மனோன்மணீயம்: நான்காம்அங்கம், நான்காங்களத்தின் கதைச்சுருக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மனோன்மணீயம்[தொகு]

அங்கம் நான்கு[தொகு]

நான்காங் களம்- கதைச் சுருக்கம்[தொகு]

அரண்மனையில், சீவகனும் குடிலனும் ஆலோசனை செய்கின்றனர். பலதேவனும், ஒருபுறம் நிற்கிறான். சீவகன், ஆத்திரத்துடன், “குடிலரே! இது என்ன வியப்பு! கோட்டையின் அகழியை, ஒரு பக்கத்தில் பகைவர் தூர்த்துவிட்டனர் என்று அந்தப்புரத்துப் பெண்கள் கூறினர். இதுவரை, நான், அதை அறியவில்லை. அது உண்மைதானா?” என்று கேட்டான்.
நாராயணனை ஒழிப்பதற்கு இதுவே தகுந்த சமயம் என்று எண்ணிக்கொண்டு குடிலன், “ஒருபுறம் மட்டுமா!” என்றான்.
அரசன் மேலும் ஆத்திரமடைந்து, “என்ன! என்ன!” என்றான்.
“அரசே! இந்தச்சூதை என்னவென்று சொல்வேன்!”
“கோட்டை மதில்மேல் இருந்த ஆயுதங்களெல்லாம் என்னவாயின?”
“கருத்தா இல்லையானால் கருவிகள் என்னசெய்யும்?”
“காவல் இல்லையோ! அங்கு இருந்த சேவகர் யார்?”
குடிலன் கூறினான்: “ எட்டாயிரம் போர்வீரரைக் கோட்டையில் காவல் வைத்தோம்; நாராயணரைத் தலைவர் ஆக்கினோம். ஆனால், நாராயணர்..., அவரைத்தான் போர்க்களத்தில் பார்த்தோமே!”
அரசன், “ஆமாம்! போர்க்களத்திலே பார்த்தோம்! காவலை விட்டுவிட்டா வந்தான்?”
குடிலன், “அவரை விட நமக்கு உண்மையான காப்பாளர் யார்? வேலியே பயிரை மேய்கிறது என்றால், தெய்வந்தான் காப்பாற்ற வேண்டும்.”
அரசன்: “துரோகம், துரோகம்!”
குடிலன்: “துரோகம் அல்ல அரசே! அடியேன் மேலுள்ள விரோதம்! அரசருக்கு அவர் துரோகம் செய்யவில்லை.”
அரசன்: “கெடுபயல்! துரோகி! அவனை விடப்போவதில்லை!”

குடிலன்: “ஐயோ! சுவாமி! எலியைக் கொல்ல வீட்டுக்குத் தீகொளுத்திய கதையாக இருக்கிறது! அவருக்கு அமைச்சர் பதவியும் முதன்மை இடமும் வேண்டும் என்று கேட்டால், தாங்களே மகிழ்ச்சியுடன் அளித்திருப்பீர்களே! அவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் அவர்மேல்” என்று கூறி அழுகிறான்.

“அவ்வளவு தீம்பனா? இவ்வளவு கொடியவன் என்று நாம் சற்றும் நினைக்கவில்லை” என்றான், அரசன்.
“அடியேனுக்கு இந்த அமைச்சா பெரிது? வெளிப்படையாகச் சொல்லியிருந்தால், நானே, இந்தப் பதவியை, மகிழ்ச்சியோடு கொடுத்திருப்பேனே! இதை மனத்தில் வைத்துக்கொண்டு, போர்க்களத்திலே இப்படிச் செய்வது தகுதியா?” என்று கூறிப் பலதேவனுடைய மார்பைச் சுட்டிக் காட்டினான்.
“யார், யார்? நாராயணனா இப்படிச்செய்தான்?”
“அவர் நேரில் செய்யவில்லை. அவர் ஏவலினால், ஒருவன் செய்தான்” என்றான், பலதேவன்.
“அப்படியா! அவனைச் சிரச்சேதம் செய்கிறேன். போர்க்களத்தில், இடது பக்கத்தில் குழப்பம் உண்டானது, அவனால்தான் போலும்!”
“முழுவதும், அவனால்தான் குழப்பம். நமது மானத்தைக் கெடுத்தான். போருக்கிடையில், குழப்பத்தை உண்டாக்கினான்” என்றான், குடிலன்.
அரசன், ஒரு சேவகனிடம், நாராயணனை அழைத்துவரக் கட்டளையிட்டான். “இத்தனைத் தீம்பனா இவன்? ஏன் இப்படிச் செய்தான்?” என்றான்.
குடிலன் கூறுகிறான்: “சுவாமி! பொறுத்தருளும். பிழை என்னுடையது. தங்கள் திருவுள்ளக்கருத்துப்படி, பலதேவனைப் படைத்தலைவனாக்கினேன். அது என் பிழைதான். அதனால், இவனை, இவ்விதம் செய்தான். அது மட்டுமா! போரக்களமெல்லாம் சுழன்று திரிந்து குழப்பம் செய்துவிட்டான். காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை எல்லாவற்றையும் கலைத்து, நமக்குக் கிடைக்கவேண்டிய வெற்றியை அழித்துவிட்டான்!”
அரசன், “ஆமாம், நாமும் கண்டோம்” என்று கூறி, இன்னொரு சேவகனைப் பார்த்துக் “கொண்டுவா அவனை, விரைவில்” என்று கூற, சேவகன் ஓடினான்.
அப்போது, குடிலன், அரசனுடைய கோபத்தைச் சாந்தப்படுத்துகிறது போலக் கூறினான்: “போனது போகட்டும் அரசரே! நாளை போரில் வெல்லுவோம். தாங்கள் ஒன்றுகேட்டால், அவன் ஒன்று உளறுவான். இனிக்கேட்டு என்ன பயன்?”
அரசன், “எதைப் பொறுத்தாலும், இதைப் பொறுக்கமாட்டேன். எவ்வளவு சூது! எவ்வளவு கொடுமை?” என்று கூறும்போது நாராயணன் உள்ளேவர, அவனை நோக்கிப் “போருக்குப் போகும்முன், நாம் உனக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டான்.
“அப்போது அரசர் பெருமான் கட்டளை ஒன்றும் இல்லை. கோட்டையைக் காக்கும்படி குடிலர் கூறினார்” என்றான், நாராயணன். “குடிலர் என்றால் என்ன, நாம் என்றால் என்ன? இருவரும் ஒருவர்தானே! கோட்டையைக் காத்தனையோ?”
“நன்றாகக் காத்தேன்” என்றான், நாராயணன்.
“அப்படியானால், பகைவர், அகழியை ஒருபக்கம், எப்படித் தூர்த்தனர்?”
“பகைவர், அகழியைத் தூர்க்கவில்லை. நமது படையின் பிணம் தூர்த்தது” என்றான், நாராயணன்.
“போர்க்களத்தில், உன்னைக் கண்டோம். அங்கேயா உன்னுடைய கோட்டைக் காவல்?”
“அரசர்பெருமானைக் காக்க அங்கு வந்தேன்.”
அரசன், பலதேவனுடைய காயத்தைக் காட்டி, “உன் கபடநாடகம் நன்றாக இருக்கிறது! அவன் நெஞ்சில் புண் பார்த்தாயா? அது எப்படி வந்தது?”
“அது வந்த காரணத்தை அவனே அறிவான்” என்றான், நாராயணன்.
“உனக்குத் தெரியாதா?” என்று அரசன் மீண்டும் கேட்க, நாராயணன், “இவன் பக்கத்தில் இருந்து ஒரு சேவகன், தன் கையிலிருந்து ஒரு பொன்காப்பைக் காட்டி, ‘நீ என் தங்கைக்குச் செய்த இழிவை இப்படித் தீர்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி, வேலினால், இவன் நெஞ்சில் குத்தினான் என்று பலர்சொல்லக் கேட்டேன்” என்று கூறினான்.
அப்போது குடிலன், தன் கையில் இருந்த பொற்காப்பைக் காட்டிக் கூறுகிறான். “நன்றாயிருக்கிறது. இது அரண்மனைக்குரியது. இதோ, அரண்மனை முத்திரை, இதில் இருக்கிறது. வாணியுங்கூட, இதில் கலந்திருக்கிறாள் போல் தெரிகிறது. அரசே! விடைகொடுங்கள், நாங்கள் போகிறோம். எங்கள் மேல் வஞ்சகர் பழிசுமத்துகிறார்கள்” என்று கூறித் தன் கைவிரலில் அணிந்திருந்த அமைச்சு மோதிரத்தைக் கழற்றி நீட்டுகிறான்.
அரசன் நாராயணனை நோக்கி, “எவ்வளவு சூது? உத்தமன் போல நடித்தாய்! கள்ளன்! தீம்பன்! சுவாமித்துரோகி! அமைச்சரே! சேவகரே! நாராயணன் நன்றிகெட்ட பாதகன்! நாம் இட்ட கட்டளையை மறந்து, கடமை தவறினான். நமது அரண்மனையில் இருந்த பொற்காப்பைத் திருடினான். அதனை ஒருத்தனுக்குக் கொடுத்துப் பலதேவனைக் கொல்லத்தூண்டினான். உத்தரவு இல்லாமல், போர்க்களத்தில் வந்து, யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படைகளைக் கலைத்துக் குழப்பம் செய்து, நமக்குத் தோல்வியை உண்டாக்கினான். இவனைக் கொண்டுபோய்க் கழுவேற்றுங்கள். நமது ஆணை!” என்றான்.
“அரசர் கொடுக்கும் தண்டனைக்கு நான் அஞ்சவில்லை. இத்தனை காலம் ஆகியும், உண்மை அறியவில்லை. அரசர்குலம் வாழ்க!” என்றான், நாராயணன்.
அரசன், படைத்தலைவனை நோக்கி, “நீதியிலிருந்து தவறவில்லை. இவனுக்குச் சரியான தண்டனைதான் அது. விரைவாகக்கொண்டுபோய், இவனைக் கழுவில் ஏற்றுக” என்று கூறினான்.
அதுகேட்ட வீரன்: “அரசரின் கட்டளைப்படியே செய்கிறேன். வாருங்கள் குடிலரே!” என்று குடிலனை அழைத்தான். அரசன் வீரனைக் கோபத்துடன் நோக்கத் “தாங்கள் கூறியனவெல்லாம், குடிலருக்குத்தான் பொருந்தும்; வேறுயாரும் தவறுசெய்யவில்லை” என்று கூறினான்.
குடிலன் அரசனைப் பார்த்துக் “கேட்டீர்களா அரசரே, இக்கெடுபயலின் கொடுமொழியை!” என்று அலறினான். அரசன், வீரனைச் சினந்து, “இவனையும் கழுவில் ஏற்றுங்கள்” என்று அங்கு இருந்த சேவகர்களுக்கு ஆணையிட்டான். அப்பொழுது இன்னொரு வீரன், “அப்படியானால், பதினாயிரம் கழுமரம் வேண்டும்” என்றான்.
இவ்வமயம், வாயிற் சேவகன் வந்து, சுந்தர முனிவர் அரண்மனை வந்திருப்பதாகவும், அரசரைக் காணவிரும்புவதாகவும் தெரிவித்தான். அரசன், அமைச்சனிடம், “குடிலரே! தண்டனையை நீர்நடத்தும்; நாம் போய்வருகிறோம்” என்று கூறி எழுந்தான். குடிலன், “இவர்களை விட்டுவிடுங்கள்” என்றான். “விடமுடியாது” என்றான், அரசன். “அப்படியானால், தாங்களே ஆணையை நடத்துங்கள்” என்றான் அமைச்சன். “நல்லது நடத்துவோம். நாம் வருகிறவரையில், இவர்கள் இருவரையும், சிறையில் அடைத்துவையுங்கள்” என்றுசொல்லி, அரசன், முனிவரைக் காணச்சென்றான்.
அமைச்சன், தன் சேவகனான சடையனை அழைத்து, “இவர்களைக் கொண்டுபோய்ச் சிறையில் அடைத்துவை” என்று கட்டளையிட்டு, உடனே பலதேவனை அழைத்துக்கொண்டு, வேகமாய்ப் போய் ஒளிந்துகொள்கிறான். குடிலனுடைய சேவகர்களை, மற்ற சேவகர்கள் துரத்தி விடுகின்றனர். குடிலனைத் தேடுகின்றனர்.
நாராயணன் சேவகர்களை அழைத்துக் குழப்பத்தைத் தடுத்து, அமைதி உண்டாக்குகிறான். சேவகர், அரசன் அநீதியாக விதித்த தண்டனைக்காகச் சினங்கொள்கின்றனர். நாராயணன், அவர்களுக்கு ஆறுதல் கூறி, அமைதிகொள்ளச்செய்கிறான். குடிலனும், பலதேவனும் ஒளிந்துகொண்டே, வெளியில் நிகழ்கிறதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அவ்வமயம், ஒரு சேவகன் வந்து, அரசன் அழைப்பதாகக் கூறுகிறான். அரசனிடம், குடிலனும் பலதேவனும் போகின்றனர்.

மனோன்மணீயம், நான்காம் அங்கம், நான்காம் களம் கதைச்சுருக்கம் முற்றிற்று.[தொகு]

பார்க்க:[தொகு]

மனோன்மணீயம்: நான்காம்அங்கம், ஐந்தாங்களத்தின் கதைச்சுருக்கம்

மனோன்மணீயம்-அங்கம் 04-களம் 01

மனோன்மணீயம்-அங்கம் 04-களம் 02

மனோன்மணீயம்-அங்கம் 04-களம் 03

மனோன்மணீயம்-அங்கம் 04-களம் 04

மனோன்மணீயம்-அங்கம் 04-களம் 05