மதமும் மூடநம்பிக்கையும்/எப்படிச் சீர்திருத்துவது
மதம் 4
எப்படிச் சீர்திருத்துவது?
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆடவரும் பெண்டிரும். உலகைச் சீர்திருத்தப் பெரிதும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள், கடவுள்களையும், பூதங்களையும், மோட்சங்களையும், நரகங்களையும் உண்டாக்கிப் பார்த்தார்கள்; அவர்கள் புனித வேதங்களை எழுதிப் பார்த்தார்கள்; அதிசயங்கள் காட்டிப் பார்த்தார்கள்; கோயில்களையும் இருட்டறைகளையும் கட்டிப் பார்த்தார்கள்; அவர்கள், அரசர்களுக்கும் அரசிகளுக்கும் முடி சூட்டியும் பார்த்தார்கள். முடி கழற்றியும் பார்த்தார்கள்; அவர்கள் மக்களைச் சித்ரவதை செய்தும். சிறைபிடித்தும், தோலுரித்தும், நெருப்பிலிட்டும் பார்த்தார்கள்; அவர்கள் மத போதனை செய்தும் பார்த்தார்கள்: வழிபாட்டுரை கூறியும் பார்த்தார்கள்; அவர்கள், உறுதிமொழிகளை யளித்தும் பார்த்தார்கள்; அச்சுறுத்தல்களைச் செய்தும் பார்த்தார்கள்; அவர்கள், மகிழ்ச்சியூட்டிப் பார்த்தார்கள்; நயந்து கூறிப் பார்த்தார்கள்; அவர்கள் கற்றுக்கொடுத்தும் பார்த்தார்கள்: அதன்படி செய்யச் சொல்லியும் பார்த்தார்கள். அவர்கள், மக்கள் நாணயமாகவும், நேர்மையாகவும், கடும் உழைப்போடும், நல்ல நலத்தோடும் வாழ்வதற்கு எவ்வளவோ எண்ணற்ற வழிகளில் முயன்று பார்த்தார்கள்; அவர்கள். வைத்தியச் சாலைகளையும் வைத்திய விடுதிகளையும், பல்கலைக் கழகங்களையும், பள்ளிக்கூடங்களையும் கட்டிப் பார்த்தார்கள்; அவர்கள், மக்கள் நன்றாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ, அவர்களால் இயன்ற மட்டும் செய்து பார்த்தார்கள்; இப்படியெல்லாம் இருந்தும் அவர்கள் வெற்றியடையவில்லை!
ஏன் சீர்திருத்தக்காரர்களெல்லாம் தோல்வியுற்றனர்? ஏன் தோற்றனர்? என்பதை நான் கூறுகிறேன்.
அறியாமை, வறுமை, தீமை ஆகியவைகள் உலகில் நிரம்பிக்கொண்டிருக்கின்றன. சாக்கடையே மருத்துவமனையாக விளங்குகிறது. தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில், தங்கள் குச்சி வீடுகள் குடிசைகள் குகைகள் ஆகியவற்றைக் குழந்தைளால் நிரப்புகின்றனர். அவர்கள், 'ஆண்டவனையும்' 'அதிர்ஷ்டத்தையும்' 'தருமத்தையும்' நம்பியிருக்கின்றனர். நிகழ்ச்சிகளுக்கான காரணங்களைப்பற்றிச் சிந்திப்பதற்கோ, அல்லது பொறுப்புணர்ச்சியைப்பற்றி உணர்ந்து கொள்வதற்கோ, சிறிதும் அறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதே சமயத்தில் அவர்கள் குழந்தைகளை விரும்புவதில்லை; னென்றால், குழந்தை ஒரு 'சாபக்கேடு'-அதற்கும் அவர்களுக்கும் 'சாபக்கேடு' என்று எண்ணுகின்றனர். குழந்தை யாராலும் வரவேற்கப்படுவதில்லை; ஏனென்றால், அது ஒரு சுமையாகக் கருதப்படுகிறது. இப்படி வேண்டப்படாத குழந்தைகள் தான், சிறைக்கூடங்களையும் காவற்கூடங்களையும், வைத்திய சாலைகளையும், பைத்திய சாலைகளையும், கொலைக்களங்களையும் தூக்குமரங்களையும் நிரப்புகின்றனர். ஒரு சிலர்தான் எதிர்பாராத தன்மையாலோ அல்லது ஆதரவு கிடைத்த முறையாலோ இவற்றினின்றும் தப்பி வெளியேறுகின்றனர்; ஆனால் பெரும்பான்மையோர் அவற்றினின்றும் மீளமுடியாமல், மாண்டொழிகின்றார்கள். அவர்கள் எத்தி நடப்பதாலும், வலிவு காட்டுதலானும் பிழைப்புக்கு வழி தேடிக்கொள்கிறார்கள். அவர்கள், தாங்கள் கற்ற கெட்ட வொழுக்கங்களைத் தங்கள் குழந்தைகளுக்குகும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இப்படிப்பட்ட தீமைகளுக்கு எதிரில் சீர்திருத்தத் தொண்டுகள்—முயற்சிகள் வலிவற்றனவாகி விடுகின்றன. 'தருமம்' செய்தல் என்பது. ஒருவிதத்தில், நம்மையறியாமலேயே, குற்றத்தை வளர்க்கும் கருவியாக ஆகிவிடுகிறது!
தோல்வி, இயற்கையின் அடையாளக் குறிபோலும்! ஏன்? இயற்கை ஒரு வரையறுக்கப்பட்ட எடுத்துக் காட்டையோ, அறிவையோ கொண்டிருக்கவில்லை; இயற்கை 'நோக்கம்' இல்லாமல் உற்பத்தி செய்கிறது; 'குறிக்கோள்' இல்லாமல் நிலைநிறுத்துகிறது; 'எண்ணம்' இல்லாமல் அழிக்கிறது! மனிதன் சிறிதளவு அறிவைப் பெற்றிருக்கிறான்; அதனை அவன் பயன்படுத்த வேண்டும். மனித சமுதாயத்தை நெம்பிவிடுவதற்கான தூண்டுகோல், அறிவுடைமையேயாகும்!
நம் முன் நிற்கும் முக்கிய கேள்வி, அறியாமையும், வறுமையும், தீமையும், தங்கள் குழந்தை குட்டிகளோடு உலகை நிரப்பிக் கொண்டிருப்பதை, நம்மால் தடுத்து நிறுத்த முடியுமா? என்பதுதான்.
அறியாமையும் தீமையும் என்ற மிஸௌரி ஆறு, நாகரிகம் என்ற மிஸிஸிபி ஆற்றில் விழாதவாறு தடுத்து நிறுத்த நம்மால் ஆகுமா?
இந்த உலகம், எப்பொழுதும், அறியாமை உணர்ச்சிக்கு இரையாகிக்கொண்டு தானிருக்க வேண்டாமா? நிகழ்ச்சிகளுக்கான காரணங்கள், எல்லா மக்களாலும் கண்டறிந்து கொள்ளும்படியான அளவுக்கு, இந்த உலகம் நாகரிகப்படுமா?
குழந்தைகளைப்பற்றிக் கவலைப்படாத-குழந்தைகளைப் பெருஞ் சுமைகளாகவும், 'சாபக்கேடு'களாவும் கருதுகின் ஆடவரும் பெண்டிரும் ஏன் குழந்தைகளைக் கொண்டிருக்க வேண்டும்? ஏன் கொண்டிருக்கவேண்டும்? ஏனென்றால் அவர்கள், அறிவைவிட மிக்க உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார்கள்; மனச்சான்றைவிட மிக்க உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள் ; பகுத்தறிவைவிட மிக்க உணர்ச்சி பெற்றிருக்கிறார்கள்!
எழுத்தின் மூலமாகவோ, பேச்சின் வாயிலாகவோ, நீங்கள், அவர்களைச் சீர்திருத்த முடியாது! போதனை புரிவதன் மூலமோ கொள்கையைச் சொல்லுவதன் வாயிலாகவோ நீங்கள். அவர்களைச் சீர்திருத்த முடியாது! உணர்ச்சி, இப்பொழுதும் சரி, எப்பொழுதும் சரி செவிடாகவே இருந்து வந்திருக்கிறது. சீர்திருத்தத்திற்காகக் கொள்ளப்பட்ட இந்தக் கருவிகளெல்லாம். எவ்வகையிலும் பயன்படாமல் போய்விட்டன. குற்றவாளிகள், நாடோடிகள், பிச்சைக்காரர்கள். தோல்வியுறுவோர் ஆகியோர் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகின்றனர். சிறைக் கூடங்கள், காவற்கூடங்கள், ஏழை விடுதிகள், பைத்தியக்கார விடுதிகள் ஆகியவை எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டே போகின்றன. மதம் ஏதும் செய்ய முடியாமல் தவிக்கிறது! சட்டம் மக்களைத் தண்டிக்கும்: ஆனால், அது குற்றவாளிகளைச் சீர்திருத்தவும் செய்யாது. குற்றத்தைத் தடுக்கவும் செய்யாது. தீமையின் அலைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. தீமை ஆற்றல்களை எதிர்த்துத் தொடுத்திருக்கும் போர், இரவின் இருளை எதிர்த்துப் போரிடும் மின்மினிப் பூச்சிகளின் சண்டையைப்போல, பயனற்றதாகவே இருந்து வருகிறது.
ஆனால், ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் இருந்துவருகிறது!
அறியாமை, வறுமை, தீமை, ஆகியவைகள் பெருக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். ஒழுக்கப் போதனையின் மூலம் இதனைச் செய்துவிடமுடியாது. பேச்சின் மூலமோ எடுத்துக் காட்டின் வாயிலாகவோ இதனைச் செய்துவிட முடியாது. மதத்தினாலோ அல்லது சட்டத்தினாலோ, போதனை புரியவனாலோ அல்லது தூக்கு போடுபவனாலோ இதனைச் செய்துவிட முடியாது. உடலை வற்புறுத்துவதனாலோ அல்லது உள்ளத்தை வற்புறுத்துவதனாலோ இதனைச் செய்துவிட முடியாது. இதனைச் செய்யவேண்டுமானால், ஒரே ஒரு வழிதானிருக்கிறது!
அறிவியல், பெண்மகளை, அவளுக்கு அவளே சொந்தக்காரி என்றும், அதிகாரி என்றும் சொல்லும் வகையில், அவளை ஆக்கவேண்டும். மனித சமுதாயத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரே பாதுகாப்பாளனான அறிவியல், ஒரு பெண். தான் ஒரு குழந்தைக்குத் தாயாக ஆக வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்துகொள்ளும் ஆற்றலை, அவள் கையில் கொடுக்க உதவி புரியவேண்டும்.
முழுக்கேள்விக்கு இதுதான் சிறந்த விடையாகிறது. இது பெண்களை விடுவிக்கிறது. இதனால் குழந்தைகள், வரவேற்கப்படும் குழந்தைகளாகவே பெற்றெடுக்கப்படுவார்கள். அக்குழந்தைகள் அன்போடு வாரி அணைக்கப்படுவர்; பரிவோடு பால் குடிக்க விடப்படுவர்; இல்லங்கள் தோறும் அவர்கள் ஒளியும் மகிழ்ச்சியும் ஊட்டுவார்கள்; இல்லங்கள் பொலிவோடும் பூரிப்போடும் காணப்படும்.
மக்களுக்கு விடுதலை வழங்குவதைவிட, அவர்களை அடிமை வாழ்வில் வைத்திருப்பதே உண்மையும் தூய்மையும் ஆகும் என்றும், அறிவு பெறுவதைவிட, அச்சங் கொண்டிருப்பதே பாதுகாப்புக்கான வழி என்றும், மற்றவர்களின் கட்டளைகளுக்கு யார் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களே உண்மையில் நல்லவர்கள் என்றும், அறியாமை என்னும் நிலத்தில்தான் நன்மை என்னும் நறுமலர் வளரும் என்றும் நம்பிக்கொண்டிருக்கும் ஆட வரும் பெண்டிரும், அறிவியலின் இந்த ஆற்றல் கண்டு திகைப்படைந்த முகங்களைத், தங்களின் முன்னேற்றத்' தடுப்புக் கைகளால், வெட்கப்பட்டு மூடிக்கொள்வார்கள் என்பது உறுதி!
ஒளி தீமையின் பகை என்றும், இருளில்தான் தூய்கை நிலவுகிறது என்றும் மக்கள் தங்களைப்பற்றி அறிந்து கொள்வது மிக அபாயகரமானது என்றும், தங்களுடைய நலனுக்குப் பாதகமாக இருக்கின்ற இயற்கையின் உண்மைகளை ஆராய்வது மிகக் கேடு பயக்கும் என்றும் நினைக்கும் ஆடவர்-பெண்டிர், அறிவு உணர்ச்சியை அடக்கியாளும்படி செய்யப்படவேண்டும் என்ற எண்ணத்தைக் கண்டு, உறுதியாக அச்சப்பட்டுப் போவார்கள்!
ஆனால், என்று ஆடவரும் = பெண்டிரும். சுற்றுச் சூழ்நிலைகளுக்கான காரணங்களைத் தங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்தும், தங்கள் ஒழுக்க அறிவினைக் கொண்டு ஆராய்ந்தும் பார்க்கிறார்களோ அந்த நாளையே நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். என்று, அவ்வறிவுகளைத் துணைக்கொண்டு, நோயும் துயரும் நீடித்து நிலைத்திருப்பதை மறுத்தொதுக்க முன்வருவார்களோ, தோல்விகள் நிரம்பியிருப்பதை மறுத்தொதுக்க முன்வருவார்களோ, அந்த நாளைத்தான் நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
ஒரு அந்தக்காலம் வரும்பொழுது, சிறை கூடத்தின் சுவர்கள் கீழே விழும்; இருட்டறைகள் ஒளியால் விளங்கும். உலகை வெறுத்து வரும் தூக்குமரத்தின் நிழல் மறையும்! அந்தக்காலம் வரும்பொழுது, வறுமையும் குற்றமும் குழந்தையற்றவைகளாகும்! அந்தக்காலம் வரும்பொழுது தேவைக்காகத் துடித்திடும் கைகால், 'நைவேத்தியம்' வாங்கக் கைகளை நீட்டா; அவைகள் புழுதியாகக் கருதப்படும்! அந்தக்காலம் வரும்போது. உலகம் முழுவதும் அறிவின் மயமாகும்; நன்மையின் மயமாகும்; விடுதலை மயமாகும்!
மதம் ஒருபொழுதும் மனித சமுதாயத்தைச் சீர்திருத்தாது; ஏனெனில், மதம் அடிமைத்தனம் கொண்டிருப்பது ஆகும் !
மதத் தொடர்பற்ற விடுதலை வாழ்வு வாழ்வதும், அச்சத்தின் கட்டுக்களையும் கோட்டைகளையும் விட்டு விலகுவதும். நேராக நிமிர்ந்து நின்று எதிர்காலத்தைப் புன்னகையோடு வரவேற்பதும் எவ்வளவோ மேன்மையானவையாகும்!
சில வேளைகளில் உல்லாச வாழ்வுக்கு உங்களை ஓப்படைப்பதும், கடலலையிலே மூழ்கி எழுவதும், உலகின் கண்மூடித்தனமான ஆற்றலில் நீங்கள் திளைத்திருப்பதும், சிந்திப்பதும், கனவு காணுவதும் வாழ்க்கையின் தொடர்ச்சியையும் அதிலுள்ள கட்டு திட்டங்களையும் மறப்பதும், கவலை தரும் நோக்கத்தையும் குறிக்கோளையும் மறப்பதும், மூளையின் கற்பனை ஓவியங்களிலே திளைத்து நிற்பதும், இறந்தகால அணைப்புகளையும், முத்தங்களையும் மீண்டும் ஓருமுறை நினைப்பதும், வாழ்க்கையின் ஆரம்ப நிலையை மீண்டும் கொண்டுவருவதும். இறந்து போனவர்களுடைய உருவங்களையும். முகங்களையும் மீண்டும் ஒருமுறை பார்ப்பதும், வருங்காலத்திற்காகும்படியான ஓவியப் படங்களை வரைவதும், எல்லாக் கடவுள்களையும் மறப்பதும் அவர்களுடைய உறுதிமொழிகளையும் அச்சுறுத்தல்களையும் மறப்பதும் வாழ்க்கையின் மகிழ்ச்சிக் கட்டங்களை நீங்களே உள்ளுக்குள் நினைந்து மகிழ்வதும், போர்ப்படையின் இசை முழக்கத்தைக் கேட்பதும் அச்சமற்ற உங்களுடைய இதயத் துடிப்புகளை நீங்கள் கேட்பதும் எவ்வளவோ மேன்மை யானவைகளாகும்!
மேலும், நல்ல பயனுள்ள செயல்களை நீங்கள் செய்யவும், உங்களுடைய மூளையிலுள்ள கொள்கைக்கு ஏற்ப எண்ணத்தையும் செயலையும் நீங்கள் அடையவும், பொது பொருள்கள் என்னும் பூக்களில், கலைத் தேனைப் பருக, தேனீயைப்போல் பறந்து செல்லவும், உண்மைகளைப், பயிற்சி பெற்ற - நிலையான கண்களால் பார்த்தறியவும், வெகு தொலைவில் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாதவைகளை இப்பொழுதுள்ளவைகளோடு, முடிபோடும், மெல்லிய நைந்துபோன கயிறுகளைக் கண்டறியவும், அறிவினைப் பெருக்கிக் கொள்ளவும், வலிவற்றவர்களின் தாங்கமுடியாத சுமைகளை அகற்றவும், மூளையை வளப்படுத்தவும், நேர்மைக்குப் பரிந்து பேசவும், உயிருணர்ச்சிக்கு ஒரு அரண்மனை அமைக்கவும், நீங்கள் வீறிட்டு எழுவது, எவ்வளவோ மேன்மை பயப்பதாகும்!
இதுதான் உண்மையான 'மதம்'; இதுதான் உண்மையான 'வழிபாடு' !