பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்/சாதனைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பெஞ்சமின் ஃபிராங்ளினின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்மனிதன் என்பவன் யார்? என்ற வினாவுக்கு விளக்கமான விடைகளை விளக்கிய மாமேதை பெஞ்சமின் ஃபிராங்ளின் என்று பெருமகனார்.

உலகம் ஒரு சிந்தனைப் புத்தகம்! அதில், பெஞ்சமினின் தனி மனித முன்னேற்றம் என்ற வாழ்க்கை வரலாறு, ஒரு தங்கத் தகடாலான பக்கமாக அமைந்துள்ளது.

அந்த மனிதப் புனிதனைச் சூழ்ந்துள்ள மக்கட் சமுதாயம் சிறக்க, அதற்கான புதிய புதிய கண்டு பிடிப்புகளைக் கண்டு பிடித்து, அவற்றைத் தனது அடையாளங்களாக நிலை நிறுத்தி, வாழ்ந்து மறைந்த அவரது சேவைகள் மற்றொரு தங்க ஏடாக உள்ளது.

தோன்றிய தனது நாட்டுக்காக, அல்லும் பகலும் அயராது சிந்தித்து சிந்தித்து அரும்பணிகள் ஆற்றி, செயற்கரிய செயல்களைச் செய்து, அவர் மறைந்தாலும் அண்ணாரது தொண்டுகள் மறையாமல் நின்று புகழ்க் கொடியை வானளாவ, உலகளாவ பறந்து கொண்டிருக்கும் அற்புதங்கள் பற்பல பக்கங்களாக சிறந்துள்ளன.

மேதினியில் மேன்மை பெற்ற ஒவ்வொரு பேரறிஞர்களும், தத்துவ ஞானிகளும், வானியல் வித்தகர்களும், மருத்துவ சித்தர்களும், மனோதத்துவ நிபுணர்களும் அரசியல் அறிஞர்களும், ஆன்மிக ஞானிகளும் இயல், இசை, நாடக முத்தமிழ் கலைஞர்களும், அவரவர் அறிவாராய்வின் தகுதி திறமைக்கேற்ப, ஒவ்வொரு துறையிலும் ஊடுருவி, ஒருவர் ஒரு துறையிலும் ஒருவர் பல துறைகளிலும் ஆழமாகச் சிந்தித்து அற்புதக் கண்டு பிடிப்புகளை நமக்கு வழங்கி மறைந்துள்ளார்கள்.

அவை அனைத்தையும் இந்த உலகம் இன்றும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதிசயங்களை நாம் படித்துக் கொண்டிருக்கின்றோம்- பார்த்து, மகிழ்கின்றோம்.

ஆனால், பெஞ்சமின் ஃபிராங்ளின், எதனெதனை எண்ணியெண்ணிச் சிந்தனை செய்தாரோ, அந்த துறைகளிலே எல்லாம் வெற்றிக் கொடிகளைப் பறக்க விட்ட செயல் வீரராகத் திகழ்ந்தார்.

அமெரிக்க குடியேற்ற நாடுகளிலே ஒன்றான போஸ்டன் துறைமுக நகரிலே பிறந்த அந்த மாமேதையின் கண்டு பிறப்புச் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல; எண்ணற்றன. அவை அத்தனையும் இன்றும் மனித வாழ்க்கைக்கு ஈடிலா நன்மை பயந்து கொண்டிருப்பதை மக்கள் நாள்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ அவர் கண்டு பிடித்த சாதனைகளின் பட்டியல்:

1. அச்சாளர் பணியிலே சேர்ந்த பெஞ்சமின் ஃபிராங்ளின், அமெரிக்காவிலே முதன் முதலாக அன்று வரை பழக்கத்திலே இல்லாத காகித நாணய முறையைக் கண்டு பிடித்து பணப்புழக்கத்தை மக்களிடம் வழக்கப்படுத்தினார்.

2. அந்த நாணயத்தை எப்படிச் செய்வது என்பதைச் சிந்தித்து, முதன் முதலாக தாமிரத் தகட்டின் மூலமாக, பலவித டிசைன் ஓவியங்களை எழுதி வெட்டி அச்சடிக்கும் நாணயங்களை மக்களுக்குச் செய்து தந்தார்.

3. சேறும் சகதியும் சாக்கடையுமாயிருந்த பிலடெல் பியாநகர் வீதிகளை, நகர மக்கள் சுத்தமாக நடமாடிட நடைமேடை தளவரிசைகளை அமைத்துத் தந்தார்.

4. அவ்வாறு அமைக்கப்பட்ட வீதிகளைச் சுத்தப்படுத்த ஒருவருக்கு ஆறு பென்ஸ் சம்பளம் என்று பேசி, நகர தெருக்களைக் கூட்டுமாறு ஆட்களை வேலைக்கு அமர்த்தினார். அவர்களுக்குரிய கூலியை அந்த தெருவிலே வசிப்பவரிடமே வசூலித்துக் கொடுத்தார்.

5. வீடுகளிலே உள்ள நடுத்தரவயதுக் கிழவிகளைத் திரட்டி அவர்களுக்கும் ஒரு சம்பளம் பேசி, அந்த தெருக் கூட்டியாளர்கள் சேகரித்துக் குவித்து வைத்துள்ளக் குப்பைக் கூளங்களை, புழுதிகளை எல்லாம் அள்ளி ஓரிடத்திலே குவியலாகக் கொட்டிக் குவிக்கச் செய்தார்.

5. குவிந்துள்ள குப்பைகளை எல்லாம் குதிரை வண்டிகளிலே வாரிப் போடச் செய்து, அந்த நகரத்தின் ஊர் கோடி ஒதுக்குப் புறத்திலே பள்ளம் ஒன்றை வெட்டிக் கொட்டுமாறு பணித்தார். இதற்கான பணச் செலவை அந்த ஊராரிடமே வசூல் செய்து கொடுத்தார்.

7. தெருப்பாதைகளிலே குண்டும் குழியுமாகக் காணப்பட்ட சாலைகளை எல்லாம் கற்களால் பாவி சீர் செய்து மக்களை நடமாடவைக்கும் சாலைகளாக்கி நடைமேடைகளைப் போட்டார்.

8. தெருக்களிலே மெழுகுவர்த்தி மூலம் ஒளி வழங்கியதுபோக முதன் முதலாக உருண்டை வடிவமான கண்ணாடி வடிவமாக இருந்த விளக்குகளை, அதிக ஒளி வழங்கும் நான்கு கண்ணாடி சதுரத்துண்டுகள் பதிக்கும் சதுரவிளக்குகளைப் போட ஏற்பாடு செய்தார். அதனால் வீதிகளிலே இரவு காலங்களில் மக்கள் பயமின்றி நடக்கும் நிலை ஏற்பட்டது.

9. ஊர்களிலே, தெருக்களிலே, குடிசைப் பகுதிகளிலே எதிர்பாராமல் தீ பிடித்துக் கொண்டால் அதனைத் தடுக்கும் FIRE PREVENTION என்ற தீயணைப்பு படையை உலகிலே முதன் முதலாகக் கண்டு பிடித்து பெஞ்சமின் இயங்க வைத்தார்.

10. போலீஸ் துறையினர் கள்ளச்சாராயத்திலே புகுந்து போதையேற்றிக் கொண்ட பழக்கத்தையும், கூலிக்கு போலீஸ் படை அமர்த்திக்கொள்வதையும் மாற்றி, அவர்களை நிரந்தர சம்பளப் படையாகவும், நம்பிக்கைப் படையாகவும் அமர்த்தும் சீர்திருத்தங்களை முதன்முதலில் செய்தார் பெஞ்சமின்.

11. புத்தகங்களால் மக்களுக்கு அறிவு பரவும் என்பதற்காக நண்பர்கள் மூலம்பெற்ற புத்தகங்களைச் சந்தா முறையில் பெருக்கி, அவற்றை மக்களிடையே படிக்கவும், சுற்றுலாவுக்கு விடவுமான ‘லெண்டிங் லைப்ரரி’யை முதன் முதலாகக் கண்டுபிடித்து மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கினார்.

12. பென்சில்வேனியா நகரில் உள்ள முதலாவது வைத்திய சாலையை உருவாக்கிட போராடியவர்களிலே அவர் முதல் மனிதராக நின்றார்! கடுமையாக உழைத்தார்.

13. பெஞ்சமின், போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பதவி பெற்றார். அதுவரை அந்த துறை நட்டத்திலேயே நடந்து வந்தது. அதை லாபகரமாக மாற்றவும், வீடுகளுக்கே வந்து தபால் வழங்கும் முறையைப் போல அன்றே ஏற்பாடு செய்தார். தபாலாபீசிற்கு வந்து மக்கள் தபால்களைப் பெறாவிட்டால் அவற்றை ஒரு கிடங்கிலே சேமித்து வைத்து நினைத்தபோது அவற்றைப் பெற்றிட D. L. O. அதாவது ‘டெட் லெட்டர் ஆபீஸ்’ என்ற ஒரு பிரிவை தபாலாபீசில் உருவாக்கினார். அந்த முறை இன்றும் நம் நாட்டில் உள்ளதைப் பார்க்கிறோம்.

14. அமெரிக்க, தத்துவ ஞானிகள் சங்கத்தைத் துவக்கி வைத்தார். அந்த சங்கம் ஏறக்குறைய 220 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பிலடெல்பியா நகரிலே இயங்குவதைப் பார்க்கலாம்.

15. ஒரு நாட்டுக்கும், நகரத்துக்கும் உள்நாட்டுப் பாதுகாப்பை மக்களிடம் வற்புறுத்திக்கூறி, பென்சில்வேனியாவில் முதன் முதலாக மக்களைத் திரட்டி குடிமக்கள் படைகளை பெஞ்சமின் ஆரம்பித்தார்.

16. பெஞ்சமின் ஃபிராங்ளின் முதன்முதலாக, பதின்மூன்று மூல குடியேற்ற நாடுகளின் ஒற்றுமையைப் பற்றிச் சிந்தித்தார். அதற்காக தனது சிந்தனை, எழுத்து, பேச்சு அனைத்தையும் மக்களிடையேயும், அதிகாரிகளிடையேயும் அடிக்கடி கவனமூட்டி வாதாடி ஒரு புதிய தொடர்பை அந்நாடுகள் இடையே உருவாக்கிக் காட்டினார்.

17. பிலெடல்பியா நகரில் அதுவரையில் கேட்டிராத ஒரு பைத்தியக்காரர்கள் ஆஸ்பத்திரியை மனநோய் நல மருத்துவமனை என்ற பெயரிலே புதிதாகவே உருவாக்கினார்.

18. இன்றுள்ள வீடுகளிலே எல்லாம் ஸ்டவ் என்ற ஒரு சூட்டடுப்பு உள்ளது என்றால், அதை முதன்முதலாகக் கண்டுபிடித்துக் கொடுத்து, அதன் வாயிலாக இன்றும் சூடேற்றும் கருவிகளுக்குரிய வளர்ச்சிகளுக்கு வழிகாட்டிய வரும் பெஞ்சமின்தான்.

19. முதன் முதலாக மின்சார பேட்டரியை அவர்தான் கண்டுபிடித்துக் கொடுத்தார். மின்சாரத்தில் பாசிட்டில், நெகட்டிவ் என்ற இரண்டுரக ஓட்டங்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டுக் காட்டியவரே ஃபிராங்ளின்தான். அம் மின் சக்திக்கு அவர் வைத்த பாசிட்டிவ், நெகட்டிவ் என்ற கலைச் சொற்கள்தான் இன்றும் உலகப் பழக்க வழக்கத்தில் பயன்பட்டு வருகின்றன.

20. மின்சாரமும் மின்னலும் ஒன்றுதான் என்பதே ஆதாரங்களோடு நிரூபித்து முதன்முதலாகக் கூறியவரும் அந்த மாமேதை பெஞ்சமின்தான்.

21. கட்டடங்கள் மேல் விழுகின்ற இடி, மின்னலின் அபாயகரமான ஆபத்துக்களின் விளைவுகளைத் தடுக்கும் ‘இடி தாங்கி’ என்ற புதிய கருவியைக் கண்டுபிடித்து உலகுக்குக் கொடுத்த மாமனிதர் பிராங்ளின்தான். அந்த கண்டுபிடிப்பின் பயன் என்ன? மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இன்றும் இயற்கையின் இழப்பிலேயிருந்து தற்காத்துக் கொள்கிறோம் இல்லையா?

22. பென்சில்வேனியா நகர சட்டசபையில் அவர் பதினான்கு ஆண்டுகள் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். அதன் செல்வாக்கை மக்கட் பணிக்காக நாட்டு விடுதலைக்காக நிலைநாட்டினார் பெஞ்சமின்.

23. எழுத்துத் துறையிலே புகுந்த அவர், சாமுவேல் ரிச்சர்ட்சன் என்பவர் எழுதிய நாவலை முதன் முதலாக அச்சடித்து, அமெரிக்க நாவல் உலகுக்கு முதல் நாவலை வழங்கியவரும் பிராங்ளின்தான்.

24. அக்காலத்தில் மிக முக்கியமான செய்திப் பத்திரிகையாக விளங்கிய ‘பென்சில்வேனியா கெசட்டை’ பெஞ்சமின் ஃபிராங்ளின்தான் சொந்தமாக நடத்திக்காட்டினார்; வெற்றியும் பெற்றார்.

25. அந்த பத்திரிக்கைதான், இன்றும் அமெரிக்காவிலே வெளிவந்து கொண்டிருக்கும் “சாட்டர் டே ஈவினிங் போஸ்ட்” அதாவது ‘சனிக்கிழமை மாலை அஞ்சல்’ Saturday Evening Post என்ற பத்திரிகையாகும்.

26. அமெரிக்காவில், பென்சில்வேனியா பல்கலைக் கழகம் Academy of Pensylvaniya என்று பெயர் பெற்ற கலைக் கழகத்தை பெஞ்சமின்தான் முதன்முதலில் உருவாக்கினார்.

27. பெரியம்மை நோய் வராமல் தடுப்பதற்கு அம்மை குத்திக் கொள்ளும் பழக்கம் அதுவரையில் வராமலிருந்தது. அந்த ஊசியை மக்கள் போட்டுக் கொள்ளும் வழக்கத்தை பிராங்ளின் தான் ஏற்படுத்தினார்.

28. சாதாரணமாக ஜலதோஷம் அடிக்கடி மக்களுக்கு பிடிப்பதைத் தடுக்க அதற்கான அறிவுரைகளை அவர்களுக்குப் போதித்தார். இன்றளவும் அந்த எச்சரிக்கைகளே மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன.

29. பிரெஞ்சுப் புரட்சி உருவாவதற்கு முன்பே பெஞ்சமின் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் பிரதிநிதியாகப் பணியாற்றியபோது, ஸ்டாம்பு சட்டம் என்ற ஒரு கொடுமையான சட்டத்தை அறவே அவர் நீக்கினார். அதற்காக தனது பணியைவிட்டு விலகும்படியான சூழல் இருந்ததால், அந்த வேலையை விட்டு விலகிவிட்டார்.

30. அமெரிக்க குடியேற்ற நாட்டு மக்களின் சுதந்திர பிரகடனத்தை தயாரிக்கவும், அதைத் திருத்தி ஒழுங்குபடுத்தவும் அந்தக் குழுவுக்கு இரவும் பகலுமாக உறுதுணையாகப் பணியாற்றினார்.

31. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதவும், அவற்றை நிறைவேற்றவும் கடுமையாக உழைத்தார். அந்த அரசியல் சட்டத்தின் கீழ்தான் அந்நாட்டு மக்கள் இன்றும்கூட வாழ்ந்துவரும் நிலையை ஏற்படுத்தினார் என்பதைப் படிக்கின்றோம்.

32. பிரான்ஸ் நாட்டில் அமெரிக்க குடியேற்ற நாடுகளின் ஆணையாளராக அவர் பணியாற்றினார். அப்போது அமெரிக்க ராணுவத்தின் அமைப்புக்குத் தேவையான பணம், ஆயுதங்கள், வெடிமருந்துகள், உணவுப்பண்ட வகையறாக்கள் முதலானவற்றை தனது நாட்டுக்காக வாதாடிப் பெற்றுக் கொடுத்தார்.

33. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்தரப் போராட்டத்திற்காக, இங்கிலாந்துக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் இடையே பெஞ்சமின் ஒரு சமாதான ஒப்பந்தத்தை உருவாக்கித் தந்தார்.

34. அமெரிக்காவில் அடிமை முறையை அடியோடு ஒழித்து விட அவர் வாதாடினார். அதற்கான துண்டுப் பிரகரங்களையும் வெளியிட்டுப் பணிபுரிந்தார். தனது பத்திரிகையில் பல கட்டுரைகளையும் கருத்துக்களையும், கண்டனங்களையும் எழுதினார்.

35. அமெரிக்க சுதந்திரத்திற்காகப் பாடுபடும் சுதேசிக் காங்கிரஸ் போராட்ட அணிகளின் வளர்ச்சிக்கு தனது சொந்த பணத்தையும் சொத்துக்களையும் கொடுத்து உதவினார்; அதற்காக அரும்பாடுபட்டார்.

36. ‘எங்கு மக்கட் சுதந்திரம் வாழ்கிறதோ அங்கேதான் எனது நாடு இருக்கிறது’, என்ற சுதந்திரப் போர்ப் பிரகடன தாரக மந்திரத்தை மக்களிடையே எழுச்சி பெற முழக்கமிட்டுப் போராடி அரும்பாடுபட்டார்.

37. பெஞ்சமின் ஃபிராங்ளின், மக்கள் நல்வாழ்வுத் துறைகளுக்கு எது எது முதல் தேவைகள் என்பதை ஆராய்ச்சி செய்து அவற்றை எல்லாம் செய்தார். உயிரையும் உடலையும் பணயம் கட்டிப் பணியாற்றியவர் அவர்.

38 அச்சகத் தொழிலாளியாக உலகுக்கு அறிமுகமான பெஞ்சமின் ஃபிராங்ளின், பத்திரிகை ஆசிரியராக ஓர் எழுத்தாளராக, சங்கீத வித்வானாக, புதுப்புது கண்டு பிடிப்புகளைக் கண்டு பிடித்த விஞ்ஞானியாக, அரசியல் உலக ராஜ தந்திரியாக, அரசியல் அமைப்புகளின் உறுப்பினராக, சுதந்தரப் போராட்ட தளபதியாகப் பணியாற்றி, தான் பிறந்த நாட்டுக்காக செயற்கரிய சேவைகளைச் செய்த மாபெரும் மனிதனாக விளங்கி மறைந்தவர்தான் பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற மாமேதை.