புதிய அறிமுகம்கள்

விக்கிமூலம் இலிருந்து

இன்று தமிழ் கூறு நல்லுலகம் உலகளாவியதாகியுள்ளது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று அன்று கர்வமாகச் சொல்லிக்கொண்டார்கள். இன்று அந்த அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் இல்லை. அதனிடத்தில் இப்போது நாம் சொல்லிக்கொள்ளலாம், தமிழ் கூறு நல்லுலகில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று. இதில் எவ்வளவு தூரம் தமிழகத் தமிழர்கள் கர்வம் கொள்ளலாம் என்று எனக்குத் தெரியவில்லை. கர்வம் கொளவதற்கு ஓரளவு சாத்தியமுண்டு எனில், அந்த ஓரளவைச் சாத்தியமாக்கியுள்ளது முதலில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள். பின் அவர்களைத் தொடர்ந்து புலம் பெயர்ந்த தமிழகத் தமிழர்கள்.


வான்கூவரிலிருந்து கொரியா, ஜப்பான் வரை தமிழர்கள் பரவியுள்ளார்கள். இது சமீபத்திய நடப்பு. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, பெரும்பாலும் தென் மாவட்டங்களிலிந்து தன்னிச்சையாகவும், கங்காணிகளால் மந்தையாகத் திரட்டப்பட்டும் பிரிட்டீஷ் கயானாவிலிருந்து மலேயா சிங்கப்பூர் வரை கூலிவேலை செய்யக் கிளம்பினார்கள். அவர்கள் இன்றும் அந்நிலையிலேயேவா இருப்பார்கள்? அவர்களைத் தொடர்ந்து சென்ற தமிழ் பண்டிதர்களும் உண்டு. வியாபாரிகளும் உண்டு. கட்டிடக் கலைஞர்களும் உண்டு. இவர்கள் மட்டுமல்ல, அரசியல் வாதிகளும் சென்று வந்துள்ளார்கள் என்று லக்ஷ்மி எழுதிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றிய புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டேன். தமிழர்கள் எங்கு சென்றாலும், அங்கு முருகனும் மாரியம்மையும் செல்வார்கள். தீமிதி, காவடி செல்லும். ஆனால், அங்கு தமிழும் செல்லும் என்பது கொஞ்ச காலம் முன் வரை நிச்சயமில்லாதிருந்தது. கொலம்பியாவுக்கும், பிஜி தீவுகளுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் தமிழ் சென்றதில்லை. ஏன் என்பது எனக்குப் புரிந்ததில்லை. இங்கும் நம்மவர் ஏன் என்று தமக்குள் கேட்டுக்கொண்டதுமில்லை.


ஆனால் மலேசியாவுக்கு தமிழ் பண்டிதர்கள் சென்றிருக்கிறார்கள். தமிழ் வளர்த்துள்ளார்கள். செய்யுள் நூல்கள் இயற்றியுள்ளார்கள். கு. அழகிரிசாமி அங்கு சென்று சிறுகதை வகுப்புகள் நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் என்று நினைக்கிறேன் இங்கிருந்து தமிழ் எழுத்தாளர்கள் இருவரோ என்னவோ, அழைக்கப்பட்டு, தரப்பட்ட கௌரவத்தை ஏற்று, அத்தோடு அங்கு தமிழின் புகழையும் தம் புகழையும் பரப்பி வந்துள்ளார்கள். கோவிந்தசாமி என்னும் கணினி அறிஞர் தமிழுக்கும் கணினிக்கும் இடையேயான உறவாடலை பெருமளவு சாத்தியப்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.


இதையெல்லாம் பார்த்தால், இது பெருமளவு ஒரு வழிப்பாதையாகவே இருந்துள்ளதாகவே தெரிகிறது. அங்கிருந்து நாம் யாரையும் இங்கு அழைத்து கௌரவித்த தாகத் தெரியவில்லை. நாம் தான் விருந்து சாப்பிட்டு வருக்கிறோம். நாம் அவர்கள் யாருக்கும் விருந்தோம்பியதாகத் தெரியவில்லை.


அனேகமாக நாற்பது வருடங்களுக்கு முன், லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி பெருங்கனவுகளோடு தொடங்கிய வாசகர் வட்டம் தன் தொடக்கத்திலேயே அக்கரை இலக்கியம் என்றொரு தொகுப்பை வெளியிட்டது. துரதிர்ஷ்டவசமாக, அவரது முயற்சிகள் வியாபார வெற்றியடையவில்லை. எனக்கும் அதைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியதில்லை. சில வருடங்களுக்கு முன் இங்கு சென்னைக்கு வந்திருந்த மலேசிய அன்பர் பீர் முகம்மது தம் வேதனையை வெளியிட்டார். "நாங்கள் இங்குள்ள எழுத்துக்களை எங்கள் ஊருக்கு எடுத்துச் செல்கிறோம். ஆனால், எங்களை, எங்கள் எழுத்துக்களை நீங்கள் இங்கு வரவேற்பதாகத் தெரியவில்லை" என்று. அவர் வெளியிட்ட வேதனையை நான் என் வாசகங்களில் சொல்லியிருக்கிறேன். நியாயமான புகார் தான். நாம் அப்படித்தான் நடந்து கொள்கிறோம். நமக்கு அப்படி ஒரு மனஅமைப்பு. அறுபதுகளில் என்று நினைக்கிறேன். இங்கிருந்து இலங்கை சென்ற இரு தமிழ் எழுத்தாளர்கள் "ஈழத்து இலக்கியம் தமிழக இலக்கியத்திற்கு இருபது வருடங்கள் பின் தங்கியிருக்கிறதே, என் செய்ய?" என்றோ என்னவோ சொல்லப்போக, நாம் வாங்கிக் கட்டிக்கொண்டோம். இன்று சரி, சற்று முன், கனடாவிலும், ஐரோப்பாவிலும் இருக்கும் ஈழத்தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்த இடத்திலும் தமிழை முன்னெடுத்துச் செல்லும் பாங்கைச் சுட்டி, "தமிழ் நாட்டிலேயே தமிழ் கற்காத நீங்கள் எங்களுடன் வந்து சேர எத்தனை காலம் எடுக்கும்?" என்று கேட்டால் என்ன சொல்ல இருக்கிறது நம்மிடம்?


ஆக, இப்படியெல்லாம் கட்டமைத்துக் கொண்டுள்ள நம் மன அமைப்பைச் சற்றுத் தளர்த்தி, நம் பின் சுழல்வதாக நாம் நினைக்கும் ஒளிவட்டத்தைச் சற்று மறந்து, நம்மவர்கள் சென்றவிடத்தில் என்ன செய்கிறார்கள் என்று நாமே முன் வந்து அறிந்து கொள்ளவும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளவும் முயலவேண்டும். (ஒரு விஷயம் நமக்குள். நாம் நடத்தும் ராமாயண நாடகத்தை விட பாலி தீவுகளில் முஸ்லீம்கள் நடத்தும் ராமாயண நடன நாடகம் சிறப்பானதாக எனக்குத் தோன்றுகிறது. அதள பாதாளத்தில் இருக்கும் நம்மூர் தோல்பாவைக்கூத்தை விட பல மடங்கு சிறப்பானது, கலாபூர்வமானது, இந்தோனேசிய முஸ்லீம்கள் நடத்தும் ராமாயண பாவைக்கூத்து. இவையெல்லாம் என் சொந்த அபிப்ராயங்கள்)


அந்த சின்ன நாடாகிவிட்ட சிங்கப்பூரில், ஆங்கிலத்தில் நாடகங்கள் எழுதி மேடையேற்றும் இளங்கோவன் அரசின் தடையையும் சக எழுத்தாளர் சமூகத்தின் விரோத பாவத்தையும் பொருட்படுத்தாது தனித்து நிற்கும் தீரம் நமக்கு வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அதே போலத்தான் எந்த தாக்ஷண்யமுமின்றி தன் கருத்துக்களைத் தயங்காமல் வெளியிடும் லக்ஷ்மி அவர்களும். தமிழ் நாட்டில் அவர்கள் தாக்குப் பிடிக்கமுடியாது என்பது வேறு விஷயம். இந்த உறவாடல் நமக்கு வேண்டும். நமக்குத் தெரியவாவது வேண்டும்.


சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள தமிழர் வாழ்க்கையின் சித்திரம் நமக்குத் தெரியாது. தமிழ் அங்கு அரசு மொழியாக உள்ளது. தமிழ் வாழ்கிறது. சரி. தமிழை மட்டுமல்லாமல் தமிழ் வாழ்க்கையில் அனேக அம்சங்கள் அவர்கள் உடன் வாழும் என்று நாம் நினைப்போம். ஆனால், அவர்கள் வாழ்வது மலேசியர்கள், சீனர்கள் பெருவாரியாக வாழும் இடத்தில் நெருங்கி வாழ்கிறார்கள். அந்த பாதிப்புகள் கட்டாயம் இருக்கும். அந்த பாதிப்பும், சித்திரமும் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். நாம் தெரிந்து கொள்ளவும் வேண்டும். கட்டாயம் அவர்கள் தமிழில் சீனமும், மலாயும் கலந்திருக்கும். அவர்கள் உணவுகளும் சில பழக்க வழக்கங்களும் மாறியிருக்கும். பொது வாழ்க்கை நிரம்ப மாறியிருக்கும் அங்குள்ள கட்டுப்பாடுகளால். வாழ்க்கைப் பார்வையிலும் அதன் நிழல் படிந்திருக்கும். என்னையறியாமல் என் பேச்சில் கலந்து வரும் 'அச்சா' வைக் கேட்கும் அறிமுகமில்லாதவர்கள் கூட "அய்யா வடக்கேயிருந்து வந்திருக்காப்பல" என்பார்கள். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் பின் அவர்கள் விளக்கம் வரும். அப்படித்தான் என் 'அச்சா'வை நான் கேட்காது தெரிந்து கொண்டேன். நம்மை யறியாது மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். மண உறவுகள் கட்டாயம் நிகழ்ந்து கொண்டிருக்கும். பொ.கருணாமுர்த்தி, கலாமோகன், ஷோபா சக்தி, சேரன், திருமாவளவன், போன்றோர் எழுத்துக்களில் ஐரோப்பிய சமூகத்தினிடையே வாழும் அவஸ்தைகள் பதிவாகியுள்ளதைக் காணலாம். க, இவையெல்லாம் சேர்ந்து, ஆங்கிலமே ஆனாலும், அமெரிக்க இலக்கியத்திற்கும் ஆஸ்திரேலிய இலக்கியத்திற்கும் அவற்றிற்கேயான தனித்தனி முகங்களும், அடையாளங்களும் மணங்களும் இருப்பது போல, புலம் பெயர்ந்த நாட்டின் உறவாடலில் பிறந்த தமிழும் தனித்த அடையாளங்கள் பெற்றிருக்கும் தானே. இவையெல்லாம் தமிழுக்கு வளம் சேர்க்கும். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும்.


இதன் முதல் படியாகத் தான் இளங்கண்ணனின் இரு நாவல்களின் வருகையையும் நான் பார்க்கிறேன். இந்த வருகை வரவேற்கப்படவேண்டும். நாதுலா திறக்கப்பட்டது போல. முன்னர் சிறுகதைத் தொகுப்புகள் ஒரு சில நிறைய ண்டுகள் இடைவெளிக்குப் பின் வெளிவந்திருந்தாலும், நாவல் என ஏதும் வந்ததில்லை. இளங்கண்ணன் தான் முதலாக அடி எடுத்து வைத்துள்ளார் என்று தெரிகிறது.

'நினைவுகளின் கோலங்கள்', 'அலைகள்' என்ற இந்த இரு நாவல்களைத் தவிர 'வைகறைப் பூக்கள்' என்றும் ஒரு நாவல் அவர் எழுதியுள்ளதாக லக்ஷ்மி அவர்களின் புத்தகத்திலிருந்து தெரிகிறது. இளங்கண்ணன் என்று புனைபெயர் பூண்டுள்ள பாலகிருஷ்ணன் தனித் தமிழ் தாகம் கொண்டவர் என்பது அவர் புனை பெயரிலிருந்து மட்டுமல்லாமல், அவர் பாத்திரங்கள் பெற்றுள்ள பெயர்களிலிருந்தும் தெரிகிறது. இதில் அவருக்கு முன்னோடி தமிழ் நாட்டின் மு.வ. அவர்கள். பாதி வழியில் நிற்பவர் அல்லர் அவர். அவர் சார்புகளும் பாத்திரங்களின் விருப்பங்களாகியுள்ளன. பாத்திரங்கள் விரும்பிப் படிக்கும் தேவநேயப்பாவணர், சிலப்பதிகாரம், திருக்குறள் பின் இன்றைய நெஞ்சுக்கு நீதி எல்லாம் சிறப்பிக்கப்படும் எழுத்துக்கள். இவ்விரண்டு நாவல்களும் படிக்க எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன. பல காரணங்களுக்காக. ஒரு காரனம், நம் புழக்கத்திலுள்ள பல ங்கில வார்த்தைகளுக்கு தூய தமிழ்ப் பதங்களை இளங்கண்ணன் பயன்படுத்தியுள்ளார். இவற்றில் எத்தனை அங்கு புழக்கத்தில் உள்ளன, எத்தனை இளங்கண்ணனின் கொடை என்பது தெரியவில்லை. புழக்கத்தில் கண்டக்டர் என்று நாம் சொன்னாலும் எழுதும் போது நடத்துனர் என்பது விசித்திரமாகத் தோன்றுவதில்லை அல்லவா? அது போல.


அலைகள் அவரது முதல் முயற்சி என்று தெரிகிறது. இதில் ஒரு சீனக் குடும்பமும், ஒரு தமிழ்க்குடும்பமும் நமக்கு அறிமுகமாகின்றன. மதியரசுக்கும் லேய் குவாவுக்கும் காதல். ஆனால் இருவரின் பெற்றோர்களுக்கும் சம்மதமில்லை. பெற்றோர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்கிறார்கள். தனித்து குடும்பம் நடத்துகிறார்கள். நிறைய பத்துக்கள், பிரச்சினைகள். ஆள் வைத்து தாக்குவது, சில மரணங்கள். சந்தேகங்கள். பின் லேய் குவாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. அதற்கு திருவேங்கடம் என்று தமிழ்த் தாத்தாவின் பெயர் இடப்படுகிறது. பிரிந்த இரு குடும்பங்களையும் பிறந்த குழந்தை திரும்ப ஒன்று சேர்த்துவிடுகிறது.


'நினைவின் கோலங்கள்' நாவலில் நாம் பார்ப்பது இரு தமிழ்க் குடும்பங்கள். இரு குடும்பங்களும் எளிய நிலையில் உள்ளவை தான். ஒன்று சிங்கப்பூரில் இன்னொன்று தமிழ் நாட்டில் திருச்சியிலிருந்து தூர உள்ள ஒரு கிராமத்தில். மாடு வளர்த்து பால் வியாபாரம் செய்யும் குடும்பங்கள். சிங்கப்பூர் குடும்பத்தின் பெண் தமிழ் கிராமத்தில் வாழ்க்கைப்படுகிறாள். இது போல சிங்கப்பூரிலேயே இரு தமிழ்க் குடும்பத்தினிடையே கல்யாண உறவுகள். இரண்டு இடத்திலும் உள்ள பண்ணை வாழ்க்கை ஒரு போலத்தான் தோன்றுகின்றன.


சிங்கப்பூர் நகரத்தின் இன்றைய தோற்றத்தை அறிந்துள்ள நமக்கு சிங்கப்பூரில் மாடு வளர்த்து பால் வியாபாரம் செய்யும் குடும்பம் தமிழ் நாட்டுத் தோற்றத்திலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டோம். கொஞ்சம் திகைக்க வைக்கும். நாம் படிக்கும் கதை சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முந்திய சிங்கப்பூரில் நடை பெறும் ஒன்று என நினைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வாழ்க்கை மாறுகிறது. வேகமாக மாறிவரும் சிங்கப்பூர், சாலை விஸ்தரிப்பில் மாட்டுக்கொட்டகையும் வீடும் மறைந்து போகின்றன. பால் வியாபாரம் போகிறது. புதிதாக கட்டப்படும் பல அடுக்கு மாடி கட்டிடத்தில் பதினைந்தாவது மாடியில் எதிரும் புதிருமாக இவ்விரு குடும்பங்களுக்கும் மாற்று வீடு கிடைக்கிறது. சலவைக்கல் பதித்த, நாகரீக அடுப்பறை கொண்ட, வசதியும் சுத்தமுமான வீடு. வாழ்க்கை மாறிவிட்டதே ஒழிய, மாற்றியது அரசாங்கமேயானாலும், அரசு அவர்களுக்கு வாட்டி வதைக்கும் ஒன்றாக இல்லை. புதிய இடம் பெற அவர்கள் எந்த அரசு அதிகாரிக்கும், அரசியல் வாதிக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை. கைகட்டி நிற்க வில்லை. அலைக்கழிக்கப்படவில்லை. சொல்லாமலே செய்யும் அரசாக, செய்ததைச் சொல்லாத அரசாக, இளங்கண்ணன் சொல்லாமலே நமக்குப் புலனாகிறது. எளிய குடும்பம் தான். லேய் குவா வுக்கு வலி எடுத்து விட்டது. மதியரசனைத் தாக்கி சாக்கடையில் தள்ளிவிட்டு ஓடிவிடுகிறது ஒரு கேடிக்கும்பல். மங்கையர்க்கரசிக்கு பேறு கால வலி. அடுத்து நாம் அவர்களைப் பார்ப்பது மருத்துவ மனையில். சென்னை பொது மருத்துவ மனையில் கூட இது நடக்காது. மருத்துவ மனை வாசலிலேயே அவர்களை நிறுத்தி வைக்கப்படுவார்கள். பேரம் நிகழும்.


இரண்டு நாவல்களிலும் கால மாற்றம் வாழ்க்கை மாற்றம் தெரிகிறது. மனிதர் படும் அவதிகள் அவர்கள் குணங்கள் தந்ததும், சமூகம் தந்ததும் தான்.


இப்படித்தான் எனக்கு இந்நாவல்களைப் படிக்கத் தோன்றுகிறது. சிங்கப்பூர் வாழ்க்கையைச் சொல்வதற்கு மறைமுகமாக. அதற்கும் மேலாக இளங்கண்ணனை இவை நமக்குச் சொல்கின்றன.


முதன் முறையாக சிங்கப்பூர் எழுத்தைப் படிக்கும் நான் இவற்றை நான் சுவாரஸ்யத்துடனேயே படித்தேன். இளங்கண்ணனின் வருகை இன்னும் பலரை நமக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அது இன்னும் அதிக பரஸ்பர கொடுக்கல் வாங்கலுக்கு இட்டுச் செல்லவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. அது தமிழுக்கு வளம் சேர்க்கும். நம் பார்வைகளை விஸ்தரிக்கும். உலகமே நம் தமிழகத்துள் அடங்கி விடவில்லை. நம் இன்றைய பார்வைக்குள் அடங்கி விடவில்லை.

குறிப்புகள்[தொகு]

  • 19.8.06
"https://ta.wikisource.org/w/index.php?title=புதிய_அறிமுகம்கள்&oldid=1533" இலிருந்து மீள்விக்கப்பட்டது