உள்ளடக்கத்துக்குச் செல்

பொய்மான் கரடு/சின்னமுத்துக் கவுண்டர்

விக்கிமூலம் இலிருந்து

சின்னமுத்துக் கவுண்டர்

போலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் பிறகு அதே லாக் அப்பில் இன்னொரு அறையில் இருந்த குமாரி பங்கஜாவைப் பார்க்கச் சென்றார். போலீஸ்காரரைப் பார்த்ததும் பங்கஜா கண்ணீர் விட்டுக் கதறி அழுது விட்டாள். "நீங்கள் சொன்னதைக் கேட்காதபடியால் இந்தக் கதிக்கு வந்தேன். அந்தப் பாதகர்கள் என்னை இப்படிப் படுகுழியில் தள்ளிவிட்டார்கள்! நீங்கள் தான் என்னைக் காப்பாற்றவேண்டும்!" என்றாள்.

"நடந்தது நடந்தபடி எல்லாவற்றையும் சொன்னால் உன்னைக் காப்பாற்றப் பார்க்கிறேன்! ஒரு விஷயத்தையும் என்னிடம் மறைக்கக்கூடாது!" என்றார் போலீஸ்காரர்.

"இல்லை; மறைக்கவில்லை. உங்களிடம் சொல்லாமல் மறைத்து வைத்ததனால்தானே இப்படிப்பட்ட கதியை அடைந்தேன்! எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்!" என்றாள் பங்கஜா. அவள் தட்டுத் தடுமாறி முன்னும் பின்னுமாய்ச் சொன்னதன் சாராம்சம் இதுதான்: குமாரி பங்கஜாவும் அவள் குடும்பத்தினரும் மலாய் நாட்டிலிருந்து சொத்து சுதந்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு வந்தவர்கள். வரும் வழியில் தகப்பனாரையும் பறி கொடுத்தாள். போலீஸ்காரரிடம் ஆரம்பத்தில் அவள் நாலு அணா யாசகம் வாங்கியதற்குக் கூறிய காரணமும் உண்மையேயாகும். இதற்கிடையில், பங்காருசாமி என்பவனிடம் அவளுக்கு அறிமுகம் ஏற்பட்டது. போலீஸ்காரரிடம் கேட்டதுபோல் அவனிடம் அரிசி வாங்க நாலு அணா கேட்டதிலிருந்து அந்த அறிமுகம் உண்டாகி வளர்ந்தது. பங்காரு சாமி அடிக்கடி, "உன்னைப் போன்ற அழகும், முகவெட்டும் படிப்பும் புத்திசாலித்தனமும் உள்ள பெண் எதற்காக இப்படிப் பிச்சை எடுக்க வேண்டும்? சினிமாவில் சேர்ந்தால் பிரபல நட்சத்திரமாகி லட்சக்கணக்காகப் பணம் சேர்க்கலாமே!" என்று போதனை செய்து வந்தான். அதிலிருந்து சினிமாவில் நடிக்கும் சபலம் அவளுக்கு ஏற்பட்டது. பங்காருசாமி அடிக்கடி அவளைச் சந்தித்துத் தூபம் போட்டு ஆசையை வளர்த்துவந்தான். குமாரி பங்கஜா மலாய் நாட்டில் சுயேச்சையாக வளர்ந்தவள். வரும் வழியில் பல அநுபவங்களைப் பெற்றவள். ஆகையால் அவளுக்கு மற்றப் பெண்களைப் போல் அவ்வளவு நாணம், அச்சம், சங்கோசம் முதலியவை இருக்கவில்லை. பங்காருசாமி ஒரு சமயம் அவளை ஒரு சினிமா முதலாளியிடம் அழைத்துப் போனான். அதே சமயத்தில் இன்னொரு பிரபல சினிமா நடிகை வந்திருந்தாள். அந்த நடிகை சிரித்தால் அரைப் பைத்தியம் மாதிரி இருந்தது; அழுதால் முழுப் பைத்தியம் மாதிரி இருந்தது. அவளைப் போல் பங்கஜாவுக்குச் சிரிக்கவும் அழவும் தெரியவில்லையென்று கருதியதால், சினிமாவில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று சொல்லி வருத்தத்துடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

இதனால் அவள் ஏமாற்றம் அடைந்திருந்தபோதிலும் நிராசை அடையவில்லை. பங்காருசாமியும் தைரியப்படுத்தினான். தானே ஒரு படம் எடுக்கப் போவதாகவும் அதற்காகப் பணம் சேகரித்துக் கொண்டு வருவதாகவும் சொன்னான். படம் ஆரம்பிக்கும் வரையில் காலட்சேபத்துக்காக அவளிடம் பாக்கியிருந்த ஒரே ஒரு நகையான வைர அட்டிகையை விற்றுத் தருவதாகச் சொன்னான். பங்கஜா நம்பிக் கொடுத்தாள். பங்காருசாமியும் விற்றுக் கொண்டு வந்து பணத்தைக் கொடுத்தான். பங்கஜா அதைப் பத்திரமாய் வைத்திருந்தாள். அவசரச் செலவுக்காக ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துப் போய்க் கடையில் சாமான் வாங்கினாள். கடைக்காரன் அந்த நோட்டை வாங்கி மேலும் கீழும் திருப்பிப் பார்த்தான். "அம்மா! இது கள்ள நோட்டு. யாரோ உன்னை ஏமாற்றி விட்டிருக்கிறான். முடியுமானால் அவனிடம் திருப்பிக் கொடுத்து வெள்ளி ரூபாயாக வாங்கு. இல்லாவிட்டால் நோட்டைக் கொளுத்தி விட்டுச் சும்மா இரு. போலீஸுக்குச் செய்தி தெரிந்தால் ஆபத்து வரும்!" என்று எச்சரிக்கை செய்து அனுப்பினான்.

பங்கஜா சொல்ல முடியாத கோபத்துடனும் தாபத்துடனும் உடனே வீடு திரும்பினாள். நோட்டுகளை அடுக்கி வைத்திருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு பங்காருசாமியைத் தேடிப் போனாள். வழியிலேதான் 374 ஆம் நம்பர் கான்ஸ்டேபிளைச் சந்தித்தாள். பார்த்துப் பேசாமல் போனால் சந்தேகம் ஏற்படும் என்று எண்ணி வழக்கம் போல் பணம் கேட்டாள். பெட்டி திறந்து கொண்டதனால் போலீஸ்காரரின் சந்தேகத்துக்கு உள்ளானாள்.

பங்காருசாமியிடம் பங்கஜா கள்ள நோட்டுகளைத் திருப்பிக் கொடுத்துச் சண்டை பிடித்தபோது அவன் தானும் வேறொருவனிடம் ஏமாந்து போய்விட்டதாகக் கூறினான். அவனைக் கேட்டு வேறு நல்ல பணம் வாங்கித் தருவதாகக் கூறினான். அப்படி பங்காருவை ஏமாற்றியவனான எஸ்ராஜ் ஏற்கனவே கோ-ஆபரேடிவ் சங்கப் பணத்தைக் கையாடியவன். இப்போது சின்னமநாயக்கன்பட்டி கூடார சினிமாவில் எப்படியோ மானேஜர் வேலை சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனைத் தேடிக் கொண்டு பங்காரு போனான். பங்காரு தப்பி ஓடி மறைந்துவிடப் போகிறான் என்ற பயத்தினால் பங்கஜாவும் அவன் கூடப் போனாள். சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தில் யாருக்கும் தன்பேரில் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காகத் தான் பஞ்சாயத்து மானேஜர் என்றும், பங்கஜா தன் தங்கை என்றும் பங்காரு சொல்லிக் கொண்டான். எஸ்ராஜும் பங்காருவும் கள்ள நோட்டு அச்சிடுவதில் கூட்டாளிகள் என்று பங்கஜா அங்கே தெரிந்து கொண்டாள். எப்படியாவது தன்னுடைய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டு சேலம் போகலாம் என்று எண்ணியிருந்தாள். ஒரு நாள் அவர்கள் சினிமாக் கொட்டகையில் டிக்கட் விற்கும் இடத்தில் கள்ள நோட்டுகளில் சிலவற்றைச் செலாவணி செய்வதற்காக வைத்திருந்தார்கள். அந்த இடத்துக்குப் போலீஸ்காரர் வந்து எட்டிப் பார்க்கவே இரண்டு ஆசாமிகளுக்கும் சந்தேகம் உண்டாகி விட்டது. உடனே பழைய ஃபிலிம்கள் சிலவற்றைக் கள்ள நோட்டுகளுடன் சேர்த்து வைத்துக் கொளுத்தி விட்டார்கள். ஃபிலிம்கள் சீக்கிரம் தீப்பற்றி எரியுமாதலால் அப்படி செய்தார்கள். அன்றைக்குத்தான் செங்கோடக்கவுண்டன் கூடார சினிமாவில் செய்த கலாட்டாவும் நடைபெற்றது. அந்தப் பட்டிக்காட்டுக் கவுண்டன் மூலமாகத் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எஸ்ராஜும் பங்காருவும் உத்தேசித்தார்கள். போலீஸுக்குச் சந்தேகம் ஏற்பட்டு விட்டபடியால் கள்ள நோட்டு அச்சடித்த இயந்திரங்களையும் அச்சடித்த நோட்டுகளையும் அழித்துவிட எண்ணியிருந்தார்கள். அதற்குச் செங்கோடனின் கேணியும் குடிசையும் தக்க இடம் என்று கண்டுபிடித்தார்கள். அத்துடன் செங்கோடக் கவுண்டன் புதைத்து வைத்திருந்த பணத்தையும் கபளீகரம் செய்ய யத்தனித்தார்கள். இதற்கு உதவி செய்யும்படி குமாரி பங்கஜாவைக் கேட்டுக் கொண்டார்கள். அவள் உதவி செய்து அந்தப் பட்டிக்காட்டானைத் தன் மோகவலையில் ஆழ்த்தி வைத்திருந்தால் காரியம் கைகூடிவிடும்; அவளுக்குச் சேரவேண்டிய பணமும் கிடைத்துவிடும். அதோடு எஸ்ராஜுக்குச் சென்னையில் சில சினிமா முதலாளிகளைத் தெரியும் என்றும், அவர்களிடம் பங்கஜாவை அழைத்துப் போய்ச் சிபாரிசு செய்வதாகவும் வாக்களித்தார்கள். அவர்களுடைய துர்போதனைக்குப் பங்கஜாவும் சம்மதித்தாள். அவர்கள் சொற்படியே போலீஸ்காரரிடம் செங்கோடனுக்குக் கடிதம் கொடுத்தனுப்பினாள். பங்கஜா-செங்கோடன் சந்திப்பில் என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ளப் போலீஸ்காரரும் அங்கு இருப்பார் என்றும் அச்சமயம் செங்கோடன் குடிசையில் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்றும் நம்பியிருந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகச் சில காரியங்கள் நடந்து விட்டன. செங்கோடன் பொய்மான் கரடு உச்சியில் நின்றபோது தன் குடிசையில் வெளிச்சம் தெரிந்ததைப் பார்த்துவிட்டான். பார்த்து, குமாரி பங்கஜா தடுத்தும் கேளாமல் ஓடத் தொடங்கினான்.

"அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியுமே, கான்ஸ்டேபிள் ஸார்! எப்படியாவது என்னை இந்தத் தடவை காப்பாற்றிவிடுங்கள்! இனிமேல் இப்படிப்பட்ட போக்கிரிகளின் அருகிலும் போவதில்லை. பிச்சை எடுத்தாவது பிழைத்துக் கொள்கிறேன்!" என்று சொல்லிவிட்டுக் குமாரி பங்கஜா மறுபடியும் விம்மி விம்மி அழுதாள்.

அவள் அழுகையை நிறுத்தும்படி செய்வதற்குப் போலீஸ்காரர் மிகவும் பிரயாசைப்பட வேண்டியிருந்தது.