போர் நிறுத்த ஒப்பந்தம் 2002

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சிறீலங்கா சனநாயக் சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் 2002

முகவுரை[தொகு]

சிறிலங்கா ஜனநாயக சோசலிஸ குடியரசு அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் ஒட்டுமொத்தமான நோக்கம் இலங்கையில் தற்போதுள்ள இன மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதாகும். இந்தத்தரப்பினர் (இந்த தரப்பினர் என்று இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடுவது சிறிலங்கா அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆகும்) பகைமைகளுக்கு ஒரு முடிவுகட்டி, மோதலினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து குடிமக்களதும் வாழ்க்கை நிலைமையை சீருயர்த்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றனர். பகைமைகளுக்கு முடிவு கட்டுவது எனும் போது, நிரந்தர தீர்விற்கான பேச்சுவார்த்தைகளை நோக்கிய மேலதிக நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாக இந்த தரப்பினரால் கவனிக்கப்படுகின்றது.

மோதலில் நேரடியாக சம்பந்தப்படாத குழுக்களும் இதன் பாதிப்புக்களால் துன்பப்படுகின்றனர் என்பதையும் இந்தத் தரப்பினர் மேலும் அங்கீகரிக்கின்றனர். குறிப்பாக முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் இது பொருந்தும், ஆகவே, பொதுமக்களினதும் அவர்களின் சொத்துக்களதும் பாதுகாப்புப் பற்றிய இந்த ஒப்பந்தத்தின் விதிகள் அனைத்துக் குடிமக்களுக்கும் செல்லுபடியாகும். இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, போர் நிறுத்தம் ஒன்றில் ஈடுபடவும், நல்ல நோக்கங்களைப் பாதிக்கக்கூடிய அல்லது ஒப்பந்தத்தின் சாரத்தை முறிக்கக் கூடிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளவும், கீழ்வரும் பிரிவுகளில் சொல்லப்பட்டிருப்பது போன்று நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை செயற்படுத்தவும் இந்தத் தரப்பினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

விதி 1 போர் நிறுத்தத்தின் முறைகள்[தொகு]

இந்தத் தரப்பினர் தமது ஆயதப் படைகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஒன்றை பின்வருமாறு அமுல் செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர்.

1.1 நோர்வேயின் வெளிவிவகார அமைச்சரினால் விதி 4.2 இன் பிரகாரம் டி-தினம் என்று இதன் பின்னர் குறிக்கப்படும் தினம் அறிவிக்கப்பட்டதும் அத்தினத்தில் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளிற்கும் இடையே கூட்டாக ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வரும். (இந்த விதியின் கீழ் 23.02.2002 ஆம் திகதி 00.00 நேரத்தை நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் பிரகடனம் செய்து போர் நிறுத்தம் அமுலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.)

இராணவ நடவடிக்கைகள்[தொகு]

1.2 வலுத்தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளில் எந்தத் தரப்பினரும் ஈடுபட இயலாது. முற்று முழுதாக சகல இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதை இது கோருகின்றது. பின்வரும், ஆனால், மட்டுப்படுத்தப்படாத நடவடிக்கைகளை இது உள்ளடக்கின்றது.

அ. நேரடியானதும் மறைமுகமான ஆயுதங்களினால் சுடுதல், ஆயுதங்களுடன் முற்றுகைத் தேடுதல், பதுங்கியிருந்து தாக்குதல், கொலைகள், ஆட் கடத்தல், பொதுமக்களது அல்லது இராணுவத்தினது சொத்துக்களை அழித்தல், நாசகார செயல்கள், தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகள், ஆழ ஊடுருவும் குழுக்களின் செயற்பாடுகள்.

ஆ. வான்வழி குண்டு வீச்சுக்கள்

இ. கடலில் வலுத்தாக்குதல் நடவடிக்கைகள்

1.3 விடுதலைப் புலிகளுக்கு எதிரான வலுத்தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடாத வகையில், சிறிலங்காவின் ஆயுதப் படைகள் சிறிலங்காவின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் சட்டப்படியான நடவடிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றலாம்.

படைகளைப் பிரித்து வைத்தல்[தொகு]

1.4 முன்னணி காவலரண்கள் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில், குறைந்தது 600மீற்றர் தூரம் இடைவெளி பிரித்து சிறிலங்கா அரசாங்கத்தின் ஆயுதப் படைகளும் விடுதலைப்புலிகளின் போரிடும் படைகளும் தமது கள நிலையை வைத்திருக்கலாம். எனினும் ஒவ்வொரு தரப்பினரும் தமது காவல் நிலையிலிருந்து 100மீற்றர் தூரம் தங்களுக்குள் உள்ளவாறு நடமாடுவதற்கான உரிமையை கொண்டிருப்பர். 400 மீற்றருக்குக் குறைவான இடைவெளி உள்ள தற்போதுள்ள நிலைகள் விடயத்தில் இந்த நடமாடும் உரிமை செல்லாது. தமது துருப்பினர் இடையே முடிந்தளவு கூடுதலான இடைவெளியை உறுதிப்படுத்த இந்தத் தரப்பினர் ஒப்புக் கொள்கின்றனர்.

1.5 பகுதிகள் தெளிவாக வரையறுக்கப்படாத இடங்களில் 1.6 விதியில் குறிப்பிடுவது போன்று நிலவரையறை செய்யப்படும் வரை 2001 டிசம்பர் 24ம் திகதியில் இருந்தவாறு சிறிலங்கா அரசாங்கத்தாலும் விடுதலைப் புலிகளாலும் கட்டுப்படுத்தப்படும் பகுதிகள் அவ்வாறே இருந்து வரலாம்.

1.6 சிறிலங்கா கண்காணிப்புக் குழுவினருக்கு 3ம் விதியின் பிரகாரம் சிக்கலுக்குரிய சலக பகுதிகளினதும் காவலரண் நிலைகள் பற்றிய தகவல்களை இந்த தரப்பினர் வழங்கலாம். ஆகக் குறைந்தது டி-தினம் 30ற்கு உள்ளாக நிலவரையறைக் கோடுகளை வரைவதில் இந்தத் கோடுகளை வரைவதில் இந்தத் தரப்பினருக்கு காண்காணிப்புக் குழுவினர் உதவுவர்.

1.7 மற்றைய தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் இராணுவ தளபாடங்கள் என்பனவற்றை இந்தத் தரப்பினர் நகர்த்த முடியாது.

1.8 சிறிலங்கா அரசாங்கம் தமிழ் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை ஆகக் குறைந்தது டி-தினம் 30ற்கு உள்ளாக களைய வேண்டும். வடக்கு-கிழக்கிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் சேவைக்கென சிறிலங்கா ஆயுத படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் மேற்படி குழுக்களில் இருக்கும் தனிநபர்களை சேர்த்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முன்மொழியலாம்.

நடமாடும் சுதந்திரம்[தொகு]

1.9 இந்தத் தரப்பினரின் படைகள் 1.4 மற்றும் 1.5 விதிகளில் சொல்லப்பட்டிருப்பது போன்று ஆரம்பத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தங்கியிருக்க வேண்டும்.

1.10 ஆயுதமேந்தாத சிறிலங்கா துருப்பினர் டி-தினம் 60ற்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவிற்கும் இடையே யாழ்-கண்டி (ஏ9) வீதியை பாவித்து மட்டுப்படுத்தப்படாத அளவில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இந்தச் செயல்முறைகள் இந்தத் தரப்பினரால் சிறிலங்கா கண்காணிப்புக் குழுவினரின் உதவியுடன் வகுக்கப்பட வேண்டும்.

1.11 டி-தினத்தில் இருந்து போராளிகளான தனிநபர்கள் தமது பிராந்திய தளபதியின் சிபார்சின் பெயரில் ஆயுதமில்லாமலும் சாதாரண உடையிலும் தமது குடும்பத்தவர் மற்றும் நண்பர்கள் ஆகியோரை மற்றத் தரப்பின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று பார்த்துவர அனுமதிக்க வேண்டும். குறைந்தளவு தூர வீதியால் பயணம் செய்யும் நேரத்தை கணக்கில் எடுக்காது ஒவ்வொரு இரண்டு மாதத்தில் ஆறு நாட்களுக்கென இத்தகைய பயணங்கள் மட்டுப்படுத்தப்படும். இந்த நோக்கத்திற்கு யாழ் - கண்டி வீதியை விடுதலைப் புலிகள் வசதி செய்து கொடுப்பர். குறிப்பிட்ட இராணுவப் பகுதிக்குள் நுழைவதற்கு மறுப்புத் தெரிவிக்கும் உரிமையை இந்தத் தரப்பினர் கொண்டிருப்பர்.

1.12 போராளிகளான தனிநபர்கள் டி-தினத்தில் இருந்து இரண்டுமாத கட்டுப்பாட்டைக் கவனத்தில் கொள்ளாது தமது நெருக்கிய (மனைவி, பிள்ளைகள், பாட்டனார், பெற்றோர், உடன்பிறப்புக்கள்) திருணம், இறுதி அஞ்சலி போன்றவற்றிற்கு ஆயுதமி;ல்லாமலும், சாதாரண உடையிலும் சென்றுவர அனுமதிப்பதென இந்தத் தரப்பினர் ஒப்புக்கொள்கின்றனர். குறிப்பிட்ட இராணுவப் பகுதிக்குள் நுழைவதற்கு மறுப்புத் தெரிவிக்கும் உரிமை இங்கு செல்லுபடியாகும்.

1.13 ஆயுதமேந்தாத 50 விடுதலைப் புலி உறுப்பினர்கள் டி-தினம் 30ல் இருந்து வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் அரசியல் பணிகளுக்கென சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர். டி-தினம் 60ல் இருந்து மேலும் ஆயதம் ஏந்தாத 100 விடுதலைப்புலி உறுப்பினர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர். டி-தினம் 90ல் இருந்து சகல ஆயுதம் ஏந்தாத விடுதலைப் புலி உறுப்பினர்களும் வடக்கு கிழக்கில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர். விடுதலைப் புலி உறுப்பினர்கள் அடையாளப் பத்திரங்களை வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட இராணுவப் பகுதிக்குள் நுழைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு தெரிவிக்க உரிமை இங்கு செல்லுபடியாகும்.

விதி 2 இயல்பு நிலையை தோற்றுவிக்கும் நடவடிக்கைகள்[தொகு]

சிறிலங்காவின் சகல குடிமக்களுக்கும் இயல்புநிலை வாழ்க்கையை மீளமைப்பதற்காக பின்வரும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை இந்தத் தரப்பினர் மேற்கொள்வர்.

2.1 சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக இந்தத் தரப்பினர் சித்திரவதை நெருக்கடி, ஆட்கடத்தல், கட்டாய வரி வசூலித்தல், தொந்தரவு என்பன உள்ளிட்டதான பகைமை நடவடிக்கைகளை பொது மக்களுக்கு எதிராக மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொள்வர்.

2.2 கலாசார, மத உணர்வுகளை புண்படுத்தக்கூடிய நடவடிக்கைகள், கொள்கை பரப்புதல் என்பனவற்றில் ஈடுபடுவதில் இருந்து இந்தத் தரப்பினர் தம்மைத் தவிர்த்துக் கொள்வர். எந்தத் தரப்பினதும் படைகளால் தற்போது வைத்திருக்கப்படும் வழியாட்டு இடங்களில் (கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய புனித தலங்கள் என்பன) இருந்து டி-தினம் 30 அளவில் படையினர் வெளியேறுவதுடன் அவை பொது மக்கள் சென்றுவரக்கூடியதாயிருக்க வேண்டும். உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் இருந்து, அவை பொதுமக்கள் சென்று வர முடியாததாயிருப்பினும் ஆயுதமேந்திய சலக துருப்பினரும் வெளியேறுவதுடன் பொதுசன தொண்டர்களால் அவை நல்ல நிலையில் பரிபாலிக்கப்பட வேண்டும்.

2.3 இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வரும் நாளில் இருந்து எந்தத் தரப்பினராலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பாடசாலைக் கட்டிடங்கள் விடுவிக்கப்பட்டு அவற்றின் நோக்களுக்கு பாவிக்கவென திரும்பக் கொடுக்கப்பட வேண்டும். ஆகக் குறைந்தது டி-தினத்திலிருந்து 160 நாட்களுக்குள் இந்த நடவடிக்கைகள் ப+ர்த்தி செய்யப்பட வேண்டும்.

2.4 ஏனைய சகல பொதுக் கட்டிடங்களும் அவற்றின் நோக்கங்களுக்கென திரும்ப ஒப்படைக்கப்படுவதன் கால அட்டவணை இந்தத் தரப்பினரால் தயாரிக்கப்பட்டு ஆகக் கூடியது டி-தினம் 30ற்குள் வெளியிடப்பட வேண்டும்.

2.5 பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சோதனைச் சாவடிகளின் அமைப்பையும் குறிப்பாக நெருக்கமாக குடிசனங்கள் உள்ள நகரங்களிலும் பட்டணங்களிலும் பொதுமக்கள் தொந்தரவு செய்யப்படுவதை தவிர்க்கும் வகையிலான முறைகளை புகுத்துவதற்காக இந்தத் தரப்பினர் மீளாய்வு செய்வர். டி-தினம் 60ல் இருந்து இத்தகைய முறை அமுலில் இருக்க வேண்டும்.

2.6 விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கும் அங்கிருந்தும் இராணுவ பாவனைக்கில்லாத பொருட்கள் தங்குதடையின்றி கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்துவதென இந்தத் தரப்பினர் ஒப்புக் கொள்கின்றனர். இணைப்பு 'அ" வில் உள்ள சில பொருட்கள் இதற்கு விதிவிலக்காயிருக்கும். பொருட்களின் அளவு சந்தையின் தேவையைப் பொறுத்தே நிச்சயிக்கப்படும். இராணுவ பாவனைக்கல்லாத பொருட்கள் மீது எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த விடயத்தை மீளாய்வு செய்து வரும்.

2.7 பொருட்கள் கொண்டு செல்லப்படுவதையும் பொதுமக்களின் நடமாட்டத்தையும் வசதிப்படுத்துவதற்காக இந்தத் தரப்பினர் தமது கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இணைப்பு |அ|வில் கூறப்படும் இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைக்க ஒப்புக் கொள்கின்றனர்.

2.8 திருமலை-ஹபரணை வீதி பயணிகளின் போக்குவரத்து 24 மணிநேரமும் டி-தினம் 10ல் இது திறந்திருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தத் தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

2.9 மட்டக்களப்பு பாதையில் ரயில் சேவை வெலிகந்த வரை விஸ்தரிக்கப்படுவதற்கு இந்தத் தரப்பினர் வசதி செய்வர். மட்டக்களப்பு வரை சேவையை விஸ்தரிப்பதற்கு திருந்த பராமரிப்பு பணிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

2.10 கண்டி-யாழ்ப்பாணம் (ஏ9) வீதியை இராணுவ பயணமல்லாத பயணிகளதும் பொருட்களினதும் போக்குவரத்திற்கு இந்த தரப்பினர் திறந்து விட வேண்டும். இதுபற்றித் திட்டவட்டமான முறைகள் இந்தத் தரப்பினரால் நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் ஆகப்பிந்தியது டி-தினம் 30ற்குள் வகுக்கப்பட வேண்டும்.

2.11 மீன்பிடி கட்டுப்பாடான படிப்படியாகத் தளர்த்துவது டி-தினத்தில் இருந்து ஆரம்பமாக வேண்டும். பின்வரும் சில விதிவிலக்குகளை தவிர்த்து டி-தினம் 90 அளவில் சகல இரவு,பகல் மீன்பிடி கட்டுப்பாடுகளும் விலத்தப்பட்டிருக்க வேண்டும்.

1) கரையில் பாதுகாப்புப் படைகளனது சகல முகாம்களில் இருந்தும் இரு பக்கமாகவும் கரைப்புறமாக ஒரு கடல் மைல் தூரமும், கடல்புறமாக இரு கடல் மைல் தூரமும்,

11) துறைமுகங்கள், துறை முகங்களுக்குச் செல்லும் வழிகள், கரையோரமாகவுள்ள குடாக்கள், களப்புக்கள் என்பவற்றில் மீன் பிடிக்க அனுமதிக்கப்படமாட்டாது.

2.12 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேடுதல்கள், கைது செய்தல் என்பன நடக்கக்கூடாது என இந்தத் தரப்பினர் ஒப்புக் கொள்கின்றனர். கைது செய்யப்படுவதானது கிரிமினல் சட்டக் கோவைக்கு அமைந்ததாக முறையான சட்ட ஒழுக்குப்படி நடத்தப்பட வேண்டும்.

2.13 தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை அவர்களது குடும்பத்தவர்கள் சென்று பார்ப்பதற்கு டி-தினம் 30ற்குள் அனுமதிப்பதென இந்தத் தரப்பினர் ஒப்புக் கொள்கின்றனர்.

விதி 3 சிறிலங்கா கண்காணிப்புக்குழு[தொகு]

இந்த ஒப்பந்தத்தின் ஒழுங்குகள் நிபந்தனைகள் மீறப்படும் எந்தவொரு சம்பவத்தையும் விசாரிப்பதற்குப் பொறுப்பாக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றை அமைப்பதென இந்தத் தரப்பினர் ஒப்புக்கொண்டுள்ளனர். எந்தவொரு மோதலும் தமது தரப்பால் ஏற்படும் போது அவற்றைச் சரிப்படுத்துவதற்கு இரு தரப்பும் முற்றாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றுவதில் களத்தில் இருந்து சர்வதேச கண்காணிப்பை இந்த குழு பின்வரும் முறையில் மேற்கொள்ளும்.

3.1 இந்தக் கண்காணிப்புக் குழுவின் பெயர் சிறிலங்கா கண்காணிப்புக்குழு.

3.2 இந்தக் தரப்பினரின் ஒப்புதலைப் பெற்று, சிறிலங்கா கண்காணிப்புக் குழுவின் தலைவரை நோர்வே அரசாங்கம் நியமிக்கும். அவரே இந்த ஒப்பந்தத்தின் விளக்கம் தொடர்பாக இறுதி அதிகாரத்தைக் கொண்டிருப்பார்.

3.3 சிறிலங்கா கண்காணிப்புக்குழு இந்தத் தரப்பினருடன் தொடர்பு வைத்திருப்பதுடன் நோர்வே அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

3.4 சிறிலங்கா கண்காணிப்புக் குழுவின் தலைவர் கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் தினத்தை தீர்மானிப்பார்.

3.5 சிறிலங்கா கண்காணிப்புக் குழு, நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்படும்.

3.6 சிறிலங்கா கண்காணிப்புக் குழுவின் தலைவர் பொருத்தமான தெரிவு செய்யும் இடத்தில் குழுவின் தலைமை அலுவலகம் அமைக்கப்படும். சிறிலங்கா அரசாங்கத்துடனும் விடுதலைப்புலிகளுடனும் தொடர்பு கொள்ள கொழும்பிலும் வன்னியிலும் அலுவலகங்கள் அமைக்கப்படும். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சிறிலங்கா கண்காணிப்புக் குழுவினர் பிரசன்னமாக இருப்பார்கள்.

3.7 யாழ்ப்பாணம், மன்னார். வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள+ர் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் ஜந்து அங்கத்தவர்கள் இருப்பார்கள். அவர்களில் இருவர் சிறிலங்கா அரசாங்கத்தாலும் இருவர் விடுதலைப் புலிகளாலும் நியமிக்கப்படுவதுடன் ஒரு சர்வதேச கண்காணிப்பாளர் சிறிலங்கா கண்காணிப்புக்குழுவின் தலைவரால் நியமிக்கப்படுவார். சர்வதேச கண்காணிப்பாளர் இந்த குழுவிற்கு தலைமை தாங்குவார். சிறிலங்கா அரசாங்கத்தினதும், விடுதலைப் புலிகளினதும் நியமனதாரிகள் ஓய்வுபெற்ற நீதிபதிகள், பொதுச்சேவை உத்தியோகத்தர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் அத்தகைய பொதுஜன தலைவர்கள் ஆகியோர் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்படலாம்.

3.8 சிறிலங்கா கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பனவற்றிகு இந்தத் தரப்பினர் பொறுப்பாயிருப்பார்கள்.

3.9 சிறிலங்கா கண்காணிப்புக் குழுவினர் தமது கடமையை நிறைவேற்றுவதற்கென அவர்களின் நடமாடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்த இந்தத் தரப்பினர் ஒப்புக் கொள்கின்றனர். ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படும் பகுதிக்கு உடனடியாக செல்வதற்கு கண்காணிப்புக் குழுவினர் அனுமதிக்கப்பட வேண்டும். அத்தகைய பகுதிகளில் மேற்படி ஆறு மாவட்ட குழுக்களின் அங்கத்தவர்களும் முடிந்தளவு கூடுதலாக புழங்குவதற்கு வசதி செய்வதென இந்தத் தரப்பினர் ஒப்புக் கொள்கின்றனர்.

3.10 ஒப்பந்தத்தின் எந்தத் தரப்பினரும் செய்யும் எந்த முறைப்பாடுகள் குறித்தும் உடன் நடவடிக்கை எடுப்பதும், அவற்றை விசாரிப்பதும், அத்தகைய முறைப்பாடு தொடர்பாக எழும் எந்தப் பிணக்கையும் தீர்த்து வைப்பதில் இந்தத் தரப்பினருக்கு உதவுவதும் சிறிலங்கா கண்காணிப்புக் குழுவினரின் பொறுப்பாகும்.

3.11 முடிந்தளவு அடிமட்டத்தில் பிணக்கைத் தீர்க்கும் நோக்குடன் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆயுதப் படைகளது தளபதிகள், விடுதலைப் புலிகளின் பிராந்தியத் தலைவர்கள் ஆகியோருக்கு மத்தியில் தொடர்புகளை, பிணக்குகளுக்கு உரிய பகுதிகளில் பிரச்சினையைத் தீர்க்க உதவுவதற்காக ஏற்படுத்த வேண்டும்.

3.12 சிறிலங்கா கண்காணிப்புக் குழுவின் செயற்பாடு குறித்த வழிமுறைகள் பிறிதொரு தனியான ஆவணத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

விதி 4 இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வருதல் மற்றும் திருத்தங்கள் முடிவிற்கு வருதல்

4.1 இந்த ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு தமது விருப்பத்தை ஒவ்வொரு தரப்பும் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் விடுதலைப் புலிகளின் சார்பில் வேலுப்பிள்ளை பிரபாகரனும் முறையே கையெழுத்திட்டு நோர்வேயின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் மூலமாக அறிவிக்க வேண்டும்.

4.2 நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் அறிவிக்கும் தினத்தில் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வரும்.

4.3 இரு தரப்பினதும் பரஸ்பர இணக்கத்துடன் இந்த ஒப்பந்தம் திருத்தவும் மாற்றப்படவும் இயலும், அத்தகைய திருத்தங்கள் எழுத்து மூலமாக நோர்வீஜிய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.

4.4 எந்தத் தரப்பினராலும் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக நோர்வே அரசாங்கத்திற்கு அறிவித்தல் கொடுக்கப்படும் வரை இந்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும். அத்தகைய முன்னறிவித்தல் முடிவிற்கு வரும் தினத்திற்கு 14 தினங்களிற்கு முன்னதாக கொடுக்கப்பட வேண்டும்.

இணைக்கப்பட்டவை[தொகு]

 • இணைப்பு ஏ: பொருட்களின் நிரல்
 • இணைப்பு பி: சோதனை நிலையங்கள்

இணைப்பு ஏ[தொகு]

 1. இராணுவ ஆயுதம் அல்லாத ரவைகள், குண்டுகள்.
 2. வெடி பொருட்கள்
 3. தூர இருந்து இயக்கும் கருவி
 4. முள்ளுக்கம்பி
 5. தூரதிருஷ்டிக் கண்காடிகள்
 6. காற்று அழுத்தி மிஷன்
 7. பென்டோஜ பற்றரி
 8. டீசல், பெற்றோல் சீமேந்து, இரும்புக் கம்பிகள் என்பவை கீழ்க்காணும் வழி முறைப்படியும் தொகைப்படியும் கட்டுப்படுத்தப்படும்.

டீசல் பெற்றோல்[தொகு]

அரசாங்க அதிபர்கள் (பு.யு) விடுதலைப்புலிகளின் வட்டாரத்திலுள்ள வாகனங்கள், றக்டர்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைப் பதிவு செய்வார்கள். அவர் இவற்றிற்கு பின்வருமாறு ஒரு கிழமை அவசியப்படும் எரிபொருளை கணிப்பிட்டு வழங்குவர்.

 1. டிறக் பங்கள் 250 லீட்டர் கிழமைக்கு
 2. 4 சில்லு உழவு இயந்திரம் 350 லீட்டர் கிழமைக்கு
 3. 2 சில்லு உழவு இயந்திரம் 40 லீட்டர் கிழமைக்கு
 4. பெற்றோல் வாகனம் 30 லீட்டர் கிழமைக்கு
 5. மோட்டர் சைக்கிள் 7 லீட்டர் கிழமைக்கு
 6. மீன்பிடி வள்ளம் 400 லீட்டர் கிழமைக்கு

சீமேந்து[தொகு]

அரசாங்க அதிபரினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் தொடர்புள்ள நிறுவனங்களின் கீழ் அரச கட்டிடங்களை புனரமைத்தல், பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் அல்லது இலங்கை அரசாலும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களாலும் சமூகத்தில் செல்வம் படைத்த உறுப்பினர்களாலும் அமுல்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றறிற்குத் தேவைப்படும் சீமேந்து வழங்கப்படும். திட்டமிட்ட மற்றும் அறிவிக்கப்படும் திட்ட முன்னேற்றங்களின் அடிப்படையில் மாதாந்த தேவைகளை அரசாங்க அதிபர் குறிப்பிடுவார்.

தனிப்பட்டவர்கள் பாவனைக்கு, வியாபாரிகளிற்கு, வீடு கட்டுபவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வர்த்தக ரீதியில் வழங்கப்படும் இதற்கு ஏற்ப முதல் மாதம் 5000 மூடைகளும் அதன் பின் ஒவ்வொரு மாதமும் 10இ000 மூடைகளும் தனிப்பட்ட விற்பனை, கூட்டுறவு சங்கங்களின் மூலம் பதிவு செய்யப்பட்டு 25 மூடைகள் ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கப்படும்.

இரும்புக் கம்பிகள்[தொகு]

இரும்புக் கம்பிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேச பாவனைக்கு அரசாங்க அதிபர் அவர்களின் அனுமதியுடன் வழங்கப்படும்.

இணைப்பு பி[தொகு]

உடன்படிக்கையின் பிரிவு 2.7ல் ஒப்புக் கொள்ளப்பட்ட சோதனைச்சாவடிகள் பினவருமாறு:-

 1. மண்டூர்
 2. பட்டிருப்பு
 3. களுதாவெளி வள்ளத்துறை
 4. அம்பலந்தீவு வள்ளத்துறை
 5. மண்முனை வள்ளத்துறை
 6. வவுணத்தீவு
 7. கரும்பாலம்
 8. சித்தாண்டி படகுத்துறை
 9. கிரான் பாலம்
 10. கிண்ணியடி படகுத்துறை
 11. வாழைச்சேனை
 12. மாங்கேணி
 13. மகிந்தபுரம்
 14. மூதூர்
 15. உயிலங்குளம்
 16. ஓமந்தை