உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியாரும் சமதர்மமும்/10

விக்கிமூலம் இலிருந்து

10. கம்யூனிஸ்ட் அறிக்கையைக்
தமிழில் வெளியிட்டார்

1931 மே திங்கள் முதல் 1931 ஆகஸ்ட் வரை, சமதர்மக் கொள்கையைப் பரப்புதல், தன்மான இயக்கத்தின் தந்தையாகிய பெரியாரின் சீரிய கருத்தாக நடைபெற்றது. 1931 ஆகஸ்டில், விருதுநகரில் நடந்த மூன்றாவது மாகாண சுயமரியாதை வாலிபர் மாநாட்டில், இயக்கத்தின் இலட்சியங்களில் ஒன்றாக, சமதர்மக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அம்மாநாட்டின் முதல் முடிவைப் பார்ப்போம்.

‘சமதர்மத் தத்துவமும், பொதுவுடைமைக் கொள்கையும், நாட்டில் ஓங்க வேண்டும் என்பதே நமது இலட்சியமாயிருக்கிறபடியால், விதி, கடவுள் செயல் என்பன போன்ற உணர்ச்சிகள், மக்கள் மனதிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.’

இம்முடிவின் முற்பகுதி, இலட்சியத்தை அறிவிக்கிறது; திட்டவட்டமாகவே அறிவிக்கிறது. பிற்பகுதி, அந்த இலட்சியம் நிறைவேறாதபடி, குறுக்கே நிற்கும் தடைக் கற்களைக் காட்டி, அவற்றை ஒழிக்கச் சொல்லுகிறது.

போதிய சூடேற்றாமல், அரிசியை உலையில் இடுவது வீண் முயற்சி. எவ்வளவு நீண்ட காலம், சிறுகச் சிறுக, நான்கு அரிசிகளாகப் போட்டுப் பார்த்தாலும், ஒரு பருக்கைச் சோறும் கிடைக்காது. அத்தகைய முயற்சியும் பாழ், அதில் போடும் பொருளும் பாழ்.

விதி, கடவுள் செயல் என்னும் நம்பிக்கையுள்ள வரை, பொது மக்களிடம் சமதர்ம உணர்வில் சூடு பிடிக்காது. சூடு பிடிக்காத வரை, அது ‘நல்லவர்களின் நம்பிக்கை’யாக மட்டுமே நிற்கும். ‘வல்லவர்களின் பயனுள்ள செயற்பாடுகளாக’ மாறாது. இதையுணர்ந்ததால், தன்மான இயக்க வாலிபர்கள், போய்ச் சேர வேண்டிய இடத்தையும் காட்டி, வழியில் ஒழிக்கப்பட வேண்டியவற்றையும் தெளிவாகக் காட்டினார்கள்.

மேற்கூறிய வாலிபர் மாநாட்டின் மற்றோர் முடிவு என்ன தெரியுமா?

‘வர்ணாசிரமத்திலும், கடவுள் செயல் என்பதிலும், நம்பிக்கை கொண்டிருக்கிற யாராலும் மக்களுக்குச் சமத்துவமும், விடுதலையும் அடையும்படிச் செய்ய முடியாது என்று இந்த மாநாடு உறுதியாகச் சொல்லுகிறது,’ என்பதாகும்.

அய்ம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, தன்மான இயக்கம் சொன்னது, கல்லின் மேல் எழுத்து என்பதைப் பிந்திய இந்திய சமதர்ம வரலாறு மெய்ப்பித்துக் காட்டி வருகிறது.

சாதி ஏற்றத் தாழ்வு என்னும் நெருஞ்சி முள் காட்டையும், கடவுள் செயல் என்னும் நம்பிக்கைப் பூண்டையும் உழுது புரட்டிப் போட முயன்றால், மக்கள் மனம் புண்படும் என்னும் எண்ணத்தில், அவ்விரண்டையும் தொடாமல் ஓதுக்கியவர்களின் தியாகம் என்னவாயிற்று? அரை நூற்றாண்டு உழைப்பு என்னவாயிற்று? விழலுக்கிரைத்த நீராகி விட்டது.

அது இழப்பு. அதற்கு மேலும் கேடு படர்ந்திருக்கிறதே. அவநம்பிக்கை, ஆற்றாமை, சலிப்பு ஆகியவை இளைஞர்களைக் கௌவிக் கொண்டு வருகின்றனவே! அக்கால தன்மான இயக்கத்தின் சிவப்பு விளக்கைக் கவனித்திருந்தால், ஒருக்கால் சமதர்ம உணர்வு தழைத்திருக்கலாம். நிற்க.

சமதர்மத் தத்துவத்தை இயக்க ரீதியாக ஏற்றுக் கொண்ட பிறகு, அக்கொள்கை மேலும் பரவியது. அதற்காக, சாதியொழிப்புக் குரல் குறையவில்லை. இரண்டும் சூறாவளியென வீசின. இந்தியச் செய்தித் தாள்கள், இதழ்கள் கட்டுப்பாடாக இருட்டடிப்புச் செய்தன. அது பலிக்காத போது? திரித்துக் கூறின; அவதூறுகளைப் பொழிந்தன.

இவ்வளவுக்கிடையிலேயும் எதிர் நீச்சல் போட்டு வளர்ந்தது தன்மான இயக்கம்; சமத்துவத்தோடு, சமதர்மத்தையும் கிளையாகக் கொண்ட இயக்கம் வளர்ந்தது.

தந்தை பெரியார் எதில் ஈடுபட்டாலும், முழு மூச்சோடு ஈடுபடும் இயல்பினர். மூன்றாவது சுயமரியாதை வாலிபர் மாநாடு சமதர்மக் கோட்பாட்டையும், பொது உடைமைக் கொள்கையையும் இலட்சியமாக அறிவித்த பிறகு, அவற்றைப் பரப்புவதில் தீவிரமாக முனைந்தார்.

சமதர்மக் கோட்பாட்டிற்கு ஊற்றுக்கால் எது? 1847ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ’ என்ற சமதர்ம அறிக்கையாகும். அவ்வாண்டு இலண்டனில், ஒரு அனைத்துலக சமதர்ம மாநாடு நடைபெற்றது. அப்போது, சமதர்ம இயக்கத்தின் சார்பாக, அதன் கொள்கையைத் திட்டவட்டமாக வெளியிட முடிவு செய்தார்கள்.

அவ்வறிக்கையைத் தயாரிக்கும் பணியை, காரல்மார்க்சு, பிரட்ரிக் எங்கல்சு என்ற இரு ஜெர்மானியப் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் உலகப் புகழ் பெற்ற சமதர்ம அறிக்கையைத் தந்தார்கள். அந்த அறிக்கையை 4-10-1931 நாளைய குடி அரசில், தமிழாக்கம் செய்து வெளியிட்டார். அப்படி வெளியிட்ட போது, பெரியார் ஈ. வெ. ராமசாமியே ஒரு முகவுரை எழுதினார். அதில்,

‘சமதர்ம உணர்ச்சி ஒரு எண்ணமாய் ஏற்பட்டு, அதன் தத்துவங்களைப் பற்றியும், கொள்கையைப் பற்றியும் வெளியில் எடுத்து, மக்களுக்குத் தெரியும்படியாக மாநாடுகள் மூலமும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக நமக்கு விளங்கும்படியாய்க் காணப்படும் காலமே இன்றைக்கு சுமார் 80, 90 ஆண்டுகளுக்கு முன்பு என்று தெரிகின்றது. அதாவது 1847ஆம் ஆண்டிலேயே இலண்டன் மாநகரத்தில், உலகத்திலுள்ள சமதர்மவாதிகளுடைய மாநாடு ஒன்று நடந்திருப்பதாகவும், அதன் பயனாய் அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது,’ என்று கோடிட்டுக் காட்டினார். இது பலரும் அறிந்த உண்மையே.

சமதர்மம் ஏன் இரஷ்யாவில் முதலில் நடைமுறைக்கு வந்தது? இக்கேள்விக்குப் பெரியார் கூறிய விளக்கத்தைக் காண்போம்.

‘அதை (சமதர்மத்தை) சீக்கிரத்தில் கையாளப்படவும், அனுபவத்திற் கொண்டு வரவும் முயற்சித்த நாடு இரஷ்யாவாக ஏற்பட்டு விட்டது.

‘சரித்திரத்தில் சமதர்ம உணர்ச்சி பெற்றவர்களில், முதன்மையான முக்கியஸ்தர்கள் ஜெர்மானியர்களாயிருந்தாலும், அதற்காக மாநாடு கூடினது இலண்டன் பட்டினமாய் இருந்தாலும், அதற்கு அப்பொழுதே கிளர்ச்சி நடந்தது பிரான்சு நாடாயிருந்தாலும், அது முதன் முதல் அனுபவத்தில் கொண்டு வர முயற்சிக்க வேண்டிய இடம் இரஷ்யாவாகவே ஏற்பட்டு விட்டது, சிலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும், அந்தப்படி ஏற்படுவதற்கு நியாயமில்லாமலில்லை.

‘என்ன நியாயம் என்று வாசகர்கள் கேட்பார்களானால், அதற்கு நமது பதிலாவது: எங்கு அளவுக்கு மீறிய—தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி கொண்டு எழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்?

‘எனவே, இந்த நியாயப்பட பார்ப்போமானால், உலக அரசாங்கங்களிலெல்லாம், இரஷ்ய சார் அரசாங்கமே மிக்க கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கிறது. அதனாவேயே அங்கு சமதர்ம முறை அனுபவத்திற்குக் கொண்டு வர வேண்டியதாயிற்று…’ என்று விளக்கந் தந்தார்.

‘இந்தியாவின் நிலை அதை விட மோசமாயிற்றே. இங்கு ஏன் சமதர்மம் நடைமுறைக்கு வரவில்லை’ என்ற அய்யங்கள் எழுவது இயற்கை. இவற்றை எதிர் பார்த்து, அவர் இவற்றிற்கும் பதில் சொல்லுவதைக் கவனிப்போம். இதோ பெரியார் பதில்:

‘இந்த நியாயப்படி பார்த்தால், அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் இரஷ்ய தேசத்தை விட, இந்தியாவிற்கே முதன்முதலாக ஏற்பட்டிருக்க வேண்டியதாகும். ஆனால், அந்தப்படி ஏற்படாமல் இருப்பதற்கு, இங்கு அநேக வித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும், சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகு ஜாக்கிரதையாகவே கல்வி, அறிவு, உலக ஞானம், சுய மரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு வழி இல்லாமல், காட்டு மிராண்டித் தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது, அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், அதே சூழ்ச்சிக்காரர்கள் வேற்றரசர்களை அழைத்து வந்து, மக்களை மிருகத்தனமான ஆதிக்கத்தால் அடக்கியாளச் செய்து வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன் முதல் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி, இரஷ்யாவிற்கு முதலிடம் ஏற்பட வேண்டியதாயிற்று.’

காலத்தின் கட்டாயத்தால், சமதர்ம உணர்வு இந்தியாவிலும் தலை காட்டுவதைப் பெரியார் சுட்டிக் காட்டினார். நம் மக்களிடையே, சமதர்ம உணர்ச்சி போதிய அளவு வளராமல் போவதற்கும், காரணத்தைக் காட்டினார். உண்மையான, உயிருள்ள அக்கருத்துக்கள் இதோ:

‘இப்போது உலகில் மற்றும் எல்லாப் பாகங்களிலும் ஏற்பட்டு விட்டதின் காரணமாய், இந்தியாவிலும் ஏற்பட வேண்டியது தவிர்க்க முடியாத அவசியமாய்ப் போய் விட்டதால், இங்கும் தலை காட்டத் தொடங்கி விட்டது. ஆனால், உலகில் சமதர்ம உணர்ச்சிக்குப் பகையான தன்மைகளில் மற்ற நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது.

‘அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயம்தான் முக்கியமாய் கருதப்படுகின்றது. அதாவது, முதலாளி (பணக்காரன்), வேலையாள் (ஏழை) என்பதேயாகும். ஆனால் இந்தியாவிலோ, மேல் சாதியார் கீழ்ச் சாதியார் என்பது ஒன்று அதிகமாகவும், முதன்மையானதாகவும் இருப்பதால், அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றி வருகின்றது. ஆதலால், இங்குச் சமதர்மத்திற்கு இருட்டடிப்பு, அதிகமான எதிர்ப்பு இருந்து வருவது கொண்டு, சமதர்ம உணர்ச்சி தலை தூக்க முடியவில்லை.

ஏறத்தாழ, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, பெரியார் நம் சமுதாயத்தைப் பிடித்து வாட்டும் கூடுதல் நோயைக் காட்டினார். சாதிப் பிரிவுகள் இல்லாமையால், பிற நாட்டு ஏழைகள் — அதாவது, பாட்டாளி வர்க்கம், ஒரே அணியில் திரள்வது எளிதாக உள்ளது. உலகப் பாட்டாளிகள் ஒன்றாவது, ஓர் இயக்கமாக உருவாக முடிகிறது. இங்கே சுரண்டப்படும் மக்கள், தங்களைத் தனித் தனிச் சாதிகளாகக் கருதுவதால், நெல்லிக்காய் மூட்டைகளாயிருந்து, அவதிப்படுகிறார்கள்.

சாதியொழிப்பு, தன்னிலையிலேயே முன்னுரிமை பெற வேண்டிய ஒன்றாயினும், சமதர்ம முறைக்குப் பண்படுத்தும் முயற்சியாகவும், அதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/10&oldid=1690312" இலிருந்து மீள்விக்கப்பட்டது