மகுடபதி/நள்ளிரவு நாடகம்
பதினாறாம் அத்தியாயம் - நள்ளிரவு நாடகம்
பங்கஜம் பளிச்சென்று விளக்கை அணைத்தாள். சத்தமில்லாமல் ஜன்னலண்டை போய் வெளியில் பார்த்தாள்.
ஏறக்குறைய பாதி வட்டமாயிருந்த சந்திரன் மேற்கே அஸ்தமித்துக் கொண்டிருந்தது. அதனுடைய மங்கிய ஒளி அப்போது பெய்து கொண்டிருந்த பனியினால் இன்னும் மங்கலாகக் காட்டிற்று. அந்த மங்கிய நிலவில், ஒரு உருவம் பங்கஜத்தின் அறைப்பக்கத்திலிருந்து எதிர்ப்புறமாகப் போய்க் கொண்டிருந்ததை அவள் பார்த்தாள். பார்த்ததும், பங்கஜம் "யாரடா அது?" என்று கூச்சல் போட எண்ணினாள். ஆனால், அவளுடைய நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. வாயிலிருந்து சத்தம் கிளம்பவில்லை. அவளுடைய தேகமெல்லாம் அந்த மார்கழி மாதக் கடுங்குளிரில் சொட்ட வியர்த்தது. ஒரு நிமிஷ நேரம் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றாள்.
பங்களாவுக்கெதிரில், கார் வந்து நிற்பதற்கான முன் முகப்பு இருந்தது. அந்த முகப்புக்கு வாசல் காம்பவுண்ட் சுவருக்கு மத்தியில் மரமல்லிகை மரங்களும் குரோட்டன்ஸ் செடிகளும் அடர்த்தியாகப் படர்ந்த ஒரு கொடி வீடும் இருந்தன. அங்கிருந்து மலர்களின் நறுமணம் கம்மென்று வந்து கொண்டிருந்தது.
ஜன்னல் பக்கத்திலிருந்து போன உருவம் அந்தக் கொடி வீட்டுக்கருகில் சென்றது. அங்கே சற்றுத் தயங்கி நின்றது. பிறகு அந்தக் கொடி வீட்டுக்குள் நுழைந்தது.
பங்கஜம் சற்று நேரம் ஜன்னலண்டையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். கொடி வீட்டுக்குள் நுழைந்த உருவம் வெளியே வரவில்லை. இதற்குள் அவளுக்குப் பயம் தெளிந்துவிட்டது. அச்சமயம், தான் என்ன செய்யவேண்டுமென்று யோசித்தாள். அப்பாவிடம் போய்ச் சொல்லலாமா? அதுதான் நியாயமாகச் செய்ய வேண்டியது. ஆனால்...? பங்கஜத்தின் மனதிற்குள் ஒரு விசித்திரமான சந்தேகம் உதித்தது. அவளுடைய அறையின் ஜன்னலோரத்திலிருந்து கிளம்பிச் சென்று கொடி வீட்டுக்குள் நுழைந்த உருவம் பார்ப்பதற்கு ஒரு இளைஞனுடைய உருவமாயிருந்தது. அது யாராயிருக்கும்? ஒரு வேளை...? என்ன பைத்தியக்காரத்தனம்? ஒரு நாளும் இருக்காது!... ஆனால் ஏன் இருக்கக்கூடாது?...இல்லை, இல்லை. கார்க்கோடக் கவுண்டர் தான் அப்பா திரும்பி வந்து என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதற்கு ஆளை அனுப்பியிருக்க வேண்டும்... ஒரு வேளை சாதாரணத் திருடனோ, என்னமோ? சே! திருடனாயிருக்க முடியாது. திருடன் அவ்வளவு துணிச்சலாய் வீட்டில் விளக்கு எரியும் போது வந்து ஜன்னலண்டை உட்கார்ந்திருப்பானா?
எப்படியிருந்தாலும், தானே அந்த மர்மத்தைக் கண்டு பிடித்து விடுவது என்று பங்கஜம் தீர்மானித்துக் கொண்டாள். அப்பாவைக் கூப்பிட வேண்டியதில்லை. தன்னுடைய சந்தேகம் ஒருவேளை உண்மையாயிருந்தால் அப்பாவைக் கூப்பிட்டால் காரியம் கெட்டுப் போய்விடும். அப்படியென்ன மோசம் வந்துவிடப் போகிறது? திருடனாய்த்தான் இருக்கட்டுமே? ஒருவனால் என்ன செய்யமுடியும்? எல்லாவற்றுக்கும் முன் ஜாக்கிரதையாயிருந்தால் போகிறது. அப்படி மிஞ்சி வந்தால், முன் அறையில் தானே அப்பா படுத்திருகிறார்? கூச்சல் போட்டால் உடனே வந்து விடுகிறார்.
இப்படியெல்லாம் சிந்தித்து, இந்நிலைமையில் சாதாரணப் பெண் எவளும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்யத் துணிந்தாள் பங்கஜம். அவள் படித்திருந்த நூற்றுக்கணக்கான நாவல்களில் வரும் கதாநாயகிகளின் தைரியம், துணிச்சல் எல்லாம் அவளிடம் அந்த நிமிஷத்தில் வந்து குடிகொண்டன. ஓசைப்படாமல் நடந்து போய் ஒரு அலமாரியைத் திறந்தாள். அதற்குள்ளிருந்து இரண்டு பொருள்களை எடுத்துக் கொண்டு வந்து ஜன்னலண்டை நின்று, நிலவு வெளிச்சத்தில் பார்த்தாள். அவற்றுள் ஒன்று, டார்ச் லைட்; இன்னொன்று, கைத்துப்பாக்கி!
கைத்துப்பாக்கி, அவளுடைய தகப்பனார் கடப்பா ஜில்லாவில் உத்தியோகம் பார்த்த காலத்தில் அபாயத்துக்காக வைத்துக் கொண்டிருந்தது. இப்போது அது துருப்பிடித்துக் கிடந்தது. அதில் ரவையும் கிடையாது. ஒரு விளையாட்டுப் பொருளாக அதைப் பங்கஜம் தன் அலமாரியில் எடுத்து வைத்திருந்தாள். சில சமயம் அவளுடைய தோழிகள், தம்பிமார்கள், வேலைக்காரர்கள் முதலியோரை விளையாட்டுக்காகச் "சுட்டு விடுவேன்" என்று அவள் இந்தத் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்துவதுண்டு. திருடனை அதனால் ஒன்றும் செய்யமுடியாதென்று அவளுக்குத் தெரியும். ஆனாலும், அவள் இப்போது கொண்டிருந்த நோக்கத்துக்கு அதுவே போதுமாயிருந்தது.
பிறகு பங்கஜம் ஓசைப்படாமல், அந்த அறையிலிருந்து வெளி வராந்தாப் பக்கமுள்ள கதவைத் திறந்தாள். வெளியில் எல்லாம் நிசப்தமாய் இருந்தது. அடிமேல் அடிவைத்து நடந்து தாழ்வாரத்திலிருந்து 'போர்டிகோவில்' இறங்கி, அங்கிருந்து கொடி வீட்டின் அருகில் வந்தாள். அப்போது அக்கொடி வீட்டுக்குள்ளிருந்து மிக மெலிந்த விம்முகிற குரலில் யாரோ பேசும் சத்தம் வந்து கொண்டிருந்தது. பங்கஜம் உற்றுக் கேட்டாள். 'பைத்தியம்' 'பைத்தியம்' 'செந்திருவுக்குச் சித்தப் பிரமை' என்று ஒரு குரல் தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அந்தக் குரலில் எவ்வளவோ ஏக்கமும், ஏமாற்றமும், வேதனையும் கலந்திருந்தன.
சற்றுத் திகைத்து நின்ற பிறகு, பங்கஜம் கொடி வீட்டின் அருகில் நெருங்கிச் சென்று ஒரு கையில் கைத்துப்பாக்கியை நீட்டியபடி, இன்னொரு கையில் டார்ச் லைட்டை அமுக்கினாள். பளீரென்று வெளிச்சம் அடித்தது. கொடி வீட்டுக்குள்ளே உட்காருவதற்காகப் போட்டிருந்த சிமெண்ட் விசிப்பலகையில் ஒரு வாலிபன் உட்கார்ந்திருந்தான். திடீரென்று வெளிச்சம் அடித்ததும் அவன் திடுக்கிட்டுக் குனிந்த தலையை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரில் டார்ச் லைட்டின் ஒளிபட்டு மின்னியது. எதிரே கைத்துப்பாக்கியுடனும் டார்ச் லைட்டுடனும் நின்று கொண்டிருந்த பங்கஜத்தைப் பார்த்ததும், அவனுக்கு ஒரே திகைப்பாய்ப் போயிருக்க வேண்டும். ஒரு வினாடியில் அவனுடைய கண்களில் கண்ணீர் வறண்டு விட்டது. பங்கஜத்தை வியப்புடன் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஐந்து நிமிஷம் வரையில் இவ்விதம் இருவரும் ஒருவரையொருவர் மௌனமாக உற்றுப் பார்த்தபடி இருந்தார்கள். பங்கஜத்துக்கும் பேச நா எழவில்லை. அவளுடைய சந்தேகம் ஒரு விஷயத்தில் உண்மையாயிற்று. இந்த வாலிபன் அன்று அவர்கள் வீட்டுக்குப் புதிதாக வந்த தவிசுப் பிள்ளைதான்! அன்று சாயங்காலம் பங்கஜம் தன் அறைக்குள் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த போது, வாசலில் யாரோ வந்து 'ஸார்!' என்று கூப்பிடும் சப்தம் கேட்டது. கதையின் சுவாரஸ்யத்தில் ஆழ்ந்திருந்தபடியால் பங்கஜம் போய் யார் என்று கேட்கவில்லை. அவளுடைய தாயார் உள்ளேயிருந்து வந்து வாசல் கதவைத் திறந்தாள். அம்மாவுக்கு வந்திருந்தவனுக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது பங்கஜத்தின் காதில் விழுந்தது.
"யாரப்பா நீ?"
"ஐயாவை ஒரு காரியமாய்ப் பார்க்க வந்தேன். இருக்கிறார்களா?"
"தவிசுப்பிள்ளையா? இதற்கு முன் யார் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாய்?"
"வந்து நான்..."
"கோடிவீட்டு ஆச்சி அனுப்பினார்களா? அவங்ககிட்டத்தான் நான் தவிசுப்பிள்ளை வேண்டுமென்று சொல்லி வைத்திருந்தேன்."
இவ்வளவுதான் பங்கஜத்துக்குக் கேட்டது. அப்போது அவளுக்குச் சிரிப்பாய் வந்தது. அவளுடைய தாயாருக்குக் கொஞ்சம் காது மந்தம். "யாரோ ஒருவன் எதற்காகவோ அப்பாவிடம் வந்திருக்கிறான்; அவனைப் பிடித்து அம்மா தவிசுப்பிள்ளையா என்று கேட்டாள்" என்பதாக எண்ணிப் பங்கஜம் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
ஆனால், சாயங்காலம் பங்கஜம் சமையல் அறைக்குள் போனபோது, ஒரு வாலிபன் நாகரிகமும் அழகும் வாய்ந்த தோற்றம் உள்ளவன் - சமையல் வேலையில் அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து வியப்படைந்தாள். அம்மாவிடம் ஜாடையினால் "இவன் யார்?" என்று கேட்டாள். "தவிசுப்பிள்ளை வேண்டுமென்று கோடிவீட்டு ஆச்சியிடம் சொல்லியிருந்தேன். அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள்" என்று தாயார் சொன்னாள். "சாயங்காலம் வந்தவன் இவந்தானா? அம்மா தப்புச் செய்கிறாள் என்று நாம் நினைத்ததல்லவோ தப்புப் போலிருக்கிறாது?" என்று எண்ணிக் கொண்டாள். பிறகு, சாப்பிடும் சமயத்தில் பங்கஜம் புதிய சமையற்காரனைக் கொஞ்சம் கவனிக்கத் தொடங்கினாள். "இவ்வளவு நாகரிகமான சமையற்காரனும் இருக்கிறானா? முகத்தில் என்ன களை? எவ்வளவு சுத்தமாயிருக்கிறான்?" என்று எண்ணிக் கொண்டாள். ஆனால், அந்தத் தவிசுப்பிள்ளை தன்னைக் கடைக்கண்ணால் அடிக்கடி பார்ப்பதைக் கவனித்தபோது, பங்கஜத்துக்கு அசாத்தியக் கோபம் வந்தது. "அம்மாவிடம் சொல்லிப் பிரயோசனமில்லை; அப்பா வந்ததும், இந்தத் தவிசுப்பிள்ளை வேண்டாம் என்று போகச் சொல்லிவிட வேண்டும்" என்று எண்ணிக் கொண்டாள்.
ஆனால், அப்பா இராத்திரி பத்து மணிக்கு வந்த பிறகு அவர் கூறிய ஆச்சரியமான விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்ததில், புதிய தவிசுப் பிள்ளையைப் பற்றி அவள் அடியோடு மறந்துவிட்டாள்.
இப்போது, கொடி வீட்டுக்குள் உட்கார்ந்து விம்மிக் கொண்டிருந்தவனை டார்ச்லைட்டின் வெளிச்சத்தில் பார்த்ததும், புதிய தவிசுப் பிள்ளைதான் என்று உடனே தெரிந்து போய்விட்டது. ஆனால், உண்மையில் இவன் யார்? கார்க்கோடக் கவுண்டரின் ஆளா? உளவு அறிந்து போவதற்காக வந்தவனா? அல்லது... ஒருவேளை... அப்படியும் இருக்க முடியுமா?
ஐந்து நிமிஷ நேரம் இவ்விதம் சிந்தனையில் ஆழ்ந்து நின்ற பிறகு பங்கஜத்துக்கு ஏதாவது பேசினாலொழிய நெஞ்சு வெடித்துவிடும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.
"யார் நீ? நிஜத்தைச் சொல்லிவிடு! இல்லாவிட்டால்..." என்று பங்கஜம் மேலே சொல்லத் தயங்கித் தொண்டையைக் கனைத்தாள்.
அந்த வாலிபனும் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "இல்லாவிட்டால்...?" என்றான்.
"இந்தத் துப்பாக்கியின் குண்டுக்கு இந்த நிமிஷமே இரையாவாய்!" என்று பங்கஜம் நாவல் பாஷையில் சொன்னாள்.
அந்த வாலிபன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் எவ்வளவோ சோகமும் வெறுப்பும் கலந்திருந்தன.
"அப்படியே செய்துவிடு அம்மா! எனக்குப் பெரிய உபகாரமாயிருக்கும்" என்றான்.
பங்கஜத்துக்கு என்னமோ செய்தது. ஆனாலும் அவள் சமாளித்துக் கொண்டு, "இந்தப் பாசாங்கெல்லாம் வேண்டாம் யார் நீ? உன் பெயர் என்ன? நிஜத்தைச் சொல்லிவிடு!" என்றாள்.
"நிஜம் சொல்ல வேண்டுமா? நிஜம்! நிஜம்! இந்த உலகத்தில் நிஜத்துக்கு மதிப்பு இருக்கிறதா? நிஜம் சொன்னால் கேட்கிறவர்களும் உண்டா? அம்மா! நிஜத்தைச் சொல்கிறேன். அதற்குப் பதிலாக எனக்கு ஒரு உபகாரம் செய்வாயா?" என்று வெறிபிடித்தவன் போல் பேசினான்.
"உபகாரமா? என்ன உபகாரம்?" என்று பங்கஜம் கேட்டாள்.
"உன் கையிலிருக்கிற துப்பாக்கியால் என்னைச் சுட்டுக் கொன்றுவிடு; இல்லாவிட்டால், அந்தத் துப்பாக்கியை என் கையிலாவது கொடு. நானாவது சுட்டுக் கொண்டு சாகிறேன்" என்றான் வாலிபன்.
"இந்தா!" என்று பங்கஜம் தன் கையிலிருந்த துப்பாக்கியைக் கொடுத்தாள்.
அதை வாங்கி விசையை இழுத்துப் பார்த்துவிட்டு, வாலிபன் வெறுப்புடன் கீழே போட்டான்.
பங்கஜம் சிரித்தாள்.
வாலிபன் அவளைக் கோபமாய்ப் பார்த்து "உனக்குச் சிரிப்பும் வருகிறதா?" என்று கேட்டான்.
"சிரித்தால் என்ன?"
"உன் சிநேகிதிக்கு இப்படிப்பட்ட விபத்து வந்திருக்கும் போதா சிரிப்பது?... உன் மனது என்ன கல்லா?"
"என் சிநேகிதிக்கு என்ன விபத்து வந்துவிட்டது?"
"வேறென்ன விபத்து வரவேண்டும்? உன் தகப்பனார் தான் சொன்னாரே, பைத்தியம் பிடித்து விட்டதென்று?"
"செந்திருவுக்கா பைத்தியம்? ஒரு நாளுமில்லை. அவளுக்குப் பைத்தியம் என்று சொல்லுகிறவர்களுக்குத் தான் பைத்தியம்!" என்றாள் பங்கஜம்.
"என்ன? என்ன? பைத்தியம் இல்லையா? அதெப்படிச் சொல்கிறாய்? பகவானே! இதுமட்டும் நிஜமாயிருந்தால்?... உனக்கு எப்படி தெரியும்? எதனால் அவ்வளவு நிச்சயமாய்ச் சொல்கிறாய்?"
"முதலில், நீ யார் என்று சொல்? சொன்னால்..."
"சொன்னால்..."
"செந்திருவுக்குப் பைத்தியம் ஏன் இல்லை என்று நான் தெரிவிக்கிறேன்."
"என் பெயர் மகுடபதி!"
"நினைத்தேன், நினைத்தேன். நீதானா என் சிநேகிதியைப் பைத்தியமாக அடித்த புண்ணியவான்?" என்றாள் பங்கஜம்.