புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/பாப்லோ நெருடா
கவிதைக்கு மிகவும் நெருக்கமானவை
ஒரு துண்டு ரொட்டியும்
ஒரு கலயம் கஞ்சிச் சோறும்.
(1904-1973)
எரிமலையும், கனமழையும், சுரங்கங்களும் சூழ்ந்த சிலி நாட்டின் தென் பகுதியில் ஓர் ஏழை இரயில்வே கூலிக்கு மகனாகப் பிறந்து, துன்பத்தில் வளர்ந்து, உலக நாடுகள் பலவற்றுள் சிலி நாட்டுத் தூதராகப் (Consul) பதவி வகித்து, உலகப் பெருங்கவிஞருள் ஒருவராக வளர்ந்து, நோபெல்பரிசு பெற்று மறைந்தவர் பாப்லோ நெருடா.
அமெரிக்கப் பேரறிஞர் எமர்சன் கவிஞர்களைப் பற்றிக் குறிப்பிட்டதுபோல், பாப்லோ நெருடா பேசாத உயிரற்ற பொருள்களையும் தமது கண்களாலும் நாவாலும் சுவைத்துப் பார்த்த்வர்: லின்காசின் கண்கள்[1] பூமியைப் பார்த்தது போல், இந்த உலகைக் கண்ணாடியாக்கி அதிலுள்ள பொருள்களைச் சரியான உருவத்தோடு தெளிவாக நம்கண்களுக்குக் காட்டியவர். மௌனச் சுவர்களையும் கடினப் பெருள்களான கல்மரம் போன்றவற்றையும் உடைத்துச் சென்று, கவிதை அறியாதவற்றையும் அறிய வேண்டும் என்பது பாப்லோ நெருடாவின் விருப்பம். என்றாலும் பாப்லோ நெருடாவை ஓர் ‘இயற்கைக் கவிஞர்’ என்று சொல்ல முடியாது.
‘இவ்வுலக வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளடக்கிப் பாடுபவன்தான் உண்மையான கவிஞன் என்று பிரெஞ்சு மேதை விக்தர் ஹ்யூகோ குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய பெருங்கவிஞர்களான தாந்தே, மில்டன், விட்மன், ஹ்யூகோ போன்று பாப்லோ நெருடாவும் மனிதம், பிரபஞ்சத் தத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கித் தமது 'பொதுக் காண்டங்களை' (Canto General)ப்படைத்துள்ளார். தாந்தேயையும் மில்டனையும் எப்படித் தெய்வீகக் கோட்பாட்டினின்றும் பிரித்துப் பார்க்க முடியாதோ, ஹ்யூகோவையும் விட்மனையும் எப்படி மக்களாட்சிக் கோட்பாட்டினின்றும் பிரித்துப் பார்க்க முடியாதோ, அதுபோல் பாப்லோ நெருடாவை அரசியல், ஏழ்மை, நீதி, சமத்துவம் ஆகிய கோட்பாடுகளினின்றும் பிரித்துப்பார்க்க முடியாது. அதனால்தான் நெருடாவை நைந்துபோன உலக அபலைகளின் ஒட்டுமொத்தமான ஆத்திரக்குரலாக, ஒதுக்கப்பட்ட தென்னமெரிக்க ஏழை நாடுகளின் புரட்சிச் சங்கநாதமாகக் கேட்க முடிந்தது.
பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் நஃப்தாலி ரிகார்டோ ரியெஸ். பிறப்பிடம் சிலி நாட்டின் தெற்கெல்லை ஊரான (Par-ral)பார்ரல் 1906-இல் அருகிலுள்ள நகரமான டெமுகோவிற்கு இவர்கள் குடும்பம் குடிபெயர்ந்தது. டெமுகோபகுதி[2] இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அராகேனிய இந்தியர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி புதிதாகக் குடியேறிய பகுதி, மக்கள நடமாட்டம் அதிகமில்லாத, நாகரிகத்தின் சுவடுகள் படாதகன்னிநிலம். அப்போது தான் பாதைகளும் இருப்புப்பாதைகளும் புதிதாக அமைக்கப்பட்டன. நெருடாவின் தந்தையும் இருப்புப்பாதை அமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். கால்நடை வளர்ப்யும், பயிர்த்தொழிலும் புதிதாகத்தொடங்கப்பட்டன. எப்போதும் குளிர்; புயல்:
தன் மகன் பட்டம் பெற்று எதிர்காலத்தில் பெரிய அதிகாரியாக வேண்டுமென்பது தந்தையின் விருப்பம்; கவிஞனாவதை அவர் விரும்பவில்லை. ஆனால் பள்ளிப்பருவந் தொட்டே கவிதைத் தணல் அவருள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. டெமுகோவில் இருந்த பெண்கவிஞர். கேப்ரீலா மிஸ்ட்ரலின் தொடர்பு அவருடைய கவிதை நெருப்பைக்கிண்டி விட்டது.
முறையான பள்ளியோ, மாதா கோவிலோ இல்லாத அவ்விடத்தில் இயற்கையும், தனிமையுமே துணையாக வளர்ந்த நெருடாவின் உள்ளத்தில் சுற்றியிருந்த இயற்கைச் சூழல் கவிதையாக உருப்பெற்றது. பனி சூழ்ந்த மலைப்பகுதிகளும், அண்டார்டிகாவும் அவர் கவிதைக்குக் கருப்பொருள்கள் ஆயின,
உன் மார்பு
ஓயாத காற்றினால்
பளபளப் பாக்கப்பட்டு
நாற் சதுரக்
கூம்புங் படிகமாகக
காட்சியளிக்கிறது
சுவாசிக்கப்படாத,
எல்லையற்ற
ஒளிவீகம் பரந்தவெளி
திறந்த வெளிக்காற்று
நிலமற்ற தனிமை!
வறுமை!
(அண்டார்டிக்)
தன் தந்தைக்குப் பயந்து ‘பாப்லோ நெருடா’[3] என்ற புனை பெயரில் தனது முதல் கவிதைத் தொகுதியை[4] அவர் வெளியிட்டார். பெயர் மாற்றத்துக்கு வேறொருகாரணமும் இருந்தது. தாம் டெமுகோவுக்குமட்டுமே தெரிந்த கவிஞனாக இருந்து விட விரும்பவில்லை. அமெரிக்காவின் கவிஞனாக முடிந்தால் உலகக் கவிஞனாக மாறவேண்டும் என்ற நோக்கோடு, பத்திரிகையில் பார்த்த விளம்பரமான ஓர் ஐரோப்பியப் பெயரைத் தனது புனைபெயராக வைத்துக் கொண்டார். இத் தொகுதியில் பிரிவு (Farewell) பற்றிக் கூறும் கவிதை சிறப்பானது:
பிரிவுதான் காதலின் திருவிழா
ஏனென்றால்
அதுமீண்டும் காதலிக்கும்
சுதந்திரத்தைக் கொடுக்கிறது என்று
இளைஞர்களுக்கே உரிய உணர்ச்சியுடன் பாடுகிறார், நெருடா.
டெமுகோவிலிருந்து உயர் கல்விக்காக சாண்டியாகோ நகரம் சென்று ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்தார். பிரெஞ்சுப் பேராசிரியர் ஆகவேண்டுமென்பது அவர் நோக்கம். ஏற்கனவே சாண்டியாகோ இலக்கிய வட்டாரத்தில் கவிஞராக அறிமுகமாகியிருந்த பாப்லோ நெருடா 1924-இல் இருபது காதற் கவிதைகள் (Twenty Poems of Love) என்ற தமது இரண்டாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததோடு, சிலி நாடெங்கும் அவர் புகழ் பரவியது; நல்ல விளம்பரமும் கிடைத்தது. இலத்தீன் அமெரிக்காவில் வழங்கிய பழமொழிகளும், கிராமியப் பாடல் நிகழ்ச்சிகளும் அதில் இடம் பெற்றிருந்த காரணத்தால் அக் கவிதைகளைச் சிலி மக்கள் விரும்பிப்படித்தனர். அக்கவிதைகளில் நெருடாவின் விடலைப் பருவக் கனவுகளும், பெண்களிடம் கொண்ட காதல் தொடர்பும், பிரிவும் உருக்கமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. அவை சாண்டியாகோ, டெமுகாவைச் சேர்ந்த இரண்டு பெண்களை நோக்கி எழுதப்பட்டவை. அப்பெண்கள் இயற்கையோடு தொடர்பு படுத்தப்பட்டு, நிலமாகவும், மூடுபனியாகவும் உருவகப் படுத்தப்படுகின்றனர். தம்மை ஒரு கேட்போனாகவும் (interrogator) ஆய்வாளனாகவும் (explorer) நெருடா அக்கவிதைகளில் காட்டிக் கொள்கிறார். கருத்துக்களும் மூடுமந்திரமாக அமைந்துள்ளன:
தெற்கு விண்மீன்களுக்கு நடுவில்
உன் பெயரைப்
புகை எழுத்தில் எழுதியவர் யார்?
நீ பிறப்பதற்கு முன்
எப்படி இருந்தாயோ
அப்படி நினைவு படுத்திக் கொள்ள
என்னை அனுமதி.
[ஒவ்வொரு நாளும் விளையாடுகிறாய்]
1924-லிருந்து 1934 வரை அவருடைய வாழ்க்கை ஒரே அலைக்கழிப்பாக இருந்தது. 1927-இல் பர்மாவிலும், 1928-இல் இலங்கையிலும், 1930-இல் ஜாவாடடேவியாவிலும், 1931-இல் சிங்கப்பூரிலும், 1933-இல் அர்ஜெண்டைனாவிலும் சிலிநாட்டுத் தூதுவராக (Consul)ப்பணி புரிந்தார். ஐந்தாண்டுகள் கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்தபோது தனிமை அவரை மிகவும் வருத்தியது. தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியை யாரிடமும் பேச வாய்ப்பில்லாமல் தவித்தார். தூதரக வருமானம் தம்மைக் கெளரவமாகக் காட்டிக் கொள்ளப் போதியதாக இல்லை. அதனால் சில அவமதிப்புக்களுக்கும் ஆளாக வேண்டியிருந்தது. தாம் அப்போதிருந்த நிலையை விளக்கி ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘தெருநாய்களின் துணையோடு வாழ்ந்தேன்’ என்று வருந்தி எழுதியிருக்கிறார். வியட்நாம் காடுகளில் சுற்றியலைந்ததைப்பற்றித் தமது பிற்காலக்கவிதை யொன்றில்[5] குறிப்பிடும் போது “என் வயதில் இருபதாண்டுகள் கூடிவிட்டன; சாவை எதிர் நோக்கிக் காத்திருந்தேன்; என் மொழிக்குள் நான் சுருங்கிக் கொண்டேன்” என்று எழுதுகிறார்.
நெருடா பர்மாவில் பணியாற்றிய போது, அழகிய ஒரு பர்மியப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது; கொஞ்சநாள் அவளோடு வாழ்க்கை நடத்தினார். பிறகு அவள் உறவு சலித்து, சொல்லிக் கொள்ளாமல் அவளை விட்டுப் பிரிந்து இலங்கைக்குச் சென்றுவிட்டார்.
இலங்கையில் தூதராக இருந்தபோது, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நேருவைக் கண்டு பேசவிரும்பி டில்லி சென்றார். நேரு முதலில் பேட்டி கொடுக்க மறுத்து விட்டார். இரண்டாம் முறை நேருவைக் கண்டு பேசினார். ஆனால் நேரு அவரைக் கவர முடியவில்லை. தமது தன் வரலாற்று நூலில் நேருவைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தையும் அவர் சொல்லவில்லை. இந்திய நாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது கூட,
அழகிய நிர்வாணப் புத்தர்கள்
மதுவிருந்தைப் பார்த்த வண்ணம்
திறந்த வெளியில்
வெறுமையாகச்
சிரித்துக் கொண்டிருக்கின்றனர்
(கிழக்கில் சமயம்)
என்று கசப்புணர்ச்சியோடு எழுதுகிறார்.
1983-இல் அர்ஜெண்டைனாவில் தூதராக இருந்தபோது ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கவிஞரான லார்காவை போனஸ் அயர்லில் சந்தித்து நெருங்கிய நண்பரானார். அச்சந்திப்பைப்பற்றியும், அச்சந்திப்பின் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைப்பற்றியும் கவிதை நடையில் நெருடா தன் வரலாற்று நூலில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:
"போனஸ் அயர்ஸ் நகரத்தில் நடாலியா பொடானா (Natalio Botana) என்ற ஒரு பத்திராதிபர் இருந்தார். அவர் பெரிய கோடீசுவரர் ஒரு நாள் மாலை நானும் ஸ்பெயின் நாட்டுப் பெருங்கவிஞர் லார்காவும் அவருடைய மாளிகைக்கு விருத்துக்கு அழைக்கப்பட்டிருந்தோம். நடாலியா பொடானா பெரும்புரட்சிக்காரர்; சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர். ஓர் இளமரக்காட்டின் நடுவே புதிய கலைக் கனவாக அவர் மாளிகை அமைந்திருந்தது. உலகின் பலபகுதிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்ட வண்ணப்பறவைகள் நூற்றுக்கணக்கான கூடுகளை அலங்கரித்தன. அவர் நூலகம் பெரியது; கவர்ச்சியானது. ஐரோப்பிய நாடுகளின் பலபகுதிகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட பலமொழி இலக்கியச் செல்வங்கள், வரிசைப்படுத்தப்பட்டு, கண்ணாடிச்சட்டமிட்ட மஹாகனி பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அர்ஜெண்டைனா நாட்டு அரசியலையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நடாலியா பொடானாவின் எதிரில் இருந்த மேசையின் இருபக்கத்தில் நானும் லார்காவும் அமர்ந்திருந்தோம். நடுவில் அந்த நாட்டுப் பெண்கவிஞர் ஒருவரும் அமர்ந்திருந்தார். இளவேனில் நங்கையான அவள் தன் பசிய பசித்த கண்களால் என்னையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவளைச்சுற்றி ஒரு காந்தமண்டலத்தையே நோற்றுவித்துக் கொண்டிருந்தன. அவள் பெருமூச்சு என் உள்ளத்து நெருப்பைப் போர்த்திருந்த சாம்பலை ஊதிக்கனன்று எரியச் செய்து கொண்டிருந்தது. தோலோடு சேர்த்துச் சுட்டெடுத்த மாட்டிறைச்சியின் மணமும் சுற்றியிருந்த சொகுசு வாழ்க்கையின் மணமும் எங்களை லேசாக்கி வானில் மிதக்கவிட்டன.
“விருந்து முடிந்ததும் கவிஞர் மூவரும் சிரிப்பும், கெக்கலிப்புமாகத் தோட்டத்தின் கோடியில் இருந்த நீச்சல் குளத்தை நோக்கிச் சென்றோம். லார்கா மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டு முன்னால் சென்றான். மகிழ்ச்சியே லார்காவின் உடம்பு. நீச்சற் குளத்தருகில் ஒரு தும்புக் கோபுரம் இருந்தது. அதன் மீது மூன்று கவிஞர்களும் ஏறினோம். வெண்மையான அக் கோபுரத்தின் உச்சி, விளக்கொளியில் முத்தாகக் காட்சியளித்தது. உச்சியில் இருந்த வேலைப்பாட்டுடன் கூடிய சாளரங்கள் வழியாக நாங்கள் வெளியுலகை எட்டிப் பார்த்தோம். நீச்சற் குளத்தில் பிரதிபலித்த ஒளிக்கண்கள், கீழிருந்து எங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தன. மொய்த்திருக்கும் விண்மீன்களோடு எங்களைப் போர்த்து மூழ்கடிப்பது போல், இரவு நெருக்கமாக எங்கள் மீது தொங்கிக்கொண்டிருந்தது. கிதாரோடு கூடிய பாட்டிசை அலை அலையாகிக் காற்றில் மிதந்து வந்து எங்கள் காதில் விளையாடியது. அருகில் இருந்த தங்கக்கொடி மெதுவாக என் நெஞ்சில் படரத் தொடங்கியது...”
◯
1984-இல் நெருடா ஸ்பெயின் நாட்டின் தூதராக நியமனம் செய்யப்பட்டார். அங்கிருந்தபோது, கவிஞர் லார்காவோடும், ரஃபேல் ஆல்பெர்டி என்ற நண்பரோடும் நெருங்கிப் பழகிய காரணத்தால் நெருடாவிற்கு அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. 1934-இல் ரஃபேல் ஆல்பெர்டியின் வீட்டைப் பாசிஸ்டுகள் அழித்து நாசப்படுத்தினர். 1936-இல் ஸ்பெயினில் நடை பெற்ற உள்நாட்டுப் போரின் போது, அரசியல் காரணங்களுக்காகக் கவிஞர் லார்கா கொல்லப்பட்டார். இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் நெருடாவின் உள்ளத்தில் ஆறாத புண்களை ஏற்படுத்தின. தமது எதிர்ப்பைப் பத்திரிகைகளில் வெளியிட்டார் நெருடா:
வஞ்சகத் தளபதிகளே!
நாசமாக்கப்பட்ட
எனது வீட்டை-
சிதறிய ஸ்பெயினைப்
பாருங்கள்!
ஒவ்வொரு வீட்டிலும்
பூக்களுக்குப் பதிலாக
எரியும்-
உலோகக் குழம்பு
வழிந்து கொண்டிருக்கிறது-
என்று கவிதையில் குமுறினார். அப்போது ஸ்பெயினை ஆண்ட அதே தேசியக்கட்சி (Nationalist Party) சிலியிலும் ஆட்சி புரிந்தது. நெருடாவின் அறிக்கையைக் கண்டு வெகுண்டு, தூதர் பதவியைப் பறித்துக் கொண்டது.
லார்காவின் பிரிவு நெருடாவை மிகவும் பாதித்தது. தமது நினைவுகளில் லார்காவைப் பற்றிக் குறிப்பிடும் போது, “அழகும் மேதைமையும் சிறகு விரித்துப் பறக்கும் உள்ளமும் பளிங்கு நீர் வீழ்ச்சியும் அவன் படைப்பில் ஒன்றாகக் கலந்துவரும்; கவர்ச்சியூட்டும் காந்த இன்பத்தைத் தன்னைச் சூழ்ந்திருப்பவர் மீது பரப்பும் கவிதா மண்டலமாக அவன் விளங்கினான். நாடக மேடையாக இருந்தாலும் அழகின் அலை வீச்சுக்களைத் தன்னைச் சுற்றிப் படர விட்டான். லார்கர்வைப் போல் மந்திரக் கையோடு கூடிய வேறொரு கவிஞனை நான் என் வாழ்நாளில் சந்தித்ததில்லை, சிரிப்பை மனப்பூர்வமாக நேசித்து என்னுடன் பழகிய வேறொரு சோதரனையும் நான் கண்டதில்லை. அவன் சிரித்தான்; சிந்தித்தான்; பாடினான்; பியானோ வாசித்தான் ; இடையிடையே சுடர்விட்டு மின்னினான். இயற்கை தனது பூரணமான ஆற்றல்களை யெல்லாம் அவன் மீது அள்ளிச் சொரிந்திருந்தது. அவன் தங்கச்சிற்பி; கவிதைத் தேனி” என்றெல்லாம் பாராட்டிக் கூறுகிறார்.
லார்கா இறந்த ஒராண்டுக்குப்பிறகு நெருடா அவரைப்பற்றி ஒரு நினைவுச் சொற்பொழிவாற்றினார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவன் எழுந்து நின்று லார்காவைப்பற்றி நீங்கள் எழுதியுள்ள இரங்கற்பாடலில் “அவனுக்காக மக்கள் மருத்துவமனைக்கு நீலவண்ணம் பூசினர்” என்று எழுதியிருக்கிறீரே! அதன் பொருள் என்ன?’ என்று கேட்டான்.
உடனே நெருடா, “நண்பரே! ஒரு பெண்ணிடம் வயதைக் கேட்பதும், ஒரு கவிஞனிடம் இது போன்ற கேள்விகள் கேட்பதும் ஒன்றுதான். கவிதையென்பது ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் பொருளன்று; அது சுழித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரோட்டம்; அது சிலசமயம் படைப்பாளிகளின் கையிலிருந்தும் நழுவிச் செல்வதுண்டு. கவிஞன் கையாளும் மூலப்பொருள் உண்மைப் பொருளாகவும் இருக்கலாம்; இன்மைப் பொருளாகவும் இருக்கலாம். எப்படியிருப்பினும் உங்களுக்கு ஒரு நியாயமான பதிலைச் சொல்ல நான் முயற்சி செய்கிறேன். சுதந்தரத்தையும் பேரின்பத்தையும் நோக்கி விரிந்து செல்லும் வானவெளியை இக்குறிப்பு சுட்டுகிறது. லார்கா எந்த இடத்தில் தோன்றினாலும் அவனைச்சுற்றியொரு மந்திரக்கவர்ச்சியும், மகிழ்ச்சிச் சூழ்நிலையும் பரவுவது வழக்கம். எப்போதும் சோகமான சூழ்நிலையில் அமைந்திருக்கும் மருத்துவ மனைகள் கூட, மகிழ்ச்சியூட்டும் அவன் கவிதையின் மந்திரக் கவர்ச்சியால் மாறிப் பளிச்சென்று நீல வண்ணம் பெறுகின்றன என்று வேண்டுமானால் நீங்கள்
பொருள் செய்து கொள்ளலாம்” என்று பதில் கூறினார்நெருடா ஓயாமல் முட்டையிடும் சீமைக்கோழி போன்றவர்; ஓயாமல் எழுதுவார். 1926-இல் ‘வாழ்பவனும் அவன் நம்பிக்கையும்’ (The Inhabitant and his hope) என்ற புதினமும், ‘எல்லையற்ற மனித முயற்சி’ (The Trying of Infinite man) என்ற கவிதைத் தொகுப்பும், 1933-இல் ‘நிலத்தின் மீது குடியிருப்பு’ (Residence on Earth) என்ற கவிதைத் தொகுப்பும், 1938 இல் ‘என் இதயத்தில் ஸ்பெயின்’ (Spain in ny heart)என்ற கவிதைத் தொகுப்பும் தொடர்ந்து அவரால் வெளியிடப்பட்டன.
ஸ்பெயினில் வகித்து வந்த தூதர் பதவி பறிபோனதும் நெருடா பாரிசில் (1937-39) சென்று தங்கினார். அப்போதுதான் அவருள்ளத்தில் அவரது சிறந்த படைப்பான சிலிப் பெருங்காப்பியம் உருப் பெற்றது. அதுவே பத்தாண்டுகள் கழித்துப் பதினைந்து பாகங்களைக் கொண்ட் ‘பொதுக் காண்டமாக’ (Canto General) வெளிப்பட்டது. இப் பத்து ஆண்டுகளில் பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டு தீவிர அரசியல்வாதியானார். 1940-லிருந்து 1943- வரை மூன்றாண்டுகள் மெக்சிகோவில் தூதராகப் பணிபுரிந்தார். அப்போது நாஜிகளால் தாக்கப்பட்டார். 1945-இல் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினராகப் போட்டியிட்டு சிலிப்பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1948- இல் சிலிநாட்டு ஜனாதிபதியாக இருந்த கான்சலஸ் விடெலா (Gonzaine Videia) பொதுவுடைமைக் கட்சியோடும் அக்கட்சி ஆட்சியிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனும் தமக்கிருந்த உறவை முறித்துக் கொண்டார். ஜனாதிபதியின் இச்செயலை நெருடா வெளிப்படையாகக் கண்டித்தார். சிலி அரசாங்கம் இவரைச் சிறை செய்ய முயன்ற போது, நெருடா தலைமறைவானார். பொதுவுடைமைக் கட்சித் தோழர்களின் வீடுகளில் மறைந்திருந்து, கடைசியில் குதிரையில் ஏறி ஆண்டிஸ் மலையைக் கடந்து நாட்டைவிட்டு வெளியேறினார். அடுத்த நான்கு ஆண்டுகள் தென் அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பாவிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டார்.
அரசியல் நெருக்கடி மிக்க இப்போராட்டக் காலமே நெருடாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க காலகட்டம், இயற்கையையும் காதலையும் பாடிக்கொண்டிருந்த நெருடா அரசியற் கவிஞனாக உருப்பெற்றது இப்போதுதான். அவருடைய கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது போல், கவிதைச் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டது.
“பூடகமாகப் பேசுவதும், மந்திர தந்திரமும் எழுத்தாளன் வேலையல்ல என்ற கொள்கையை நான் எப்போதும் கடைப் பிடித்து வந்திருக்கிறேன். எல்லாருடைய பொது நன்மைக்காகவும் உழைப்பதே ஒரு கவிஞனுடைய வேலையாக இருக்க வேண்டும். கவிதைக்கு மிகவும் நெருக்கமானவை ஒரு துண்டு ரொட்டியும், ஒரு கலயம் கஞ்சிச் சோறும், திறமையற்றிருந்தாலும் அன்போடு செதுக்கப்பட்ட ஒரு மரத்துண்டும் தான்.
“நாம் அறியாத மக்கள் நடுவில், நாம் கலந்து மறைந்து விட வேண்டும்; தெருவிலும் மணல் வெளியிலும், ஆயிரம் ஆண்டாகக் காட்டில் உதிர்ந்து கிடக்கும் இலைகள்கின் நடுவிலும் நம்மைச் சேர்ந்தவற்றை அவர்கள் பொறுக்கி எடுப்பார்கள்; நம்படைப்பு அவர்கள் கையில் கிட்டும். அப்போதுதான் நாம் உண்மையான கவிஞர்கள்; நம்படைப்பும் என்றும் வாழும்!” என்று உணர்ச்சி பொங்கத் தன் வரலாற்று நினைவுகளில் எழுதுகிறார் நெருடா.
விட்மனைப் போல் நெருடாவும் (மாய கோவ்ஸ்கியைப்போல் அல்லாமல்) கிராமியக் கொள்கைவாதி. கவிதையை ஒரு கைத் தொழிலாகவே (Cottage industry) -கையால் செய்யப்படும் தொழில் என்னும் நேர்பொருளில்-குறிப்பிடுகிறார். கவிதையின் சிறப்பு, அது யாருக்காக எழுதப்படுகிறதோ அவர்களுக்கு, எந்த அளவு அது பயன்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அமையும்' என்று அழுத்தமாகக் கூறுகிறார் நெருடா.
நெருடா தாம் எழுதிய பொதுக்காண்டங்களில், தாம் தலைமறைவாக வாழ்ந்தபோது, சிலிநாட்டு ஏழை மக்களோடு பகிர்ந்து கொண்ட வாழ்க்கை அனுபவங்களை உணர்ச்சி பொங்கச் சித்தரிக்கிறார். இவற்றுள் தம்மைப்பற்றி எதுவும் குறிப்பிடாமல் அமெரிக்க நாட்டின் உண்மை வரலாற்றை எழுதுகிறார். அமெரிக்க நாடுகளின் இயற்கையமைப்பு, வளம், அவற்றை வெற்றி கொண்ட ஆதிக்கவர்க்கத்தின் அடக்கு முறை, அடக்கு முறைக்கு ஆட்பட்ட சுதேசிகளின் நசிவு வாழ்க்கை ஆகியவற்றை விரிவாக அவற்றில் எழுதிச் செல்கிறார். அக்கவிதைகளில் கடுமையான தாக்குதல், அங்கதம், இரங்கல், புகழ்ச்சி, துயரம் யாவும் போட்டி போட்டுப் பொங்கித் ததும்புகின்றன. இக்காப்பியத்தில் தம்மை ஒரு தொடர்பாளராகக் (mediator) காட்டிக் கொண்டு இயற்கையையும் பழமையையும் பேசவிடுகிறார். கற்கள், காடுகள், ஆறுகள் ஆகியவற்றின் இரகசியப் பேச்சைப் படிப்பவர்க்குப் புரிய வைக்கிறார். சிலியில் பாயும் “பியோயோ” ஆற்றைப் பார்த்து,
பியோ பியோ
நீ என்னோடு பேசு!
நீ தானே-
எனக்கு மொழியையும்
இரவுப் பாட்டையும்
இலை தழையோடும்
மழையோடும்
கலந்து வழங்கினாய்!
என்று உரிமையுணர்ச்சியோடு பாடுகிறார்.
இயற்கையும் வரலாறும் ஒரு நாட்டு மக்களுக்கு எப்படி அருள் வாக்காகவும், எதிர்கால வாழ்க்கைக்குத் திறவு கோலாகவும் விளங்குகின்றன என்பதையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி சுரண்டலாக மாறுகிறது என்பதையும், சொந்த உழைப்பாலும் நம்பிக்கையாலும் எப்படி வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்பதையும் அக்காப்பியத்தில் விளக்குகிறார்.
ஆண்டிஸ் மலையில் பல நூறாண்டுகள் கவனிப்பாரற்று மறைந்து கிடந்த இன்கா கோட்டையை (Inca fortress) நேரில் கண்டு வியந்த நெருடா, மச்சுபிச்சுவின் உன்னதக் காலம் (The Heights of Machu Pichu) என்ற கவிதை நூலை எழுதினார். வியக்கத்தக்க அக்கோட்டைக் கற்களைப் பேச வைத்து, அதைக் கட்டிய இன்கா மக்களின் நாகரிகச்சிறப்பை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். இக்கவிதை நூலிலும், இன்கா கோட்டையைப் பார்த்து தொட்டுப் பேசி, ஒளிமயமான அதன் உண்மைகளை வெளிக் கொணரும் ஒரு பார்வையாளனாகவே விளங்குகிறார்: அதே சமயத்தில் அதை உருவாக்க உயிரைக் கொடுத்து உழைத்த பாட்டாளிகளை அவர் மறந்து விடவில்லை:
நான்-
பழமையைப் பார்க்கிறேன்.
போர்வைக்குள்
முடங்கித் துயிலும் அடிமைகள்
வயல்களில் உடல்கள்!
ஆயிரம் உடல்கள்!
உடலைக் கறுப்பாக்கும்
சுழற்காற்றில் சூழப்பட்டு
இரவில்-
மழையில் நனைந்த ஆடவர்!
ஆயிரம் பெண்கள்!
(மச்சுபிச்சுவின் உன்னதக் காலம்)
1954-இல் அவர் எழுதி வெளியிட்ட மூலக்கவிதைகள் (Elemental Odes) என்ற தொகுப்பு இதற்கு முன் வெளிவந்த பொதுக்காண்டங்கள் மச்சுபிச்சுவின் உன்னதக்காலம் என்ற கவிதை முறையினின்றும் மாறுபட்டது. அவற்றில் கையாண்ட இலக்கியப் பாணியையும், சொற்பொழிவுப் பாணியையும் கைவிட்டுவிட்டு, இவற்றில் எளிமைக்கு முதலிடம் கொடுத்தார். மிகச்சிறிய அடிகளில் எளிய சொற்களைப் பயன்படுத்தி இயற்கைப்பாடல் உத்தியில் (Natural Song), கேட்டவுடன் சாதாரண மக்களின் உள்ளத்தில் சென்று தங்கும்படி எழுதினார்:
நூலே!
என்னைப் போகவிடு
நான்
உறை போட்ட
பெரிய தொகுதிகளை
எழுதமாட்டேன்
நான்
பிற தொகுதிகளிலிருந்து
உருவாவதில்லை
என் கவிதைகளும
பிறகவிதைகளைத்
தின்று வளர்வதில்லை
அவை
உணர்ச்சியூட்டும்
நிகழ்ச்சிகளையே
விழுங்குகின்றன
அடிமனக் கோட்பாட்டுக் கவிஞர்களிடம் காணப்படும் தத்துவப் பேச்சுக்களும், வலிப்பும் இப்பாடல்களில் இல்லை. இக்கவிதைக்குரியவர்கள் அடிமட்டத் தொழிலாளர்களான மாலுமிகள், செங்கற்சூளைத் தொழிலாளர்கள், சுரங்கப் பணியாளர்கள், ரொட்டிசுடுவோர் ஆகியோர். இந்த மூலக் கவிதைகள் குறிப்பிடும் ‘உடோபியா’[6] அவர் தோன்றி வளர்ந்த சமுதாயத்தினின்று வேறுபட்டதன்று; உழைப்பின் முழுமையைக் குறிப்பிடுவது, இவற்றில் பயன்படுத்தப்பட்ட சொற்களின் பொருளும் நோக்கும், நம்பிக்கையற்ற சமகாலக் கவிஞர்களின் படைப்பினின்று முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. இச் சொற்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'அவை பழமையைச் சுமந்து வரும் வாகனங்களாகவும், நிகழ் காலத்துக்குப்புத்துயிரூட்டும் கருவிகளாகவும் விளங்குகின்றன என்று குறிப்பிடுகிறார்:
சொல்
பொருள் நிறைந்தது,
இது சூல் கொண்டு
உயிர்களால்
நிரம்பியிருக்கிறது.
பிறப்பும் ஓசையும்
தெளிவும் ஆற்றலும்
ஏற்பும் மறுப்பும்
அழிவும் சாவும்
எல்லாம்
இதில் உண்டு.
வினைச்சொல்-
எல்லா ஆற்றலையும்
சுமந்து கொண்டு
அழகின்
மின்காந்தம் கலந்த
இருப்பையும் புலப்படுத்துகிறது.
நான்காண்டுகள் பல நாடுகளிலும் சுற்றித்திரிந்த பிறகு 1952- இல் நெருடா தன் சொந்த நாடு திரும்பினார். தமது மூன்றாம் மனைவியான மேடில்டே உர்ரூசியா (Matilde urrயtia)வோடு வல்பரைசோ நகரில் ஐலா நீக்ரா (Isla Negra) என்ற தமது இல்லத்தில் குடிபுகுந்தார். அரசியலிலிருந்து ஒதுங்கிப் பழையபடி இயற்கையின் ஈடுபாட்டுக்கு வந்தார். தமது மூன்றாம் மனைவியின் மீது ‘நூறு காதற்கவிதைகள்’ (one hundred sonnets of love) எழுதி வெளியிட்டார். அவை பதினான்கு வரித் தன்னுணர்ச்சிப் பாடல்கள்.
இப்போது அவர் இயற்கையின் மீது கொண்ட ஈடுபாடு சமய ஈடுபாடுபோல் நெருக்கமானது. சிலி நாட்டுப் பறவைகளைப் பற்றியும், கற்களைப்பற்றியும், தமது வீட்டைப் பற்றியும் கவிதைகள் எழுதிக்குவித்தார். 1964-இல் தமது வாழ்க்கை வரலாற்றை ‘ஐலா நீக்ரா நினைவுகள்’ (Memoriale de Isla Negra) என்ற பெயரில் விரிவாக எழுதி முடித்தார். பதினைந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட அமைதியான வாழ்க்கை அவரது பல படைப்புகள் வெளிவரக் காரணமாக இருந்தது. அந்த வாழ்க்கையைப்பற்றிக் குறிப்பிட்ட நெருடா,
நான்
திறந்த மேனியோடு
வெளிச்சத்திற்கு வந்தேன்
என் கைகளைக்
கடலில் விரித்துக் கொண்டேன்
நிலத்தில் எல்லாம்
ஒளிபெற்ற போது
நானும்
அமைதியில் ஆழ்ந்தேன்
என்று பாடுகிறார். 1967-இல் அவர் எழுதிவெளியிட்ட தண்ணீர்ப்பாட்டு (The Water Song) குறிப்பிடத்தக்க ஒன்று. கல்லூரிக் காலத்தில் தாம் எழுதி வெளியிட்ட காதற்கவிதைகளில் விடலைப்பருவ நம்பிக்கைகளை வெறியுணர்ச்சியோடு வெளிப்படுத்திய நெருடா தண்ணீர்ப்பாட்டில் சாவை அழகுணர்ச்சியோடு கீழ்க்கண்டவாறு சித்தரிக்கிறார்.
அன்பே!
வாடியிருக்கும் ரோஜா மலரை
இப்போது ஒடிக்கவேண்டியநேரம்
விண்மீன்களை மூடிவிடு
சாம்பலை நிலத்துக்குள் புதைத்துவிடு
உதிக்கும் வெளிச்சத்தில்
எழுந்திருப்பவர்களோடு
நீயும் எழுந்திரு.
வேறு கரையேது மில்லாத
அக்கரையை நோக்கிக்
கனவுக்குள் செல்,
நீண்டநாள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த நெருடா 1970-இல் மீண்டும் அரசியலில் நுழைய வேண்டி நேரிட்டது. சிலிநாட்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினராக நெருடா நிறுத்தப்பட்டார். ஆனால் தமது நண்பர் ஆலண்டிக்காக அதைவிட்டுக் கொடுத்தார். 1971-இல் சிலிநாட்டுத் தூதராகப் பாரிசு சென்றார். அதே ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு கிட்டியது. 1972-இல் உடல் நலம் பாதிக்கப்பட்டு நோயாளியாகச் சிலி திரும்பினார். ஆனால் சிலியில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் அவரை மீண்டும் தீவிர அரசியலுக்கு இழுத்து, விட்டது. ‘இது குண்டுகளும் வெடிமருந்துகளும் இல்லாத இன்னுமோர் வியட்நாம் மெளனயுத்தம்’ என்று சிலியின் அன்றைய நிலையைக் குறிப்பிட்டார். அயல்நாட்டு எதிர்ச்சக்திகள் ஆலண்டியின் அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தன. 11-9-1972-ஆம் நாள் கப்பற் படையும். இராணுவமும் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தன. ஜனாதிபதி மாளிகை தகர்க்கப்பட்டது; ஆலண்டி கொல்லப்பட்டார். நோய்ப் படுக்கையில் கிடந்த நெருடா 23-9-1973-இல் உயிர்நீத்தார். அவர் கடைசியாக எழுதிய ‘நிக்சனியப் படுகொலைக்கு எதிரான கிளர்ச்சியும் சிலியப் புரட்சிக் கொண்டாட்டமும்’ (Incitement to Nixonicide and Celebration of the Chileon Revolution) என்ற கவிதை, மிகவும் உணர்ச்சிமிக்கது: தாக்குதல் நிறைந்தது; விட்மன், குவேடா போன்ற சிறந்த கவிஞர்களின் மேற்கோள்கள் நிரம்பியது.
நெருடா கவிதைகளைத் தூயவை, தூய்மையற்றவை (Pure and impure poetry) என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறார். உலக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு பாடப்படும் கவிதைகளே தூய்மையானவை என்பது நெருடாவின் கருத்து. மாணவப் பருவத்தில் காதலை மையப்படுத்தித் தாம் எழுதிய முதல் இரண்டு கவிதைத் தொகுப்பையும் தூய்மையற்றவை என்று அவரே ஒதுக்கி விடுகிறார்.
‘நான் பெரியவன்; எண்ணற்றவற்றை உள்ளடக்கியவன்’ (I am large: I contain multitudes) என்ற விட்மனின் வரிகளுக்கு மிகப் பொருத்தமான எடுத்துக் காட்டாக விளங்கிய கவிஞர் பாப்லோ நெருடா.
தாம் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பாகத் தம் தல்லறைப்பாட்டை (epitaph) ‘ஒளியின் ஜீவன்’ (Animal of Light) என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அப்பாடல்:
இன்று-
தான் இழந்த அந்தக்
காட்டின் ஆழத்தில்
அவன்-
எதிரிகளின்
காலடிச் சத்தத்தைக் கேட்கிறான்.
அவன்-
மற்றவர்களிடமிருந்து
ஓடவில்லை.
தன்னிடமிருந்து,
ஓயாத தன் பேச்சிலிருந்து
எப்போதும்-
தன்னைச் சூழ்ந்திருந்த
பாடற் குழுவிலிருந்து
வாழ்க்கையின்
உண்மையிலிருந்து
ஓடுகிறான்.
ஏனென்றால்
இம்முறை
இந்த ஒரேமுறை
ஓர் அசை
அல்லது
ஓர் மௌனத்தின் இடைவேளை
அல்லது
கட்டவிழ்க்கப்பட்ட அலையோசை
என் முகத்துக்கு நேராக
உண்மையை
வீசிவிட்டுச் செல்கிறது.
இனிமேல்
ஒன்றும் சொல்வதற்கில்லை
அவ்வளவு தான்!
காட்டின் கதவுகள்
மூடிக் கொண்டன.
இலைகளைத் தளிர்க்கச்செய்து
கதிரவன்
வட்டமிட்டுச் செல்கிறான்
நிலவு
வெண்கனியாகக்
காட்சியளிக்கிறது
மனிதன்
தவிர்த்த முடியாத
முடிவிற்குத்
தலை வணங்குகிறான்
- ↑ In Greek mythology Lyncaeus is the son of Aphareus, whose eyesight was so keen that he could see through eerth(x-Ray eyes) Oxford Companion to Classical literature by Paul Harvey.
- ↑ தென்னமெரிக்காக் கண்டத்தின் தெற்குக் கோடியில்வாழும் செவ்விந்தியர்
- ↑ ‘நெருடா’ செக்நாட்டுக்கவிஞர் ஒருவரின் பெயர் அவர் நாட்டுப்பாடல்சுளும், கதைப்பாடல்களும் நிறைய எழுதியவர். செக்நாட்டு மக்கள் இவருக்குச்சிலை யெடுத்துச் சிறப்பித்துள்ளனர். பாப்லோ நெருடா முதன் முறையாகச் செக்நாட்டு தலைநகரான பிராகுவுக்குச் சென்ற போது தாடி வைத்த இக்கவிஞரின் சிலைக்கு மலர்வளையம் வைத்து வணங்கினார்.
- ↑ Crepusculatio- நெருடாவின் முதல் கவிதைத் தொகுதி
- ↑ The watersong Ends
- ↑ சர்தாமஸ் மூர் எழுதிய கற்பனை நாடு எல்லாவிதமான வளமும் ஒழுங்கும் நலமும் வாய்க்கப் பெற்றதாகக் கூறப்படும் அரசியல் புனைவிய நூல்: