மகான் குரு நானக்/ஏழையின் சிரிப்பில் இறைவன்

விக்கிமூலம் இலிருந்து


4. ஏழையின் சிரிப்பில் இறைவன்

சுல்தான்பூர் கவர்னரின் தானியக் களஞ்சியப் பாதுகாப்பாளர் பணியை உதறித் தள்ளிவிட்டு, கண்ணிர் சிந்தும் பீபி நானகியிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு, நானக் தனது இல்லறத்தைத் துறந்து வந்து விட்டார்.

ஒர் ஒடையருகே வந்து அமர்ந்தார். அங்கே தவத்திலே ஒரு யோகியாக இறைவன் பற்றோடு இருந்தார். கடவுள் ஒருவரைத் தவிர அவர் மனம் எதன் மீதும் பற்றேதும் இல்லாமல், கடுமையான யோகத்திலே அமர்ந்து விட்டார்.

கடும் வெயில், கடும் குளிர், அச்சம், காற்றின் வேகம், எல்லாம் அவரைத் துன்புறுத்தியும்கூட அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. தன்னுணர்வற்ற தனிமனிதனாக உட்கார்ந் திருந்தார். அழகே உருவான மனைவி உருவம் அவரை மருட்டியது: தான் பெற்ற செல்வங்களது காட்சிகள் பந்த பாசநேசத்தோடு மின்னி நினைவுறுத்தின. அவர் வகித்த பதவி, தமக்கையின் பாசம், மைத்துனரின் இரக்கம், தாய் தந்தையரின் எண்ணங்கள் அனைத்தும் அவரைச் சூழ்ந்து சூழ்ந்து, தோன்றித் தோன்றி அவரது தவத்தைக் குலைக்க முயன்றன. எல்லாவற்றையும் அவர் துச்சமாக மதித்து, அமர்ந்த இடத்திலேயே ஒரு சிறு கல் குன்றுபோல ஆடாமல் அசையாமல் இருந்தார். எந்த பந்த பாச சக்தியாலும், சிற்றின்பச் சிந்தனைகளாலும் அவருடைய தவத்தைக் குறைக்க முடியவில்லை. இவ்வாறு அவர் மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் தொடர்ச்சியாக அமர்ந்திருந்தார்.

அந்த மூன்று நாட்களுக்குப் பிறகுதான் நானக் தியானம் கலைந்து எழுந்தார். சுற்று முற்றிலும் தனது சூழலை நோக்கினார். அப்போது இறைவனைப் புகழ்ந்து ஒரு பாடலை அவர் பாடினார். அந்தப் பாடலின் பொருள் இது :

"இறைவா! நீ ஒருவன். உண்மை என்பதே உனது பெயர். ஆதியும் நீயே, அந்தமும் நீயே, உனக்கு நிகர் நீயே, அழிவற்ற கடவுளும் நீயே, பிறப்பு இல்லாதவன் - இறப்பும் இல்லாதவன்; சகல சக்தியும் நீயே இறைவா!" என்பதே அந்தப் பாடலின் மூலக் கருத்தாகும்.

இன்றைக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் இந்தப் பாடலின் கருத்தே திருமந்திரச் சக்தியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பாடலை நானக் பாடி முடித்த பின்பு, ஓடைக்கரை ஓரத்தை விட்டு எழுந்து நடந்தார். அவரது கால்கள் இரண்டும் கல்லறை ஒன்றை நோக்கி நடந்து கொண்டிருந்தன.

இவ்வாறு மைத்துனர் மாறிவிட்டதைக் கண்ட திவான் ஜெய்ராம், ஒரு முஸ்லிம் மதகுருவை அழைத்து வரும்படி தனது பணியாட்களுக்கு உத்தரவிட்டார்.

வந்த அந்த முஸ்லிம் மத குருவிடம் தனது மைத்துனர் மனநிலையை திவான் விளக்கினார். அதைப் புரிந்து கொண்ட அந்த மதகுரு, நானக்குக்கு ஒன்று போய் பிடித்திருக்க வேண்டும் அல்லது சித்தப் பிரமையாக இருக்க வேண்டும்" என்றார்.

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முல்லா கூறியதைக் கேட்ட நானக் மறுபடியும் ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார். எந்த சித்தப் பிரமையைத் தெளிய வைத்திட வந்தாரோ முல்லா, அதே பிரமை மனிதரான நானக் பாடத் தொடங்கினார். இதோ அந்தப் பாடலில் அவர் கூறிய கருத்து :

"மனிதர்கள் விந்தையானவர்கள். ஆனால், அவர்களுடைய எண்ணங்களோ, முட்டாள்தனமானவை. எவருடைய ஞானத்தில் இறை அன்பு தவழ்கின்றதோ அவரைப் பார்த்து, இந்த முட்டாள்தனமான மனிதர்கள் பேய் பிடித்தவன் என்று கூறிவிடுகிறார்கள். கடவுளுக்கு யார் பக்தனாக இருக்கிறானோ, அவனைச் சித்தப் பிரமை பிடித்த மூளைக் கோளாறுடையவன் என்கிறார்கள்" என்ற பாடலைத்தான்் நானக் அப்போது பாடினார். நானக் இவ்வாறு பாடிய பாடலைக் கேட்ட அந்த முல்லா திகைத்துவிட்டான். நாம் திவானிடம் கூறிய கருத்து இந்த மனிதனுக்கு எப்படித் தெரியும்? குரு நானக்கைப் பார்த்து, "ஐயா நீர் பேசுவது ஒரு கற்றறிந்த ஞானியைப் போல இருக்கிறது. ஆனால், முட்டாள்தனமாக நடந்து கொள்கிறீரே ஏன்?" என்றார் முல்லா.

அந்த முல்லாவின் கேள்விக்கு "இறைவன் தியானத்தில் மூழ்கியவன், தன்னை இழிவாகப் பேசுவதைக் கயமையாகவே மதிக்கிறான். அத்தகைய குணமுடையவனை அறிவில்லாதவன் என்று அழைக்க, அறியாதவனைத் தவிர வேறு யாருக்குத் துணிவு தோன்றும்" என்று நானக் பதில் கூறினார்.

உடனே முல்லா, "அப்படியானால் நீர் ஏன் மனைவி மக்கள் உள்ள இல்லற வாழ்க்கையை விட்டுவிட்டு, இந்த மயானத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்?" என்று கேட்டார்.

"அதுவா மனித இனத்திற்குத் தொண்டு செய்யத்தான்" என்றார் நானக் முஸ்லீம் இனமென்றோ, இந்து இனமென்றோ ஒன்றும் இல்லை. மனித குலத்தில் எல்லோரும் ஒன்றே! எல்லாம் இறைவனுடையவையே! மக்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டு, கடைசியில் எல்லோரும் இந்த மயானத்திற்குத்தான்் வந்து சேர வேண்டும். இந்த கல்லறை மக்களது ஒருமைப்பாட்டை விளக்கும் நிரந்தரமான இடமாகும். ஆனால், மற்ற மனிதர் களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவர்கள் இறந்துவிட்ட பிறகு மற்றவர்களுடைய தோளிலே ஏறிக் கொண்டு இந்த இடத்திற்கு வருவார்கள். நான், எனது சொந்தக் கால்களாலே இங்கு நடந்து வந்து விட்டேன்." என்றார் நானக். பேய் ஒட்ட வந்த முல்லா தோல்வியோடு திரும்பிப் போனார். அவர் திவான் ஜெய்ராமைச் சந்தித்து, 'நானக் நல்லறிவுடன்தான் இருக்கின்றார். ஆனால் மக்கள் இனத்திற்குத் தொண்டு செய்ய தனது வழிதான் சிறந்தது என்ற திடமனதோடு இருக்கிறார்' என்று அவரிடம் கூறி விட்டுச் சென்றுவிட்டார் முல்லா.

பிே நானகி, தனது தம்பியை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சிகள் பலவும் தோல்வி கண்டுவிட்டதை அறிந்து மனமுடைந்து போனார். ஒரே தம்பி அவர் வாழ்வு இப்படியாவதா என்ற சோகமும், மனவருத்தமும் அவரை மிகவும் துன்புறுத்தி வாட்டியதால், தானே தம்பியைப் பார்த்து, தக்க முறைகளைக் கூறி அழைத்து வரலாம் என்று எண்ணி, அவர் தனது தம்பி தங்கியுள்ள கல்லறையை நோக்கி வந்தார்.

தம்பியைச் சந்தித்தார் கண்ணீர் சிந்தினார் தம்பி, உன்னை உயிருக்கு உயிராக நானும், உனது மனைவி மக்களும், மைத்துனரும், தாய் தந்தையரும் மதிக்கும் குடும்பத்தை விட்டு விட்டு, நீ இப்படி கல்லறையிலே வந்து அநாதையாக இருக்கலாமா? என்ன குறையென்று கண்டு நீ ஏன் வந்தாய் தம்பி?" என்று பீபி நானகி அழுத குரலோடு தழுதழுத்தபடியே தனது தம்பியைக் கேட்டார்.

'எனது அன்பு சகோதரி நான் அநாதை அல்ல; இந்த மக்கள் குலம் எல்லாமே எனது குடும்பம்தான். எனக்கென்று ஒரு குடும்பம் இல்லை. அந்த மக்கள் இனத்திற்குத் தொண்டு செய்யவே நான் புறப்பட்டு விட்டேன். எனது சேவை மக்கள் குடும்பத்துக்குத் தேவைப்படுகிறது. அந்தப் பெரிய குடும்பத்திற்கு நான் சேவை செய்ய வந்து விட்ட போது, எனது குடும்பத்திற்கும் தொண்டு செய்வதாகத்தான் பொருள்' என்று குருநானக் கூறிய போது பீபி நானகி, தன் தம்பியின் முடிவைக் கண்டு தேம்பித் தேம்பி அழுதபடி போனார்.

சகோதரி பீபி நானகி மனம் ஒடிந்து தனது வீடு திரும்பினார். எப்படியாவது தம்பியை அழைத்துக் கொண்டு வந்து அவருடைய மனைவி மக்களுடன் சேர்த்து வாழ வைத்து விடலாம் என்று திட்டமிட்ட சகோதரியின் முயற்சி தோல்வி கண்டுவிட்டது. நானக் தனக்காக மட்டுமே இல்லாமல், இறைவன் படைப்பிலுள்ள எல்லா உயிர்களுக்கும் தொண்டு செய்யும் ஒரு கடவுள் தொண்டனாக மாறிவிட்டார்.

கல்லறையை விட்டு நானக் கால்நடையாகவே புறப்பட்டார். ஒவ்வொரு ஊர்தோறும் சென்று, மக்களுக்குரிய நல்வழி ஞானத்தைப் போதித்திட அவர் புனிதப் பயணம் சென்றார்.

குரு நானக்குடன், பாய்மர்தனா என்ற ஒரு பாணர்குல மாணவனும் சென்றான். அந்த பாணன் தனது குலத் தொழிற்கருவியான மண்டோலினி எனும் இசைக் கருவியை வாசித்துக் கொண்டே நானக்குடன் பயணம் செய்வான் அதனால் இருவருக்கும் நடைப்பயணக் களைப்பு அவ்வளவாகத் தெரியாது.

நானக்கும், பாய்மர்தனாவும் நடந்து கொண்டே இருந்தபோது, மாணவனைப் பார்த்து, மர்தனா மண்டோலினியை எடுத்து வாசி கேட்டுக் கொண்டே போவோம் என்றார் நானக்.

உடனே மர்தனா குருவே நான் மண்டோலினியைக் கொண்டு வரவில்லையே என்றான்.

அப்படியா! அது உனது குல இசைக் கருவியாயிற்றே; ஏன் கொண்டு வர மறந்தாய்? போகட்டும் அதைப் பற்றி வருந்தாதே! இதோ, இந்த வட திசையை நோக்கிச் சிறிது தூரம் செல். உனக்கு 'ரூபாய்' என்ற இசைக் பருவி ஒன்று கிடைக்கும் என்றார் நானக்

'எனக்கு வடதிசையில் எவரையும் தெரியாதே குருவே' என்றான் மர்தானா!

'நான் சொல்கிறபடி செய்! இசைக் கருவி கிடைக்கும்' என்றார் நானக்.

வட திசை நோக்கி மர்தானா சென்றான். கொஞ்சம் தூரம்தான் போயிருப்பான் அப்போது அந்தக் கானகப் பாதை வழியாக ஒரு முதியவன் நடந்து வந்து கொண்டிருந்ததை மர்தானா பார்த்தான். அந்த முதுமையாளன் வயதுக்கேற்றவாறு சற்றுக் கூன் வடிவமாக அவனது முதுகு காணப்பட்டதைக் கண்டான் கிழவன் நரைத்த வெண்தாடியோடு வருவதைப் பார்த்தான் மர்தானா!

அப்போது அந்த முதியவன் மர்தானாவைப் பார்த்து, 'ஐயா எங்கே வந்தீர்கள்?' என்று கேட்டான்.

ஒருவர் எனக்காகக் காத்திருப்பார் அவரைப் பார்க்கச் சென்று கோண்டிருக்கிறேன் என்றான் மர்தானா!

'ஏன் அவரைத் தேடிப் போகிறாய்?' என்று கேட்டார் அந்த நரைதாடிக் கூன் கிழவன்.

வேறு ஒன்றுமில்லை, அவரிடமிருந்து 'ரூபாய்' என்ற ஓர் இசைக் கருவியைப் பெற்று வரச் செல்கிறேன் என்றான் மர்தானா ஓ, ஓ, அவர் நீர்தானா? நானக் உம்மை அவரிடம் அனுப்பி வைத்தாரா? என்று அந்தக் கிழவன் கேட்டான்.

'நானக் அனுப்பினாரா?' என்று கிழவர் கேட்டதைக் கேட்டு, மர்தானா திகைத்து வியப்படைந்து, ஆம் அவர்தான் அனுப்பினார் என்றான்.

உடனே அந்தக் கிழவன், மர்தானா, நானக் குரு மகானுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தைக் கூறு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னே என்னை நம்பி அவர் கொடுத்து விட்டுச் சென்ற இந்த ரூபாய் இசைக் கருவியை, இப்போது நான் உன்னிடம் கொடுத்திருப்பதையம் கூறு என்று சொல்லியவாறே ஓர் அழகிய ரூபாய் இசைக் கருவியை அந்த வயோதிகத் தாடிக்காரர் மர்தானாவிடம் கொடுத்தார். அடுத்த கணமே, அவர் மறைந்து போனார். இதையெல்லாம் கேட்டபடியே வியப்படைந்த அவன் இசைக் கருவியைப் பெற்றுக் கொண்டு வந்தான் - நானக்கிடம்!

ரூபாய் இசைக் கருவியை கிழவனிடம் வாங்கிக் கொண்டு திரும்பி வந்த மர்தனாவிடம் அதை மீட்டு, வாசி என்றார் நானக், குருவே, எனக்கு அந்தக் கருவியை வாசிக்கத் தெரியாது என்றான் மர்தானா!

அது ஒன்றும் கடினமான செயலன்று. ரூபாய் இசைக் கருவியில் உள்ள கம்பிகளில் உனது விரல்களை வைத்து அவற்றை அசையும்படி செய். அதுபோதும் என்றார் குருநானக்.

மர்தானா, குரு கூறியபடியே செய்தான்! இசை நாதம் வெள்ளம் போல் பெருகிற்று. ரூபாய் கருவியை தனக்கு வாசிக்கத் தெரியாது என்று மர்தானா கூறினானே. இப்போது எப்படி அவனால் அதை வாசிக்க முடிந்தது குருநானக்கின் அற்புதக் கருணையால்தான் மர்தானாவினால் அக்கருவியை வாசிக்க முடிந்தது.

குருநானக்கும், மர்தானாவும் அன்றிரவு அமெனாபாத் என்று இன்றைக்கும் அழைக்கப்பட்டு வரும் அன்றைய சைதாபாத் என்ற பெயருடைய நகரை வந்தடைந்து, பாய்லாலு என்ற பெயருடைய ஒரு தச்சன் வீட்டிலே தங்கினார்கள். யார் இந்த பாய்லாலு?

சைதாபாத் என்ற அந்த நகரில் மர வேலைகளைச் செய்து வரும் தச்சன் அவன். பெயர் பாய்லாலு. ஏழைகளிலேயே அவன் பரம ஏழை எவ்வளவுதான் அவன் வியர்வையை சிந்தி வேலை செய்தாலும், வயிராற உணவு உண்ணும் வருமானம் அவனுக்கு வருவது அரிது. ஆனால், பாய்லாலுவுக்கு நானக் என்றால் யார்? எப்படிப்பட்ட நேர்மையாளர் என்பதைப் பற்றிச் சுல்தான் பூரிலே உள்ள அவனது உறவினன் ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டதால், அவரிடம் மிகுந்த மரியாதை உடையவர் பாய்லாலு. அப்படிப்பட்ட ஏழையிலும் ஏழ்மையான அந்தத் தச்சன் வீட்டிலே தான் நானக்கும், மர்தானாவும் வந்து தங்கியிருந்தார்கள்.

அமெனாபாத் மாநிலத்திற்கு ஒரு கவர்னர். அவர் பெயர் மாலிக் பாகோ. நல்ல மனிதர்தான் என்று அந்த மாநில மக்களால் மரியாதையாகப் பாராட்டப்பட்டவர் அவர்.

குரு நானக் தச்சர் வீட்டில் தங்கி இருந்த அன்று, அந்த ஆளுநர் ஒரு விருந்து நடத்தினார். அந்த விருந்தில் மதபேதமின்றி எல்லாச் சமியார்களும் மத குருமார்களும் விருந்துண்ணும் வாய்ப்புப் பெற்றார்கள். அன்று. நானக் அந்த ஊருக்கு வந்திருக்கும் செய்தியும், அவர் தச்சரது வீட்டில் தங்கியுள்ளதும் அந்த ஆளுநருக்குத் தெரிந்தது. அதனால், அந்தக் கவர்னர், ஓர் அதிகாரியை அனுப்பி குரு நானக்கையும் விருந்துண்ண வருமாறு அழைத்தார்.

ஏழைத் தச்சர் வீட்டிலேயே தங்கியிருந்த நானக், வந்த அதிகாரியிடம் தான் தச்சர் வீட்டிலேயே உணவு உண்டு கொள்வதாகக் கூறிவிட்டார். அத்துடன் இல்லாமல் கவர்னர் நடத்தும் விருந்துக்குத் தன்னால் வர இயலாது என்றும் கூறிவிட்டார்.

குரு கூறியனுப்பிய விவரத்தைக் கேட்ட கவர்னர், குருநானக் ஓர் இந்து கவர்னரான நாம் ஒரு முஸ்லீம், மத அடிப்படையில் நானக் நமது விருந்தில் உண்ண மறுத்து விட்டார் போல் இருக்கிறது என்று எண்ணி குருநானக்குக்காக தனி விருந்து நடத்திட எல்லா ஏற்பாடுகளையும் செய்து உணவுகளைத் தயாரித்தார்.

கவர்னர் மறுபடியும் ஓர் அதிகாரியை அனுப்பி, குருநானக்கை விருந்துக்கு மீண்டும் அழைத்து வருமாறு பணித்தார்.

'எனக்கு ஜாதி வேற்றுமையோ, மத பேதமோ ஏதும் கிடையாது. எனக்காக தூய்மை செய்யப்பட்ட இடமோ, தனியாகத் தயாரிக்கப்பட்ட உணவோ தேவையில்லை. என்னைப் பொறுத்த வரை இறைவனால் படைக்கப்பட்ட பூமியும், அதனுள்ளே உள்ள இடங்களும் தூய்மையானவையே. மனித குல மக்கள் எல்லாரும் எனக்கு சகோதரர்களே அல்லாமல், அவர்களிடம் பேதம் பார்ப்பவன் நான் அல்லன். ஆனால், கவர்னர் வீட்டு விருந்தில் மட்டும் நான் சாப்பிட மாட்டேன்' என்று கூறி அந்த அதிகாரியைத் திருப்பி அனுப்பிவிட்டார் நானக்.