உள்ளடக்கத்துக்குச் செல்

மனத்தின் தோற்றம்/மாணிக்கவாசகர் காலம்

விக்கிமூலம் இலிருந்து

5. மாணிக்கவாசகர் காலம்



இப்போது திருப்பாதிரிப்புலியூருக்கு வடக்கே ஒடும் கெடிலம் ஆறு, முன்பு திருப்பாதிரிப்புலியூருக்குத் தெற்கே கரையேற விட்ட குப்பம் என்னும் வண்டிப் பாளையத்தை யொட்டி ஒடிக் கொண்டிருந்தது. இதற்குச் செவி வழி வரலாற்றுச் சான்றுகளேயன்றி, எழுதி வைக்கப் பெற்றுள்ள இலக்கியச் சான்றுகளும் உள்ளன. தொல்காப்பியத் தேவர் இயற்றிய திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் என்னும் நூலில் இதற்குத் தக்க அகச்சான்று கிடைத்துள்ளது; வருமாறு:

“நித்தில முறுவற் பவழவாய்ப் பிறழுங்
கயல்விழி கிரைவளை யிடமாக்
கைத்தலத் திருந்த புள்ளிமான் மறியர்
கடிலமா நதியதன் வடபால்
செய்தலைக் குவளை மகளிர்கண் காட்டுங்
திருக்கடை ஞாழலி லிருந்த
பைத்தலைத் துத்திப் பணியணி யாரெம்
பரமர்தாள் பணிவது வரமே.” (45)
“முத்தினை முகந்துபவ ளக்கொடியை வாரி
மோதியிரு டண்ட்லை முறித்துமத குந்தித்
தத்திவரு சந்தன மெறிந்தகி லுருட்டித்
தாமரையு நீலமு மணிந்ததட மெல்லாம்
மெத்திவரு கின்றகெடி லத்துவட பாலே
மெல்லிய றவஞ்செய்கடை ஞாழலை விரும்பிப்
புத்தியுட னன்புசெய்து போதுசொரி வாரைப்
புணர்ந்துயிரி யாள்விரைசெய் போதிலுறை பூவே.” (100)

என்பன அந்நூற் பாடல்கள். இப்பாடல்களிலுள்ள 'கெடில மாநதியதன் வடபால்' 'கெடிலத்து வடபால்' என்னும் பகுதிகள், கெடிலத்தின் வடபுறத்தே திருக்கடை ஞாழல் என்னும் மாற்றுப் பெயருடைய திருப்பாதிரிப் புலியூர் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது கெடிலத்தின் தென்புறத்தேதான் திருப்பாதிரிப் புலியூர் இருக்கிறது. எனவே, கெடிலம் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே வண்டிப்பாளையத்தினருகில் ஒடிக் கொண்டிருந்தபோது திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்’ என்னும் நூல் தொல்காப்பியத் தேவரால் இயற்றப்பட்டது என்பது தெளிவு.

இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இயற்றிய திருப் பாதிரிப் புலியூர்ப் புராணம் என்னும் நூலிலும் இதற்குச் சான்று கிடைக்கிறது. திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் நகருக்குத் தெற்கே கெடிலம் ஒடியபோது எழுதப்பட்ட தென முன்பு கூறினோம். ஆனால், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணமோ, கெடிலம் திசை மாற்றம் பெற்று நகருக்கு வடக்கே ஒடத் தொடங்கியபின் எழுதப்பட்டதாகும். முன்பு நகருக்குத் தெற்கே ஒடிய கெடிலம், பின்பு நகருக்கு வடக்கே ஒடத் தொடங்கியதற்குக் காரணமும் அப்புராணம் கூறுகிறது. அது வருமாறு:-

“மாணிக்கவாசகர் தென் திசையிலிருந்து வடதிசை நோக்கி, வழியிலுள்ள திருப்பதிகள் தோறும் சென்று இறைவழிபாடு செய்துகொண்டு வந்தார். தில்லையில் (சிதம்பரத்தில்) கூத்தப் பெருமானை வணங்கியதும், திருப்பாதிரிப்புலியூர் இறைவனை வணங்குதற்காக வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். திருப்பாதிரிப்புலியூர் இன்னும் சிறிது தொலைவில் இருந்த நிலையில், இடையிலே யிருந்த கெடிலத்தில் வெள்ளம் சீறிப் பெருக்கெடுத்தோடிய தாம். என்செய்வார் மாணிக்கவாசகர் ஆற்றில் வெள்ளம் தணிவது எப்போது? வெள்ளத்தின் அளவும் விரைவும் மிகக் கடுமையாயிருந்ததால் தெப்பமும் விடப்பட வில்லை. ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்தால் அல்லவா திருப் பாதிரிப்புலியூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடமுடியும்? மூன்று நாள்கள் இரவு பகல் பட்டினியுடன் அங்கேயே கிடந்தாராம். அப்போது இறைவன் மாணிக்கவாசகர் மேல் இரக்கங்கொண்டு ஒரு சித்தராய்த் திருவுருவந் தாங்கி அவ்விடத்தில் தோன்றி உமக்கு என்ன வேண்டும்? என்று அவரைக் கேட்டாராம். நான் ஆற்றைக் கடந்து அப்பால் சென்று திருப்பாதிரிப்புலியூர்த் தேவனை வழிபடவேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்தருளுக’ என்று வேண்டிக் கொண்டாராம். உடனே சித்தர் ஆற்றை நோக்கி, 'ஏ கெடிலமே! நீ வளைந்து திசைமாறித் திருப்பாதிரிப் புலியூருக்கு அப்புறமாகச் சென்று மாணிக்கவாசகருக்கு வழி விடுக’ என்று கைப் பிரம்பைக் காட்டி ஏவினாராம். நகருக்குத் தெற்கே ஒடிய கெடிலம் சித்தர் கட்டளைப்படி திசைமாறி நகருக்கு வடக்கே ஒடி வழி விட்டதாம். பின்னர் மாணிக்கவாசகர் இடையூறின்றித் திருப்பாதிரிப்புலியூர் போந்து சிவனை வழிபட்டாராம்” இச்செய்தியினை, திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம்-பாடலேசர் சித்தராய் விளையாடிய சருக்கத்திலுள்ள-பின்வரும் பாடல்களால் அறியலாம்.

[குறிப்பு 1]“அருவமா யுருவமா யருவுரு வகன்ற
உருவமாகிய பரவெளி பெரும்பற்றப் புலியூர்த்
திருவ ருட்டிற மருவியாங் கிருந்துதீம் புனலூர்
மருவு முத்தர புலிசைமா நகர்தொழ வந்தார்” (32)
“தென்னகன் கரை யிருந்தனர் யாவருஞ் சிறந்த
மன்னு முத்தர தீரத்தின் வகைகுறித் தார்க்குத்
தன்னை யொப்பருங் கலங்களுந் தெப்பமுஞ் சாரா
வன்ன பேருடற் கும்பத்தி னனைத்தவு மணையா (35)
“உத்த ரத்திருப் புலிசைமா நகர்தொழ வுற்றேன்
தத்து வெண்புனல் சாகரத் தோடெதிர் தயங்கி
முத்தம் வாரியெற் றலைகளு மலையென முயங்கச்
சித்த சாமியில் ஆறுஇடை தடுத்ததென் செய்கேன்” (39)
“உயிரும் யாக்கையு மகிழ்விக்கும் வல்லப முடையீர்
தயிரின் வெண்ணெய்போல் மறைந்தருள் இறைவர்நீர் தாமே
செயிரறுத்தெனை அக்கரை ஏற்றுதிர் சேர்ந்தோர்
அயர்வ றுக்கும் அக் கரையேற விட்டவ ராவீர் (41)
கெடில மாதி பாடலேச் சுரனிகே தனத்தின்
வடதி சைக்கணே மன்னுவித் துமைக்கொடு போதும்
புடவி தன்னிடைத் தாள்துணை ஊன்றியே போந்து
கடவுள் ஆலயம் கண்ணுறீஇ வழிபடும் என்றார். (45)[1]
அட்ட சித்தியும் புரிகுவோ மாதலி னுமக்காம்
இட்டம் யாவையும் செய்குது மெனவுரைத் திரைத்த
மட்டு வார்புனல் வடதிசை மருவவேத் திரத்தால்
தொட்டு நீக்கினர் அவ்வழி யேகின துனைநீர் (47)[2]
அன்ன ராமிரு முனிவரர்க் கபயமீங் தப்பான்
மன்னு தீம்புனல் வடதிசை மருவிடப் புரிந்து
முன்ன மேதிப்பின் வரவருள் செய்தனர் முனியைப்
பன்னு சித்தர்பின் மாணிக்க வாசகர் படர்ந்தார். (49)

திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், ஆகிய நூல்களின் துணைகொண்டு கெடிலத்தின் திசை மாற்றத்தை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ளவில்லை யெனில், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் பொய்ச் செய்தி தெரிவிப்பதாக எண்ண வேண்டிவரும். இதைத் தெளியவைக்குமுகத்தான், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணமானது, கெடிலத்தின் இருவேறு திசைப்போக்குகளையும் சுட்டிக்காட்டி, போக்கு திசை மாறினதற்குக் காரணமாக மாணிக்க வாசகர் வரலாற்றைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

மாணிக்க வாசகருக்காகக் கெடிலம் திசை மாறிய வரலாறு, திருப்பாதிரிப்புலியூர்ப் புராணத்திற்கு ஒரு நூற்றாண்டிற்குப்பின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் - இயற்றப் பெற்ற கரையேற விட்ட நகர்ப் புராணம் என்னும் நூலிலும் சித்தர் திருவிளையாடற் படலம் என்னும் தலைப்பில் மிக விரிவாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.

புராண நம்பிக்கையுள்ளவர்கள், ‘மணிவாசகருக்காகத் தான் கெடிலம் திசை மாறியது; இது முற்றிலும் உண்மையான வரலாறேயாகும்’ என அடித்துப் பேசுவர். புராண நம்பிக்கையில்லாத சீர்திருத்தக் கொள்கையினர், கெடிலம் பெருவெள்ளத்தினால் இயற்கையாகத் திசை மாறியது; ஆனால், திருப்பாதிரிப்புலியூர்ப் -- புராண ஆசிரியர், மாணிக்கவாசகருக்காக மாறியதாகச் செயற்கை யாக ஒரு காரணம் கற்பித்து நிலைமையைச் சரிக்கட்ட முயன்றுள்ளார்; இதுபோலப் புனைந்துரைப்பது புராணங்களின் வாடிக்கை’ என்று கூறி இக்காரணத்தைத் தட்டிக் கழிப்பர். இவ்விரு திறத்தாரின் கொள்கை முரண்பாடு எவ்வாறிருப்பினும், இவண் நமக்கு விளங்கும் உண்மை யாவது: திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் எழுதிய தொல் காப்பியத்தேவரின் காலத்தில் நகருக்குத் தெற்கே ஓடிய கெடிலம், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் எழுதிய இலக்கணம் சிதம்பரநாத முனிவரின் காலத்தில் நகருக்கு வடக்கே ஒடியிருக்கிறது என்பதாம். அங்கனமெனில், கெடிலத்தின் வரலாறு கண்ட இத்திசை மாற்றம் நடந்த காலம் எது? - என ஆராய வேண்டும்.

திருநாவுக்கரசர் கரையேறியபோது கெடிலம் திருப் பாதிரிப் புலியூருக்குத் தெற்கே ஓடியது என்பது அனைவரும் நன்கு அறிந்த செய்தி. அதற்குப் பல சான்றுகளும் பலரால் காட்டப்பட்டுள்ளன. நாவுக்கரசரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது ஆராய்ச்சியாளர் பலர்க்கும் ஒப்ப முடிந்த கருத்து. எனவே, அதன் பிறகுதான் கெடிலத்தின் திசைமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அடுத்துத் தொல் காப்பியத் தேவரின் காலத்தை ஆராயவேண்டும்.

தொல்காப்பியத் தேவர் இரட்டையர்களால் புகழ்ந்து பாடப்பெற்றுள்ளார். இரட்டையர்கள், திருப்பாதிரிப் புவிழர் சென்றிருந்தபோது, அவ்வூர்ச் சிவன்மேல் ஒரு இலம்பகம் பாடித் தருமாறு அவ்வூரார் வேண்டினர். அதற்கு இரட்டையர்கள். - சிவன் மேல் கலம்பகம் வேண்டுமென்றால் தொல்காப்பியத் தேவர் பாட வேண்டும் நாம் பாடுவது இறைவனுக்கு ஏறுமோ? என்று கூறியுள்ளார்கள். இதனை,


                  தொல்காப் பியத்தேவர் சொன்னதமிழ்ப் பாடலன்றி
                  நல்காத் திருச்செவிக்கு நாமுரைப்ப தேறுமோ
                 மல்காப் புனறதும்ப மாநிலத்திற் கண்பிசைந்து

பல்காற் பொருமினர்க்குப் பாற்கடலொன் ற்ந்தார்க்கே” என்னும் இரட்டையர் பாடலால் அறியலாம். இதிலிருந்து இரட்டையர் காலத்திற்கு முற்பட்டவர் தொல்காப்பியத் தேவர் என்பது தெளிவு. அங்ங்னமெனில், இரட்டையர் காலம் எது?

இரட்டையர்கள் வரபதியாட்கொண்டான் என்னும் வள்ளலைப் பாடியுள்ளனர். வரபதியாட்கொண்டானின் வேண்டுதலால் வில்லிபுத்துரார் பாரதம் பாடினார். வில்லிபுத்துாரார் காலத்தில் அருணகிரிநாதரும் காளமேகப் புலவரும் வாழ்ந்ததாக வரலாறு. இவர்களின் காலம் பதினைந்தாம் நூற்றாண்டு. எனவே, இரட்டையர் காலம் 15 ஆம் நூற்றாண்டு என அறியலாம். ஆகவே, இரட்டையரால் புகழ்ந்து பாடப்பெற்ற தொல்காப்பியத் தேவர் 15 ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவர் என்பது புலனாகும்.

இரட்டையர் காலத்திலேயே தொல்காப்பியத் தேவரும் ஏன் இருந்திருக்கக் கூடாது? என்பதாக இங்கே ஒர் ஐயம் தோன்றலாம்.

இந்தக் காலத்தில் ஒருவர் ஒரு நூல் எழுதினால் அது உடனே அச்சிடப்படுகிறது. அச்சிடப்பட்ட ஒரு திங்களில் உலக முழுவதும் பரவவுஞ் செய்கிறது. அந்தக் காலத்தில் ஒருவர் நூல் எழுதுவது ஒலைச் சுவடியில்தான். அது பலராலும் பலபடிகள் எடுக்கப்பட்டுப் பல ஊர்களிலும் பரவுவதற்குப் பன்னெடுநாள் ஆகும். அதன் பிறகே அந்நூலின் சிறப்பு பலராலும் அறிந்து பாராட்டப்படும். இந்நிலையில், தொல்காப்பியத் தேவர் இயற்றிய திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், புகழ்பெற்ற பெரும் புலவர்களாகிய இரட்டையர்களாலேயே பாராட்டப் பெற்றிருக்கிறதென்றால், அக் கலம்பகம் அவர்கள் காலத்துக்கு முன்பே தோன்றித் தமிழ் நாட்டில் பரவிப் பாராட்டப் பெற்றிருக்க வேண்டும். எனவே, இரட்டையர் வாழ்ந்த 15 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவர் தொல்காப்பியத் தேவர் என்று கொள்ளவேண்டும். தேவர் காலத்தைப் பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் பல நூற்றாண்டுகள் முன்னால் தள்ளிக்கொண்டு போகவேண்டும்.

திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் இயற்றியவரும் சிவஞான முனிவரின் மாணக்கருமாகிய இலக்கணம் சிதம்பரநாத முனிவர் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் அப் புராணத்தில் கூறியுள்ளபடி, கெடிலத்தின் திசை மாற்றத்திற்குக் காரண மாக இருந்த மாணிக்கவாசகர் பழங் காலத்தவர். பழங் காலத்தவர் என்றால் இற்றைக்கு ஆயிரம் ஆண்டாவது முற்பட்டவர். ஒன்பதாம் நூற்றாண்டினராகக் கூறப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சுந்த்ரர், சைவ நாயன்மார்களின் பெயர்களைத் த்ொகுத்து எழுதியுள்ள திருத்தொண்டத் தொகை எ ன் னு ம் நூலில் மாணிக்கவாசகரின் பெயரைச் சேர்க்க வில்லையாதலின், சுந்தரர்க்குப் பிற்பட்டவர் மாணிக்கவாசகர் என்பது புலனாகும். ஆனால் சிலர், மாணிக்கவாசகர் சுந்தரர்க்கு மிகவும் முற்பட்டவர்; இவர் அறிவால் சிவனே யாயினார்; ஆதலின் மற்ற நாயன்மார்களினும் சிறப்பில் மிக்கவர்; அதனாலேயே, சுந்தரர் இவரை மற்ற நாயன்மார்களோடு இணைத்துத் தம் நூலில் பா.ாது விட்டார் என்று கூறுகின்றனர். இக் கூற்றுப் பொருந்தாது. மாணிக்க வாசகர் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களின் மொழி நடையைக் காணுங்கால், மானிக்கவாசகர் தேவார ஆசிரியர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் முற்பட்டவராயிருக்க முடியாது - பிற்பட்டவரே என்பது புலப்படாமற் போகாது. சில ஆண்டுகளாயினும் மாணிக்க வாசகர் சுந்தரர்க்குப் பிற்பட்டவராயிருந்ததனால்தான், சைவ நாயன்மார்களைப் பற்றிச் சுந்தரரால் பாடப்பெற்ற நூலில் மாணிக்கவாசகர் இடம் பெறவில்லை.

முதல் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரைக்கும், ஆராய்ச்சியாளர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மாணிக்கவாசகரின் காலத்தை அங்குமிங்குமாகத் தூக்கிப்போட்டுப் பந்தாடினாலும், சுந்தரர் நூலில் மாணிக்கவாசகர் இடம் பெறாததைக் கொண்டும், திருவாசகப் பத்துக்களின் தலைப்புகளைக் கொண்டும், மொழி நடையைக் கொண்டும், சுந்தரர்க்குப் பிற்பட்டவரே மாணிக்கவாசகர் எனத் துணிந்து முடிவு செய்யலாம். இதற்கு இயற்கையான இன்னொரு சான்றும் உள்ளது: 'சைவ சமய குரவர் நால்வர் அல்லது நால்வர்' என்னும் தொகைப் பெயர் வரிசையில், (1) திருஞானசம்பந்தர். (2) திருநாவுக்கரசர், (3) சுந்தரர், (4) மாணிக்கவாசகர் என மாணிக்கவாசகர் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளமை காண்க. இவர் மற்ற மூவரினும் காலத்தால் பிற்பட்டவரா யிருந்ததனால்தான் இறுதியில் வைத்து எண்ணப்பட் டுள்ளார். மற்றபடி, பெருமையினால் நால்வரும் ஒரு நிகரானவர்களே.

இந்நால்வருள் முதல் இருவராகிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒரே காலத்தினர் - அதாவது ஏழாம் நூற்றாண்டினர். இவ்விருவரையும் தம் நூலில் பாடியுள்ள சுந்தரர் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினராகத் துணியப்பட்டுள்ளார். எனவே, மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் எனக் கொள்ள வேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்றால், பல நூற்றாண்டுகள் பின் தள்ளியிருக்க முடியாது; ஒரிரு நூற்றாண்டுதான் பிற்பட்டிருக்க முடியும். பல நூற் றாண்டுகள் பிற்பட்டவராயிருந்திருந்தால், தமக்குள் அண்மை நூற்றாண்டினராகிய மூவருக்கும் பின்னால் நாலாமவராக மாணிக்கவாசகர் வைத்து எண்ணப்பட்டிருக்க மாட்டார்; பிற்காலத்துத் தோன்றிய சைவப் பெரியார்கள் சிலரைப் போல மாணிக்கவாசகர் தனித்துவிட, அந்த மூவரும் மூவராகவே நின்றுவிட்டிருப்பர். அங்ஙனமின்றி இந்நால்வரும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் மிகப் பெரிய சைவத் தலைவர்களாக விளங்கினமையால்தான் “நால்வர்” என இணைத்துச் சிறப்பிக்கப் பெற்றனர். இஃது இயற்கையின் தீர்ப்பு! ஆம், மக்களின் தீர்ப்பு எனவே, பத்தாவது நூற்றாண்டினர் மாணிக்கவாசகர் என்று கொள்ளலாம்.

இந்தக் கருத்துக்கு எதிராக அப்பர் தேவாரத்திலிருந்து ஒர் அகச்சான்று காட்டப்படுகிறது. அப்பர் தமது திருவாரூர்த் தேவாரப் பதிகத்தில்,

“நரியைக் குதிரைசெய் வானும்
நரகரைத் தேவுசெய் வானும்
விரதம்கொண் டாடவல் லானும்
விச்சின்றி நாறுசெய் வானும்...”

என்று இறைவனின் திருவிளையாடல்களைக் கூறியுள்ளார். இதிலுள்ள நரியைக் குதிரை செய்வானும் என்னும் பகுதியைக்கொண்டு, நரி பரியாக்கிய கதைக்கு உரிய மாணிக்க வாசகர் அப்பருக்கு முற்பட்டவராவார் என்று சிலரால் கூறப்படுகிறது. ஆனால், இறைவன் மாணிக்கவாசகருக்காக நரியைப் பரியாக்கிய கதை இங்கே அப்பரால் குறிப்பிடப்பட வில்லை. இறைவன் எதையும் செய்யவல்ல சித்தர் என்ற கருத்திலேயே அப்பர் இதனைக் கூறியுள்ளார். அஃதாவது, இறைவன், நரியைக் குதிரையாக்க வல்லவன் - நரகரைத் தேவராக்க வல்லவன் - தாமாகவே விரதம் எடுத்துக் கொண்டு ஆடவல்லவன் - விதை போடாமலேயே செடி கொடிகளை முளைக்கச் செய்பவன் - என்பதாக இறைவனின் சிறப்புமிக்க சித்து விளையாடல்கள் கூறப்பட்டிருப்பதை இங்கே காணலாம். எனவே, இந்தத் தேவாரப் பகுதிக்கும் மாணிக்கவாசகர் பற்றிய கதைக்கும் இங்கே தொடர்டே யில்லை. தமிழறிஞர் எம். சீநிவாச ஐயங்கார் தமிழாராய்ச்சி' என்னும் தமது நூலில், நரியரியாக்கிய கதை தமிழகத்தில் பண்டு தொட்டு வழங்கி வருவது; அதற்கும் பாணிக்க வாசகருக்கும் தொடர்பில்லை - என்பதாகக் கூறியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. எனவே, மணிவாசகர், தேவார ஆசிரியர் மூவருக்கும் பிற்பட்டவர் - பத்தாம் நூற்றாண்டினர் என்பது போதரும்.

இதற்கு இன்னும் கூரான சான்று ஒன்று கொடுக்க முடியும். நம்பியாண்டார் நம்பி என்னும் சைவப்பெரியார், தமது கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்னும் நூலில், திருவாதவூரர் என்னும் இயற்பெயருடைய மாணிக்க வாசகரையும் அவர் அருளிய திருச்சிற்றம்பலக் கோவையை யும் பற்றி,

“வருவா சகத்தினில் முற்றுணர்க்
தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத ஆர்ச்சிவ பாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்
டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி
பாடிச் சிரிப்பிப்பரே” (58)

என்னும் பாடலில் சிறப்பித்துக் கூறியுள்ளார். நம்பி யாண்டார் நம்பியின் காலம் பதினோராம் நூற்றாண்டு என்பது, அனைவரும் எளிதில் ஒப்புக்கொண்டுள்ள உண்மை. எனவே, அவருக்கும் முற்பட்டவர் மாணிக்கவாசகர் என்பது தெளிவு. ஆகவே, மாணிக்கவாசகரின் கால்ம் பத்தாம் நூற்றாண்டு என்பதும் தெளிவு.

மற்றொரு வகையிலும் மாணிக்கவாசகரின் காலத்தைக் குறுக்கி நெருக்கிக்கொண்டு வரலாம். பதினோராம் நூற்றாண்டினரான நம்பியாண்டார் நம்பி பட்டினத்தாரின் பாடல்களைத் தொகுத்துள்ளார். பட்டினத்தாரோ, மாணிக்கவாசகரைப் பாராட்டிப் பாடியுள்ளார். எனவே, நம்பியாண்டார் நம்பிக்கும் முற்பட்ட பட்டினத்தார்க்கும் முற்பட்டவர் மாணிக்கவாசகர் என்பது புலனாகும். ஆகவே, நம்பியாண்டார் நம்பி பதினோராம் நூற்றாண்டின ரென்றால், பட்டினத்தாரின் காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றும், மாணிக்கவாசகரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும் கொள்ளலாம். பத்து பதினோராம் நூற்றாண்டுகளாகிய இருநூறு ஆண்டு காலத்தில் மூன்று தலைமுறையினர் (மாணிக்கவாசகர், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி) இருந்திருப்பதில் வியப்பேதுமில்லை; அது நடக்கக் கூடியதே.

இஃது இங்கனம் இருக்க - புராணம் போன்ற மத நூல்களில் நம்பிக்கையுள்ள பெரியோர் சிலர் கூட - ஏன், [3]தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் அவர்களுங்கூட, கெடிலத்தின் திசைமாற்றத்திற்குக் காரணமாக மாணிக்க வாசகர் பற்றித் திருப்பாதிரிப்புலியூர்ப் புராணத்தில் கூறப்பட்டுள்ள செய்தியினைப் பொய்யான கற்பனையென மறுத்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறுங்காரணமாவது: 'நகரின் தெற்கே கெடிலம் ஒடுவதாகக் கலம்பக நூலில் எழுதியுள்ள தொல்காப்பியத் தேவருக்கும் முற்பட்டவர் மாணிக்கவாசகர்; எனவே, மாணிக்கவாசகர் காலத்தில் கெடிலம் திசைமாறி நகருக்கு வடக்கே ஒடியிருக்க முடியாது’ - என்பதாம்.

இவ்வாறு சிலர் புராணச் செய்தியை மறுப்பதற்குக் காரணங்கள் இரண்டு: மாணிக்கவாசருக்காக இப்படி நடந்திருக்க முடியாது என்று எண்ணுவது ஒன்று; மாணிக்கவாசகர் காலத்தை மிக முற்பட்டதாகவும் தொல் காப்பியத்தேவர் காலத்தை மிகப் பிற்பட்டதாகவும் கணிப்பது மற்றொன்று. இவ்விரண்டிற்கும் உரிய மறுப்புப் பதில்களாவன:

(1) மாணிக்கவாசகருக்காக ஆறு திரும்பியது என்பதை நம்பாவிட்டால் போகிறது. இயற்கையாகவே ஆறு மாறிய தாக ஏற்றுக்கொள்வோம். ஆனால், அவர் காலத்தில் இயற்கையாக ஆறு திசைமாறியிருக்கலாம் என்பதையாவது நம்பலாமே! புராணங்கள் புளுகு மூட்டை என்பதாகச் சொல்லினும், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் இயற்றிய சிதம்பரநாத முனிவர், எத்தனையோ பெரியார்கள் இருக்க அவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டுக் கெடிலத்தின் திசை மாற்றத்தோடு மாணிக்கவாசகர் பெயரை முடிச்சுப் போட்டிருப்பதில் ஏதேனும் பொருத்தம் இருக்கத்தான் வேண்டும் - மாணிக்கவாசகர் காலத்தில் ஆறு திசைமாறிய தாகச் செவிவழிச் செய்தி (கர்ண பரம்பரைச் செய்தி) யொன்று சிதம்பரநாத முனிவர்க்குக் கிடைத்திருக்கலாம்; திருப்பாதிரிப்புலியூர்ப் பகுதி மக்கள் அவ்வாறு அவரிடம் தெரிவித்திருக்கலாம். அந்தச் செய்தியை அடிப்படையாக வைத்துக் கொண்டு, மாணிக்கவாசகர் சித்தரை வேண்டிக் கொள்ள, சித்தர் திசை மாற்றினார் என்பதாக ஆசிரியர் புராணத்தில் புனைந்துரைத்திருக்கலாம். பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியல்ல - ஐரோப்பியரால் ஆளப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் - தேவலோகத்தையோ நரக லோகத்தையோ அதள சுதள பாதாள லோகத்தையோ பற்றியல்ல ஐரோப்பியர் ஆளத் தொடங்கிய திருப்பாதிரிப் புலியூரைப் பற்றிப் புராணம் பாடிய சிதம்பரநாத முனிவர், ஒரு பற்றுக்கோடும் இல்லாமல் வீணே வெறும் பொய் புளுகியிருக்க முடியாதல்லவா? ஒன்றாவது இருந்தால் தானே ஒன்பதாகச் சொல்ல முடியும்?

மாணிக்கவாசகருக்காகச் சித்தர் கட்டளையிட அதனால் கெடிலம் திசைமாறாவிட்டாலும், உண்மையில் என்ன நடந் திருக்கலாம்? மாணிக்கவாசகர் தில்லையிலிருந்து வடக்கு நோக்கி வந்து திருப்பாதிரிப்புலியூரை நெருங்கினபோது, வழியிலே கெடிலத்தில் வெள்ளம் ஒடியிருக்கலாம். அதனால் அவர் வெள்ளத்தின் வடிவை எதிர்பார்த்து அக் கரையி லேயே கடவுளை வேண்டிக் காத்திருக்கலாம். இந்த நேரத்தில், அவ்விடத்திற்கு மேற்கே திருவயிந்திரபுரத்தில் ஆற்று வெள்ளம் பிய்த்துக் கொண்டு திசைமாறி ஓடி யிருக்கலாம். வந்துகொண்டிருந்த வெள்ளத்தின் பெரும் பகுதி மேற்கே திசைமாறி எதிர்ப்பக்கம் திரும்பியதால் மணிவாசகர் காத்துக் கொண்டிருந்த இடத்தில் தண்ணீர் குறைந்திருக்கலாம். இது மாதிரி இந்தக் காலத்திலும் நடப்பதுண்டு. சிலர், ஆற்று வெள்ளம் தங்கள் ஊரை அழிக்காமல் இருப்பதற்காக எதிர்க்கரையில் சென்று அக் கரையை வெட்டிவிட்டு வெள்ளத்தை அக் கரைப் பக்கம் திருட்டுத்தனமாகத் திருப்பி விடுவதும் இக் காலத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. தண்ணீர் குறைந்து வழக்கமாகக் கடக்கக் கூடிய அளவுக்கு வரவே, மாணிக்க வாசகர் எளிதாக ஆற்றைக் கடந்து அக்கரை யடைந் திருக்கலாம். வேறு பக்கம் திசை மாறிய கெடிலம் அந்தப் புதுப்பாதையிலேயே தொடர்ந்து சென்றிருக்கலாம். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பல நூற்றாண்டுகளாகச் செவி வழியாக மக்களிடையே அறியப்பட்டு வந்திருக்கலாம். இதைக் கேள்விபட்ட சிதம்பரநாத முனிவர் புராணத்தில் பொருந்தப் புளுகிவிட்டிருக்கலாம். எனவே மாணிக்க வாசகருக்காகத்தான் கெடிலம் திசை மாறியது என்பதை நம்பாவிட்டாலும், அவர் காலத்தில் திசை மாறியிருக்கலாம் என்பதையாவது நம்பி வைக்கலாமே!

(2) அடுத்து, மாணிக்கவாசகரை முற்பட்டவராகவும், தொல்காப்பியத் தேவரைப் பிற்பட்டவராகவும் கொள்ளுத லும் பொருந்தாது. பத்தாம் நூற்றாண்டினராகிய மாணிக்க வாசகருக்குச் சில ஆண்டுகளாயினும் தொல்காப்பியத் தேவர் முற்பட்டவராகவே இருந்திருப்பார். ஏன், இரு வரையும் ஒரு காலத்தில் வாழ்ந்தவராகக் கூடக் கூறலாமே! தொல்காப்பியத் தேவர் வயதில் மூத்தவராயிருந்து முன்னால் காலமாகி யிருக்கலாம்; மாணிக்கவாசகர் வயதில் இளையவராயிருந்து பின்னால் காலமாகி யிருக்கலாம். திருப்பாதிரிப்புலியூர்க்குத் தெற்கே கெடிலம் ஓடியதாக எழுதிய தொல்காப்பியத் தேவர் காலமான சில ஆண்டுகளில் கெடிலம் திசை மாறியிருக்கலாமே! எனவே, தொல் காப்பியத் தேவர் நூற்றாண்டுக் கணக்கில் மாணிக்க வாசகர்க்கு முட்பட்டவர் என்று கூறமுடியாவிடினும், சில ஆண்டுகளாயினும் முற்பட்டவர் என்று கூறலாமே!

சிலர், வேறொரு காரணங் காட்டியும் தொல்காப்பியத் தேவரின் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயலலாம். அஃதாவது, கலம்பகம், தூது, உலா முதலிய 96 வகைச் சிற்றிலக்கியங்கள் பிற்காலத்தில் தோன்றியவை; எனவே, திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் இயற்றிய தொல்காப்பியத் தேவர் மணிவாசகருக்குப் பிற்பட்டவரே என்று கூறக் கூடும்.

கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்கள் சங்க இலக்கியங் கட்குப் பிற்பட்டனவேயெனினும், ஏழாம் நூற்றாண்டி லிருந்தே இத்தகு சிற்றிலக்கியங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. கலம்பக நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே தோன்றத் தொடங்கிவிட்டன என்பதும், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், நந்திக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் முதலிய கலம்பகங்கள் கலம்பக நூல்களுக்குள் மிகவும் பழமையானவை என்பதும் தமிழிலக்கிய ஆராய்ச்சி வல்லுநர்கள் நன்கறிந்த செய்தி களாம். ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் நம்பி யாண்டார் நம்பி இயற்றியது. அவர் பதினோராம் நூற்றாண்டினர். எனவே, திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் இயற்றிய தொல்காப்பியத் தேவரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாய் இருக்கலாம். இவ்வகையில் பார்க்குங்கால், மாணிக்கவாசகருக்குச் சிலவாண்டுகளாயினும் முற்பட்டவர் தொல்காப்பியத் தேவர் என்று கூறமுடியுமே.

மேலும், தேவர் என்னும் பட்டப் பெயரைப் பார்க்கும் போது, இவர் சமணராயிருந்து பிறகு சைவத்திற்கு மாறினதாகத் தெரிகிறது. தேவர் என்பது சமணமுனிவரைக் குறிக்கும் பெயராகும். சீவக சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்க தேவர், சூளாமணி யாசிரியராகிய தோலா மொழித் தேவர் ஆகிய சமணப் பெரியோர்களின் பெயர் களை ஈண்டு ஒப்பு நோக்குக. திருத்தக்க தேவரும் தோலா மொழித் தேவரும் எட்டு அல்லது ஒன்பதாம் நூற் றாண்டினராக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றனர். அவர்கள் காலத்தையொட்டியவராகத் தொல்காப்பியத் தேவரையும் கொள்ளலாம். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை - அதாவது அப்பரடிகள் காலத்திலிருந்து மணிவாசகர் காலம் வரை, சைவ சமணப் புத்த மதப் போராட்டங்கள் கடுமையாக நடந்ததும், சமண. புத்த மதங்களைப் பின்பற்றியிருந்தவர்கள் சைவத்திற்கு மாறினதும் அறிந்த செய்திகளே. எனவே, தொல்காப்பியத் தேவர் என்னும் பெயர் அமைப்பையும், அவர் சமணத்தி லிருந்து சைவத்திற்கு மாறினதையும் எண்ணிப் பார்க்குங்கால், தொல்காப்பியத் தேவரின் காலம், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாய் இருக்கலாம் எனச் சூழ்நிலையையொட்டித் தெரிய வருகிலது.

ஈண்டு மீண்டும் ஒன்றை நினைவுகூர வேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டையர்கள், ‘தொல்காப்பியத் தேவர் திருப்பாதிரிப்புலியூர் இறைவன் மேல் கலம்பகம் பாடியபின் நாங்கள் பாடுவது எடுபடாது’ என்று கூறியிருப்பதைக்கொண்டு, தேவர் இரட்டையர்க்குச் சிறிது காலந்தான் முற்பட்டவர் என்று கொள்ளக்கூடாது. [4]‘கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்’ என்ற புகழ் மொழிப்படி, கலம்பகம் பாடுவதில் இரட்டையர்கள் வல்ல வர்கள். தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம் முதலிய சிறந்த நூல்களை அவர்கள் இயற்றியுள்ளார்கள். எனவே, கலம்பக வல்லுநர்களாகிய அவர்கள் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்தபோது, தங்கள் ஊர்க்கும் ஒரு கலம்பகம் பாடும்படி அவ்வூரார் கேட்டனர். ஆனால், தொல்காப்பியத் தேவரின் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகமோ முன்னமேயே மிகவும் பெயர் பெற்று விளங்கியது. இந்நிலையில், திருப்பாதிரிப்புலியூர் இறைவன் மேல் தாங்களும் ஒரு கலம்பகம் பாடத் தேவையில்லை என இரட்டையர்கள் உணர்ந்து, தேவரின் கலம்பகமே போதும் எனக் கூறிவிட்டனர். எனவே, கலம்பகச் சேம்பியன்கள்’ (Champians) ஆன இரட்டையர்களாலேயே பாராட்டப் பெற்ற திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் இரட்டையர்கட்கு முன்பே பல நூற்றாண்டுகளாக மக்களால் பாராட்டப் பெற்று வந்திருக்க வேண்டும் என உணரலாம். ஆகவே, தொல்காப்பியத்தேவர், முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகரினும் முற்பட்ட வராய், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தார் எனத் துணியலாம்.

மேலே இதுவரையும் செய்த ஆராய்ச்சியில், தொல் காப்பியத் தேவரும் மாணிக்கவாசகரும் பத்தாம் நூற்றாண்டளவில் முறையே அடுத்தடுத்து வாழ்ந்தவராய் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியை அனைவரும் ஏற்றுக்கொள்வது அரிது. காலவாராய்ச்சி மிகவும் கடுமை யானது அதற்குத் திட்டவட்டமாய் அறுதியிட்டு உறுதி கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது. அந்தந்தக்காலச் சூழ்நிலையைக் கொண்டு இப்படியிருந்திருக்கலாம் எனக் குறிப்பாகவே கூறமுடியும்.

இந்த அடிப்படையில் நோக்குங்கால், தொல்காப்பியத் தேவரின் காலத்தையடுத்து மாணிக்கவாசகர் காலத்தில் கெடிலம் திசை மாறியிருக்கலாம் என்பதும், அந்தக் காலம் பத்தாம் நூற்றாண்டு என்பதும் புலப்படும். எனவே, மாணிக்கவாசகர் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு எனலாம்.


  1. 32. பெரும் பற்றப் புலியூர்-சிதம்பரம், உத்தர புலிசை திருப்பாதிரிப்புலியூர். 35. உத்தர தீரம் . வடகரை. 39. சாகரம் - கடல்.
  1. பாடலேச்சுரன் நிகேதனம் - பாடலேச்சுரர் கோயில்
  2. வேத்திரம் - பிரம்பு
  3. திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் - பதிப்புரை.
  4. தனிப்பாடல்.