புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்/புதுமைப்பித்தன் எழுதிய
அங்கிகரீக்கப்படும் பொய்
நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடு விட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும். பொய்; அதாவது-கடவுள், தர்மம் என்று பல நாம ரூபங்களுடன், உலக ‘மெஜாரிட்டி’யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனாலோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள் இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள்.
மனதின் மகிழ்ச்சி
பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள் தூக்கத்தில் என்ன கனவோ? உதட்டுக் கோணத்தில் புன் சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக் கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப்பற்றி இவள் மனசு கும்மாளி போடுகிறது போலும்!
வெட வெடப்பு
என் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம் ஒப்பவில்லை. என்ன நேரக் கூடுமோ? பயம் மனசைக் கவ்விக்கொண்டால், வெட வெடப்புக்கு வரம்பு உண்டா?
யாரிடமும் சொல்ல முடியுமா?
தன் மனைவி........ போகிறாள் என்ற மனக் கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா?
வம்ச விருத்தியின் சிறப்பு
அவருக்கு ஒரு புதல்வி. எந்த மதத்தினரானாலும், உபாத்தியாயர்களுக்கு மட்டும் வம்ச விருத்தியில் தனிச் சிறப்பு உண்டு.
யாருக்கு விதிவிலக்கு?
வகுப்பில் இரண்டு கெட்டிக்காரர்கள் இருந்தால், இரண்டு பேர்களுக்கும் நட்பு ஏற்படுவது இயற்கை; பகைமை ஏற்படுவதும் சகஜம். இவை இரண்டும் அற்று இருப்பது விதிக்கு விலக்கு.
உடனே கவனிக்கக் கூடியவர்கள்
உணர்ச்சி விஷயங்களில், இனிமேல் என்ற பிரச்சினையைப் பெண்களே சீக்கிரத்தில் கவனிக்கக் கூடியவர்கள், தன்னை ஒப்பு க்கொடுப்பது, தன்னுடைய வாழ்க்கையை ஓர் ஆண்மகனிடம் பணயமாக வைப்பது எவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிறதோ, அவ்வளவு விரைவிலேயே வருங் காலத்தைப் பற்றித் திட்டம் போடும் திறனும் படைத்து விடுகிறார்கள் அப் பெண்கள்.
எது கோழைத்தனம்?
ஆபிஸிற்கு வந்து விடுவது என்றால், அது வீட்டுத் தொந்தரவுகளை எல்லாம் ஒரு பெண்ணின் தலையில் போட்டுவிட்டு, அங்கு வந்து ஒளிந்து கொள்ளும் கோழைத்தனம் என்று பட்டது.
சந்நியாச உலகம்
வீட்டிற்குப் போவதற்குக் கூட மனமில்லை. கையில் பணக்கஷ்டம் ஏற்பட்டு விட்டால், சந்நியாச உலகம் மோட்ச சாம்ராஜ்யமாகத் தோன்றும்.
பட்டணம் எப்படி மாறுகிறது?
சாயந்திரமாகி விட்டால், நாகரிகம் என்பது இடித்துக் கொண்டும் இடிபட்டுக் கொண்டும் போக வேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறிவிடுகிறது.
குழந்தை செய்த தானம்
அவன் குழந்தை கொடுத்ததைச் சட்டென்று வாங்கிக் கொண்டான். அது ஒரு புதுத் தம்படி கோடீசுவரர்கள் அன்னதான சமாஜம் கட்டிப் பசிப் பிணியைப் போக்கிவிட முயல்வதுபோல் கடலில் காயம் கரைத்து வாசனையேற்றி விட முயலுவது போல், குழந்தையும் தானம் செய்து விட்டது.
உபவாச மகிமை
கொழும்புக்குப் போவதென்றால் மேல்துண்டுடன், அதையே துணையாக நம்பிச் செல்லுகிறவர்களுக்கு உபவாச மகிமைதான் ஸ்டேஷனில் காத்திருக்கும்.
தெய்வபக்தி அவசியமா?
வர்த்தகத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் ராணுவ பலம் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு தெய்வ பக்தியும் அவசியம்.
பக்திப் பெருக்கு
தனித்தனி நபரின் பக்திப் பெருக்கு டைபாயிட் வியாதியஸ்தனின் டெம்பரேச்சர் படம் மாதிரி அன்றைய வியாபார ஓட்டத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், பொதுவாகச் சங்கத்தினரின் முழு ஆதரவு இருந்ததால் விநாயகர் பாடு சராசரி பக்தி விகிதத்திற்கு மோசமாகி விகிதத்திற்கு மோசமாகி விடவில்லை .
எரிமலையின் சீற்றம்
மேலும் பிள்ளையாரைப் போல் நிர்விசார சமாதியிலிருக்க அவர் கல் அல்ல. அவர் மனசில் எரிமலைகள் சீறின; புதிய சமூக சாஸ்திரங்கள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் தோன்றின.
எல்லாம் சேர்ந்த உருவம்
வீரபாண்டியன் பட்டணத்தில் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு செளகரியபட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் எல்லாம் சேர்ந்த உருவம் ஸ்ரீ சுப்பையாப் பிள்ளை.
பிரச்சினைகளை மறப்பது எப்படி?
ஊர்ப் பேச்சு, தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் செளகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது.
எதுவரையில் பொறுக்கலாம்?
மனிதன் ஒரு நிலைமை வரையில்தான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும் தலைக்கு மேல் வெள்ளம் சென்றால்?
யாரைக் கொள்ளையடிக்கலாம்?
நம்மைத் திருடுகிற இந்தப் பயல்களைக் கொள்ளையடித்தால் எந்தத் தர்ம சாஸ்திரம் ஓட்டையாகப் போகிறது.
நியாயமான உலகம்
பலவந்தத் திருட்டு கேஸாகியது, ஆறு மாசக் கடுங்காவல்.
பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு. எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டு தொழிலாளியின் குடும்பத்திற்கு இந்த மாதிரி உதவி செய்ய முடியும்? நியாயமான உலக மல்லவா?
நம்பிக்கையும் வலுவும்
முற்பகல் சூரிய ஒளி சற்றுக் கடுமை தான். என்றாலும் கொடிகளின் பசுமையும் நிழலும், இழைந்து வரும் காற்றும், உலகின் துன்பத்தை மறைக்க முயன்று நம்பிக்கையையும் வலுவையும் தரும் சமய தத்துவம் போல் இழைந்து மனசில் ஒரு குளுமையைக் கொடுத்தன.
தர்மத்தின் வேலி
தர்மத்தின் வேலிகள் யாவும் மனமறிந்து செல்பவர்களுக்கே. சுயப்பிரக்ஞை இல்லாமல் வழு ஏற்பட்டு, அதனால் மனுஷவித்து முழுவதுமே நசித்து விடும் என்றாலும், அது பாபம் அல்ல; மனலயிப்பும், சுயப்பிரக்ஞையுடன் கூடிய செயலீடுபாடுமே கறைப்படுத்துபவை.
உண்மை எப்போது பிறக்கும்?
“உணர்ச்சியின் சுழிப்பிலேதானே உண்மை பிறக்கும்” [என்றார் கோதமர்]
எத்தகைய தரிசனம்?
வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும் சங்கரனுடைய சிந்தனை கோயில் போல. திடமற்றவர்களின் கால்களுக்குள் அடைபடாத கையலங்கிரியைப் பணிச் சிகரங்களின் மேல் நின்று தரிசித்தார்கள்.
மனதால் இயலும்
காலக் களத்தின் நியதியை மனசைக் கொண்டு தவிர, மற்றபடித் தாண்டி விட முடியுமா?
குழந்தையைக் கொல்லலாமா?
“குழந்தை வைத்த நெருப்பு ஊரைச் சுட்டு விட்டால் குழந்தையைக் கொன்று விடுவதா?” (என்றாள் கைகேயி)
சத்துரு எது?
“மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்குச் சத்துரு” [என்று கொதித்தாள் அகலிகை)
உண்மையை நிரூபிக்க முடியுமா?
“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” (என்றாள் அகலிகை)
நிரூபித்தால் மட்டும் போதுமா?
“நிரூபித்து விட்டால் மட்டும் அது உண்மையாகி விடப் போகிறதா; உள்ளத்தைத் தொட வில்லையானால்?
எது சமூக சேவை.
ராஜபக்தியும், சமூக சேவையும் ஒத்து வராத இந்தக் காலத்தில், மரியாதையாகச் சமூக சேவை என்று சொல்லப்படும் தமது பெஞ்சு மாஜிஸ்திரேட் பதவில் கொஞ்சம் பெருமையுண்டு.
ஊரை ஏமாற்றுகிறவர்கள்
“சிக்கிரிப் பவுடர் காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சில பேர் தெய்வத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிற மாதிரி” (என்றார் கந்தசாமிப் பிள்ளை.)
ஆளா! வியாதியா!
உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமான வரையில் அகன்று விடக் கூடாது, ஆசாமியும் தீர்ந்து விடக் கூடாது. அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு விபாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாதி என்று முரட்டுத் தனமாகச் சிகிச்சை பண்ணினால், தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாகக் குணமாக வேண்டும்; மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக் கூடாது. இதுதான் வியாபார முறை (கந்தசாமிப் பிள்ளை கூறுகிறார்.)
தெரிந்த தொழிலால் பிழைக்க முடியாது
இரண்டு பேரும் மெளனமாக இருந்தார்கள். “தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாது போல இருக்கே” என்றார் கடவுள்.
எதிரியின் மீது பாயலாமா?
தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதிரியின் மீது பாய்வது உயிர்ப் பிராணிகளின் இயற்கைக் குணம் [சுப்பனும் ஒரு ஜீவன் தானே!]
யார் நல்லவன்
வெள்ளிக்கிழமை மத்தியானம் வெயிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவனாக்கியது.
வடிகட்டின அசடர்கள் யார்?
வாழ்க்கைக்கு அவசியமான உலக அநுபவம் உண்டு; ‘படித்தவர்’களைப் போல் அவர்கள் வடிகட்டின அசடர்கள் அல்ல.
அழகாகப் பிறக்கக் கூடாதா?
ஏழையாகப் பிறந்தால் அழகாகப் பிறக்கக் கூடாது என்று விதியிருக்கிறதா?
வசிகரிப்பது எப்படி?
கல்யாணியின் அழகு, ஆளை மயக்கியடிக்கும் மோகலாகிரியில் பிறந்த காம சொரூபம் அன்று. நினைவுகள் ஓடி மறையும் கண்கள். சோகம் கலந்த பார்வை. அவளது புன்னகை ஆளை மயக்கா விட்டாலும் ஆளை வசிகரிக்கும் அப்படி வசீகரிக்ப் படாதவன் மண் சிலை தான்.
அவளும் ஒரு பெண்தானே!
கல்யாணியும் ஒரு பெண்ணாயிற்டிே, அவளுக்கும் இயற்கையின் தேவையும் தூண்டுதலும் இருக்குமே என்ற ஞானம் சிறிதும் கிடையாது போயிற்று (சுப்புவையருக்கு.)
யாரால் கட்டப்பட்டது!
சுப்புவையரின் வீடு, ஜன்னல்களுக்குப் பெயர் போனதன்று. காற்றும் ஒளியும் உள்ளே எட்டிப் பார்க்கக் கூடாது என்று சங்கற்பம் செய்து கொண்ட சுப்புவையாரின் மூதாதைகளில் ஒருவரால் கட்டப்பட்டது.
வாழ்க்கையை எங்கு கழிக்கலாம்!
மனிதப் புழுக்களே இல்லாத, மனிதக் கட்டுப் பாடற்ற, மனித நாகரிகம் என்ற துர்நாற்றம் வீசாத கானகத்தில், வாழ்க்கையையே ஓர் இன்பப் பெருங்கனவாகக் கழித்தால் என்ன?
உலகம் அர்த்தமற்றதா!
[சர்மாவுக்கு] உலகம் - அர்த்தமற்ற கேலிக் கூத்துப் போலும், அசட்டுத்தனம் போலும் பட்டது.
வீட்டுச் சொந்தக்காரனின் நினைப்பு
சென்னையில் ‘ஒட்டுக் குடித்தனம்’ என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன் குடியிருக்க வருகிறவர்கள் எல்லோரும் ‘திருக்கழுக்குன்றத்துக் கழுகு’ என்று நினைத்துக் கொள்வானோ என்னமோ?
மூன்றெழுத்து மந்திரம்
பிள்ளையவர்களைப் பொறுத்தவரை, அவர் இந்தப் பணம் என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர்.
யாருக்கு அதிர்ஷ்டம்
நான் பத்திரிகையை விட்டுவிட்டா, கதை எழுதாமல் இருந்து விடுவேனோ? ஒரு பெரிய நாவலுக்குப் ‘பிளான்’ போட்டிருக்கேன். தமிழன்களுக்கு அதிர்ஷடம் இருந்தால், எனக்குக் காகிதம் வாங்கவாவது காசு கிடைக்கும்.
நிஜமானது எது?
வாழ்க்கையில் ஒன்று தான் நிஜமானது. அர்த்தமுள்ளது. அது தான் மரணம்.
மிருக இச்சை
காதல், வெறும் மிருக இச்சை; பூர்த்தியாகாத மனப் பிராந்தியில் ஏற்பட்ட போதை.
சமூக இயல்பு
பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம், ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால் பெரிய மீன் ‘குற்றம் செய்கிறாய்!’ என தண்டிக்க வருகிறது. இது தான் சமூகம்!
யாருக்கு உரிமை?
இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே, தெரு விளக்கிற்கும் இப்பொழுது மூப்புப் பருவம்.
உதையும் குத்தும்
பிள்ளையவர்கள் மிகவும் சாது; அதாவது படாடோபம், மிடுக்கு, செல்வம், அகம்பாவம் முதலியனவற்றின் உதைகளையும் குத்துக்களையும் ஏற்று ஏற்று மனமும் செயலும், எதிர்க்கும் சக்தி யையும், தன்னம்பிக்கையையும் அறவே இழந்து விட்டன.
சகோதரிகளாக நினை!
குற்றத்தின் பாரமே உருவாக இந்திரன் நிற்கிறான். “அப்பா இந்திரா! உலகத்துப் பெண்களைச் சற்று சகோதரிகளாக நினைக்கக்கூடாதா? கெளத முனிவர் கூறுகிறார்.
எப்படி வாசிக்க வேண்டும்?
“சாஷ், இப்பொ அதுதான் வேணும், வாசிக்கிறவாள் எல்லாம், மாடு பருத்திக் கொட்டை தின்கிற மாதிரி எதையானாலும் விதரணை இல்லாமல் வாசிக்கிறா”.
புத்தக வியாபாரம்
இந்த புஸ்தக வியாபாரமே கேப் மாறி ஜாதிக்குத்தான் சரி!
தியாகத்தின் பலிபீடம்
“கொள்கைக்காக நீர் தியாகம் செய்து கொள்ள முயலுகிறீர்; அது வேண்டாம் நான் உமக்குப் போகக் கருவியாகத்தான், உமது தியாகத்தின் பலிபீடமாகத்தான் நீர் கருதுவீர். அது எனக்கு வேண்டாம். நான் காதலைக் கேட்கவில்லை. தியாகத்தைக் கேட்கவில்லை. நான் தேடுவது பாசம்...
சுகமாக இருப்பது எப்படி?
சுகமாக இருக்க விரும்புவது தான் மனித இயற்கை என்பது தகப்பனார் அனுபவம். அதில் இன்பம் கிடையாது என்பதுதான் பையன் சித்தாந்தம். தகப்பனாருக்குப் பையன் நடத்தை. அர்த்தமாகவில்லை.
எது முட்டாள்தனம்?
மனிதன் என்றால், நிதானம் தவறி விடுவது இயற்கை. தவறின நிலையிலேயே நின்று உழன்று கொண்டிருப்பது என்பது படு முட்டாள் தனம்.
சில நிமிஷ உல்லாசம்
சில நிமிஷ நிம்மதிக்காக, சில நிமிஷ உல்லாசத்திற்காக, விலங்கை மீண்டும் நாமே எடுத்துப் பூட்டிக் கொள்வது புத்திசாலித்தனம் இல்லை.
நெருப்பைச் சுற்றி வட்டமிடலாமா?
விட்டில் பூச்சி மாதிரி நெருப்பைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டால் சிறகு தீய்ந்து போகாமல் என்ன செய்யும்?
ஆசை எது?
ஆசை என்று நினைத்துக் கொண்டு சகதிக்குள் காலை விட்டுக் கொள்ள முடியுமா?
தண்ணீரில் பால் கலப்பது
நீரோ மாமிச பட்சணி, நானோ சாத்வீக உணவுக்காரன், எண்ணெய்க்கும் தண்ணீருக்கும் சரிபட்டு வருமா? உறவு என்றால் தண்ணீரில் பால் கலப்பது மாதிரி இருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
காககையின் ஓலம்
விழுந்த காக்கையைச் சுற்றி ஓலமிடும் காக்கை மாதிரிதான் செண்பகராமன் பிள்ளை கத்தினார்.
கற்பைப் புகுத்தலாமா?
கற்பு நிலை என்னவென்பது எனக்கு நன்கு தெரியும். பிறர் புகுத்திக் கற்பு நிலை ஓங்குவது அனுபவ சாத்தியமான காரியமன்று.
நெருப்பில் எண்ணெய்
(கடிதத்தைப் பார்த்ததும் பூர்ணங்கலித்தின் துக்கம்) நெருப்பில் எண்ணெயிட்டது போலாயிற்று.
உரிமை இல்லையா?
சுதந்திரத்துக்கும் காதலுக்கும் ஹிந்து சமூகத்தில் உரிமை இல்லை என்கிறார்கள். பார்த்துக் கொள்வோம்.
மனிதனுக்குப் பிணத்தைப் பார்க்கும் ஆசை, எல்லா ஆசைகளையும் விடப் பெரிது. பயத்தில் பிறந்த ஆசையோ என்னவோ?
கலியாணம் என்றால் என்ன?
கலியாணம் என்ற பதத்திற்கு அகராதியில் ஒரு அர்த்தம் இருக்கலாம். கவிஞனது வியாக்யானம் ஒன்று இருக்கலாம். அதெல்லாம் எனக்குத் தெரியாது. நடைமுறை உலகத்திலே இந்த மகத்தான கலியுகத்திலே, திருமணம் என்றால் குலப் பெருமை கிளத்தும் கலகாரம்பம் என்று பெயர்.
கோழைத்தனம் பிறப்புரிமையாக இருக்கிற இந்தப் புழுக்களை மனிதர்கள் ஆக்குவது எப்படி?
அர்த்தமற்ற வார்த்தை எது?
மரண தண்டனை அனுபவிக்கும் ஒருவன் சார்லி சாப்ளின் சினிமாவை அனுபவிக்க முடியுமா? வைதவ்ய விலங்குகளைப் பூட்டிவிட்டுச் சுவாரஸ்யமான பிரசங்கத்தைக் கேள் என்றால் அர்த்தமற்ற வார்த்தையல்லவா அது. (‘வைதவ்ய விலங்கு’ என்பது சமூகத்தின் கொடுமையான கட்டுப்பாடுமூடக்கொள்கை.)
வழி எது?
தொல்லை தீர வழி இருக்கும் பொழுது, தர்ம சாஸ்திரமா குறுக்கே நிற்க முடியும்?
யாரிடத்தில் செல்லும்?
பிரசங்கங்கள் படித்தவர்களிடத்தில் செல்லும்; இந்த வாயில்லா பூச்சிகளிடத்தில்?
இயற்கையின் பூரண கிருபை
ஒரு தடவை ஆதனூருக்கு வந்திருந்தான். அப்பொழுது கருப்பனின் மகளுக்கு வயது வந்து விட்டது. நல்ல இயற்கையின் பூரண கிருபை இருந்தது.
கிராமத்தின் அழகு
சாட்சி சொன்ன கோமுட்டிச் செட்டி கண்ட குதிரையைப் போல், பட்டணத்தின் தொந்தரவுகளுடன் கிராமத்தின் அழகையும் பெற்றிருந்தது.
சட்டம் இருக்கிறதா?
ராமனுடைய பெயரை வைத்துக் கொண்டால் ராமன்போல் வீரனாக இருக்க வேண்டும் என்று எங்காவது சட்டம் இருக்கிறதா?
அன்பு இல்லையா?
‘ஸ்தோத்திரம்’ என்று வார்த்தை வராது. அதற்கென்ன? உள்ளத்தைத் திறந்து அன்பை வெளியிடும்பொழுது தப்பிதமாக இருந்தால், அன்பில்லாமல் போய்விடுமோ?
‘சும்மா’ இருக்க மாட்டார்கள்
தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஒரு உண்மையைக் கண்டு பிடித்த விஞ்ஞானியும், ‘சும்மா’ இருக்க மாட்டார்கள். சளசளவென்று கேட்கிறவர்கள் காது புளிக்கும் படி சொல்லிக் கொட்டி விடுவார்கள்.
‘செல்வோம்! செலவோம்!’
இந்தச் ‘செல்வம்’ என்ற சொல் ‘செல்வோம் செல்வோம்’ என்ற பொருள்பட நின்றதாம். அதிலே தமிழுக்கு வேறே பெருமை.
வண்டிச் சக்கரம் போல
‘செல்வம் இருக்கிறதே, அது வெகுபொல்லாதது. இன்று ஒரு இடத்தில் இருக்கும், நாளை ஒரு இடத்தில் இருக்கும்; அதோ அந்த வண்டிச் சக்கரம் போல. அதைத் துறந்தால்தான் மோட்சம்...’
செல்வத்தின் தீமை!
நம்மவருக்குச் செல்வத்தின் தீமையைப்பற்றிச் சொல்லுவது. நபும்ஸ்கனுக்கு பிரமச்சரியத்தின் உயர்வைப் பற்றி உபதேசிப்பது போல்தான்.
எது நிலையானது?
செல்வம் நிலையில்லாதது என்று கடிந்து கொள்ளுகிறீர்களே! எதுதான் உலகத்தில் நிலையாக இருக்கிறது?
நம்மைப் போல்தான்!
கடவுளைப் பற்றி வெகுலேசாக, எப்பொழுதும் இருக்கிறார் என்று கையடித்துக் கொடுப்பார்கள். நம்மவர்கள், கடவுளும் நம்மைப்போல், பிறந்து வளர்ந்து அழிகிறவர்தான்.
அசட்டு வேதாந்தம்
அந்த ட்ராம் கார் நண்பர் மாதிரி. நமக்கு அசட்டு வேதாந்தம் வேண்டாம். அஸ்திவாரக் கப்பிகளை நன்றாகக் கட்டிவிட்டுப் பிறகு மெத்தைக்கு என்ன வார்னிஷ் பூசலாம் என்று யோசிக்கலாம்.
வீணையும் விரலும்
இருவர் வாழ்க்கையும் வீணையும் விரலும் விலகியிருப்பது போன்ற தனிப்பட்ட கூட்டு வாழ்க்கையாக இருந்தது.
நல்ல பொருள் எது?
மனிதனுக்கு ......... தனக்குக் கிடைப்பது நல்ல பொருளாக இருக்க வேண்டும், என்ற ஆசையினால்தான் இருக்கின்றான்.
கணவரின் நண்பர்
யார்தான் சாதரண காலத்தில் கூடத் தம்முடைய கணவரின் நண்பருக்காகக் கழுத்து நகையைக் கழற்றி கொடுக்கச் சம்மதிப்பார்கள்?
கங்கையின் வெள்ளம்
'கள்ளிப் பட்டியனால் என்ன? நாகரிக விலாசமிட்டுத் தொங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம் போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது... ஓடிக் கொண்டேயிருக்கும்,
வளைவு என்றால் என்ன?
திருநெல்வேலிப் பக்கத்தில் வளைவு என்பது பத்துப் பதினைந்து வீடுகள் சூழ்ந்த ஒரு வானவெளி, இப்படிப் பல வளைவுகள் சேர்ந்தது தான் ஒரு தெரு, அல்லது ஒரு சந்து. மாவடியா பிள்ளை வளைவு என்றால் அழுக்கு, இடிந்த வீடு, குசேல. வம்சம் என்பவற்றின் உவமானம்.
பருப்பில்லாமல் கலியாணமா?
தமிழ்நாட்டில் மேற்கோள் இல்லாத ஆராய்ச்சிப் புஸ்தகமும் பருப்பில்லாத கலியாணமும் உண்டா?
பலவீனத்தின் மூலம் காசு
பலவீனத்தை வைத்துக் கொண்டு நாலு காசு சம்பாதிக்கப் பிச்சைக்காரனுக்கு முடியும். மனுஷனால் வாழ முடியுமா? அதனால்தான் இந்தச் சுடுகாடு என்ற ரண சிகிச்சை டாக்டர், வாழ்க்கை என்ற நோயாளிக்கு மிக அவசியம்.
எப்படி பிரிந்தார்கள்
நாங்களும் அவிழ்த்து உதறின நெல்லிக்காய் மூட்டை மாதிரிப் பிரிந்தோம்.
ராமாயணத்தில் கலையம்சம்
இலக்கியத்தில் கலையம்சம் என்பது ஜீவத் துடிதுடிப்பில்தான் இருக்கிறது. ராமாயணத்தில் ......... இல்லையா? தற்காலப் புஸ்தகத் தணிக்கை போர்டார், இப்பொழுது எழுதினால் ஆபாசம் என்ற தலைப்பில் தடை விதிக்கக்கூடிய வேறு விவகாரங்கள் இல்லையா? ஒரு பெரிய மாளிகை மாதிரி ராமாயணம் அகண்டாகாரமாக இருப்பதால், அவை பலர் கண்களுக்குத் தென்படுவதில்லை.
இலக்கிய மைல் கல் எது?
ஆனால் இன்று வெளிவரும் புத்தகங்களில் சித்த வைத்தியம், சோதிடம், சிற்றின்பம் பற்றியவை தவிர மற்றவெல்லாம், தம்மை ஒரு இலக்கிய மைல் கல் என மார்தட்டிக் கொண்டு வருகின்றன.
பரங்கிங்காய் குதிரை முட்டை ஆகுமா?
நல்ல இலக்கியமென்றால், எத்தனை நந்திகள் வழிமறித்துப் படுத்துக்கொண்டாலும் இவை உரிய ஸ்தானத்தை அடைந்தே தீரும். பனைமரத்தில் ஊசியைச் சொருகிக் கொண்டு சுமந்து நடந்த பரமார்த்த குருவின் சீடர்கள் போல, எத்தனைபேர் சுமந்து வந்தாலும் பரங்கிக்காய் குதிரை முட்டையாகி விடாது.
நெஞ்சு அழுத்தம் வேணும்
மதிப்புரை எழுதுகிறவனிடம் எதிர்பார்க்க வேண்டியது ஒன்றுதான். நல்ல இலக்கியத்தைக் காணும்பொழுது அதைத் தெரிந்து கொள்ளவும். பரிச்சயம் செய்து வைக்கவும் அவனிடம் திராணி வேண்டும். அப்படியே போலியைக் காணும்போது, யார் வந்து நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் அது போலி என்று சொல்லுவதந்கு நெஞ்சு அழுத்தம் கொண்டிருக்க வேண்டும்; இது போதும்.
போட்டோவுக்காகச் சிரிப்பு
ஹாஸ்யச் சுவை என்பது இயல்பாக அமைய வேண்டிய விவகாரமாதலால், வலிந்து கட்டிக்கொண்டு சிரிக்க வைக்க முயலுவது போட்டோவுக்காகச் சிரித்த மாதிரியாகத்தான் அமையும்.
அவரைப் போலவே!
ஸ்ரீராமாநுஜலு நாயுடு கதை செல்லுவதில் சமர்த்தர். பாத்திரங்கள் உயிர்த் தன்மையுடன் இயங்குபவை. பெண்களைப் பற்றியும் அவர் கொண்டிருந்த கருத்துக்கள் விபரீதமானவை. கலையைப் பற்றியும் பெண்மையைப் பற்றியும் டால்ஸ்டாய் விசித்திர அபிப்பிராயங்களைத்தான் கொண்டிருந்தார். அதற்காக அவர் சிறந்த கலைஞன் என்பதை நாம் மறந்து விடுகிறோமா? அம் மாதிரியே ராமாநுஜலு நாயுடுவை நாம் பாவிக்க வேண்டும்.
சிறுகதை இலக்கணம்
சிறுகதை என்றால் அளவில் சிறியதாக இருப்பது என்பதல்ல; எடுத்தாளப்படும் சம்பவம் தனி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.
கவிதை எது?
கவிதையைப் போதனைக்குரிய கருவிசாக உபயோகப்படுத்தும் வரை அது கவிதையாக இருக் காது. அதன் ரசனை கெட்டு விடுகிறது.
இசைதான் கவிதையா?
ஒழுக்கமும், தர்மமும், மோட்சமும் கவிஞனது உள்ளத்தில் ஊறி, இருதயத்தின் கனிவாக வெளிப்படும் இசைதான் கவிதையாகும்.
கவிதையை ரசிப்பது எப்படி?
உடற்கூறு நூல் படியாவிட்டால் உயிர் வாழ முடியாதென்று சொல்ல முடியாது. அதைப் போல் இலக்கணம் இல்லாவிட்டால், கவிதை இருக்க முடியாதென்று கூற முடியாது. ஆனால் கவிதையை ரஸிப்பதற்குக் கவிதை என்றால் என்ன வென்று தெரிந்திருக்க வேண்டும்.
பண்டிதர்களின் இலக்கியம்
தற்காலத்தில் பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கவனிக்க முடியாமல் எல்லாவற்றையும் புகழ்ந்து கொண்டு இடர்ப்படுவதற்குக் காரணம் அவர்கள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாததுதான்.
இலக்கியம் எது?
வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம், வாழ்க்கையைக் சொல்வது, அதன் ரசனையைச் சொல்வது இலக்கியம்.
இலக்கியம் குப்பையா?
இலக்கியத்திற்கு ஜீவநாடி அமைப்பு. அதை இழந்தால் இலக்கியம் வெறும் குப்பை.
வாழ்க்கையின் சாளரம்
சிறுகதை, வாழ்க்கையின் சாளரங்கள். வாழ்க்கையின் ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை அல்லது ஒரு குண சம்பவத்தை எடுத்துச் சித்திரிப்பது.
இலக்கியத்தின் ஜீவநாடி
பொதுப்பட நோக்கின் இலக்கியத்தின் ஜீவ நாடி உணர்ச்சியும் சிருஷ்டி சக்தியும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை
கலையின் இலட்சியம் எது?
கலை, தர்ம சாஸ்திரம் கற்பிக்க வரவில்லை; ஒழுக்க நூலை இயற்ற வரவில்லை. உடற்கூறு நூலை எடுத்துக் காட்ட வரவில்லை. பத்துத் தலை ராவணனும், ஆறுதலை சுப்ரமணியனும், உடற்கூறு நூலுக்குப் புறம்பான அபத்தமாக இருக்கலாம். ஆனால் ஒரு கொள்கையை இலட்சியத்தை உணர்த்தக்கூடியது, அது தான் கலையின் இலட்சியம்.
எது கவியாகும்
கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா?
வாழ்க்கைப் பாதை
வாழ்க்கைப் பாதையில் கணவனும், மனைவியுமாகச் செல்லுகையில், மஞ்சள் பூப் போல் இருந்த சமூகம், பந்துக்கள் அவன் பிரிந்தவுடன், முட்களாகக் குத்துகிறார்கள்.
உணர்ச்சிக் கண்கள்
கவிஞன் உலகத்தின் உண்மைகளை, வாழ்க்கையின் ரகஸியங்களை வேறு விதமாகப் பார்க்கிறான். அவன் கண்கள் உணர்ச்சிக் கண்கள். கனவுக் கண்கள்.
சரியான வார்த்தை எது?
கவிதையில், சரியான வார்த்தைகள், சரியான இடத்தில் அடைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்து கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளைச் சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது.
கவிராயன் யார்?
கத்தி விழுங்குபவனும் கவிராயனும் ஒன்றல்ல. கவிராயன் நாம் செய்யக் கூடிய காரியத்தைத்தான், நாம் எப்படிச் செய்ய விரும்புகிறோமோ அந்த அளவு ஆணித்தரமான அழுத்தத்துடன் செய்கிறான் என்பவை தவிர நாம் செய்ய முடியாத காரியத்தை அவன் செய்கிறான் என்பதல்ல.
நடைவண்டி
நமது இலக்கியமானது நெடு நாள் பட்ட வளர்ச்சி கண்டது. அதன் வார்த்தை அமைதிகளே கவிதைப் பண்பு கொண்டு, நடைபயிலும் சிறு குழந்தைக்கு நடைவண்டி போல அமைந்து கிடப்பதால், பேரிகை கொட்டி பிழைப்பதைவிட, கவிதை கட்டிப் பிழைப்பது இலகுவான காரியமாகி விட்டது.
கவர்ச்சி காணலாமா?
இயல்புக்கு விரோதமான எந்தச் செயலிலும் கவர்ச்சி காண முடிவது துர்லாபம்.
இரண்டு இருதயங்கள்
ஒரே விதமாகத் துடிக்கும் இரண்டு இருதயங்கள் பிணிக்கப்படுவதில் அதிசயமில்லை.
அன்பில் வசப்படலாமா?
குயிலுக்கு அவன் அடிமை. அன்பில் வசப்படாமல் யார்தான் இருக்க முடியும்? ஆதிலும் ஒரு கவிஞன்...
பகற் கனவுகள்
மோகனமான பகற் கனவுகள் காண்பதில் கவிஞனுக்கு இணையாகக் காதலர்களைத்தான் ஒருவாறு கூறலாம்.
கை தட்டலாமா?
இரண்டு கைதட்டினால் தானே சப்தம் இரண்டு மனம் போராடினால் தானே இறுதி.
இலட்சிய உலகில் வசிப்பவனா?
கவிஞன் எப்பொழுதும் ஒரு இலட்சிய உலகில் வசிப்பவன். அவனது உள் மனத்தின் உணர்ச்சி ஊற்றுக்களிலிருந்து ஜீவசக்தி பெற்று வரும் வார்த்தைகள் தாம் கவிதைகள்.
எதற்கு புஸ்தகம்?
தெரிந்ததைச் சொல்லுவதற்குப் புஸ்தகமா, தெரியாததை அறிவதற்குப் புஸ்தகமா? இரண்டிற்கும்தான்.
தனிமனிதன் வாழ முடியாதா?
தனிமனிதன் உயிருடன் வாழ முடியாது; அதாவது தனியாக இருந்தால் மனிதனால் வாழ முடியாது என்பது மனிதப் பிராணிகள் கஷ்டப்பட்டு அறிந்த உண்மை.
கடவுள் என்ற பிரமை
கடவுள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? ஒரு கூட்டத்தின் பாதுகாப்பிற்கு அது அவசியமானால் ஒரு பொய்யைச் சொல்லித்தான், கடவுள் என்ற பிரமையைச் சிருஷ்டித்தால் என்ன?
நாஸ்திகம் நிஜமா?
இந்தக் கடவுள் விஷயம் ரொம்ப ஸ்வாராஸ்யமானது. அது தனிமனிதனுக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. சமூகத்திற்கு ஒரு சக்தியைக் கொடுப்பது போல், நாஸ்திகம் தர்க்கத்தில் நிஜமகே இருக்கலாம். அது சுவாரஸ்யமற்றது. வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த முடியாதது.
மோட்சத்தைக் கொடுப்பது எது?
வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும் அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோஷத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோஷத்தை விட மேலானது.
சுட்டு வச்ச தோசை
அவள் கண்ட நிலா வெண்ணிற நரை. நிறை வெள்ளமென பரந்து கிடக்கவில்லை. ஆனால் சோளப்பொறி மத்தியிலே சுட்டு வச்ச தோசையைப் போலத் தானிருந்தது.
சாப்பாட்டுக் கடை?
சாப்பாடு உயிர் வாழ்வதற்கு அவசியந்தான். ஆனால் வாழ்க்கை வேறு; உயிர் வாழ்தல் வேறு. வாழ்க்கை ஓர் அநுபவம். சிலர் உலகம் முழுவதையுமே சாப்பாட்டு கடையாக மதித்து விடுகிறார்கள்.
சரித்திரமா? புளுகா?
அச்சடித்த புஸ்தகங்களைப் போல் இவர்களுடைய சரித்திரங்களும் கொஞ்சம் அமிதமான புளுகுகள் நிறைந்திருக்கும்.
தர்மம் வெற்றி பெறுமா?
தர்மம் இலக்கியத்தில் மட்டும் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதால் வாழ்வு அப்படியேயாகி விடுமோ?
சட்டம்போட்டு மாட்டப்பட்ட படமா?
வாழ்வின் ரகசியம் இதுதான். மகா இலக்கியங்கள், பலவித கோணங்களிலிருந்தும் வாழ்வை நோக்குவதைத் தடை செய்வதற்காகச் சட்டம் போட்டு மாட்டப்பட்ட படங்கள் அல்ல.
நிதிகள் திரட்டாதீர்
- இத்தனைக்கும் மேலே
- இனி ஒன்று ஐயா, நான்
- செத்ததற்குப் பின்னால்
- நிதிகள் திரட்டாதீர்!
- நினைவை விளம்புகட்டி,
- கல்லில் வடித்து
- வையாதீர்.
எந்தத் தொழில்?
- யோக்கியமாய்
- வாழ இங்கே
- எந்தத் தொழில்
- உண்டு?
ஊருணி கதை
- ஊருணிக் கதை யெல்லாம்
- ஊரறிந்த ரகசியம் காண்!
கண்ணடித்த பயன்!
- கையடித்துக் கொடுத்தால்
- காலேஜு வாசலிலே
- கண்ணடித்த பயனடைவேன்!
எல்லை தெரியாதோ!
- தொல்லை வராமல்
- நாம் தொட்டுப் பழகிடுவோம்,
- எல்லை தெரியாதோ நமக்கெல்லாம்?
இன்னமுமா பாட்டு?
- பண் என்பார் பாவம் என்பார்
- பண்பு மரபென்றிடுவார்
- கண்ணைச் சொருகிக்
- கவி என்பார்-அண்ணாந்து
- கொட்டாவி விட்ட தெல்லாம்
- கூறு தமிழப் பாட்டாச்சே
- முட்டாளே இன்னமுமா பாட்டு?
பசியா வரம்
- பசியா வரம் அருள்வாய் அல்லால்
- நசியா நலம் அருள்வாய் முருகா
பால்காரனின் பால்
புனிதமாக ஏதாவது ஒன்று இருக்கிறதா? இந்தப் பால்காரன் விற்கிற பாலுக்கும், உலகத்தின் நன்மைக்கும் வித்தியாசமில்லை நாமாக நினைத்துக் கொண்டால் நன்மைதான்.
சென்னையில் வசிப்பது
சென்னையில் வசிப்பதால், ராஜீயக் கைதி சிறையில் அனுபவிக்கும் சிரமத்தையெல்லாம் தியாகம் செய்யாமல் அனுபவித்துவிடலாம்.
மன இருள்
இருளில் வழிதெரியாது தவிக்கும் பாதசாரி, ஏதாவது ஒன்றைத் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானது என்று சங்கற்பித்துக் கொண்டு, அதை நோக்கிச் செல்வதுபோல், தன் கணவர் நித்தியம் பூஜை செய்யும் கோவிலுக்குச் சென்று, கலங்கிய உள்ளத்திற்கு சாந்தியை நாடினாள். கோயில் மூலஸ்தானத்தின் இருளுக்கு இவளது மன இருள் தோற்றுவிட்டதாகத் தெரியவில்லை.
உலகத்தின் நிஷ்டூரம்
ஏழ்மை நிலைமையிலிருக்கும் பெண்கள் கொஞ்ச காலமாவது கன்னியாக இருந்து காலந்தள்ள ஹிந்து சமூகம் இடந்தராது. இவ்விஷயத்தில் கைம்பெண்களின் நிலைமையைவிட கன்னியர்களின் நிலை பரிதாபகரமானது. மிஞ்சினால் விதவையை அவமதிப்பார்கள். ஆனால் ஒரு கன்னிகையோ வெனின், அவதூறு, உலகத்தில் நிஷ்டூரம் என்ற சிலுவையில் அறையப்படுவாள். பணக்காரர்களான பூலோகத் தெய்வங்கள் மீது சமுதாயக் கட்டுப்பாட்டின் ஜம்பம் பலிக்காது.
சுத்த சைவன்
“இது தான் உம்முடைய குழந்தையோ?” என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை ஆவருக்கு. கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.
“சும்மா சொல்லும்; இப்போவெல்லாம் நாம் சுத்த சைவன், மண்பானைச் சமையல் தான் பிடிக்கும். பால், தயிர் கூடச் சேர்த்துக் கொள்வதில்லை” என்று சிரித்தார் கடவுள்.
சிரங்கு உபாதை
மெலிந்த தேகி; இடுப்பைச் சுற்றிலும் முதுகு வரையிலும் வண்ணான் சொறி, இவருடைய அன்புக்குக் கிருஷ்ண பக்தியும் சிரங்கு உபாதையும் போட்டியிடுகின்றன.
வாழ்க்கை எதனால் நடக்கிறது?
ஆசை! அதற்கும் மனிதன் சொல்லிக் கொள்ளும் லட்சியம் என்பதற்கும் வெட்கமே கிடையாது. இலட்சியத்தால் நடக்கிறதாம், நீதியால் நடக்கிறதாம்; தர்மத்தால், காதலால் வாழ்க்கை நடக்கிறதாம்! உண்மையில் இதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? வாழ்க்கையில் ஒன்று. தான் நிஜமானது. அர்த்தமுள்ளது. அது தான் மரணம்.
நான் அவளையே பார்த்துக் கொண்டு பின்புறம் கை நீட்டும் பொழுது சிலசயம் என் கை அவள் கை வளையலில் படும்? அல்லது. ஸ்தன்யங்களில் பட்டுவிடும்.
அயோக்கியர்களின் நடமாட்டம்
அயோக்கியர்கள் நடமாடுகிறார்கள்: தெய்வ சன்னிதானத்திலும் நடமாடுகிறார்கள். அங்கே வியாபாரத்தனமாக மனசை அடமானம் வைக்கிறார்கள்.
அரிச்சந்திரனின் தடி
அரிச்சந்திரன் மயான காண்டத்தில் ஊன்றிக் கொண்டு நிற்கவேண்டிய தடி சடக்கென்று ஒடிந்து விட்டால் எப்படியிருக்கும்? ‘பின்-அரிச்சந்திரன்’ அந்த சமயத்தில் சோகமே குலைய மிருதங்ககாரனைப் பார்த்து உறுமுவது போலிருந்தது என் நண்பரின் பார்வை.
கால்களை நம்பலாமா?
ஜனங்கள் பார்த்தசாரதியை நம்பினார்கள். பக்கத்து வட்டாரக் கடவுள்களை நம்பினார்கள். கடைசியில் இப்பொழுது தங்கள் கால்களையே நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.
மனம் நொந்து கொள்ளலாமா?
வாதவூரே, அப்படி மனம் நொந்து கொள்ளக் கூடாது. தாங்கள் பழையபடி எனக்கு அமைச்சராகவே இருக்க வேண்டும். தாங்கள் இல்லாவிட்டால் இத்தனை குதிரைகள் கிடைக்குமா?
திருட்டுக் கூட்டமா?
இந்த எழுதுகிற பயல்கள் எல்லோரும், திருட்டுக் கூட்டம், சொன்னாச் சொன்னபடி நடக்கமாட்டான்கள்; பொஸ்தகக் கடை வைக்கிறதை விடப் பொடலங்காய் விக்கலாம்.
முயல் எப்படி இருக்கும்?
இந்தக் கறுப்புக் குட்டி ...... நாய்; அதிலும் பட்டணத்து ...... நாய். அதற்கு முயல் என்றால் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. மேலும் அது எழுத்தாளர் அல்ல; சொந்த மனசினாலோ, இரவல் விவகாரத்தினாலோ கற்பனை பண்ணிக் கொள்வதற்கு அதற்குச் சக்தி இல்லை.
புளுகுவதுதான் கதையா?
சிறு கதை பற்றி : ‘பயன் கருதாது, தன்மயமாகி லயித்து ஒட்டிப் புளுகுவதுதான் கதை’
சிறிய சாளரம்
‘சிறு கதை வாழ்க்கையின் சிறிய சாளரம்’
வாழ்வுக்குப் பொருள் கொடுப்பது எது?
வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மானித்துக் காண்பித்தது. சிறுகதைகள் வாழ்வை, உண்மையை நேர் நின்று நோக்க ஆரம்பித்தன.
வெள்ளி முளைத்தாற் போல்
தமிழிற்கே விமோசனம் கிடையாது என்று தினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெள்ளி முளைத்தாற்போல் சிறுகதை எழுதுகிறவர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கள், கற்பனைகள் எல்லாம் தமிழுக்குப் புதியவை.
குருடனின் நிலை!
இருள்! இருள்! பற்றுக் கோலை யாரோ தட்டிப் பிடுங்கிக் கொண்ட குருடனின் நிலை.
இயற்கையின் செழிப்பு
காலத் தேவனின் தங்கைகள் போன்ற பாறை இயற்கையின் செழிப்பான கானகம் என்ற அந்தப் புரத்திலே மறைந்து கிடந்தன.
மனோ தர்மம்
சிறு கதையின் ரூபம் கதை எழுதுபவனின் மனோதர்மத்தைப் பொறுத்தது.
காலம் ஓடுமா?
நான் ஓடினால், காலம் ஒடும் நான் அற்றால், காலம் அற்றுப் போகும்.