உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை

காற்றையும், அதில் இனிமையையும்; கடலையும், அதில் பொங்கி எழும் அலைகளையும்; விண்ணையும், அதில் வண்ண வண்ணக் கோலங்களையும்; தழலையும், அதற்கொரு வெம்மையையும் படைத்த கடவுள், புவியையும், அதில் அழகிய புல்லையும் படைத்தார்.

ஓடும் மிருகங்களையும், கூடும் பறவை இனங்களையும் படைத்தார். கைவண்ணம் மிளிர்ந்ததே அன்றி, அவர் உள்ளத்தில் கருத்தமைதி கூடவில்லை போலும்! பின்னர், மனிதனைப் படைத்தார். அவனை மற்ற உயிரினங்களினின்றும் வேறுபடுத்த எண்ணிப் பகுத்தறிந்து சிந்திக்கும் திறனோடு படைத்தார். அந்தச் சிந்திக்குந் திறனே, அவரது படைப்புத் தொழிலின் வெற்றியாகவும், படைக்கப்பட்டவனின் வீழ்ச்சியாகவும் அமைந்தது.

காலங்களின் கரங்களில் அவன் வீழ்ந்தும், எழுந்தும் படும் பாட்டைக் கண்டு படைத்தவர் ரசித்தார்; எண்ணங்களை உருவாக்கும் ஆற்றல் படைத்த மனிதன், அதே எண்ணங்களினால் உருவாவதை விட்டு, உருக் குலைவதைக் கண்டு திருவின் உள்ளத்தில் கருணை பிறந்தது. மனிதனை மீட்க இசையைப் புகட்டினார்.

அசைவிலிருந்து பிறக்கும் சொற்கள் இசையின் வடிவங்களாக மணக்க, அவன் குரலில் இனிமையைக் கூட்டினார். சொல்லெல்லாம் இசையின் வடிவங்களாக ஒலித்தன.

பிறக்கும் குழந்தையின் ‘குவா’ என்னும் முதற் குரல் முதல், ஆநிரைகளின் ‘ம்மே’ என்கிற அழைப்பு வரை, ஒலிகள் யாவும் இசையோடு இணைந்து முழங்கின. கலைகளில் சிறந்த இசையைப் படைத்த கர்த்தாவே, அந்தக் கலையில்-இசை இன்பத்தில் மயங்கித் திளைத்து, ஆனந்தக் கூத்தாடினார். ஆடுகிற நாயகனின் பாதத்தைக் கண்டு நன்றி மறவா மனிதன், நாவார, நெஞ்சார, இறையைப் பாடிப் பரவினான். உலகெலாம் அந்த இசை முழங்கிற்று.

அடி முடி அற்ற இறைவனைப் போல, அவன் அருளும் இசைக்கும், ஆதியும், அந்தமும் இல்லை. எங்கும் இசை பிறக்கலாம். நாதம் இல்லாத பொருள் ஏது? அதற்கு இடம், பொருள் ஏது? குப்பையிலே குருக்கத்திச் செடி முளைப்பதில்லையா? சிப்பியின் வயிற்றில் விலை மதிக்க முடியாத நல்முத்துக்கள் பிறப்பதில்லையா? சிப்பிக்கும், முத்துக்கும் என்ன சம்பந்தம்? அந்த உறவின் விசித்திரம்தானே சம்பந்தம்!

எப்படிப் புல்லையும், அதன் இதழ்களையும் பிரித்துக் காண்பது இயலாதோ, அப்படித்தான் கலையிலே தோய்ந்து விட்ட பின், அங்கே கலைதான் இருக்கும். கலைஞனைக் காண முடியாது. காலத்தால் தளிர்த்துப் பிறகு, அந்தக் காலத்தின் கரங்களிலே, காய்ந்தும், கரைந்தும், உருமாறும் இதழ்களைப் போல, கால வெள்ளத்தில் கலைஞன்தான், மரித்துப் பிறந்து வருகிறானே தவிர, ஞானத்தால் பிறந்த கலைகள் அழிவதில்லை! அவை சிரஞ்சீவிகளே!

கலைகள் அநாதி, அநாதை; அவைகளுக்கு ஸ்தூல பரம்பரை ஏது? கலைஞன் வயிற்றில்தான் மற்றொரு கலைஞன் பிறந்தாக வேண்டுமென்பதில்லை. எங்கோ பிறந்த கலை, உலகெங்கிலுமுள்ளவரைக் கவருவதில்லையா?

இதோ!-கலையே தெரியாத- கலையே பிறவாத ஒரு குடும்பத்தில் பிறந்து விட்ட ஓர் இசைக் கலைஞனையும்; அவனது இசைக் கலையையும் உங்கள் அன்புக் கரங்களில் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

அதோ - அவன் மீட்டுகிற தம்பூராவின் சுநாதமும், சுருதியோடு இழைந்து கரையும் அவனது இனிய குரலும் கேட்கின்றன. இந்தத் தெய்வீக இசையில்— இதை இசைப்பவனின் ஞானத்தில், கற்பனைத் திறனில் உங்கள் மனம் நிறைந்தால், அந்த மகிழ்ச்சியில், இசை இன்பத்தில் நீங்கள் உங்களை மறந்து பரவசமடைந்தால்—அந்தப் பெருமை, இப்புதினத்தின் நாயகனான ஹரிக்கும்; இசையோடு இணைந்த அவனது வாழ்க்கையை உருவாக்கிய பாகவதர், காயத்திரி, சுசீலா, காந்தாமணி, சுந்தரி, வஸந்தி, லக்ஷிமியம்மாள், ஆகியவர்களுக்குமே உரியது. இந்த நிறைவு பெறும் பாத்திரப் படைப்புகளில் எங்கேனும் அபஸ்வரம் ஒலித்தாலும்; கதையின் நடையில்; அதன் விறுவிறுப்பில், ஓட்டத்தில் ஏதேனும் லயம் நழுவியிருந்தாலும் அந்தக் குறைகள் என்னுடையவையே.

இனியும், உங்களுடன் பேசிக் காக்க வைக்கப் போவதில்லை. விடிவெள்ளி முளைத்து விட்டது. காலப் புரவிகளைக் கதிரவன் தன் ஒளி மயமான தேரில் இழுத்துப் பூட்டிக் கொண்டிருக்கிறான்; பவனி வர. வாருங்கள் சுவாமி மலைக்கு; பாகவதர் வீட்டிற்குப் போய் ஹரியைச் சந்திக்கலாம்.

மந்தைவெளி
சென்னை 28
கே. பி. நீலமணி