உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/நினைவுச் சுழல்

விக்கிமூலம் இலிருந்து
3. நினைவுச் சுழல்

ன்பு என்றால் என்னவென்று ஹரிக்குத் தெரியாது. அதனால் அடையும் இன்பத்தையும் அவன் சுவைத்ததில்லை. துன்பத்தின் துணையோடு, கடவுளின் அருளோடு மட்டுமே உலகில் வந்தவன் அவன்.

பாகவதரிடம் வருவதற்கு முன்பு அவனுடைய பூர்வாசிரமப் பெயர் கண்ணப்பன். காஸ் விளக்குச் சுமக்கும் பணி புரியும் பெரியசாமியின் மூத்த மனைவிக்குத் தலைமகனாகப் பிறந்தவன். கொள்ளிடக் கரையில் உள்ள அரசூர்தான் அவன் ஊர். அங்கேதான் அவன் குடும்பம் இருக்கிறது. வயதைப் பார்த்து அவனைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்கா விட்டாலும், நிலைமையைப் பார்த்துக் குடும்பப் பாரத்தை அவன் தலை மேல் சுமத்தப் பெரியசாமி தவறவில்லை. மகனை ஒரு மளிகைக் கடையில் கொண்டு போய்ச் சேர்த்தான். பையன் ஒழுங்காக வேலை செய்யவில்லை; பக்கத்து ஹோட்டலில் அடிக்கடி கிராம போன் பாட்டுக் கேட்கப் போய் விடுகிறான் என்று மளிகைக் கடைக்காரர் அவனைத் துரத்தி விட்டார்.

பிறகு கண்ணப்பனை அந்த ஹோட்டலிலேயே எடுபிடி வேலைக்கு விட்டான். இடுப்பு முறிந்ததே தவிரப் பாட்டுக் கேட்க முடியவில்லை; அங்கிருந்து அவனாகவே ஓடிப் போய் விட்டான். அதன் பிறகுதான் அவன் தந்தை அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து, “உருப்படாத பயலே, உன்னை முன்னுக்குக் கொண்டு வர நெனச்சா உன் தலையிலே இதுதான் எழுதியிருக்கும் போலிருக்கு; இந்தா, பிடி!” என்று சொல்லி, பேபி பெட்ரோமாக்ஸை தூக்கித் தலையில் கட்டித் தன்னுடனேயே தொழிலுக்குத் துணையாக வைத்துக் கொண்டான்.

வயது ஜம்பதுக்கு மேலாகியும், பெரியசாமிக்குக் ‘கியாஸ் லைட்’ தூக்கும் உத்தியோகந்தான். கல்யாணம், ஊர்வலம், உற்சவங்கள், பொதுக் கூட்டங்கள் முதலிய அனைத்துக்கும் அவ்வூரில் அவன்தான் ஒளி பரப்பும் உத்தியோகஸ்தன்; அதாவது அந்த ஊரிலேயே எம். ஜி. எல் (மாயாண்டி கியாஸ் லைட்) கம்பெனிதான் பெரிய லைட் கம்பெனி. அதில் பணி புரியும் இருபது, முப்பது வாடகை விளக்குகள் பெரியசாமியின் தலைமையில்தான் செல்லும்,

அந்தக் கம்பெனி உரிமையாளர் மாயாண்டிக்கு பெரியசாமியிடம் அன்பு உண்டு. அவன் அந்தக் கடைக்கு வந்த பிறகுதான் நாலு விளக்குகளுடன் ஆரம்பித்த தன் தொழில் இத்தனை பெரியதாக வளர்ந்தது என்பது மாயாண்டியின் நம்பிக்கை. அதனால், அவனுக்குப் பெரியசாமியிடம் ஒரு பிடிப்பு, பிரியம்; அதனால், அவனுடைய பிள்ளை கண்ணப்பனையும் வேலைக்கு எடுத்துக் கொண்டு, சம்பளமும் போட்டுக் கொடுத்தான். அதில் பெரியசாமிக்கு உள்ளூற மகிழ்ச்சி.

கண்ணப்பனுக்கு நாளடைவில் அந்த வேலை பிடித்துப் போய் விட்டது. திருமணம், கோயில் உற்சவம் முதலிய ஊர்வலங்களுக்கெல்லாம் பேபி பெட்ரோமாக்ஸை மகன் கையில் கொடுத்துத் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தான் பெரியசாமி. அப்போது கண்ணப்பனின் கவனமெல்லாம், ஊர்வலத்தில் கச்சேரி பண்ணும் நாகசுர வித்துவானின் இசையிலேயே இருக்கும். அவன் சிந்தை அதிலேயே சென்று லயித்து விடும். தன் தலையில் இருக்கும் பெட்ரோமாக்ஸின் பாரங்கூட அவனுக்குப் பெரிதாகத் தோன்றாது.

இப்படியே நாளடைவில் பெரிய பெரிய திருமண ஊர்வலங்களிலும், கோயில் சுவாமி புறப்பாடுகளிலும் கண்ணப்பன் மிகவும் மகிழ்ச்சியுடன் விளக்கும், தலையுமாகக் காட்சியளித்தான். அநுபவப்பட்ட மற்ற விளக்குக்காரர்கள் தூங்கி வழிந்தாலும், கண்ணப்பன் இமை கொட்டாமல், ஆர்வத்துடன் கசசேரிக்கு மத்தியில் கடமையைச் செய்து கொண்டிருப்பான். அவன் மீது எவ்வகைப் புகாரும் வந்ததில்லை. மகனுடைய தொழில் ஆர்வத்தைக் கண்டு பெரியசாமி பூரித்துப் போனான். ‘இந்த வயதில் இவ்வளவு பொறுப்போடு தொழில் செய்கிற மகன், நாளைக்கு நிச்சயம் முதலாளி மாயாண்டியைப் போல் சொந்தக் கடை வைத்து நடத்தக் கூடிய தகுதியை அடைந்தே தீருவான்’ என்றுதான் அவன் கனவு கண்டான். ஆனால் பாவம்! அவனுக்கு எங்கே கண்ணப்பனின் உண்மை மனநிலை தெரியும்? கண்ணுறங்காமல் மகன் விழித்திருப்பது, விளக்குக்காக மட்டும் அல்ல, அதை விட முக்கியமாகக் கச்சேரிகளைக் கேட்டு ரசிப்பதற்காகத்தான் என்கிற இரகசியம் பெரியசாமிக்கு எப்படித் தெரியப் போகிறது?

தன் சம்பளத்தோடு, மகனுடைய சம்பளத்தையும் சேர்த்து மாதம் தவறாமல் இளைய பெண்டாட்டியிடம் கொண்டு போய்க் கொடுக்கும் போது, பெரியசாமிக்கு மகிழ்சி தாங்க முடியாது. மூத்த சம்சாரத்தின் பிள்ளை சோடை அல்ல என்பதைத் திருச்சிராப்பள்ளிக்காரிக்கு எடுத்துக் காட்ட முடிந்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. ஆனால், அதை முனியம்மா கவனித்ததாகவே காட்டிக் கொள்ள மாட்டாள். மாறாக, “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே சின்னப் பயல், சின்னப்பயல்னு சொல்லிக்கிட்டு அரைச் சம்பளமும், கால் சம்பளமும் வாங்கிக்கிட்டு வரப் போறே? உலக்கை மாதிரி இருக்கிறான். புள்ளை தலையிலே பெரிய விளக்கைத் தூக்கி வச்சாத் தேஞ்சா போயிடுவான்? முழுச் சம்பளம் கொடுக்க மாட்டானா உன் முதலாளி?” என்று காய்ந்து விழுவாள்.

பெரியசாமியின் செவிக்குள் புகுந்த அந்தச் சொற்கள், அவன் பொக்கையான இதயத்தில் புகுந்து வேதனையையும் துக்கத்தையும் ஏற்படுத்தின; என்றாலும், முனியம்மாவிடம் எதிர்த்துப் பேசி, அவள் மனத்தைப் புண்படுத்த அவனுக்கு விருப்பம் இல்லை. மூத்த மனைவி காத்தாயி சாகிற போது, தன் ஒரே மகன் கண்ணப்பனைப் புருஷன் தலையில் கட்டி விட்டு இறந்தாள். பிறகு தன் வயதையும், வருமானத்தையும் பொருட்படுத்தாமல் இரண்டாந் தாரமாகத் தனக்கு வாழ்க்கைப்பட ஒப்புக் கொண்ட இளம் பெண் முனியம்மாவிடம் பெரியசாமிக்கு அளவுக்கு மீறிய மதிப்பு ஏற்பட்டது என்பதோடு, காதலும் இருந்தது.

ஆயினும், அதற்காக மகனைத் துன்புறுத்தவோ, வாட்டி வதைக்கவோ அவனுக்கு விருப்பம் இல்லை. ஆனால், கண்ணப்பன் தன் பேச்சை லட்சியம் செய்வதில்லை என்று முனியம்மா சமயம் வாய்த்த போதெல்லாம் கணவனிடம் கூறிக் கண்ணை கசக்கிக் கொண்டும் இருந்தாள். பெரியசாமியின் மனம் ஆசைக்கும், பாசத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் தவித்தது. இந்த நிலையில்தான் ஒரு விபரீதம் நிகழ்ந்தது.

அரசூரை அடுத்த கிராமத்தில் பூங்குளம் மைனரின் கல்யாணம் நடந்தது. பெரிய கல்யாணம்; அந்தக் காலத்து ஐந்து நாள் கல்யாணம். சுற்று வட்டாரத்திலுள்ள அத்தனை கிராமத்து மக்களும், ஐந்து நாளும் அங்கேதான் முகாம் இட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பந்தலில் வைதிகக் காரியங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும்; இன்னொரு பக்கம் சங்கீதக் கச்சேரி இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கும். காரணம், கல்யாண வீட்டுக்காரரான பூங்குளம் மைனர் பெரிய பணக்காரர் என்பதோடு, சிறந்த சங்கீத ரசிகராகவும், எல்லாச் சங்கீத வித்துவான்களுக்கும் மிகவும் வேண்டியவராகவும் இருந்தார். அதனால், அந்தக் கல்யாணத்தில் சங்கீதக் கச்சேரிக்குப் பிராதான்யம் இருந்தது. வந்திருந்த வித்துவான்கள் அனைவருக்கும் சன்மானங்களை வாரி வாரி வழங்கினார் மைனர். கச்சேரி நடக்கிற இடத்திலேயே சாப்பாட்டையும் மறந்து பழி கிடந்தான் கண்ணப்பன். கடைசி நாள் ஊர்வலத்துக்குப் பல்லக்கு ஜோடிக்கக் கும்பகோணத்திலிருந்து வண்டி நிறையப் பூவும், முத்தும், மணியுமாக வந்து இறங்கின. ஓதுவார்களும், பல்லக்கு அலங்கரிக்கும் கலைஞர்களும் காலையிலிருந்து இரவு வரையில் தங்கள் கைவண்ணம் முழுவதையும் காட்டி அழகான பல்லக்கை ஜோடித்தார்கள்.

ஊர்வலத்துக்குப் பிரபல நாதசுர வித்துவான் ராஜரத்தினம் பிள்ளையின் மேளக் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. மைனருக்கும், ராஜரத்தினம் பிள்ளைக்கும் எத்தனை ஈடுபாடு, எவ்வளவு அந்நியோந்நியம் என்பதை நேரில் கண்ட அத்தனை வித்துவான்களும், ஊர்க்காரர்களும் வியந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மாலை நாலு மணிக்கு மைனர் அனுப்பிய காரில் வந்து இறங்கிய ராஜரத்தினம் பிள்ளையை, மைனர் அங்கே. இங்கே அசைய விடாமல் தம்முடனேயே இருத்தி வைத்துக் கொண்டார். தவுல் வித்துவான்களும், வாத்தியங்களும் இறங்கியிருந்த ஜாகைக்குக் குடம், குடமாகப் பசும்பால் காப்பியும், தட்டுத் தட்டாக நெய்யொழுகும் தித்திப்பும் காரமும் சென்றன. அங்கே மைனரும் சென்று அடிக்கடி கவனித்துக் கொண்டார்.

உடன் இருந்த பிள்ளை, “கல்யாண மாப்பிள்ளையாய் லட்சணமாய் நீர் பந்தலில் போய் உட்காருமையா; எங்களையெல்லாம் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்” என்று மைனரைக் கடிந்து கொண்டார்.

அன்றிரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஊர்வலம் புறப்பட்டது. பெரியசாமி ஊர்வலத்தில் தன் நிர்வாகத் திறமையை எல்லாம் உபயோகித்து மிகவும் பிரமாதமாக ஆட்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தான். ஆறடிக்கு ஒரு விளக்கு வீதம் இருமருங்கிலும் நிறையக் கியாஸ் விளக்குகள் சரம் கோத்தாற் போல் நின்று ஒளி வெள்ளத்தில் அந்தக் கிராமத்தையே மிதக்கச் செய்தன.

கல்யாணப் பந்தலிலும், சம்பந்திகளான மைனர் வீட்டார் தங்கியிருந்த பக்கத்து ஜாகையிலும் இருபது முப்பது விளக்குகளுக்கு மேல் வைத்திருந்தார்கள். அந்த விளக்குகளைக் கவனித்துக் கொண்டு, அங்கேயே இருக்கும்படி பெரியசாமி மகனிடம் கூறினான். கண்ணப்பனுக்கு இதைக் கேட்டதும் ‘திக்’கென்றது. “அப்பா, நானும் உன் கூட ஊர்வலத்துக்கு வரேன் அப்பா. நீ இங்கே இந்த வேலைக்கு வேறு யாரையாவது போடு” என்றான்.

மகன் இப்படிக் கூறக் காரணம் பல்லக்குப் பார்க்கும் ஆசை அல்ல; ஊர்வலத்தில் நாகசுரம் வாசிக்க வந்திருக்கும் பெரிய வித்துவானுடைய நாகசுரக் கச்சேரியைக் கேட்க வேண்டும்; விடிய விடியக் கேட்டு அந்த இன்னிசையை அநுபவிக்க வேண்டும் என்ற ஆர்வந்தான் என்பது பெரியசாமிக்கு எப்படித் தெரியும்?

“ஏலே, நீ அந்தக் கூட்டத்திலே வந்து மாட்டிக்கிட்டேயானா நசுங்கிப் போவே. செவனேன்னு நான் சொன்னது போலே இங்கேயே குந்தினாப்பிலே இருந்து, விளக்குகளை எல்லாம் கவனிச்சிக்கிட்டாப் போதும்” என்று கண்டிப்பான உத்தரவைப் போட்டு விட்டு நடந்தான.

சிறிது தூரம் சென்றதும், பின்னால் தொடர்ந்து வரும் காலடி ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த பெரியசாமிக்குத் தூக்கி வாரிப் போட்டது, பூனை போல நடந்து கண்ணப்பன் அவன் பின்னால் வந்து நின்று கொண்டிருந்தான்.

“ஏன் கழுதே, என் பின்னாலேயே வந்து நிக்கறே? என்ன வேணும்?”

“நான்தான் அப்பவே சொன்னேனே அப்பா எனக்கு நாயனம் கேக்கணும்.” கண்ணப்பன் தயங்கிக் கூறி வாய் மூடவில்லை; பெரியசாமி பாய்ந்து அவன் தலை மயிரைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, “உனக்கு இந்த உதைதான் கேக்குது!” என்று முகத்திலும், முதுகிலும் பளீர், பளீர் என்று நாலு அறை விட்டான்.

“மருவாதியாகக் கல்யாண வீட்டுக்கு ஓடு; இல்லாட்டி இங்கேயே குழியைத் தோண்டிப் புதைச்சுப் பிடுவேன்” என்று ஒரு குத்துக் கொடுத்தான். வழி முழுவதும் அழுது கொண்டே கண்ணப்பன் கல்யாண வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.