புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/ஃப்ரெட்ரிகோ கார்சியா லார்கா

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இதயத்தில் ஈட்டியைப் போல்
பாயக் கூடிய கவிதையை
இன்னும் நான் எழுதவில்லை.

 லார்கா
(1898–1936)


நான்-
கொலை செய்யப்பட்டதை
உணர்ந்தேன்

அவர்கள். . .
உணவு விடுதிகளிலும்
இடுகாடுகளிலும்
தேவாலயங்களிலும்
என்னைத் தேடினர்.

என்-
தங்கப் பற்களைக்
கவர்ந்து செல்வதற்காக
மூன்று எலும்புக் கூடுகளைப்
புதை குழிகளிலிருந்து
தோண்டிப் பார்த்தனர்.

அவர்களால்-
என்னைக் கண்டுபிடிக்க
மூடியவில்லை.

ஃபெடெரிகோ கார்சியா லார்கா, தான் இறப்பதற்கு முன்பாகவே, தன் இறப்பைப் பற்றிப் பாடி வைத்த பாடல் இது. அவன் பாடிவைத்தபடி, அவன் இறப்பும் இயல்பானதாக இல்லை; கொலை செய்யப்பட்டான். கொலை செய்யப்பட்ட பிறகு அவன் உடம்பைப் பற்றிய தடயம் எதுவும் கிடைக்கவில்லை.

ஸ்பெயினில் உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருந்த நேரத்தில், அரசியல் காரணங்களுக்காக இவன் கொல்லப்பட்டான் என்று கூறுவர். பாரதியைப் போல், பாரதிதாசனைப் போல், ஜெர்மானியக் கவிஞன் பிரெட் (Bertolt Brecht) டைப்போல் இவன் தீவிர அரசியல்வாதி அல்லன். எந்தக் கட்சி முத்திரையும் இவன் மீது விழவில்லை. எந்தக் கொடிக் கம்பத்தின் கீழும் இவன் கொள்கை முழக்கம் செய்தது கிடையாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஸ்பெயின் தீபகர்ப்பத்தில் வேர்விட்டுச் செழித்த கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக விளங்கிய மாகவிஞன் இவன்

லார்காவின் பரிதாபச்சாவு உலக மக்களின் உள்ளத்தில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியதோடு, லார்காவுக்கும் அளவு கடந்த விளம்பரத்தையும் புகழையும் ஈட்டிக் கொடுத்தது. அமெரிக்க நாடுகளிலும், இங்கிலாந்திலும் இவன் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு, எல்லா மக்களாலும் விரும்பிப் படிக்கப்பட்டன.

“என் தந்தை ஒரு பணக்கார நிலக்கிழார்; குதிரைச் சவாரியில் வல்லவர். என் தாய் ஓர் ஆசிரியை ; குறிப்பிடத்தக்க ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவர். என் இளமை வாழ்க்கை செழிப்பான எங்கள் தோட்டத்திலேயே கழிந்தது” என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறான் லார்கா.

லார்கா சிறந்த கவிஞன், சிறந்த ஓவியன்; நாடகத் துறையில் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவன்; ஸ்பெயின் நாட்டு மரபிசையிலும், நாட்டுப்புற இசையிலும் வல்லவன்.

இளைமையில் நோய் வாய்ப்பட்டதால், ஆங்கிலக் கவிஞன் பைரனைப் போல இவனுக்கும் காலில் சிறிது ஊனம் உண்டு. ஆனால், அந்தக் கால் ஊனமே இவன் அறிவு வளர்ச்சிக்கும். கலை வளர்ச்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தது. இளமையில் மற்ற குழந்தைகளோடு ஒடியாடி விளையாட முடியாத லார்கா, உட்கார்ந்த இடத்திலே அமைதியாகச் சிந்தித்துத் தன் சிந்தனை ஆற்றலைக் கூர்மைப்படுத்திக் கொண்டான்; சுற்றுப்புறத்தை நுட்பமாகக் கவனித்தான். வீட்டையே நாடக மேடையாக்கித் தன் உடன் பிறந்தவர்களையும், வேலைக்காரர்களையும் நடிக்கவைத்தான். தன் முதல் சேமிப்பிலிருந்து பொம்மை நாடக அரங்கம் (Toy Theatre) ஒன்று கிரானடா நகரில் இருந்து வாங்கி வந்தான் பொம்மலாட்டத்திலும் அவனுக்கு ஈடுபாடு இருந்தது.

ஷெல்லியைப் போல லார்காவும் பல்கலைக் கழகப் பட்டம் ஏதும் பெறவில்லை; பெற வேண்டும் என்ற நாட்டமும் இல்லை. பள்ளிப் படிப்பு அவன் சொந்த ஊரான ஃப்யூண்டிவ கொரசிலும், கிரானடா நகரிலும் ஒழுங்காக முற்றுப்பெற்றது. பட்டப்படிப்புக்காக கிரானடா பல்கலைக் கழகத்திலும் மாட்ரிட் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தான். ஆனால் அவன் கவனம் கல்லூரிப் பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்தது. கிரானடா நகரப் புல்வெளிகளில் கற்பனையில் மிதந்தபடி காலார நடப்பதும், நாட்டுப்புற நாகரிகத்தில் தோய்ந்து தன்னை மறந்து திரிவதும், பழமையான ஆண்டலூசிய[1] நாகரிகத்தின் அடிப்படை மரபுகளையும், பண்பாடுகளையும் நேரில் பார்த்துப் பரவசப்படுவதும், நாடோடி (Gipsies) மக்களோடு நெருங்கிப் பழகி, போதையூட்டும் அவர்கள் சுவைப்பாட்டைக் கேட்டுச் சொக்கி நிற்பதும் அவன் அன்றாடப் பொழுது போக்குகள்.

ஸ்பெயின் நாட்டுக் கலை, இலக்கியக் கேந்திரமாக விளங்கிய ‘ரெஸிடென்சியா’வில் தங்கிப் பயிலும் வாய்ப்பு லார்காவுக்கு ஏற்பட்டது. கல்வியில் அக்கறை காட்டாவிட்டாலும், ஸ்பெயின் நாட்டுப் புகழ்பெற்ற இலக்கிய மேதைகளான உனாமுனோ, கஸ்ஸட் ஆகியோரின் பழக்கமும், சிறந்த சர்ரியலிசக் கவிஞரான சால்வடார் டாலியின் நெருங்கிய நட்பும் இவனுக்குக் கிடைத்தது. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களான பெர்க்ஸன், வேலரி, கிளாடல், அரகான், செஸ்டர்டன், கீன்ஸ், எச். சி. வெல்ஸ் ஆகியோர் ரெஸிடென்சியாவுக்கு வந்து சொற்பொழிவாற்றினர். மேலே குறிப்பிடப்பட்ட மேதைகளின் தொடர்பால் இவன் கவிதையாற்றல் கூர்மை பெற்றது. ரெஸிடென்சியாவில் தங்கிருந்தபோது லார்கா கடுமையாக உழைத்தான்; நிறைய நாடகங்கள் எழுதி மேடையேற்றினான்; கவிதைகளாக எழுதிக் குவித்தான். அவற்றைத் திருத்தித் திருத்தி மேலும் மேலும் அழகுபடுத்தினான்; ஓவியங்கள் வரைந்தான்; பாடல்கள் எழுதிப் பியானோவில் இசையமைத்தான். நாட்டுப் பாடல்களைத் திரட்டினான். தனது படைப்புக்களை மேடையில் படித்துக் காண்பித்தான். ரெஸிடென்சியாவில் மாணவனாக இருந்த காலத்திலேயே ஸ்பானிய இலக்கியவாதிகளால் லார்கா கவிஞன் என்று அங்கீகரிக்கப்பட்டான்.

லார்கா இளமையில் ஓயாமல் படிக்கும் பழக்கமுடையவன். ஸ்பெயின் நாட்டு இலக்கியங்களோடு கிரேக்க நாடகங்களின் மொழிபெயர்ப்புகளையும், ஷேக்ஸ்பியர், இப்ஸன், விக்தர் ஹயூகோ, மேடர்லிங்க் ஆகியோரின் நூல்களையும் விரும்பிப் படித்தான். ஸ்பெயின் நாட்டுக் கவிஞர்களும், ஓவியர்களும், சிற்பிகளும், இசைவாணர்களும் இவனை எப்போதும் சூழ்ந்திருந்தனர்.

மாட்ரிட் நகரில் ரெஸிடென்சியாவின் மாணவனாக இருந்தபோது, இவனுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக வாய்த்தவர் மேனுவல்டிஃபல்லா என்பவர். அவருடைய நட்பு லார்காவின் இலக்கியப் பாதையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஸ்பானிய நாட்டுக் கிராமியப் பாடல்களை (Folk Songs) திரட்டுவதற்கு லார்காவுக்கு ஊக்கமளித்துத் துணைபுரிந்தவர் டிஃபல்லா. அவர் துணையோடு லார்கா கேண்டே ஜாண்டோ (Cante lando) என்ற இசை விழாவை நடத்தினான். ‘ஆழ்ந்த இசை’ என்பது இதன் பொருள். இவ்விழாவை முன்னின்று நடத்தியதால் ஸ்பெயின் நாட்டு நாடோடிப் பாடகர்களும், நாட்டியக்காரர்களும் இவனுக்கு மிகவும் வேண்டியவர்கள் ஆகிவிட்டனர்.

முதல் உலகப் போர் முடிந்த பிறகு, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிளம்பிய முன்னோக்கியம், டாடாயிசம் என்ற புரட்சி அலைகள் ரெஸிடென்சியாவில் இருந்த ஸ்பானிய இலக்கியவாதிகளிடத்திலும் பாதிப்புகளை உண்டாக்கின. ஆனால் லார்கா எந்த இலக்கியக் கட்சியிலும் ஈடுபாடு காட்டவில்லை. மரபிலும், புதுமையிலும் காணப்பட்ட நல்ல அம்சங்கள் யாவும், அவனையும் அறியாமல் அவன் படைப்புகளில் இடம் பெற்றன. லார்கா புதுக் கவிஞனாகவும் (Modern poet) அதே சமயத்தில் மரபோடு கூடிய கிராமியப்பாடல் பாடும் கவிஞனாகவும் (Folk poet) விளங்கியது வியப்பிற்குரியது.

இளமையில் நாட்டுப்புறத்தில் வளர்ந்த காரணத்தால் நாட்டுப்புறச் சூழ்நிலையும், நாட்டுப்புறக் கலை இலக்கியங்களும் லார்காவுக்கு மிகவும் பிடித்தமானவை ஆகிவிட்டன. சரியாகப் பேசிப் பழகாத குழந்தைப் பருவத்திலேயே நாட்டுப் பாடல் மெட்டுகளை அவன் முணு முணுப்பது வழக்கம். தங்களுடைய தோட்டத்தில் பணிபுரிந்த வேலைக்காரர்களிடம் பழமையான ஆண்டலூசியக் கிராமியப் பாடல்களையும் (Folk songs) கதைப் பாடல்களையும் (Ballads) கேட்டுக் கேட்டு லார்கா மனப்பாடம் செய்திருந்தான். இளமையில் அவன் குருதியோட்டத்தில் ஊறிப்போயிருந்த நாட்டுப்புறக் கலை, அவன் எதிர்காலப் படைப்புக்களில் புதிய அழகோடு பூத்துக் குலுங்கியது.

ஆண்டலூசியக் கிராமியப் பாடல் லார்காவின் உள்ளத்தில் குளித்து, எவ்வாறு புதுவடிவம்பெறுகிறது என்பதை டொர்ரே என்ற அறிஞன் குறிப்பிடும் போது, “லார்கா அவற்றை இசையோடு பாடுகிறான்; அவற்றைக் கனவு காண்கிறான். அவற்றை ஆய்வு செய்கிறான். குறிப்பாகச் சொன்னால் கற்பனை அழகோடு கூடிய கவிதைகளாக அவற்றை மாற்றுகிறான்” என்று கூறுகிறார். எடுத்துக் காட்டுக்கு ஒன்றைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை உல்லாசப் பயணத்தின் போது, கோவேறு கழுதையை ஒட்டிச் சென்ற ஒருவன் பாடிய கிராமியப் பாடல் வரிகள் லார்காவின் காதில் விழுந்து உள்ளத்தில் பதிவாகிவிட்டன.

அவளை
ஒரு கன்னிப் பெண்ணென்று நினைத்து
ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றேன்

ஆனால்
அவளுக்கு ஒரு கணவன் இருந்தது
பிறகுதான் தெரிந்தது.

வழியில் கேட்ட இந்த வரிகள், பின்னர் ‘நம்பத்தகாத மனைவி’ (Faithiess wife) என்ற புகழ்பெறற கதைப் பாட்டாகப் புத்துயிர் பெற்றது.

அன்று-
புனித ஜேம்ஸ் இரவு!
மக்கள்
தமது கடமைகளில்
மூழ்தி இருந்தனர்
தெருவிளக்குகள் அணைந்ததும்
சிள் வண்டுகள்
திடீரென்று ஆரவாரித்தன
தெருக்கோடியில்
அவளுடைய
தூங்கும் மார்புகளைத் தொட்டேன்:
அவை-
கூரிய ஹியாசிந்த்[2]
மொட்டுக்களைப் போல்
என்னை
எட்டிப் பார்த்தன.

அவள்
ரவிக்கைக் கஞ்சியின்
மொர மொரப்பு,
பட்டுத் துணியைப்
பத்துக் கத்திகளால்
குத்திக் கிழிப்பதுபோல்
ஓசையிட்டது.

வெளிச்சமற்ற
மரங்களின் உச்சி
எங்கும் பரந்திருந்தது
ஆற்றுக்கு வெகு தூரத்தில்
நாய்கள் குரைத்தன .

கரிய பெர்ரி மரங்களையும்
நாணல் புதர்களையும்
ஆதார்ன் முட்செடிகளையும்
கடந்து சென்று
அவள் கூந்தல் கற்றைகள் படிய
மணலில் பள்ளம் தோண்டினேன்.

நான் என்
கழுத்துப் பட்டையை உருவினேன்.

அவள் தன்-
ஆடையைக் களைந்தாள்.
கைத் துப்பாக்கியோடு கூடிய
கச்சையை நான் அவிழ்த்தேன்.
அவள் தன்-
நான்கு உள்ளாடைகளையும்
உதறினாள்.

குழல் ரோஜாப்பூக்களும்
சிப்பிகளும் கூட
அவள் மேனியின்
பளபளப்புக்குத் தோற்றுவிடும்.
என் கைபட்டதும்
துள்ளும் மீன்களாக
அவள் தொடைகள்
நழுவி விழுந்தன.
அவற்றுள்-
ஒரு பாதி தணல்!
ஒரு பாதி பனி:

அந்த மோன இரவில்
அழகிய ராஜபாட்டையில்
கம்பீரமான
வெண்புரவியை ஆரோகணித்துக்
கடிவாளம் இல்லாமல்
காலிடுக்கி இல்லாமல்
இன்பச் சவாரி செய்தேன்.

அன்று-
அவள்
சொன்ன வார்த்தைகளை
ஆண்மகனாகிய என்னால்
திருப்பிச் சொல்ல முடியாது.
அவள் பேச்சைக் கேட்டு
விழிப் படைந்தேன்.
முத்தங்களாலும்,
மணலாலும்,
கறைபட்டிருந்த நான்
ஆற்றங் கரையைவிட்டுப்
புறப்பட்டேன்.
கத்திமுனைப் பூக்கள்
காற்றோடு போரிட்டன.

நான் ஒரு-
நாடோடிக் கனவானாகப்
பெருமிதத் தோடு
நடந்து கொண்டேன்.

பூவேலைப் பாட்டுடன் கூடிய
பெரிய கூடையில்
வைக்கோல் வண்ணப்
பட்டுத் துணிகளை
அவளுக்கு
வாரி வழங்கினேன்.
ஆனால்-
நான் அவளைக்
காதலிக்க முடியாது.

அவளை. . .
ஒரு கன்னிப் பெண்ணென்று நினைத்து ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றேன்.
ஆனால்-
அவளுக்கு ஒரு கணவன் இருந்தது
பிறகுதான் தெரிந்தது.

லார்காவின் கதைப் பாடல்களைப் படிப்பதும் அந்தக் கதை நிகழ்ச்சிகளை அனுபவிப்பதும் ஒன்றுதான். தனது கதைப் பாடல்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “என் கதைப் பாடல்களின் கருப்பொருள் (theme) புதியது; ஆனால் அதற்குரிய தூண்டுதலைப் பழைய கிராமியப் பாடல்களிலிருந்து பெறுகிறேன்” என்று லார்கா குறிப்பிடுகிறான். இக்கருத்தைச் 'சிறுவெளியின் கதைப் பாட்டு (Ballad of The Little Square) என்ற கவிதையில் அவனே தெளிவுபடுத்துகிறான். அது கேள்வி பதிலாக அமைந்த கதைப் பாடல். 

 
குழந்தைகள் : தெளிந்து
அமைதியாக நடக்கும்
அமுத ஊற்றே!
இந்த முற்றத்தில்
பாட விட்டுவிட்டு
எங்கோ செல்கிறாய்!
உன் வசந்தக் கைகளில்
என்ன கொண்டு செல்கிறாய்?
நான் : ரத்தச் சிவப்பு ரோஜாவும்
வெள்ளைக் குமுதமும்!
குழந்தைகள் : தெளிந்த ஊற்றே!
திரியும் அருவியே!
அந்த மலர்களைப்
பழமையான நமது
பாட்டு நீரில் நனைத்துஎடு!
வேட்கையூறும் உன் செவ்வாயில்
நீ உணர்கிறாய்!
 
நான் : என் பெரிய மண்டையோட்டின்
எலும்புச் சுவையை!
குழந்தைகள் : தெளிந்து
அமைதியாக நடக்கும்
அமுத ஊற்றே!
நமது
பழம்புகழ்ப் பாட்டுநீரைப்
பருகிச் செல்:
இந்த முற்றத்திலிருந்து
நீயேன்
நெடுந்துரம் செல்கிறாய்?
நான் : மந்திரவாதிகளையும்
இளவரசிகளையும்
தேடிச் செல்கிறேன்
குழந்தைகள் : கவிஞர்களின் பாதையை
உனக்குக் காட்டியது யார்!
நான் : நமது முதாதையரின்
பாட்டருவியும்
பளிங்கு நீரோடையும்

ரத்தச்சிவப்பு ரோஜாவும் வெள்ளைக்குமுதமும் லார்காவின் புதிய படைப்புக்களுக்கும், பாட்டருவி பழமையான ஆண்ட லூசியக் கிராமியப் பாடல்களுக்கும் குறியீடுகள்.

ஊர்பேர் தெரியாத நாட்டுப்புறக் கவிஞர்களின் கவிதையாற்றலை லார்கா பெரிதும் வியந்து போற்றுகிறான். ஓரிரண்டு வரிகளில் மனிதவாழ்வின் உணர்ச்சி மயமான கணங்களை அபூர்வமாகச் சித்தரிக்கும் அவர்கள்பேராற்றலை நினைந்து நினைந்து மகிழ்ச்சியில் திளைப்பது அவன்வழக்கம்

நிலவு
வேலிக்குள்
அடைக்கப்பட்டது.
என காதலும்
மடிந்தது

இந்த நாட்டுப் பாடல் வரிகளைப்படித்த லார்கா, “நாட்டுப்புற மக்கள் விரும்பிப் பாடும் இந்த இரண்டு வரிகளில் புதைந்து கிடக்கும் சுவையான புதிர் மிக எளிமையானது; சுவையானது; தூய்மையானது. இந்தப் புதிர்ச்சுவை புகழ்பெற்ற மேட்டர்லிங்க் நாடகத்திலும் கிடையாது,” என்று வியந்து பாராட்டுகிறான். உண்மைதான்! இவ்விரண்டு வரிகளில் தோன்றும் மின்னல் வெட்டு, கொடிகொடியாகவன்றோ படிப்பவர் உள்ளத்தில் படர்ந்து பரவசமூட்டுகிறது.

லார்கா தனக்குத் தேவையான மூலப் பொருள்களையும், உணர்வுகளையும் பழைய கிராமியப் பாடல்களில் இருந்து பெற்றாலும், இருபதாம் நூற்றாண்டுப் புதிய சிந்தனைகளும் (Modern Thoughts) கவிதை நுட்பங்களும் அவன் படைப்பில் மலிந்து காணப்படுகின்றன. பழைய மரபின் அடிப்படையில் நீரூற்றைப் பற்றிப் பாடிய லார்கா கடலைப் பற்றிப் பாடும்போது

கடல்-
தொலைவிலிருந்து
சிரிக்கிறது
தன்னுடைய
நுரைப் பற்களைக் காட்டி
வான் உதடுகளை
விரித்துச் சிரிக்கிறது-

என்று குறிப்பிடுகிறான். லார்கா இதில் கையாண்டிருக்கும் தண்ணீர்ப் படிமம் (water imagery) மிகப் புதுமையாக அமைத்து படிப்பவரை வியக்க வைக்கிறது.

மக்களுக்கு இயற்கைப் பொருள்களின் பண்புகளையும், இயற்கைப் பொருள்களுக்கு மக்களின் பண்புகளையும் ஏற்றிப் பாடும் இவரது தற்குறிப்பேற்றக் கற்பனைப் புனைவுகள் மிகவும் சுவையானவை. காய்த்த இலைச் சருகுகள் ஓசையிடு வதை ‘இறக்கும் இலைகள் அழுகின்றன’ என்று குறிப்பிடும் போதும், மிக உயரமான பாப்ளார் மரம் காற்றடித்து வானில் அசைவதை தனது நூறடிக்கையால் (பேntenarian hand) பாப்ளர் மரம் நிலவை அடிக்கிறது' என்று குறிப்பிடும் போதும், கலங்காத மனநிலையோடு வாழ விரும்பும் தனது விருப்பத்தை ‘வேர்களைப் பூமியின் ஆழத்திற்குச் செலுத்தி, எந்தப் புயலுக்கும் அசையாமல் வீறுகொண்டு தனித்து நிற்கும் ஓக் மரமாகக்’ குறிப்பிடும் போதும், அவன் கற்பனை ஆற்றல் சுவைத்து மகிழக கூடியதாக உள்ளது.

லார்காவைப் பெரிய மேதை என்று கூறமுடியாது. அவன் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பியக் கவிஞர் பலர், பெரும் மேதைகளாக இருந்திருக்கிறார்கள். ஆனால் லார்கா கவிதைத் துறையில் நுட்பமான வேலைப்பாடுகள் தெரிந்த சிற்பி. பிறவிலேயே ஒருவன் கவிஞனாகப் பிறக்கிறான் என்ற கொள்கையிலும், உள்ளக் கிளர்ச்சிக் கவிதைக் கொள்கையிலும் (Inspiration and spontaneity) வார்காவுக்கு ஈடுபாடு கிடையாது. உள்ளக் கிளர்ச்சி ஒரு கவிஞனுக்கு படிமம் (Image) என்ற மூலப் பொருளை (Raw Materials) மட்டுமே வழ்ங்கும். உள்ளக் கிளர்ச்சியோடு முறைப்பட்ட ஆழ்ந்த சிந்தனையும், நுட்பமான கலையுணர்வும் சேரும்போதுதான். சிறந்த கவிதை தோன்ற முடியும் என்று லார்கா கருதினான்.

“ஆண்டவன் அருளினாலோ சாத்தானின் அருளினாலோ நான் கவிஞனாக இருப்பது உண்மையென்றால், என் சொந்த முயற்சியாலும், என் நுட்பமான ஆற்றலினாலும் நான் கவிஞனாக இருப்பதும் உண்மைதான்” என்று லார்கா ஒருமுறை தன் சொற்பொழிவில் குறிப்பிடுகிறான். பிரெஞ்சுக் கவிஞராகிய போதலேர் இத்துன்ப உலகின் பிடியிலிருந்து விடுபட்டுத் தன் ஆன்மாவைப் பரவசப்படுத்துவதற்காக ஒரு செயற்கைச் சொர்க்கத்தைத் தன்னுள் படைத்துக் கொண்டு வாழ்ந்தது போல் லார்காவும் ஒருசெயற்கைச் சொர்க்கத்தைத் தன் மனதில் படைத்துக் கொண்டான். அதில் படிந்து தன் ஆன்மாவைப் பரவசப்படுத்திக் கொண்டான்.

விருப்பம் (Longing) என்ற பாடலில் அந்தச் சொர்க்கத்தைப் பற்றி லார்காவே பாடுகிறான். துன்பம் சூழும்போது, அதனின்றும் விடுபட்டுச் செயற்கைச் சொர்க்கத்தில் திளைக்க முடியாமல் வருந்தும்போது, தன்னைவிடத் தாழ்ந்த உயிரினங்களிடம் அத்தகைய உள்ளம் இருப்பதைப் பார்த்துப் பொறாமைப்படவும் செய்கிறான். வெளிச்சத்தைப் பருகிய வண்ணம் சிள்வண்டு (Cicada) உயிர் விடுவதையும், எறும்புகள் தன் உடலை அரித்துத் தின்று கொண்டிருக்கும் நேரத்திலும், கிழட்டு ஓணான் விண்மீன்களின் அழகை வியப்போடு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதையும் தன் பாடலில் குறிப்பிடும்போது, அந்தப் பொறாமை தலை தூக்கி நிற்கிறது, செயற்கைச் சொர்க்கத்தில் அடிக்கடி திளைத்திருந்தாலும், சாவைப் பற்றிய எண்ணமும் அவன் உள்ளத்தில் அடிக்கடி எழாமல் இல்லை. “இரவு கட்டாயம் வரும்; மனிதனின் விருப்பு வெறுப்புகளைச் சாவின் அமைதி செயலற்றதாக்கிவிடும்” என்று குறிப்பிடுகிறான்.

கவிஞர்களுக்குச் சில விநோதமான மன நிலைகள் சில நேரங்களில் ஏற்படுவதுண்டு. அந்த நேரங்களில் அவர்கள் சிந்தனைப் போக்கும் செயலும், மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி அமைந்திருக்கும். சில சமயம் அவர்கள் சிந்தனையில் குறும்புத்தனமும் இருப்பதுண்டு. இத்தகைய சிந்தனைப் போக்குகளை லார்காவிடம் நிறையக் காணலாம். ‘ஊமைக் குழந்தை’ (The Dumb Child) என்ற பாடல் :

அந்தக் குழந்தை
தனது குரலைத
தேடிக் கொண்டிருக்கிறது.
சிள்வண்டுகளின் அரசன்
அதை வைத்துக்கொண்டிருந்தான்.

ஒரு நீர்த்துளியில்
தனது குரலை
அந்தக் குழந்தை
தேடிக் கொண்டிருந்தது.

நான்-

அந்தக் குரலால்
பேச விரும்பவில்லை.
அதை
நான் ஒரு
மோதிரமாகச் செய்வேன்.
என் மெளனம்
தனது பிஞ்சுவிரலில்
அதை அணிந்து கொள்வதற்காக...
அந்தத் குழந்தை
ஒரு நீர்த் துளியில்
தனது குரலைத
தேடிக் கொண்டிருந்தது.
சிறைப்பட்ட
அந்தக் குரல்
சிறிது தொலைவில்
சிள்வண்டுப் போர்வைக்குள்
ஒளிந்து கொண்டிருந்தது.

ஊமைக் குழந்தையால் பேச முடியாது. அது தன் குரலைத் தொலைத்துவிட்டுத் தேடித் திரிவதாகவும், சிள்வண்டு அதை எடுத்து ஒளித்துவைத்துக் கொள்வதாகவும் பாடும் லார்காவின் கற்பனையில் பாதிக்கனவும், பாதிக்குறும்புத் தனமும் தென்படுகின்றன. கனவு காண்பது போல், இந்த இனிய கற்பனை இருந்தாலும், அதனால் புலப்படுத்தப்படும் பரிதாபமான உண்மை (குழந்தையின் ஊமைத்தனம்) நம் உள்ளத்தைத் துளைக்கிறது.

இத்தகைய கனவுநிலைப் பாடல்களை லார்கா ஏன் பாடினான் என்று சிலசமயங்களில் படிப்பவர்கள் விழிப்பதுண்டு. அதைப் படிக்கும் போது, நாமும் ஏதோ ஓர் இனம்புரியாத கனவு மயக்கத்தில் இருப்பது போலத்தான் தோன்றும். ‘கிரானடாவும் 1850—ம்’ (Granada and 1850) என்ற பாடலைப் படிக்கும்போது அத்தகைய மயக்கத்தை நம்மையறியாமல் பெறுகிறோம்.

என் அறைக்குள்ளிருந்து
ஓர் ஊற்று
கிளம்பி வருவதை
உணர்கிறேன்.
ஒரு—
திராட்சைத்
தளிர்க் கொடியும்
சூரியனின்
ஒளிக்கற்றையும்
தெரிகின்றன.</poem>
அவை-
என் இதயத்தின்
இருப்பிடத்தைச்
சுட்டிக் காட்டுகின்றன.
ஆகஸ்ட் மாதக்காற்றில்
மேகங்கள்
கலைந்தோடுகின்றன.
அந்த நீர் ஊற்றில்
நான்-
கனவு காணாததுபோல்
கனவு காண்கிறேன்.

லார்காவின் இளமைப் பாடல்களில் காணப்பட்ட தற்காதல் கூறுபாடுகள் (Narcissistic elements)[3] , பிற்காலத்தில் எழுதிய பாடல்களில் இல்லாதொழிந்தன. அவனுடைய அனுபவ முதிர்ச்சி அவனைத் தற்சோதனைக்கு ஆளாக்கியது. ‘பயனுள்ள வாழ்க்கை வாழ்பவன்தான் மனிதன்’ என்பதை அவன் உணர்ச்சி பூர்வமாக அறிகிறான். பயனற்ற நிலையில் இருக்கும்போது, தன்னைக் காணத் தானே கூசுகிறான். இக்கருத்தைப் ‘பட்டுப் போன ஆரஞ்சு மரம்’ (Song of the withered range-tree) என்ற பாட்டில் தெளிவாகப் பிரதிபலிக்கிறான்.

கோடாலிக்காரா!
என்-
நிழலைக் கூட
வெட்டி எறிந்துவிடு.
பயனற்று நிற்கும்
பரிதாப நிலையிலிருந்து
எனக்கு விதலை கொடு.

நிலைக் கண்ணாடிகள்
என்னைச் சுற்றியிருக்க
நான்-
ஏன் பிறந்தேன்?

பகல்-
என்னைச்

சுற்றி சுற்றி
வருகிறது

இரவோ-
ஒவ்வொரு
விண்மீனிலும்
என் பிம்பத்தைப்
பிரதி பலித்துக்
காட்டுகிறது.

என்னையே நான்
காணமுடியாத
வாழ்க்கை
எனக்கு வேண்டும்.

எறும்புகளையும்
பருந்துகளையும்
என்-
இலைகளாகவும்
பறவைகளாகவும்
கனவு காண்கிறேன்

கோடாலிக்காரா !
என்-
நிழலைக் கூட
வெட்டி எறிந்து விடு,
பயனற்று நிற்கும்
பரிதாப நிலையிலிருந்து
எனக்கு விடுதலை கொடு.

பயனற்ற நிலையில் இருக்கும் படைப்பிலக்கியவாதியின் பரிதவிப்பை' லார்கா இப்பாட்டில் உணர்ச்சிகரமாகச் சித்தரிக்கிறான். பூத்துக் காய்த்துக் கனி குலுங்கும் மரத்தில், பறவைகளும், வெளவால்களும் கும்பலாகக் கூடித்தின்று ஆரவாரிக்கும். அம்மரத்தின் செழுமையான வாழ்வுக்கும், உயிரோட்டத்திற்கும் அவை சான்றுகள். ஆனால், பருந்து பழ மரத்தில் உட்காருவதில்லை; அது, பட்டுப்போய்த் தனித்து நிற்கும் ஒற்றை மரத்தின் உச்சியில்தான் உட்காரும். பட்ட மரத்தை எறும்பு அரிக்கும்; பயனற்ற மனிதனை வேதனை அரிக்கும்; லார்காவின் ஆழமான கற்பனை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

லார்காவின் தகாதபாலுறவுப்பழக்கம் (Homo Sexual Practice) ஸ்பெயினிலிருந்து வெளியேறி அமெரிக்கா செல்லும் சூழ்நிலையை அவனுக்கு உருவாக்கியது. அவனுடைய பாலுறவுக் கொள்கை, அவன் எழுதிய ஓரிரு நாடகங்களிலும் பிரதிபலிக்கக் காணலாம், ஏவாள், ஆதாம் உடம்பின் ஓர் அங்கம் தானே? அப்படியென்றால் ஆதாமும் ஏவாளும் வேறல்லவே? பின் ஏன் உடலுறவில் ஆண் பெண் என்ற பேதம்?” என்பது லார்காவின் விசித்திரமான வாதம்!

அமெரிக்காவில் இருந்தபோது, அவன் எழுதிய சர்ரியலிசக் கவிதைகள் நியூயார்க்கில் கவிஞர் (The Poet in New-york) என்ற தலைப்பில், லார்காவின் இறப்புக்குப்பிறகு வெளியிடப்பட்டன. இக்கவிதைகள் பிரெஞ்சு சர்ரியலிசக் கவிதைகளினின்றும் மாறுபட்டு, லார்காவின் தனித்தன்மையோடு அமைந்திருக்கின்றன. இக்கவிதைகளில் உள்ள உணர்ச்சிக் கொந்தளிப்பை (Tension) மற்ற சர்ரியலிசக் கவிதைகளில் காணமுடியாது. இக்கவிதைகள் வாழ்க்கையின் அடிப்படை உண்மைகளினின்றும் (Solid Reality) விலகாத அடிமனக் காட்சிகளைச் சித்திரிக்கின்றன.

முரட்டுக்காளைகளோடு போரிடும் வீரவிளையாட்டு, ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு. நம் நாட்டில் திரைப்பட நடிகர்களுக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து (Sta value) அந்த நாட்டுக் காளைப்போர் வீரர்களுக்கு உண்டு. ஸ்பெயின் நாட்டுப் புகழ்பெற்ற காளைப்போர் வீரரும் தனது ஆருயிர் நண்பருமான மெஜியாஸ் காளைப்போரில் இறந்தபோது, வார்கா எழுதிய இரங்கற்பாடல்தான், அவன் படைப்பில் ஒப்பற்றது என்று எல்லாராலும் பாராட்டப்படுகிறது

அவன் முகத்தைக்
கைக் குட்டையால்
மூடுவதை
நான்-
விரும்பவில்லை.
கைக் குட்டையை
எடுத்து விடுங்கள்.

அவன்-
சுமந்து செல்லும் சாவு
அவனுக்கு
நன்கு
அறிமுகம் ஆகட்டும்

என்று பாடுகிறான் லார்கா. வீரன் சாவைக் கண்டு அஞ்சி முகத்தை மூடக் கூடாதல்லவா?

துவளாத துணிச்சலும்
பெருமிதமும் மிக்க
ஓர்
ஆண்டலூசிய வீரன்
இவனைப் போல் பிறக்க
இன்னும்
எத்தனையோ
நூற்றாண்டுகள் ஆகலாம்
அவன் புகழைப்பாடும்

என்னுடைய
ஏக்க வரிகள்
ஆலிவ்
மரங்களின் இடையே
ஒரு-
சோகத் தென்றலாக
வீசட்டும்

மெஜிபாஸுக்கு எழுதப்பட்ட இக்கல்லறை வரிகள் (epitaph) இளமையில் பரிதாபமாகக் கொலை செய்யப்பட்ட லார்காவுக்கும் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.

லார்காவை நேரில் பார்த்துப் பேசிப் பழகிய சமகாலக்கவிஞர்களும், கலைஞர்களும் அவனை வியந்து கூறிய பாராட்டுரைகள் செவிக்கும் சிந்தைக்கும் தேன்விருந்துகளாக இனிக்கின்றன.

“லார்கா பேசும்போதும், தனது கவிதையை உணர்ச்சியோடு படித்துக் காட்டும் போதும் தன் நாடகத்திலிருந்து ஒரு காட்சியை நடித்துக் காட்டும் போதும், அல்லது இசைப் பெட்டியின் முன்னமர்ந்து பாடும்போதும் அவனைச்சுற்றி ஒரு காந்தமண்டலம் தோன்றி ரசிகர்க்ளை வசியப்படுத்தி மந்திரத்தால் பிணிக்கும்!” என்று ரஃபேல் ஆல்பெர்ட் என்ற கவிஞன் குறிப்பிடுகிறான்.

லார்காவைவிட ஏழு ஆண்டுகள் மூத்த கவிஞனான பெட்ரோ நூலினாஸ் “அவன் எங்களை முன்னின்று நடத்திச் சென்ற பேரானந்தப் பெருவிருந்து: அவனைப்பின்தொடர்ந்து செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,” என்று உளந்திறந்து பாராட்டுகிறான்.

லார்காவின் நெருங்கிய நண்பரும் கவிஞருமான வின்சென்ட் அலெக்சாந்தர் என்பவர், ஒருமுறை தாம் கண்ட லார்கா தரிசனம் பற்றிக் குறிப்பிடும்போது, “அமைதியான ஓர் இரவில் அழகான மேல்மாடியில், நிலவின் அமுத கிரணம் தன் முகத்தில் விழ, லார்கா நின்றுகொண்டிருந்தான். அவன் கைகள் வானத்தை நோக்கி உயர்ந்திருந்தன. ஆனால் அவன் பாதங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து காலத்தைவென்று, ஸ்பானிய மண்ணில் வேரூன்றி இருந்தன” என்று மெய்மறந்து கூறுகிறார்.

“இதயத்தில் ஈட்டியைப்போல் பாயக்கூடிய கவிதையை இன்னும் நான் எழுதவில்லை” என்று ஒருமுறை லார்கா தன் நண்பனான கில்லன் என்பவனிடம் கூறினானாம். ஆனால் அக்கூற்று பொய்யானது. அவன் பாடிய கவிதைகளில் பல படிப்பவரின் இதயத்தைத் துளைத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவை. வார்கா படிக்கப்பட வேண்டியவன் அல்லன்; காதலிக்கப்பட வேண்டியவன்.


  1. ஆண்டலூசியா ஸ்பெயினின் ஒருபகுதி, பழமையான, தனித்த நாகரிகச் சிறப்பையுடையது.
  2. ஹியாசிந்த்-ஸ்பெயினில் பூக்கும் செந்நீல மலர்.
  3. ‘நார்சிஸஸ்’ கிரேக்கப புராணத்தில் வரும் பாத்திரம். அவன் சிறந்த அழகன். எக்கோ என்பவள் நர்சிஸ்ஸைக் காதலித்தாள். ஆனால் நார்சிஸஸ் அவள் காதலை மறுதலித்தான், அதனால் சினங் கொண்ட் எக்கோ ‘உன்னையே நீ காதலித்து நீ இறப்பாயாக!’ என்று சாபமிட்டாள். ஒரு நாள் நார்சிஸஸ் வேட்டைக்குச் சென்ற போது, குளத்தில் தனது பிம்பத்தைக் கண்டு வியந்து காதலித்தான்; முத்தமிட முயன்றான். அம்முயற்சியில் தோல்வியுற்று தன் உடலைச் சிதைத்துக் கொண்டு இறந்தான். பின்னர் அவன் உடல் ஒரு பொன்னிறப் பூவாக மாற்றப்பட்டு அவன் பெயரைத் தாங்கி நிற்கிறது. ‘தன்மீதே காதல் கொள்ளும் இப்பண்பு’ நார்சிஸம் marcissism என்று வழங்கப்படுகிறது.