உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியாரும் சமதர்மமும்/32

விக்கிமூலம் இலிருந்து

32. காமராசர் முதலமைச்சரானார்

சில திங்களுக்குப் பின், சென்னை மாநில சட்டமன்றம் கூடிற்று. அப்போது உறுப்பினர் ஒருவர் கேள்வியொன்று கேட்டிருந்தார். அது குலக் கல்வித் திட்டம் பற்றியது.

புதிய கல்வித் திட்டத்தால், பள்ளிக்கு வருவோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறதா? மாவட்ட வாரியாகப் புள்ளி விவரங்களைக் கேட்டிருந்தார்.

புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன; சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டன. அவை புலப்படுத்தியது என்ன?

‘இரண்டொரு மாவட்டங்கள் நீங்கலாக, பெரும்பாலான மாவட்டங்களில், எதிர்பார்த்ததற்கு மாறாக பள்ளிக்கு வருவோர் வருகை, பெரிதும் குறைந்து விட்டது’—இப்படி முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார் பதில் அளித்தார்.

நோயாளிக்குக் கொடுத்த மருந்து, நோயை அதிகமாக்கி விட்டதை உணர்ந்த மருத்துவர், அம்மருந்தைக் கை விட வேண்டியதுதானே?

கூடுதலாகப் பிள்ளைகளைச் சேர்க்க உதவும் என்ற சாக்கில், அரை வேளைப் படிப்பைக் கொண்டு வந்தவர், அதற்கு நேர் மாறான விளைவைக் கண்ட பிறகு, அதைக் கை விட்டு விட வேண்டியதுதானே! அதைத்தான் அவருடைய கட்சியார் எதிர்பார்த்தார்கள்.

நடந்ததோ வேறு வகையாக இருந்தது. அத்திட்டத்தை நியாயப்படுத்தும் சிறு குழுவொன்றை நியமித்தார்; ஆதரவாக அறிக்கை பெற்றார். அரசின் திட்டங்களை மெய்யாக விமர்சிக்கும் உரிமை, வெள்ளையனோடு வெளியேறி விட்டதே! குலக் கல்வித் திட்டம் தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

தன் ஆட்சிக்குத் தொல்லை கொடுக்கவே, பெரியாரும், திராவிடர் கழகமும் அப்பாட முறையை எதிர்ப்பதாக, ஊர், ஊராகப் பொய்யைப் பரப்ப ஆட்களை முடுக்கி விட்டார். திராவிடர் கழகத்தின் எதிர்ப்பை ‘தேச பக்தர்கள்’ சமாளித்துக் கொள்வார்கள் என்று சாடை காட்டி, உசுப்பினார். அப்புறம் கேட்க வேண்டுமா?

திருச்சி போன்ற சில நகரங்களில், இராஜாஜியின் ஆதரவாளர்கள், வன்முறையில் இறங்கினார்கள்; திராவிடர் கழகத்தவர்களைத் தாக்கினார்கள். அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. போதிய விழிப்போடு, தடுக்கவில்லை; வன்முறையாளர்களின் துணிச்சல், விவேக வரம்பைத் தாண்டி விட்டது.

திருச்சியில், பெரியார் சென்று கொண்டிருந்த வேனை மடக்கி, அட்டகாசம் செய்தார்கள்; வண்டிக்குச் சேதம விளைத்தார்கள். பெரியாரையும் தாக்க முயன்றார்கள். அக்கம் பக்கத்தவர்கள் வந்து, நிலைமை மேலும் மோசமாகாதபடி, காப்பாற்றினார்கள். அச்செய்தி அறிந்து, ஆயிரக் கணக்கானவர்கள், பெரியார் மாளிகைக்கு வந்து குவிந்து விட்டார்கள். பெரியார், பொறுமையின் திருவுருவமாக இருந்து, அவர்களை அமைதிப் படுத்தாதிருந்தால், என்ன ஆகியிருக்குமோ?

அடுத்து, சேலம் மாவட்டம் ஆத்தூரில், திராவிடர் கழக மாநாடு நடந்தது. தந்தை பெரியார் ஆலோசனைப்படி, திராவிடர் கழகத்தவர்கள், தற்காப்பின் பொருட்டு, சட்ட வரம்பிற்குட்பட்ட சிறு கத்தியை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அதைப் பயன்படுத்த, பெரியார் விடவில்லை.

‘சூத்திரன் என்றால், ஆத்திரங் கொண்டு அடி,’ என்று முழங்க வைத்த பெரியார், என்றும வன்முறைக்கு இடங் கொடுத்ததே கிடையாது. அமமுறையும் இடங் கொடுக்கவில்லை. ஊர் ஊராகச் சென்று, குலக் கல்வித் திட்டத்திற்கு எதிரான கருத்தை வளர்ப்பதில் மட்டுமே, முழு மூச்சுடன் ஈடுபட்டார்.

மக்கள் எதிர்ப்பு பெருகப் பெருக, குலக் கல்வித் திட்டத்தைக் கை விட்டால்தான், தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சி தன் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்பது, காங்கிரசாருக்குப் புலப்பட்டது. ஆச்சாரியாரோ, அடம் பிடித்தார்.

‘இராமானுசரும், மாதவரும் சீடர்களைக் கேட்டா இயங்கினார்கள்?’ என்று கேட்கத் தலைப்பட்டார்.

குலக் கல்வியைத் தொடர்ந்து நடத்துவதற்கு இடமளித்தால் மட்டுமே, தான் முதலமைச்சராக இருக்க இசைவதாகவும், இல்லாவிட்டால், வேறு முதல்வரைத் தேடிக் கொள்ளும்படியும் கூறி விட்டார்.

தன் சார்பில், திரு. சி. சுப்ரமணியத்தைச் சட்டமன்றக் கட்சித் தலைமைக்கு நிறுத்த முடிவு செய்திருப்பதாக, இராஜாஜி அறிவித்தார். அப்படியென்றால் பொருள் என்ன?

தன்னால் நடைமுறைப் படுத்த முடியாத குலக் கல்வித் திட்டத்தைத் தனது தளபதி சி. சுப்ரமணியத்தைக் கொண்டு, செயல் படுத்த முயல்வது தெளிவாயிற்று. அத்திட்டத்தைக் கை விட இசைகிற வேறு ஒருவரை தலைமைப் பதவிக்குத் தேடும் பொறுப்பு, காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது. இவர் பெயரும், அவர் பெயரும் அடிபட்டது. இவருக்கு எவ்வளவு பேர்கள் வாக்களிப்பார்கள்? அவருக்கு எவ்வளவு பேர்கள் வாக்களிப்பார்கள்? இப்படிக் கணக்குப் போட்டுப் பார்த்தார்கள். டாக்டர் சுப்பராயன் போட்டியிட ஒப்புக் கொண்டால், வெற்றி வாய்ப்பு இருக்கலாமென்று தோன்றிற்று. டாக்டர் சுப்பராயனை வேண்டினார்கள். அவர் மறுத்து விட்டார். ஏன்? இராஜாஜியை எதிர்த்து வெற்றி பெற்றாலும், அவரும் அவரைச் சார்ந்தவர்களும் ஆள விட மாட்டார்கள் என்று அஞ்சினார்.

அந்நிலையில், காமராசர் போட்டியிட்டால்தான், இராஜாஜி குழுவை வென்று, குலக் கல்வித் திட்டத்தைத் தொலைக்க முடியும்; பொதுமக்களுடைய கல்விக்கு உதவ முடியும் என்பது புலனாயிற்று. காங்கிரசு அமைப்புப் பணிகளிலே மகிழ்ச்சி கொண்டிருந்த காமராசர், பதவிக் கால் கட்டுகளை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அக்கால கட்டத்தில், காமராசர் அய்ந்தாறு முறை, குத்தூசி குருசாமியார் வீட்டிற்கு வந்து, அவரோடு இரகசியமாகப் பேசி, யூகம் வகுத்தார்.

அவர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட நல்லெண்ணம், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டமை, பெரியார் ஈ.வெ. ராமசாமி, காமராசரைக் கண்டு பேசத் துணையாயின.

காமராசர், காங்கிரசு சட்டமன்றக் கட்சியின் தலைவராக, பெரும்பான்மையான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப் பட்டார். வெற்றி வேளையிலும், காழ்ப்பு இல்லாது நடந்து கொண்ட காமராசர், போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன் மொழிந்த மீ. பக்தவத்சலத்தையும், தனது அமைச்சர் அவையில் சேரும்படி அழைத்தார். அவர்களும் உடன்பட்டு உதவினார்கள்.

காமராசர் முதலமைச்சரானது, ஓரளவு எளிதாகவே இருந்தது. ‘அவரால் தொடர்ந்து நீடிப்பது இயலாது; ஓராண்டின் முடிவிலாவது, புதிய ஒருவரிடம் கொடுத்து விட்டுப் போய் விடுவார்’ என்று காமராசரை வட்டமிட்டுக் கொண்டிருந்தவர்களே எண்ணினார்கள், இராஜாஜியைச் சேர்ந்தவர்களோ, காமராசரை வீட்டிற்கு அனுப்பி, பழி தீர்த்துக் கொள்ள, ஓயாது முயன்றார்கள்.

காமராசரின் விவேகம், எல்லோருடனும் அன்பாகப் பழகும் எளிமை, நேர்மை தன்னலமின்மை, சாதி நலம் பாராது மக்கள் நலனுக்கானவற்றைத் துணிந்து செயல்படுத்தியவை, ஆகிய சிறப்புகள், காமராசர் பல்லாண்டுகள் ஆட்சி புரிய உதவிற்று. இவை அத்தனையும் உதவியதைக் காட்டிலும், அதிகமாகப் பெரியாரின் ஆதரவு உதவியது என்பது மிகையல்ல.

முதல் அமைச்சர் காமராசரின் சாதனைகளைக் காங்கிரசார் எடுத்துச் சொன்னதை விட, செம்மையாகப் பெரியாரும், அவரைச் சார்ந்தவர்களும் மக்களிடம் பரப்பி வந்தார்கள்.

முன்னர் முடியாதது எல்லாம், காமராசர் காலத்தில் முடிந்தது.

நாள்தோறும் எண்ணற்ற ஏழைகள், முதல் அமைச்சரைக் காண முடிந்தது; குறைகளைச் சொல்ல முடிந்தது. ‘பார்க்கலாம்’ என்பதற்கு மேல் பிடி கொடுக்காமல் அனுப்பினாலும், போக்க வேண்டிய குறைகள் விரைவில் போக்கப்பட்டன. கட்சிக்காரர்களும், சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. கட்சிக்காரர் என்பதனால், எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்னும் நிலை ஏற்படவில்லை. கட்சிக்காரர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒரே தராசு. இப்படி நிர்வாகம் சீர்பட்டது.

நல்ல நிர்வாகமே போதுமென்றால், வெள்ளைக்காரனை விரட்டியிருக்க வேண்டாமே! தன்னாட்சி, எல்லோர்க்கும் வாழ்வளிக்க அல்லவா பயன்பட வேண்டும்?

எல்லோரும் புது வாழ்வும், நல்வாழ்வும் பெற ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுவே கல்வி வளர்ச்சி. அதில் காமராசர் புரிந்த சாதனை இணையற்றது.

காமராசர், முதல் அமைச்சர் ஆனதும், குலக் கல்வித் திட்டத்தை ஒழித்து விட்டார். பழையபடி, முழு நேரப் படிப்பிற்கு ஆணையிட்டார்; இல்லை ஆணையிட வைத்தார். கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியத்தைக் கொண்டு ஆணையிடச் செய்தார். அடுத்து? வளர்ச்சி.

வெள்ளைக்காரர்கள் வெளியேறிய போது, தமிழகப் பகுதியில், 14,000 தொடக்கப் பள்ளிகளை விட்டுச் சென்றார்கள். ஆயிரம் மக்கள் கொண்ட ஊர்களில் கூட தொடக்கப் பள்ளி, தொடங்காமல் போய்ச் சேர்ந்தார்கள்.

அவர்களிடமிருந்து ஆட்சியைப் பெற்றவர்கள் சாதித்தது என்ன? ஏழு ஆண்டுகளில் எண்ணிக்கையைப் பதினாறு ஆயிரம் ஆக்கினார்கள். அதாவது, ஆண்டுக்கு சராசரி முன்னூறு புதிய தொடக்கப் பள்ளிகள் அவ்வளவே. காமராசர் திட்டம் என்ன? அய்ந்து வயதுக் குழந்தை போய் வர வசதியாக, எத்தனை பள்ளிகள் தேவைப் பட்டாலும், திறக்கச் செய்தார்கள். அவருடைய பொற்காலத்தில், தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தைத் தாண்டிற்று. அதற்கு மேல், பள்ளிக்குத் தேவை ஏற்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/32&oldid=1691027" இலிருந்து மீள்விக்கப்பட்டது