப் போகிறது; கதவுகளைத் தாளிடப் போகிறாள். யானை இருந்து தடுத்தது. அவள் சாகவில்லை; உயிருக்கு ஊறு நிகழவில்லை. “நாயகனே! வந்து என்னைக் காப்பாற்று” என்று உரக்கக் கூவினாள்.

பெண்ணின் குரல் அதற்கு ஒரு தனித் தன்மை இருந்தது. அழுகுரல் அது என்பதை வேடுவன் ஒருவன் அங்கு வந்தவன் அறிந்தான். காட்டில் ஒரு குழலோசையாக அது அவன் செவிமாட்டில் விழுந்தது.

குரல் வந்த திக்கு நோக்கி அவ்வேடுவன் விரைந்தான். கூப்பிய கரங்களோடு மங்கை ஒருத்தி அங்கை எடுத்து அழைப்பதைக் கண்டான்.

இதுவரை எந்த அழகியும் அவனைக் கரங்குவித்து அழைத்தது இல்லை.

பாம்பு அவளை விழுங்குவதை அவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. கையில் வைத்திருந்த வில்

அதில் அம்பினைத் தொடுத்தான். அந்தப் பாம்பின் மீது விடுத்தான்; அதைப் படுத்தான்; அவளை எடுத்தான்.

தப்பித்தவள் அவனுடன் பேசாமல் சென்று இருக்கலாம். அது அவன் கடமை; அவளைக் காத்தான். இவள் வாய் வைத்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை.

“அபயம் என்று அழைத்த என் உயிரை நீ காத்தாய்; உனக்கு யான் என்ன கைம்மாறு செய்வது? இதற்கு எது தந்தாலும் ஈடு ஆகாது” என்று கூறினாள். உயிரைக் காத்தவனுக்கு உயர் மொழி கூறினாள். அவன் மனம் குளிரும் என்று எதிர்பார்த்தாள். அது அவனுக்குச் சூட்டை எழுப்பியது; கிளர்ச்சியை ஊட்டியது.

“அவள் எது கேட்டாலும் தருவாள்” என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகியது. அநியாயமாக அந்த அரவு தின்று விழுங்கி இருக்கும். அவளை முழு வடிவில் அவன் காத்தான்.

ஏன் அவள் தன்னை அவனுக்கு அளிக்கக் கூடாது? அவன் அவளை விழுங்கப் போவது இல்லை. கூடி இன்புற விழைந்தான். அவள் அவனுக்குப் பழைய மொந்தைக் கள்போல் காணப்பட்டாள்.

“ஏடி என்னுடன் வாடி” என்று அழைத்தான். “மோடி கிறுக்குதடி பழைய மொந்தைக் கள்போல்” என்றான்.

“கண்ணாலம் செய்து கொண்ட பெண்ணை அண்ணா நீ கருதலாமோ” என்று அலறி அழுதாள்.

அவன் வேடுவன்; இரக்கம் என்பது அறியாதவன். வேட்கை மீதூர்ந்த நிலையில் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை. புறா தப்பித்துச் செல்கிறது என்பதால் அதனைத் தொடர்ந்தான்.

மயில்போல் இருந்த அவள் ஓடினாள்; ஒடினாள்; வாழ்க்கையின் ஒரத்திற்கே ஒடினாள். உயிர் தப்ப வழிநாடினாள். தூறுகளில் சிக்கினாள். இனி ஒடுவதற்கு இடமே இல்லாமல் போய்விட்டது. கண்ணீர் விட்டுக் கதறினாள். அழுகை அவனை அமைதிப்படுத்தவில்லை.

புலி தொடரச் செல்லும் சிறுமான் போல் ஓடியவள் வேங்கையாக மாறினாள். பாயும் புலியாக அவனைச் சினந்து நோக்கினாள். வீரம் அவள் விழிகள் பேசியது; கனல் தெறித்தது; அவனை எரித்தது. சிவன் எரித்த திரிபுரம் ஆயினான்; மன்மதன் சாம்பல் ஆயினான். வில்லும் அம்பும் தவிர வேறு நினைவுச் சின்னங்களை அவன் விட்டுச் செல்லவில்லை. மாயமாய் மறைந்து சாம்பல்தான் மிஞ்சியது.

உயிரைக் காத்தவன்தான்; என்ன செய்வது? அவள் மானத்தைத் தொட்டான். ‘தற்காப்பு’ அவளுக்கு உண்டு என்பது அறியாதவன், கற்புக்குப் காப்பு அவளிடம் இருந்தது; ‘காப்பீடு’ என்று பேசும் ஆதரவு நிலையில் அவள் இல்லை. கேட்பாரற்று இருக்கும் இடம் அது. கொள்ளை அடித்தவரை நன்மை, அவன்தான் தவமுனிவன் அல்ல என்பதைக் காட்டிக் கொண்டான்.

அவனிடமிருந்து தப்பி மீண்டு வெளியே வந்தாள். ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் இடையே காடு ஒன்று இருந்தது. அதை விட்டு வெளியே வந்தால் எந்த நாட்டையாவது அவள் அடைய முடியும். குழப்பம் தேர்தல் முடிவு வரைதான்; பின்பு கரை சேர முடியும்; நிலையான ஆட்சியைக் காண முடியும்.

வழிப் போக்கர்கள் யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்தாள். வணிகம் செய்யும் வாணிபன் ஒருவன் அங்கு வந்தான். இந்த வடிவழகியைச் சந்தித்தான்.

அவளிடம் பேசாமல் எப்படிச் செல்வது? பேசுவதற்கு அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

தனித்து ஒரு பெண் இருக்கிறாள் என்றால் அவள் பின்னால் ஒரு கதை இருக்கத்தான் செய்யும். அதைக் கேட்டு அறிவதில் அவனுக்கு ஒரு சிறு விருப்பு; மற்றும் தன்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்ற நல்ல எண்ணமும்; அதனால் அவளிடம் பேச முற்பட்டான்.

அவளும் அவனை நாடிவந்தாள். கட்டுச் சோறு இருக்கும். அதைக் கேட்டுப் பெறலாம் என்பதற்காக அல்ல; வழித்துணைக்கு அவ்வணிகன் உதவுவான் என்பதால் அவனிடம் நெருங்கினாள்.

புதரில் சிக்கிக் கிழிபட்ட புடவை; சிதறிக் கிடந்த மயிர்முடி; உடம்பு எல்லாம் புழுதி. அழுது அழுது வற்றிப் போன அவள் கண்கள்; அழுக்குப் படிந்த தோற்றம்; ஏதோ ஒரு இடரிலிருந்து தப்பித்து வந்தவள் போல் காணப் பட்டாள்.

அவன் புரிந்து கொண்டான்; வாலிப மங்கை; எவனோ வம்புக்கு இழுத்து இருக்கிறான்; தப்பி வந்து இருக்கிறாள் என்பதை அறிந்தான்.

அவளிடம் என்ன பேசுவது? பேசுவதற்கா கேள்விகள் இல்லை.

“நீ யார்? எந்த ஊர்? சாதி, குலம் அவள் சரித்திரம் இவற்றைப் பற்றிக் கேட்டான். “எக்குலத்தாய்? யார் மடந்தை? யாது உன் ஊர்? யாது உன் பேர்? நெக்கு உருகி நீ இங்கு வந்து சேர்வதற்குக் காரணம் யாது? இவற்றை எடுத்துக் கூறுக” என்ற வினாக்கள் தொடுத்தான்.

தேவையான விடையை அவள் அவனுக்குத் தந்தாள்; “விதி அதன் விளைவு என்று தொடங்கினாள். அதில் பல செய்திகள் அடங்கின. “மன்னவன் என்னைத் தன்னந்

தனியாக விட்டுச் சென்றான் அன்னவனைத் தேடி அலைகின்றேன்” என்றாள்.

இவன் கேட்ட வினாக்கள் அத்துணைக்கும் விடை இது ஆகும். பெருவழியில் அவர்கள் சேதி நன்னாட்டை அடைந்தனர்.

அதற்குமேல் அவன் துணை அவளுக்குத் தேவைப்படவில்லை; சுமையை இறக்கி வைத்துவிட்டு அவன்தான் ஏந்தி வந்த வணிகச் சுமையோடு சென்றான். வழித்துணைக்கு விழியழகி அவனுக்கு; அவளுக்கு அந்த வணிகப் பெருமகன். அவன் பலமூட்டைகளை வழியில் அவிழ்த்துவிட்டான். வணிக அனுபவங்கள் அவள் கேட்க விருப்பம் இல்லை; என்றாலும் அவனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவன் தன் குலப் பெருமையைப் பேசி அவளுக்கு அவன் தன் சாதனைகளைக் கூறி வந்தான். இதைப்போல் பலருக்கு அவன் உதவி செய்ததையும் எடுத்துக் கூறினான். ஒரு நாளும் தனி வழியே போக வேண்டா, யாராவது கூட்டுச் சேர்த்துக் கொண்டால்தான் வெற்றி என்று பேசினான். ‘போகும்போது நாம் என்ன எடுத்துக் கொண்டு போகப் போகிறோம்’ என்று தத்துவம் பேசிவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றான். அனுபவம் அதை அவள் போகும்போது எடுத்துச் சென்றாள்.

நாற் சந்தியில் அவள் விடப்பட்டாள். இவள் ஒரு விசித்திரமான பெண்ணாக விளங்கினாள். புடவை அறு பட்ட நிலை; முற்றுப்புள்ளி வைக்காமல் நீண்ட தொடர் வாக்கியமாக விளங்கிய கண்ணீர்; அது எப்பொழுது நிற்கும் என்று தெரியாத நிலை; துயர் அவளைக் கவ்வி இருந்தது. பார்த்தாலே பரிதாபத்துக்குரியவள் என்ற முத்திரை குத்தப் பட்டவளாய் இருந்தாள்.

பார்த்தவர் கேட்டவர் கிசுகிசுத்துப் பேசியவர் இப்படி அங்கங்கே கூடிப் பேசினார்கள் விசாரித்தவர் சிலர்.

விசனத்தை விவரமாக அறிந்தவர் சிலர். அநாதை இல்லத்தில் சேர்க்கப்படத் தக்கவள் என்று முடிவு செய்தவர் பலர். இந்த மாதிரி சரித்திரம் படைக்கும் தரித்திரர்களுக்கு என்றே கட்டப்பட்ட இல்லங்கள் அவை.

சேதி நாட்டு அரசிக்குச் சேதி எட்டியது. “பாவம் ஒரு பெண்; பார்த்தால் பசி தீரும்; எந்தப் பசி? அதற்கு விளக்கம் இல்லை. அரசமகள்போல் இருக்கிறாள். அநியாயமான அழகு அவளிடத்தில் இருக்கிறது. கட்டிக் கொண்டவள் போல் இருக்கிறாள். கன்னி என்று அவளைக் கூற முடியாது; அது கழித்தவள்; கூட்டலாகக் குழந்தைகளும் இருக்கலாம். பறி கொடுத்தவள்போல் தறி கெட்டு நிற்கிறாள்” என்று சென்று கூறினர்.

“அவள் எங்காவது போய்விடப் போகிறாள்; அவளை அழைத்துவா” என்று தன் சேடி ஒருத்தியைச் சேதி அரசி அனுப்பி வைத்தாள்.

அரசி முன் அவள் அழைத்துச் செல்லப்பட்டாள்; சென்றதும் அரசியின் அடிகள் இரண்டில் விழுந்து புரண்டு அழுதாள்.

அவளை எடுத்து நிறுத்தினாள். “கண்ணீர் துடைத்துக் கொள்” என்றாள். “உன் துயரக் கதையைக் கூறுக” என்றாள்.

விரித்துக் கூறச் சொற்கள் தேவைப்பட்டன. அவளுக்குச் சொற்கள் போதவில்லை.

கதையைச் சொன்னால் அவர்கள் படமா எடுக்கப் போகிறார்கள். செய்தி மட்டும் சொன்னால் போதும் என்று முடிவு செய்தாள்.

“என்னைத் தனியே வனத்தில் இட்டுச் சென்று விட்டான் எம் தலைவன். அவனைத் தேடிக் காணாது அலமருகின்றேன்” என்று கூறினாள்.


“இந் நகர்க்கு வந்தேன்; இது என் வருகை” என்று கூறினாள்.

அவள் அடைந்த துயரை முற்றும் அறிந்த அரசி “உன்னவனைத் தேடித் தருகிறோம்; அவன் வரும் வரையும் என்னவளாக இங்கேயே இரு” என்று பாசத்தோடு பேசினாள்.

மகள் தாய் உறவு அங்குத் தோன்றி மலர்ந்தது. தாய் வீடு சேர்ந்த நிறைவு அவளுக்குக் கிடைத்தது. இழந்த பொருளை உழந்து தேடுவது; அங்கிருந்தால்தான் அவனைக் காண முடியும் எனக் கருதினாள். அங்கு வீசும் காற்று அவனைப் பற்றிய செய்தி கொண்டு வரும் என்று அதைச் சுவாசிக்கக் காத்திருந்தாள்.

தன்னைப் போலவே அவனும் அதே சேதி நாட்டுக்கு வரக் கூடும் என்ற சிறிய நயப்பும் அவள்பால் அமைந்து இருந்தது. பாதுகாப்பான பெட்டகம்; அங்குத் தங்குவது தான் தக்கது என்று முடிவு செய்தாள். அடுத்தது என்ன? அவளுக்கே விளங்காமல் இருந்தது.

பெற்றவர்களுக்குச் செய்தி எட்டியது. மக்கள் இரு வரையும் அழைத்துச் சென்ற மறையவன் மன்னன் மகள் காட்டு வழியே தன் மணானனுடன் சென்றாள் என்பதைத் தெரிவித்தான்.

அந்த வேதியனை விதர்ப்பன் அழைத்தான். “நீ என் மகளைத் தேடித் தருக” என்று கூறிப் பணித்தான்.

அந்தணன் வழிச் செலவுக்கு வாங்கிக் கொண்டு கட்டுச் சோறுடன் புறப்பட்டான். சூரியன் அவன் ஒளிக் கதிர்கள்படும் இடம் எல்லாம் சென்று பார்த்து அலுத்தான்; அவன் சென்று தேடாத இடமே இல்லை. அவன் இறுதியில் சேதி நாட்டை அடைந்தான். அங்கு அவளைப் பற்றிய செய்தி கிடைக்குமா என்று தேடினான்.

ஊரவரை விசாரித்தான்; யாராவது புதியவர் அங்கு வந்து வதிகின்றாரா என்று விசாரித்தான்.

“நேரே அரசியின் அந்தப்புரம் செல்க! அங்கு நீ சொல்லும் ஒரு புதுப்பெண் தங்கி இருக்கிறாள். கட்டியவன் நடுக்காட்டில் விட்டுச் சென்றான் என்ற கட்டுரை கூறியவள் அவள்; அங்குச் செல்க” என்று சொல்லி அனுப்பினர்.

மாளிகை சென்றான். மாவிந்த நகர் தலைவன் நளன் அவனை மணந்தவள்; தணந்தவள்; அங்கு இருந்ததைக் கண்டான். வீமன் மகள்; கொடிபோல் இருந்த கோமகள் அவளைக் கண்டான் “மகளே!; என்று கதறினான். அவன் அவலத்தை அவன்விட்ட கண்ணீரில் காட்டினான். அவள் ஒடோடி வந்தாள். நாடி அவன் காலடிகளில் விழுந்து வணங்கினாள். அவன் கால்களைத் தன் கண்ணீர்த் துளிகளால் கழுவினாள். குமுறிக் குமுறி அழுதாள்; அவனைத் தொழுது வணங்கினாள்.

அவர்கள் மேலும் பேசி அறிவதற்கு முன் பேரரசி அங்கு வந்து சேர்ந்தாள். இந்தப் புதுமையைக் கண்டாள்.

அந்தணன் அறிவித்தான்; “இவள் உன் மகள்” என்றான்.

அது அவளை வியப்பில் ஆழ்த்தியது. அவள் தன் தங்கை மகள் என்பதை அறிந்தாள். உருக்குலைந்த நிலையில் அவளால் அறிந்து கொள்ளமுடியாத நிலையில் இருந்தாள்.

மணத்தில் அவளைச் சந்தித்தது. அன்று அவள் மின்னல் கொடியாக இருந்தாள். இன்று பின்னக் கணக்காக மாறிவிட்டாள். தாய்மை அடைந்தவள்; காயாக இருந்தவள் இப்பொழுது கனியாக மாறினாள். அதனால் அடையாளம் காணமுடியாமல் போய்விட்டது.

அழுதுஅழுது அந்த இடத்தை அவர்கள் அவலப் படுத்தினர். தமயந்தி அழ அந்தணனைத் தொழ சேதி யரசியும் ஆறுதல் கூறமுடியாத நிலையை அடைந்தாள்.

கணவனைக் கண்டு எடுத்து அவனை அவளோடு சேர்ப்பது என்று கொண்டிருந்தாள். இனி அவள்தன் மக்களைப் பார்த்தாவது மனம் தேறட்டும் என்று நினைத்தாள். சேதி அரசனும் அதுவே தக்கது என்று அறிவித்தான்.

விதி பிடர் பிடித்து உந்த அவர்கள் வாழ்க்கை சிதைந்தது. இனி அவள் தந்தைபதிக்குச் செல்வதே தக்கது என்று அவ் அந்தணனோடு அவளைச் சேர்த்து அனுப்பி வைத்தனர்.

ஊரவர் திரண்டனர். படம் எடுக்க வந்த கூட்டம் அதை முடித்துக் கொண்டு திரும்புவது போல் அவள் செயற்பாடு இருந்தது. அவளை வழி அனுப்ப ஊர்த் தொண்டு கிழவர்களைத் தவிர குண்டு மனிதர்கள் வந்து கூடினர். ஆடவரும் மகளிரும் திரளாக நின்று வழி அனுப்பினர். அவள் சோகக் கதை அதைத் தொடர்ந்து பேசினர்.

அவள் அனுபவங்கள் அவள் உள்ளத்தை நிரப்பின. அன்பும் பாசமும் பரிவும் கொண்ட ஊர் மக்களை அவள் நினைத்துப் பார்த்தாள். அவர்கள் காட்டிய பாசத்தை அவளால் மறக்க முடியவில்லை. விதி காட்டும் வழி என்று வீதி வழியே நடந்து சென்றாள். நகரத்தவர் அவளை வழி அனுப்பி வைத்தனர். அவளை வழி அனுப்ப நிறைந்த கூட்டம் நிலை கொள்ளவில்லை. கோயில், அந்தப்புரம் வாயில் எங்கும் மக்கள் நிறைந்தனர்; “அவள் மக்களையும் கைவிட்டுக் கணவனுடன் காட்டுக்குச் சென்ற உத்தமி” என்று அவளைப் பற்றிப் பேசினர் “மக்களைவிட கணவனை மதித்தவள்’’ என்று பேசினர்.

விதர்ப்பன் நகர் ஆகிய குண்டினபுரத்தைத் தமயந்தி சென்று அடைந்தாள். ஊரவர் திரண்டனர். வழியில் நின்று சந்தித்தவர், அவளை நினைத்து அழுது தெருவைக் கண்ணீர் வெள்ளத்தில் நனைத்தனர். “மகளே உனக்கா இந்த கதி வரவேண்டும்” என்று தேவையற்ற கேள்வியைக் கேட்டனர்.

தந்தை மகளைத் தழுவிக் கொண்டான். உணர்ச்சிப் பெருக்கால் அவர்கள் உரை தவிர்த்தனர். விட்டுவிட்டு அவள் கண்ணீர் சொட்டு சொட்டாக விட்டாள்.

தாய் அவளைப் பார்த்தாள்; மகள் தன்னுடன் இருப்பதை மறந்தாள். அவள் பாழ் மண்டபத்தில் தனி யாளாக விடப்பட்ட நிலையில் அவள் பட்ட வேதனையை எண்ணிப் பார்த்தாள். அந்த நினைவு அவளால் தாங்க முடியவில்லை; “ஒ” என்று கதறி அழுதாள்.

“பனி இருளில் பாழ் மண்டபத்தில் உன்னைப் பற்றி நினைக்காமல் உன்னைவிட்டு அகன்றபோது தனியே நின்று நீ என்ன நினைத்தாய்? என்ன செய்தாய்?” என்று தனிமைப்பட்டுப் புலம்பினாள். அந்த அவலக் காட்சி அவளை அலைத்தது.