மகான் குரு நானக்/யோகி குருநானக்!
தமிழ்நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றி, தொண்டாற்றி மறைந்துள்ளர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க. கூறுவதைப் போல "திருமூலர் பெருமானைப் போன்ற பல சித்தர்கள் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள். கைலாய மலையின் அடித்தளத்திலே மட்டும் அவர்கள் பூத உடலோடு வாழவில்லை. அம்மலைக்கு மேலே சிவபெருமானோடு என்றுமே அருகிருந்து கொண்டு உண்மை விளக்கங்களை அவ்வப்பொழுது மக்களுக்குத் தந்து வரும் பிறப்பும் இறப்புமற்ற வாழ்வுடையவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்" என்ற விளக்கத்தையும் அவர் கூறியுள்ளார்.
ஏறக்குறைய நாற்பது சித்தர்கள் கலை, ஞானம், பக்தி போன்ற துறைகளிலே தோன்றியவர்களையும் சேர்த்து, கணக்கிட்டிருந்தாலும், அவர்களுள் முக்கியமானவர்கள் என்று மக்களால் போற்றப்படும் பெரும் ஞானிகள் பதினெண் சித்தர்களே ஆவர். அவர்கள் அனைவரும் யோகக் கலைகளிலே பண்பட்ட மேதைகளாவர்.
காட்டிலும் மேட்டிலும் மலைகளிலும், குன்றுகளிலும் சுற்றி அலைந்து காயோ கனியோ கிடைத்தவற்றை உண்டு உறங்கி, பொறிகளின் புலன்களை அடக்கி வென்று, அற்புதங்களை மக்களுக்குச் செய்து காட்டினார்கள். அவர்கள் எழுதி வைத்த திருமந்திரங்கள், திருமறைகள், பாடல்கள் அனைத்தையும் இன்று நாம் படிக்கும் போது சிந்தைகள் சிலிர்க்கின்றன.
அந்த யோக ஞானிகள், புதுப்பது மூலிகைகளைக் கண்டறிந்து மருத்துவ உலகுக்கு வழங்கி, மருத்துவ மன்னர்களாக இன்றும் விளங்குகிறார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட யோகக் கலைகள் மக்களது நோய் தீர்க்கும் கலைகளாகவே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆரோக்கிய வாழ்வுக்குரிய மருத்துவக் கலைகளாகவும், மனோதத்துவக் கலைகளாகவும், அவை போற்றப்பட்டு வருகின்றன. அதனால் அவர்களது கலைகள் யாவும் சித்துக் கலைகளாகவே மதிக்கப்படுகின்றன. எனவே, சித்தர்கள் என்று மக்களால் அவர்கள் அழைக்கப் படுகிறார்கள்.
சித்தர் யார்? தகுதிகள் என்ன?
அறிவு, அறியாமை என்ற அன்றாட நிலைகளைக் கடந்தவர்கள் சித்தர்கள்: இறை அருளால் பெற்ற பேரறிவால் உயர்ந்து நிற்பவர்கள் சித்தர்கள் வரம்பைத் தாண்டிய உண்மையை உணர்ந்தவர்கள் சித்தர்கள்! உண்மை ஒன்றே; எல்லாம் ஒருவனே, இவைதான் சித்தர்கள் கண்ட உண்மை!
சித்தர்கள் கல்வியால் மட்டுமே அறிவை வளர்ப்பவர்கள் அல்லர் வெறும் தத்துவக் கடல்களிலே மட்டும் ஆழம் காண்பவர் அல்லர் ஆன்மீகத்தை நூல்களிலே ஆய்ந்தாய்ந்து, அதையே பேசிப் பேசி மக்களை மயக்குபவரும் அல்லர் சித்தர் அறிவில் அவர்கள் ஆலமரம் போன்றவர்கள். இவ்வுலகில் வாழும் வரை இறையுணர்வோடு ஒன்றிணைந்து வாழ்பவர்கள்! அவர்கள் உள்ளத்திலே ஓடிடும் உயிர் நாடியே உண்மை என்ற மெய்ப்பொருளாகிய இறை தத்துவம் தான் அவர்கள் தான் சித்தர்கள்!
சித்தர்கள் நெஞ்சமெனும் அருவியிலே அன்பும் கருணையும் இரு கரைகளாகக் காட்சி தரும். மக்களது அறியாமை எனும் மண்ணை அரித்துக் கொண்டு அறிவெனும் சலசலப்பு ஓசைகளை எழுப்பி அது நீராகப் பெருக்கெடுத்து வரும். பாமர மக்கள் இடையே அது பண்புடன் கலந்து, அவர்கள் இடையே இரண்டற ஒன்றி வாழ்ந்து, இன்ப துன்பங்களில் பங்கேற்று, தக்க நீதி நெறிகளைக் கற்பித்து, நல்வழிகளில் அவர்களை நடத்திடத் தமது உழைப்புகளைத் தியாகம் செய்பவர்கள் தான் சித்தர்கள்.
தவயோகத்துள் புகுவர் தன்ணொளி பெறுவர்; உலகியல் எண்ணங்களைப் படிப்படியாகக் குறைப்பர் பரம் பொருளை தமது மன வெளியிலே கண்டு, கலந்து களி கொள்பவரே சித்தர் பெருமக்கள்.
அவர்களுக்கு மெய்ஞானமே நிறை அறிவு: அறிவால் எதையும் பாரார்; அருளால் அனைத்தையும் நோக்குவர். அலைகடல் போல அங்கிங்கெனாதபடி அலைவர் சித்தர் போக்கு சிவம் போக்கல்லவா?
ஆசையை அறுப்பதே அவர்களது துறவு. அதனால், ஆண்டவனே ஆனாலும் ஆசையை அறுமின்கள் என்பர் ஆசை மனதின் செயல்; ஞானிகட்கு தோன்றாது ஆசை
சித்தர்கள் சிந்தனைகளே சித்தாந்தம்; வேதத்தின் முடிவுகளே வேதாந்தம்; அதனால்தான் நாம் பேசும் மொழிகளல் ஆன்மீக உண்மைகளை உலகுக்கு விளக்க இயலாது என்றார்கள். ஏனென்றால், சித்தர்கள் அதிகம் பேசமாட்டார்கள் வானத்தைப் பார்ப்பார்கள் மோனத்தைத் தேடுவார்கள்; ஞானத்தை உணர்வார்கள். அவர்களே சித்தர்கள்.
ஒவ்வொரு சமயத்துக்கும் தத்துவங்கள் உண்டு. அதனால், தத்துவ வாதம் செய்து, ஒரு தத்துவத்தை மற்றொரு தத்துவத்தோடு மோதவிட்டு, எனது தத்துவம்தான் சிறந்தது என்ற தத்துவப் போராட்டம் செய்வதன்று சித்தர்கள் போராட்டம். ஒரு வேளை அவர்கள் அவ்வாறு ஈடுபட நேர்ந்தாலும் அதை ஓர் அறிவாய்வுச் சிந்து விளையாட்டாகவே அதனை மதிப்பர் சித்தர்கள்!
அப்படியானால், சித்தர்களது நோக்கம் என்ன? உடல், உயிர், உலகம் ஆகியவற்றுக்கு அடிப்படையாக உள்ள இறைஞானத்தைப் போதித்து, பரம்பொருள் ஒன்றே, அதன் பேறு எனப் பெற்று, மக்களின் பிறப்பறுப்பதே அவர்களது நோக்கம். உலக மக்களுக்கு அதை அறிவுறுத்துவதே அவர்களது சித்தாந்தமாகும்.
அத்தகைய ஞான மகான்களது தொண்டுகள், ஆன்மீகத்தின் அரும் புதையல்களாக மக்களால் போற்றப்படுவதற்கு என்ன காரணம்? அந்த சித்தர்கள் இறுதியாக எங்கெங்கே உயிர் துறந்தார்களோ, அந்தப் புனித இடங்கள் எல்லாம் மக்கள் நாள்தோறும் சென்று வணங்கி வழிபாடியற்றும் திருக்கோயில் களாக தெய்வத் தலங்களாக இன்றும் காட்சி தருகின்றதைப் பார்க்கின்றோம். நாமும் சென்று நமது நன்றி வழிபாட்டை ஆங்காங்கே நடத்துகின்றோம்.
எடுத்துக்காட்டாக திருமூலர் தில்லையிலும், அழகர் மலையில் இராமதேவரும், அனந்த சயனத்தில் கும்ப முனியும், திருப்பதியில் கொங்கணவரும், பாரூரில் கமல முனிவரும், சோதியரங்கத்தில் சட்ட முனியும், கருவையில் கருவூராரும், கூடலில் சுந்தரானந் தரும், எட்டுக் குடியில் வான்மீகரும், காசியில் நந்தி தேவரும், சங்கரன் கோயிலில் பாம்பாட்டிச் சித்தரும், பழநியில் போகரும், திருப்பரங்குன்றத்தில் மச்ச முனியும், இராமேசுரத்தில் பதஞ் சலியும், செந்திலில் கோரக்கரும், வைத்தீஸ்வரன் கோயிலில் தன்வந்தரியும், குதம்பைச் சித்தர் மாயவரத்திலும் உயிர் துறந்த புனித இடங்கள் எல்லாம் திருக்கோயில்களாக நின்று இன்றும் மக்களுக்கு அருளாசியை வழங்குகின்றன.
மேலே கூறப்பட்ட சித்தர் மகான்கள் எல்லாம்; ஞான யோகிகளாக ஆன்மீக அருளாளர்களாக வாழ்ந்த பெரு மக்களாவார். அவர்களுக்கு சாதிகள் கிடையாது. மதங்களை மதியார் மனிதநேயம்தான் அவர்களது மதம் என்று எண்ணியவர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற இறை ஞான சிந்தாந்தம் கொண்டவர்கள்.
'யாதும் ஊரே, யாவரும் உறவினரே' என்ற விரிந்த உலகம் கான சித்த விஞ்ஞான நெறிகளை இந்த வியன் உலகுக்கு வழங்கினார்கள் தமிழ் மகான்கள். அதனால்தான் பாரதப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார், ரஷ்ய நாட்டுக்கு சென்றிருந்தபோது, எங்கள் நாட்டின் மனித நேயச் சித்தாந்தம் இதுதான் என்று எடுத்துக்காட்டிப்பேசினார்கள். அதனால்தான், அந்த சிந்தாந்திகளை நாம் இன்றும் போற்றுகின்றோம்.
வட இந்தியாவிலே மேற்கு பஞ்சாப் மாநிலத்திலுள்ள தாள்வாண்டி என்ற கிராமத்திலே பிறந்த குருநானக் என்பவரும், தமிழ்நாட்டுச் சித்தர்களைப் போல வாழ்ந்து காட்டி, அங்குள்ள மக்களுக்கு சித்தாந்தங்களைப் போதித்திருக்கிறார்.
குருநானக் இளம் வயதிலேயே இறையனுபவம் முற்றிலும் பெற்ற ஓர் ஒப்பற்ற ஞான யோகியாக வாழ்ந்து காட்டியுள்ளார். இறைவனை புறத்திலும், அகத்திலும் வழிபட்டு, தனது யோக தவத்தின் வலிமையாலும், நிஷ்டையின் ஒழுக்க சாதனைகளாலும் பரம் பொருளைத் தம்முள் கண்ட மகானாகவும், இறைஞானம் நிறைந்த மகாத்மாவாகவும் அவர் திகழ்ந்துள்ளார்.
தனக்கு வந்த துன்பம், நோய், அச்சம், வறுமை எல்லாவற்றையும் துச்சமாகத் துக்கி எறிந்து விட்டு, நாள்தோறும் மக்களுக்கு ஞானோபதேசம் செய்து, ஊர் ஊராக, நாடு நாடாக அலைந்து திரிந்து வாழ்க்கையின் ஞான விதைகளை மக்களது நெஞ்சங்களில் தூவி, புதியதொரு வாழ்வியல் மார்க்கத்தை மக்களுக்காக உருவாக்கி; அதன் வழியிலே அவர்களை நடக்க வைத்தவர் ஞானி குருநானக் சொந்தபந்தங்களைத் துறந்து கடுந்தவம் புரிந்தார்.
தனது மாணவர் மர்தான்ாவுடன் சைதாபாத் என்ற நகர் வந்தார். அவர் அன்று தங்கிய அந்த ஊரை மக்கள் இன்று அமெனாபாத் என்று அழைக்கின்றார்கள். அந்த ஊரில் பாய்லாலு என்ற ஓர் ஏழை தச்சன் வீட்டிலே வந்து அவர் தங்கினார்.
அந்த ஏழைத் தச்சன் ஒரு மனிதாபிமானி; குருநானக் அபிமானி, அன்பு மட்டுமல்ல தச்சனிடம் இருந்த ஒழுக்கமும் கூட நானக் என்னென்ன உபதேசங்களை மக்களுக்கு கூறினாரோ அதற்கேற்ப வாழ்ந்து வந்த குருநானக் விசுவாசியாகவும் அந்த ஊரில் விளங்கி வந்தவர்.
அமெனாபாத் மாநிலத்தின் ஆளுநர் பெயர் மாலிக்பாகோ. குருநானக் ஏழைத் தச்சன் வீட்டில் தங்கி இருந்த அன்று, கவர்னர் ஒரு விருந்து நடத்தினார். அந்த விழாவில் அந்த நகரின் முக்கியமான செல்வர்கள், அதிகாரிகள், மதகுருக்கள், முல்லாக்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டார்கள். அதே நேரத்தில் ஊருக்குப் புதிதாக வருகை தந்துள்ளவர்களும், ஏழை மக்களும் கூட விருந்தில் கலந்துண்ணலாம் என்று ஆளுநர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். குருநானக் தங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்ட உடனே அவரிடம் சென்று எல்லோரும் அருளாசி பெற்றார்கள். அப்போது குருநானக்கிடம் ஆளுநர் அனுப்பிய ஒர் அதிகாரி வந்தான். கவர்னர் தங்களை விருந்துக்கு அழைத்து வருமாறு என்னை அனுப்பினார் என்றான்.
அதற்கு குருநானக், 'எனது ஏழை நண்பர் தச்சர் பாய்லாலு வீட்டில்தான் விருந்துண்ணப் போகிறேன். அது மட்டுமன்று, ஆளுநர் நடத்தும் விருந்துக்கு நான் வர மாட்டேன்' என்று கூறி அந்த அதிகாரியை அனுப்பிவிட்டார்.
குருநானக் கூறிய பதிலைக் கேள்விப்பட்ட ஆளுநர் நானக் ஓர் இந்து நான் ஒரு முஸ்லீம், அந்த மத பேதத்தால் நானக் எனது விருந்துக்கு வர மறுத்துவிட்டாரோ என்று யோசித்தார். உடனே நானக் விருந்துண்பதற்கான தனி ஏற்பாடுகளை ஆளுநர் செய்தார். மறுபடியும் ஆளுநர் அதே அதிகாரியை நானக்கிடம் அனுப்பி விருந்துக்கு அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.
ஆளுநர் அனுப்பிய அதிகாரி மீண்டும் குருநானக்கிடம் வந்து, தனி விருந்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் ஆளுநர் செய்த விவரத்தையும் அவரிடம் விவரித்தார்.
'எனக்கு ஜாதி வேற்றுமை என்ற எண்ணமே கிடையாது. எங்கும் உண்பேன்; எங்கும் உறங்குவேன்; எனக்காகத் தூய்மை செய்யப்பட்ட இடமோ, தனியாகத் தயாரிக்கப்பட்ட உணவோ எதுவும் தேவையில்லை. கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் எல்லா இடங்களும் எனக்குத் தூய்மையானவைதான். ஜாதி பேதமோ, மத பேதமோ, உணவு பேதமோ, இட பேதமோ, இன பேதமோ எதுவுமே என்னைப் பொறுத்தவரை கிடையாது. ஆனால், கவர்னர் மாலிக் வீட்டில் நான் உணவு உண்ண மாட்டேன்' என்று கூறி வந்த அதிகாரியைத் திருப்பி அனுப்பி விட்டார் குருநானக்
கொந்தளித்தார் கவர்னர் குருநானக் தங்கியிருந்த ஏழை தச்சன் வீட்டுக்கு விர்ரென்று பரிவாரங்களோடு வந்திறங்கினார். வீட்டிற்குள் நுழைந்து, எனது வீட்டில் உணவுண்ண மறுத்த காரணம் என்ன? என்று நெருப்புப் பொறிகள் தெறித்தார்போல கோபமாகக் கேட்டார் ஆளுநர்.
உடனே குருநானக், ஆளுநரை நோக்கி, உண்மையை உணர விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்களுடைய வீட்டில் இருந்து உணவை எடுத்துவரச் சொல்லுங்கள் என்றார்.
கவர்னர் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, ஆட்களை அனுப்பி குருநானக்குக்காக தனியாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கொண்டு ஆணையிட்டார்.
வந்தது உணவு அதிலே இருந்து ஒரு ரொட்டித் துண்டை எடுத்து நானக் தனது ஒரு கையிலே வைத்துக் கொண்டார். ஏழை தச்சன் வீட்டின் ஒரு ரொட்டித் துண்டை மறுகையிலே எடுத்துக் கொண்டார்.
இரண்டு கைகளிலும் இருந்த ரொட்டித் துண்டுகளை வந்தவர்கள் கண்ணெதிரே தனித்தனியாகப் பிழிந்து காட்டினார். கவர்னர் வீட்டு ரொட்டித் துண்டிலிருந்து ரத்தம் வடிந்தது. தச்சன் வீட்டு ரொட்டித் துண்டிலிருந்து பால் வடிந்தது. அதைப் பார்த்த அனைவரும் வியந்து போனார்கள்.
அப்போது ஆளுநரைப் பார்த்த குருநானக், இப்போது புரிந்ததா உமக்கு? நான் ஏன் உமது வீட்டு உணவை உண்ண மறுத்தேன் என்பதற்குரிய காரணம். உங்களுடைய உணவில் ஏழை மக்களது ரத்தம் கலந்திருக்கிறது. ஏன் தெரியுமா? ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து, வாட்டி வதக்கி அவர்களது உழைப்பில் நீங்கள் உல்லாசியாக, கவுரவம் தேடுகிறீர்கள். இந்த ஏழை தச்சர் தானே உழைத்து உழைத்து வேர்வை சிந்தி வருமானம் தேடி வாழ்கிறார். அந்த வேர்வைதான் நீங்கள் இப்போது பார்த்த பாலாக ஒடிய காட்சி என்றார். அளுநர் மன வருத்தத்தோடு வந்த வழியே நடந்தார்.
இந்தச் செய்தி சிறிது நேரத்துக்குள் நகர் முழுவதும் பரவியது. மக்கள் கூட்டம், கூட்டமாக வந்தார்கள். எங்கு பார்த்தாலும் குருநானக் வந்தார்கள். அற்புதம் பற்றிய பேச்சே எதிரொலித்தது.