பெரியாரும் சமதர்மமும்/01
1. இவர்தான் பெரியார்
இமயமலை; இதன் பொருள் என்ன? பனிமலை என்று பொருள். பனிமலை ஒன்றா? இல்லை, சில. இருப்பினும், இந்தியாவின் வடக்கெல்லையாக உயர்ந்து நிற்கும் மலைத் தொடரையே பனிமலை—இமய மலை என்றழைக்கிறோம்.
அதே போல், உலகில் பெருஞ் சிந்தனையாளர்கள் சிலர்; பெருஞ் சாதனையாளர்கள் சிலர். இவர்களுள் ‘பெரியார்’ என்றால், பெரியார் ஈ.வெ. ராமசாமியைத்தான் குறிக்கும்.
இமயம் எதை நினைவு படுத்துகிறது? உயரத்தை—நீளத்தை—அகலத்தை. அப்புறம்? எண்ணற்ற பேராறுகளின் சுரப்பை. அதே போன்று, பெரியார் என்னும் சொல் எதை நினைவுக்குக் கொண்டு வருகிறது?
நீண்ட பொதுத் தொண்டை; இணையற்ற பொதுத் தொண்டை. அது நீண்டது மட்டுமா? உயர்ந்ததும் ஆகும்.
பெரியார் தன் சாதிக்காகப் பாடுபடவில்லை. தன் மாவட்டத்திற்காகப் பாடுபடவில்லை. மக்கள் இனத் தொண்டாக அது உயர்ந்து நின்றது. அரசியல் தொண்டு, சமுதாயத் தொண்டு, பொருளியல் புரட்சித் தொண்டு என அது அகன்று விளங்கியது.
ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக—பரந்த நிலப்பரப்பை வளப் படுத்துவது. இமயம் வழங்கும் ஆறுகள். மக்கள் இனத்தில், அநீதியை எதிர்க்க, சுரண்டலை ஒழிக்க, மக்கள் ஒருமைப்பாட்டை வளர்க்க, கவைக்குதவாத கற்பனைகளிலிருந்து விடுபட, சமத்துவத்தை— சமதர்மத்தைப் பயிரிட வைக்க உதவுவது பெரியாரின் சீரிய கருத்துகள்.
பெரியாரின் தொண்டு எங்கே—எப்படித் தொடங்கிற்று? எப்படிப் பாய்ந்தது? என்னென்ன செய்தது?
ஈரோட்டில் தொடங்கியது. ஈரோடு நகராட்சித் தலைவராக முளைத்தது. மேலும், இருபத்தெட்டுக் கிளைகளாகக் கிளைத்தது. எல்லாவற்றிலும் ஈ. வெ. ராமசாமி தன்னுடைய தனி முத்திரையைப் பொறித்தார்.ஈரோட்டுக்குக் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றிய பெருமை ஈ.வெ.ராவுக்குரியதாகும். ஈரோட்டுக் கடைத் தெருவில், பல கடைக்காரர்கள், பொது நிலத்தை ஆக்கிரமித்து இருந்தார்கள். வேண்டியவர்களாயிற்றே என்று தயங்காமல், பகை வளருமே என்று அஞ்சாமல், உறுதியாக நின்று ஆக்கிரமிப்புகளை எடுக்க வைத்து, தெருவை அகலப்படுத்திய அரிமா ஈ.வெ. ராமசாமி ஆவார்.
ஈரோட்டுச் சிங்கம்—ஈ. வெ. ராவின் தனிச் சிறப்புகள் சில. அவையாவன : உரிமைக்காகப் போராடும் தன்மை; பொதுநலப் போராட்டங்களுக்கரக, எதையும் தியாகஞ் செய்ய முனையும் போக்கு, சலிப்பின்மை, இடையறாத உழைப்பு, அஞ்சாமை, இத்தனைக்கும் மணிமுடியாக—எல்லோரையும் மதிக்கும் பண்பு ஆகியவை.
உரிமை வேட்கை, பெரியாரோடு பிறந்தது. சமத்துவ உணர்வும் உடன் பிறந்ததே. இவ்விரண்டு நல்லுணர்வுகளும், ஈ.வெ.ரா.வுக்குப் புதிய புரட்சிகரமான கண்ணோட்டத்தைத் தந்தன. சிறுவனாக இருந்த போதே, சாதிக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள். பெரியவர்கள் கட்டளைக்கு மாறாக, எல்லாச் சாதியார் வீடுகளிலும், நீர் அருந்தவும், உணவு உண்ணவும் தலைப்பட்டார்.
உரிமை வேட்கை, ஈ. வெ. ராமசாமியைக் காங்கிரசில் சேர்த்தது. அப்போதையக் காங்கிரசு, காந்தியார் தலைமையில் இயங்கிற்று. அவர் தலைமையில்தான், அவ்வியக்கம் மக்கள் இயக்கமாகத் தழைக்கத் தொடங்கியது. ஈ.வெ.ராமசாமி ஏற்றுக் கொண்ட கொள்கைக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்து விடும் இயல்பினர். அவர் காங்கிரசுக்காரராக காந்தியத்தை ஏற்றுக் கொண்டார். உண்மையான காந்தியவாதியாக விளங்கினார்.
காந்தியார் காட்டிய ஒத்துழையாமையை, விழிப்பாகக் கடைப் பிடித்தார். வழக்கு மன்றஞ் செல்ல மறுத்தார். கடன் பத்திரங்கள் மூலம் வர வேண்டிய ஐம்பதாயிரம் ரூபாய்களை இழக்க நேரிடுவதைப் பற்றியும் பொருட்படுத்தாது, வழக்காட மறுத்தார்.
மதுவிலக்கு காந்தியத் திட்டங்களில் ஒன்று. அது வரையிலும், அதற்குப் பிறகும் மது அருந்தாதவர் ஈ. வெ. ராமசாமி. பெண்கள் கள்ளுக்கடை மறியலுக்கு வந்தது முதன் முதலாக ஈரோட்டில்தான் நிகழ்ந்தது.ஈ.வெ. ராமசாமியாரின் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாவும் கள்ளுக்கடை மறியலுக்குச் சென்றார்கள். ஈரோட்டில் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு அம்மையார்கள் முன்வந்தது எண்ணற்ற பெண்களுக்கு எழுச்சியூட்டிற்று. ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்.
அதிகாரவர்க்கம் இதை எதிர்பார்க்கவில்லை. ஓர் ஊரில் மட்டும் ஆயிரக்கணக்கான பெண்களைக் கைது செய்யக்கூடிய கல் நெஞ்சம் அன்றைய அதிகாரிகளுக்கு இல்லை. எனவே சென்னையிலுள்ள மேல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்கள்.
முன் அனுமதி பெற்று ஈரோட்டில் போட்டிருந்த தடை ஆணையை எடுத்துவிட்டார்கள். 144 தடை இதற்குமுன் ஆணையை காலம் முடிவதற்குள் எங்கும் எடுத்ததில்லை. அந்தப் புரட்சியைக் கண்டவர் ஈ. வெ. ராமசாமி.
தனி வாழ்க்கையில் சிக்கனக்காரராகிய ஈ. வெ. ராமசாமி, பொதுத் தொண்டைப் பொறுத்தமட்டில் தாராளமான தியாகி. அவருடைய தென்னந்தோப்பில் கள் இறக்கும் உரிமை ஏற்கனவே குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
இழப்பு ஈடு பெற்றுக்கொண்டு குத்தகையைக் கைவிடும்படி ஈ. வெ. ராமசாமி சொன்னார். அதிகாரிகள் நேர்மாறாக வற்புறுத்தினார்கள். எனவே குத்தகைக்காரர் ஈ.வெ.ராமசாமியின் பேச்சைக் கேட்கவில்லை.
இந்நெருக்கடியை அவர் எப்படிச் சமாளித்தார்? இரவோடு இரவாக அய்நூறு தென்னை மரங்களை வெட்டிச் சாய்க்கச் செய்தார். நாற்பது ஆண்டுகள் பலன் தரக்கூடிய மரங்களை வெட்ட வைத்தார். என்னே அவருடைய தியாகம்!
கதரை உற்பத்தி செய்தல், அணிதல் காந்தியத் திட்டங்களில் ஒன்று. இதிலும் அவர் மெய்மறந்து ஈடுபட்டார். சீமான் வீட்டுப் பிள்ளையாகிய அவர் கதர் அணிந்தார். வீட்டிலுள்ள அனைவரையும் அணிய வைத்தார். தன் தாயார் —எண்பது வயது மூதாட்டி, சின்னத்தாயம்மாளை அணிய வைத்தார்.
அவரே கதர் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பட்டி தொட்டி தோறும் சென்று விற்பனை செய்தார். அதனால் மக்களிடையே கதர் அணிதல் பெருகியது. உற்பத்தியும் வளர்ந்தது. தமிழ்நாட்டில், கதரைப் பரப்பியதில், வளர்த்ததில் அவருடைய பங்கு மிகப் பெரியது.
தீண்டாமை, இந்தியாவின் தனி நோய்; பொல்லாத நோய்; ஈராயிரம் ஆண்டுகளாகத் தொடரும் நோய். கோடிக்கணக்கானவர்களை விலங்குகளைப் போல், நடத்தும் கொடுமை, அவர்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்து விட்ட தவறான முறை, வாய்ப்புகளே கொடாத சுரண்டல் முறையின் கோர உருவம்.
இருக்க இருக்கைகளை மறுத்து விட்டதோடு, குளிக்க—குடிக்க நீரும் கொடாத, வன்முறை தீண்டாமையாகும். அதன் அடி மரம், சாதி வேற்றுமை என்னும் முள் மரமாகும்.
இந்திய நாடு தழுவிய இக்கொடுமையைப் புத்தருக்குப் பின், ஒழிக்க முயன்ற பெருந் தலைவர் இல்லை. ஒழிக்க முயன்ற பேரியக்கம் இல்லை.
சுரண்ட வந்த ஆங்கிலேயரையும் மிரட்டி, இந்நாட்டின் மரபுகளில், பழக்க வழக்கங்களில் அவர்கள் தலையிடுவதில்லை என்னும் வாக்குறுதியை இந்திய நாட்டின் மேட்டுக் குடியினர் பெற்று விட்டார்கள்.
எனவே, சாதி ஏற்றத் தாழ்வுக் கொடுமைகளும், தீண்டாமை, நெருங்காமை, உடனிருந்து உண்ணாமை, கலவாமை ஆகிய தீய மரபுகளும், கொடி கட்டிப் பறந்தன. இத்தீமை செத்தாலும் விடுவதில்லை. சுடுகாட்டிலும், இடுகாட்டிலும், சாதிப் பிரிவுகளின் அடிப்படையில், தனித்தனி சுடுகாடுகள், இடுகாடுகள் இருந்தன; இருக்கின்றன.
மதம் மாறினாலும், இந்நோய் விடுவதில்லை. கிறித்தவர்களானாலும் ‘சாதி இழிவு’ ஒட்டிக் கொண்டிருக்கும்.
தொழுகைக் கூடங்களில், ஆதி திராவிடக் கிறித்தவர்களுக்குத் தனியிடமும், மற்றவர்களுக்கு வேறு இடமும் இருந்தன. இன்றும், அத்தகைய கிறித்துவக் கோயில்கள் உள்ளன.
இந்த நோயை அடியோடு ஒழிக்கப் பாடுபட்டவர் ஈ. வெ. ராமசாமி ஆவார். மாணவப் பருவத்திலேயே, சாதி வேர்களை உடைத்தெறிந்த பெரியார், தமிழ்நாடு காங்கிரசுத் தலைவராகவும், அத்தொண்டாற்ற வாய்ப்புப் பெற்றார்.