புகழேந்தி நளன் கதை/கவிதை நலன்கள்

விக்கிமூலம் இலிருந்து

கவிதை நலன்கள்

கதை பாரதம் தந்தது; அதனைப் பாவில் வடித்துத் தந்தவர் புகழேந்தி. அவர் கவிதைச் சிறப்புகள் நம் நெஞ்சை அள்ளுவனவாக உள்ளன. அவர் கவிதைகளை மூன்று தலைப்பில் காணலாம். (1) அணிநலன் (2) சொல்லாட்சிகள் (3) செய்திகள். மூன்றும் அவர் கவிதை நலனுக்கு அடிப்படை என்று கூறலாம்.

1. திருமகளின் நாட்டம்

உவமையணிகள் அவற்றில் அவரது கவித்துவம் தனித்தன்மையோடு விளங்குகின்றது.

நிடத நாடு திருமகளின் கண்கள் என்று கூறுவது மிகச் சிறப்பாக உள்ளது. வயல்களில் கயல்கள் புரள்கின்றன; கருங்குவளை முகை நெகிழ்கின்றது; தாமரையின் தளை அவிழ்கின்றது என்று கூறுகின்றார். கண்களின் பிறழ்ச்சியைக் கயல்களிலும், நிறத்தைக் கருங்குவளையிலும், அழ கினைத் தாமரையிலும் காட்டுகின்றார். இதனால் இவை பூமடந்தையின் கண்கள்போல் உள்ளன என்று கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது.

நாட்டு வருணனையில் மூன்று செய்திகளைக் கூறி அதனால் அது திருமகளின் கண்கள் போல் உள்ளது என்று கூறுவது நயம் மிக்கதாக உள்ளது. பூ மடந்தை என்பது திருமகள் என்று கொள்வது தக்கது ஆகும். நிடத நாடு இக்காரணத்தால் திருமகளின் கண்போல் உள்ளது என்று நூலினைத் தொடங்குவது காவியத்துக்கு அழகு செய்கிறது.

காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு

2. மற்றொன்று கிளத்தல்

நாட்டு மக்கள் நேர்மை தவறாதவர்கள். அழுகை கலக்கம் இவற்றைக் காணாதவர்கள்; சொற் சோர்வு இல்லாதவர்கள், நெறி பிறழாதவர்கள் என்பது கவிஞர் சொல்ல வந்த கருத்து.

அதை நேரே கூறாமல் உடன்பாட்டு வாய்பாட்டில் வேறு வகையில் கூறுவது அவர் சொல்லாட்சித் திறனைக் காட்டுகிறது.

வெஞ்சிலையே கோடுவன; மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம்
கலங்குவன; மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு

“வில்வளைவது; கூந்தல் சோர்வது; சிலம்பு அரற்றுவது; நீர்த்தடாகங்கள் கலங்குவன; மகளிர் கண்கள் பிறழ்வன” என்று கூறுவது சிறப்பாக உள்ளது.

3. முரண்தொடை நயம்

‘தெரிவன’ ‘தெரியாதன’ என்று முரண்தொடை நயம் அமையச் சொற்களை ஆள்வது நயம் தருகிறது. அதே போல ‘இரவு’ ‘கரவு’ இயைபுத் தொடை அமைத்துச் கவிதைக்குத் தொடை நயம் தோற்றுவிக்கக் காண்கிறோம்.

‘இல்லாதன கல்லாதன’ என்பவற்றில் சொல்லாட்சி நயம் தோற்றுவிக்கின்றார். வறுமை இல்லை; அதனால் இரத்தலும் இல்லை; களவு செய்தலும் இல்லை என்று கூறுவது நயம் மிக்கதாக உள்ளது.

தெரிவனநூல் என்றும் தெரியா தனவும் .
வரிவளையார் தங்கண் மருங்கே - ஒரு பொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்துஎவரும்
கல்லாதனவும் கரவு

4. கருத்து அழகு

ஒரு துறையில் மானும் புலியும் நீர் குடிக்கிறது என்பார் கவிஞர்; மக்கள் பகை இன்றி வாழ்ந்தனர் என்ற கருத்து அறிவிக்கின்றார்.

மாறுபட்ட கோட்பாடு உடையவர்கள் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வது உயர்ந்த பண்பாடு என்பதை அறி வுறுத்த அவர் கூறும் செய்தி கருத்து அழகு கொண்டதாக விளங்குகிறது.

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்
ஒரு கூட்டில் வாழ உலகு

மாதர் அருகிருந்து ஊட்டும் பசுங்கிளியும் கொல்லும் தொழிலை உடைய பருந்தும் ஒரே கூட்டில் வாழ்கிறது. அப்படி வாழ அவன் உலகினைத் தன் குளிர்ந்த வெண்கொற்றக் குடையின் கீழ் செம்மை அறம் விளங்க மக்களைக் காத்து அரசு செய்தான் என்று கூறுகிறார்.

5. மருட்கை அணி

அன்னப் பறவை பொய்கையில் வந்து தோன்றியது என்கிறார் கவிஞர். அப்பொழுது அதன் சிறகு வெண் நிறத்தால் சோலை தன் பசுமை நிறத்தை இழக்கிறது என்றும், பொய்கைத் தலம் அதன் தாள் நிறத்தால் சிவந்தது என்றும் கூறுவது மருட்கை உணர்வினைத் தருகிறது. அதனால் இதனை மருட்கை அணி என்று கூறலாம்.

நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தாற் பொய்கைத் தலம்சிவப்ப மாணிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே ஆங்கு.

அவன் மட்டும் நிறம் மாறவில்லை. கொள்கை மாறாதவன் என்ற கருத்தினை ‘மாண் நிறத்தான்’ என்ற சொல்லாட்சியில் உணர்த்தக் காண்கிறோம்.

‘அப்புள்’ என்ற சொல்லில் இருவேறு பொருள் உண்டாக்கித் தருவது ‘யமகம்’ என்று கூறுவர். சிலேடை என்பது ஒரே தொடருக்கு இரண்டு பொருள்கள் தோன்ற அமைத்தல் என்பர். இது இருவேறு இடத்தில் இருவேறு பொருள் தோன்ற அமைக்கப்படுவது தனிச்சிறப்பு ஆகும்.

“அப்புள் தோன்றும் முளரியில் வைகும் அன்னம்” என்கிறார். அப்புள் என்றால் தண்ணீர் என்பது பொருள். ‘நீரில் தோன்றும் தாமரை’ என்பது அதன் பொருள் ஆகிறது. அடுத்த வரியில் ‘அன்னப்புள்’ - அன்னப் பறவை என்று கூறுகிறார்.

‘முன்னப்புள் அன்னப்புள்’ என்று கூறுவது சொல்லாட்சிச் சிறப்புத் தருகிறது.

6. அணி நடை மணி நடை

“அன்னமே நீ அஞ்சாதே! உன் அழகிய நடையும் மகளிர் மாட்சிமிக்க நடையும் ஒப்பிட்டுக் காணவே உன்னைப் பிடித்துவரச் செய்தேன்” என்கிறான் நளன்.

அன்னத்தின் நடை அழகு மட்டும் கொண்டது. மகளிர் நடை மதிக்கத் தக்கது என்ற பொருள் வேறுபாடு தோன்ற மணிநடை என்று கூறுவது தனிச்சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது.

அஞ்சல் மடவனமே உன்றன் அணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன்

7. பெண்மை அரசு

பெண்களின் நற்குணங்களை அழகிய உருவகங்களில் தருவது தனித்தன்மை கொண்டு விளங்குகிறது. பெண்மை இயலுக்குத் தந்த சித்திரம் இது.

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்.
ஆளுமே பெண்மை அரசு

நாற்குணம்-அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பன நான்கு வகைப் படைகள்; ஐம்புலன் அமைச்சர்கள் என்கிறார். கண்கள் வேல், வாள்; முகம் வெண் கொற்றக் குடை; இதன் கீழ் பெண்மை அரசு ஆள்கிறது என்கிறார். பெண்ணுக்கு உரிய தற்காப்புகள் இவை என்கிறார் கவிஞர். ‘தற்காத்து’ என்பார் வள்ளுவர். அதற்கு விளக்கமாக அமைந்துள்ளமையைக் காண முடிகிறது.

8. சொல்லாட்சிகள்

உனக்கும் தமயந்திக்கும் உள்ள உறவு எத்தகையது என்று கேட்கிறான் நளன். அதற்கு விடை தருகிறது அன்னப் பறவை.

“நாங்கள் பூஞ்சோலையில் வாழும் பறவைகள்; அவள் அரண்மனைக்குச் செல்வது வழக்கம். நடையைக் கற்பதற்கு நாங்கள் செல்கிறோம்; மன்மதன் படைகற்க அங்கு வருவான் என்று கூறுவது நயம் மிக்கதாக உள்ளது. நடை கற்க யாம் செல்வோம் படைகற்க அவன் வருவான்” என்பது சுவை தரும் செய்தியாக அமைகிறது.

பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாம்; அவள் தன்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கள் - காமன்
படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள் பாத
நடைகற்பான் வந்தடைந்தோம் யாம்

9. சொல்திறன்

அன்னம் நளனைப் பற்றித் தமயந்திக்கு அறிமுகம் செய்கிறது. அதில் அதன் சொல் திறம் வெளிப்படுகிறது. அவள் மனங்கொள்ளத் தக்க வகையில் எப்படிக் கூற வேண்டுமோ அப்படிக் கூறுவது சொல் திறனைக் காட்டுகிறது.

செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்-மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்தன் உனக்கு

“அவன் மனம் செம்மையது; இரக்க உணர்வினன்; செங்கோன்மைச் சிறப்பு உடையவன். மகளிர் மயங்கும் அழகன்; நளன் என்பது அவன் பெயர். அவனுக்கு இரு நிலத்தும் நிகர் யாருமே கூற முடியாது” என்று கூறுகிறது. சொல்திறன் எப்படி அமையவேண்டும் என்பதற்கு இது எடுத்துக் காட்டாக உள்ளது.

10. சொல்லாட்சிச் சிறப்பு

அன்னத்தின் வருகையை நளன் ஆவலாக எதிர் பார்க்கிறான். நெடுவானில் மேகம் பின்னுக்கு ஒட அன்னம் வருகிறது. என்கிறார். அதனை நளன் கண்டான் என்கிறார். அவன் ஆர்வத்தைச் சொல்லடுக்கில் வைத்துக் கூறுவதும் உருவகச் சொற்களில் கூறுவதும் அழகு தருகின்றன. அழியாத சொல் வழக்குகளாகவும் இவற்றுள் ஒன்று இடம் பெற்றுவிட்டது.

‘வழிமேல் விழிவைத்து’ என்ற சொல்லாட்சி புகழேந்தியார் படைத்தது; ‘வழிமேல் விழியை வைத்து’ என்பது உருவகத் தொடர். இலக்கியத்தில் இது அழியாத

இடம் பெற்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து “மொழிமேல் செவி வைத்து மோகச் சுழிமேல் நெஞ்சோட வைத்து” என்று கூறுவது மேலும் அழகு தருகிறது.

வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம
மொழிமேல் செவிவைத்து மோகச் - சுழிமேல்தான்
நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர

‘வைத்து’ ‘வைத்து’ என்று திரும்பத்திரும்பக் கூறுவது சொற் பொருள் பின்வரு நிலை அணி என்பர். மஞ்சு - மேகம் - மேகம் ஒட அன்னம் வரக் கண்டான் என்று முடிக்கின்றார்.

11. அரிய உவமை

வறியவர் செல்வர் மனையில் நின்று கேட்டுப் பெறும் நிலையை அழகாகச் சித்திரிக்கிறார். அந்த நிலையில் நளன் இருந்தான் என்று கூறுவது நெஞ்சைத் தொடுகிறது.

முகம்பார்த் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்
அகம்பார்க்கும் அற்றோரைப் போல - மிகுங்காதல்
கேளா விருந்திட்டான். அன்னத்தைக் கேளாரை
வாளால் விருந்திட்ட மன்.

வறியவர் செல்வர்தம் முகம் பார்த்து, அவர்கள் மனநிலை அறிந்து, அருள் உள்ளம் அறிந்து இரக்கின்றனர். பிறகு அவர் உள்ளப் பாங்கு அதனையும் பார்த்தே அவர்களிடம் இரக்கின்றனர். அதைப் போன்று அவன் அவள் கூறும் காதற் செய்திக்காக அதனை எதிர் நோக்கித் தாழ்ந்து நின்றான். பகைவரை (கேளாரை) வாளால் விருந்து செய்தவன். அவள் சொற்களை இரந்து கேட்டான் என்கிறார். இரவலர்தம் உள்ளப் பாங்கைச் சித்திரித்து அதனை உவமையாகத் தருவது சிறப்பாக உள்ளது.

12. அழகு சுமந்து இளைத்த ஆகத்தாள்

நாரதன் தமயந்தி சுயம்வரம் குறித்து இந்திரனிடம் செய்தி செப்புகின்றான். அவள் பேரழகி என்று கூறுகிறான். அதனை அவன் கூறுவது அழகிய சொல்லாட்சியைப் பெற்று உள்ளது.

அவள் அழகி; மெல்லியல் படைத்தவள்; அழகு சுமந்து அதனால் மெத்தவும் இளைத்துவிட்டாள் என்று கூறுவது நயம் மிக்கதாக உள்ளது. அதேபோல் ‘பழகு கருங் கூந்தற் பாவை’ என்று அவள் வடிவினைக் கூறுவது அழகு தமிழாக அமைந்துள்ளது என்று கூறலாம்.

“அவள் வீமன் குடிக்கு ஒர் நிலை பெற்ற விளக்கு; அவள் காமனுக்கு ஒரு பாதுகாப்பு” என்றும் கூறுகிறார்; பாவை போன்றவள், அவள் அழகினள், வீமன் மகள், கவர்ச்சி மிக்கவள் என்ற செய்திகள் இக்கவிதையில் தருகிறார்.

அழகு சுமந்திளைத்த ஆகத்தாள்; வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை - மழகளிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம்; மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு

13. உவமை அழகு

இந்திரன் இட்ட ஏவல் ஒரு பக்கம்; தமயந்திபால் கொண்ட ஆவல் மற்றொரு புறம்; இரண்டுக்கும் இடையே அவன் அலைமோதும் உள்ள நிலை; நெசவுத் தொழிலாளி அவன் அசைத்து இயக்கும் பாவு (மூங்கில் குழல்) போன்றது என்று கூறுவது சிறப்பாக உள்ளது.” இரு புறமும் அது மாறி மாறிச் சென்று இடிக்கிறது; அதேபோல் அவன் உணர்வுகள் உதைக்கின்றன; அவனை வதைக்கின்றன” என்கிறார்.

தேவர் பணிதலைமேற் செல்லும்; திரிந்தொருகால்
மேவுமிளங் கன்னிபால்; மீண்டேகும் - பாவிற்
குழல்போல நின்றுழலும் கொள்கைத்தே பூவின்
நிழல்போலும் தண்குடையான் நெஞ்சு

14. குவளையும் தாமரையும்

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற செய்தியைப் பூக்களில் வைத்துக் கூறுவது பாவிற்குத் தனிச்சிறப்புத் தருகிறது. உருவகங்களில் அமையும் சொல் லாட்சிகளாக விளங்குகின்றன. அவள் விழிகள் குவளை; அவன் கண்கள் தாமரை என்பதை வைத்து இக்கவிதையைப் புனைந்துள்ளார்.

அவர்கள் காதல் நோக்கு அதனை வள்ளுவர் போலவே பொது நோக்கு என்று கூறுகிறார். அந்தக் காதல் நோக்கு அவர்கள் பார்த்த பார்வைகளைக் “குவளையில் தாமரை சென்று பூத்தது"; “குவளை தாமரையைக் கண்டு பூத்தது” என்று கூறும் அழகு சிறப்பாக உள்ளது.

அவள் அவனை நோக்கினாள் என்று கூறாமல் அவன் நோக்கு கண்டு அவள் கண்கள் மலர்ச்சி பெற்றன என்று கூறுவது நுட்பமான செய்தியாகிறது. “பூங்குவளை தாமரைக்கே பூத்தது” என்று கூறுவது காணத் தக்கது.

இவன் அவள் கண்களைக் கண்டு மகிழ்ந்தான் என்கிறார். ‘தேங்குவளை தன்னிலே செந்தாமரை மலர’ என்கிறார்.

குவளையில் தாமரை மலர்ந்தது என்பது அவனுக்கும் தாமரைக்கே குவளை பூத்தது என்று அவளுக்கும் கூறுவது சிறப்புமிக்க செய்திகள். அவள் அவனை நிமிர்ந்து நோக்கினாள் என்றால் தவறாக முடியும். ‘யான் நோக்கும் காலை நிலன் நோக்கும்’ என்றார் வள்ளுவர்.

அவளும் நோக்கினாள் என்றால் அது அவள் பெண்மைக்குச் சிறிது இழுக்காகிவிடும். கம்பரைப் போல் இவர் கூற்று அமையாமல் அவன் நோக்கில் அவள் மலர்ச்சி பெற்றாள் என்பது புகழேந்தியின் சொல்லாட்சிச் சிறப்பு; தனித் தன்மையும் ஆகிறது.

தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்கு
மதுநோக்கும் தாரானும் வாள்நுதலும் தம்மில்
பொதுநோக்கு எதிர்நோக்கும் போது

15. அந்திப் பொழுது

அந்திப் பொழுதை வருணிக்கிறார் கவிஞர். மல்லிகை முகைகள் விரிகின்றன; பூக்கின்றன. மற்றும் பல்வகை மலர்கள் பூத்து அழகு செய்கின்றன. முல்லை எனும் பூவும் பூத்து அழகு செய்கிறது. மாலையாகிய அந்திப்பொழுது மெல்ல வந்து சேர்கிறது என்கிறார் கவிஞர். இதனை உருவகத்தில் கூறுவது தனிச்சிறப்புப் பெறுகிறது.

சங்குகளில் வண்டுகள் வாய் வைத்து ஊதுகிறது. மன்மதன் மெய்க் காவலனாக வருகிறான். மெல்ல நடந்து வருகிறது மாலைப் பொழுது தோளில் முல்லை மாலை ஏற்று என்கிறார். அழகிய உருவகமாக இக்கவிதை அமைகிறது.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையென்னும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது

16. உவமை உருவகம் கலத்தல்

ஒரே கவிதையில் உவமை இடம் பெறுகிறது. மற்றும் ஒர் உருவகம் உவமையோடு பின்னிப் பிணைத்து அழகிய ஒவியத்தைப் படைக்கிறார்.

மன்னர்கள் தமயந்தியை விழித்த கண் வாங்காமல் பார்க்கின்றனர். அவர்கள் இடையே இவள் புகுகின்றாள். அவர்கள் விழிகளைத் தாமரை என்கிறார். அதனால் அம் மண்டபத்தை ‘விழித்தாமரை பூத்த மண்டபம்’ என்று கூறுகிறார். மண்டபத்தில் எப்படித் தாமரை பூக்கும்? தாமரை பூத்த மண்டபம் அது என்கிறார். ‘விழித்தாமரை’ என்பதால் அது பொருந்துகிறது.

அதனை வளப்படுத்தும் வகையில் அடுத்துள்ள செய்தி அமைகிறது. அம்மண்டபத்தில் தமயந்தி புகுந்தாள். பொய்கையிடத்து அன்னம் போவதே போன்று அவள் புகுந்தாள் என்கிறார்.

அந்த மண்டபம் பொய்கையாகிவிடுகிறது. விழித்தாமரை பூத்த பொய்கையில் பாவை புகுந்தாள் என்று கூறி இருக்க வேண்டும். அதனை நிறைவு செய்யும் வகையில் பின்பு அவர் அமைக்கும் உவமை நிறைவு செய்கிறது.

மன்னர் விழித்தா மரையூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்
பொய்கைவாய் போவதே போன்று

17. தமிழமுது சொல்லாட்சி

அரசர்களைச் சேடி ஒருத்தி அறிமுகம் செய்கிறாள். சோழனுக்கு முதலிடம் தருவது அவர் தமிழ்ப் பற்றையும்,

நாட்டுப் பற்றையும் காட்டுகிறது. தமிழ் மன்னனுக்கு முதலிடம் தருகிறார்.

காவிரியைப் ‘பொன்னி’ என்று உருவகப்படுத்திக் கூறுவது சிறப்பாக உள்ளது. மழை நீரை அமுதம் என்றார் வள்ளுவர். அதை உள்ளடக்கிப் ‘பொன்னி அமுதம் புதுக் கொழுந்து’ என்கிறார். புகழேந்தி; நீரைப் புதுக் கொழுந்து என்பது அடுத்த உருவகம். அது கமுகின் சென்னி தடவுகிறது என்கிறார். உருவகச் சொல்லாட்சிகள் இத் தொடரை அழகு படுத்துகின்றன. ஒவ்வொரு சொல்லும் இனிமையைத் தருகிறது. ‘பொன்னி அமுதப் புதுக் கொழுந்து’ என்பது காவிரிப் புது வெள்ளத்தில் நீர்த் துளிகளைக் குறிக்கின்றது. நீரை அமுதம் என்று சொல்வது வள்ளுவர் கருத்தை உள்ளடக்கியதாக உள்ளது.

பொன்னி யமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்
சென்னி தடவும் திருநாடன் - பொன்னிற்
சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரிற் றுன்னார்
கணங்கவிழ்ந்த வேலனிவன் காண்.

17. மக்கள் செல்வம்

மக்கள் செல்வத்தின் மாட்சிமையைக் கவிஞர் மிக அழகாகக் கூறுகிறார். வள்ளுவர் கருத்துகளை உள்ளடக்கி அவற்றைத் தொகுத்து ஒரே கவிதையில் தருவது செறிவும் அழகும் கொண்டு விளங்குகின்றன

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்?

“இன்னடிசில் புக்குஅளையும் தாமரைக் கை பூ நாறும் செய்ய வாய் மக்கள்” என்ற சொல்லாட்சி அழகும் இனிமையும் தருகிறது.

18. தற்குறிப்பேற்ற அணிகள்

கடற்கரை வழியாக நளன் அயோத்தி செல்கிறான். வழியில் தன் துயரை வாய்விட்டுப் பேசாத நண்டோடும், எதிர் உரைதராத கடலோடும் கூறிப் பகிர்ந்து கொள்கிறான்.

அவன் செய்த கொடுமையை அடுக்கிக் கூறுவது அழகு தருகிறது. சோகத்தை மிகுவித்துக் காட்டுகிறது. மற்றும் மோனைகள் ஒசை இனிமை தந்து உணர்வைக் கூட்டுகிறது.

காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஒடி
ஒளிக்கின்ற தென்னோ உரை?

காதலியைக் கைவிட்ட பாதகன் என்பதாலும் பார்க்கத் தகாதவன் என்பதாலும் ஒடி ஒளிக்கின்றாயோ என்று வினவுகின்றான். அலவன் என்பது நண்டைக் குறிக்கும் சொல்.

மோனைத் தொடை அழகும் எதுகை நயமும் இக் கவிதைக்கு உணர்வு சேர்க்கின்றன.

நண்டு செய்வது அது யார் வந்தாலும் தன்குழிக்குள் சென்று மறைந்துவிடும். இவனைக் கண்டு இவன் தகாதவன் என்பதற்காகச் செல்லவில்லை. தன் குறிப்பை அதன்மீது ஏற்றிக் கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி யாகிறது.

19. சிலேடைநயம்

மற்றும் அடுத்துள்ள கடல் நீரைப் பார்க்கிறான். அலைகள் கரையில் வருகின்றன. பின்நோக்கிச் செல்கின்றன. புரண்டு விழுகின்றன. இரைச்சல் இடுகிறது. அதனை நாவாய் குழற நடுங்குவதாகக் கூறுகிறான்.


“தீவாய் அரவு அகற்றினேன்; அத்தகைய இரக்க உணர்வு உடையவன் யான்; காதலியை இரவு அகற்றி வந்தேன். இது மிகவும் கொடுமை".

“இதைப் போல நீயும் உன் காதலியைக் கைவிட்டு விட்டு வந்தாயோ! இரவில் சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து வந்தாயா! என்னைப் போலவே நீ அலைகிறாய் மனம் குலைகிறாய் நிலை தளர்கிறாய் எனக்கு விளங்க வில்லையே” என்கிறான். இதுவும் தற்குறிப்பேற்ற அணியாகிறது.

“நாவாய் குழற நடுங்குறுவாய்” என்பதில் சிலேடை நயமும் அமைந்துள்ளது. நாவும் வாயும் குழற என்பது ஒரு பொருள். நாவாய் மரக்கலம் என்ற பொருள் உடையது; கடலில் மரக்கலம் அசைந்து செல்கிறது. அதை வைத்து நாவாய் குழற என்றும் கூறுவதாக அமைகிறது.

போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் - தீவாய்
அரவகற்றும் என்போல் ஆர்கடலே மாதை
இரவகற்றி வந்தாய்கொல் இன்று

20. இருவேறு நிலைகள்

கண்ணகி மதுரையில் கணவனோடு புகுந்தாள். வெளியே போகும் போது தனியே சென்றாள். இதை நினைத்துப் பார்க்கிறாள். இருவேறு காட்சிகளை ஒரே இடத்தில் வைத்துச் சோகத்தைப் பேசுகிறான். “கீழத்திசை வாயில் கணவனொடு புகுந்தேன். மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு” என்கிறாள். இருவேறு நிலைகளை ஒருங்கு உரைத்து முரண்பாடு காட்டும் காட்சி இது.

இதே போன்று பாரி மகளிர் தந்தை இழந்த நிலையில் கையறு நிலையாகப் பாடுகின்றனர். “அற்றைத் திங்கள்

அவ்வெண்ணிலவில் எந்தையை உடையேம்; இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் எம் தந்தையும் இல்லை; எம் நாட்டையும் பிறர் கொண்டுவிட்டனர்” என்று கூறு கின்றனர். இந்த வேறுபட்ட முரண்பட்ட காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன.

அதே போன்று தமயந்தியின் கூற்றும் இதில் இடம் பெறுகிறது. மாற்று உருவில் கண்டு வந்து தோழியர் அவனைப் பற்றி விவரிக்கின்றனர். புகையுண்ட கையனாக அவன் விளங்குவதை எண்ணிப் பார்க்கின்றாள். அன்று தன்னைத் திருத்தி அழகு செய்த கைகள் இன்று வருத்திக் கடுமை உற்றனவோ என்று கூறுகிறாள்.

அந்தக் காட்சி இக்கவிதையில் இடம் பெறுவது கவிதையில் சோகத்தின் உச்சியைத் தொடுகிறது.

கொங்கை யளைந்து சூழல் திருத்திக் கோலஞ்செய்
அங்கை யிரண்டும் அடுபுகையால் - இங்ஙன்
கருகியவோ என்றழுதாள் காதலனை முன்னாள்
பருகியவேற் கண்ணாள் பதைத்து

21. பல் பொருள் உவமை

நாட்டை மீண்டும் பெறுகிறான் நளன். ஆட்சியில் அமர்கிறான் அவன். இந்த நிலையில் மன்னனின் வருகை கண்டு மக்கள் உவகை கொள்கின்றனர். அதற்கு உவமை கள் பல அடுக்கிக் கூறுகிறார் கவிஞர். எந்த உவமையை இதற்கு யான் எடுத்துக் கூறுவது என்று மருட்கை தோன்றக் கூறுகிறார். பல பொருள்களை உவமை கூறுவது பாவிற்கு அழகு தருகிறது.

கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று
மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்கு
ஏதோ உரைப்பன் எதிர்?

22. சொற்பொருள் பின் வருநிலை அணி

வந்த சொல்லை மீண்டும் வைத்துச் சொல் நயம் தோற்றுவித்தல் இவர் பாடல்களில் காணப்படும் தனிச் சிறப்பு என்பது அறிய வருகிறது.

‘இழந்து’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து கவிதைக்குச் சொல் நயம் தருகிறது.

கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்?

‘கிடந்த’ என்ற சொல் மீண்டும் மீண்டும் இடம் பெற்று அழகு தருகிறது.

அறங்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும்
மறங்கிடந்த திண்தோள் வலியும் - நிலங்கிடந்த
செங்கண்மால் அல்லனேல் தேர்வேந்தர் ஒப்பரோ
அங்கண்மா ஞாலத் தவற்கு

‘வைத்து’ என்பது மீண்டும் மீண்டும் வந்து புதுமை தருகிறது.

வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம
மொழிமேல் செவிவைத்து மோகச் - சுழிமேல்தன்
நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர

‘முகந்த’ என்ற சொல் புதுப் புதுப் பொருளில் ஆளப் படுகிறது.

இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்
திசைமுகந்தால் அன்ன தெருவும் - வசையிறந்த
பொன்னாடு போந்திருந்தாற் போன்றதே
போர்விதர்ப்ப
நன்னாடற் கோமான் தன் நாடு

‘இழப்ப’ என்பது மீண்டும் மீண்டும் வந்து ஒசை இன்பம் தருகிறது.

"வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்ப
பொய்கையும் நீள் கழியும் புள்ளிழப்பப் டையவே
செவ்வாய் அன்றில் துணையிழப்பச்
சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு” (நளவெண்பா)

“பவள வாள் நுதல் திலகம் இழப்பத்
தவள வாள் நகை கோவலன் இழப்ப”

என்று இளங்கோவும் இச்சொல்லை மீண்டும் மீண்டும் ஆளுதல் காண முடிகிறது.

23. அகப் பொருள் இலக்கிய மரபு

தமிழில் அகப் பொருளில் தலைவன் தலைவியைக் காண்கிறான். இது காட்சி என்னும் துறையை ஒட்டியது. பின்பு இவள் அரமகளோ நரமகளோ என்ற ஐயம் அவன்பால் தோன்றுகிறது. இவள் தெய்வமகள் அல்லள் அகல் இடத்துப் பெண் என்று முடிவு செய்கிறான்.

அதற்காக அவன் காணும் குறிப்புகள், கண் இமைப்பது, கால்கள் தரையில் படுவது, மலர் வாடுவது

இம்மூன்றையும் வைத்து இவள் மானிடப் பெண் என்று முடிவு செய்கிறான். இது தமிழ்க் கவிதை மரபு.

இதனைக் கவிஞர் தேவனா? மானுடனா? இவர்களுள் யார் நளன்? யார் தேவர்கள்? என்பதை அறியப் பயன் படுத்துவது அவர் தமிழ்க் கவிதை உத்தியை ஆளும் சிறப்பைக் காட்டுகிறது. இவன் நளன் என்று அறிவித்தவாறு இது என்று கூறுகிறார்.

கண்ணிமைத்தலால் அடிகள் காசியினில் தோய்தலால்
வண்ணமலர்மாலை வாடுதலால் - எண்ணி
நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு - என்பார்.

☆ ☆ ☆