பெரியாரும் சமதர்மமும்/08
8. பகத்சிங்கும் பெரியாரும்
1930 ஆம் ஆண்டு மே திங்கள், ஈரோட்டில் நடந்த இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில், ஈ.வெ.ரா. இயக்கத்தின் இலட்சியம், சமதர்மம் என்பதைச் சுட்டிக் காட்டினார். பெரியாரின் கருத்து இயக்கக் கருத்தாக ஒலித்தது. ஓராண்டுக் காலம் அப்படி ஒலித்துப் பரவிய பிறகு, அது இயக்கத்தின் கொள்கையாக, விருதுநகரில் நடந்த வாலிபர் மாநாட்டில், ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், வரலாற்று அதிர்ச்சியுடைய நிகழ்ச்சியொன்று நடந்தது. பகத் சிங், இராஜ குரு, சுக தேவ் ஆகிய மூவர், லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்கள்.
இம்மூவர் பேரில், சாட்டப்பட்ட குற்றச்சாட்டு என்ன? சதிக் குற்றம். என்ன சதி? ஆங்கில ஆட்சியை ஒழிக்கச் சதி செய்தார்களாம்.
அதன் புற வெளிப்பாடு என்ன?
லாகூரில் துணை சூப்பிரெண்டாக இருந்த சாண்டர்ஸ் என்ற ஆங்கிலேயர் மேல் வெடிகுண்டு வீசிக் கொன்றார்கள்.
‘இக்கொலைக்கு மூவரும் உடந்தை; இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை’—இப்படிக் குற்றஞ்சாட்டி, வழக்கு தொடரப்பட்டது. வழக்கு மன்றத்தின் முடிவு என்ன? குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டனவென்று முடிவு செய்தார்கள். எனவே, தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. அது நிறைவேற்றப் பட்டது. இளம் உயிர்கள் மூன்று பலியாயின.
எதற்கு? இந்திய விடுதலைக்கு. அரசியல் விடுதலைக்கு மட்டுமா? இல்லை; பொருளாதார விடுதலைக்கும்; அறிவின் விடுதலைக்கும்.
பகத் சிங், நாட்டுப் பற்றுக்கு ஆழமான பொருள் கொண்டிருந்தவர். அவர் பக்தர் அல்லர்; அவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. எனவே, பாரதத்தை வழிபடும் ‘பூமா தேவி’யாகக் கருதவில்லை. பின் எப்படிக் கருதினார்?விடுதலை பெற வேண்டிய நிலப்பரப்பு; அவ்விடுதலையைப் பயன்படுத்தி, அத்தனை மக்களுக்கும் நல்வாழ்வு, முழு வாழ்வு கொடுக்க வேண்டிய நாடு. அதற்கான இயற்கை வளங்களைப் பெற்றுள்ள இந்தியா, மக்கள் சிந்தனை வளத்தையும் பெற வேண்டும்; பழைய அறிவுக் கட்டுகளிலிருந்து விடுபட வேண்டும்; தனியுடைமைப் பற்றிலிருந்து விடுபட வேண்டும்.
சுருங்கச் சொன்னால், சமதர்மத் தத்துவம் பகத்சிங்கின் இலட்சியம். பொது உடைமை அவர் ஏற்றுக் கொண்ட நடைமுறை.
விலை மதிப்பிட முடியாத பகத் சிங்கின் தியாகம், இந்தியப் பொது வாழ்க்கையிலிருந்து, தெளிவுள்ள முற்போக்குவாதியை, உறுதியான உண்மையான தொண்டனை இளமையிலேயே தட்டிப் பறித்து விட்டது. சமதர்ம இயக்கத்திற்கும், பகுத்தறிவு இயக்கத்திற்கும், அது பேரிழப்பாகும்.,
அப்பேரிழப்பு, எண்ணற்றவர்களின் உள்ளங்களை உலுக்கிற்று. புரட்சியாளர் பெரியார், நாத்திகவாதி பெரியார், இவ்விரு கொள்கைகளுக்காகவும் உயிர் விட்ட இளம் பெரியார் பகத் சிங்கை இனம் கண்டு, துணிவோடு உலகறியப் பாராட்டினார்.
தந்தை பெரியாரின் புரட்சி இதழாக விளங்கிய ‘குடியரசில்’ 29-3-1931 வெளியீட்டில் அவர் எழுதிய தலையங்கத்தைப் பார்ப்போம்.
‘இந்தியாவுக்குப் பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயம் ஆகும்.’ இப்படித் திட்டவட்டமாக அறிவிக்கிறது அத்தலையங்கம். அப்புறம்?
‘அவர் (பகத் சிங்) தனது கொள்கையை நிறைவேற்றக் கைக்கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்து விட்டது என்பதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும், அவருடைய கொள்கை குற்றமுடையது என்று சொல்ல, நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம். அதுவேதான், உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையும் ஆகும். நாம் அவரை (பகத் சிங்கை) உண்மையான மனிதர் என்று சொல்லுவோம்’ என்று ஒப்புதல் முத்திரையைப் பதிப்பித்தார்.மிகச் சிக்கலான கோட்பாடுகளை, எவர்க்கும் எளிதில் புரியும் வண்ணம் எடுத்துக் காட்டுவதில், ஈ. வெ. ராமசாமிக்கு இணை அவரேதான். பகத் சிங் ஏற்றுக் கொண்ட பொது உடைமைக் கொள்கையை ஏன் ஆதரிக்க வேண்டும்? பெரியாரின் சொற்களாலேயே தெளிவு பெறுவோம். பெரியார் கூற்று இதோ:
‘நாம் தீண்டாமை ஒழிய வேண்டுமென்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கிறதோ, அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மையை ஒழிக்க வேண்டுமென்பதிலும் அடங்கி இருக்கின்றது.
தீண்டாமை ஒழிவதாயிருந்தால், எப்படி மேல் சாதி, கீழ்ச் சாதி தத்துவம் ஒழிந்துதான் ஆக வேண்டுமென்கிறோமோ அது போலவேதான், ஏழ்மைத் தன்மை ஒழிவதாயிருந்தால், முதலாளித் தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதான் ஆக வேண்டும் என்கிறோம். இந்தத் தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத் தன்மை, பொதுஉடைமைத் தன்மை என்பவைகளே ஒழிய வேறில்லை,’
சமதர்மப்—பொது உடைமை பற்றி நம் சூழ்நிலைக்கேற்ப விளக்கம் தந்த பெரியார், பகத் சிங்கின் உயிர்த் தியாகத்தை எப்படிப் பாராட்டினார் என்று பார்ப்போம்.
‘பகத் சிங் இந்திய மக்களுக்கு, ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத் தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத் தக்கதாக, தனது உயிரை விட நேர்ந்தது.
‘சாதாரணத்தில், வேறு எவரும் அடைய முடியாத பெரும் பேறு என்று சொல்லி, பகத் சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்!’ என்று குடியரசுத் தலையங்கத்தில் எழுதினார்.
சோவியத் நாட்டில் சுற்றுப் பயணஞ் செய்து விட்டு வரும் முன்பே, பெரியார் சமதர்மக் கொள்கையில் எவ்வளவு தெளிவும், உறுதியும் கொண்டிருந்தார் என்பதை இத்தலையங்கம் எடுத்துக் காட்டுகிறது.
அது மட்டுமா? பகத் சிங்கின் நடைமுறை ‘வன்முறை’ என்று சாக்குச் சொல்லி, பலர் நழுவப் பார்த்த வேளையில், ஈ. வெ. ராமசாமி தமக்கே உரிய தனித் துணிவோடு, பகத் சிங்கைப் போற்றினார். அத்துணிவு வெளிப்படை. மற்றோர் நுட்பத்தையும் இத்தலையங்கம் வெளிப்படுத்துகிறது. அது என்ன?
கொள்கைக்கே முதலிடம் என்பதாகும். அது சீரியதாக, உயர்ந்ததாக, தேவையானதாக இருந்து விட்டால், அதற்காக உண்மையாகப் பாடுபடுவோர் கைக்கொண்ட நடைமுறை, குறையென்று தென்பட்டாலும், அதைச் சுட்டிக் காட்டுவதோடு நின்று விடாது, கொள்கைக்காகச் செய்த தியாகத்தைப் பாராட்டும் பெரியாரின் நல்ல இயல்பும், அத்தலையங்கத்தால் விளங்குகிறது.
பகத் சிங், பெரியாரின் கொள்கைக்காரர் அல்லர்; இயக்கத்தைச் சேர்ந்தவரும் அல்லர். இருப்பினும், அவருடைய தியாகத்தை, உரிய தாராளத்தோடு போற்றினார். இப்போக்கு பெரியாரோடு உடன் பிறந்தது. பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள், இப்பாடத்தினைப் பெரியாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கொள்கை உடன்பாடு உடையோர் நடைமுறை பற்றிக் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாலும், உரிய போது, உரிய பொது இயக்கங்களுக்கு அத்தகையோரின் துணையையும் சேர்த்துக் கொண்டு, வெற்றி வாகை சூடும் திறத்தைப் பெரியாரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் நல்லது.
இப்போது சமதர்மக் கொள்கையின் பரப்புதலைக் கவனிப்போம்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கம், சாதியொழிப்பில் தொடங்கி சமய, கடவுள் நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களைச் சுட்டுப் பொசுக்கும் காட்டுத் தீயாகப் பரவிற்று. ‘சூத்திரனென்றால் ஆத்திரங் கொண்டடி’ என்னும் முழக்கம் பல இடங்களில் கேட்டது.
சமுதாயத்தின் மேல்மட்டத்திலும், செல்வக் குவியலின் கொடுமுடியிலும் இருந்தோர் அச்சங் கொண்டனர். தங்கள் மேலான நிலைக்குக் கேடு வருமென்று, அவர்கள் அஞ்சினார்கள். இது இயற்கை. அச்சம் உந்த, புராணீகர்களையும், முதிராத நாட்டுப் பற்றாளர்களையும் பிடித்து, தன்மான இயக்கத்தின் மேல் ஏவி விட்டார்கள்.
‘அபசாரம்! அபசாரம்!’ என்று தூற்றுவதாலும் ‘ஆபத்து! ஆன்மீகத்திற்கு ஆபத்து! மறுமைக்கு ஆபத்து! சீலத்துக்கு ஆபத்து!’ என்று கதறுவதாலும், பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரவாதபடி, அணைத்து விடலாமென்று மனப்பால் குடித்தார்கள். அது பலிக்காது போன போது, சாபமிட்டுப் பார்த்தார்கள்.
அதை எவரும் பொருட்படுத்தாததைக் கண்டு, ‘தேசபக்தி’ப் போர்வையில் பதுங்கினார்கள். பிஞ்சு தேச பக்தர்களைக் கொண்டு, மேடைதோறும் தன்மான இயக்கத்தவர்களை, ‘தேசத்துரோகி’கள் என்றும், வகுப்புவாதிகள் என்றும் ஓயாது பழித்தார்கள்; புதுப்புது அவதூறுகளைப் பொய்களை புனைந்து, பரப்பி அலுத்தார்கள். திட்டமிட்டு, முடுக்கிவிடப்பட்ட பழியையும், தூற்றலையும் தாங்கிக் கொண்டு, தன்மான இயக்கம் உயிரோடு இருந்தது; இருக்கிறது. அவ்வுயிர்ச் சக்தியின் இரகசியம் என்ன?
மூவாயிரம் ஆண்டுகளாகப் பாடுபடும் மக்கள், தாழ்த்தப்படும் தன்மையையும், ஏழ்மைப் படுத்தப்படும் தன்மையையும், விரட்டும் விடி வெள்ளி தேவைப்பட்டது. அவ்விடி வெள்ளியாகத் தன்மான இயக்கம் முளைத்தது.
அது குறைப் பிரசவம் அல்ல; முதிர்ந்து பிறந்த இயக்கம்; கோடி,கோடி மக்களை நிமிர வைத்த இயக்கம்; மானமூட்டிய இயக்கம்; எதிர்காலம் பற்றிய நம்பிக்கையூட்டிய இயக்கம். தாழ்த்தப்படுதல், வறுமையில் தள்ளப்படுதல் ஆகிய இரு கொடுமைகளையும் தகர்த்தெறியப் புறப்பட்ட இயக்கமாகத் தன்மான இயக்கம் செயல்பட்டு வருகிறது.