பெரியாரும் சமதர்மமும்/29
29. கம்யூனிஸ்டுகள்
வேட்டையாடப் பட்டனர்
பெரியார் அடைக்கலம் தந்தார்
சென்னை மாகாணத்தைப் பொறுத்த மட்டில், பொது உடைமைக் கட்சியின் மேல், கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறையை, கொடுமைகளை ஊரறியச் செய்ததில், முதல் இடம் எவருடையது? தந்தை பெரியாருடையது ஆகும்; அவருடைய இயக்கத்திற்கு உரியதாகும்; ‘விடுதலை’ நாளிதழுக்கு உரியதாகும்.
தந்தை பெரியாருக்கு இருந்த பல சிறப்புகளில் ஒன்று, வருமுன் அறிதல் ஆகும். காங்கிரசு ஆட்சியின் கைகளில் ஒப்படைக்கும் ஆட்சி மாற்றம், வெறும் ஆள் மாற்றமே; அடிப்படைத் தன்மையில், எவ்வித மாற்றமும் இராது; பொதுமக்களுக்குக் ‘கெடுதலையாகவே இருக்கு’மென்று பெரியார் அறிவித்தார்.
ஏதோ பெரியாருக்குத் தெரியாததைத் தாங்கள் தெரிந்து கொண்டிருப்பதைப் போலவும், பெரியாரை விட அதிகமாக இந்நாட்டின் விடுதலைக்குப் போராடியவர்கள் போலவும், சிலர் வெவ்வேறு முத்திரைகளில் விடுதலை நாளைக் கொண்டாடுவதில் பரம்பரை பக்தர்களைப் போல முனைந்தார்கள். அது அடிப்படை ஆதாரம் இல்லாத ஆர்வம் என்பதை அப்போதைய அரசின் கெடுபிடிகள், பொது உடைமைக் கட்சியை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை புலப்படுத்தின.
பொது உடைமைக் கொள்கைக்கும், பொது உடைமைக் கட்சிக்கும் எதிராக முடுக்கி விடப்பட்ட அடக்கு முறை பற்றி பெரியார் என்ன கூறினார்?
‘இந்தியாவை ஆள வந்தோர் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதலாளித்துவ நாடுகளின் தூண்டுதலால், வற்புறுத்தலால். அந்நாடுகளின் ஆட்சிக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி பொது உடைமைக் கொள்கைப் பரப்புதலைத் தடுத்து நிறுத்த முனைகிறார்கள்’ என்று பொருள் படும்படி அறிவித்தார்.சேலம் சிறையில் இருபத்து இரண்டு பொதுஉடைமைக் கட்சியினரைச் சுட்டுக் கொன்றது, தமிழ் மக்கள் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கடலூர் சிறை போன்றவைகளிலும் ‘கட்டுப்பாடு’ என்ற பெயரில், சில படுகொலைகள் நடந்தன. இக்கொடுமைகளைச் சுடச்சுட கண்டித்தது ‘விடுதலை’.
அடக்கு முறை அளவுக்கு மேல் போகும் போது, நேர் எதிர் பலனையே கொடுக்கும். சென்னை மாகாணத்தில் அப்படிப்பட்ட நிலை உருவானது. பொதுமக்கள் காங்கிரசிடம் வைத்திருந்த மதிப்பை இழந்தார்கள். அது ஆட்சிக்கு வந்த பிறகு, காந்தீய வழியை விட்டு, அடக்கு முறை வழிக்குப் போய் விட்டதாக வாக்காளர்கள் கருதத் தொடங்கினார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நான்கு ஆண்டுகளில், காந்தியடிகளின் தலைமையில் பல்லாண்டுகளாகத் திரட்டிய மக்களின் பரிவைப் பறி கொடுத்தார்கள்.
அந்நிலையை உணர்ந்த அனைத்திந்திய பொது உடைமைக் கட்சியின் தலைவர்கள் கூடி, பழைய போராட்ட முறைகளைக் கை விட்டு விட்டு, தேர்தல் களங்களில் இறங்கி, நாடாளுமன்ற, சட்ட மன்றத் தேர்தலுக்கு நின்று, பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவது என்று முடிவு செய்தார்கள். பின்னர், அம்முடிவைப் பம்பாயில் கூடிய மாநாடு உறுதிப்படுத்தியது.
தேர்தலுக்கு நிற்பதென்றால், தேர்தல் உடன்பாடு என்ற நிலை உருவாவது இயற்கை. அத்தகைய உடன்பாடும், கூட்டணியும் ஆங்காங்கே தோன்றின.
சென்னை மாகாணத்தில், காங்கிரசிற்கு எதிராக ஓர் அய்க்கிய முன்னணி உருவாயிற்று. அதற்குத் தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி உதவி செய்தார்; ஆதரவாக நின்றார்; ஆதரவு தரும்படி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
திராவிடர் கழகத்தவர் தேர்தலில் நிற்கக் கூடாது என்னும் கொள்கையை மீண்டும் வலியுறுத்தி விட்டு, வாக்காளர் எவருக்கு வாக்களிப்பது என்று வழி காட்டினார்.
‘பொது மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு, முற்போக்குச் சிந்தனைகளை நசுக்க முயன்ற, காங்கிரசு ஆட்சிகளை வெளியேற்றுவதே குறிக்கோள், பொது உடைமை வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்வது, அதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அப்படிச் செய்யுங்கள்,‘எந்தத் தொகுதியிலாவது, பல வேட்பாளர்கள் நின்று, காங்கிரசிற்கு எதிரான ஒட்டுகளைச் சிதறடித்து, காங்கிரசு வேட்பாளர் வெல்ல வழி செய்து விடுவார்கள் போல் தோன்றினால், அங்கே, அதிக வெற்றி வாய்ப்புடைய காங்கிரசு கட்சியைச் சாராத வேறு கட்சிக்காரராயினும், அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யலாம்’. இத்தகைய வேண்டுகோளை விடுத்தார்.
தந்தை பெரியார், தமது நீண்ட, இணையற்ற, பொது வாழ்க்கைத் தொண்டில், தமது நாட்பட்ட விருப்பு, வெறுப்புகளை விளையாட விட்டது அரிது.
எவரை, எக்கட்சியை எதிர்த்தாலும், அது அவரது மதிப்பீட்டில், அந்நியர் அக்கட்சி பொது நன்மைக்குக் கேடாகச் செயல்பட்டார், செயல்படுகிறார், செயல்படுவார், என்ற முடிவு ஏற்படுவதால் மட்டுமே இருக்கும். அதே மனிதர், அதே கட்சி, பொது நன்மைக்குப் பயன்படும் என்று பட்டு விட்டால், முன்னர் எடுத்த நிலைக்கு நேர்மாறான நிலையை எடுப்பார்; ஆதரிப்பார்; துணை நிற்பார்.
சென்னை மாகாணத்தில், அய்க்கிய முன்னணி முளைத்த பருவத்தில், அப்போதைய இந்திய பொதுஉடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிய தோழர் டாங்கே, தென்னாட்டிற்கு வந்தார். திருச்சியில், பெரியாரோடு கலந்துரையாடினார்; திருச்சியில் இருபதாயிரம் பேர்கள் கொண்ட பொதுக் கூட்டத்தில், தோழர் டாங்கே உரையாற்றினார்.
அப்போது, ‘கம்யூனிஸ்டுகள் காக்கை குருவிகளைப் போல, சுட்டுக் கொல்லப் பட்டதை—கொடுமைப்படுத்தப் பட்டதைப் பெரியாரும், அவரது இயக்கமும் வன்மையாகக் கண்டித்த அளவு, எவரும், எந்த இயக்கமும் கண்டிக்கவில்லை; பெரியார், கம்யூனிஸ்ட்டுகள் பால், காட்டிய அளவு பரிவையும், அவர்களுக்குக் கொடுத்த அளவு ஆதரவையும், இந்தியாவில் வேறு எவரும், எந்த இயக்கமும் கொடுக்கவில்லை’ என்னும் பொருள்பட, நாடறியப் பறை சாற்றினார்.
பின்னர் பம்பாயில் ஒரு பெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய தோழர் டாங்கே, தமது உரையில் ‘சென்னை மாகாணத்தில் செயல்படும் திராவிடர் கழகமும், பொது உடைமைக் கட்சியும் பொதுத் தேர்தலில் ஒத்துழைக்கப் போகிறது.‘வேட்டையாடப் பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரியார் கொடுத்த அளவு, ஆதரவு, அடைக்கலம், வேறு எவரும் கொடுக்கவில்லை.
‘திராவிடர் கழகமும், பொது உடைமைக் கட்சியும், இலட்சிய ஒருமைப்பாடு உடையது.
‘திராவிடர் கழகம் சாதி வேற்றுமையற்ற சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுகிறது. அதோடு, சமதர்ம சமுதாயம் உருவாகவும் உழைக்கிறது.
‘இவ்விரண்டு இலட்சியங்களும், பொது உடைமைக் கட்சியின் குறிக்கோள்கள் ஆகும்.
‘நம் இரு சாராருக்கும் இடையே உள்ள சிறு கருத்து வேறுபாடு, ஒன்றே ஒன்றைப் பற்றித்தான். எது முதல், எது இரண்டாவது, என்பது பற்றியதாகும்.
‘பொருளாதார மாற்றத்திற்கு நாம் முன்னுரிமை கொடுக்கிறோம். திராவிடர் கழகம் சமுதாய மாற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது. அவ்வளவுதான் மாறுபாடு’ என்று பொருள்படப் பேசினார்; பெரியாரையும், அவரது இயக்கத்தையும் பாராட்டி, நன்றிக் கடன் செலுத்தினார்.
பொதுத் தேர்தல் வந்தது. பெரியார், சூறாவளிப் பயணத்தை மேற்கொண்டார்; அய்க்கிய முன்னணிக்கு ஆதரவு திரட்டினார்.
குத்தூசி குருசாமியார், அன்றைய காங்கிரசு ஆட்சி நடைமுறைப்படுத்திய ‘ஆறு அவுன்ஸ்’ பங்கீட்டை வைத்து ‘ஆறு அவுன்ஸ் ஆட்சி’ என்று பெயர் சூட்டினார். பற்றாக்குறை பங்கீட்டால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் மனதில், அது பதிந்து விட்டது. விளைவு?
1952இல் நடந்த பொதுத் தேர்தலில், சென்னை மாகாண சட்ட மன்றத்தின் பேரவையில் காங்கிரசு கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கத் தவறிவிட்டது. மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஒட்டு மொத்தத்தில் பெரும்பான்மையினர் ஆனார்கள். ஆனால், அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி காங்கிரசாக இருந்தது. எனவே அதற்கு அமைச்சரவை அமைக்க வாய்ப்பு கிடைத்தது.அப்போது காங்கிரசிலிருந்து விலகியிருந்த, என்றும் தேர்தல் களத்தில் நிற்காத, சக்ரவர்த்தி இராசகோபாலச்சாரியாரை அழைத்து முதல்வர் ஆக்கினால், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சிலர், ஆச்சாரியாருக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற குறிப்பு கிடைத்தது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரசின் தலைவராக விளங்கிய காமராசர், ஆச்சாரியாரை அழைத்தார்; முதல் அமைச்சராக்கி மகிழ்ந்தார்; ஆதரித்து நின்றார்.
காமராசர் மட்டுமா அப்படிச் செய்தார்? பெரியாரும் ஆச்சாரியார் ஆட்சியை வரவேற்று எழுதினார். எதனால்?
ஆச்சாரியார், கல்கி கிருஷ்ணமூர்த்தியைத் தூது அனுப்பி, ஆதரவு கேட்டதற்குத் தாட்சணியப்பட்டு அல்ல. ஆச்சாரியார் ஆட்சி, நிர்வாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சிக்காரர்களும் தலையிடுவதைத் தடுக்கும் என்று நம்பியதால்; அவரது ஆட்சி நேர்மையாகவும், நாணயமாகவும் நடக்கும் என்று எதிர் பார்த்ததால்; ஆட்சிக்கு வந்து விட்ட ஆச்சாரியாரால், பார்ப்பனரல்லாதாருக்குக் கேடு வராதபடி பெருமளவு தடுக்கும் உபாயமாக ஆதரவு தந்தார்.
ச. இராசகோபாலாச்சாரியாரின் ஆட்சியினுடைய வரலாற்றைக் காட்டுவதற்கு முன், அன்றைய அனைத்திந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கே, திராவிடர் கழகத்திற்கும், தந்தை பெரியாருக்கும், நன்றிக் கடன் பட்டிருப்பதாகக் கூறியதற்குக் காரணத்தைப் பார்ப்போம்.
பொதுவுடைமைவாதிகளை வேட்டையாடியதை எதிர்த்து, பெரியார் போராடினார்; திராவிடர் கழகத் தலைவர் போராடினார்; ‘விடுதலை’ நாளிதழ் போராடியது; நாள் தோறும் போராடியது.
அதில் குத்தூசி குருசாமியார் ‘பலசரக்கு மூட்டை’ என்னும் தலைப்பில் ,ஒவ்வொரு நாளும் தனிக் கட்டுரை எழுதி வந்தார். ஈடு இணையற்ற துணிவோடும், கிண்டலோடும் நாள் தவறாது எழுத எப்படித்தான் முடிந்ததோ; அந்த அடக்கு முறை ஆண்டுகளில், அக்கட்டுரைகள் பொது உடைமையை ஆதரித்தே வரும்? பொது உடைமைக் கட்சியின் மேல் எடுத்த நடவடிக்கையைக் கிண்டல் செய்யும் பாணியில் வரும்.
சேலம் சிறையில், இருபத்து இரண்டு பேர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சில நாள்களில், கல்கத்தா செல்லும் இரயில் வண்டி கவிழ்ந்தது. அது ‘கம்யூனிஸ்டுகள் சதி,’ என்று அதிகார வர்க்கம் சொல்லிற்று. குத்தூசியார் பேனா தாக்கிற்று.
‘இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்ற தலைப்பில் 17-3-1950 அன்று அவர் எழுதியதை அப்படியே பார்ப்போம்.
“கல்கத்தா ரயிலைக் கவிழ்த்த கம்யூனிஸ்டுகளைப் பற்றி, பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக ஒரு பத்திரிகை பிரமாண்டமான ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான கடிதங்கள், உண்மையாகவே வந்து குவிந்தன. கம்யூனிஸ்டுகளைக் கண்ட, கண்ட இடத்தில் சுட்டுத் தள்ள வேண்டும் என்றே எல்லாக் கடிதங்களும், கிட்டத்தட்ட ஒரே மாதி நடையில் எழுதியிருக்கின்றனர். (இந்தச் சேவைக்காக இந்தப் பத்திரிகைக்குச் சென்னை சர்க்கார் 2, 3 இலட்ச ரூபாய் கொடுத்துதவ வேண்டுமென்று சிபார்சு செய்கிறேன்) இக்கடிதங்களைக் கண்டதும், தரைக்கு மேலேயுள்ள இரண்டொரு கம்யூனிஸ்டுகளும் அன்டர் கிரவுண்ட் போயிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நல்ல வேலை செய்தார் ஆசிரியர். குண்டோ, வெடிமருந்தோ செலவில்லாமல் ஆபீசிலுள்ள ஒரு பாட்டில் ‘இங்க்’ செலவிலேயே கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்டி விட்டார். ஏழ்மையில் நெளிந்து கொண்டிருக்கும் இவருக்கும், சர்க்கார் ஏதாவது உதவி செய்யா விட்டால், நன்றி கெட்ட சர்க்கார் என்றே குற்றம் சாட்டுவேன்.
“கல்கத்தா ரயில் விபத்து சேலம் படுகொலையை மறைப்பதற்காகச் செய்யப்பட்டது என்று கம்யூனிஸ்ட் பத்திரிகைகள் குறை கூறுகின்றன. அதாவது, காங்கிரஸ்காரர்களே ஆகஸ்ட் தனம் செய்து விட்டு, அதைக் கம்யூனிஸ்டுகள் தலையில் சுமத்தி, சேலம் சிறைக் கொலைப் பழியிலிருந்து, தங்கள் சர்க்காரைத் தப்ப வைப்பதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடென்றும், அப்படியில்லா விட்டால், எந்த விசாரணையும் நடப்பதற்கு முன்பே, இரயில் கவிழ்ந்த மறு நிமிஷத்திலேயே ‘இது கம்யூனிஸ்டுகளின் நாச வேலை’ என்று பொறுப்புள்ள உத்யோகஸ்தர்களும், இரண்டொரு மந்திரிகளும் அறிக்கை விட்டிருப்பார்களா என்றும் வடநாட்டு கம்யூனிஸ்ட் பத்திரிகைகள் எழுதுகின்றன.
“இது மட்டுமா?
“அந்த ரயிலில் காளா வெங்கட்ராவும் அவரைச் சேர்ந்தவர்களும் போனதால், அவருக்கு விரோதிகளாயுள்ள ஆந்திரத் தலைவர்களின் சதி வேலையாக ஏன் இருக்கக் கூடாதென்றும் எழுதுகின்றன.“இம்மாதிரி எழுதியிருப்பதற்குப் பொருத்தம் இருப்பது போலவே, சில நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. கல்கத்தா ரயில் விபத்தைக் காரணமாகக் காட்டி, சட்டசபைகளிலும், காங்கிரஸ் பத்திரிகைகளிலும், காங்கிரஸ்காரர், காங்கிரஸ் பிரசாரமும், கமயூனிஸ்டு ஒழிப்புப் பிரசாரமும் செய்கிறார்கள். இந்தச் சாக்கில், நமக்கு இரண்டு ஓட்டு கிடைத்தால் போதும் என்று கருதி, காங்கிரஸ் தலைவர்கள், ‘இந்த மாதிரி நாச வேலைக்காரருக்கா, தேர்தலில் ஆதரவு காட்டப் போகிறீர்கள்’ என்று பொது மேடைகளில் பேசி வருகிறார்கள்.
“எப்படியோ போகட்டும். காங்கிரஸ்—கம்யூனிஸ்ட் தகராறு இப்போது நிற்கப் போவதில்லை. இந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஒழிந்தால்தான், மற்றொன்று உயிர் பிழைக்க முடியும். இரண்டில் எதற்குச் செல்வாக்கிருக்கிறதோ, எது உண்மையோ, அது பிழைக்கட்டும்.
“ஆனால், ஒரு சங்கதியை மட்டும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ரயில் விபத்து செய்யும் தேசத் துரோகிகளுக்கு, பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் என்ன தண்டனை விதித்தார்களோ, அதே தண்டனையை விதித்தால்தான், அவர்கள் கொட்டத்தை அடக்க முடியும் என்று யாரோ ஒருவர் எழுதியதாக, காங்கிரஸ் தமிழ்ப் பத்திரிகையொன்றில் வெளியாகியிருக்கிறது.
“என்னைப் பொறுத்த மட்டில், நான் இதை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். கட்டாயம் பிரிட்டிஷார் செய்தது போலச் செய்ய வேண்டியதுதான்.
“சிறைக்குள் இருந்து கொண்டே, ரயிலைக் கவிழ்க்கும் வேலைகளைச் செய்த இந்தக் கூட்டத்தாருக்குச் சிறைக்குள் இனி இடம் அளிககக் கூடாது. இந்திய மந்திரிகள் இவர்களை டெல்லிக்கு வரவழைத்து, ஆட்சியை இவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்களையெல்லாம் மந்திரிகளாக உட்கார வைத்து, இந்த பஞ்ச காலத்தில் இவர்கள் ஆட்சி நடத்த முடியாமல் தத்தளிக்கும்படி செய்ய வேண்டும்.
“வெள்ளைக்காரர்கள் இப்படித்தானே செய்தார்கள். போலீஸ்காரர்கள் மீது தீயிட்டுக் கொளுத்தியவர்கள், சட்டசபையில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தந்திக் கம்பியை அறுத்தவர்கள், ஜில்லா போர்டு தலைவர்களாய் இருக்கிறார்கள். தபாலாபீசைக் கொளுத்தியவர்கள், மாதம் ஆயிரம் இரண்டாயிரம் சம்பாதிக்கிறார்கள். ரயிலைக் கவிழ்த்தவர்கள், மந்திரிகளாய் இருக்கிறார்கள்:“இவ்வளவும் செய்யத் துணியாத ‘ஆகஸ்ட் துரோகி’ ஆச்சாரியாரை முதலில் மாகாணத்தை விட்டே விரட்டி, இப்போது அடையாற்றில் அக்கடா என்று உட்கார வைத்திருக்கிறார்கள்.
“ஆகவே, வெள்ளைக்காரர் நாச வேலைக்காரர்களைத் தண்டித்தது போல், செய்ய வேண்டுமானால், காங்கிரஸ் மேலிடத்து மந்திரிகள், கம்யூனிஸ்டுகளை மேற்கண்டபடிதான் செய்ய வேண்டும்.
“ஒருக்கால் இப்படியெல்லாம் செய்வார்களென்று கருதித்தான், கம்யூனிஸ்ட் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் இரகசியமாக முன் கூட்டிப் பேசிக் கொண்டு, இந்த நாடகத்தை நடத்துகிறார்களோ என்று கூட, சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
“இல்லாவிட்டால் இந்த மாதிரியாகக் காங்கிரஸ் பத்திரிகையிலேயே ஒருவர் எப்படி எழுத முடியும்?
“இதெல்லாம் அரசியல்! நம்மைப் போன்ற பாமரர்களுக்கு—நாச வேலையால் நஷ்டமும், உயிர்ச் சேதமும் அனுபவிக்கிறவர்களுக்கு இந்த மாதிரி அரசியல் தந்திரமெல்லாம், விளங்கவே விளங்காது.
“சும்மா காட்டுக் கூச்சல் போடாதீர்கள். உங்கள் பிரசங்கமோ, எழுத்தோ, எந்த முட்டாளும் புரிந்து கொள்ள முடியாது.
“எங்களிடமிருந்து ஆட்சியைப் பிடுங்க வேண்டுமானால், நாங்கள் என்னென்ன காரியங்கள் செய்தோமோ, அவைகளை நீங்களும் செய்தால்தான் நல்லது. இல்லாவிட்டால், பொது மக்கள் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள். பொறுப்பில்லாமல், அதிகாரத்தை வீசி எறிந்து விட்டார்கள் என்று சொல்ல மாட்டார்களா?
“நாங்கள் வெள்ளையனிடத்திலிருந்து அதிகாரத்தை வாங்கியது போலவே, நீங்களும் வாங்கிக் கொள்ளுங்களேன்” என்று கூறி, காங்கிரஸ் தலைவர்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஒருக்கால், ஏதாவது இரகசிய ஒப்பந்தம் செய்திருக்கலாமோ.
“இதில் ஏதோ மர்மமிருக்கிறது! தகப்பனுக்கும், பிள்ளைக்கும் நடக்கிற சண்டை மாதிரியே இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்களாகிய நாம் சமாதானம் செய்து வைப்பதில் கூட, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; அளவுக்கு மீறித் தலையிடக் கூடாது”
தொடர்ந்து காட்டிய பெரியாரின் ஆதரவு பயன் பட்டதா?