உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/சமத்வம், சகோதரத்வம், சுதந்திரம்

விக்கிமூலம் இலிருந்து

15


சமத்வம், சகோதரத்வம், சுதந்திரம்


’வளிமுதலாய் எண்ணிய காற்று, வெப்பம், குளிர்ச்சி மூன்றும் மிகினும், குறையினும் உடலுக்கு நோய் செய்யும் என்கிறார் வள்ளுவர். இக்கூற்றைச் சரியல்ல என மறுக்கும் ஆற்றல் எந்தக் காலத்திலும் எவர் ஒருவருக்கும் சாத்தியமாயிருக்காது ஏனெனில் இது பரிபூரணமான' உண்மையானதனால்!

இது போன்றே ஒரு நாட்டுக்கு நோய் செய்யும் மூன்று தன்மைகளும் உள்ளன. அவற்றின் பெயர், சமத்வம், சகோதரத்வம், சுதந்திரம் எனப்படும். சுய ஆட்சியுரிமையுள்ள ஒரு நாட்டின் ஆரோக்கியமான சுதந்திரத்திற்கு சமத்துவம், சகோதரத்வம் இரண்டும் இன்றியமையாதன. இவ்விரண்டும் இல்லாத சுதந்திரம் கண்ணும் காதும் இல்லாத ஒரு சீவனைப் போல அளவற்ற இன்னலுக்கு உள்ளாகித் தீரும். ஒருநாட்டின் மேலாண்மைக்குச் சமத்துவம் உடல் போன்றும், சகோதரத்வம் உயிர் போன்றும் சுதந்திரம் உள்ளம் போன்றதும் என்பர் ஆராய்ச்சி வல்லுனர்கள்.

நாம் இவற்றைப் பற்றிச் சற்று உன்னிப்பார்த்தால் இம்மூன்றும் ஒன்றிய நிலையில் உள்ள முழு உண்மைதெற்றென விளங்கித் தீரும். ஆனால், நாம் எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணத்தை எப்போதோ இழந்துவிட்டிருக்கிறோம். கொஞ்சம் தோற்றப் பொலிவுள்ள மனிதன் சொல்வதை சிரசாக வகித்துச் செயல்படுவதே நமது நீண்டநாள் பழக்கமாக இருந்துள்ளது. சுயச்சிந்தனையை அறவே இழந்து விட்ட நாம் பிறர் எளிதாக ஏய்க்க இடம் கொடுப்பவர்களாகிவிடுகிறோம். இந்தத்துர்ப்பாக்கிய நிலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் நம்மிடமிருக்கக் கண்ட வள்ளுவர் கழிவிரக்கம் கொண்டு இந்தக் குறையை தம் குறள்பாவில் எடுத்துக் கூறலானார் : எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. என்று

சமுதாயத்தின் தார்மிக நல்லுறவுக்குரிய அமைப்புச் சக்தி இதில்தான் உள்ளது. தம்மைப் பிரம்மாவின் சிரசில் உதித்தவர்களாக வெளியே தம்பட்டமடித்துக்கொண்டு சமுதாய இயக்குனர்களாக இன்றும் இருந்துகொண்டிருக்கும் சுயநலச் சூழ்ச்சிக்காரர்கள், இதை நன்கு அறிந்திருந்தும் கிணற்றில் கல்லைப் போட்டு விட்டு எதுவும் செய்யாததுபோல் பாவனை செய்துகொண்டு மெளனம் சாதிக்கிறார்கள் மற்றவர்கள், மிகப்பெரிய படிப்பினராயிருந்தும் இதையறிந்து கொள்ள இயலாதவர்கள் என்பதை நான் உணர்கிறேன்.

என்னைச் சதா சிந்திக்கச் செய்து கொண்டிருக்கும் சொற்கள் இம்மூன்று சொற்கள்தான். ஏனெனில், என்வாழ்வில் இவை எனக்கு முற்றிலும் அன்னியமானவைகளாகவே இருந்தன. ஆனால் மிக மிக அவசியமானவைகளாகவும் தோன்றின. வெயிலில் தகிக்கப்பட்டவன், நிழலும் நீரும் எதிர்பார்ப்பது போல், நோய்வாய்ப்பட்டவன், மருத்துவத்தை வேண்டியிருப்பதுபோல் எனக்குத் தேவையாயிருந்தவை இந்தச் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பவைதாம்.

சொந்த நிலமும் இல்லாத, கல்வியின் அவசியமும் அறியாத விவசாயக் குடிமகனாகப் பிறந்தபின் கூலிசெய்வது தவிர வேறு என்ன செய்ய முடியும் ? கூலிக்காரன் இனத்தானாயிருப்பினும் நிலச் சொந்தக்காரன் சமத்துவம் தருவானா? ஆங்கிலத்தில் தன் கையெழுத்தை மட்டும் போடக் கற்றுக்கொண்டவன், சாவடியில் மண்ணில் தமிழ் எழுத்துகளை எழுதி மூன்றாம் வகுப்புடன் படிப்பு முடித்து கொண்ட என்னைச் சகோதரனாகத்தான் பாவிப்பானா? எனவே நான், சுதந்திரனாக வாழவே முடியவில்லை.

சமத்துவம், சகோதரத்வம், சுதந்திரம் இம்மூன்றும் உறையுளும், உடையும், உணவும் போன்று மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் இன்றியமையாததல்லவா? எனினும் இந்த நாட்டில் என்னைப் போன்ற அடிமட்டத்தில் மாட்டிக் கொண்டுள்ள எவருக்குமே இவைகள் கிடைக்கவில்லை.

இந்த நாட்டில் இம்மூன்றும் எப்போதுமே இருந்ததில்லையா? லட்சோப லட்சம் ஆண்டுகளாக எனக்குமுன் வாழ்ந்த ஏழை மக்களனைவரும் இவைகளில்லாமலேதான் வாழ்ந்தனரா? என்று நான் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

நான் வசித்த ஊரில், ஒருநாள், கயல் முள்ளன்ன நரை முதிர்திரைகவுள் பயனில் மூப்பினையுடைய சிலர் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் கேட்கும் சமயம் எனக்குக் கிடைத்தது. இது எதிர்பாராமல் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு எனவே ஒர்ந்து கேட்டேன்.

அந்த வார்த்தைகள் முதலில் யாரோ, யாரிடமோ எந்தக் காலத்திலோ, எந்தச் சந்தர்ப்பச் சூழ்நிலையிலோ சொல்லப்பட்டு அது உண்மையென நம்பித் தெரிந்தவர் தெரியாதவர்களுக்குச் சொல்ல இவ்வாறே தொன்று தொட்டுப் பிறந்த மேனியாய் என் வாலிபகாலமான அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்வரை (இப்போது எனக்கு வயது 82) வழங்கி வந்தவைகள் அந்த அபூர்வமான - அர்த்தமற்ற வார்த்தைகள் தான் அவைகள்.

அவையாவன பிரம்மத்தின் சிரசிலிருந்து பிறந்தவன் பிராமணன்; பிரம்மத்தின் மார்பிலிருந்து பிறந்தவன் சத்திரியன்; பிரம்மத்தின் வயிற்றிலிருந்து பிறந்தவன் வைசியன் பிரம்மத்தின் தொடையிலிருந்து பிறந்தவன் சூத்திரன், என்பன.

இது வருணாசிரம தருமமாம். பிரம்மத்தையறிந்து பிராமன னானவன், புண்ணிய பாரத தேசத்தில் பிறந்து வாழும் நமக்குக்குக் கருணை கூர்ந்து கண்டறிந்து கூறிய மகத்தான கொடை இதுதான்.

உழவனாகப் பிறந்த நான் இப்போது சூத்திரனானேன் எனக்கு இனி சமத்துவம், சகோதரத்வம், சுதந்திரம் என்பவை விலக்கப்பட்டவையாயின.

ஏன் நான் சூத்திரனானேன்? நான் இதற்கு முன்னெடுத்த பிறவியில் செய்த கர்மத்தின் பயனாக இந்தச் சூத்திரப் பிறவி கிடைத்திருக்கிறது. எப்படி இருக்கிறது பாருங்கள் நமது பாரத சமுதாயம். போன வழித்தடங்கள், நீதி நியமங்கள்.

இந்தச் சுயநலச் சூழ்ச்சிக்காரனின் கையில் அந்தக் காலத்து அரசர்கள் வெறும் பொம்மைகள்தான். வைசியர்கள், அரசன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டவர்கள், திம்மி குத்தினாலும் சரி; பொம்மி குத்தினாலும் சரி: அரிசியானால் போதும் என்ற பழமொழிப்படி லாபம் ஒன்றே வைசியர்களுக்கு வேண்டியது. அது அவர்களுக்கு அன்றும் கிடைத்தது இன்றும் கிடைத்து வருகிறது.

நிலச்சுவான்தாரர்கள் என்பவர்கள் சூத்திரர்கள். கொஞ்சமும் நிலமில்லாதவர்கள் விவசாயக் கூலிகள், விவசாயப் பண்ணையாட்கள். நிரந்தரமான உழைப்பு, நிரந்தரமான தனி உப்பு மட்டும் இட்ட கூழ் - கஞ்சிதான் இவர்களுக்கு கிடைத்தபாக்கியம். வேறு எதாவது கிடைத்திருந்தால் அது வசவும், அடிகளும்தான்.

சரித்திரப்புரட்டர்கள், மனசாட்சிப் புரட்டர்கள், தத்துவ மறிந்தும், தருமமறிந்தும் தடம்புரள வைத்து நாட்டை ஆயிரம் ஆண்டுகள் மாற்றார்களுக்கு அடிமையாக்கிவைத்து, ஐம்பது ஆண்டு போராடி நாட்டை மீட்சிசெய்த இன்றும், இந்த விஞ்ஞான யுகத்திலும் கூட நம்மை மீளவிடாது கல்லுருவங்களை வணங்க வைத்துக்கொண்டு சுகமாகக் காலம் தள்ளிவிடலாமென்று கருதுகிறார்களென்றால், இவர்களை நாம் என்னவென்று கூறுவது? முதலை களென்றா? அல்லது கடலில் வாழும் ஐடோபஸ்சுகளென்றா?

"சமத்வமற்ற நாடு சக்தியற்றுப் போம்; சகோதரத்வ மற்ற நாடு சாந்தியற்றுப்போம்; சுதந்திர மற்ற நாடும் சுடரொளி இழந்து சுடுகாடாயிடும் என்பதை நாம் இன்னும உணர்ந்து கொள்ளாது ஊமைகளாயிருக்கலாமா? இருக்க முடியுமா?

இந்தச் சூழ்ச்சிக்காரர்கள், தமிழ்நாட்டில் வந்து தங்காததற்கு முன் சமத்துவம் சகோதரத்வம், சுதந்திரம், அத்துடன் அகிம்சையும் இதே இந்தக் கொங்கு நாட்டில் குடியிருந்தன, என்று புறநானுறு புகல்கிறது.

கொங்குநாட்டை இருபத்தினான்கு கூறுகள் செய்து ஆட்சிசெய்த குறுநில மன்னர்களில் ஒருவன் ஆறைக்கோன் அவனாண்ட பகுதி. ஆறைநாடு என்று இன்னும் பெயர் வழங்கி வருகிறது. அது மேற்கு மலைத்தொடர்களுக்குக் கிழக்கும், நொய்யல் நதிக்கு வடக்கும், பவானியாற்றுக்குத் தெற்கும், காவிரிக்கு மேற்கும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. மலையும், மலைசார்ந்து நாடும் குறிஞ்சி நிலமாதலால் குறிச்சி என ஊர்ப் பெயர் வழங்கிற்று. அந்த ஊரின் பெயர் வேளான்குறிச்சி எனப்பட்டது. அவனைக் குறமகள் இளவெயினி எனும் பெண்பாற் புலவர் தம் பாடலில் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

தனக்குச் சேர்ந்தவர்கள் ஒரு தவறு செய்தால் உடனே பொள்ளெனப் புறம்வேராது மறந்து மன்னித்தல்; தன் குடிமக்களில் யாரேனும் ஒருவர் சிரமசீவியாக இருப்பதறிந்தால், உடனே வெட்கமடைந்தவனாய்க் காலந்தாழ்த்தாது அவனது குறையைக் களைந்து நிறைவுறச் செய்தல்; தன்படைக்குத் தோல்வியென்ற பழிவராது நடத்திச் சென்று வீரம் தோற்றுவித்துப் போரில் வென்று வருதல்; அரசர் கூடியுள்ள அவையிலும் கூனிக் குறுகாது கம்பீரமாக நிமிர்ந்து வீற்றிருத்தல் என முறையே அகிம்சை, சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம், இருந்ததாக முதல்வரிகள் குறிப்பிடுகின்றன இதுதவிர, இந்த ஆரிய வருணாசிரம தருமத்தை ஒத்துக்கொள்ள திருமூலர் ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் என்று அவர்களின் கோட்பாடு மீது சுட்டிக் காட்டுகிறார்.

திருவள்ளுவரும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப் பொவ்வாச் செய்தொழில் வேற்றுமையால், என்று சாட்டையடி கொடுக்கிறார்.

ஆனால், இவ்வளவும் விருதாவாகத் தமிழ் மக்கள் தமிழறியாது அவர்கள் வலையில் பட்டு வாழ்வும் குன்றி இன்றுகாறும் வாடி வழியறியாது வதைபடுகின்றனர். அவர்களின் புனிதப் பொய் புவியை ஆள்வதாயுள்ளது.