உள்ளடக்கத்துக்குச் செல்

மனத்தின் தோற்றம்/உயிரினும் உயர்ந்தது

விக்கிமூலம் இலிருந்து


2. உயிரினும் உயர்ந்தது




ஒழுக்கமே மிகவும் உயர்வைத் தரவல்லது; ஆதலின் ஒழுக்கத்தை உயிரினும் சிறந்ததாக ஒம்பிக் காக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஈண்டு மற்றையவற்றினும் ஒம்ப வேண்டும் என்னாது, உயிரினும் ஒம்பவேண்டும் என்று உயிரைக் குறிப்பிட்டுள்ளதில் உள்ள நயத்தை ஊன்றி நோக்க வேண்டும். மக்கள் எல்லோருமே தத்தம் உடைமைகளைப் பாதுகாப்பதில் கண்ணுங்கருத்துமாய் இருப்பதைக் காண்கின்றோம். அவற்றுள்ளும், இழந்து விட்டாலும் மீண்டும் எளிதில் கிடைக்கக்கூடிய உடைமையைக் காப்பதற்குச் செலுத்தும் விழிப்பை (கவனத்தை) விட, இழந்தால் எளிதில் கிடைக்காமல் - அரிதிற் கிடைக்கக்கூடிய உடைமையைக் காப்பதற்குச் செலுத்தும் விழிப்பு மிகப் பெரிதாகும். தெளிவாகச் சொல்வோமானால், பொருளின் விலையும் அதைப் பெறும் முயற்சியும் குறையக் குறைய மக்களின் விழிப்பும் குறைந்துகொண்டே போகும்; விலையும் பெறும் முயற்சியும் பெருகப் பெருக மக்களின் விழிப்பும் பெருகிக்கொண்டே செல்லும். எடுத்துக்காட்டாக: மண்பாண்டம், பித்தளைப்பாண்டம், செப்புப்பாண்டம், வெள்ளிப்பாண்டம், பொன்பாண்டம், வைர அணிகள் - இவை முறையே ஒன்றிற்கொன்று பெருமதிப்புடையன வாதலின் இவற்றைப் போற்றிக் காப்பதில் விழிப்பும் பெருகிக் கொண்டே செல்கின்றதல்லவா? இது முதலாவது.

இரண்டாவதாக, நம் உடலைவிட்டுப் பிரிக்கக் கூடிய - மேற்கூறிய - இன்னும் ஏனைய உடைமைகளை விட, நம் உடலைவிட்டுப் பிரிக்கமுடியாத கை, கால், கண் முதலிய உறுப்புகளைக் காப்பதில், மேலும் மிகமிகப் பெரிய விழிப்பு செலுத்துகிறோம். (இவ்வுறுப்புகள் பிரிக்க முடியாதவை யென்றால் வெட்டியெடுக்க முடியாதவை என்பது பொருளன்று; ஆடையணிகலன்களைப் போல் உடம்போடு கூட்டவும், பின்பு பிரிக்கவும் - பின்பு கூட்டவும் முடியாதவை என்பதே பொருள்.) ஏனைய உடைமைகளை இழந்து விட்டால், அரிய விலை தந்து - அரும்பாடுபட்டாவது திரும்பப் பெற்றாலும் பெறலாம். ஆனால் உடலுறுப்புகளை யிழந்து அவற்றைத் திரும்பப் பெற முடியாதன்றோ? அதனாலேயே உறுப்புகளை ஏனைய உடைமைகளினும் மிகுதியாகப் போற்றுகிறோம்.

மூன்றாவதாக, - ஒர் ஊரில் எதிரி திடீரென்று படையெடுத்துப் போர்புரியும்போது, மறவர்கள் (வீரர்கள்) தவிர மற்றையோர் ஊரைவிட்டு ஒடுகின்றனர், ஒடும்போது தம் உடைமைகளையெல்லாம் அறவேவிட்டு ஒடுகின்றனர். ஒடும் வழியில் ஒரு படைபட்டுக் கை வெட்டுண்டு விழுந்தாலும் அதைப்போட்டு விட்டு ஒடுகின்றனர். கால் வெட்டுண்டாலும், முடிந்தவரை தரையில் ஊர்ந்து ஊர்ந்து நகர முயல்கின்றனர். இங்ஙனம் தம் உடைமைகள், உடலுறுப்புகள் இவற்றையெல்லாம் மனமார விட்டுவிட்டு வெளியில் ஒடுகின்றார்களே! - எதைக் காப்பதற்காக இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒடுகின்றார்கள்? தம் உயிரைக் காப்பதற்காக வன்றோ?

உடைமைகள் போனால் வேறு உடைமைகள் தேடிக் கொள்ளலாம். கை கால்கள் போனால் பொய்க் கை - பொய்க் கால் வைத்துக்கொண்டு வழக்கம்போல் எதையும் செய்யலாம். கண் போனாலும் வேறு கண் வைக்கப் பெற்றுத் திரும்பப் பார்வையைப் பெறலாம். இவற்றை யெல்லாம் இக்கால விஞ்ஞானிகள் செய்து முடிக்கின்றார்கள் அல்லவா? உயிர் போனால் திரும்பி வருமா? வேறொருவருடைய உயிரைத்தான் பொருத்த முடியுமா? அதனால் உடைமைகள் - உறுப்புகள் ஆகியவற்றினும் உயிர் சிறந்ததென்பது புலப்படு மன்றோ? மேலும் உடைமைகளே யில்லாத கோடிக்கணக்கான ஏழையெளியவர்கள் உலகில் வாழ்வதைக் காண்கின்றோமே? உடலுறுப்புகளை இயற்கையாகவோ - செயற்கையாகவோ இழந்துவிட்ட கூன், குருடர், நொண்டி, முடவர் எண்ணற்றவர்கள் உலகில் வாழக் காண்கின்றோமே! ஆனால் உயிர் போனபின் வாழ்ந்தவர்களை என்றேனும் எங்கேனும் யாரேனும் பார்த்ததுண்டா? உயிர் போனபின் பிணம் என்றல்லவோ பெயர்? அதன் நிலைதான் எல்லோர்க்கும் தெரியுமே! இத்தகைய காரணங்களினாலேயே, மற்றையவற்றைக் குறிப்பிடாமல், உயிரினும் ஒம்பப்படும் என்று உயிரையே குறித்தார் நம் வள்ளுவர்.

மற்றும், ஆசிரியர் உயிரைப்போல் ஒழுக்கம் ஒம்பப்படும் என்று கூறி உயிரும் ஒழுக்கமும் ஒரு நிலையுடையன என்று கூடக் கூறவில்லை; உயிரைக் காட்டிலும் ஒழுக்கம் ஒம்பப்படும் என்று கூறி உயிரினும் உயர்ந்த பொருளாக ஒழுக்கத்தைச் சிறப்பித்துள்ள மாட்சி மிகப் பாராட்டுதற் குரியதாகும். எனவே, உடைமைகளினும் சிறந்தன உடலுறுப்புகள், உடலுறுப்புகளினும் சிறந்தது உயிர், உயிரினும் சிறந்தது ஒழுக்கம் என்றாயிற்று. ஆகா! இதனினும் ஒழுக்கத்தின் உயர்வைச் சிறப்பித்தவர் எவர்? சிறப்பிக்கத்தான் முடியுமா?

நிற்க, ஒழுக்கம் உயிரினும் சிறந்தது என்பது எவ்வாறு பொருந்தும்? ஒழுக்கம் மட்டும் இருந்து உயிர் போய்விட்டால் மட்டும் உலகில் வாழ முடியுமா? என்பவற்றையும் ஆராய வேண்டும். ஏசுநாதர் போன்றோர் எதற்காக உயிரை விட்டனர்? உலகில் ஒழுங்கு முறையை (ஒழுக்கமுறையை) நிலை நாட்டவல்லவா? தாம் மேற்கொண்ட செயல்களால் தம் உயிருக்கு ஊறு நேரிடலாம் என்பதை அவர்கள் முன் கூட்டியே உணராதவர்களா? உணர்ந்து வைத்தும், உயிரினும் ஒழுக்கத்தைப் பெரிதாக மதித்தே - ஒழுங்கை நிலை நாட்டவே உயிரை விட்டார்கள் அன்றோ? கயவன் ஒருவனிடம் சிக்கிக் கொண்ட கற்புடைய மங்கை அக்கயவனால் தான் கற்பழிக்கப்படக்கூடிய நிலை நெருங்கியபோது தற்கொலை செய்து கொள்கின்றாளே! அது ஏன்? உயிரினும் ஒழுக்கத்தைப் பெரிதாக மதித்தமையினாலன்றோ?

இவர்களெல்லோரும் உயிரினும் ஒழுக்கத்தை மதித்து உயிர் விட்டதனால், புகழுடம்புடன், எல்லோராலும் பாராட்டப் பெற்று இன்றைக்கும் வாழ்கிறார்கள்-இனியும் என்றும் வாழ்வார்கள் அல்லவா? எனவே, ஒழுக்கமின்றி உயிர் வாழ்பவர்கள் பலராலும் தூற்றப்படுதலின் அவர் களே உயிர் வாழாதவர்கள்; ஒழுக்கத்திற்காக உயிர் விட்ட வர்கள் பலராலும் போற்றப்படுதலின் அவர்களே உயிர் வாழ்பவர்கள் என்பது வெளிப்படை. எனவே,

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.”

பலர் பல தான தருமங்களைப் பற்றியும், சில பயன் உள்ள செயல்களைப் பற்றியும், அவற்றால் உண்டாகக் கூடிய பயன்களைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டு, அவற்றைக் கடைப்பிடித்தும் வரலாம். ஆனால் அவர்களிடம் நல்லொழுக்கம் இல்லாமலும் இருக்கலா மல்லவா? இந்நிலை கூடாது. புகழை விரும்பியும், முத்தியை நம்பியும் பிறர்க்கு வாரி வழங்குபவர்கள் பலர், தம் சொந்த ஒழுக்கத்தில் மிகத் தவறியிருப்பதைக் காண்கின்றோ மல்லவா?

இவர்களை மனத்தில் வைத்துதான் திருவள்ளுவர் "மக்களே! நீங்கள் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பீர்களேயானால், மாட்டை யடித்துச் செருப்புத் தானம் செய்வீர்களாயின், தாய் தண்ணீரின்றித் தவிக்கக் கும்பகோணத்தில் கோதானம் கொடுப்பீர்களானால், இன்னும் இவற்றைப் போல் உள்ளுக்குள் தகாதன செய்துகொண்டு - வெளியில் சில நல்ல காரியங்களைச் செய்வீர்களானால் அவற்றால் ஒரு சிறிதும் பயனில்லை. அவையெல்லாம் துணையாகா. எல்லா வற்றிற்கும் அடிப்படையான நல்லொழுக்கமே நற்றுணையாவது” என்று சுட்டாமல் சுட்டியுள்ளார் -

“பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அ.தே துணை.”

என்ற குறளால்!

அடுத்து, சாதிமுறை பற்றி ஆசிரியர் கூறும் கருத்து ஈண்டுக் கருதற்பாற்று

“ஒழுக்க முடைமை குடிமை விழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.”

என்னுங் குறளில் சாதி என்பது என்ன என்பதை வள்ளுவர் தெள்ளத்தெளியத் தெரிவிக்கிறார். ஒழுக்கமுடைமையால் பார்ப்பார் முதலிய வகுப்பினர் உயர் குலத்தாராகப் பகுக்கப்பட்டார்கள் என்றும், ஒழுக்கமின்மையால் பறையர் முதலிய வகுப்பினர் தாழ்குலத்தாராகப் பகுக்கப்பட்டார்கள் என்றும் சில ஆராய்ச்சியறிவிலிகள் உளறுகின்றனர். மேலும் சிலர், உயர் குலப் பார்ப்பான் ஒழுக்கம் தவறி விட்டால் தாழ் குலத்தானாவான் என்றும், தாழ்.குலப் பறையன் ஒழுக்கம் உயர்ந்து விட்டால் உயர்குலத்தானா வான் என்றும் குளறுகின்றனர். இக் கருத்துகள் எல்லாம் தவறுடையவை.

பார்ப்பான்-பறையன் என்னும் சாதிப் பிரிவினை, அன்று ஒழுக்கமுடைமையையும் இன்மையையும் கருதிப் பிரிக்கப்பட்டதன்று, அவரவர்கள் செய்யும் தொழிலைக் கருதியே தொழிலுக்கேற்ற பெயர்கள் தரப்பட்டன. எடுத்துக் காட்டாக, - கணக்கு வேலை செய்பவரைக் கணக்குப் பிள்ளை யென்றும், பாடம் கற்பிப்பவரை ஆசிரியர் என்றும், ஊர் நாட்டாண்மை செய்பவரை நாட்டாண்மைக் காரர் என்றும், சமையல் செய்பவரைச் சமையல்காரர் என்றும் இப்பொழுதும் நாம் அழைக்கின்றோம் அல்லவா? இதே போலத்தான் பண்டைக் காலத்தில் யார் யார் எவ்வெத் தொழில் செய்தனரோ, அவ்வத்தொழிலால் அவ்வவரைப் பெயரிட்டு அழைத்தனர். செந்தண்மையாகிய அந்தண்மை பூண்டு ஒழுகுபவன் (பார்ப்பான்) அந்தணன், பறையடிப்பவன் பறையன் என இங்கனம் அழைத்து வந்தார்கள். எனவே, ஒழுக்கம் குறித்து சாதிப் பிரிவினை ஏற்படவில்லை; தொழில் குறித்தே ஏற்பட்டது என்னும் கருத்தினை, நம் திருவள்ளுவர்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”

என வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டார்.

உண்மை இங்கனமிருக்க, “ஒழுக்கமுடைமை குடிமை” என்னும் இக்குறளுக்கு 'ஒழுக்கமுடைமை உயர் சாதித் தன்மை ஒழுக்கமின்மை இழி சாதித் தன்மை’ என்னும் கருத்தில் உரையாசிரியர்கள் பலரும் உரை பகர்ந்திருப்பதும், பரிமேலழகர் இக்குறளில் வருணத்தை இழுத்து மாட்டியிருப் பதும் அறியாமையும் வருந்தத்தக்கதுமாகும். “ஏன்? இவ்வுரையாசிரியர்கள் மேல் என்ன தவறு?‘ஒழுக்கமுடைமை குடிமை-இழுக்கம் இழிந்த பிறப்பு’ என்று வள்ளுவர்தான் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றாரே - அதைத்தான் இவர்களும் எழுதினார்கள். இது சரியில்லையென்றால் எது சரி?” என்று நம்மைச் சிலர் வினவலாம். ஆதலின் இக்குறளின் உண்மைக் கருத்தைத் தெளிவுறுத்துவோம்:—

முதலியார் என்னும் ஒரு சாதியை எடுத்துக் கொள்வோம். அம்முதலியாருள்ளும் பல முதலியார் பிரிவுகள் இருக்கலாம். அவற்றுள் ஏதேனும் ஒரு பிரிவு முதலியார் சாதியினரை ஈண்டு எடுத்துக் கொள்வோம். அவர்களே தம் பிரிவுச் சாதிக்குள் - தம் உறவினருக்குள் உயர் சாதி - தாழ் சாதி கூறுவதை நாம் கண்கூடாகக் காணலாம். எங்கேயும் அப்பால் செல்ல வேண்டியதில்லை; ஒரு சாதிக் கணவன் - மனைவியையே எடுத்துக்கொள்வோம். கணவன் குடும்பத்தாரும், மனைவியின் தாய்வீட்டுக் குடும்பத்தாரும் ஐந்தாறு தலைமுறைகளாகப் பெண் கொடுக்கல் - வாங்கல் (சம்பந்தம்) செய்துவந்திருப்பார்கள். இங்ஙனம் வழிவழி உறவின் மேல் மணந்து கொண்ட இக்கணவன் மனைவியருக் குள் குடும்பத்தில் ஒரு சமயம் சிறு சச்சரவு ஏற்படுவதுண்டு. அப்போது கணவன், தன் மனைவி தவறு செய்ததாக எண்ணியபோது அத் தவறைச் சுட்டிக்காட்டி, ‘நீ என்னடி செய்வாய்? உன்னைக் குறை சொல்லிப் பயன் இல்லையடி, இது உன் சாதிப் புத்தியடி’ என்று வைகிறான். அதுபோலவே, மனைவியும் தன் கணவனை நேரில் சொல்வதுண்டு. சில பெண்கள் தம் பிள்ளையை நோக்கி, இது உங்கள் குலாசாரம் - சாதி வழக்கம் என்று கூறித் தம் கணவர் குலத்தைச் சுட்டிப் பேசுவதுண்டு. இவற்றையெல்லாம் நாம் நேரில் கண்டிருக்கின்றோ மல்லவா?

அப்பப்பா! ஒரு சாதி ஆணும் - ஒரு சாதிப் பெண்ணும் மணந்து வாழ்கின்ற ஒரு குடும்பத்திலேயே கணவன் உயர்ந்த சாதி - மனைவி தாழ்ந்த சாதி, அல்லது கணவன் தாழ்ந்த சாதி - மனைவி உயர்ந்த சாதி, இன்னும், தாய் ஒரு சாதி - சேய் (பிள்ளை) ஒரு சாதி யென்றால், பார்ப்பான் - பறையன் முதலிய சாதிகட்குள் எது உயர்ந்தது? எது தாழ்ந்தது?

எனவே இக்குறள், பலவகைப்பட்ட வெவ்வேறு சாதியினரின் சாதி ஒழுக்கமுடைமை.இன்மைகளைப் பற்றிப் பொதுவில் கூறவில்லை. வெவ்வேறு சாதியினராயினும், ஒரே சாதியினராயினும், தலைமுறை தலைமுறையாக உறவினராயிருந்தாலும் சரியே! எவர்குடி (குடும்பம்) ஒழுக்கமுடைய குடியோ அவர்குடி உயர்குடியாகும், எவர்குடி ஒழுக்கமற்ற குடியோ அவர்குடி தாழ்குடியாகும் - இது பரம்பரையாகத் தொடர்வதும் உண்டு. இந்த அடிப்படை யிலேயே ஒழுக்கமுடைமை குடிமை - இழுக்கம் இழிந்த பிறப்பு என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில், பார்ப்பனர்க்குள்ளும் பறையர்க்குள்ளும் நல்லொழுக்க முடையவரும் உள்ளனர், தீயொழுக்க முடையவரும் உள்ளனர். நல்லொழுக்க முடையோரெல்லாம் நற்குடியினர், தீயொழுக்க முடையோரெல்லாம் இழி குடியினர். இவர்களிடையே குணத்தைக் கொண்டுதான் உயர்குடி, தாழ்குடி பகுக்க வேண்டுமே தவிர, தொழிலுக் கேற்பவுள்ள தூய்வை - சுகாதாரச் சூழ்நிலை என்பவற்றைக் கொண்டு பொதுவில் உயர்குடி, தாழ்குடிகளைப் பிரிக்கக் கூடாது. அண்ணன் தம்பிகளுக்குள்ளேயே அரசர்ங்க அலுவல் பார்க்கும் அண்ணனுக்கும், வயல்வெளிச் சேற்றில் வேலை பார்க்கும் தம்பிக்கும் உருவத்தில் - தூய்மையில் - நாகரிகத்தில் வேற்றுமை இருக்கத்தானே செய்யும்? இவ்வேற்றுமையைக் கொண்டு இவர்கட்குள் உயர்வு தாழ்வு கற்பிக்க முடியாதன்றோ? இவருள்ளேயே தம்பி நற்குண நற் செய்கை யுடையவனாயிருப்பின் அவன் உயர்ந்தவன்; அண்ணன் தீக்குண - தீச் செய்கை யுடையவனாயிருப்பின் அவன் தாழ்ந்தவன். இதுபோலவே பார்ப்பனர்க்கும் பறையர்க்கும் இடையேயும் கொள்க. மற்றும், அடுத்த குறளும் ஈண்டு ஒப்பு நோக்கி ஆராயத்தக்கது.

“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.”

பார்ப்பான், தனக்குரிய தொழிலாகிய ஒதுதல் - ஒதுவித்தலை மறந்தாலும் மறக்கலாம்; நல்லொழுக்கத்தை மட்டும் மறந்து கைவிடலாகாது. ஏனெனில், ஒதுதலை விட்டால் மீண்டும் ஒதிக்கொள்ளலாம். அது குறித்து அவனை அவ்வளவாக இகழ மாட்டார்கள். ஆனால் முதலில் தீயொழுக்கத்தில் நடந்துவிட்டால், மீண்டும் நல்லொழுக்கத் தைக் கடைப்பிடிக்க முயன்றாலும் கெட்டபெயர் கெட்ட பெயர்தானே? அதனால்தான் ஒதுதலைவிட ஒழுக்கத்தில் விழிப்பு மிகவேண்டும் என்றார் ஆசிரியர். இன்னும் இதனை மற்றொன்றாலும் அறியலாம். அது வருமாறு: திருவள்ளுவர் கல்வி' என்னும் பகுதியில்,

“எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு”
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்”

எனக் கல்வியைக் கண்ணினும் சிறந்ததாகக் கூறியுள்ளார். இவ்வதிகாரத்து முதற்குறளில், ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் என்று கூறியுள்ளார். எனவே, கண்னைவிடத் கல்வியையும் உயிரையும் விட ஒழுக்கத்தையும் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாயிற்று. ஆயின், கண் இன்றி வாழமுடியும்-உயிரின்றி வாழமுடியுமா? அது போலவே, கல்வியின்றி வாழ்ந்தாலும் ஒழுக்கமின்றி வாழக்கூடாது-எனவே ஒத்தினும் (ஓதுதலினும்) ஒழுக்கமே மேலானது என்பது தெளிவு. இக்கருத்தைத்தான் ஆசிரியர் இக்குறளில் குறிப்பாகக் (தொகுத்து) கூறியுள்ளார். நிற்க—

ஒழுக்கம் குறித்தே சாதிப் பிரிவினை ஏற்பட்டது என்னும் கருத்துடையோர், தம் கொள்கைக்கு ஆதாரமாக இக்குறளை எடுத்துக் காட்டலாம். அஃதாவது பார்ப்பான் ஒழுக்கம் குன்றினால் பிறப்புக்கெடும் என்று வள்ளுவர் கூறியிருப்பதால், ஒழுக்கத்தைக் கொண்டுதான் பார்ப்பான். பறையன் என்ற சாதிகள் வகுக்கப்பட்டன என்பது விளங்க வில்லையா?- என்று அவர்கள் சொல்லலாம். இக்குறளின் கருத்து இஃதன்று. ஒழுக்கத்தைக் குறித்தல்லாமல், தொழிலைக் குறித்தே சாதி வகுக்கப்பட்டது என்னும் நற் கருத்துக்கு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் குறளோடு இந்தக் குறளும் ஆதாரமாகும்.

எங்ஙன மெனின் —

வள்ளுவர் இக்குறளில், பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் என்று மட்டும் சொல்லவில்லை; மறப்பினும் ஒத்துக் கொளலாகும் என்றும் கூறியிருப்பதை ஆழ்ந்தாராய வேண்டும். வேதம் ஒதலை மறந்தாலும் மறக்கலாம், ஒழுக்கத்தை - மறக்கலாகாது என்பதிலிருந்தே, வேதம் ஒதுதலும் மிக மிக இன்றியமையாதது என்பது புலப்படும். திருடரிடம் அகப்பட்டுக்கொண்ட வீரனொருவன், என் உயிரைவிட்டாலும் விடுவேன் இந்தப் பொருளை மட்டும் விடமாட்டேன்' என்கிறான். அப்படியென்றால், உயிர் விடக்கூடாத பொருள்-எல்லாவற்றினும் உயர்ந்த பொருள் என்பது தெரிகிறதன்றோ அதுபோலவே வேதமோதுதலும் மறக்கக் கூடாத ஒன்று-எல்லாவற்றைக் காட்டிலும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்பதும் புலப்படும். ஏனெனில், அவ்வேதம் ஒதிப் பிழைக்கும் தொழிலைக் கொண்டுதானே, அது செய்பவன் மறையவன் (பார்ப்பான்) என்று அழைக்கப் பட்டான்? ஆதலின் என்க!

எனவே பார்ப்பான், தான் பார்ப்பன சாதியான் என்று அழைக்கப் படுவதற்கே காரணமான-பிழைப்புத் தொழிலான வேத மோதலை மறக்கக்கூடாது; தப்பித்தவறி மறந்தாலும் மீண்டும் ஒதிக்கொள்ளலாம் - அல்லது வேறு தொழில் செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் மனித இனத்திற்கே பொதுவாக இருக்க வேண்டியதான ஒழுக்கம் மட்டும் குறையலாகாது. அங்ஙனம் குறைந்தால், உயர்ந்தவனாகத் தன்னை எண்ணிக்கொண்டிருக்கின்ற அவனது பிறவியும் பயனற்றதுதான் - இழிந்தது தான்.

அதுமட்டுமா? பொறாமைக் குணம் உடையவன் பிறருடைய உடைமை, புகழ் முதலியவற்றைக் கண்டு கண்டு, நெஞ்சம் புழுங்கிப் புழுங்கிச் சாவா னாதலாலும், அவன் ஒன்றும் செய்ய முடியா தாதலாலும், பிறரது உடைமையை யோ - புகழையோ பொறாமையால் கெடுக்க முயன்ற போது பிறரால் தாக்கப்படுவா னாதலாலும் அவனிடத்தில் எத்தகைய நல்வளர்ச்சியும் இருக்க முடியாது; அதுபோலவே, ஒழுக்கமில்லாதவனும் மக்களிடையே எத்தகைய உயர்வையும் அடைய முடியாது. அவனுக்குக் கிடைக்கக்கூடிய பரிசு பழியே யாகும்.

ஒழுக்கக் கேட்டால் உலகில் பல தீங்குகள் நேருவதை அறிந்திருப்பதால், அறிஞர்கள் நல்லொழுக்கத்தினின்றும் தவறவே மாட்டார்கள். இழுக்கத்தால் பல துன்பங்கள் நேரும் என்பதையும், அதனால் ஒழுக்கமுடையவராய் வாழ வேண்டும் என்பதையும் அறிந்து ஒழுகுபவரே அறிஞர்.

ஒழுக்கமுடையோரே உயர்வடைவர்; ஒழுக்க மில்லாதவர், பிற குற்றவாளிகள் அடைய முடியாத பழியையும் அடைவார்கள். அப்படியென்றால் ஒழுக்கமின்மை எவ்வளவு கொடிய குற்றம் என்பது பெறப்படு மன்றோ? மேலும், தாங்களே அடைய வேண்டாத பழியையும் அடை வார்கள். அஃதாவது, ஒரு குற்றத்தைப் பிறர் செய்தாலும், அதனை ஒழுக்கமில்லாத இவரே செய்திருக்கக் கூடுமென்று உலகத்தார் கருதி, ஒழுக்கமில்லாத இவரையே பழிப்பர்.

பயன் தரும் நல்ல பயிரை விளைத்துப் பயனுற்று வாழ விரும்புபவர்கள் முதலில் நல்ல விதையை விதைக்கின்றார் களல்லவா? அதுபோலவே, நன்மையை அடைய விரும்பு பவர்கள் முதலில் நல்லொழுக்கம் உடையவர்களாகத் திகழ வேண்டும். தீயொழுக்கம் என்பதோ, துன்பம் என்னும் நச்சு மாமரத்தை-முள்ளிச் செடியை வளர்க்க இட்ட விதையே யாகும்-என்பதும் கருதத்தக்கது. எனவே, நன்றிக்கு நல்லொழுக்கம் வித்தானாற்போல, இடும்பைக்குத் தீயொழுக்கம் வித்தென்றும், தீயொழுக்கம் இடும்பை தருவதைப் போல, நல்லொழுக்கம் நன்றி தரும் என்றும் கொள்ளல்வேண்டும்.

சிலர் நல்லொழுக்கமுடையவராய் உள்ளனர்; ஆனால் அவர்கள் வாழ்க்கையில் நன்மையின்றித் துன்புறுகின்றனர். சிலர் தீயொழுக்கமுடையவராயுள்ளனர்; ஆனால் அவர்கள் வாழ்க்கையில் தீமையின்றி இன்புறுகின்றனர் - இம் மாறுபட்ட காட்சிகளை நாம் காண்கின்றோமல்லவா? விதை விதைத்தவன் உடனேயே நன்மையடைவதில்லை; நன்மை யடையாததோடு மேலும் மேலும் பணச் செலவும், உடல் முயற்சியும் செய்து உழல்கிறான். இப்போது அலுப்பாக இருந்தாலும் பயிர் முற்றி விளைந்தபின் இன்புறுவா -னல்லவா? அதுபோலவே, நல்லொழுக்கமுடையவரும் முதலில் துன்புறுவதாகத் தெரியினும் பின்னொரு சமயம் நன்மை எய்துவார்கள். பின்னொரு சமயம் என்றால் அடுத்த பிறவியிலன்று. இப்பிறவியிலேயே, ஒரு சமயம், இவரது செயலால் உலகிற்குப் பயனுள்ளதாக மக்கள் அறிந்து கொண்டு இவர்க்குப் பல நன்மைகள் செய்வரன்றோ?

ஆதலின், பின்னால் உண்டாகும் நன்மைப் பயிருக்கு இப்போது கொள்ளும் ஒழுக்கம் வித்தாகும். இஃது இப்படி யெனவே, இப்போது நன்மைபோல் தெரிந்தாலும் பின்னால் வரப்போகும் துன்பப் பயிரின் விளைவுக்குத் தீயொழுக்கம் முன்கூட்டி இடும் வித்தாகும் என்பதும் புலப்படும். மற்றும், தீயொழுக்கமுடையவர்கள் இப்போது இன்புற்றுக் கொண் டிருக்கும்போதே, தம் இழுக்கம் வெளியில் தெரிந்து விட்டால் - அரசாங்கம் அறிந்துவிட்டால் என்ன நேருமோ என்று அஞ்சிக் கொண்டே யிருப்பார்கள். ஆதலின், இப்போதும் அவர்கட்கு மன அமைதி இராது. ஆதலானும், பின்னர் வெளிப்பட்டபோது தண்டனையும் பழியும் ஏற்பார் கள் ஆதலானும், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.

நல்லொழுக்கமுடையவர்கள், கெட்டவர்கள் பேசுகின்ற கெட்ட பேச்சுக்களை மறந்தும் - தவறியும் தம் வாயால் பேசவே மாட்டார்கள். எனவே, கெட்டதைப் பேசா திருப்பதும் நல்லொழுக்கத்திற்கு ஓர் அடையாளமாகும் என்று ஆசிரியர் குறளில் கூறியுள்ளார்.

இனிக் குறள்களைக் காண்போம்.

“அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை.
ஒழுக்கம் இலான்கண் உயர்வு”.
“ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து”.
“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி”
“நன்றிக்கு வித்தாகும் கல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்”.
“ஒழுக்க முடையார்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்”.

மேலும் ஒழுக்கம் என்னும் தலைப்பில் வள்ளுவர் கூறி யுள்ள ஒரு புதிய கருத்து சிந்தனைக்குரியது:

உலகில் பலர் பழைய முறையை விடக்கூடாது என்று கூறிப் பழமையோடே முட்டிக்கொண்டு கிடப்பதைப் பார்க்கலாம். இவர்கள், கோயில்களில் பழைய வழக்கப்படி யுள்ள எண்ணெய் விளக்கைத் தவிர மின்னொளி (எலெக்ட்ரிக்) விளக்குப் போடவே கூடாது என்றும், சிலரைத் தீண்டக் கூடாது என்றும், உள்ளே விடக்கூடாது என்றும் ஒற்றைக் காலில் நின்றார்கள் - நிற்கிறார்கள். இன்னும் சிலர் கடல் தாண்டிக் கப்பல் போக்குவரவு செய்யக் கூடாது என்றார்கள் - என்கிறார்கள். அதிலும் பெண்களை அழைத்துச் செல்லவே கூடாது என்பது அவர்களின் விடாப் பிடி. இவையெல்லாம் இன்று எவ்வளவு அறியாமைக்கு உரியன? இவர்கள், வளர்ச்சி பெற்றுச் செல்லும் விஞ்ஞான உலகம் என்னும் குழந்தையை, மேலும் வளரவிடாமல், பழைய காலப் பழக்கவழக்கம் என்னும் தாயின் கருவிற்குள் (வயிற்றுக்குள்) கொண்டு வைத்துவிட முயல்கின்றனர். இவர்கள் எவ்வளவு கற்றிருந்தாலும் அறிவிலிகளே யாவார்கள். அறிஞர் உலகம் இவர்களை மதிக்குமா? இவர்களின் கொள்கைகள் பொருத்தமற்றவை என்பதை ஈண்டு விளக்கி விண்காலம் போக்க வேண்டியதில்லை. இக் காலத்திலுள்ள பத்து வயதுடைய பள்ளி மாணவரும் இவர் களின் பழைய கொள்கைகளைப் பழிப்பது வெளிப்படை யன்றோ?

எனவேதான் நம் திருவள்ளுவர், மக்கள் தாம் எவ்வளவு கற்று அறிந்திருந்தாலும் உலகத்தோடு ஒத்துப் போக வேண்டும் என்னும் கருத்தில்,

“உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”.

என்று அருளியுள்ளார்.

எதிர்காலம் மாறக்கூடும் என்பதை முன்கூட்டியே நுனித் துணர்ந்து வள்ளுவர் இக்குறளைக் கூறவில்லையென்றால் அவருக்கு என்ன மதிப்பு? இதனாலேயே திருக்குறள் என்றும்-எங்கும்.எவரும் போற்றும் பொதுநூல் என்னும் பெயர் பெற்றதல்லவா?

பவணந்தி முனிவரும் தம் நன்னூலில்,

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே’

என்று கூறியுள்ளமையை நோக்குக.

ஒரு காலத்தில் நல்லொழுக்கமாகக் கருதப் பெற்றது மற்றொரு காலத்தில் இழுக்கமாகவும், ஒரு காலத்தில் இழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு காலத்தில் ஒழுக்க மாகவும், ஒரிடத்தில் ஒழுக்கமாகக் கருதப் பெற்றது மற்றோ ரிடத்தில் இழுக்கமாகவும், ஓரிடத்தில் இழுக்கமாகக் கருதப் பெற்றது மற்றோரிடத்தில் ஒழுக்கமாகவும், ஒரு காலத்தி லேயே ஓரிடத்திலேயே-ஒரு கூட்டத்தாரால் ஒழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு கூட்டத்தாரால் இழுக்கமாகவும், ஒரு கூட்டத்தாரால் இழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு கூட்டத்தாரால் ஒழுக்கமாகவும் கருதப்பெறக் கூடும். இவற்றிற்கெல்லாம் எடுத்துக்காட்டு (உதாரணம்) தர வேண்டுமாயின் விரியும். எனவே, காலத்திற்கேற்ப, இடத்திற் கேற்ப, சூழ்நிலைக்கேற்ப மக்கள் தத்தம் ஒழுக்கங்களை - நடைமுறைச் செயல்களை வகுத்துக்கொண்டு வாழ்வதே அறிவுடைமை.

கற்றவர் சிலர்-சிலரென்ன, பலர்-தங்களை ஏதோ தனிப் பிரிவினர் - உயர் வகுப்பினர் என்று எண்ணிக்கொண்டு, சமூக மக்களோடு நன்கு கலந்து பழகாமல் - அவர்கட்கு ஆவன புரியாமல் ஒதுங்கி வாழ்கின்றனர். வேறு பல கலை களைக் கற்றிருப்பினும், உலக மக்களோடு ஒட்டி வாழ்தலைக் கல்லாத இவர்களை உண்மையில் கல்வி உடையவர்களாக எப்படிக் கொள்ள முடியும்? கற்றும் இவர்கள் அறிவிலிகளே யாவார்கள். எனவே, உலகத்தோ டொட்டி ஒழுகலும் ஒரு சிறந்த பேரொழுக்கமாகும்.