உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/கர்ம சித்தாந்தம்

விக்கிமூலம் இலிருந்து

13




கர்ம சித்தாந்தம்


புனர் செனனத்தைப் போலவே, கர்மசித்தாந்தம் எனும் இந்தத் தலைப்பும் படுசிக்கலானது. அர்த்த பேதம் செய்யப்பட்டுள்ளது. இந்தியர்களாகப் பிறந்து, இந்துமதம் எனும் பெயரில் கொள்கையில்லாது வாழும் கோடிக்கணக்கான மக்கள் இந்தக் கர்ம சித்தாந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் துன்பமயமாக்கிக் தொல்லைப்பட்டுக் கொண்டுள்ளனர்.

கருமம் எனின், காரியம், கிரியை, செய்கை என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது. சித்தாந்தம் எனின், தருக்க முடிவு, நிச்சயமானது எனும் பொருளில் வழங்குவது. 'வினைப்பயன்' என்பது சரியான பொருள் என நாம் எடுத்துக் கொள்வதில் தவறு கிடையாது. 

'நல்லது, கெட்டது' என வினை இருவகைப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. பிறருடைய உடைமைக்கு நாம் ஆசைப்படக்கூடாது என்பது நல்லது. பிறருடைய உடைமையில் கொஞ்சமாவது நாம் எடுத்தே தீரவேண்டும் என்பது கெட்டது.

ஆயினும் மனிதன் நல்லது கெட்டது என உள்ள இரண்டின் பலா பலன்களும் அறிந்தும், கெட்டதே செய்ய முயலுகிறான்; இதன் காரணம் ஆசைதான். இந்த ஆசைக்கு அவன் ஏன் வசப்பட்டான்!

உபநிசத்து பேசுகிறது : 'சாதுகாரி சாதுர்பவதி’, பாபகாரி பாபோபவதி, என்று. ஆம் நல்லதைச் செய்பவன் நல்லவனாகிறான். பாவத்தைச் செய்பவன் பாவியாகிறான். ஆம் இது உண்மை. ஆசைதான் காரணம். ஆசைவசப்படும் மனிதனுக்கு, மேலிடம் (அரசாங்கம்) அளித்த கல்வியில் அல்லதுகளில் ஆசைவசப்படக்கூடாது என்பதை அழுத்தமாகக் காரண காரியத்தோடு, எடுத்துக் காட்டுகளோடு இளம்வயதிலேயே போதிக்கப்பட்டிருந்தால் அவன்தன் ஆசையை நல்லதின் மேலேயே வைத்திருப்பானல்லவா?

நல்லது செய்ய வேண்டும். நல்லது செய்வதற்கு உங்களால் முடியவில்லையெனில் கெட்டது செய்யாமலாவதிருக்க வேண்டும் எனும் பொருள்படப்புறநாநூறில் நரிவெருத்தலையார் கயல்முள்ளன்ன நரைமுதிர் திரைகவுள் பயினில் மூப்பின் பல்சான்றிரே! நல்லது செய்தலாற்றிராயினும் அல்லது செய்தலோம்புமின் எனக் கூறியது தமிழில் இருந்தும், ஏன் மாணவர்களுக்குப் போதிக்கப்படவில்லை.

"தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்" என்று திருக்குறள் கூறுகிறதே ஏன் மக்களுக்கு இளமைப் பருவத்தில் இதைப் போதிக்கவில்லை.

'வான் கவிந்த வையக மெல்லாம் பெரினும் உரையற்க பொய்யோடிடைமிடைந்த சொல் !' என்று நாலடியார் நவில்வது இந்த நற்றமிழ் நாட்டிற்கு எடுத்துக்கூறப்பட்டிருக்கிறதா?

இளம் உள்ளங்களிலேயே அவசியம் பதித்துவிட வேண்டியது 'சத்தியம்’ எனும் ஒன்று! எதஸ்ய பிராமனோ நாம சத்யமிதி என்கிறது உபநிசத்து. இதன் பொருள் அந்தப் பிரமத்தின் பெயர் சத்தியம் என்பதாம்.

"மனோமய, பிரான சரீர நேதா, பிரதிஷ்டிதோ அன்னே, இருதயம் சந்நிதாய” என்கிறது உபநிசத்து. ‘கடவுள், மனோரூபியாயும் சரீத்தையும் பிராணனையும் நடத்துபவராயும் இருதயத்தில் (புத்தியில்) நிலைபெற்று, உடலில் உறைபராயும் விளங்குகிறார், என்று சொல்லுவது எவருடைய கண்ணிலும்படவில்லையா? உபநிசத்துகளை எடுத்து மாணவர்களுக்குப் போதனை செய்ய அரசாங்கம் முன்வருமானால் பத்து வருடங்களில் தமிழ்நாடு பிரம்மலோகமாகிவிடாதா?

சத்தியத்தை அறவே ஒதுக்கி வைத்துவிட்டு, உருவ வணக்கத்திற்கு இந்த விஞ்ஞான யுகத்தில் கதவு திறந்துவிட்டுக் கொண்டு செய்யும்ஆட்சியில் மனிதன் சுகத்தையும் அமைதியையும் காண முடியுமென்று சங்கராச்சாரியார் சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.

பூமியேன் கட்டாந்தரையாக மாறிக்கொண்டு வருகிறது? மக்கள் ஏன் பாவிகளாக மாறிக்கொண்டு வருகிறார்கள்? பயன்படுத்தப்படாமையினால் தானே கூட்டியெறியாத வீடு வாசல் குப்பை நிறைந்திருக்காமல் வேறென்ன இருக்கும் !

உபநிசத்துகளை உன்னிப்பார்க்கும்போது கடவுள் அவதரிக்கும் ஒன்றல்ல என்று கூறலாம். அவதாரம் செய்யும் மனிதன் இருக்கலாம். ஆனால் அவதாரம் செய்யும் தெய்வம் இருக்க முடியாது. மனிதனிடம்தான் தெய்வம் இருக்க வேண்டுமன்றித் தனித்து வேறு எந்த இடத்திலும் தெய்வமென ஒன்றில்லைஎன்று உபநிசத்து உண்மையை உரைக்கிறது. இப்படி இருந்தும் எத்தனை கோயில்களை இந்த இல்லாத தெய்வம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுமல்லாமல் மக்களுக்கு காலாகாலமாகத் தீராத செலவும் வைத்துக் கொண்டே உள்ளன. எனவே இது நல்லதல்ல என்று சொல்லுகிறேன். இது கூடாத செயல்; நம்மை நாசம் செய்யும் செயல் இந்தக் கோவில் கட்டிக் கும்பிடும் செயல் வேண்டவே வேண்டாம். ஏற்கனவே நாம் பாவிகளாகிக் கொண்டிருக்கிறோம். எனவே, எங்கும் சாந்தி இன்றிச்சமாதானமின்றி நன்னம்பிக்கையின்று அறவே இல்லாமல் போய், வெளியே சென்ற மனிதன் வீடு வந்து சேருவான் எனும் நிச்சயமின்றி வாழவேண்டிய நிலைக்கு வந்துவிட்டிருக்கிறோம்.

நம் தேசம் ஏன் அடிமையாயிற்று ? சுதந்திரம்பெற்றும் நாம் ஏன் சுகம் காணவில்லை ? நாட்டில் சாந்தி, சந்துவுடி என்பது தேடினும் காணக்கிடையாது. இவற்றின் காரணம் என்ன? நாம் சத்தியமாகிய பகவானை அறவே இழந்து விட்டோம். அறமாகிய பயமற்ற பெருஞ்சாலையை விட்டுப் பாவிகளெனக் காடே மேடே அலைந்து கற்களை வணங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கருத்தை ஆச்சாரிமார்கள் மறுக்கவே முடியாது.

இந்த அளவு கர்ம சித்தாந்தம் உண்மை. இதற்கு மாறாகப் பிரார்த்துவ கர்மம் சஞ்சிதகர்மம், இவைகளை மறுபிறவியில் அனுபவித்துத் தீரவேண்டுமென்பதெல்லாம் அறியாமை அல்லது சூழ்ச்சியென்றுதான் நாம் தீர்மானிக்க வேண்டும்.

இந்த முடிவு சரியான முடிவு உபநிசத்திலேயே இதற்கான ஆதாரம் உள்ளது. உயிருள்ள ஒவ்வொன்றும் ஒரே தடவைதான் பிறக்கமுடியும் என்று இயற்கையே நமக்கும் போதிக்கிறது. உபநிசத்தும் சான்று பகர்கிறது.

இந்த ஆத்மாவுக்கு உறைவிடம் மூன்று - தந்தையின் உடல், அடுத்துத் தாயின் உடல், இறுதியில் தன்னுடல், தந்தையின் அன்னபானங்களிலிருந்து, ஆத்மா (விந்து வடிவான) முறையில் கர்ப்பமாயிருக்கிறான். இந்த விந்து எதுவோ அது எல்லா உறுப்புக்களின் சக்தியும் திரண்டு உண்டாகிறது. தன்னிடம் கருவாய்த் தானே தரித்த அந்த ஆத்மாகிய விந்துவை எப்போது ஒரு பெண்ணிடம் விடுகிறானோ அப்போது தன்னைப் பிறப்பிக்கிறான் அது ஆத்மாவின் முதல்பிறப்பு.

அடுத்துத் தன்னிடம் புகுந்த புருஷனின் ஆத்மாவாகிய சீவனைப் பரிபாலிக்கிறாள். மாதங்கள் நிறைந்து தாயின் கருப்பத்திலிருந்து பிறப்பது இரண்டாவது பிறப்பு. ஆத்ம அணு இப்போது குழந்தையாய் உருப்பெற்று விட்டது.

குழந்தை தந்தையாகி மறுபடியும் தானே தன் விந்துவாக கருப்பம் தரிக்கும் போது மூன்றாம் பிறப்பு ஆகிறது.

செடி காய்களைவிட்டுக் காலப்போக்கில் காய்ந்துவிடுவது போலவே மனிதனும் இறந்தவன். இறந்தவன் ஏற்கனவே பிறந்திருக்கிறான்.

எனவே, பிரார்த்த கருமமோ சஞ்சித கர்மமோ உயிருடன் வாழும் வரையும்தான் அனுபவிப்பதே தவிர இறந்தபின் மண்ணாலாகிய உடல் மண்ணாகி, நீர், நீரோடும், வெப்பம், வெப்பத்தோடும், காற்று, காற்றோடும் கலந்து விடுவதுதான் உண்மை.

மனிதனுக்கு அறியாமை ஒன்றுதான் பகை. இந்தியாவில் மட்டும் தான் இந்த அறியாமைக்கு கோவிலும் கொண்டாட்டங்களும், பக்தியும், பஜனையும் இன்னும் அமோகமான ஆராவார ஆடம்பரங்களும் உண்டு.

எனவே, என்னை விட இந்த நாட்டில் கீழான அல்லது மேலான ஒரு மனிதன் கிடையாது. நாமனைவரும் மனிதர்கள் மட்டுமே எனினும் தன்னையறிந்தவன் தலைவனாகிறான். தன்னை அறிவதற்கான வழி சத்தியத்தை இருதயத்தில் சதா வைத்திருத்தல். அறநெறிவழுவாதொழுகல் மட்டுமே.

இப்போது நீ துக்கத்திலிருந்து நீங்கினாய், இருளிலிருந்து நீங்கினாய், அச்சத்திலிருந்து நீங்கினாய், உன்னிடம் ஆனந்தமன்றி வேறெதுவொன்றும் இல்லை. ஆம் இப்போது நீ அமரனானாய், மரணத்தை வென்றுவிட்டாய் எனவே என் வாழ்த்துக்கள் வாழ்க இவ்வையம்.


முதலில் சீர்திருத்தப்பட வேண்டியது தனி மனிதனை:சமூகத்தை அல்ல.

- டாக்டர் ராதாகிருஷ்னண்

மனிதன் கூட்டத்தோடு ஒன்றி வாழும் ஒரு இரண்டு கால் விலங்கு

சௌகா