பேசும் ஓவியங்கள்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
வீரமுண்டோ ? மதன்கை அன்பினால்
- எழுத்து வீழுகைக்கு
நேரமுண்டோ ? வஞ்சி நேர்பட்ட காலை
- இந்நெஞ்சை விடப்
பேரமுண்டோ? சொல்லொண்ணாத
- காமப்பெரு நெருப்புக்கு
ஈரமுண்டோ ? ஐயனே! என்ன
- பாவம் இனிச் சொல்வதே !
- கம்பர் மகன் - அம்பிகாபதி.
பெண்ணரசே! பெண்ணரசே! திரும்பக் கூடாதா? என்
பித்துமனத் தன்புணர்வை விரும்பக்கூடாதா?
கண்மணியே காவியமே வரவும் கூடாதா? நின்
காதல் மொழியின் யாழ் குரலை தரவும் கூடாதா?
தண்டமிழே இசைவடிவே! நெருங்கக் கூடாதா? நான்
தாமரை மொட்டிதழிலே தேன் அருந்தக்கூடாதா?
வெண்ணிலவே நின்னழகில் களிக்கக் கூடாதா? நின்
விருந்தினனாய் இன்பக்கடல் குளிக்கக் கூடாதா?
பொழியும் காதல் விழிப்பாட்டை உண்ணக்கூடாதா? நின்
பொங்கி எழும் வனப்புடலை எண்ணக் கூடாதா?
மொழியும் இசைத் தேனலையில் உலவக் கூடாதா? நான்
முத்தமிட்டு முத்தமிட்டுக் குலவக் கூடாதா?
எழில் தோளில் இணைந்துன்னில் படரக் கூடாதா? நாம்
இன்பவாழ்வுக் காதைதனைத் தொடரக் கூடாதா?
வழிகாட்டி வள்ளுவத்தைப் படிக்கக் கூடாதா ? நாம்
வாழ்க்கைக்கலை நாடகத்தை நடிக்கக் கூடாதா?
நாணமென்னடி - பெண்ணே
நாணமென்னடி?
காணக்காண இன்பம் நல்கும்
கலைவிழியின் மனமொழிகள்
பூணணிந்த புதுப்பெண்ணைப்போல்
பூவில் மறைந்த தேனினைப்போல்
நாணமென்னடி பெண்ணே
நாணமென்னடி?
முன்னும் பின்னும் தெரியாதா ?
உறவு முறையும் புரியாதா ?
அன்பு கொண்ட நெஞ்சினுக்குள்
அலைபவனும் நானல்லவா ?
நாணமென்னடி - பெண்ணே
நாணமென்னடி?
வானம்பாடிக் குருவியைப்போல்
வன்னக்குயில் தேனிசைபோல்
நானெழுதும் பாட்டிசைக்கும்
நல்லமுதே! பொன்மயிலே
நாணமென்னடி - பெண்ணே
நாணமென்னடி?
தனித்திருந்தால் நகைக்கின்றாய்
தவிப்பினாலும் துடிக்கின்றாய்
எனினும் பிறர் கண்டுவிட்டால்
இளமான் போல் மறைகின்றாய்
நாணமென்னடி - பெண்ணே
நாணமென்னடி?
தொட்டு தொட்டு பயின்றதெலாம்
தொலைவிருந்து பார்த்ததெலாம்
நட்புறவின் செயல்களன்றோ
நானுனக்கு என்பதன்றோ
நாணமென்னடி - பெண்ணே
நாணமென்னடி?
முளிதயிரைக் கையிலேந்தி
முகத்தினிலே முறுவலேந்திக்
களிப்புடனே பெண்ணரசி வந்திட்டாள் - அவள்
காதல் பாடல் விழிகளிலே தந்திட்டாள்!
கிளியளகுச் செவ்விதழ்கள்
கேண்மைமிகு சொல்மிழற்றி
உளிபடாத சிற்பமவள் வந்திட்டாள் - அவள்
ஒப்பிலாத காதலன்பைத் தந்திட்டாள்!
வானவில் குழம்பெடுத்து
வன்னக்கலை ஓவியத்தில்
நானெழுதும் புத்துருவாய் வந்திட்டாள் - தன்னில்
நம்பிக்கையை வைத்தி டெனத் தந்திட்டாள்!
கானகத்துத் தென்றலிலே
கலந்து வரும் தேன்மணம் போல்
பூநகைகொண் டென்னருகில் வந்திட்டாள் - மனப்
புத்துணர்வைக் கொள்கஎனத் தந்திட்டாள்!
கூந்தல் அவிழ்ந்து குலுங்கையிலே நெஞ்சம்
கூத்திட் டுவந்து களித்திடுதே !- கடல்
ஏந்தும் அலைச்சுருள் வண்ணத்திலே குழல்
இன்பக் குதிப்பினை ஊட்டிடுதே !- அடி
நீந்தும் நிலாவொடு நீலமுகிற்குலம்
நேர்பட்டதாய் முனம் தோன்றினையே - உனை
மாந்த வருகென தாழ்ந்துவரவேற்கும்
மாலுளம் போல் தவழ்ந்தாடிடுதே !
(கூந்தல்)
பின்னி முடியாத கூந்தலிலே உள்ளம் பின்னிக்கிடந்திசை பாடிடுதே !- அடி அன்புடையான் கண்ணில் அன்பின் இசைவெலாம் அன்புக்குகந்த அரும்பொருளோ ! புகழ் வண்ண மயில் தோகைவடமிட்டாடல் போல் வார் கூந்தலோ இன்னைக் காண்கையிலே - உடன் என்னை இழக்கிறேன் அன்பின் சிறகினால் இன்பவான் எல்லையில் நீந்துகிறேன்
(கூந்தல்)
நாம் இருவர் ஒன்று சேர்ந்து
நடந்துவரும் போது - கொள்ளும்
நன்மகிழ்வின் இன்பத்தினை
நவில உவமை ஏது?
பூம்பொழிலில் துள்ளியாடும்
புத்திளமை மான்போல் - ஒரு
காம்பலர்ந்த இருமலராய்
களித்து வந்தோம் தேன் போல் !
தோளினோடு தோள் உராய்ந்து
தோய்ந்து வரும் போது - நமில்
துளிர்த்து மலரும் உணர்ச்சினை
சொல்ல மொழியும் ஏது?
மூளுமனக் கனவிரண்டும்
மொழியில் ஆடிப்பாடி - நமில்
முத்து முத்தாய் காதல் அலை
முழங்கியதே கோடி!
விழி நான்கும் நமை மறந்து
விருந்தருந்தும் போது - விளை
வேட்கைக்கிணை விளம்புதற்கு
வையமீதில் ஏது?
மொழி மிழற்றி அயரும் உலா
முட்டுமானத் தின்பம் - கொண்டோம்
மூதுலகம் எவ்வழியில்
மூட்டிவிடும் துன்பம் !
கோடிமயிற் கூட்டத்திலே
- குஞ்சுமயில் தாயைத்
தேடிகண் டுவப்பதைப்போல்
- தேடி கண்டாய் என்னை !
ஓடிவரும் குற்றாலத்தேன்
- ஒளிப்புனலின் கூத்தில்
ஆடி மகிழ்ந்தினிப் பதைப்போல்
- அணைத்துக்கொண்டேன் உன்னை!
உயர்ந்துயந்து வானுலாவி
- இசைக்கும் வானம்பாடி
முயற்சி இன்றி கூடெய்தல் போல்
- மொய்த்தெனையே என்னை !
நயமிகுந்த கலையுணர்வு
- நல்குசங்கப் பாடல்
பயன் தெரிந்த சுவைஞனைப்போல்
- படித்துணர்ந்தேன் உன்னை !
கண்ணிறைந்த மலர்கள் பல
- கயத்திருந்த போதும்
வெண்டாமரைகொள் கலைமகள் போல்
- விரும்பி கொண்டாய் என்னை !
விண்கதிர்கள் பலவிருக்க
- வேண்டிடாது ஞாயிற்
றொண்கதிர்க்கே மகிழ்மரைபோல்
- உவந்து கொண்டேன் உன்னை! தாய்உடலில் தடமுலையைத்
- தழுவி அமுதம் உண்ணும்
சேயின் அருமைத் திறத்தினைப்போல்
- சிரித்துக் கண்டாய் என்னை !
ஆய்வுக்கள் ஆடியிலே
- அறிந்த புதுமை கொண்டு
தோய்ந்ததிலே புகழ்பெறல் போல்
- துணைகொண்டேன் நான் உன்னை!
கலையுணர்வு பலர்க்கிருந்தும்
- கற்பனைப்பொற்சிறகு
புலவன் மொழிக் கிணைவுறல் போல்
- புணர்ந்து கொண்டாய் என்னை !
பல மொழிகள் கற்றிருந்தும்
- பழகு தாயின் மொழிபால்
நலனுகரும் உயிர் உளம்போல்
- நானிணைத்தேன் உன்னை !
அருந்தமிழ் நூல் பலவிருந்தும்
- அரியநூ லென்றேத்தத்
திருக்குறளைத் தேடிடல் போல்
- தேடிக்கொண் டாய் என்னை !
வரும் புகழுக் கெழுதிடாத
- வண்ணப் பாடல் சிற்பம்
கருத்துணர்ந்து தருவதொப்ப
- களித்துக் கொண்டேன் உன்னை !
பாடொரு பாட்டெனக் கேட்ட அளவினில்
- பண்ணமிழ் தூட்டினையே - அடி
நாடொறும் அவ்விசை நல்கி எனை உனில்
- நல்லின்பம் கூட்டாயோ? பூக்
காடமர் பொற்குயில் காலம் தவறி ஓர்
- காலத்தில் பாடாதே - அதற்
கீடெனச் சொல்லிடில் அவ்விசைச் சொற்பொருள்
- ஏந்தி இசைப்பதுண்டோ ?
தேனார் இசைக்கடல் சீத ஒளிபொழி
- தேன்மதி கண்டது போல் - பொழிற்
கானாற் றமிழ்திசை கல்லொடும் பூவொடும்
- காதல் மொழிதரல்போல் - மணப்
பூநாடிக் கள்ளுணும் பொன்வண்டினமுரல்
- பொங்கிடும் யாழ் இசைபொல் - அடி
மானே இளங்குத லைமொழி இன்னிசை
- மண்டி மயக்கும் எனை !
முகர்ந்தளித்த மலரெடுத்து
முகரும் போதினில் - நின்
அகமலர்ந்த கனவனைத்தும்
அதில் இனிக்குதே!
குவளை கொண்ட நீரருந்தி
கொடுத்த போதினில் - நின்
உவமை இலா இதழ் இனிப்பே
ஊறிப் பொங்குதே!
கனிவாயால் கனிகடித்து
கனிந்தளிக்கையில் - நின்
கனி உடலின் சுவையனைத்தும்
களிப்பளிக்குதே!
புலவன் தொட்டப் பொருளனைத்தும்
புகழ்பெறல் போலோட காதல்
நலன் நுகர்ந்த பொருளனைத்தும்
நயம் சிறக்குதே!
பாட்டெழுதிடத் தாளெடுத்திடில்
பாவையே நின் எண்ணம் !- மொழி
ஓட்டத்தின் பின்னர் காதலின் மன
உயிர் உருக்கிய வண்ணம்!
திரையினில் எழில் ஓவியத்தினைத்
தீட்டிடில் அதில் நீயே - சிறு
வரைவிலும் உடல் நெளிவழகினை
வகுத்துணர் வளிப்பாயே !
யாழெடுத் திசை மனந்தழுவையில்
யானென முனம் நிற்பாய் - பண்
ஏழிசைதொறும் காதலின் மொழி
இணைத்துவப்பைப் பொற்பாய் !
கல்லெடுத்துரு செதுக்க எண்ணிடில்
கற்பனைக்குனைத் தருவாய் - உளி
மெல்லியல்புடன் நடமிடுகையில்
மிதந்து சிற்பமாய் வருவாய் !
உனக்கெனக்கும் அமைந்த காதல்
உறுதி வாய்ந்தது - நம்
உளம் நிறைந்தது
கனவுபோலத் தோன்றி மறையும்
கற்பனை இல்லை - வெளிக்
கானல் நீரில்லை !
பொன்னில் உறையும் மின்னொளிபோல்
புகழ் நிறைந்தது - மறைப்
புதிர் நீ விரைந்தது
வன்னமலர் வாசம் போல
வளம் நிறைந்தது - தேன்
வண்மை சிறந்தது !
விண் நிறைந்த கோள்முதல் போல்
வியப்பொளிர்வது -- நல
விருந்தளிப்பது !
உண்முகத்துச் சிந்தனைப்பண்
ஓங்கு காவியம் - மனம்
தேங்கு ஓவியம் !
பொன்னெடுத்துத் தீயிலிட்டு
- புத்துணவினால் - உளப்
- புத்துணர்ச்சியால்
மின்னும் பல அணிகலன்கள்
- விரியச் செய்யினும் - அதன்
- மேன்மை குறையுமோ?
காதல் தீயில் வாழ்வின் மூசை
- கனம் உருக்கியே - கலை
- கமழ வார்த்திடில்
ஓதரிய நின் வடிவம்
- உருவ மாகிடும் - நீ என்
- உருவமாக்குவாய் !
தேனாரிசைச் தமிழைத்தரு
திருவாழ் இளங்குதலை
தித்தித்திடும் கனிவாயிதழ்
திளைக்கத் தரும் முத்தம்!
ஊனாரிசை உயிரும் உள
உணர்வும் எழிற் கனவும்
உணர்ச்சிப் புயலாகி இதழ்
தென்றல் கமழ் முத்தம்!
வானாரிசை குளிர் திங்களில்
செவ்வாய் மலர்ந் தினித்தே
வந்தென்மடி நகையாடியே
வழங்கும் கனி முத்தம்!
நானார், அவள் யாராமென
எண்ணாதுயிர் ஒன்றும்
நட்பின்மனப் கோப்பாக இதழ்
நான்கின்திணி முத்தம்!
ஆனாதுழல் காலம் செலும்
இளமை செலும் ஆனால்
அன்பின் அணைப் பிணிப்பை நிலை
அச்சாக்கிடும் முத்தம் !
தானார்ந்திசைப் பொன்னிப்புனல்
தழுவத்தளிர் புலம் போல்
தன்னேரிலா வாழ்வின் சுவை
தருமால் இதழ் முத்தம்!
.