மனத்தின் தோற்றம்/திராவிட மொழிகளில் சில சொல்லாட்சிகளும் சொற்சுவைகளும்

விக்கிமூலம் இலிருந்து
14. திராவிட மொழிகளில் சில சொல்லாட்சிகளும் சொற்சுவைகளும்


திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனவற்றுள், பேச்சுத் தமிழும் எழுத்துத் தெலுங்கும் எழுத்துக் கன்னடமும் எழுத்து மலையாளமும் ஏறக்குறைய ஒன்றா யிருக்க, எழுத்துத் தமிழ் வேறுபட்டிருப்பதைக் காணலாம். இதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு வருக:

‘தலை’ என்பது எழுத்துத் தமிழ். இது, பேச்சுத் தமிழில் ‘தல - தலெ’ என்றும், எழுத்துத் தெலுங்கில் ‘தல’ என்றும், எழுத்துக் கன்னடத்தில் ‘தலெ’ என்றும், எழுத்து மலையாளத்தில் ‘தல’ என்றும் வழங்கப்படுகின்றது. ‘தல - தலெ’ என்பன கொச்சைத் தமிழ்; ஆனால் இவை, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றிற்கு இலக்கண - எழுத்து வடிவமாகும். இதிலிருந்து தெரிவதாவது:

எழுத்துத் தமிழின் ஈற்று ‘ஐ’ என்பது, மற்ற நான்கிலும் ‘அ’ அல்லது ‘எ’ ஆக மாறுகிறது என்பதாம். துளு மொழியிலும் இந்த மாற்றம் உண்டு. துளுவில் தலை என்பது ‘தரே’ எனப்படுகிறது. இதில் ‘ஐ’ என்பது ‘எ’ ஆனதோடு, லகரம் ரகரமாகத் திரிந்துள்ளது. இவ்வாறு திராவிட மொழிகட்கிடையே உள்ள சில திரிபு மாற்றங்களை விதந்து காண்பாம்: தெலுங்கு

தமிழ் ழகரம் தெலுங்கில் டகரம் ஆகிறது. எடுத்துக் காட்டுகள் கூழு = கூடு, ஏழு = ஏடு. கோழி = கோடி. கூடு என்பதற்கு, தெலுங்குக் கவிஞர் வேமன்னரின் வேமன்ன பத்தியம் என்னும் நூலிலிருந்து ஒர் இலக்கிய மேற்கோள் வருக! “பப்பு லேனி கூடு பலமு லேது” (பருப்பு இல்லாத உணவு (கூழு= கூடு) வலிமையற்றது) என்பது அது. அடுத்து, தமிழ் ணகரம் தெலுங்கில் னகரம் ஆகிறது. காட்டுகள்: சுண்ணம்= சுன்னம். கண்ணு = கன்னு. அண்ணன் = அன்ன. வெண்ணெய் = வென்ன. அணைக்கட்டு = அனக்கட்ட தமிழில் சில சொற்களின் இறுதியில் 'உ' சாரியை வரும் அமைப்பு தெலுங்கில் மிகுதியாக உண்டு. தீர்=தீரு=திரு. வேர்-வேரு வேரு தெரு=தெருவு தெருவு.

கன்னடம்

தமிழ் ழகரம் கன்னடத்தில் ளகரம் ஆகிறது. காட்டுகள்: ஏழு=ஏளு, கூழு= சுளு கோழி=கோளி. தென் தமிழ் நாட்டினரும் ழகரத்தை ளகரமாக ஒலிப்பது இங்கே நினைவு கூரத் தக்கது. தமிழ் அகரமும் பகரமும் கன்னடத்தில் ஹகரம் ஆகும். காட்டுகள்: அப்பளம் ஹப்பளம், பாலு= ஹாலு, பண ஹண. பேன், பேணு-ஹேனு. பல்லி= ஹல்லி. பல்லு = ஹல்லு, புலி = ஹாலு, தமிழ் வகரம் கன்னடத்தில் பகரம் ஆகும். காட்டுகள்: வரை = வரெ = பரெ. வெள்ளி= பெள்ளி. வண்டி - பண்டி, தமிழ் றகரம் கன்னடத்தில் ரகரம் ஆகும். காட்டுகள்: முறம்-மொற(ம்)= மொர திற தெற தெர. மாறு=மாரு சாறுக சாரு. குறை= கொறெ-கொரெ. சிதறு=கெதரு, கூரை = கோர (துணி), நிறைவு தெரவு. சிறை=செறெ = செரெ. இவற்றுள் றகரம் ரகரமானதன்றி, உகரம் ஒகரமாகவும், ஊகாரம் ஒகாரமாகவும், இகரம் எகரம் ஆகவும், சகரம் ககர மாகவும் திரிந்திருப்பதையும் காணலாம்.

மெய் ஈறு இன்மை

மற்றும் கன்னடத்தில் மெய் ஈற்றுச் சொற்கள் இல்லை . அதாவது - எச்சொல்லின் இறுதியிலும் எந்த மெய் யெழுத்தும் இராது. இஃதும், தமிழோடு தொடர்புடைய ஒரு கூறாகும். தமிழ் மெய்யெழுத்துகளுள் ஞ், ண், ம், ய், ர், ல், ழ், ள், ன் என்பன சொல் இறுதியில் பெருவாரியாக வரும். இவற்றுள், பேச்சு வழக்கில் உரிஞ் = உரிது, உண்= உண்ணு. தூண்=துணு எனவும், நாய் - நாயி. தாய் =தாயி எனவும், வேர்-வேரு, பார்: பாரு எனவும், கால்=காலு, பல்=பல்லு எனவும், கூழ் = கூழு, அகழ்=அகழு எனவும், முள் = முள்ளு, தேள் =தேளு எனவும், தின் = தின்னு, பேன் = பேனு எனவும், ம் தவிர்த்த மற்ற மெய்கள் உகரச் சாரியையோ இகரச் சாரியையோ பெற்று வரும். மரம், ஏலம், அவன், போனான் என ம், ன் என்னும் மெய்யீற்றுச் சொற்கள் தமிழில் 'உ' சாரியை பெறுவதில்லை; சில இடங்களில் மட்டும் ன் ஈறும் உகரச் சாரியை பெறுவ தில்லை. பலம் - பலமு, குடம்= குடமு எனத் தெலுங்கில் ‘ம் உகரச் சாரியை பெறுகிறது. தமிழிலோ, மரம், ஏலம், அவன், போனான் போன்ற சொற்களின் இறுதி மெய் யெழுத்துகள் முழுமையாக ஒலிக்கப்படுவதில்லை; மர(ம்), ஏல(ம்), அவ(ன்), போனா(ன்) என இறுதி மெய் ஒலித்ததும் ஒலிக்காததுமாகப் பாதியளவு ஒலியே பெறுகின்றன. பிரெஞ்சு மொழியிலும் இது போன்ற அமைப்பு உண்டு. ஒன்று என்னும் பொருள் உடைய UN என்னும் பிரஞ்சுச் சொல் ஆன் என முழுதும் ஒலிக்கப் படாமல் ஆ(ன்). என மெலுக்காகவே ஒலிக்கப் பெறுகிறது. விரிவஞ்சி ஒர் எடுத்துக்காட்டோடு விட்டு விடலாம்.

இதுகாறும் கூறியதிலிருந்து தெரிவதாவது: தமிழிலும் பேச்சு வழக்கில் சொல் இறுதி மெய்யெழுத்துகள் சரியான - போதுமான ஒலி பெறுவதில்லை - என்பதாம். கன்னட மொழியில் மெய்யீற்றுச் சொற்களே இல்லை என்னும் கருத்தோடு இந்தக் கருத்து ஓரளவு ஒத்து வருகின்ற தல்லவா? மற்றும், கன்னடத்திலும், இருள்=இருளு, தாள் = தூளு; கூலிகாரர்: கூலிகாரரு என மெய்யிறு 'உ' சாரியை பெறுவ துண்டு. பேச்சு வழக்கில் தமிழிலும் எழுத்து வழக்கில் கன்னடத்திலும் மெய்யீறு ஒலிக்கப் பெறாமையும் ஒரு சில இடங்களில் 'உ' சாரியை வருவதும் இவ்விரு மொழிகளும் ஒத்த மொழிகள் என்பதற்குப் போதிய சான்று பகரலாம். பழங் கன்னடத்தில் உள்ள சொல்லாட்சிகள் மேலும் இக் கருத்துக்குத் துணை புரியலாம். (இப்போது, கன்னடச் சொற்களின் இறுதியில் மெய்யெழுத்தைச் சேர்க்கும் முயற்சி நடைபெறுவதாகத் தெரிகிறது)

வெங் - வென்

இனி இங்கே ஒரு சுவையான சொல்லாட்சியைக் காண்போம். தமிழில் வெந்' என்பதற்கும் சிறிதளவு ஒலி வேறுபாடுடைய வென்’ என்பதற்கும் முதுகு என்பது பொருள். வென்னிடுதல் என்றால், முதுகு காட்டி ஒடுதல் ஆகும். தமிழில் உள்ள வென்’ என்பதோடு ஒலித் தொடர் புடைய வென், வெனு, வென்னு, என்பன தெலுங்கிலும் பென்னு' என்பது கன்னடத்திலும் முதுகைக் குறிக்கும். தமிழ் வகரம் கன்னடத்தில் பகரமாக ஒலிப்பதுண்டு; இதன் படி வென் என்பது கன்னடத்தில் பென் ஆயிற்று. கன்னடத்தில் மெய்யீறு உள்ள சொல் இல்லை; மெய்யிறு இருப்பின் 'உ' சாரியை சேர்ந்து விடும் அல்லவா? இதன்படி 'பென்' என்பது பென்னு ஆயிற்று. வென், வென்னு, வெனு, பென்னு என்பவற்றின் அடிப்படைச் சொல்லாகத் தமிழில் உள்ள வெந் (வென்) என்பதற்கு ஒரு சுவையான இலக்கிய மேற்கோள் காண்போம்:-

தலைவன் தலைவியின் மார்பைத் தழுவ விரும்புகிறான். தென்னங் குரும்பை போன்ற அவளுடைய முலைகளின் குளிர்ச்சியைத் துய்க்கத் துடிக்கிறான். அந்நேரம் அவள் நாணத்தால் தலைவன் பக்கம் முதுகைக் காட்டித் திரும்பி நின்றாள். அப்போது அவன் அவளை நோக்கி, குரும்பை போன்ற முலைகளின் தண்மையைத் துய்க்க விரும்பும் எனக்கு முதுகைக் காட்டலாமா? என்று கூறுகிறான். இது, நூல் பெயர் தெரியாத பின்வரும் பாடல் பகுதி ஒன்றினால் அறியப்படுகிறது:-

“இளங்குரும்பைத் தண்ணீர் அளவுக்கு
வெந்நீர் அளித்தல் தகுதியன்றோ”

என்று கூறுகிறான். குரும்பை என்பது குரும்பை போன்ற முலை. தண்ணீர் (தண்நீர்) என்பது குளிர்ந்த தன்மை, வெந்நீர் என்பதை வெந்+நீர் எனப் பிரிக்கவேண்டும். வெந்=முதுகை, நீர்=நீங்கள், அளித்தல்= காட்டுத்ல் முறையன்று என்று கூறுகிறான். இங்கே தண்ணீர் (குளிர்ந்த பச்சைத் தண்ணீர்) விரும்பியவர்க்கு, வெந்நீர் (சூடான் நீர்) அளித்தல் தகுதியன்று என்று இரு பொருள் (சிலேடை) தந்து இப்பகுதி சுவை பயக்கிறது. இவ்வாறு சுவைதரும் சொற்கள் பல உண்டு. மேலும் ஒன்று வருமாறு:

தனம்-மாடு

தனம் என்னும் சமசுகிருதச் சொல்லைக் கன்னட மொழி ஏற்றுக் கொண்டுள்ளது. கன்னடத்தில் இந்தச் சொல் மாடு (பசு) என்னும் இரு பொருளையும் தருகிறது. இதில் சுவையான செய்தி ஒன்று அடங்கியுள்ளது. தமிழிலும் இது போன்ற அமைப்பு உண்டு. தமிழில் மாடு என்பதற்குப் பசு, செல்வம் என்னும் இரு பொருளும் உண்டு. மாடு என்பதற்குச் செல்வம் என்னும் பொருள் உள்ளமையை,

“கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு -
மாடு அல்ல மற்றை யவை”

என்னும் திருக்குறள் பா அறிவிக்கிறது. கல்வியே செல்வம், மற்றையவை மாடு (செல்வம்) ஆகா - என்பது பொருள். தன் சொல்லுக்குத் தானே பொருள் கூறும் பாடல் இது.

ஐயர் குலத்தினர், தம் வீட்டிற்கு வரும் மருமகளை ‘மாட்டுப் பெண்’ என்று கூறும் வழக்காறும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மாடு என்பதற்குப் பக்கம் என்னும் பொருளும் உண்டு வீட்டில் பிறந்த பெண் வேறு வீட்டுக்குப் போய் விடுவதாலும் மருமகள் தம் பக்கத்திலேயே இருப்ப தாலும் மாமியார் வீட்டார் மருமகளை ‘மாட்டுப் பெண்’ என்று அழைப்பதாகச் சிலர் பொருள் கூறுகின்றனர். இது சரியன்று. மருமகளை வீட்டிற்கு வந்த திருமகள் (இலட்சுமி) என்று சொல்வது மரபு. மருமகள் வீட்டிற்குச் செல்வம் ஆவாள். மேலும் சீர்வரிசைச் செல்வம் (சீதனம்) கொண்டு வருகிறாள். இதற்கேற்ப, மாடு என்பதற்குச் சீதனம் (பெண் சீர்) என்னும் பொருளும் உண்டு என அகராதி நிகண்டு கூறுகிறது. எனவே, மாட்டுப் பெண் என்றால், செல்வப் பெண் என்றே பொருள் கூமல் வேண்டும். ஐயர்கள் ஆத்திலே (அகத்திலே), அம்மாஞ்சி (அம்மான் சேய்) என்றெல்லாம் நல்ல தமிழ்ப் பெயர்களை வழங்குவதை அறியலாம். அவற்றுள் மாடு என்பதும் ஒன்றாகும்.

இலத்தீன் மொழியில், Pecunia, என்னும் சொல்லுக்கு மாடு, செல்வம் என்னும் இரு பொருள் உள்ளமையும் இங்கே ஒப்பு நோக்கத் தக்கது. இதுகாறும் இது பற்றிக் கூறியதிலிருந்து இன்னும் ஓர் உண்மையை அறிய முடிகிறது. அஃதாவது:-

இப்போது உள்ளதுபோல் பண்டைக்காலத்தில் உலோக நாணயமோ அல்லது தாள் நாணயமோ (Currency) இல்லை. ஒரு பொருள் இந்து மற்றொரு பொருள் வாங்கும் பண்டமாற்று முறையே அன்று இருந்தது. அப்போது, மிகுதி யான மாடுகள் உடையவர்களே பெருஞ் செல்வராக மதிக்கப் பெற்றனர். மாட்டைக் கொடுத்து வேறு பெரிய பொருளை - அளவில் பெரிய பொருளை வாங்குவது மர பாகும். இவ்வளவு செய்திகளையும் ஈண்டு எண்ணிப் பார்க்க இந்தத் தனம் என்னும் சொல் வாய்ப்பு அளிக்கிறது. கன்னட மொழியில் சொல்லின் இறுதியில் ஒற்றெழுத்து வருவதில்லையாதலின் தனம் ‘தன’ என்றே வழங்கப்படு கிறது. இந்த வழக்காறு ஒரு வகைச் சுவையாகும்.

மலையாளம்

மலையாளம் தமிழ்ச்சேர நாடாதலின் மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இரண்டு மொழிகளிலும் ஒலிப்பு வேற்றுமையில்லாமல் ஒரே மாதிரியான சொற்கள் நிரம்ப உண்டு. தூய்மையான உருவங்களும் மலையாளத்தில் உண்டு. சில சொற்களில் ஞகரமும் வகரமும் வந்து இனிமை ஊட்டுகின்றன. தமிழ் நகரத்திற்குப் பதிலாகவும் தமிழ் சகரத்திற்குப் பதிலாகவும் ஞகரம் வருவது இனிமை தருகிறது. எடுத்துக்காட்டுகள்: நான் = ஞான்; நாங்கள் = ஞாங்கள்; நரம்பு = ஞரம்பு; நண்டு = ஞண்டு; நாவல் - ஞாவல். கஞ்சி = கஞ்ளு; மஞ்சள் - மஞ்சா - மஞ்ளு, மஞ்சு = மஞ்து, கழிந்த = கழிஞ்ளு எனத் தகரத்திற்குப் பதிலாகவும் ஞகரம் வருவது உண்டு. ககரத்திற்குப் பதில் வகரம் வருவதுண்டு; தேங்காய் - தேங்கா = தேங்ங் மாங்காய் - மாங்கா = மாங் வ; நரைத்த = நரச்ச; குறித்து = குறிச்சி, ஒருமித்து = ஒரு மிச்சு; சிரித்து = சிரிச்சி-எனத் தகரத்திற்குப் பதில் சகரம் வரும். இது பேச்சுத் தமிழிலும் உண்டு. ஐ. ஈற்றுக்குப் பதில் அ, எ வருவதும், சொல் ஈற்றில் உகரச் சாரியை வருவதும் மலையாளத்திலும் உண்டு. எண்ணுப் பெயர்களில் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது, இருபத்திரண்டு, முப்பது, அறுபது, எழுபது, எண்பது தொண்ணுறு, நூறு, ஆயிரம் முதலிய எண்ணுப் பெயர்கள் தமிழிலும் மலையாளத்திலும் ஒரே மாதிரியா யிருப்பது குறிப்பிடத் தக்கது. மற்ற திராவிட மொழிகளில் இவ்வாறு இல்லை; சிறு சிறு மாற்றம் உண்டு.

‘ங்’ப் போல் வளை

மற்றும், மலையாளம் பற்றிய சுவையான செய்திகள் சில சொல்லவேண்டும். ‘ங முதல் ஙெள’ வரை தமிழில் உள்ள எழுத்துகளுள், இங்ஙனம், எங்ஙனம் என மட்டுமே பயன்படுகிறது. பங்கு, மங்கு என 'ங்' மெய்யும் பயன்படு கிறது. தனி ‘ங’ என்பதை ஒரு சொல் போல் கொண்டு அது ‘குறுணியளவு’ என்னும் பொருளைக் குறிக்கும் எனச் சித்தர் தேரையர் தமது ‘தைல வருக்கச் சுருக்கம்’ என்னும் நூலில் கூறியுள்ளார். இவ்வாறு ங், ங் என்பன மட்டும் பயன்படுகின்றன எனினும், தமிழ் நெடுங் கணக்கு (எழுத்து) வரிசையில் ங முதல் ஙௌ வரை உள்ள பன்னிரண்டு எழுத்துகளும் இடம் பெற்றுள்ளன. இதை எண்ணிய ஒளவையார், ங் என்பது தன் வரிசை எழுத்துகளும் இடம் பெறச் செய்தது போல, செல்வர்கள் தம்மைச் சார்ந்தவர்களையும் வளைத்து (சேர்த்துக் கொண்டு) நன்கு காக்க வேண்டும் என்னும் பொருளில் ‘ஙப் போல் வளை’ எனத் தம் ஆத்தி சூடி நூலில் கூறியுள்ளார்.

ஆனால், மலையாளத்திலோ, தேங்ங் - மாங்ங் - தங்ஙல் (தங்கல்) - ஏங்கல் (ஏங்கல்) என ‘ங’ என்னும் எழுத்து பயன்படுவதல்லாமல், ‘இடுங்ஙிய’ (ஒடுங்கிய) - துடங்ஙியவர் (துடங்கியவர்) - வாங்ஙிக்கான் (வாங்க) என ‘ஙி’: எழுத்தும், தாங்ஙு (தாங்கு) - நடுங்ஙு (நடுங்கு) - எங்ஙு (எங்கு) - பொங்கக (பொங்குக) என ந எழுத்தும் பயன் படுத்தப்பட்டிருப்பது இனிமை பயக்கிறது. ‘ங்’ என்னும் ஒற்றுக்குப் பக்கத்தில் ககரம் வந்த சொற்கள் சிலவற்றில் ககரம் வகரமாகியுள்ளது. ஆனால், செங்கல், தரங்கம், தெங்கு முதலிய சொற்களில் இவ்வாறு ககரம் வகர மாக வில்லை.

வான் விகுதி

தமிழில், செய்வான் வந்தான், படிப்பான் சென்றான் - என்னும் தொடர்களில் உள்ள செய்வான்’ என்பதற்குச் செய்ய என்பது பொருள், 'படிப்பான்’ என்பதற்குப் "படிக்க' என்பது பொருள். வான், பான் என்பன வினை யெச்ச விகுதிகள் எனத் தமிழ் இலக்கணம் கூறுகிறது. இவை போல, மலையாளத்தில் ஆன், வான் என்பன வினை யெச்ச விகுதிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மலை யாளத்தில், தின்னான் - குடிக்கான், வாங்விக்கான், காணு வான் - என்பனவற்றிற்கு முறையே, தின்ன - குடிக்க-வாங்க, காண - என்பன பொருளாம். இந்த அமைப்பும் இந்த இரு மொழிகட்கும் உள்ள நெருக்கத்தை அறிவிக்கிறது.

வேண்ட

வேண்டிய தில்லை என்னும் பொருளில் 'வேண்டாம்' என்னும் சொல் தமிழில் பேச்சு வழக்கில் உள்ளது. ஆனால், தமிழில் எழுத்து வழக்கில் 'வேண்டா' என்றே சொல்ல வேண்டும்; இறுதியில் 'ம்' கூடாது. மலையாளத்தில் 'வேண்டா' என்பது 'வேண்ட' என வழங்கப்படுகிறது; இங்கும் இறுதியில் 'ம்' இல்லை. ஆனால், இறுதியில் 'ஆ' என்பது 'அ' என ஆகியுள்ளது, இந்தச் சிறு மாறுதலைத் தவிர, 'வேண்ட' என்னும் மலையாளம் 'வேண்டா' என்னும் தமிழோடு ஒத்திருப்பதைக் காணலாம். சிரட்டை

மலையாளத்தில், கொட்டாங்கச்சியை - அதாவது - தேங்காய் ஒட்டைக் குறிக்கச் ‘சிரட்ட’ என்னும் சொல் வழங்கப்படுகிறது. இந்தச் சொல் தமிழிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இது தொடர்பான என் பட்டறிவு ஒன்றை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். நான் காவிரிக் கரையில் உள்ள திருவையாற்று அரசர் கல்லூரியில் ‘வித்துவான்’ பட்டத்திற்குப் படித்துக்கொண்டிருந்த போது 1938 ஆம் ஆண்டில் எனது பதினாறாம் அகவையில் - நிகழ்ந்த ஒரு செய்தி வருமாறு:- கோடை - காவிரியில் சிறிதும் நீரோட்டம் இல்லை. வெண்மணல் பரந்து கிடந்தது. ஒருநாள், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சாமி என்ப வரும் முத்தணைந்த பெருமாள் என்பவரும் யானும் ஆற்று மணலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். பதினாறு அகவையே உடைய எனது கை வாளா இருக்க முடியுமா? கையால் மணலை முழங்கை ஆழத்திற்குத் தோண்டிக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட ஓரளவு ஆழம் உண்டானதும் கையில் கெட்டிப் பொருள் ஒன்று தட்டுப்பட்டது. அதைத் தோண்டி வெளியே எடுத்தேன். அதைப் பார்த்ததும், முத்தணைந்த பெருமாள் என்பவர், ‘சண்முகம் ‘சிரட்ட’ எடுத்திருக்கிறான், என்று கூறினார். நான் எடுத்தது கொட்டாங்கச்சி, அவர் சொன்ன ‘சிரட்ட’ என்னும் பெயர் எனக்குத் தெரியாது. வடதமிழ் நாட்டில் இந்த வழக்கு இல்லை. பிறகுதான் ‘சிரட்டை’ என்னும் பெயர் நெல்லை மாவட்டத்தில் வழங்குவதை அறிந்தேன். ‘சிரட்டை' என்னும் பெயர், நெல்லை மாவட்டத்துப் பேச்சுத் தமிழிலும் மலையாளத்தில் எழுத்துத் தமிழிலும் ‘சிரட்ட’ என வழங்கப்படுகிறது.

தலச் சோறு

மலையாளத்தில் உள்ள ‘தலச் சோறு’ என்னும் பெயரும் என்னைக் கவர்ந்துள்ளது. மலையாளத்தில் தலச்சோறு என்பதற்கு ‘மூளை’ என்பது பொருள். எழுத்துத் தமிழில் இதனைத் ‘தலைச்சோறு’ என்று சொல்ல வேண்டும். தலை உச்சியில் உள்ள மூளைக்குச் சோறு என்னும் பெயர் உள்ளதை அறிந்தபோது, எனது இளமைக் கால நிகழ்ச்சி யொன்று நினைவுக்கு வந்தது. எனது இளம் பருவத்தில் எங்கள் தோட்டத்தில் ஒரு தென்னை மரத்தை வெட்டி னார்கள். தென்னையின் உச்சித் தலைப் பகுதி வெட்டப் பட்டுக் கீழே விழுந்ததும், ‘சோற்றைத் தோண்டி எடுங்கள்’ என்று ஒருவர் கூறினார். உச்சியிலிருந்து வெண்மையான ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. அது பலர்க்கும் பங்கிட்டுத் தரப்பட்டது. நான் என் பங்கைத் தின்றபோது அது மிகவும் சுவையாயிருக்கக் கண்டேன். அந்தப் பகுதிக்குச் சோறு என்னும் பெயர் உண்டு என்பதை நான் அப்போது தான் தெரிந்து கொண்டேன். ‘தலச்சோறு’ என்னும் மலையாளப் பெயரோடு பொருத்திப் பார்த்தபோது மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. ‘மண்டையிலே மசாலா இருக்கிறதா’ என்று சிலர் கேட்பது இங்கே ஒப்புநோக்கத் தக்கது.

மண்ணான்

மலையாளத்தில் உள்ள மற்றொரு சொல் சுவையாயுள்ளது. தமிழில் உள்ள ‘வண்ணான்’ என்பது மலையாளத்தில் ‘மண்ணான்’ என்று வழங்கப்படுகிறது. வண்ணான்- மண்ணான் என்றால் சலவைத் தொழிலாளி (Washerman) என்பது பொருள். இந்தக் காலத்தில் வண்ணான் என்று சொன்னால் அது குறைவாகத் தோன்றுகிறது; அந்த இனத்தார் சினம் கொள்வர் - வருத்தப்படுவர். குறைவோ வருத்தமோ தராத சொல்லாக ‘ஏகாலி’ என்பது சிற்றுார்ப் புறத்தும், ‘சலவைத் தொழிலாளி’ என்பது நகர்ப்புறத்தும் இப்போது வழங்கப்படுகின்றன. வண்ணான், மண்ணான் என்னும் சொற்கட்கும் ‘சலவைத் தொழிலாளி’ என்பதே பொருளாகும்.

வண்ணான் என்பதற்கு, உடைக்கு வண்மை-அழகு ஊட்டுபவன் என்பது பொருள். மலையாளத்திலுள்ள மண்ணான் என்பதற்கு, உடையைத் தூய்மை செய்பவன் - அணி (அலங்காரம்) செய்பவன் என்பன பொருளாம். மண்ணுபவன் மண்ணான். மண்ணுதல் என்பதற்குக் கழுவுதல், தூய்மை செய்தல், அழகு செய்தல் என்பன பொருளாகும். இதற்கு ஒளவையாரின் மூதுரை நூலிலிருந்து ஒர் அகச் சான்று காண்பாம்:

“மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல் சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்ணிரும் ஆகாது அதனருகே சிற்றுறல்
உண்ணிரும் ஆகி விடும்” (12)

என்பது மூதுரைப் பாடல். மண் நீர் (மண்ணிர்) என்றால், உடம்பைக் குளித்துக் கழுவித் தூய்மை செய்ய உதவும் நீர் என்று பொருளாம். கடல்நீர் அதற்கு உதவாதன்றோ? இன்னொரு அகச்சான்று கலித்தொகை என்னும் நூலிலிருந்து காண்பாம்: “மண்ணி மாசு அற்ற நின் கூழையுள்” (கலித் தொகை 107-31) என்னும் தொடரின் பொருள்: குளித்துக் கழுவி அழுக்கு போக்கித் தூய்மை செய்த நின் கூந்தல் - என்பதாம். மண்ணினால் மாசு (அழுக்கு) அறும் எனத் தெளிவான பொருளில் சொல்லாட்சி அமைந்துள்ளது. இன்னும் ஒரு சொல்லாட்சியை இங்கே காணலாம்.

கோதுமை - கோதும்பை 1982 மார்ச்சு முதல் நாள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத் தலைவனாகவும் பேராசிரியனாகவும் யான் பணி தொடங்கினேன். எனக்குப் பணி தந்த என் வணக்கத்திற்கு உரிய துணைவேந்தர் உயர்திரு வி. ஐ. சுப்பிரமணியனார் அவர்கள், எதைத் தொகுப்பது என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை எனக்கே வழங்கிவிட்டார்கள். மர இனப் பெயர்களை முதலில் தொகுக்கலாம் என்றேன் நான். ஐயா அவர்கள் அதற்கு அன்போடு ஒப்புதல் அளித்தார்கள். எனது பணிக்கு வேண்டிய ஒரு நூலும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இல்லாத நிலையில், யான் புதுச்சேரியிலிருந்து நாற்பது அகர முதலிகள் கொண்டு போய் வைத்துப் பணி தொடங்கினேன். அப்போது யான் அறிந்த சுவையான செய்தி ஒன்றை இங்கே தருகிறேன்:

‘கோதுமை’ என்பதைத் தென்னாற்காடு மாவட்டப் பகுதியிலும் அதன் நடுவே உள்ள புதுச்சேரியிலும் ‘கோதும’ என்று கொச்சையாகப் பேச்சுத் தமிழில் சொல்வது வழக்கம். மூளைக்கட்டி நோயாளியாகிய யான் மருத்துவத்திற்காகச் சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் என் சிறிய மாமனார் வீட்டில் தங்குவது வழக்கம். அந்த வீட்டுச் சமையல்காரர் இராமநாதபுரம் மாவட்டத்தினர். அவர் கோதுமை என்பதைக் ‘கோதம்ப’ என்று கூறுவார். நான் ‘கோதம்ப’ என்பதைக் கேட்டதும் கிண்டல் பண்ணுவது வழக்கம். எங்கள் வீட்டிற்கு வந்த பிறகும், என் மனைவியை நோக்கி, இன்றைக்கு என்ன ‘கோதம்ப உப்புமாவா?’ - ‘கோதம்ப பூரியா?’ எனக் கிண்டலாகக் கேட்பது வழக்கம்.

இந்த நிலை இருக்க, யான் பல்கலைக் கழகத்தில் மர இனப் பெயர்களைத் தொகுத்துக் கொண்டிருந்த போது, கோதுமை என்பதன் வேறு பெயர்களை வேறு வேறு அகர முதலிகளில் கண்டு வியந்தேன். அவையாவன: ‘கோதும்பை’ என்னும் பெயரைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதியிலும், ‘கோதிமம்’ என்னும் பெயரைச் சாம்பசிவம் பிள்ளையின் தமிழ் - ஆங்கில அகராதியிலும், ‘கோதுமம்’ என்னும் பெயரை யாழ்ப்பாணத்து மானிப்பா யகராதி யிலும், கோதூமம் என்னும் பெயரைத் திருவானைக்காப் புராணத்திலும் கண்டு வியந்தேன். “நலத்தகு பொருள் கோதுமம்” என்பது, திருவானைக்காப் புராணம் - நான விதிப் படலம் - 25-ஆம் பாடலில் உள்ள பகுதியாகும். மற்றும், கோதுமைக்குக் கோதி என்னும் பெயரும் உண்டு என்பதைத் திவாகர நிகண்டிலும் சூடாமணி நிகண்டிலும் உள்ளதைக் கண்டேன். “கோதி கோதுமை” என்பது, திவாகர நிகண்டு - மரப் பெயர்த் தொகுதியின் 173-ஆம் பாடலாகும். அடுத்து, “தழுவு கோதுமையே கோதி” என்பது, சூடாமணி நிகண்டு- மரப்பெயர்த் தொகுதி.39ஆம் பாடல் பகுதியாகும். இத்தனையும் யான் கொண்டு சென்ற நூல்களிலிருந்து பெறப்பட்டவையாகும். இனிச் செய்திக்கு வருவோம்:

யான் கிண்டல் செய்த தென் தமிழ் நாட்டுப் பேச்சு வழக்குப் பெயராகிய ‘கோதம்ப’ என்பது மலையாளத்தில் ‘கோதம்ப’ என்னும் எழுத்து வழக்காகும். எனவே, எனது கிண்டலில் பொருள் இல்லை. மற்றும், கோதுமைக்குக் ‘கோதி’ என்னும் பெயரும் உள்ளதாகத் தமிழ் நிகண்டுகள் கூறுகின்றனவே - அந்த வழக்கு, கன்னடத்திலும் ‘கோதி’ என உள்ளது. அடுத்து, பேச்சுத் தமிழில் உள்ள கோதும’ என்னும் கொச்சை வழக்கு, தெலுங்கில் ‘கோதும’ என எழுத்துத் தெலுங்காக உள்ளது. இத்தகைய அமைப்பு, நான்கு மொழிகட்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்தும் சுவையான செய்தியன்றோ? இன்னும் இவ்வாறு பல்வேறு சொற்சுவைகளைக் காணலாம்.