மகான் குரு நானக்/குருத்துவாரம்

விக்கிமூலம் இலிருந்து

6. குருத்துவாரம்

துள்ளத் துடிக்கக் கொலைகளைச் செய்து பாவங்களைச் சேர்த்துக் கொண்ட சஜ்ஜன், ஊர் ஊராகச் சென்று பணக்காரர்களது செல்வங்களைக் கொள்ளையடித்துப் பாவங்களை உருவாக்கிக் கொண்ட சஜ்ஜன், அந்த குடும்பங்களை எல்லாம் தேடிச் சென்று அவர்களது கால்களைத் தனது கண்ணீரால் கழுவிய சஜ்ஜன், திருந்திய மனிதனானான். பாவங்களிலே இருந்து விடுதலை பெற்றான். தன்னை மனிதனாக்கிய சத்குருவுக்கு மரியாதை செலுத்தினான்.

எந்த சத்குருவின் ஞானபோதனையாலும், மூல மந்திரச் சக்தியின் நம்பிக்கையாலும் திருந்திய ஆன்மவாதியாக மாறினானோ அவன் தனது சத்குருவுக்கு நினைவகமாகக் கோவில் ஒன்றையும், ஏழைகளது பசிக்குப் புசிக்க தர்மசாலை ஒன்றையும் உருவாக்கினான்.

சீக்கிய மதத்தை தழுவிய மக்கள் கட்டிய கோவில்களில், சஜ்ஜன் கட்டிய சீக்கியத் திருக்கோவில்தான் முதல் கோவிலாகும். அன்னதான் தர்ம சாலைகளிலும் அவன் நிறுவிய அன்னதான மடமே இன்றும் முதலாவதாகத் திகழ்கின்றது.

சத்குரு நானக், சஜ்ஜன் என்ற கொலைகாரனை மனிதனாக்கிய பிறகு மீண்டும் தனது அறிவு கொளுத்தும் ஆன்மிக ஞானப் பயணத்தைத் துவங்கினார். அவருடன் மர்தானாவும், பாலாவும் தொடர்ந்தனர், மூவரும் வடநாட்டுப் பகுதிகளிலே உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், மேடு பள்ளங்கள், சமவெளிகள் ஆகிய எல்லாப் பகுதிகளையும் கடந்து ஆண்டுக்கணக்காக ஆன்ம உபதேசம் செய்து கொண்டே வந்தார்கள்.

இவ்வாறு தொடர் பயணம் செய்து வந்து கொண்டே இருந்த குருநானக், திடீரென்று தனது சீடர்களிடம், நான் பிறந்த ஊருக்கு உடனே செல்ல வேண்டும். எனது நண்பர் என்னைப் பார்க்க வேண்டும் என்று காத்துக் கிடக்கின்றார் என்றார். இந்த வார்த்தையைக் கேட்ட மர்தானாவும், பாலாவும், யார் அந்த நண்பர் என்று சிந்தித்தவாறே சத்குருவுடன் தாள்வாண்டிக்குப் புறப்பட்டு நடந்தார்கள்.

தாள்வாண்டி ஊர்த் தலைவர் ராய்புலார் சத்குருவின் நேருங்கிய முதல் நண்பரல்லவா? அவர் மரணப் படுக்கையிலே கிடந்தார். தான்் சாவதற்குள் ஒருமுறை தனது நண்பர் சத்குரு நானக்கை காண வேண்டும் என்று ஆசையோடு ஊசலாடிக் கோண்டிருந்தது ஊர்த் தலைவரான ராய்புலார் உயிர். இதை உணர்ந்து கொண்ட சத்குரு உடனடியாக தாள்வாண்டி வந்து சேர்ந்தார்.

சத்குரு நானக்கை ராய்புலார் பார்த்து மரண மகிழ்ச்சி அடைந்தார். இது எத்தகைய நட்புப்பேறு என்று ஊரார் வியந்து பேசிக் கொண்டார்கள்.

இராய்புலார், சத்குருவை நோக்கி, தூய நெஞ்சமுடைய ஞானியே, நான் உம்மை வணங்க வேண்டும் என்று என் இதயம் துடிக்கின்றது. உடல் தான் இடம் தரவில்லை. எனது நெஞ்சும் அன்பும் உங்களுடைய திருப்பாதங்களிலே வீழ்ந்து பணிந்து கிடக்கின்றது என்று ராய்புலார் சத்குருவின் தோள்மேலே சாய்ந்தார்.

உடனே சத்குரு, எனது நெஞ்சைக் கவர்ந்த இளம் வயது அருமை நண்பரே, உங்களுடைய இதயம் எனக்கு அனுப்பிய செய்தியை அறிந்த பின்புதான் நான் ஓடோடி வந்தேன் என்று கனிவான சொற்களைக் அவர் காதுகளில்ே விழுமாறு கூறிய படியே, தனது கையைச் சத்குரு ராய்புலார் தலையிலே வைத்துத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். ராய்புலார் மனம் அமைதியோடு அவரது தோள் மீது சாய்ந்தபடியே இருந்த போது அவர் இறந்து போனார்!

அருமை நண்பரது ஆருயிர் பிரிந்த பின்பு, சத்குரு தனது தாய் தந்தையரைப் போய் பார்த்தார். அன்றிரவே மீண்டும் தனது ஞான பயணத்தைத் துவங்கி விட்டார். சில ஆண்டுகள் சென்றன. அதற்குள் அந்த மார்க்க ஞானி வடநாடு முழுவதையும் சுற்றி வந்து விட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஒடும் வளமான ரவி நதிப் பகுதிக்கு சத்குரு நானக் சென்றார். அங்கே ஓர் அமைதியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே குடியேறினார். அந்த இடம் இறைஞான வழிபாடு செய்வதற்கேற்ற இடமாக அமைந்திருந்தது. அங்கே குடியேறிக் குடும்பங்களோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு அவர் உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

ஞான குரு நானக் குடியமர்ந்திருந்த இடத்திற்குச் சொந்தக்காரன் ஒரு வட்டிக்கடைக்காரன். அவன் பெயர் கரோரியா. தனக்கு உரிமையான இடத்தில் ஒரு சாமியார் குடியேறிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்ட அவன், மிகுந்த கோபத்தோடும், ஆத்திரத்தோடும் தனது வேலைக்காரனோடு குதிரை மேலேறி அந்த இடத்திற்குப் புறப்பட்டான்.

வட்டிக் கடைக்காரன் குதிரை வேகத்துள்ளலால் தடுமாறிக் கீழே விழுந்தது. மறுபடியும் அவன் அந்தக் குதிரையைத் தட்டிக் கொடுத்து ஏறி உட்கார்ந்தான்். குதிரை கடும் வேகமாகப் பறந்து வந்த போது, அவன் கண்பார்வை மங்கியது. அவன் நோக்கிய இடமெலாம் கருப்பாகவே தெரிந்தது. அவனது பார்வைக்கு சர்வமும் கறுப்பு மயமாகவே தென்பட்டது.

உடனே வட்டிக் கடைக்காரன் தனது குதிரையை நிறுத்திக் கொண்டு வேலைக்காரனை அழைத்து, என்னால் எல்லா வற்றையும் பார்க்க முடிகிறது. ஆனால் எல்லாமே ஒரே இருட்டாகவே இருக்கிறதே, ஏன்? என்று தனது வேலைக்காரனைக் கேட்டான்.

வேலைக்காரன், சத்குரு நானக்கின் அருமை பெருமைகளை இதற்கு முன்பே கேள்விப்பட்டிருந்தான். இருந்தாலும், தனது முதலாளியிடம் இதைப் பற்றி ஏதும் அவன் கூறவில்லை. ஒரு வேளை அவன் நானக்கின் பெருமையைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், அந்த முதலாளி அவனது கருத்தை அப்போது அலட்சியப் படுத்திப் பேசியிருப்பான். அதனால் அவன் அவரைப் பற்றிய எந்த விஷயத்தையும் தனது முதலாளியிடம் கூறாமல் இருந்து விட்டான்.

வட்டிக் கடைக்காரன் குதிரை கீழே விழுந்ததும், அவனுக்குக் கண் பார்வை தெரிந்தும்கூட எல்லாமே இருட்டாகவே இருந்ததாலும், அவன் யோசனை செய்ய ஆரம்பித்தான். அந்த நேரத்தில்தான் வேலைக்காரன், சத்குரு யார்? அவர் எப்படிப்பட்ட மகான் என்பதை எல்லாம் முதலாளிக்கு விவரமாக விளக்கினான்.

வேலைக்காரன் கூறிய விவரங்களை அறிந்த வட்டிக் கடைக்காரன். அப்படிப்பட்ட ஞானியா அவர்? என்று திணறிப் போய், குதிரையை விட்டு இறங்கி, அதைக் கையிலே பிடித்துக் கொண்டு, தனது பணியாளனோடு நானக் ஞானியிடம் சென்றான். சத்குரு பாதத்திலே விழுந்து, கதறி, பதறி அழுதான். தன்னை மன்னிக்க வேண்டும் குருதேவா என்று கேட்டுக் கொண்டது மட்டுமன்று. அவனுக்கு ரவி நதிக்கரையில் இருந்த நிலம் முழுவதையும் அவரது மார்க்கத் தொண்டுக்கே உரிமையாக்கி விட்டான்.

அதைக் கேட்ட சத்குரு நானக், “எனது அன்பனே! இந்த இடம் உனக்கும் எனக்கும் உரிமையானதன்று! இறைவனுக்கே சொந்தமானது. இறைவன் தொண்டுக்காக நீ வழங்கிய இந்த இடமெல்லாம் அவரது திருப்பணிக்கே பயன்படப் போகிறது. எனவே, இந்த இடத்திற்கு இறைவன் இருப்பிடம் என்ற பெயர் திகழ்வதாக, கடவுள் இருப்பிடமான இந்த இடத்திற்கு கர்தர்பூர் என்று பெயரிடுகிறேன் என்று சத்குரு கூறினார்.

வட்டிக்கடைக்காரன் கரோரியா, மீண்டும் பழைய கண் பார்வையைப் பெற்று தனது இருப்பிடம் சென்றான். கரோரியா கொடுத்த அந்த நிலப்பகுதிகளை குருநானக் விரும்பியதைப் போல கடவுள் பணிக்கே மக்கள் பயன்படுத்தினார்கள்.

சத்குரு எண்ணத்தின்படி அந்த கர்தர்பூர் எனும் கரோரியா இடத்தில்தான், குருத்து வாரம் என்ற சீக்கிய மதத் திருக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோவிலில் சாதிமத இன பேதங்களின்றி மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, முதன் முதலாக கூட்டு வழிபாடுகள் நடப்பதற்கான வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது.

கோவில் இருந்தால் மட்டும் போதுமா? அந்தக் குருத்துவாரம் கோவிலைச் சுற்றி மக்கள் குடும்பம் குடும்பமாகக் குடியேறி னார்கள். அவர்களுக்கான வீடுகள் கட்டப்பட்டன. குரு தேவர் நானக்கைப் பார்க்க வருபவர்கள் தங்குவதற்கான விருந்தினர் இல்லங்கள் கட்டப்பட்டன. பக்தர்கள் பெருமளவு அந்த இடத்திற்கு வந்து போகும் புனித ஸ்தலமாக கர்தர்பூர் மாறிவிட்டது.

சத்குரு நானக் மறுபடியும் இல்லற வாழ்க்கையைத் துவக்கினார். தனது அருமை மனைவியான சுலாகனி அம்மையையும், செல்வங் களான பூரீசந்த், லட்சுமி சந்த் ஆகியோரையும் அழைத்து வந்து கர்தர்பூர் குருத்துவாரம் அருகே குடியமர்த்தினார். துறவற வாழ்வை நீங்கி மீண்டும் இல்லறவாசியானார் சத்குரு.

வீடு பேறு பெறவோ, இறை வழிபாடு செய்யவோ துறவறம் தான் சரியான மார்க்கம் என்பதை அகற்றி, இல்லறவாசியாக இருந்து கொண்டே இறைவழிபாடு செய்யலாம். வீடு பேறும் பெறலாம் என்ற திருவள்ளுவர் பெருமானது எண்ணப்படி, வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தால் வானுறையும் தெய்வத்தின் இடத்தைப் பெறலாம் என்ற வாழ்க்கையைச் சத்குரு வாழ்ந்து காடடினாா.

நானக் தனது குடும்பத்துடன் விவசாயம் செய்யலானார்! குருத்துவாரம் கோவிலுக்கு வருகின்ற இறைபக்தர்கள் கூட்டம் நாள்தோறும் பெருகலாயிற்று. கோவில் வழிபாட்டுக்கு வருகை புரிவோர் எல்லாம் சத்குரு நானக்கைக் கண்டு தரிசித்துச் சென்றவாறே இருந்தார்கள். சத்குரு, தன்னைத் தேடிவரும் இறையன்பர்களுக்குரிய வாழ்வியல் ஞானபோதனைகளை யாற்றி, அறவாழ்க்கை வழிகளைக் கூறி, கடவுளையே எண்ணி யெண்ணி வீடுபேறு பெறுமாறு போதாந்த உரையாற்றி வந்தார்.

சத்குரு நானக், வயலில் இறங்கி உழுவார்; விதைப்பார் நாற்று நடுவார்; களை களைவார்; அறுவடை செய்வார் இறைவழி பாடுகளை மக்களுக்குக் கூறும் போல துறவியாக, போலி ஞானியாக, போலி ஆன்மீக போதகர்களைப் போல அல்லாமல், அந்த மகானே விவசாயியாக மாறி எல்லாப் பணிகளையும் மற்றவர் உதவிகளின்றி அவரே உழைத்து உழைத்து உழைப்பின் அருமையை, பெருமையை உலகுக்கு உணர்த்தினார்.

விவசாயத் தொழிலில் அவர் உழைப்புக்கான ஊதியத்தைத் தனது குடும்பத்துக்கு எடுத்துக் கொண்டு, மீதியிருக்கும் தானிய வகைகளை குருத்துவாரம் கோவிலுக்கு வரும் பக்தர் பெரு மக்களுக்கும் உதவும் வகையில் உணவு படைப்பதற்காக வழங்கி விடுவார்.

அல்லும் பகலும் அந்த மகானைக் காணவரும் இறை தோண்டர்கள், வாழ்வுக்கு வழி தெரிந்து கொண்ட அறிவோடு - வயிற்றுக்கும் உணவு பெற்றுச் சென்றனர். இப்படிப்பட்ட இறைஞானத் தொண்டர், தனது குடும்பத்துக்கோ, தனது உறவுகளுக்கோ எதையும் சேர்த்து வைக்கும் வழிகாட்டியாக வாழாமல், பொது மக்கள் தொண்டராகவே வாழ்ந்து காட்டினார். சத்குரு நானக்கின் இறை வழிபாடு ஞானம் வட இந்தியா முழுவதும் பரவியது மட்டுமல்ல, இமயமலையையும் தாண்டி அவரது கடவுள் தொண்டுகள் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், நீண்ட நெடுந்தொலை துரத்தில் இருந்து வந்த மக்கட் கூட்டம் ஒன்று குரு நானக்கை நேரில் பார்த்து மகிழ வேண்டும் எனும் ஆசையிலே குருத்துவாரம் வந்தது. அப்போது நானக் வயலிலே ஏர் உழுது கொண்டு உடம்பெல்லாம் ஒரே சேறுமயமாக இருந்தார்.

அந்த நேரத்தில்தான், சத்குருவைக் காண வேண்டுமென்ற மக்கள் கூட்டம் அவரைத் தேடிவந்து, அவரிடம் "நாங்கள் சத்குரு நானக்கைப் பார்க்க வேண்டும். எங்கே அவர் இருக்கிறார் என்று கூற முடியுமா?" என்று கேட்டார்கள். ஏர் உழுது உடலெல்லாம் சேறு மயமாக நின்று கொண்டிருந்த நானக், இவர்கள் நானக்கின் அடையாளம் தெரியாதவர்கள் போலிருக்கு என்று தெரிந்து கொண்டு 'வாருங்கள், அவரைக் காட்டுகிறேன்' என்று தனது வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று, அமரும்படி கேட்டுக் கொண்டு உள்ளே சென்றார்.

திரும்பி வந்த அந்த ஞான மகானைப் பார்த்த அந்த மக்கள், அப்போதுதான் நம்முடன் வந்தவர்தான் சத்குரு என்பதைப் புரிந்து கொண்டார்கள்! அவரை உற்று உற்று நோக்கி ஆச்சரியப்பட்டார்கள். இவ்வாறு அவர் ஏன் இருந்தார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். "உழைப்பிலும் அடக்கத்திலுமே உயர்வு இருக்கிறது" என்பதை அந்த ஞானி அப்போது அவர்களுக்கு உணர்த்தினார். தன்னைத் தேடி வந்த அந்த பக்தர் பெருமக்களுக்கு கடவுளை அடையும் ஞான வழிகளைக் கூறி அவர்களுடன் அளவளாவி, உணவுண்டு, மகிழ்ச்சி பொங்க அவர்களை வழியனுப்பி வைத்தார்.

இரவி ஆற்றின் ஒரு கரையிலே நானக் ஊர் ஒன்றை உருவாக்கினார்! அந்த இடத்திலே இருந்து அடிக்கடி அவர் மறுகரைக்கும் காலாற சென்று வருவார். அந்த மறுகரையிலும் ஒரு திருக்கோவிலை எழுப்பிட அவருக்கு எண்ணம் வந்தது. அங்கே ஒரு கோவிலை கட்டச் செய்தார் நானக், அந்த இடத்திற்கு அவர் தேராபாப நானக் என்று பெயரிட்டார்.

ஒரே ஆற்றின் இரு கரைகளிலும் அவர் ஏன் இரண்டு கோவில்களைக் கட்டினார்? இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுதான் சத்குரு உருவாக்கிய இரண்டு கோவில்களின் உட்பொருள் விளங்கியது.

வெள்ளையர்கள் இந்தியாவை இரண்டாகப் பிரித்துத்தான்் நமக்கு சுதந்திரம் தந்தார்கள். ஒன்று இந்துஸ்தான்; மற்றொன்று பாகிஸ்தான் அல்லவா? அவ்வாறு பிரிட்டிஷார் பிரித்தபோது கர்தர்பூர் பாகிஸ்தான் அதிகாரத்துக்குள் போய்விட்டது. தேராபாபா நானக் என்ற கோவில் பகுதி இந்தியாவுக்குள் வந்துவிட்டது. ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே, சத்குரு நானக், இந்தியா இப்படி இரண்டு துண்டாக்கப் படும் என்பதை உணர்ந்தாரோ என்னவோ அவரது ஆன்மீக தீர்க்க தரிசனத்தால் ஒரு கோவில் பாகிஸ்தானுக்கும், மறுகோவில் இந்துஸ்தானத்துக்கும் வரும் நிலை ஏற்பட்டு விட்டது என்று சீக்கிய மக்கள் கூறுகின்றனர்.

இந்துவானாலும் சரி, முஸ்லீம் ஆனாலும் சரி, சத்குருவுக்கு அந்த மதபேதமே கிடையாது. அவர் மனித நேயம் கொண்ட மகானாக மட்டுமே இருந்தாரே ஒழிய, எந்த மத மக்களையும் இழிவாக எண்ணியவர் அல்லர் அதே போல சாதி பேதங்களையும் கடந்த ஞானி அவர். அதனால் நானக் என்ற மகான், முஸ்லிம்களையும், இந்துக்களையும் ஒரே மாதிரியாகவே மதித்துப் பழகி வந்தார். இரண்டு மதங்களைச் சேர்ந்த மக்கள், பிரிவினைக்கு முன்பு சகோதரப் பாசத்தோடும், சமத்துவ மனப்பான்மையோடும் வாழ்ந்து கொண்டிருந்தபோது, சத்குரு நானக் மகான் அந்த இரு நாட்டு மக்களுக்குமே சீக்கிய சமய நெறிகளை போதித்திருக்கிறார். அதன் அடையாளமாக இன்றும் கர்தர்பூர் நகரம் பாகிஸ்தான் நாட்டில் செல்வாக்கோடு உள்ளதைப் பார்க்கிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் சத்குரு நானக், முஸ்லிம் பெருமக்களிடம் காட்டின மரியாதையும், மதிப்பும், நேசமும் பாசமும் தான்!

குருநானக், பல ஆண்டுகளாக இல்லற ஞானியாக வாழ்ந்தார். தம்மை நாடி வந்த மக்களுக்கு சீக்கிய சமய நெறியை உபதேசம் செய்து வந்தார். அதற்குப் பிறகு அந்த ஞானி தனது இரண்டாவது சமய நெறி பரப்பும் பயணத்தைத் துவக்கினார்.

இலாகூர், பாக்பத்தான், சியால்கோட் போன்ற பெரும் நகரங்களுக்குச் சென்றார். தனது தலையாய தெய்வீக நெறியான ஒன்றே தேவன், ஒன்றே கடவுள், ஒன்றே இறைவன் என்ற உண்மைக்குரிய ஆதாரங்களோடு ஆங்காங்கு வாழ்ந்த மக்களுக்கு ஞான போதனை செய்தார். அவரது அறிவுரை களையும், அறநெறிகளையும் மக்கள் கேட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

இதற்குப் பிறகு மீண்டும் சத்குரு கர்தர்பூர் வந்தார். குருத்துவார வளர்ச்சிகள் எவ்வாறுள்ளன என்பதைக் கண்டார். தனது குடும்பத்துடன் தங்கி குருத்துவாரம் வளர்ச்சிக்குரிய வழிகளை மேற்கொண்டும். கண்காணித்தும், விவசாயம் புரிந்தும் வந்தார் அவர்.