மத்தேயு நற்செய்தி - அதிகாரங்கள் 8 முதல் 10 வரை
மத்தேயு நற்செய்தி
[தொகு]முதன்மைக் கட்டுரை:மத்தேயு நற்செய்தி
முற்பகுதி:மத்தேயு நற்செய்தி - அதிகாரங்கள் 1 முதல் 7 வரை
அதிகாரம் 8
[தொகு]2. விண்ணரசுப் பணி
[தொகு]தொழுநோய் நீங்குதல்
[தொகு](மாற் 1:40-45; லூக் 5:12-16)
1 இயேசு மலையிலிருந்து இறங்கிய பின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
2 அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து," ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார்.
3 இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.
4 இயேசு அவரிடம், "இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்றார். [1]
நூற்றுவர் தலைவரின் பையன் குணமடைதல்
[தொகு](லூக் 7:1-10; யோவா 4:43-54)
5 இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.
6 "ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" என்றார்.
7 இயேசு அவரிடம், "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.
8 நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.
9 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் "செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம்" வருக" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து" இதைச் செய்க" என்றால் அவர் செய்கிறார்" என்றார்.
10 இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.
11 கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்பு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். [2]
12 அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்றார்.
13 பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, "நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்" என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான். [3]
பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்
[தொகு](மாற் 1:29_34; லூக் 4:38_41)
14 இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார்.
15 இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.
16 பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினர்.
17 இவ்வாறு," அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்" என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது. [4]
இயேசுவைப் பின்தொடர விரும்பியவர்கள்
[தொகு](லூக் 9:57-62)
18 இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, "போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார்.
20 இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.
21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, "ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும்" என்றார்.
22 இயேசு அவரைப் பார்த்து, "நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்றார்.
காற்றையும் கடலையும் அடக்குதல்
[தொகு](மாற் 4:35-41; லூக் 8:22-23)
23 பின்பு இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள்.
24 திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.
25 சீடர்கள் அவரிடம் வந்து, "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
26 இயேசு அவர்களை நோக்கி," நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. [5]
27 மக்களெல்லாரும்," காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ?" என்று வியந்தனர்.
கதரேனர் பகுதியில் பேய்பிடித்த இருவரை நலமாக்குதல்
[தொகு](மாற் 5:2-20; லூக் 8:26-39)
28 இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள்.
29 அவர்கள்," இறை மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?" என்று கத்தினார்கள்.
30 அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.
31 பேய்கள் அவரிடம் , "நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்" என்று வேண்டின.
32 அவர் அவற்றிடம், "போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.
33 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள்.
34 உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.
குறிப்புகள்:
[தொகு]
[1] 8:4 = லேவி 14:1_32.
[2] 8:11 = லூக் 13:29.
[3] 8:12 = மத் 22:13; 25:30; லூக் 13:28.
[4] 8:17 = எசா 53:4; யோவா 1:29.
[5] 8:26 = திபா 107:29.
அதிகாரம் 9
[தொகு]முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல்
[தொகு](மாற் 2:1-12; லூக் 5:17-26)
1 இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார்.
2 அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம்," மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
3 அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர்," இவன் கடவுளைப் பழிக்கிறான்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர்.
4 அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி," உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்?
5 "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்பதா, "எழுந்து நட" என்பதா, எது எளிது?
6 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்.
7 அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.
8 இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
மத்தேயுவை அழைத்தல்
[தொகு](மாற் 2:13-17; லூக் 5:27-32)
9 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம்," என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
10 பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
11 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம்," உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" என்று கேட்டனர். [1]
12 இயேசு இதைக் கேட்டவுடன்," நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.
13 "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். [2]
நோன்பு பற்றிய கேள்வி
[தொகு](மாற் 2:18-22; லூக் 5:33-39)
14 பின்பு யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து," நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றனர்.
15 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
16 மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும்.
17 அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா" என்றார்.
இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும் சிறுமி உயிர்த்தெழுதலும்
[தொகு](மாற் 5:21-43; லூக் 8:40-56)
18 அவர்களுடன் இவ்வாறு இயேசு பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து," என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்" என்றார்.
19 இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
20 அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.
21 ஏனெனில் அப்பெண், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்" எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார்.
22 இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து,"மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.
23 இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார்.
24 அவர்," விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். [3]
25 அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார் அவளும் உயிர்பெற்று எழுந்தாள்.
26 இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.
பார்வையற்றோர் இருவர் பார்வை பெறுதல்
[தொகு]
27 இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர்," தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர்.
28 அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து," நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம், ஐயா" என்றார்கள்.
29 பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்" என்றார்.
30 உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி. "யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார்.
31 ஆனால் அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.
பேச்சிழந்தவர் பேசுதல்
[தொகு]
32 அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.
33 பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, "இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை" என்றனர்.
34 ஆனால் பரிசேயர், "இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்" என்றனர். [4]
இயேசுவின் பரிவுள்ளம்
[தொகு]
35 இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். [5]
36 திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.
37 அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.
38 ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" என்றார்.
குறிப்புகள்:
[தொகு][1] 9:10,11 = லூக் 15:1,2. [2] 9:13 = மத் 12:7; ஓசே 6:6. [3] 9:24 = யோவா 11:11. [4] 9:34 = மத் 10:25; மாற் 3:22; லூக் 11:15. [5] 9:35 = மத் 4:23; மாற் 1:39; லூக் 4:44.
அதிகாரம் 10
[தொகு]திருத்தூதுப் பொழிவு
[தொகு]பன்னிரு திருத்தூதர்
[தொகு](மாற் 3:13-19; லூக் 6:12-16)
1 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
2 அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான்,
3 பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரி தண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,
4 தீவிரவாதியாய் இருந்த சீமோன், [1] இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.
திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்
[தொகு](மாற் 6:7-13; லூக் 9:1-6)
5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: "பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.
6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.
7 அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்.
8 நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.
9 பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
10 பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. [2]
11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.
12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.
13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.
14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். [3]
15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். [4]
அனுப்பப்பட்டவர் அடையும் துன்பங்கள்
[தொகு](மாற் 13:9-13; லூக் 21:12-19)
16 "இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். [5]
17 எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.
18 என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.
19 இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, 'என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
20 ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.
21 சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். [6]
22 என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். [7]
23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
24 சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல. [8]
25 சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா? [9]
அஞ்சாதீர்கள்
[தொகு](லூக் 12: 2-7)
26 "எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. [10]
27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.
28 ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.
29 காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.
30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.
31 சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள். [11]
மக்கள் முன்னிலையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்தல்
[தொகு](லூக் 12: 8-9)
32 "மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்.
33 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன். [12]
பிளவு ஏற்படுதல்
[தொகு](லூக் 12:51-53; மாற் 14:26-27)
34 "நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.
35 தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.
36 ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். [13]
37 என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
38 தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். [14]
39 தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர். [15]
கைம்மாறு பெறுதல்
[தொகு](மாற் 9:41)
40 "உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். [16]
41 இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.
42 இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
குறிப்புகள்:
[தொகு]
[1] 10:4 மூல பாடத்தில் 'கனனேயனான சீமோன்' என்றுள்ளது. 'கனனேயன்' என்றால் அரமேயத்தில் 'தீவிரவாதி' எனப் பொருள்படும்.
[2] 10:10 = 1 கொரி 9:14; 1 திமொ 5:18; 3 யோவா 8.
[3] 10:14 = திப 13:51.
[4] 10:15 = மத் 11:24.
[5] 10:16 = லூக் 10:3.
[6] 10:21 = மாற் 13:12; லூக் 21:16.
[7] 10:22 = மத் 24:9; மாற் 13:13; லூக் 21:17.
[8] 10:24 = லூக் 6:40; யோவா 13:16; 15:20.
[9] 10:25 = மத் 9:34; 12:24.
[10] 10:26 = மாற் 4:22; லூக் 8:17.
[11] 10:31 = 1 பேது 3:14.
[12] 10:32 = 2 திமொ 2:12; திவெ 3:5.
[13] 10:35,36 = மீக் 7:6.
[14] 10:38 = மத் 16:24; மாற் 8:34; லூக் 9:23.
[15] 10:39 = மத் 16:25; மாற் 8:35; லூக் 9:24; 17:33; யோவா 12:25.
[16] 10:40 = மாற் 9:37; லூக் 9:48; 10:16; யோவா 13:20.
மத்தேயு நற்செய்தி கீழ்வரும் இணைப்புகளாகத் தொடர்கிறது:
மத்தேயு நற்செய்தி - அதிகாரங்கள் 1 முதல் 7 வரை
மத்தேயு நற்செய்தி - அதிகாரங்கள் 8 முதல் 10 வரை
மத்தேயு நற்செய்தி - அதிகாரங்கள் 11 முதல் 18 வரை
மத்தேயு நற்செய்தி - அதிகாரங்கள் 19 முதல் 25 வரை
மத்தேயு நற்செய்தி - அதிகாரங்கள் 25 முதல் 28 வரை (நிறைவு)