உள்ளடக்கத்துக்குச் செல்

மதமும் மூடநம்பிக்கையும்/நன்மை செய்யும் ஆற்றல் எது

விக்கிமூலம் இலிருந்து
மதம் 2

நன்மை செய்யும் ஆற்றல் எது ?

இயற்கையை மீறிய பேராற்றல் ஒன்றின்மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர். அவர்கள், ஒரு கடவுளை விட்டால், மற்றொரு கடவுளை உடனே கற்பனை செய்துகொள்ளுகிறார்கள். ஜெஹோவா என்ற கடவுளைக் கைவிட்ட பிறகு, மக்களின் நன்மைக்காகப் பாடுபட்டுவரும் பேராற்றல் ஒன்றினைப்பற்றிப் பேசுகிறார்கள்.

இந்தப் பேராற்றல் என்பதுதான் என்ன ?

மனிதன் முன்னேறுகிறான்; அவன், அனுபவத்தின் வாயிலாக உள்ளபடியே முன்னேற வேண்டியவனாக இருக்கிறான். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல விரும்பும் மனிதன் ஒருவன், இரண்டு சாலைகள் பிரியும் ஒரு இடத்திற்கு வந்து சேருகிறான். எந்த வழியாகப் போகலாம் என்று சிந்திக்கிறான். இடதுகைப் பக்கமாகச் செல்லும் சாலையே சரியானதாகும் என்று நம்பிக்கொண்டு, அவ்வழியே நெடுந்தொலைவு செல்லுகிறான். இறுதியில் அந்த வழி சரியானது அல்ல என்று கண்டுகொள்ளுகிறான். அவன் மீண்டும் திரும்பிவந்து, வலது கைப்பக்கமாகச் செல்லும் சாலைவழியே செல்லுகிறான். அவன் விரும்பிய இடத்தைச் சென்றடைகிறான். மறுபடியும் ஒருமுறை அவன் அந்த இடத்துக்குப் போகிறான். இம்முறை அவன் இடதுகைப்பக்கச் சாலைவழியே செல்ல முயலுவதில்லை. னெனில் அவன் ஏற்கெனவே அவ்வழியே சென்று பார்த்திருக்கிறான்; அது தவறான வழி என்பதையும் அறிந்திருக்கிறான். அவன் இம்முறை சரியான வழியை எளிதில் பின் பற்றிச் செல்லுகிறான். இப்படி நடைமுறை நடவடிக்கை யிருந்தும், மதவாதிகள் கூறுகிறார்கள், "மக்களின் நன்மைக்காகப் பேராற்றல் ஒன்று இருந்துகொண்டு வேலை செய்து வருகிறது" என்று!

குழந்தையொன்று சுடர்விட்டு எரியும் நெருப்பைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறது; உடனே தன் இளந்தளிர்க் கையால் அதனைப் பிடிக்கிறது. கை நெருப்பில் பட்டவுடன் பொசுங்கிவிடுகிறது; அதற்குப் பிறகு, அந்தக் குழந்தை தன் கையை நெருப்பிற்குத் தொலைவாகவே வைத்துக்கொள்கிறது. நன்மை பெறுவதற்கான வழியில் உள்ளுக்குள் வேலை செய்யும் உணர்வாற்றல், அந்தக் குழந்தைக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது.

உலகில், பட்டுப்பட்டு ஒருசேரக் குவிந்த அனுபவம், ஒரு ஆற்றலாகவும் முயற்சியாகவும் இருந்து, நன்மையை உண்டாக்குவதற்கான முறையில் வேலை செய்துவருகிறது. இந்த ஆற்றல் மனச்சான்று அல்ல; அறிவுடைமையும் ஆகாது. அதற்கு ஒரு விருப்பங் கிடையாது; அதற்கு ஒரு தேவையும் கிடையாது. அது ஒரு முடிவு ஆகும்.

நாம் கொண்டிருக்கும் ஒழுக்க உணர்வை, அதாவது மனச்சான்றை, வைத்துக்கொண்டு, கடவுள் இருக்கும் தன்மையை நிலைநாட்ட, ஆயிரக்கணக்கானவர்கள் முயன்று பார்க்கிறார்கள்.

ஒழுக்க உணர்வு, கடமையுணர்வு. பரிவு முதலியவைகள் இறக்குமதி செய்யப்படும் பண்புகள் என்றும், மனச் சான்று என்பது வெளியிலிருந்து ஆண்டவனால் கொடுக்கப் படுவது என்றும் இந்த மதவாதிகளும், தத்துவாசிரியர்கள் என்று சொல்லப்படுபவர்களும் கூறிவருகிறார்கள். இந்தப் பண்புகளுக்கான அடிப்படை இங்கே உண்டாக்கப்படுவதில்லை என்றும், அது மனிதனாலேயேகூட உண்டாக்கப் படுவதில்லை என்றும், கூறி, கடவுள் ஒருவரைக் கற்பனை செய்துகொண்டு, அவரிடமிருந்தே அது வந்தது என்றும் சொல்லி வருகிறார்கள்.

மனிதன், சமுதாயமாக வாழும் உயிரினத்தைச் சேர்ந்த நாம் குடும்பங்களாக, இனங்களாக, நாடுகளாக கூடிக்கூடி வாழ்கிறோம்.

குடும்பம், இனம், நாடு ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களில், யார்யார், முறையே குடும்பம் — இனம் நாடு ஆகியவற்றின் மகிழ்ச்சியைப் பெருக்கக் காரணமாக இருக்கிறார்களோ. அவர்கள் பொதுவாக நல்லவர்கள் என்று கருதப்படுகிறார்கள்; அவர்கள் புகழப்படுகிறார்கள்: போற்றப்படுகிறார்கள்; மரியாதை செலுத்தப்படுகிறார்கள். அவர்கள் நல்லவர்கள் என்று மதிக்கப்படுவதோடு, ஒழுக்கத்திற் சிறந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

குடும்பம், இனம், நாடு ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களில், யார் யார், அவற்றிற்குத் துன்பத்தை இழைக் கிறார்களோ, அவர்கள், தீயராகக் கருதப்படுகின்றனர்; அவர்கள் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள்; ஒதுக்கப்படுகிறார்கள்; தண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாகப் பொதுவாக மதிக்கப்படுகிறார்கள்.

குடும்பமும்,இனமும், நாடும் ஒரு அளவான நடவடிக்கையையும் — ஒழுக்கத்தையும், உண்டாக்கிக் கொள்கின்றன. இதில் இயற்கைக்கு மீறிய 'பேராற்றல்' எதுவும் இல்லை!

மனித சமுதாயத்தில் மிகச் சிறத்தவர் கூறுகிறார், "மனச்சான்று அன்பிலிருந்து பிறக்கிறது" என்று.

நல்லது செய்யவேண்டும் என்ற பரிவுணர்ச்சி- கடமையுணர்ச்சி, ஆகியவை, இயல்பாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.

காட்டுமிராண்டி மக்களிடையில், செயல்களின் உடனடியான விளைவுகளே, ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும். மக்கள் முன்னேற முன்னேற, காலத்தால்- இடத்தால் மிகத் தொலைவிலுள்ள விளைவுகளும் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. நடவடிக்கையின் தரம் உயர்வடைகிறது. சிந்தித்துப் பார்க்கும் தன்மை வளர்க்கப்படுகிறது. மனிதன், மற்றொருவர் நிலையில் நின்று சிந்தித்துப் பார்க்கத் தெரிந்துகொள்கிறான். கடமையுணர்ச்சி நாளுக்குநாள் வலிவடைகிறது; உறுதியும் பெறுகிறது. மனிதன் தன்னைத் தானே விசாரித்தறிகிறான்.

அவன் அன்பு காட்டுகிறான்; அந்த அன்பு உயர்ந்த நற்பண்புகளுக்கு ஆரம்பமாகவும், அடிப்படையாகவும் அமைகிறது. அவன், அன்பு செலுத்துகின்ற ஒன்றுக்குத் தீங்கிழைக்கின்றான்; அது குறித்துப் பிறகு அவனுக்குத் துயர், மனத்தொல்லை, வருத்தம், மனச்சான்று எல்லாம் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாவற்றி லும் இயற்கைக்கு மீறிய 'பேராற்றல்' எதுவும் இல்லை! மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான்.

இயற்கையே ஒரு கண்ணாடிபோல் விளங்குகிறது. மனிதன், அதில், தன்னுடைய உருவத்தைக் கண்டுகொள்கிறான். இயற்கைக்கு மீறிய தன்மையை யுடையதாகக் கருதப்படும் மதங்களெல்லாம், கண்ணாடிக்குப் பின்புறம் உள்ள உருவத்தையும் கண்டுகொள்வதாகப் பாசாங்கு செய்கின்றன !

ஆத்மீக நெறியில் நின்று. தத்துவக் கருத்துக்களைக் கூறும் தத்துவ ஆசிரியர்களெல்லாம், பிளாட்டோவிலிருந்து ஸ்வீடன் போர்க் வரையில். எல்லோரும் உண்மைகளை உற்பத்தி செய்தே கொடுக்கின்றனர்; மதங்களைக் கண்டுபிடித்தவர்களும் அதே செயலைத்தான் செய்திருக்கிறார்கள்!

எல்லையற்ற கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்; அவருக்காக நாம் என்ன செய்யவேண்டும்? அவர் எல்லையற்ற தன்மை கொண்டவராதலால், அவர் கட்டுப்பாடற்றவராகிறார்; அவர் கட்டுப்பாடற்றவராகிறபடியினால், அவர் நன்மைபெறச் செய்யவோ, தீமை பெறச் செய்யவோ முடியாது. அவருக்குத் தேவை எதுவும் இல்லை. அவர் எல்லாவற்றையும் கொண்டிருக்கிறார்!

எல்லையற்ற பரம்பொருள், தன்னுடைய புகழ்ச்சியை விரும்புகிறது என்று ஒரு மனிதன் நம்பியிருப்பது, எவ்வளவு தற்பெருமைத்தனமாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் !

நம்முடைய மதம் சாதித்தது என்ன? மற்றைய மதங்கள் எல்லாம் தவறுடையன, நாம் நம்முடைய மதத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டால் போதும் என்று கிருத்தவர்கள் கூறுகிறார்கள்: கிருத்தவ மதத்தைப்பற்றி மட்டுமே ஆராய்வதை ஒப்புக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கே நாமும் ஆராய்ந்து பார்ப்போம் !

கிருத்தவ மதம் ஏதாவது நன்மை புரிந்ததா? மனிதர்களைப் பெருந்தகையாளராகவும், அருள் நெஞ்சுடையவர்களாகவும் அது ஆக்கிற்றா ? மாதா கோயில்கள் ஆதிக்கம் பெற்றிருந்தபோது, மக்கள் மிக்க ஏற்றம் பெற்றவர்களாகவும், மிக்க மகிழ்ச்சி கொண்டவர்களாகவும் ஆக்கப் பட்டார்களா?

கிருத்தவ மதம் இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், அயர்லாந்து ஆகியவிடங்களில் என்னென்ன நன்மைகளைப் புரிந்தது?

ஹங்கேரிக்கோ, ஆஸ்டிரியாவுக்கோ மதம் சாதித்த நன்மை என்ன? சுவிட்ஜர்லாந்து, ஹாலந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா ஆகிய இடங்களில் கிருத்தவம் என்ன முன்னேற்ற நிலைமையை உண்டாக்கிற்று? நாம் நாணயமான முறையில் சிந்தித்துப் பார்ப்போம். மதம் இல்லாமல் இருந்தால் இந்த நாடுகளெல்லாம் வீணாகிப் போயிருந்திருக்குமா? கிருத்துவத்தைத் தவிர, வேறு மதத்தை, இந்த நாடுகளெல்லாம் கொண்டிருந்தால், இவை பாழடைந்து போயிருந்திருக்குமா?

ஜோராஸ்டரைப் பின்பற்றுபவராக மாறி யிருந்தால், டார்க்குவேமாடா கெட்டுப்போயிருந்திருப்பாரா? தென் கடல் தீவுகளில் வழங்கும் மதத்தைப் பின்பற்றியிருந்தால் கால்வின் இன்னமும் மிகவாகக் குருதிவேட்கை கொண்டவராக மாறியிருந்திருப்பாரா? தந்தை, தனயன், புனித தேவதை ஆகியோரை மறுத்திருந்தால், டச்சு நாட்டு மக்கள் இன்னமும் மிகவாக முட்டாள்களாக மாறியிருந்திருப்பார்களா? கிருத்துவைப் பின்பற்ற மறுத்துக் கன்பூஷியஸ் கொள்கையை ஏற்றுக்கொண்டிருந்தால், ஜான் நாக்ஸ் மிகக் கேடானவராக மாறியிருந்திருப்பாரா?

அருள் உள்ளங்கொண்ட பரிசுத்த மதப் பாதிரிமார்களை எடுத்துக்கொள்ளுங்கள் ! அவர்களுக்குக் கிருத்தவ மதம் எதைக் கற்றுக் கொடுத்தது? அவர்கள் மகிழ்ச்சியை வெறுத்தார்கள்! அவர்கள் வாழ்க்கை வாயிலிலேயே சாவுத் துணியைக் கட்டித் தொங்கவிட்டார்கள்! அவர்கள் தொட்டிலையே பிணப் பெட்டியாக மாற்றினார்கள்! அவர்கள் பன்னிரண்டு மாதங்களையும் 'டிசம்பர்' மாதங்களாகவே கொண்டார்கள் ! அவர்கள் குழந்தைப் பருவத்தை வெறுத்தார்கள்; இளமையை வெறுத்தார்கள்; குழந்தைகளின் மழலை மொழிகளை வெறுத்தார்கள்; காலை மகிழ்ச்சிப் பாடலை வெறுத்தார்கள்!

பரிசுத்த மதம் முழுக்க முழுக்க 'சாபக்கேடாக' விளங்கிற்று ! பரிசுத்த மதத்தைச் சார்ந்தவன், பைபிளை ஆண்டவன் வாக்கு என்றே நம்பினான்; இந்த நம்பிக்கை கொண்டவர்கள்தான கொடுமையாளராகவும், கீழ்மையாளராகவும் காணப்பட்டார்கள் ! இப்படிப்பட்ட புனித மதத்தைச் சார்ந்தோர், வட அமெரிக்க இந்தியர்களின் மதத்தைப் பின்பற்றியிருந்தால், மிகக் கேடுகெட்டவர்களாகவா போயிருந்திருப்பார்கள் ?

பைபிளில் கொண்டிருந்த நம்பிக்கை, மனித சமுதாயத்தின் மீது எப்படிப்பட்ட ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது என்பதற்கு ஓரு உண்மையை உங்கள் நினைவிற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

அரசி எலிஸபெத்தின் முடிசூட்டு விழாவின்போது, ஒரு தொண்டு கிழவர், ஒரு ஜெனிவா பைபிளை, அரசியினிடத்தில் பரிசாக நல்கினாராம். கிழவர். காலத்தின் பழமைபோல் நின்றாராம்; அரசி, உண்மையின் தோற்றம் போல் குழந்தை வடிவில் நின்றாளாம்; அரசி அந்தப் பைபிளைப் பணிவன்போடு வாங்கிப், பக்தியுடன் முத்தமிட்டு, அதில் கூறப்பட்டிருப்பவைகளை அப்படியே கடைப்பிடிப்பதாக உறுதிமொழி கூறினாளாம். அந்தப் பைபிளைப் பெற்றதன் அறிகுறியாகத்தான், அரசி பயபக்தியோடு கத்தோலிக்க மதக் குருமார்களை வாளுக்கிரை யாக்கினாள் போலும்.

பைபிளை நம்பிய பிராட்டெஸ்டண்டுகளின் உணர்ச்சி எப்படிப்பட்டது என்பதை, இந்த நிகழ்ச்சியி லிருந்து நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். வேறு சொற்களால் கூறவேண்டுமானால். கத்தோலிக்க உணர்ச்சி எவ்வளவு கொடுமையான தாகவும், கொடூரமான தாகவும் காணப்பட்டதோ அதே அளவு இதுவும் காணப்பட்டது என்னலாம்.

பைபிள், ஜியார்ஜியாவிலுள்ள மக்களை அன்புடையவர்களாகவும், அருளுடையவர்களாகவும் செய்திருக்கிறதா? கிருத்தவ மதக் கொலைகாரர்கள், மரக்கடவுள்களையும், கற்கடவுள்களையும் வணங்கியிருந்தால், இன்னமும் மிகவாகவா மூர்க்கத்தனமாய் இருந்திருப்பார்கள் ?