மனுமுறைகண்ட வாசகம்

விக்கிமூலம் இலிருந்து

மனுமுறைகண்ட வாசகம்[தொகு]

காப்பு

அன்னவயல்சூழ் அணியாரூர் வாழ்மனுவாம்
மன்னன் முறைகண்ட வாசகத்தைப்- பன்னுதற்கு
நேய மிகத்தான் நினைப்போர்க்கு அருள்புழைக்கைத்
தூய முகத்தான் துணை.


கங்கைச் சடையான்முக் கண்ணுடையான் அன்பர்தம்முன்
அங்கைக் கனிபோல் அமர்ந்திருந்தான்- அங்கை
முகத்தான் கணங்கட்கு முன்னின்றான் மூவாச்
சுகத்தான் பதமே துணை.


திருவாரூர் நகரம்
கடல்சூழ்ந்த உலகத்திலுள்ள எல்லாத் தேசங்களிலுஞ் சிறப்புடையதாய், காவேரி யென்னுந் தெய்வத்தன்மையுள்ள நதியினால், எந்தக் காலத்திலுங் குறைவுபடாத நீர்வளப்பமுள்ளதாய், வாழைச்சோலை, பலாச்சோலை, மாஞ்சோலை, தென்னஞ்சோலை, கமுகஞ்சோலை, கருபபஞ்சோலை முதலாகிய பலனுள்ள சோலைகள் அணியணியாக ஒன்றையொன்று சூழ்ந்தோங்கப் பெற்றதாய், அசோகு, குருக்கத்தி, சண்பகம், பாதிரி முதலான விருட்சங்களால் நெருங்கப்பெற்று, வண்டுகள் பாடுகின்ற மலர்ச்சோலைகளும், தாமரைத் தடாங்களும், அல்லி நீலம் முதலான புட்பங்கள் மலர்கின்ற நீர்நிறைந்த ஓடைகளும், பொய்கைகளும், ஏரிகளும், குளங்களும் பலவிடங்களிலும் உள்ளதாய், செந்நெல் முதலாகிய பயிர்கள் மாறாது முப்போகமும் விளைகின்ற குறைவற்ற விளைவையுடைய வயல்கள் நெருங்கியுள்ளதாய், சிதம்பரம், பஞ்சநதம், மத்தியார்ச்சுனம், சம்புகேச்சுரம் முதலான திவ்வியச் சேத்திரங்கள் இடையிடையில் உள்ளதாய், இல்லற தருமத்தில் எள்ளளவும் பிழைபடாது செல்வத்திலும் கல்வியிலும் நிறைவுள்ள குடிகளுக்கிடமானதாய், பல வளப்பங்களுங் கொண்டு பூமிதேவிக்கு முகம்போல விளங்குகின்ற சோழதேசத்திலே, பாதாளலோகத்தைப் பார்த்திருக்கின்ற ஆழமு்ள்ள அகழியினாற் சூழப்பட்டு, இந்திரலோகத்தை யெட்டிப் பார்க்கின்ற உன்னதமுள்ள கோபுரங்களையுடைய மதிலும், உய்யானம், நந்தவனம், பூஞ்சோலை முதலானவைகளும், தெய்வதீர்த்தம், பிரமதீர்த்தம், வசந்தவோடை, செங்குவளையோடை முதலான நீர்நிலைகளுமுள்ளதாய், தேர்நிலைகள், யானைக்கூடங்கள், குதிரைப் பந்திகள், சேனையிடங்கள், ஆஸ்தானமண்டபம், அரசமண்டபம், விசித்திரமண்டபம், விநோதமண்டபம், நியாயமண்டபம், நிருத்தமண்டபம், கல்விமண்டபம், கணக்கறிமண்டபம், பாடல்மண்டபம், பரிசனமண்டபம், சித்திரமண்டபம், தேவாசிரியமண்டபம், சித்திரத்தெற்றி, சிலம்பக்கூடம், ஆயுதசாலை, அமுதசாலை, அறச்சாலைகளும் உள்ளதாய், ரத்நபீடிகைகளும், கனகமாளிகைகளும், பளிங்குமாடங்களும், மணிப்பந்தல்களும், மகர தோரணங்களும், மங்கல கோஷங்களுமுள்ள கடைவீதி, கணிகையர்வீதி, சூத்திரர்வீதி, வைசியர்வீதி, அரசர்வீதி, அந்தணர்வீதி, ஆதிசைவர்வீதி, சைவர்வீதி, வைதிகர்வீதி, தபோதனரிருக்கை, சைவமுனிவர்மடம், உட்சமயத்தார் உறையுள் முதலான வளப்பங்களையுடையதாய், தியாகராஜப் பெருமான் எழுந்தருளிய கமலாலயம்என்னும் திருக்கோயிலை உள்ளேயுடையதாய், சோழராஜர்கள் பரம்பரையாக அரசாட்சி செய்வதற்கு உரிய ராஜதானியாய் நிலமகள் திருமுகத்திலிட்ட திலகம்போல் விளங்கிய திருவாரூர்என்கிற நகரம் ஒன்று்ண்டு.
மனுச்சோழர்
அதிலே மூன்று சுடர்களிலும் முதற்சுடராகி மேன்மையடைந்த சூரியகுலத்திற் பிறந்து அரசாட்சி செய்துவந்த சோழராஜர்களில் சிறந்தவராய், அறுபத்துநான்கு கலைகளிலும் வல்லவராய், உயிருக்குறுதியைத் தருகின்ற நல்ல கேள்விகளையுடையவராய், எல்லாவுயிர்களுக்கும் இதஞ்செய்கின்றவராய், வேதமோதுதலும், யாகஞ்செய்தலும், இரப்பவர்க்கீதலும், பிரஜைகளைக் காத்தலும், ஆயுதவித்தையில் பழகுதலும், பகைவரையழித்தலும் என்னும் ஆறு தொழில்களும், வீரமுள்ள சேனைகளும், செல்வமுள்ள குடிகளும், மாறாத பொருள்களும், மதிநுட்பமுள்ள மந்திரியும், பகைவரால் அழிக்கப்படாத கோட்டையுமுடையவராய், வழக்கையறிவிப்பவரையும், தங்களுக்குள்ள குறைகளைச் சொல்லிக் கொள்பவரையும் இலேசிலே தமது சமூகத்துக்கு அழைப்பித்து அந்த வழக்கைத் தீர்த்தும் அக்குறைகளை முடித்துங் கொடுப்பவராய், பாலொடு பழஞ்சேர்ந்தாற்போல முகமலர்ச்சியோடு இனிய வசனம் சொல்பவராய், பின்வருவதை முன்னே அறிந்து கொள்வதும், உறவினர் அயலார் சினேகர் பகைவர் இழிந்தோர் உயர்ந்தோர் முதலான யாவரிடத்தும் காலவேற்றுமையாலும், குணவேற்றுமையாலும் உண்டாகின்ற நன்மைதீமைகளை உள்ளபடி அறிந்துகொள்வதுமாகிய விவேகமுள்ளவராய், அகங்காரம் காமம் கோபம் லோபம் மோகம் பொறாமை வஞ்சகம் டம்பம் வீண்செய்கை முதலான குற்றங்களைத் தினையளவுங் கனவிலும் புரியாதவராய், துர்க்குணங்களையுடைய சிறியோர் சேர்க்கையை மறந்தாயினும் நினையாமல், செய்வதற்கு அரிதான செய்கைகளைச் செய்துமுடிக்கவுள்ள நற்குணங்களையுடைய பெரியோர்களைச் சகாயமாகக் கொண்டு செய்யத்தக்க காரியங்களைத் தெரிந்துசெய்தும், செய்யத்தகாத காரியங்களைச் தெரிந்துவிடுத்தும், பகைவலியும் தன்வலியும் துணைவலியும் காலநிலைமையும் இடநிலைமையும் அறிந்து காரியங்களை நடத்தியும், அடுத்தவர்களது குணம் வல்லமை ஊக்கம் முதலான தன்மைகளை ஆராய்ந்து தெளி்ந்து அவரவர் தங்களுக்குத் தக்க உத்தியோகங்களை அவரவர்க்குக் கொடுத்தும், பழமைபாராட்டியும், சுற்றந் தழுவியும், கண்ணோட்டம் வைத்தும், சாதியியற்கை ஆசிரமவியற்கை சமயவியற்கை தேசவியற்கை காலவியற்கை முதலான உலகியற்கைகளை அறிந்து அவ்வவற்றிற்குத் தக்கபடி ஆராய்ந்து செய்தும் நல்லொழுக்கத்துடன் நடப்பவராய், குடிகளுக்கு அணுவளவும் துன்பம் நேரிடினும் அதை மலையளவாக எ்ண்ணித் தமக்கு வந்ததுபோல் இரக்கங் கொண்டு மனமுருகுவதனால் தாயைஒத்தவராய், அத்துன்பத்தை விட்டு இன்பத்தை அடையத்தக்க நல்லவழியே அறியும்படி செய்விப்பதனால் தந்தையைஒத்தவராய், அவர்களுக்கு அந்த நல்வழியைப் போதித்து அதிலே நடத்துகின்றபடியால் குருவைஒத்தவராய், அந்தக்குடிகளுக்கு இகபர சுகத்தைக் கொடுப்பதற்கு முன்னின்று அதுபற்றி முயற்சிசெய்யும்போது வரும் இடையூறுகளை நீக்குகின்றபடியாலும் அந்த ஒழுக்கவழியிலிருந்து தவறினால், அந்தக் குற்றத்திற்குத் தக்க தண்டனை விதித்து அவ்வழியில் பின்னும் நடத்துகின்றபடியாலும் தெய்வத்தைஒத்தவராய், குடிகளுக்கு ஆபத்துநேரிடும்போது கட்டியவஸ்திரம் அவிழ்ந்தவன் கைபோல் உடனே அந்த ஆபத்திலிருந்து நீங்கும்படி கைகொடுப்பதினால், சினேகனை ஒத்தவராய், நல்லகாரியமிது கெட்டகாரியமிது என்று காட்டுகின்றபடியால் கண்போன்றவராய், குடிகளுக்கு அச்சம் அவலமுதலானவை நேரிடாமல் காத்துவருதலால் உயிர்போன்றவராய், குடிகள் நினைக்குந்தோறும் "இப்படிப்பட்ட நற்குண நற்செய்கைகளையுடைய புண்ணியமூர்த்தியை அரசனாகப் பெற்ற நமக்குக் குறையொன்றுமில்லை" என்று களிக்கின்றபடியால் பொன்புதையலைஒத்தவராய், கைம்மாறு வேண்டாது கொடுத்தலால் மேகத்தைஒத்தவராய், அறிவே ஆயிரம் கண்களாகவும், கைகளே கற்பகமரமாகவும், கண்களே காமதேனுவாகவு்ம, திருமுகமே சிந்தாமணியாகவும், மனோதிடமே வச்சிராயுதமாகவும் கொண்டபடியால் இந்திரனையொத்தவராய், சிங்காதனமே செந்தாமரையாகவும், அறம் பொருள் இன்பம் வீடென்னும் நான்கு புருஷார்த்தங்களும் அடைதற்குரிய நான்கு மார்க்கங்களே நான்குமுகங்களாகவும் கொண்டு, அந்தந்த மார்க்கங்களில் அந்தந்தப் பொருள்களை விருத்தி பண்ணுகிறபடியால் பிரமனையொத்தவராய், ஆக்கினா சக்கரமே சக்ராயுதமாகவும், செங்கோலே திருமகளாகவும், சிறந்த பெரும்புகழே திருப்பாற்கடலாகவும், யுக்தமல்லாத காரியங்களை ஒழிந்திருப்பதே யோகநித்திரையாகவுங் கொண்டு, மண்ணுலகிலுள்ள உயிர்களைக் காத்து வானுலகிலுள்ள தேவர்களுக்கு யாகங்களால் அமுதுகொடுத்து வருகின்றபடியால் திருமாலையொத்தவராய், சோர்வில்லாமை தூய்மை வாய்மை என்னும் மூன்றுமே மூன்றுகண்களாகவும், துணிவுடைமையைச் சூலமாகவுங் கொண்டு பாவங்களையெல்லாம் நிக்கிரகஞ்செய்து வருகின்றபடியால் உருத்திரமூர்த்தியையொத்தவராய், வாட்டத்தை நீக்கி மகிழ்ச்சி செய்கின்ற அருளுள்ளபடியால் அமிர்தத்தையெத்தவராய், சிவபக்தியில் மிகுந்தவராய், பொறுமையில் பூமியை யொத்தவராய், தருமமே உருவாகக் கொண்டு நடுநிலையிலிருந்து மனுநீதி தவறாது விளங்கிய மனுச்சோழர் என்னும் பெயரையுடைய சக்கரவர்த்தியானவர், கலிங்கர், குலிங்கர், வங்கர், கொங்கர், அச்சியர், கொச்சியர், தெங்கணர், கொங்கணர், தெலுங்கர் முதலான தேசத்தரசர்கள் எல்லாம் திறைகட்டி வணங்க உலகமுழுவதையும் ஒரு குடைநிழலில் வைத்துச் செங்கோல் செலுத்தி அரசாட்சி செய்யுங்காலத்தில்,

ஆட்சிச் சிறப்பு[தொகு]

உலகமெங்கும் புலியும் பசுவும் கூடிப்போய் ஒருதுறையில் நீர்குடித்துலாவியும், சிங்கமும் யானையும் சேர்ந்து திரிந்தும், பருந்துங்கிளியும் பழகி மகிழ்ந்தும், கூகையும் காகமுங் கூடிப்பறந்தும், பூனையும் எலியும் பொருந்தியிருந்தும், இந்தப்படி மற்றுமு்ளள விரோதமாகிய உயிர்களும் ஒன்றுக்கொன்று விரோதமில்லாமல் சிநேகஞ்செய்து வாழ்ந்திருக்கவும்; மரங்கள் புல்லுகள் முதலான நடையில்லாத உயிர்களும், வாடுதல் உலர்தல் உதிர்தல் வெட்டுண்ணல் முதலான குறைகள் இல்லாமல் வளர்ந்தோங்கி வாழ்ந்திருக்கவும்; பெருங்காற்று, பெருவெள்ளம், பெருமழை, தீப்பற்றல், இடிவிழுதல் முதலான உற்பாதங்கள் சிறிதுமில்லாமல் சுகுணமான காற்றும், மிதமான வெள்ளமும் பருவமழையும் தவறாமல் உண்டாயிருக்கவும், பசிநோய் உடம்புநோய் அவமிருத்து உயிரச்சம் முதலான துக்கங்கள் ஒ்னறும் சேராமல் சுகமே சூழ்ந்திருக்கவும், பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர் என்கின்ற ஜாதியாரும், பிரமசாரி கிரகஸ்தன் வானப்பிரஸ்தன் சந்நியாசி என்கின்ற ஆசிரமத்தாரும், சைவர், வைணவர், வைதிகர் என்கின்ற சமயத்தாரும், தங்கள் தங்களுக்குரிய ஆசாரங்களில் குறைவுபடாமல் வாழ்ந்திருக்கவும்; அன்னதானம், சொர்ணதானம் கோதானம் பூதானம் முதலான தானங்களும், தேவாலயம் கட்டுவித்தல், திருக்குளமெடுத்தல் செழுஞ்சோலை வைத்தல் தண்ணீர்ப்பந்தல் வைத்தல் சத்திரங்கட்டுவித்தல் முதலான தருமங்களும், சாந்திராயண முதலான விரதங்களும், தியானஞ்செய்தல் ஜெபஞ்செய்தல் முதலான தவங்களும் தவறுபடாமல் ஓங்கியிருக்கவும்; தியாகேசப் பெருமானுக்கும் மற்றுமுள்ள தெய்வங்களுக்கும் திரிகாலபூசைகளும் திருப்பணிகளும் திருவிழா முதலான சிறப்புகளும் குறைவில்லாமல் நடக்கவும் அவரது ஆக்கினையே செய்வித்து வந்தது.
அவரது ஒப்புயர்வில்லா அரசாட்சியிலே பூவே பறிபடுவது, புனலே சிறைபடுவது, காற்றே அலைபடுவது, கல்லே கடினமுடையது, மாவே வடுபடுவது, வாழையே குலைபடுவது, வண்டே மதுவுண்பது, பந்தே அடிபடுவது, பரியே கட்டுண்பது, நெல்லே குத்துண்பது, நெற்கதிரே போர்படுவது, வயலே வளைபடுவது, மாதரிடையே குறைபடுவது, தரித்திரமே தரித்திரப்படுவது, துக்கமே துக்கப்படுவது, பொய்யே பொய்படுவது, இவையல்லாமல் பொருள் பறிக்கப்படுவோரும் சிறைச்சாலையில் வைக்கப்படுவோரும் பகைவரால் அலைக்கப்படுவோரும் கடின மனமுள்ளவர்களும் வடுப்படுவோரும் குலைப்படுவோரும் மதுவுண்போரும் அடிபடுவோரும் குத்துண்போரும் போரிற்படுவோரும் கட்டுண்போரும், வளைபடுவோரும் குறைபடுவோரும் தரித்திரப்படுவோரும் துக்கப்படுவோரும் பொய்படுவோரும் வேறேயில்லாமையால் அந்நாட்டில் மேன்மையே விளங்கியிருந்தது.

புத்திரப் பேறில்லாக்குறை[தொகு]

இந்தப் பிரகாரமாக மந்திரி முதலான அங்கங்களுடன் அரசாண்டிருந்த அம்மனுச்சோழரென்னும் சக்கரவர்த்தியானவர் புத்திரப்பேறில்லாமல் மனம் வருந்தி அப்பேற்றைப் பெறும்படி அறுபதுவருஷகாலமாக அநேக தானங்களும் தருமங்களும் யாகங்களும் விரதங்களுஞ் செய்தும், புத்திரோற்பத்தி இல்லாமையால், "புத்திரச்செல்வம் பெறாதவர் பொருட்செல்வம் பெற்றும் பயனில்லையே; புத்திரன்போல் நமக்கு இந்த அரசச்செல்வம் இம்மை மறுமை இன்பங்களைக் கொடாதே; சந்ததி யில்லாவிட்டால் பிற்காலத்தில் கண்களில்லாத முகமும் சூரியனில்லாத பகலும்போல, அரசனில்லாது இவ்வுலகந் தலைதடுமாறிப் போமே; ஆதலால் இனிப் புத்திரனைப் பெற்றுக்கொள்வதற்குத் தக்க முயற்சி நமது ஆண்டவனாகிய தியாகராஜப் பெருமானை வழிபடுவதே யல்லது வேறொன்றுமில்லை; ஆனால், மோக்ஷப்பேற்றைக் குறித்து நிஷ்காமியமாக இத்தனைநாளும் வழிபட்டுவந்த நாம் இப்போது புத்திரப்பேற்றைக் குறித்துக் காமியமாக நமதாண்டவனை வழிபடுவது தகுதியல்லவாயினும், "தீராக்குறைக்குத் தெய்வமே முடிவு" என்கிறபடி "எவ்விதத்திலும் தீராத புத்திரனில்லாக் குறையைச் சிவபெருமானது திருவருளாலேதான் தீர்த்துக் கொள்ளல்வேண்டும்" என்று ஆலோசித்துத் துணிவுகொண்டு, தமது மனைவியாருடன் ஆகமவிதிப்படிக் கமலாலயம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து உட்புகுந்து, தியாகராஜப்பெருமானது சந்நிதிக்கெதிரே அஷ்டாங்க பஞ்சாங்கமாக நமஸ்கரித்து, வணங்கிய முடியும், மலர்ந்த முகமும், நீர்பொழிந்த கண்ணும், துதிமருவிய நாவும், கூப்பிய கையும், புளகமுற்று உடம்புங் கொண்டுநின்று, "எம்பெருமானே! புத்திரப்பேறில்லாக் குறையைத் தீர்த்தருளல் வேண்டும்" என்று விண்ணப்பித்துப் பலவிதமாகத் தோத்திரஞ்செய்து, தமது அரண்மனைக்குச் செ்ல்வர்.
இந்தப் பிரகாரம் நாள்தோறும் போய் வழிபட்டுப் பிரார்த்தித்துக் கொண்டே வந்தார். அவர் செய்யும் வழிபாட்டுக்கும் வந்தனைக்கும் இரங்கித் தியாகராஜப் பெருமான் புத்திரப்பேறுண்டாகும்படி அநுக்கிரகஞ்செய்ய, அந்த அநுக்கிரகத்தால் மகாராஜனுக்கு மகிழ்ச்சியுண்டாகும்படி வலம்புரிச் சங்கு விலையுயர்ந்த வெண்முத்தினைக் கருப்பங்கொண்டதுபோலத் தேவியார் தம்திருவயிற்றிற் கருப்பங்கொண்டு, பத்துமாதமுஞ்சென்று நல்ல சுபதினத்தில் தர்மதேவதை தாண்டவமாடவும், வானகத்தார் மலர்சொரிந்து வாழ்த்தவும், வையகத்தார் மனங்களிக்கவும், அதிதியாரானவர் ஆதித்தனைப் பெற்றதுபோலவும், மல்லிகைக்கொடி மணமுள்ள மலரைப்பெற்றது போலவும், எவ்வெவர்களும் அதிசயத்தக்க சர்வலட்சணங்களும் நிறைந்த வடிவுள்ள ஒரு புத்திரனைப் பெற்றார். புத்திரன் பிறந்த சந்தோஷமான சமாசாரத்தைப் பாங்கிகள் அதிசீக்கிரமாக வந்து தம்மை மறந்த மனக்களிப்புள்ளவர்களாக எதிர்நின்று "ஆண்டவனே! எங்கள் தலைவியார் திருவயிற்றிலிருந்து தேவரீர் புகழேவடிவாகவும், புண்ணியமேஉயிராகவுங்கொண்டு, பொன்னுலகத்தைக் காக்கின்ற புரந்தரனும் நாணமடையப் பூவுலகத்தைக் காக்கத்தக்க வல்லமையுள்ள புத்திரசிகாமணியுதயஞ் செய்தது" என்று விண்ணப்பஞ் செய்யக்கேட்ட மனுச் சக்கரவர்த்தி யானவர்:-

மகன்பிறந்த மகிழ்ச்சி[தொகு]

தூரதேசத்திற் போயிருந்த கப்பல் துறைமுகத்தில் வந்ததென்று சொல்லக்கேட்ட வர்த்தகனைப்போலவும், கூடிப்பிரிந்த மங்கையின் குரலோசையைக் கேட்ட நாயகனைப்போலவும், தாகங்கொண்டு தவிக்கும் காலத்தில் சமீபத்தே தண்ணீருண்டென்று சொல்லக் கேட்ட தேசசஞ்சாரியைப்போலவும், மனங்குளிர்ந்து உடல்பூரித்து அளவிடப்படாத களிப்புடையவராய், அந்தப் பாங்கிகளுக்கு விலையுயர்ந்த ஆடையாபரணங்களை வெறுப்படையும்படி பரிசுகொடுத்துத் தாம் நீராடி நியமங்கள் முடித்து, வேதவித்துகளாகிய பிராமணர்களுக்கு விதைதானம், சொர்ணதானம், கன்னிகாதானம், அசுவதானம், கஜதானம், பூதானம், கோதானம் முதலான தானங்களைக் கொடுத்துப்புத்திரன் பிறந்தநாள்தொட்டுப் பன்னிரண்டு வருஷமட்டுங் குடிகள் வரிகொடாமல் சர்வமானியமாகத் தாமே யநுபவித்துக் கொள்ளவும், திறைகட்டிவரும் அரசர்களை ஏழு வருஷமட்டும் அந்தத் திறைகளைக் கட்டாமல் தாங்களே யெடுத்துக்கொள்ளவும், சிறைச்சாலையிலிருந்த சத்துருக்களை விட்டுவிடவும், பொக்கிஷ சாலையைத் திறந்துவிட்டு, நகரிலும் நாட்டிலும் உள்ளோர் யாவரும் தங்கள் தங்களுக்கு வேண்டியமட்டில் ஏழுநாள் வரையில் எடுத்துக்கொண்டு போகவும், தேவாலயங்களிலெல்லாம் புதிதாகத் திருப்பணிகளும், திருவிழா முதலான சிறப்புக்களும் செய்விக்கவும் கட்டளையிட்டு, பின்னர்த் தான் தேடிவைத்த திரவியத்தைத் தெரியக் கண்டு கொண்டவனைப் போலத் திரைமறைவிலிருந்த அந்தச் செல்வக்குழந்தையை வெளிப்படக் கண்டு மனமகிழ்ச்சியடைந்து இளஞ்சூரியோதயம் போல இந்தப் புத்திரன் இவ்விடத்தில் உதயஞ்செய்தது சிவாநுக்கிரகமேயல்லது வேறல்லவென்று வியப்படைந்து, சோதிட சாத்திரங்களில் வல்லமையுள்ள பெரியோர்களைக் கொண்டு ஒப்பற்ற செல்வங் கல்வி வெற்றி முதலிய அதிர்ஷ்டங்கள் நடனஞ்செய்கின்ற சாதகபலனைக் குறித்துத் தியாகராஜப்பெருமானது திருவருளால் வந்ததுபற்றி அக்கடவுளின் திருப்பெயர்கொண்டு வீதிவிடங்கன் என்னும் நாமகரணமும், அன்னப்பிரசானம், சௌள முதலான சடங்குகளும், மிகுந்த விபவமாகவும், வேதயுக்தமாகவும் அதது செய்யத்தக்க பருவங்களில் செய்வித்தும், அந்தப் புதல்வனை வாசநீராட்டுவித்தும், இனிய உணவுகளை யூட்டுவித்தும், பொன்னாலும் இரத்தினங்களாலும் செய்த பூஷணங்களைப் பூட்டுவித்தும், மார்மேலும் தோள்மேலும் மடிமேலும் வைத்துவைத்து முத்தாடியும், திருந்தாத குதலைச் சொற்களைக் கேட்டு மகிழ்ந்தும், கற்பகவிருக்ஷத்தின் கனியைக் கேட்பினும் அந்தக்கணமே தருவித்துக் கொடுத்தும், சிறிய விளையாடல்களைச் செய்யக்கண்டு களித்தும், கற்புள்ளவள் கணவனை உபசரிப்பதுபோல உபசரித்தும், படிப்பில் ஆசையைவைத்தவன் பாடத்தைப் பாராட்டுவதுபோலப் பாராட்டியும், தன்னை யுயர்ந்தவனாக்க நினைத்தவன் தருமத்தை வளர்ப்பதுபோல வளர்த்தும், முன் சிறுமையடைந்து பின் செல்வத்தைப் பெற்றவன் அச்செல்வத்தைப் பாதுகாப்பதுபோலப் பாதுகாத்தும், புத்திரசம்பத்தினால் வரும் பயனை அடைந்தவராய் இருந்தார்.

இளமைப் பருவம்[தொகு]

இந்தப்படி இணையில்லாத செல்வப் பெருக்கத்தில் வளர்ந்த வாழையிளங் குருத்துப்போல வளர்ந்து வருகின்ற புத்திரனுக்கு ஐந்தாம் வயதில் அட்சராப்பியாசம்செய்வித்து, ஏழாம் வயதில் சகல தேசத்தரசர்களுக்குந் தெரிவித்து, நகரை அலங்காரஞ்செய்வித்து, பத்மராகம் கோமேதகம் வயிரம் வயிடூரியம் முதலான இரத்தினகசிதமான கலியாண மண்டபத்தில் வேத வேதாங்கங்களில் வல்லவரான பிராமணர்களும், சாபாநுக்கிரக சாமர்த்தியமுள்ள தபோதனர்களும் ஆசீர்வதிக்கவும், மன்னர் மண்டலீகர் பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர் அமைச்சர் உறவினர் சிநேகர் முதலானவர் கண்டு களிக்கவும், சுமங்கலப் பெண்கள்சோபனம் பாடவும், பேரி சங்கம் மிருதங்க முதலான மங்கல வாத்தியங்கள் முழங்கவும், நல்ல சுபமுகூர்த்தத்தில் வேதவிதிப் பிரகாரம் உபநயன கலியாணமும் சகல வேதாகம சாஸ்திரங்களிலும் வல்லமையுள்ள ஆசாரியாரைக் கொண்டு வித்தியாரம்பமுஞ் செய்வித்தார். சில நாள்களுக்குள்ளே வீதிவிடங்கன் என்னும் அப்புத்திரனானவன் வேதங்கள் சாஸ்திரங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள் முதலான கலைகளில் ஆசிரியனைப் பார்க்கிலும் எண்மடங்கு வல்லமையுள்ளவனாகி; யானையேற்றம், குதிரையேற்றம், ரதாரோகணம், வில்வித்தை, வாள்வித்தை, இந்திரஜாலம், மகேந்திரஜாலம் முதலான ஸமஸ்த வித்தைகளையுங் குறைவறக் கற்றுக்கொண்டு, ஆதிசேடனைப்போல் அறிவும், காமனைப்போல் கட்டழகும், ஆண்சிங்கம்போல் ஆண்மையும், மதயானைபோல் நடையும், மார்த்தாண்டன்போல் வாய்மையும், கற்பகவிருக்ஷம்போல் கொடையுமுடையவனாய்; சிவபக்தி, சீவகாருண்ணியம், பொறுமை, அன்பு, ஆசாரம், ஒழுக்கம், ஊக்கம், சாந்தம், சற்சனநேய முதலான நற்குணங்களுடன் உயிர்க்கு முடிவு நேரிடுமானாலும் உண்மையே பேசுவதும், உறுதியே சொல்லுவதும், இன்சொல்லே கூறுவதும், இதமே செய்வதும், பயனுள்ள காரியங்களையே பாராட்டுவதும், பிராமணர் தவத்தோர் முதலான பெரியோர்களைக் கண்டால் அன்போடும் அச்சத்தோடும் எதிர்கொண்டு தலையால் வணங்கி வாயால் வாழ்த்துவதுமாகிய நற்செய்கைகளையுடையவனாய், மாதா பிதாக்களது மனக்குறிப்பறிந்து அவரிச்சையின்வழி நடந்து மகிழும்படிசெய்து இளமைப் பருவத்திற்றானே எல்லாம் அறிந்தவனென்று கண்டோர் கொண்டாடவும், கேட்டோர் மனங்களிக்கவும் இளவரசுபட்டத்துக்குத் தகுந்த பருவமடைந்திருந்தான்.
அப்படியிருந்த நாள்களில் ஒருநாள் அவ்வீதிவிடங்கன் என்னும் இராஜபுத்திரன் தன்பருவத்துக்கொத்த இராஜகுமாரர்களும், மந்திரிகுமாரர்களும் சூழ்ந்துவர, தன் பிதாவாகிய மனுச்சோழருடைய சமூகத்துக்கு வந்து, பிதாவினது திருவடிகளுக்கு அஷ்டாங்க பஞ்சாங்கமாகத் தண்டனிட்டெழுந்து, தூசொதுக்கியும் உடம்பொடுக்கியும் கைகட்டியும் வாய்புதைத்தும் எதிரே நிற்க, அப்போது மனு்சசக்கரவர்த்தியானவர், நெடுநாள் பிரிந்திருந்த கன்றினைக் கண்ட பசுவைப்போலவும், இடந்தெரியாதிருந்த புதையலை யெதிர்படக் கண்டவனைப் போலவும் கண்கள் களிகூரக்கண்டு, உள்ளமும் உடலும் பூரித்துத் தமது இரண்டு கைகளாலும் தழுவி யணைத்தெடுத்து, மடிமேல் வைத்து, உச்சிமோந்து, முதுகைத் தடவி, "எனக்கு நெடுநாளாகவிருந்த மனக்குறையைத் தவிர்த்து இம்மை மறுமைப் பயனைக் கொடுக்கும்படி பிறந்த அருமையாகிய அமிர்தத்தை ஒத்த என் புத்திரனே! உன் மனதில் ஏதோவொரு எண்ணமுண்டானதாகத் தோன்றுகின்றது; அவ்வெண்ணம் இன்னதென்று வெளிப்படுத்தவேண்டும்" என்று கேட்டார். அது கேட்ட வீதிவிடங்கன், "மூன்றுலகத்திலுங் கேடில்லாத கீர்த்தியை நாட்டிய பெருந்தன்மை யுடைய தேவரீரைப் பிதாவாகப் பெற்ற அடியேனுக்கு எண்ணங்கொள்வதற்கு என்ன குறையிருக்கிறது? நமது குலதெய்வமாயும், இஷ்டதெய்வமாயும் கமலாலயத்தில் எழுந்தருளியுள்ள தியாகராஜப்பெருமானைத் தரிசித்துவரவேண்டுமென்னும் எண்ணம் ஒன்று மாத்திரமுண்டு. இவ்வெண்ணம் இடையூறில்லாமல் நிறைவேறும்படி தேவரீர் திருவுள்ளங் கொள்ளவேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தான்.
அதுகேட்டு அரசனானவர், "சர்வ வல்லமையுள்ள சுயம்புவாயும், கருணைக்கடலாகிய கடவுளாயும், பிள்ளைக்கலிதீர்த்த பெருமானாயும் விளங்கிய தியாகராஜப் பெருமானைச் சேவிப்பதற்குத் தடையுண்டோ? தனக்கிணையில்லாத தருமமூர்த்தியைத் தரிசிக்கவேண்டுமானால் தடுப்பவர் யார்? புண்ணியந்தேடப் புத்திரன் தொடங்கினால், தந்தை தடைசெய்வானோ? நானே கற்பிக்கவேண்டிய நல்விஷயத்தை நீயே தெரிந்து செய்யத்தொடங்குவது, நான் பூர்வஞ்செய்த புண்ணியமல்லவோ? பிள்ளைதேடும் புண்ணியம் பிதாவுக்கும் உ்ண்டென்று பெரியோர் சொல்வது பிழைபடாதென்பதை நானறியேனோ! நெல்முதலான பயிருக்கு நீர்விடுவோரையும், குருடர்க்குக் கோல் கொடுப்போரையும், இரவில் வந்தவர்க்கு இடங்கொடுப்போரையும், அஞ்சிவந்தடுத்தவர்க்கு அபயம் கொடுப்போரையும், தாகங்கொண்டோர்க்குத் தண்ணீர் கொடுப்போரையும், பசிகொண்டு பரிதபிப்போர்க்கு அன்னங்கொடு்ப்போரையும், சேற்றில்விழுந்து திகைக்கின்றோர்க்குக் கைகொடுப்போரையும், ஆற்றுவெள்ளத்தில் அகப்பட்டோரைக் கரையேற்றுவோரையும், சத்திரங்கட்டித் தருமஞ்செய்வோரையும் தடுத்தாலும் குருதரிசனம், சிவஞானி தரிசனம், சிவதரிசனம்செய்வோரை ஒருகாலுந் தடுக்கப்படாது; ஆதலால் புத்திரனே! உனக்கு வேண்டிய சிறப்புக்களுடன் சுகமாகப்போய் ஆண்டவனைத் தரிசனஞ்செய்து சிவஞானமும் தீர்க்காயுளும்பெற்றுவருவாய்" என்று கட்டளையிட்டார்.
அந்தக் கட்டளையை அன்புடன் தலைமேற்கொண்டு வணங்கி விடைபெற்று, மாதாவினிடத்திற் போய்ப் பக்தியுடனே பணிந்தெழுந்து கைகூப்பி நின்று, அநேக விரதங்களை யனுஷ்டித்து அடியேனைப் பெற்றெடுத்து, கண்களை யிமைகள் காப்பனபோற் காத்து வளர்த்த தாயே! அடியேன் தெய்வசிகாமணியாகிய தியாகராஜப் பெருமானைத் தரினஞ்செய்யவேண்டும்; இதற்குத் தந்தையாருடைய சம்மதம் பெற்றுக் கொண்டேன், இனி உமது உள்ளமும் ஒருமித்து அருளவேண்டும்" என்று குறையிரந்து கொண்டான். அதுகேட்ட தாயானவள் உருக்கத்துடன் மனமகிழ்ச்சிகொண்டு, முகமலர்ந்து முலைகளிலிருந்து பால்பீரிடவும், கண்களில் ஆசைநீர் அரும்பவும் தன்னருமைத் திருமகனை நோக்கி, "இறைவனையும் (இறைவன்-மநுச்சோழர்) என்னையும் நற்கதியிற் சேர்க்கவந்த நாயகமே, நாங்கள் முன்செய்த தவப்பயனாலே கிடைத்த முத்தமே! எங்கள் வருத்தமெல்லாந் தீர்க்கவந்த மாணிக்கமே! கல்வியிற்சிறந்த கண்மணியே! சுந்தரவடிவமுள்ள சூரியனே! சாந்தகுணமுள்ள சந்திரனே! பேரறிவுடைய பிள்ளாய்! நெடுநாளாகப் பலவிதமான தருமம், தானம், தவம் முதலியவற்றைச் செய்தும் பெற்றுக்கொள்ளாமல், தியாகேசர் சந்நிதிக்கு நடந்து அந்தக் கடவுளின் அநுக்கிரகத்தால் உன்னைப் பெற்றுக்கொண்டோம். அப்படிப்பட்ட பெருங்கருணையுள்ள பெருமானை நீ தரிசிக்கவேண்டுவது அடுத்த காரியந்தான்; ஆதலால், நீபோய்க் கண்குளிரக்கண்டு தரிசித்து, உபநயன முதலான மங்கலக் கோலங்கண்ட என்கண்கள் மணக்கோலமுங் கண்டு களிப்படைய வேண்டுமென்று எண்ணியிருக்கிற என்னெண்ணம் விரைவில் முடியும்படி, ஒரு வரத்தையும் பெற்றுவரக் கடவாய்" என்று விடைகொடுத்தாள்.

திருவாரூர்த் தியாகராஜப் பெருமானைத் தரிசிக்கச் செல்லல்[தொகு]

அவ்விடையைப் பெற்றுக்கொண்ட வீதிவிடங்கன் தன் அரண்மனைக்கு வந்து தயிலம், சந்தனம், கஸ்தூரி, பால், தயிர், நெய், பழம் முதலான அபிஷேக திரவியங்களும்; மாணிக்கமாலை, மரகதமாலை, முத்துமாலை, பவளமாலை, பொன்மாலை, வச்சிரமுடி, இரத்தினகுண்டல முதலான திருவாபரணங்களும்; கொன்றைமாலை, தும்பைமாலை, வில்வமாலை, சண்பகமாலை, முல்லைமாலை, மல்லிகைமாலை முதலான திருமாலைகளும்; வெண்பட்டு, கோசிகப்பட்டு, பீதாம்பரம் முதலான திருவாடைகளும்; மற்றும் வேண்டிய திரவியங்கள் எல்லாமுந் தியாகேசர் கோவிலுக்குக் காரியக்காரர்கள் வசத்தில் முன்னதாக அனுப்புவித்துப் பின்பு தான் மஞ்சனச்சாலையில் வாசநீராடி, வெண்பட்டுடுத்துச் சிவத்தியானத்துடன் திருநீறு தரித்துத் திலகமணிந்து, கிரீடம், குண்டலம், கண்டாரம், வாகுவலயம், பதக்கம், சரப்பளி, கடகம், ஆழி, பொற்பூணுநூல், பொன்னரைஞாண், உதரபந்தனம், வீரகண்டை முதலான பூஷணங்களும் பூண்டு, ஜோதிமயமான பீதாம்பரவுத்தரியம் மேலே தரித்து, நவரத்தினமிழைத்தவொரு பொற்பிரம்பைக் கையிற்பிடித்துக்கொண்டு அரண்மனை வாசலைவிட்டு வெளியே புறப்பட்டு, வேதபாரகராகிய வேதியர் முதலானவர்களுக்குப் பலபல தானஙகள் செய்து, மனோவேகமும் பின்னடையத்தக்க வேகமான நடையுள்ள நான்கு குதிரைகட்டிய மகாமேருவைப் போல உயர்வுள்ள ரத்தின கசிதமாகிய ரதத்தின்பேரில் ஆரோகணித்துக்கொண்டனன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=மனுமுறைகண்ட_வாசகம்&oldid=960289" இலிருந்து மீள்விக்கப்பட்டது