உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியாரும் சமதர்மமும்/20

விக்கிமூலம் இலிருந்து

20. அரசின் அடக்குமுறை:
புரட்சி ஏடு நின்றது பகுத்தறிவு
ஏட்டின் பணி தொடங்கியது

இருபதாம் நூற்றாண்டின், முப்பதுகளில் உலகில் ஒரே சமதர்ம நாடுதான் இருந்தது. அந்த முதல் சமதர்ம நாடு, முதல் தரமான சமதர்ம நாடாக விளங்கியது. இருபது ஆண்டுகளுக்குள் அது சாதித்தவை பல. எல்லோருக்கும் எழுத்தறிவு; எல்லோருக்கும் வேலை; எல்லோருக்கும் நல்வாழ்வு உறுதியாகி விட்டது. அந்த நாட்டின் சிறப்புகளும், சாதனைகளும் இந்தியாவிற்குத் தெரிய ஒட்டாதபடி ஆங்கில ஆட்சி இருட்டடிப்பு செய்தது.

இருப்பினும், பெரியாரின் ‘புரட்சி’ இதழ் வாயிலாக, அவை தமிழ்நாட்டின் மூலை, முடுக்குகளிலும் பரவின. ஒரே சமயத்தில், படித்தவர்களிடையிலும், பாட்டாளிகளிடையிலும் சமதர்ம உணர்வினை வளர்ப்பதில், ‘புரட்சி’ இதழ் இணையற்ற வெற்றி பெற்று வந்தது. அதனால், அன்று இந்தியாவை ஆண்ட ஆங்கில ஆட்சி எரிச்சல் கொண்டது; அடக்குமுறையில் இறங்கிற்று.

‘புரட்சி’யிடம் நன்னடக்கைப் பணம் கேட்டது. பெரியார் அதற்கு உடன்படவில்லை; புரட்சி நின்றது. அதற்குப் பதில் ‘பகுத்தறிவு’ தோன்றியது. எப்போது? 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் கடைசி வாரத்தில். அது தன் கொள்கையை, முதல் தலையங்கத்தில் வெளிப்படுத்தியது.

‘பகுத்தறிவு’ எதற்குப் பாடுபடும்?

‘எங்கும் நிறைந்த இறைவனை வழுத்தவோ,

‘எல்லாம் வல்ல மன்னனை வாழ்த்தவோ,

‘யாதினும் மேம்பட்ட வேதியனை வணங்கவோ,

‘ஏதும் செய்ய வல்ல செல்வவானை வாழிய செப்பவோ, கருதியோ அல்ல; மாறாக, மனித சமூக ஜீவாபிமானத்தையும், ஒற்றுமையையும் பிரதானமாகக் கருதி உழைத்து வரும்.

இந்த அறிவிப்பிற்கு ஏற்றபடியே ‘பகுத்தறிவு’ செயல்பட்டு வந்தது.

தோழர் ப.ஜீவானந்தம், பகுத்தறிவில் தொடர்ந்து எழுதி வந்தார். அவர் ‘எனது கனவு’ என்று பாடிய பாட்டின், சில வரிகளைப் பாருங்கள்.

ஆண்டான் அடிமையெனும் அவச்சொல் அங்கில்லை
ஆண்பெண் பேதம் பாராட்டும் அழிகிறுக் கங்கில்லை
வேண்டும் சுயேச்சைப் பேச்சில் விதிவிலக்கில்லை

மீறும் சட்டதிட்டங்கள் கூறுவோர் இல்லை’

‘பகுத்தறிவு’ தனது தலையங்கம் ஒன்றில்,

‘இந்திய விடுதலை, சமதர்மவாதிகளால்தான் முடியும்’ என்று எழுதியது.

‘தொழிலாளர் நலம்’ என்னும் தலைப்பில் தி.அ.வேங்கடசாமிப் பாவலர் பாடிய பாட்டைப் பகுத்தறிவு வெளியிட்டது. அதில்,

விளைபொருள் செய்பொருள்கள் யாமே—நெற்றி
வேர்வை நிலம்வீழ உழைப்போமே
உழைப்பில்லார் வீட்டில் அவைபோமே—எங்கள்

உள்பசித்தீ புகுந்து வேமே’

என்ற காட்சி உள்ளத்தில் பதிந்தது.

ஏற்கனவே, ‘குடியரசு புத்தகாலயம்’ என்ற பெயரில்,

(1) பொது உடைமைத் தத்துவ வினா விடைகள்
(2) 1917 புரட்சியின் சுருக்கம்
(3) போல்சுவிசம் அல்லது பொது உடைமை
(4) காரல் மார்க்சின் சரித்திரச் சுருக்கம்

—ஆகிய நூல்களை வெளியிட்டு, அரசின் சினத்திற்கு ஆளான ஈ. வெ. ராமசாமி, ‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற தோழர் பகத் சிங் எழுதிய கட்டுரையைத் தமிழில் நூலாக வெளியிட்டார்.

இங்கிலாந்தில் குடியிருந்த சக்லத்வாலா என்ற இந்தியர், சோவியத் நாட்டிற்குச் சென்று வந்தார். அவர், ‘சோவியத் நாட்டில் கண்டதென்ன?’ என்ற தலைப்பில் ஆங்கிலக் கட்டுரைகளை எழுதினார். அதைப் ‘பகுத்தறிவு’ தமிழாக்கம் செய்து, தொடர் கட்டுரைகளாக வெளியிட்டது.

இதற்கிடையில் 1933 சூலையில், இந்திய அரசு பொது உடைமைக் கட்சியைத் தடை செய்தது. சுயமரியாதை இயக்கமும், அதே பணியைச் சுறுசுறுப்பாகச் செய்து வந்ததைக் கண்ட அன்னிய ஆட்சி, அதையும் தடைசெய்ய ஆலோசனை செய்து கொண்டிருந்தது.

அவ்வேளை, ஆர். பால்மர்தத்தா என்பவர் இலண்டனிலிருந்து வெளியான ‘இந்திய அரங்கம்’ என்ற இதழில் ஓர் கட்டுரை எழுதினார். அதைப் ‘பகுத்தறிவு’ தமிழில் வெளியிட்டது. அது அரசின் கண்ணை உறுத்தியது. பெரியாரின் இயக்கத்தை ஓடுக்க நினைத்த அன்னிய ஆட்சி, பகத் சிங்கின் நூலைத் தடை செய்தது.

20-1-1935 அன்று ஞாயிறு பகல் பணிக்குப் ‘பகுத்தறிவு’ அலுவலகம், காவல் துறையால் சோதனையிடப்பட்டது. ஈ.வெ. கிருஷ்ணசாமியின் வீடும் சோதனையிடப்பட்டது. அலுவலகத்திலிருந்து, பகத் சிங்கின் நூல்களைப் பறிமுதல் செய்து எடுத்துக் கொண்டு போயினர்.

29-1-1935 இல் பகுத்தறிவு இதழுக்கும், அதை அச்சிட்ட ‘உண்மை விளக்கம்’ அச்சகத்திற்கும், ரூபாய் 2000 நன்னடக்கை உறுதிப் பணமாகக் கேட்கப்பட்டது. உறுதிப் பணம் கட்டாது, மீண்டும் ‘குடிஅரசை’த் தொடங்கினார்.

இவ்விடத்தில் மற்றோர் தகவலைச் சொல்ல வேண்டும். வட ஆற்காடு மாவட்டம் சோலையார்ப் பேட்டையில், பெரியாரின் இயக்கத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் ‘சமதர்மம்’ என்ற வார இதழைத் தொடங்கி நடத்தத் தலைப்பட்டார். தோழர் ஜீவானந்தம் அதற்குத் துணையிருந்தார். அதற்கு மூவாயிரம் ரூபாய் உறுதிப் பணம் கேட்கப்பட்டது.

பகுத்தறிவு அலுவலகத்தைச் சோதனையிட்டுச் சென்ற பின், 21-2-1935 அன்று காலை 7-30 மணிக்கு, அவ்வார இதழின் ஆசிரியரான பெரியாரின் அண்ணார் ஈ.வெ. கிருஷ்ணசாமி, ஈரோட்டில் கைது செய்யப்பட்டார்.

அதற்கு முந்தைய நாளாகிய 20-2-1935 அன்று இரவு 11 மணிக்கு, தோழர் ஜீவானந்தம் சோலையார் பேட்டையில், கைது செய்யப்பட்டார்.

ஆட்சியின் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் போக்கு எந்த அளவிற்கு இருந்தது?

3-3-1935 அன்று வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்ட ஈ.வெ. கிருஷ்ணசாமியை, ஜாமீனில் விடவும் மறுக்கும் அளவு பழி வாங்கும் போக்கு இருந்தது. அவர் மேல் சாட்டப்பட்ட குற்றம் என்ன? அரச வெறுப்பைத் தூண்டினார். அதற்கு ஆதாரமாகக் காட்டப் பட்டவை எவை? வெளியிட்ட பகத்சிங்கின் நூலின் முதற் பாகமும், குடியரசு தலையங்கம் மூன்றும் ஆகும்.

அடுத்த வார ‘குடியரசில்’ ஈ. வெ. ராமசாமி ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில்,

சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது, பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை ஒழிப்பதும், அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும், அவ்வளவு அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதும், சமுதாய இயலில் சாதி பேதங்களை அகற்றுவதும், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும், பொருளியலில் சமதர்மமும் ஆகும். இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடையே பிரசாரம் செய்யவும், அமுலுக்குக் கொண்டு வரச் செய்யவுமான காரியங்கள் நடைபெற வேண்டுமானால், காங்கிரசு ஆட்சியை விடப் பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகு நாளைய கருத்தாகும் என்று விளக்கம் தெரிவித்திருந்தார்.

‘சமதர்மம்’ என்றாலே கிலி பிடித்திருந்த ஆங்கில ஆட்சி, அதைப் பொருட்படுத்தவில்லை. பெரியாரின் அண்ணன் ஈ, வெ. கிருஷ்ணசாமி தண்டிக்கப்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/20&oldid=1690666" இலிருந்து மீள்விக்கப்பட்டது