புல்லின் இதழ்கள்/நாங்கள் ஒரே ஜாதி
வழக்கமாக ஹரி அடுக்களையில் வந்து காபி குடிப்பான். இன்று அது அவன் இருக்கிற இடத்தை தேடி வந்தது. குருநாதர் எப்போது வருகிறார், எந்த வண்டியில் வருகிறார் என்ற எதையும் திட்டமாகத் தெரிந்து கொள்ள முடியாமல், அவன் மனம் குழம்பியது. பிடில் பஞ்சு அண்ணா அது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
ஹரி முதல் நாளைப் போலவே, எட்டரை மணி வண்டிக்குச் சென்று பார்த்து, ஏமாற்றத்துடன் திரும்பினான்.
“இனி, பதினொன்றரை மணி வண்டிக்கும் போய் அலைய வேண்டாம் ஹரி” என்று லட்சுமியம்மாள் கூறி விட்டாள்.
ஆனால், அம்மா சொன்ன வார்த்தையைக் கேட்டு ‘அதுதான் சரி’ என்று ஹரி இருந்து விடப் போகிறானா, அல்லது ‘ஸ்டேஷனுக்குப் போகிறானா’ என்பது பற்றிச் சுசீலாவின் ஆர்வம் மிகுந்தது. அவன் அப்படி ஸ்டேஷனுக்குப் போகாமலிருந்தால், நல்ல ‘டோஸ்’ கொடுக்க வேண்டும் என்று எண்ணினாள்.
ஹரி கொல்லைப் பக்கம் இருந்தான். நாணா மாமாவின் பூஜை முடிய ஒன்பதரை மணி ஆயிற்று. உடனே தயாராக இருந்த ரவாக் கஞ்சியை ரசித்து, சற்று அளவுக்கு மீறிச் சாப்பிட்டு விட்டதனால், அவருக்கு பசி எடுக்க நேரமாயிற்று.
அவர் சாப்பிடுமுன் ஹரிக்குப் போட முடியாது. ஹரியும் அதைப் புரிந்து கொண்டு, ஸ்டேஷனுக்குச் சென்று விட்டான். ஆனால், ‘ஐயா வரவில்லை’ என்பதை அவன் யாரிடமும் சொல்லவில்லை.
சரியாக ஒரு மணிக்கு எல்லாருடைய சாப்பாட்டுக் கடையும் முடிந்தது. நாணா மாமா, சுசீலாவின் ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஹரி தட்டை எடுத்துக் கொண்டு, இடைகழியில் வந்து உட்கார்ந்தான். காயத்திரி தண்ணீர் கொண்டு வந்து வைத்தாள்.
லட்சுமியம்மாள் பரிமாறினாள். ஹரி சாப்பிட ஆரம்பிக்கு முன், வீட்டு வாசலில் புத்தம் புதிய கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து பாகவதர் இறங்குவதைக் கண்டதும், ஹரி அப்படியே எழுந்திருந்து வாசலுக்கு ஓடினான். வண்டியில் இரண்டு மூன்று பெரிய மனிதர்கள் உட்கார்ந்திருந்தாாகள.
மோட்டாரிலிருந்து தம்பூராவை ஹரி வாங்கி, உள்ளே கொண்டு போய் வைத்துத் திரும்பினான். பாகவதர் வண்டியில் இருந்தவர்களை உள்ளே வரும்படி வற்புறுத்தினார். அவர்கள் மிகவும் பணிவோடும், அன்போடும், “இன்னொரு சமயம் அவசியம் வருகிறோம்” என்று கூறி விடை பெற்றுக் கொண்டனர். அதற்குள், டிரைவர் கார் ‘டிக்கி’யில் இருந்த பாகவதரின் பெட்டி, படுக்கை, பழக் கூடை முதலியவற்றை எடுத்துத் திண்ணையில் வைத்தார். ஹரி அவற்றை எடுத்துக் கொண்டு உள்ளே போனான். பாகவதர் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டார்.
வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த பாகவதர், இடை கழியில் சாதம் பரிமாறிய தட்டு இருப்பதைக் கண்டார். அது யாருக்காக என்று அவருக்குப் புரியவில்லை. உள்ளேயிருந்து “சுப்பராமா, வா, உன்னைத்தான் நேற்றையிலிருந்து எதிர் பார்க்கிறேன்” என்ற நாணா மாமாவின் அழைப்பு வந்தது.
“நீ எப்போது வந்தாய்? வரப் போவதாக எழுதவே இல்லையே!!” என்று பாகவதர் ஆச்சரியத்துடன் கேட்டார்.
“அதைப் பற்றிச் சவகாசமாகச் சொல்லுகிறேன். பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. முதலில் நீ கால், கையை அலம்பிக் கொண்டு சாப்பிட உட்காரு. நல்ல வேளை, சமயத்துக்கு வந்தாய். ஐந்து நிமிஷம் போயிருந்தால், லக்ஷ்மி அந்தப் பையனுக்கு போட்டிருப்பாள். பிறகு, நீ மீதத்தைதான் சாப்பிட வேண்டியிருந்திருக்கும்” என்று. கூறியபடி அடுக்களைப் பக்கம் தம் குரலைத் திருப்பினார்.
பாகவதருக்கு ஒரு நிமிஷத்துக்குள் நாணாவின் வருகையினால், வீட்டில் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் அனைத்தும் நன்கு புரிந்து விட்டன. கையில் வெள்ளித் தட்டைக் கொண்டு வந்த லட்சுமியம்மாள், அதை வழக்கமாகக் கணவர் சாப்பிடுகிற இடத்தில் வைக்கப் போனாள். அதற்குள் பாகவதர் மனைவியை ஓர் அதட்டு அதட்டி, “அதை இங்கே கொண்டு வா” என்று தட்டைக் கையில் வாங்கிக் கொண்டு, இடைகழியில் போய் ஹரியினருகில் உட்கார்ந்து, “ஊம், பரிமாறு” என்று சற்றுக் கடுமையாக உத்தரவிட்டார். லட்சுமியம்மாளுக்கு பயத்தினால் உடம்பு நடுங்கியது.
‘வீட்டுக்குள் நுழைந்ததும், நுழையாததுமாகக் கணவருக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்து, அவரது கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டோமே; எல்லாம் இந்த அண்ணாவால் வந்த வினை அல்லவா?’ என்று லட்சுமியம்மாளின் மனம் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் அதட்டிய பாகவதரின் உரத்த குரல் அவளது சுய உணர்வைத் தட்டி எழுப்பியது.
“ஏன் மரம் மாதிரி அப்படியே நிற்கிறாய்? சாப்பாடு இல்லையா?”
லட்சுமியம்மாளுக்குத் தாளவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. “எல்லாம் இருக்கிறது; உள்ளே வந்து உட்காருங்கள். இரண்டு பேருக்கும் போடுகிறேன்.”
“இந்தப் புத்தி இதற்கு முன்னே உனக்கு எங்கே போயிருந்தது? இந்த வீட்டில் நான் இருந்தால் ஒன்று, இல்லாவிட்டால் ஒன்றா நடக்கிறது! சே! இந்த இரண்டு நாளாக ஹரிக்கு இங்கே வைத்துத்தானே சாதம் போட்டீர்கள்? இப்பொழுது மட்டும் என்ன வந்து விட்டது? இனிமேல் எனக்கும் சாப்பாடு இங்கேதான். இது சங்கீதக்காரன் வீடு. நாங்கள் எல்லாம் ஒரே ஜாதி; ஒரே இனம். எங்களுக்குள்ளே பேதம் இல்லை. சாதத்தைப் போடு” யாருக்கோ விளக்குவது போல் பாகவதர் ஒரே மூச்சில் பேசினார். லட்சுமியம்மாளுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது.
“போகட்டும். தெரியாமல் புத்தியில்லாமல் நடந்து கொண்டேன். பசியோடு வந்திருக்கிறீர்கள். நேரமாகி விட்டது. வாருங்கள், இரண்டு பேருக்கும் உள்ளேயே போடுகிறேன்.”
“ஒன்றும் வேண்டாம். இப்போது நான் சொல்லுகிறபடி நீ கேட்கப் போகிறாயா அல்லது நாங்கள் இரண்டு பேருமே எழுந்திருந்து கிளப்புக்குப் போகவா?”
பாகவதரின் குரலில் கடுமை தெறித்தது. அரை நாழிகையாக வீடு படுகிற அமளியை நாணா மாமா பார்த்துக் கொண்டே இருந்தார். அதற்கு மேலும் அவரால் மௌனமாக இருக்க முடியவில்லை. மேலும் தம் பொருட்டுத் தங்கை பேச்சு வாங்குவது அவருக்குத் தாளவில்லை. “சுப்பராமா, இப்போ என்ன வந்து விட்டது? பெரிசா இவ்வளவு பாடு படுத்திறியே! ஹோட்டலுக்குப் போக உனக்கு மட்டுந்தான் தெரியுமோ? நான்தான் இந்தப் பழக்கத்தை மாத்தினேன். வீணா லட்சுமியைக் கோவிச்சுச்காதே, யாரோ குலம், கோத்திரம் தெரியாததுகளை எல்லாம் சமைக்கிற இடத்தில் வைத்துக் கொண்டு சமபோஜனந்தான் பண்ணுவேன்னா, தாராளமாய்ப் பண்ணிக்கோயேன். அப்புறம் எங்களுக்கெல்லாம் இங்கே வர வேண்டிய வேலை இல்லை” என்றார்.
“அது உங்கள் இஷ்டம்; நான் சொல்லத் தயாராக இல்லை. அதற்காக என்னை, என் வீட்டிலுள்ள பழக்கத்தை, நான் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், நீ இப்பொழுது பேசியது போல்—இவன் யாரோ எவனோ அல்ல; இவன்தான் என் வித்தைக்கு - நான் அப்யசிக்கிற, நான் கற்றுக் கொடுக்கிற சங்கீதத்துக்கு வாரிசு. எல்லாச் சிஷ்யர்களையும் போல இவனாக என்னைத் தேடி வரவில்லை; புதையலைப் போல, நான்தான் இவனைத் தேடிக் கண்டு பிடித்து வைத்திருக்கிறேன். இந்த வீட்டில் எனக்கு என்ன மதிப்பும், செல்வாக்கும் உண்டோ அது அவனுக்கும் உண்டு. அவனை அலட்சியப் படுத்துகிறவர்கள், என்னையும், என் வித்தையையும் அலட்சியப்படுத்துவதைப் போலத்தான்” என்று பாகவதர் கூறிக் கொண்டு வரும் போதே, நாணா மாமா கோபமாக இடைமறித்துப் பேசினார்.
“போரும்டா உன் பேச்சும் லட்சணமும். அதுதான் முன்னமே ஒரு தடவை சொல்லிட்டியே; இது சங்கீதக்காரன் வீடு; இங்கே ஜாதி இல்லை, மதமில்லைன்னு. திரும்பத் திரும்ப வேறே சொல்லணுமா? சங்கீதக்காரன்னாலே என்னமோ சொல்லுவா! அதுவும் உச்சஸ்தானத்துக்கு வந்துட்டான்னா, அவனைக் கையாலேயே பிடிக்க முடியாது. இதெல்லாம் நீயாகப் பேசற பேச்சில்லை; இந்த வித்தைக்குள்ள கர்வம்; சாபக்கேடு. ஆரம்பத்திலேயே இப்ப இருக்கிற புத்தி எனக்கு இல்லை. இருந்திருந்தா ஒரு கரண்டி ஆபீஸ்காரன் கையிலே என் தங்கையைக் கொடுத்திருப்பேன்.”
“அண்ணா, நீ சும்மா இருக்கப் போகிறாயா இல்லையா? நான் ஆரம்பத்திலேயே படித்துப் படித்துச் சொன்னேன். உன் பிடிவாதத்தினாலேதான் இவ்வளவு அமர்க்களமும் ஏற்பட்டது. இந்த வீட்டுப் பழக்கம் இதுதான். உனக்கு இஷ்டமிருந்தால் இரு; இல்லாவிட்டால், புறப்பட்டுப் போய் விடு.”
“லட்சுமி, இதை இன்னும் நீ சொல்லித் தெரிஞ்சுக்கிற அளவுக்கு இந்த நாராயணன் முட்டாள் அல்ல. இனி மேல் பட்டினி கிடந்தாலும் கிடப்பேன்; இந்த அநாசார வீட்டிலே கையை நனைக்க மாட்டேன். ராத்திரி வண்டிக்கே நான் புறப்பட்டுப் போயிடறேன். என்னமோ, நான் சாளக்ராம பூஜை பண்றது வீண் போகல்லை; அந்த வேதபுரீசுவரர்தான் தக்க சமயத்திலே காப்பாத்தினார். நல்ல வேளை! உனக்குத் துணையா, என் பிள்ளையையும் வேறே, இந்தக் கும்பல்லே கொண்டு வந்து தள்ளாமல் பிழைச்சேனே. பாவம்! ராமபத்திரன்; அவன் வேதவித்து. இதெல்லாம் காதாலே கேட்டாலே பிராணனை விட்டுடுவான். இந்தச் சங்கீதக்காரன் குடும்ப சகவாசமே வேண்டாம். இனி மேல் நடவா நடை நடந்தாலும், உன் பெண்ணுக்கு என் பிள்ளை கிடையாது. சுப்பராமா, இது நிச்சயம், நிச்சயம்.”
“நிச்சயம் என்ன நாராயணா? நீ தயங்காமல் ராமபத்திரனைச் சுசீலாவுக்குக் கொடுக்க மாட்டேன் என்று சத்தியமே கூடப் பண்ணி விட்டுப் போகலாம். அவள் உன் பிள்ளையை நம்பிப் பிறக்கவில்லை. நீ மறுப்பதற்காக, நான் கவலைப்படப் போவதும் இல்லை.”
“நீ எதுக்குத்தான் சுப்பராமா கவலைப்பட்டிருக்கே, இப்போ இதுக்குக் கவலைப்படறதுக்கு?”
“ஆமாம். கவலையைப் போக்குகிற வித்தைதானே சங்கீதம்? அதை ஆராதிக்கிறவனே கவலைப் பட்டுக் கொண்டு கிடந்தால், அவன் மற்றவர்களுடைய கவலையைப் போக்குகிறது ஏது?”
“அதுக்குத்தான் நான் ஒரு யோசனை சொல்லறேன். வித்தையைக் கத்துக் கொடுத்தே; வீட்டிலே இடம் கொடுத்தே; அவனுக்கே ஒரு வழியாப் பெண்ணையும் கொடுத்துடு. நீங்கள்ளாந்தான் ஒரே சங்கீத ஜாதிக்காராளாச்சே, நிம்மதியாப் போயிடும்.”
பேசிக் கொண்டே நாணா மாமா, கித்தான் பைக்குள் தம்முடைய துணிமணிகளைத் திணித்துக் கொண்டிருந்தார். லட்சுமியம்மாளுக்குக் கோபம் தாங்கவில்லை. அதற்கு மேலும், அவளால் அடக்கிக் கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை.
“அண்ணா, இப்படிக் கலகம் பண்ணத்தான் இத்தனை வருஷம் கழித்துப் புறப்பட்டு வந்தாய் என்றால், அதற்கு நீ வாரமல் ஊரிலேயே இருந்திருக்கலாம். ஊரிலிருந்து வந்தவரை ஒரு வாய்ச் சாதம் சாப்பிட விடாமல், நீயும் சரிக்குச் சரி வாயாடறது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. இனி மேலும், ஒரு வார்த்தை நீ அவாளைப் பற்றிப் பேசினால், பிறகு நான் பொல்லாதவாளய் விடுவேன்” என்றாள் லட்சுமியம்மாள் துக்கம் தாளாமல்.
உடனே நாணா மாமா, “நீ பின்னே வேறே எப்படிப் பேசுவாய்? நீ எனக்காகப் பரிஞ்சு பேசுவாய்னு நான் துளிக் கூட எதிர்பார்க்கவில்லை! நீ ஒரு அசடு, மக்குன்னு எனக்கு இப்பவா தெரியும்? இல்லேன்னா பவித்திரமான சங்கீதத்து மேலே பழியைப் போட்டுட்டு, இப்படி நீசத்தனமான காரியங்களிலே எல்லாம் பிரவர்த்திக்க உன் புருஷனுக்குப் புத்தி போகுமா? தைரியந்தான் வருமா? உள்ளூரிலே ஒரு குடும்பம், வெளியூரிலே ஒரு குடும்பம். சே! சங்கீதம் மட்டும் ஒசத்தியாய் இருந்தாப் போதாது. சரித்திர சுத்தமும் வேணும். அதுதான் மனுஷனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு போகிறது. சங்கீதக்காரன்னா இப்படித்தான் இருக்கணும்னு விதி இல்லை. மகான்கள்ளாம் இந்த மண்ணிலே பிறக்கல்லியா; தியாகப்ரம்மமும், தீட்சிதரும், சாஸ்திரிகளும் நமக்கு வாழ்ந்து காட்டல்லியா? நாமதான் படிச்சுத் தெரிஞ்சுக்கலை. அவா போட்ட பிச்சையைச் சாப்பிட்டுப் பிழைக்கிறவனுக்கு, அவாளுக்கு இல்லாத இத்தனை கர்வமும், மமதையும் இருக்கலாமோ? உங்க அண்ணாவுக்கு இது பிழைப்பு இல்லைன்னாலும், சங்கீதத்தைப் பற்றி என்ன தெரியும்; வைதீகமும், வட்டிக் கடையுந்தானேன்னு அலட்சியமா நெனைச்சுடாதே. சாமகானம் தலைகீழாப் பாடம் பண்ணிருக்கேன்.”
“போதும் அண்ணா உன் பெருமை எல்லாம். உன்னைப் பற்றி நான் ஒன்றும் குறைவாக நினைத்து விடவில்லை. வார்த்தையை முடிக்கு முன்பே துயரம் குரலில் கரகரக்க லட்சுமியம்மாள் உள்ளே சென்று விட்டாள்.
மாமா வாசற்படியைத் தாண்டுகிற வரையில் சுசீலா மாடியிலிருந்து வெளியே தலையைக் காட்டவில்லை. அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சி. எப்படியோ தன் கல்யாணப் பேச்சு ஆரம்பிக்காமலே முடிந்து போனதில் அவளுக்கு நிம்மதி. காயத்திரி கலங்கிப் போய், சமையற்கட்டிலிருந்து வெளியே வரவில்லை; அப்பா வந்ததும், இப்படி ஒரு சண்டை மூண்டு, மனஸ்தாபம் காத்திருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
‘போய் வருகிறேன்’ என்று கூடச் சொல்லிக் கொள்எாமல், அண்ணா புறப்பட்டுப் போய் விட்டான். இத்தனை வருஷங்களுக்குப் பிறகு வந்த அவனைக் கணவனும், மனைவியுமாக வாயார உபசரித்துப் பத்து நாள் வைத்துக் கொண்டு அனுப்பக் கொடுத்து வைக்கவில்லை. அண்ணாவும் அப்படியெல்லாம் ஒரு வீட்டில் படியேறிப் போய் உட்கார்ந்து கொண்டு விடுகிறவனல்ல. ஆனால், அவனுக்கு எவ்வளவுதான் சொத்து இருந்தாலும், இந்த முன்கோபம் ஆகாது. பாவம்! ராத்திரி எட்டு மணிக்குத்தான் அவனுக்கு வண்டி.. அது வரைக்குங்கூட இங்கே இல்லாமற் போய் விட்டான். காபிக்கு என்ன பண்ணுகிறானோ! ராத்திரிச் சாப்பாட்டுக்கு என்ன பண்ணப் போகிறானோ; ஆசையோடு வந்தவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாற் போல் தள்ளியாகி விட்டது.
புடைவைத் தலைப்பை வாயில் திணித்துக் கொண்டு, அழுகுரல் தன் கணவர் காதுக்கு எட்டி விடக் கூடாதே என்று, சகோதர பாசம் தாளாமல், உள்ளத்துக்குள்ளேயே குலுங்கக் குலுங்க அழுதாள் லட்சுமியம்மாள்.
ஹரியின் மன வேதனையைப் பற்றி வர்ணிக்கவே இயலாது. அவன் புழுங்கி செத்துக் கொண்டிருந்தான். தனக்காக வீட்டில் உறவினர்களுக்குள் ஏற்பட்ட மனக் கசப்பை அவனால் தாங்க முடியவில்லை; அதே சமயம், தம் உறவினரையும் மதியாமல், அவனுக்கு அவ்வளவு கௌரவம் கொடுத்து ஆதரித்துப் பேசிய குருநாதருடைய அன்பை எண்ணிப் பார்க்கையில், அவரது பாசச் சுமையைத் தாளாமல், அவனது இதயமே வெடித்துச் சிதறி விடும் போலிருந்தது.
‘ஈசுவரா, இத்தனை அன்புக்கும், கருணைக்கும் நான் பட்டிருக்கும் கடனை, இந்தக் குடும்பத்துக்கு எத்தனை ஜன்மங்களில்தான் ஈடு செய்து தீர்க்கப் போகிறேன்? இந்த உடல் - அவர்கள் இட்ட சோற்றால் வளர்ந்து ஆளாகியது; நான் பெற்ற அறிவு - அவர்கள் இட்ட பிச்சை; அவர்கள் மனமுவந்து அளித்த ஆசிகள். குருநாதா, உங்கள் அன்பைத் தாங்க என்னால் முடியவில்லை. என் இதயத்துக்கு வலுவைக் கொடுத்தருளுங்கள்’ என்று காவிரி மண்டபத்தில் உட்கார்ந்து ஹரி, சிறு குழந்தையைப் போல் விக்கி, விக்கி அழுதான். அப்பொழுது தண்ணீர் எடுக்க வந்த சுசீலா, இடுப்பில் குடத்து நீருடன் அவனையே பார்த்தபடி நின்றாள்.