புது ஓவர்சியர்/வெற்றி
தெய்வாதீனமாக மறுநாளே வெள்ளம் வடிய ஆரம்பித்தது. ஒரு வாரத்திற்குள் உடைப்பு அடைபட்டது. வழக்கத்துக்கு மாறாக உடைப்பு இவ்வளவு விரைவில் அடைபட்டதற்குப் புது ஓவர்ஸியரின் ஊக்கமும் முயற்சியுமே காரணங்கள் என்று ஜனங்கள் பிரசித்தியாகப் பேசிக் கொண்டார்கள். எனினும், ஐந்தாறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. முக்கியமாக, உடையாரின் பகைவரான மிராசுதாரின் நிலத்தில் ஏறக்குறையப் பாதி மணலடித்துச் சாகுபடிக்கே லாயக்கில்லாமல் போயிற்று.
கோவிந்தராஜ உடையார் கைது செய்யப்பட்டுப் பின்னர் பெருந்தொகை ஜாமீன்களின் மீது விடப்பட்டார். வழக்கு ஏழெட்டுமாத காலம் நடந்தது. உடையாரின் சார்பாகச் சென்னை வக்கீல்கள் ஏழு பேரையல்லாமல் கல்கத்தாவிலிருந்து குற்ற வழக்குகளில் பெயர்போன பாரிஸ்டர் ஒருவரும் வந்து பேசினார். வழக்கின் நடைமுறை விவரங்களைத் தெரிவித்து, இச்சிறுகதையைப் பெருங்கதையாக்க நாம் விரும்பவில்லை. முடிவை மட்டும் கூறிவிடுகிறோம். சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் மூவர் அமர்ந்து, விசாரணை செய்து, கோவிந்த ராஜ உடையார் நிரபராதி என்று விடுதலை செய்தனர். உடையாருக்கு விரோதமாக ஓவர்ஸியரின் சாட்சியம் ஒன்றுதானிருந்தது. மேஸ்திரி, விசாரணையில் இருட்டிவிட்டபடியால் அங்கிருந்து உடையார்தானாவென்று நிச்சயமாகச் சொல்ல முடியாதென்றும், அங்கிருந்தவர் யாராயினும் தான் பார்த்தபோது அவர் மண்வெட்டியால் வெட்டிக் கொண்டிருக்கவில்லையென்றும், மண்வெட்டியை எறிந்ததையும் தான் பார்க்கவில்லையென்றும், "ஐயோ! உடைப்பெடுத்துவிட்டதே" என்பது போன்ற கூக்குரல்தான் காதில் விழுந்ததென்றும், தான் உடனே கிராமத்துக்குச் சென்றதாகவும், வேறு விபரம் ஒன்றும் தெரியாதென்றும் சாட்சி சொன்னான். கேசவன் கோர்ட்டுக்கு வரவேயில்லை. உடையாரின் எதிரி மிராசுதார், உடையார் தம் பகைவர் என்று சாட்சி சொன்னாராயினும் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு அது உதவி செய்யவில்லை. ஆகவே, போதிய சாட்சியம் இல்லையென்று வழக்குத் தள்ளப்பட்டது.
இதற்குச் சில தினங்களுக்கெல்லாம், ஓவர்ஸியர் சம்பந்தம் பிள்ளைக்கு மேலதிகாரிகளிடமிருந்து ஓர் உத்தரவு வந்தது. அதில் ஸ்ரீமான் சம்பந்தம் பிள்ளை உடைப்பெடுத்த காலத்தில் தமது கடமையைச் சரிவரச் செய்யவில்லையென்றும், உடைப்பை அடைக்கத் தீவிர முயற்சி செய்திருக்க வேண்டிய சமயத்தில், ஒரு கண்யமுள்ள கனவான் மீது, அவருடைய எதிரியின் தூண்டுதலால் அபாண்டமான குற்றத்தைச் சாட்டித் தொந்தரவு கொடுப்பதில் ஈடுபட்டிருந்ததாகவும், அதனால் இலாகாவுக்கே அபகீர்த்தி ஏற்படுத்தியிருப்பதாகவும், இக்காரணங்களினால் அவர் வேலையினின்று தள்ளப்பட்டிருப்பதாகவும் எழுதியிருந்தது.