மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1/சோழர்
சோழர்
2. சோழர்[1]
முன்னுரை
சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் அரசோச்சிய மூவேந்தராகிய சேர, சோழ, பாண்டியர்களுள், பாண்டிய அரசர்களுடைய வரலாறு மிகுதியாகவும் தெளிவாகவும் கிடைக்காததாலும், மிகுதியாகவும் தெளிவாகவும் கிடைக்கும் சேர அரசர்களுடைய வரலாற்றுக்கு அடிப்படையாக உள்ள பதிற்றுப்பத்து என்னும் நூல் ஒருவரால் பாடப் பெற்றிருக்குமோ என்று ஐயுறக் கிடக்கும் நிலை சிலரிடையே இருந்து வருவதாலும், ஓரளவு தெளிவான வரலாற்றுடன் கரிகாலன் முதலான பேரரசர்களது வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள சோழர் வரலாறு ஒருவகையில் முக்கியத்துவம் பெற்றதாகும். சோழநாட்டைப் பற்றி அறிவதற்குத்தக்க சான்றுகளாகச் சோழர் காலத்திய தொல் கதைகளும், சங்ககால இலக்கியங்களும், அயல்நாட்டுக் குறிப்புகளும், கல் வெட்டுகளும் இன்றைய அகழ்வாராய்ச்சிகளும் பெரிதும் நமக்குத் துணைபுரிகின்றன.
'சோழநாடு' என்னும் பகுதியில், சோழநாட்டின் நிலவியல் அமைப்பு, எல்லைகள், முக்கிய ஆறுகள், பட்டினங்கள், மக்களினங்கள், அரசர்களின் வழிமுறைகள், போர்கள், ஆட்சிமுறை முதலானவற்றைக் காணலாம்.
சோழநாடு
எல்லைகள்
சோழநாடு தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரமாக இருந்தது. கிழக்குக் கடல் இக்காலத்தில் வங்காளக் குடாக் கடல் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்தக் கடல் சங்க காலத்தில் குணகடல் (குணக்கு - கிழக்கு) என்று பெயர் பெற்றிருந்தது. கடைச்சங்க காலத்தின் இறுதியில் கி.பி. முதலாம் நூற்றாண்டு. இரண்டாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தோடு வாணிகம் செய்த யவனர் (கிரேக்கரும் உரோமரும்) குடகடலை எரித்திரையக் கடல் (செங்கடல்) என்று கூறினார்கள்[2].
கடலைக் கிழக்கு எல்லையாகவும், கோட்டைக்கரையை மேற்கு எல்லையாகவும், வெள்ளாற்றைத் தெற்கு எல்லையாகவும், ஏணாட்டை வடக்கு எல்லையாகவும் கொண்டு 24 காதம் விரிந்து கிடந்தது சோழநாடு என்று பழம் பாடல் ஒன்று தெரிவிக்கிறது[3].
இவற்றுள் வெள்ளாறு[4] என்பது இப்போது புதுக்கோட்டைப் பகுதியில் பாயும் ஆறு. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும்பாளூர், சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் எல்லையில் அமைந்திருந்தது என்று கூறப்படும் கருத்தும் இதனோடு தொடர்புடையது.
கோட்டக்கரை (பேட்டைவாய்த்தலை?), ஏணாடு ஆகியவை பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. மேலும், இந்த எல்லையைக் கூறும் பாடல் சங்க காலத்திற்குப் பிந்தியது. எனவே, சங்ககாலச் சோழநாட்டின் எல்லை இது என்று அறுதியிட்டுக் கூறுவதற்குப் போதிய சான்று இல்லை. எனினும் இப்போதுள்ள குளித்தலை வட்டம்வரை சங்ககாலச் சோழநாடு மேற்கில் பரவியிருந்தது என்று கொள்ள இடமுண்டு[5]. வடக்கில் இதன் எல்லை சங்ககாலத்தில் காவிரி ஆற்றுச் சமவெளியைத் தாண்டிச் செல்லவில்லை என்றே எண்ணவேண்டி யுள்ளது. (தென்) பொண்ணையாறு அருவா நாட்டின் தெற்கு எல்லை என்று கூறப்படும் கருத்தும் இதனோடு தொடர்புடையதாக அமைந்துள்ளது.
காவிரியாறு
சோழநாட்டின் முக்கிய ஆறு காவிரி ஆகும். காவிரியாற்றின் நீர்வளத்தினால் சோழநாடு செழிப்பும் செல்வமும் பெற்று விளங்கிற்று. நெல்லும், கரும்பும், மற்றும் காய்கறித் தோட்டங்களும், தெங்கஞ் சோலைகளும், கமுகஞ் சோலைகளும் சோழ நாட்டில் செழித்திருந்தன. இதற்கு முதல் காரணமாக இருந்தது காவிரி ஆறேயாகும். 'சோழ நாடு சோறுடைத்து' என்னும் பழமொழியை நிலைபெறச் செய்தது காவிரி ஆறே. காவிரி ஆற்றுக்குப் 'பொன்னி' என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
காவிரி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் உலகப் பகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினம் (புகார்) என்னும் துறைமுக நகரம் இருந்தது.
உறையூர் (உறந்தை)
சோழநாட்டின் தலைநகரம் உறையூர் என்றும், உறந்தை என்றும் வழங்கப்பட்டது. இது உள்நாட்டில் காவிரி ஆற்றின் தென்கரையில் இருந்தது. உறையூர், கோட்டைமதில் சூழ்ந்த நகரம். இந்த மதிலுக்கு வெளியே ஆழமான அகழியும், அகழியைச் சூழ்ந்து மிளைக்காடும் இருந்தன. உறையூருக்குக் 'கோழி' என்றும் ஒரு பெயர் உண்டு. உறையூர்க் கோட்டைக்குள்ளே சோழ அரசனுடைய அரண்மனை இருந்தது. உறையூர்த் தெருக்களில் ஒன்றன் பெயர் ஏணிச்சேரி (சேரி - தெரு), முடமோசியார் என்னும் புலவர் அந்தத் தெருவில் வாழ்ந்திருந்தார். உறையூருக்கு எதிர்க்கரையில் (திருவரங்கம்) இருந்தது. உறையூருக்குக் கிழக்கே திருச்சிராப்பள்ளி மலை இருந்தது[6]. தாலமி[7] என்னும் யவனர் ஓர்தொவுர[8] என்று குறிப்பிடுவது இந்த உறையூர்தான். ஓர் தொவுர சோர் நகரின் (சோழ நகரின்) தலைநகரம் என்று தாலமி கூறுவது சிந்திக்கத்தக்கது. சோழர், நாகர் இனத்தைச் சேர்ந்தவர் என்று அவர் கருதுகின்றார். உறையூரை உரகபுரம் என்று வடமொழியாளர் கூறியுள்ளனர்.
காவிரிப்பூம்பட்டினம்
காவிரியாறு கடலில் புகுமிடத்தில் வடகரையின்மேல் காவிரிப் பூம்பட்டினம் இருந்தது. உலகப் புகழ்பெற்றிருந்த இப்பட்டினம், புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. இதனைப் பௌத்த நூல்கள் கவீரப்பட்டினம் என்று கூறுகின்றன. இது பட்டினப்பாக்கம், மருவூர்ப் பாக்கம் என்று இரண்டு பிரிவாக இருந்தது. மருவூர்ப் பாக்கம் கடற்கரையை அடுத்து இருந்தது. மருவூர்ப்பாக்கத்தில் மீன்பிடிக்கும் பரதவரும், கொல்லர், கருமார், கன்னார், தச்சர், பொற்கொல்லர், இசைவாணர் முதலான தொழிலாளரும் நடுத்தர மக்களும் வாழ்ந்தனர். பல பொருள்களை விற்கும் கடைவீதிகள் மருவூர்ப் பாக்கத்திற்கும் பட்டினப்பாக்கத்திற்கும் இடையில் இருந்தன. மருவூர்ப் பாக்கத்துக்கு மேற்கே பட்டினப்பாக்கம் இருந்தது. பட்டினப்பாக்கத்தைச் சூழ்ந்து நாற்புறமும் கோட்டை மதில்கள் இருந்தன. மதில்களுக்கு வெளியே அகழி இருந்தது. கோட்டைக்குள் இருந்த பட்டினப்பாக்கத்தில் செல்வரும் பெருங்குடி மக்களும் வாழ்ந்தனர். சோழ அரசருடைய அரண்மனை ஆற்றங்கரைப் பக்கமாகப் பட்டினப்பாக்கத்தில் இருந்தது.
காவிரிபூம்பட்டினத்தின் துறைமுகம் உலகப் புகழ் பெற்றிருந்தது. இந்தத் துறைமுகத்திற்குப் பாரத நாட்டின் பல திசைகளிலிருந்தும் கடல் வாணிகர் வந்தனர். யவன வாணிகரும் இங்கு வந்தனர். 'பெரிபுளூஸ்'[9] என்னும் கடற்பயண நூல் இத்துறைமுகத்தைக் 'கமரா'[10] என்று கூறுகிறது. தாலமி என்னும் யவனர் இதனைச் 'சபரிஸ்'[11] என்று கூறுகிறார். காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிச் சங்கப்பாடல்கள் கூறுகின்றன. இங்கு நடந்த ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களையும், வாணிகத்தையும் பற்றிப் 'பட்டினப்பாலை' கூறுகிறது. மணிமேகலை, சிலப்பதிகாரக் காப்பியங்களிலும் இதன் சிறப்புக் கூறப்படுகிறது. கடல் வாணிகர்களும் (மாநாய்கர்), தரை வாணிகர்களும் (மசாத்துவர்) இந்நகரத்தில் வாணிகம் செய்தார்கள். சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் தலையாய துறைமுகமாகவும்[12] பெரிய வணிக நகரமாகவும் இருந்தது.
குடந்தை
சோழ நாட்டில் சங்ககாலத்தில் இருந்த ஊர்களில் குடந்தையும் ஒன்று. குடந்தை இக்காலத்தில் கும்பகோணம் என்று வழங்கப்படுகிறது. சோழரின் பெருநிதி இவ்வூரில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.[13] குடந்தையைச் சூழ்ந்து கோட்டை மதில் இருந்தது. மதிலைச் சூழ்ந்து அகழி (கிடங்கு) இருந்தது. அகழியில் நீலப்பூக்கள் மலர்ந்திருந்தன[14]. குடந்தைக்கு அருகில் இருந்த குடவாயில் என்னும் ஊரில் குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர் வாழ்ந்தார். குடவாயிலில் சோழர் சிறைச்சாலை அமைத்திருந்தனர் எனத் தெரிகிறது[15].
ஆர்க்காடு
ஆர்க்காடு என்னும் பெயர் ஆத்தி மரத்தினால் வந்த பெயர். 'ஆர்' என்றால் ஆத்தி மரம், அத்திப்பூமாலையைச் சோழர் அணிந்தனர். பழங்காலத்தில் மரங்களின் பெயரையே ஊர்ப் பெயராக வைத்தனர். ஆலங்காடு, வேற்காடு, கடம்பங்காடு என்பனபோல ஆர்க்காடு என்பதும் மரங்களினால் வந்த பெயர்.
சோழநாட்டில் ஆர்க்காட்டுக் கூற்றம் என்னும் பிரிவு சங்க காலத்திலும் பிற்காலத்திலும் இருந்தது. ஆர்க்காட்டுக் கூற்றத்தின் தலை நகரம் ஆர்க்காடு. ஆர்க்காடு நகரம் சங்ககாலத்தில் பெரிய நகரமாக இருந்தது[16]. அழிசி என்னும் சோழன் ஆர்க்காட்டில் இருந்தான்[17]. 'தாலமி' என்னும் யவனர் சோரையரின் (சோழரின்) தலைநகரம் அர் கொடஸ்[18] என்று கூறுவது இந்த ஆர்க்காட்டையே. இந்தச் சோழநாட்டு ஆர்க்காடு[19] தொண்டைநாட்டு ஆர்க்காடு அன்று, இது வேறு; அது வேறு, சோழ அரசனை உள்ளிட்ட எழுவரைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னுமிடத்தில் வென்றான் என்பது வரலாறு. இந்த ஆலங்கானம் சோழநாட்டு ஊர் என்று நம்பப்படுகிறது.
பிடவூர்
சோழநாட்டில் இருந்த இவ்வூர் உறையூருக்குக் கிழக்கில் இருந்தது. இங்கு இருந்த வேள் அரசர் பிடவூர்கிழார் என்று பெயர் பெற்றிருந்தனர். பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவனை நக்கீரர் பாடியுள்ளார்[20].நெய்தலங்கானல்
இது சோழநாட்டில் காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் தென்வடலாகக் கடற்கரை ஓரத்தில் இருந்த நீண்ட கடற்கரைப் பகுதி ஆகும். இங்கு இளஞ்செட்சென்னி என்னும் சோழன் இருந்தான். ஆகையால், அவன் 'சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி' என்று கூறப்பட்டான். நெய்தலங்கானலில் உப்பளங்கள் இருந்தன[21]. பரதவர் (மீன் பிடிப்போர்) இருந்த குப்பங்களும் இருந்தன. நெய்தலங்கானல், பிற்காலத்தில் சோழ மண்டலக் கரை என்று பெயர் பெற்றிருந்தது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் 'கும்பினி'யார் இதைக் 'கொரமாண்டல் கோஸ்ட்'[22] என்று கூறினார்கள்.
குராப்பள்ளி
இவ்வூரில் குராப்பள்ளி என்று பெயர்பெற்ற சோழர் அரண்மனை இருந்ததாகத் தெரிகிறது. கிள்ளிவளவன் என்னும் சோழன் இங்கு இறந்துபோனான். ஆகவே அவன் 'குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்' என்னும் பெயர் பெற்றான்[23].
கழார்
சோழநாட்டில் காவிரிக்கரையில் இருந்த கழார் என்ற ஊருக்கு[24] மத்தி என்பவன் தலைவனாக இருந்தான்[25]. 'மத்தி', பரதவர் (நெய்தல் நிலத்து மக்கள்) கோமான்[26]. காவிரியில் நீர்ப்பெருக்கு வரும்போது கழார்ப் பெருந்துறையில் நீராட்டுவிழா நடந்தது[27]. அந்த நீராட்டுவிழா மிகச் சிறப்பாக நடந்ததாகத் தெரிகிறது. சோழன் கரிகாலன் அந்த விழாவுக்குத் தன்னுடைய சுற்றத்தோடு வந்து கண்டு மகிழ்ந்தான்[28].
போர் (போரூர், போர்வை)
இவ்வூர் போரூர் என்றும், போர்வை என்றும், திருப்போர் என்றும் கூறப்பட்டது. இது சோழநாட்டில் காவிரி ஆற்றங்கரை மேல் இருந்தது. இவ்வூரில் கொங்குச் சேரருக்கும் சோழருக்கும் வெவ்வேறு காலத்தில் பல போர்கள் நடந்தன. இவ்வூரில் பழையன் என்னும் சிற்றரசன் ஆண்டுவந்தான்[29]. இவன் சோழ அரசர் சார்பில் நாடு காவல் பணி பூண்டிருந்தவனாவான்.
பொத்தி
இது சோழநாட்டிலிருந்த ஓர் ஊராகும். பெருஞ்சோழன் என்பவன் இவ்வூரை அரசாண்டான். இவ்வூரில் இருந்த புலவர் பொத்தியார் என்று பெயர்பெற்றார். பெருஞ்சோழன் வடக்கிருந்து (உண்ணா நோன்பிருந்து) உயிர்விட்டபோது அவனுடைய நண்பரான இந்தப் பொத்தியாரும் அவனுடன் வடக்கிருந்து உயிர்விட்டார்[30].
தலைச்செங்காடு
தலைச்செங்காடு என்னும் இவ்வூர் தலைச்செங்கானம் என்றும் கூறப்படும். காவிரிப்பூம்பட்டினத்துக்குத் தென்மேற்கே இது உள்ளது. இவ்வூரில் மாடலன் என்னும் மறையவன் இருந்தான். அவன் உலகியலை நன்கு அறிந்தவன். காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன் இருந்த காலத்தில் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் மாடலன் நன்கு அறிந்திருந்தான். குமரி, காசி (கங்கை) முதலான ஊர்களுக்குச் சென்று இவன் நீராடி மீண்டான். சேரன் செங்குட்டுவனுக்கும் இவன் நண்பனாக இருந்தான். கோவலன், கண்ணகியுடன் மதுரைக்குச் சென்று கவுந்தியடிகளுடன் இருந்தபோது மாடலன் குமரியில் நீராடிச் சோழ நாட்டுக்குத் திரும்பிவரும் வழியில் மதுரையில் தற்செயலாக அவர்களைச் சந்தித்தான். கண்ணகிக்குச் செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்தபோது அவ்விழாவுக்கும் சென்றிருந்தான்.சாய்க்காடு
இக்காலத்தில் இது திருச்சாய்க்காடு என்று கூறப்படுகிறது. இதற்குச் சாயாவனம் என்னும் பெயரும் உண்டு. 'நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க் கானம்' என்றும்[31] "செந்நெலஞ் செறுவின் அன்னந் துஞ்சும், பூக்கெழு படப்பைச் சாய்க்காடு' என்றும்[32] இது சிறப்பிக்கப்பட்டுள்ளது.
வல்லம்
இது சோழநாட்டிலிருந்த ஊர். இவ்வூர் கோட்டை மதிலினால் சூழப்பட்டு, மதிலுக்கு வெளிப்புறத்தில் மிளைக்காடுகளால் அரண் செய்யப்பட்டிருந்தது. வல்லத்துக் கோட்டையை ஆரியப் படை தாக்கிப் போர் செய்தது. அப்போது வல்லத்து வீரர்கள் அவர்களைத் தாக்கினார்கள். தாக்குதலுக்கு எதிர்நிற்க முடியாமல் ஆரியப்படை சிதறி ஓடிப்போயிற்று[33]. வல்லத்தின் தலைவனாக இருந்தவன் சோழர் குலத்தைச் சேர்ந்த நல்லடி என்பவன்.
வெண்ணி
இவ்வூர் இக்காலத்தில் கோயில்வெண்ணி என்று கூறப்படுகிறது. இது, தஞ்சாவூருக்குக் கிழக்கே இருபத்து நான்கு கி. மீ. தொலைவில் இருக்கிறது. இந்த ஊரில் சில போர்கள் நடந்துள்ளன. பாண்டியனும் சேரனும் பதினோரு வேள் அரசரோடு வந்து போர் செய்தபோது, கரிகாற்சோழன் அவர்களை வென்றான்[34]. கரிகாற் சோழனுடைய இந்த வெற்றியைப் பாடிய வெண்ணிக்குயத்தியார் இந்த ஊரிலிருந்த புலவர்.
சோழர் குடியின் தொன்மை
இலக்கியச் சான்று
பன்னெடுங் காலமாகத் தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்து வந்தனர். 'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்' என்று தமிழகத்தைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார்[35]. மற்றும், சோழர் குடியின் அடையாளச் சின்னமாக ஆத்திப் பூமாலையை[36] அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கியத்துள் காலத்தால் முந்தியது தொல்காப்பியம். சற்றேறக்குறைய கி. மு. நான்காம் நூற்றாண்டு அளவில் இந்நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்[37]. இந்த இலக்கியச் சான்றுகளால் சோழர்குடி மிகவும் தொன்மையானது என்பது புலனாகிறது. நெடுங்காலமாக ஆட்சி செய்துவந்த அரசகுடி எனும் பொருளிலேயே 'படைப்புக் காலந் தொட்டு' இந்நாட்டை ஆண்டு வரும் குடி என்று நம் முன்னோர்கள் போற்றியுள்ளனர்[38].
வடமொழி இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுள் சோழ அரச மரபைப்பற்றிச் சில குறிப்புகள் காணப்படுகின்றன. பாணினியின் இலக்கணத்திற்குக் காத்தியாயனர் உரை எழுதியுள்ளார். ஓர் இலக்கண விதிக்கு எடுத்துக்காட்டாகச் 'சோழர்' என்னும் பெயரை அவர் எடுத்துக் காட்டியுள்ளார்[39]. அவருடைய காலம், மௌரியப் பேரரசர்க்கு முற்பட்ட நவநந்தரின் ஆட்சிக்காலம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அக்காலத்திலேயே (கி. மு. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி) சோழ அரசமரபு புகழ்பூத்து விளங்கியமை இதனால் புலனாகின்றது.
கல்வெட்டுச் சான்று
மௌரியப் பேரரசன் அசோகனுடைய (கி. மு. 272 - 232) கல் வெட்டுகளில் தமிழக வேந்தர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றுள் சோழ அரசமரபே முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது[40]. மௌரியப் பேரரசனுடைய ஆதிக்கத்திற்குட்படாது. தன்னுரிமைத் தனியரசுகளாகச் சோழ, பாண்டிய, சேர அரசுகள் விளங்கியமையும் தெரியவருகிறது. இக்குறிப்புகளால் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு அளவிலேயே சோழப்பெருவேந்தரின் குடி, வடஇந்திய மக்களின் கருத்தைக் கவரத்தக்க நிலையில் பெருவாழ்வு பெற்றிருந்தமை தெளிவாகத் தோன்றுகிறது.அயல்நாட்டார் குறிப்பு
கிறித்தவ நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட கிரேக்கக் கடலோடிகளின் பயணக் குறிப்பேடுகளில் தமிழ் நாட்டின் பல பகுதிகளைப்பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சோழரைப்பபற்றியும், அவர்களுடைய நாட்டைப்பற்றியும், அவர்களுடைய பட்டினங்களைப் பற்றியும் புகழ்மிக்க குறிப்புகள் காணப்படுகின்றன.
சோழ மன்னரைப் பற்றிய பழங்கதைகள்
சங்க காலத்தின் பிற்பகுதியில் (கி. பி. 200 - 300) சோழ மன்னர்களைப் பற்றிய பல பழங்கதைகள் வழக்கிற்கு வந்துள்ளன. அக்கதைகள் எல்லாம் வரலாற்றுக் காலச் சோழர்களுக்கு முற்பட்ட சில மன்னர்களைச் 'சோழர்குடியின் மூதாதையர்' என்று அறிவிக்கின்றன. அச்சோழ அரசர்கள் தெய்வீகத் தன்மையுடையவர்களாகவும், அற்புதச் செயல்கள் பலவற்றைப் புரிந்தவர்களாகவும் போற்றப்படுகின்றனர். இத்தகைய பழங்கதைகள் பெரிதும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில் பயின்று வழங்குகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் இவை அருகிய வழக்குடையனவாகவே உள்ளன. எனவே, இக்கதைகளைச் சோழரைப் பற்றிய பழங்கதைகள் எனக் கொள்ளுவதே பொருத்தமாகும். இக்கதைகளால் அறியப்படும் சோழ மன்னர்களின் வரலாற்றைக் காண்போம்.
காந்தமன்
காந்தமன் என்னும் சோழ அரசன் காவிரி ஆற்றைச் சோழ நாட்டில் பாயச் செய்தான் என்னும் புராணக் கதையை மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது. காந்தமன் குடகுமலையில் இருந்த அகத்திய முனிவரிடம் சென்று, அவரை வேண்ட அவர் தம்மிடமிருந்த கமண்டலத்து நீரைக் கவிழ்த்தாராம். அந்த நீர் காவிரி ஆறாகப் பாய்ந்து சோழநாட்டில் புகுந்து வந்ததாம். இந்தக் கதையை மணிமேகலைக் காப்பியப் பதிகங் கூறுகிறது[41].
சோழன் காந்தமனைப்பற்றிய இன்னொரு புராணக் கதையையும் மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது. காந்தமன் காலத்தில், பரசுராமன் அரசர் குலத்தை எல்லாம் அழித்துக்கொண்டு வந்த போது சோழ நாட்டுக்கும் வந்தான். அப்போது கன்னித் தெய்வம் (கொற்றவை) அரச பதவியை விட்டுச் சில காலம் எங்கேனும் போயிருக்கும்படி காந்தமனுக்கு யோசனை கூறிற்றாம். அந்த யோசனைப்படி காந்தமன் தன்னுடைய கணிகையின் மகனான சுகந்தன் என்பவனிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டுத்தான் திரும்பிவருமளவும் ஆட்சி செய்யுமாறு கூறிச் சென்று விட்டானாம். பரசுராமன் வந்தபோது அரச குலத்தவன் அல்லாத ஒருவன் ஆட்சி செய்வதைக் கண்டு சுகந்தனைக் கொல்லாமல் போய்விட்டானாம். பரசுராமன் போன பிறகு காந்தமன்திரும்பி வந்து சோழநாட்டை அரசாண்டானாம்[42].
சுகந்தன்
இவன் சோழர் குலத்து மன்னன் அல்லன். மேலே கூறப்பட்ட காந்தமன் என்னும் சோழனுடைய காதற் கணிகையின் மகன். மேலே கூறப்பட்ட காரணத்தினாலே இவன் சோழ நாட்டைச் சில காலம் அரசாண்டான். இவன் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து அரசாட்சி செய்தபோது இரண்டு நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. இவ்வரசனுடைய இளைய மகன், காவிரியாற்றில் நீராடி வீடு திரும்பிச் சென்ற மருதி என்பவளைக் கண்டு அவளைத் தன்னுடன் வரும்படி அழைத்தான். அவள் மனம் நொந்து பூதசதுக்கத்தில் உள்ள காவல் பூதத்தின் கோயிலில் சென்று சுகந்தன் மகனுடைய தகாத செயலைக் கூறி முறையிட்டாள். அதற்கு அந்தப் பூதம், 'அரசன் இந்தக் குற்றத்துக்குத் தண்டனை கொடுக்காவிட்டால், பிறகு நான் முறை செய்வேன்; நீ உன் இல்லத்துக்குப் போ' என்று கூறிற்று. பிறகு சுகந்த அரசன் தன்னுடைய மகன் செய்த தகாத செயலையறிந்து விசாரித்துத் தன் மகனை வாளினால் வெட்டிவிட்டான். இதனை மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது[43].
இது நடந்த பிறகு சில காலம் கழித்துச் சுகந்தனுடைய மூத்த மகன் தன்னுடைய தம்பியின் மரணத்துக்குக் காரணமாயிருந்த அந்த மருதி வீதிவழியே சென்றபோது, தன்னுடைய குடுமியில் சூடியிருந்த பூமாலையை எடுத்து அவள் கழுத்தில் இடுவதற்குக் கையை அவன் உயர்த்திய போது, அந்தக் கை உயர்த்தியபடியே (தாழாமல் நின்று விட்டது) தன்னுடைய மகன் செய்யக் கருதிய தகாத செயலை அறிந்த சுகந்தன் அந்த மகனையும், மகனென்று கருதாமல் வாளால் வெட்டிவிட்டான் என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது[44].
சிபிச் சோழன் (செம்பியன்)
சிபிச் சோழன் அரசாண்ட காலத்தில் ஒரு நாள் வல்லூறு என்னும் பறவை ஒன்று தீனிக்காகப் பறந்து அலைந்தது. அப்போது அது ஒரு புறாவைக் கண்டு அதை அடித்துத்தின்று பசியாற எண்ணி, அப்புறாவின்மேல் பாய்ந்தது. உயிர்தப்பிப் பிழைக்க அந்தப் புறா, தனக்குப் புகலிடம் கிடைக்காமல் சிபிச் சோழனிடம் வந்து அடைக்கலம் புகுந்தது. வல்லூறும் அவனிடம் வந்து தன்னிடம் புறாவைக் கொடுக்கும்படி கேட்டது. சிபி அதற்கு இணங்காமல் புறாவின் எடைக்குச் சமமாகத் தன்னுடைய உடம்பிலிருந்து தசையை அறுத்துக் கொடுப்பதாகக் கூறினான். அவன் தராசு கொண்டு வரச்சொல்லி, அதில் ஒரு தட்டில் புறாவை வைத்து, மற்றொரு தட்டில் தன்னுடைய உடம்பிலிருந்து தசையை அறுத்து வைத்து நிறுத்தான்; ஆனால், புறாவின் எடை அதிகமாக இருந்த படியால், தானே தராசில் அமர்ந்தான். அப்போது தராசு சம எடையாக இருந்தது. உடனே தெய்வம் தோன்றி அவனுக்கு வரங்கள் கொடுத்து, அவனுடைய உடம்பை முன்பு இருந்தது போலச் செய்ததாம். இந்தக் கதை புத்த ஜாதகக் கதையில், சிபி ஜாதகத்தில் கூறப்படுகிறது. அதே கதை, இந்தச் சிபிச் சக்கரவர்த்தியைப் பற்றியும் கூறுகிறது. சங்க காலத்துப் புலவர்களும் இந்தக் கதையைக் கூறியுள்ளனர்[45].
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையார், அவன் சிபிச் சோழனுடைய பரம்பரையில் வந்தவன் என்று கூறுகிறார். இந்தச் சோழனைப் பாடிய கோவூர்கிழாரும் இவ்வாறே கூறுகிறார்[46]. இவன் செம்பியன் என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிறான்.
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானைப் பாடிய தாமப்பல் கண்ணனார், அந்தச் சோழன் சிபிச் சோழனுடைய பரம்பரையில் வந்தவன் என்று கூறுகிறார்[47]. சிலப்பதிகாரமும் சிபிச் சோழன் கதையைக் கூறுகிறது[48]. மேலும், சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையிலும் (51 - 52), கட்டுரை காதையிலும் (55) வரந்தருகாதை (அம்மானை வரி)யிலும் இந்தக் கதை கூறப்படுகிறது.
முசுகுந்தன்
தேவலோகத்தில் இந்திரனுக்கும் அவுணர்க்கும் போர் நடந்ததாம். அந்தக் கடும்போரிலே சோழன் முசுகுந்தன் தேவலோகத்துக்குப் போய் இந்திரன் சார்பாக அவுணரோடு போர் செய்து வெற்றி பெற்றானாம். மகிழ்ச்சியடைந்த இந்திரன், 'உமக்கு வேண்டும் வரத்தைக் கேள்' என்று கூற, தனக்குப் போரில் உதவி செய்த பூதத்தைத் தன்னுடைய சோழநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்று முசுகுந்தன் விரும்பிக் கேட்டனாம். இந்திரனும் அந்தப் பூதத்தை அனுப்ப, சோழன் அந்தப் பூதத்தைக் காவிரிப்பூம்பட்டினத்தில் நகர்க்காவலுக்காக இருக்கச் செய்தானாம். அந்தப் பூதம் இருந்த இடம் பூதசதுக்கம் என்று பெயர் பெற்றிருந்தது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இதற்கு உரையையும் விளக்கத்தையும் அடியார்க்கு நல்லார் தருகிறார். மிக்க வேகத்தினையுடைய அசுரர் கூட்டமாக வந்து நெருங்கி இந்திரனது நகரைக் காத்த புலிபோன்ற வலிமையுடைய முசுகுந்தனுக்குத் தோற்றுப் பின்பு தம்மில் ஒத்துக்கூடி அம்முசுகுந்தனது நெஞ்சமும் இருள்கூரும்படி செலுத்திய அத்திரத்தைப் போக்கிய பெரிய பூதத்தை அவ்வண்ணல் பொருட்டு இந்திரனேவலால் போந்து அப்புகாரிலிருந்து அது பலியுண்ணும் நாளங்காடியிடம் தங்கியது[49].
'என் சொல்லியவாறோவெனின், அங்ஙனம் விட்ட அம்பு கண்ணையும் மனத்தையும் புதைத்தலாற் போர்த்தொழிலொழிந்து நின்ற முசுகுந்தற்கு அவ்விருளுடைதற்குக் காரணமானதோர் மந்திரத்தையருள அதனால் வஞ்சங்கடிந்த அவுணரைக் கொன்றுகுவித்து நின்றானைக் கண்ட இந்திரன், அவரை எங்ஙனம் வென்றுகுவித்தா யென்றாற்கு இவன் இப்பூதத்தின் செயலெனக் கேட்ட இந்திரன். அப்பூதத்தை அவன்பொருட்டு மெய்க் காவலாக ஏவுதலின் ஆங்கு நின்றும் போந்து ஈங்குப் புகாரினுள்ளிருந்து பலியுண்ணும் நாளங்காடியிடம்[50] தங்கியது. மணிமேகலைக் காப்பியமும் இந்த முசுகுந்தனைக் கூறுகிறது[51].மனுச் சோழன்
மனுச் சோழன் சோழநாட்டுத் திருவாரூரில் நீதி தவறாமல் அரசாண்டான்; ஏழை எளியவரும் நீதி பெறுவதற்காக ஆராய்ச்சி மணியொன்றைக் கட்டிவைத்தான்; அந்த மணியில் நீண்டகயிற்றைக் கட்டி அரண்மனை வாயிலிலிருந்து இழுத்து மணி அடிக்க வாய்ப்பாகக் கட்டி வைத்தான். இவன் நடு நிலைமையோடு நீதியாகச் செங்கோல் செலுத்திய காலத்தில். இவனுடைய ஒரே மகன், தேரை ஓட்டிக்கொண்டு தெருவில் செல்லும்போது, பசுவின் இளங்கன்று ஒன்று துள்ளியோடித் தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டு இறந்துவிட்டது. அதைக் கண்ட தாய்ப்பசு கதறி அழுது, அரண்மனை வாயிலுக்கு வந்து ஆராய்ச்சி மணிக் கயிற்றை இழுத்தது. அதனால், மணியோசை கேட்க, அரசன் வந்து பார்த்து பசுவின் இளங்கன்று தன் மகனுடைய தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டு இறந்ததை அறிந்து தன் அமைச்சரிடம் தன் மகனைத் தேர்ச் சக்கரத்தில் மடியும்படி செய்ய ஆணையிட்டான். அமைச்சர் அதனைச் செய்ய மனமின்றித் தற்கொலை செய்து கொண்டார். அதனை அறிந்த மனுச்சோழன் தானே தேரைச் செலுத்தி அதன் சக்கரத்தில் தன் மகனை அகப்படுத்தின் கொன்றான்[52]. இதைக் கண்டு வியந்த தேவர்கள், அவனிடம் வந்து மெச்சிப் புகழ்ந்து, இறந்து போன அமைச்சரையும் அரசகுமாரனையும் உயிர்ப்பித்துக் கொடுத்தனர் என்பது இவனைப்பற்றிய புராணக் கதை. இந்தப் புராணக் கதையைப் பெரியபுராணத்தில் காணலாம்[53].
கி. மு. முதல் நூற்றாண்டில் இலங்கையை அநுராதபுரத்திலிருந்து அரசாண்ட சோழநாட்டுத் தமிழனாகிய ஏலேல சிங்கனும் மனுச்சோழனைப் போலவே தன் மகன் பசுவின் கன்றைத் தேர்ச் சக்கரத்தில் அகப்படுத்திக் கொன்ற குற்றத்திற்காகத் தானே தன்னுடைய தேரின் சக்கரத்தில் தன்னுடைய ஒரே மகனை அகப்படுத்திக் கொன்றான் என்று மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது. ஆனால், தேவர்கள் வந்து இறந்து போன மகனை உயிர்ப்பித்துக் கொடுத்ததாக அந்நூல் கூறவில்லை[54].மனுச் சோழனின் புராணக் கதையைச் சிலப்பதிகாரம் கூறுகிறது[55]. மணிமேகலைக் காப்பியம் 'மகனை முறைசெய்த மன்னவன்'[56] என்று கூறுகிறது.
தொடித்தோட் செம்பியன்
தூங்கெயில் எறிந்த
வானம் என்பது ஓர் ஊர். (இந்த ஊர் வானியாற்றுப் பகுதியில் இருந்தது என்று பெயரமைதி நோக்கிக் கொள்ளலாம்.) அவ்வூரில் கடவுள் அஞ்சி என்பவன் ஒரு கோட்டை கட்டியிருந்தான். அந்தக் கோட்டையின் கதவு மேலிருந்து தொங்கும்படி அமைக்கப் பட்டிருந்தது (இக்காலத்துச் சுருள் கதவு போன்றது). அதனால், அது தூங்கும் எயிற்கதவம் எனப்பட்டது. இதனை வண்டன் என்னும் பெருஞ்செல்வன் காவல் புரிந்து வந்தான்[57]. (இந்தக் கோட்டை அரசக் கருவூலப் பாதுகாப்பாக அமைந்திருந்தது எனலாம்.) 'தூங்கு எயிற்கதவம்' என்பது 'தூங்கெயில்' என்று சுருக்கமாக வழங்கப்பட்டது.
தொடித்தோட் செம்பியன் என்று சிறப்பித்துக் கூறப்பட்ட சோழ அரசன் இந்தத் தூங்கெயில் கோட்டையைத் தாக்கி அழித்தான். இதனால், 'தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்' என்று வழங்கப்பட்டான். இவன் இக்கோட்டையை அழித்தது இவனது பேராற்றலை வெளிப்படுத்தும் செயலாகும்[58].
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இந்தச் செம்பியனின் வழிவந்தவன் என்று குறிப்பிடப்படுகிறான்.
தூங்கெயில், 'தூங்கெயில் கதவம்' என்று விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. இக்கோட்டைக் கதவை அழித்த இச்சோழன. 'நற்றோர்ச் செம்பியன்' என்றும் வழங்கப்பட்டான்[59]. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன்[60]. செம்பியன் என்னும் அரசன் கழுமலம் என்னும் ஊரைத் தாக்கி வென்றான்[61].அகப்பா என்னும் கோட்டையை அழித்துப் பகற்பொழுதிலேயே தீக்கிரையாக்கிய சோழன் ஒருவன் பெயரும் செம்பியன் ஆகும்[62].
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம் தோற்றுப்போன எழுவருள் ஒருவன் செம்பியன்[63].
புறாவுக்காகத் தன்னையே நிறுத்துத் தந்த சோழனது பெயரும் செம்பியன் என்று கூறப்படுகிறது[64]. கழுமலப் போரில் சேரனை வென்ற சோழனது பெயரும் செம்பியன் என்று கூறப்படுகிறது[65].
தொடித்தோட் செம்பியன் எறிந்த தூங்கெயில் மூன்று என்றும், அவை உயர்விசும்பில் இருந்தன என்றும் கூறப்படுவது[66] வியப்பேயாகும். மூன்று என்பது வானம், கழுமலம், அகப்பா என்னும் ஊர்களிலிருந்த மூன்று கோட்டைகளைக் குறிப்பதாகலாம்.
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் புகாரில் இந்திர விழாவினை முதன் முதலாகத் தொடங்கி வைத்தான் என்றும் கூறப்படுகிறது[67]. இவனது வேண்டுகோளின்படி விண்ணவர் தலைவனான இந்திரன் புகார் நகரில் இந்திர விழா நடைபெறும் 28 நாளிலும் வந்திருந்து பூசனையை ஏற்றுக்கொண்டானாம்.
இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும்போது,
1. புறாவுக்காகத் துலைபுக்க செம்பியன்,
2. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்,
3. அகப்பா எறிந்த செம்பியன்,
4. கழுமலம் எறிந்த செம்பியன்,
5. களவழித் தலைவன் செம்பியன்
என்னும் 5 நிலைகளைக் காணலாம். இந்த 5 பெயர்கள், எத்தனை அரசர்களைக் குறிப்பன என்பது தெரியவில்லை.
செம்பியர் குடியைப் பற்றிய குறிப்பும் உண்டு[68].
சோழர் குடிப்பெயர்
'சோழர்' எனும் பெயர் உணர்த்தும் பொருள் யாது? எனும் ஐயம் தோன்றலாம். 'சோழர்' என்பது பன்மைப் பெயர். 'சோழன்' எனும் சொல்லிற்கு விளக்கம் பன்னிருபாட்டியல் எனும் இலக்கண நூலில் தரப்பட்டுள்ளது. ‘சோழன்' என்பது ஒரு குடிக்கண் பிறந்தாரைச் சுட்டும் குடிப்பெயர்[69] என்பது அந்நூலினால் அறியப்படுகிறது.
சோழர் - சொல்லும் பொருளும்
இந்த அரச மரபிற்குச் 'சோழர்' என்னும் பெயர் எவ்வாறு வந்தது என்பதை இன்றைய நிலையில் எளிதில் அறிய இயலவில்லை. இதனை, இயற்பெயராகவே பண்டை அறிஞர்கள் கருதினர். ஆனால், இக்கால அறிஞர்கள் அச்சொல்லின் பொருளைக் காண முயன்றுள்ளனர். கர்னல் ஜெரினி[70] என்பார் வடமொழியில் 'கருமை' எனப்பொருள்படும் 'காள' என்னும் சொல்லோடும், 'கோல' என்னும் சொல்லோடும் தொடர்புபடுத்தி இச்சொல்லின் பொருளை விளக்க முயன்றுள்ளார். திராவிடருக்கு முற்பட்ட பழங்குடி மக்கள் கோலர்[71] என்பவராவர். அவர்கள் கரிய நிறம் வாய்ந்தவர்கள். அவர்களுடைய ஒரு கிளையினரே 'சோழ'ராக இருந்திருக்கலாம் என்பது அவருடைய கருத்தாகும். இக்கருத்து மொழியியல் அடிப்படையிலோ, மானிடவியல் அடிப்படையிலோ ஆராய்ச்சிக்குப் பொருந்தி வரவில்லை.
மற்றொரு சாரார். 'சோளம்' மிகுதியாக விளைந்த நாட்டினை ஆண்ட அரசமரபிற்குச் 'சோளர்' எனும் பெயர் அயலவரால் இடப்பட்டிருக்கலாம்; அப்பெயரில் உள்ள 'ளகரம்' நாளடைவில் 'ழகரமாக’த் திரிந்திருக்கலாம் என்பர். அல்லது 'திருடன்' எனப் பொருள் தரும் ‘சோரன்' என்னும் வடமொழிச் சொல்லின் திரிபாகச் சோழர் என்னும் பெயர் தோன்றி இருக்கலாம் என்று டி. ஆர். பந்தர்க்கர் கூறியுள்ளார்[72].
முதலாவதாக ‘ளகர' வொலி, 'ழகர'வொலியாகத் திரியும் என்னும் ஒலியியல் விதியினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கருத்து இது. இந்த ஒலித்திரிபு முறையை நாம் உடன்படலாம். ஆனால், புன்செய்ப் பயிரான 'சோளம்' மிகுதியாக விளையும் நாட்டைச் சுட்டுவது என்பது, நீர்வளமிக்க சோழநாட்டை அறியாதவர் கூற்றாகும். 'சோழநாடு சோறுடைத்து' என்பது பழமொழி. சோளமுடைத்து என்று இதுவரை யாரும் சொன்னதில்லை. மருதநிலமான சோழநாட்டில், பன்னெடுங்காலமாக நெல்லே பயிரிடப்பட்டு வருகிறது. எனவே, 'உண்மை அறியாதார் கூற்று' என இதை ஒதுக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
மற்றும் 'திருடன்' என்று பொருள் கூறுவது தமிழினத்தவரை இழித்துப் பேச நினைப்போரின் இழிந்த தன்மையாகும். மேலும், வல்லின 'றகரம்'தான் 'ழகரம்' ஆகத் திரியுமே ஒழிய, இடையின 'ரகரம்' 'ழகர'மாகத் திரியாது. இது தமிழ்மொழியின் இயல்பினை அறியாதவரின் விழைவார்ந்த விருப்பமாகத் தோன்றுகிறது.
உறையூருக்குக் 'கோழியூர்' என்று மற்றொரு பெயருமுண்டு. கோழியூரை ஆண்டவர் 'கோழியர்' எனப்பட்டனர். புறநானூற்றுப் பழைய உரையாசிரியர், 'கோழி' என்னும் சொல்லிற்கு 'உறையூர்' என்றே உரை எழுதியுள்ளார். 'கோழியர்' என்னும் சொல்லில் உள்ள பின்னண்ண ஒலியாகிய 'ககர' ஒலி, இடையண்ண ஒலியாகிய 'சகர'மாகத் திரியும் இயல்பு திராவிட மொழிகளில் காணப்படுகிறது. எனவே கோழியர் என்னும் சொல்லில் இருந்து சோழியர் சோழர் என்னும் சொற்கள் பிறந்திருக்கலாம் என்பது மற்றோர் அறிஞரின் கருத்து[73]. இந்த அறிஞர் கூறுவதற்குச் சான்றாக, இவ்வாறு திரிந்து வழங்கும் வேறு சொற்களைக் காட்டி இருந்தால், ஓரளவிற்கு இதனை ஒப்புக் கொள்ள இயலும்.மற்றொரு மொழியியல் அறிஞர் தந்துள்ள விளக்கம் நம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. திராவிட மொழிகளில் 'உகரம்', ஒகர மாகத் (உலக்கை - ஒலக்கை) திரிவது இயற்கை. இவ்வொலித் திரிபினை அடிப்படையாக்க கொண்டு ஆராய்ந்தால்,'சூழ் என்னும் வேர்ச்சொல்லடியாகச் 'சோழர்' என்னும் சொல் தோன்றி இருக்கலாம் என்பார். 'சூழ்வோர்' என்பது காலப்போக்கில் சோழர் எனத் திரிந்திருக்கலாம் என்பது அவருடைய கருத்தாகும்[74].
சூழ்வோர் என்பதற்குச் 'சுற்றியிருப்பவர்', 'ஆராய்வோர்', 'கருதுவோர்' என்பன போன்ற பல பொருள்கள் உண்டு. இவற்றுள் எப்பொருளும் பொருத்தம் உடையதாகத் தோன்றவில்லை. எனவே, 'சேரழர்' என்னும் குடிப்பெயரை, இடுகுறிப் பெயராகவே இன்று கொள்ளவேண்டியவர்களாக உள்ளோம்.
பல்வகைப் பெயர்கள்
பண்டைக் காலத்திய சோழ வேந்தர்கள், பல்வேறு வகையான குடிப்பெயர்களால் சுட்டப்பட்டனர். செம்பியன், சென்னி, கிள்ளி, வளவன் என்பன அவற்றுள் பெருவழக்குடைய பெயர்களாகும். 'சிபிச் சக்கரவர்த்தியின் மரபிலேயே வந்தவர்கள் சோழர்' என்னும் பழங்கதையின் வழி, செம்பியன் என்னும் பெயரானது சோழ மன்னர்களுக்கு வழங்கிய பொதுப் பெயராகவே தோன்றுகிறது. 'சென்னி' என்னும் பெயர் 'சென்னியர்' எனப்பன்மையிலே வழங்குகிறது[75]. சென்னி என்பதற்குத் தலை அல்லது முடி என்பது பொருள். சோழர் குடியில், முடிசூட்டிக் கொண்டு நாடாளும் உரிமை பெற்ற மூத்தமகன் வழிவந்த கிளைக் குடியை இது குறிப்பதாகலாம். 'கிள்ளி' என்னும் பெயர், பகைவரை முளையிலேயே கிள்ளி எறிவதில் வல்லவர் எனும் பொருளில் வழங்கப்பட்ட சிறப்புப் பெயராகலாம். நிலத்தைக் கிள்ளிச் (உழுது) செய்யப்படும் பயிர்த்தொழிலைச் சிறப்புறச் செய்தவர்கள் எனவும் இதற்குப் பொருள் கொள்ளலாம். இதுவும் ஒரு கிளைக்குடிக்குரிய பெயராக வழங்கி இருத்தல் கூடும்.'வளவன்' என்னும் பட்டப் பெயர், நிலவளம் நீர்வளமும் மிக்க நாட்டின் தலைவர் எனும் காரணத்தால் வழங்கிய பெயராகலாம். தமிழ் நாட்டினை வளமிக்க நாடாகச் செய்தவன் கரிகால் பெருவளத்தான். 'காடு கெடுத்து நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கிய' காரணத்தாலேயே, கரிகாலனைப் பெருவளத்தான் என்று புலவர்கள் போற்றினர். கரிகாலனுக்குப் பிறகு அவனுடைய குடியில் வந்த சோழ அரசர்களுக்குரிய சிறப்புப் பெயராக 'வளவன்' என்னும் பெயர் வழங்கலாயிற்று. திருமாவளவன், மாவளத்தான், கிள்ளிவளவன் என்னும் பெயருடைய சோழ அரசர்கள் கரிகாலனுக்குப் பிறகு சிறப்புற்று விளங்கியவராவர்.
1. கரிகாலனுக்கு முற்பட்ட சோழ வேந்தர்கள்
வேளிர்குடி அரசனான தித்தன் உறையூரில் இருந்துகொண்டு அரசாண்டபோது போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்னும் அரசன் போரில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடிக்கொண்டிருந்தான் என்பதும், இந்த வெற்றி நிகழ்ச்சிகளைக் கண்டு தித்தன் பொறாமை கொண்டிருந்தான் என்பதும் தித்தன் வரலாற்றில் குறிப்பிடப்படும்.
மற்றும் இரண்டாம் வெளியனிடமிருந்து உறையூர் ஆட்சியைக் கைப்பற்றியவன் முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளியாக இருக்கலாம் என்பது உய்த்துணரத்தக்கதாக உள்ளது.
(அ) (பெருநற்) கிள்ளி மரபினர்
இந்த உய்த்துணர்வுகள் 'பெருநற்கிள்ளி' என்னும் பெயர் கொண்ட அரசர்கள் செல்வாக்குப் பெற்று வளர்ந்ததைக் காட்டுவது ஆகும்.
பெருநற்கிள்ளி என்னும் பெயர் கொண்ட அரசர்களின் பெயர்கள் நான்கு வெவ்வேறு அடைமொழிகளுடன் காணப்படுகின்றன:
(1) போரவைக் கோப்பெருநற்கிள்ளி (பெருநற்கிள்ளி-1)
(2) முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி (பெருநற்கிள்ளி-2)
(3) வேல் பஃறடக்கைப் பெருநற்கிள்ளி (பெருநற்கிள்ளி-3)
(4) இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (பெருநற்கிள்ளி-4)
மேலே கண்ட வரிசை காலக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நாம் அமைத்துக் கொண்டதாகும். இந்தக் காலக் கண்ணோட்டத்துக்கு அடிப்படையாய் அமைந்த செய்திகள் அடுத்துள்ள அட்டவணையிலும் அதனை அடுத்த விளக்கத்திலும் தரப்படுகின்றன.
அரசர் | பாடிய புலவர் | பாடல் | |
போரவைக்கோப் பெருநற்கிள்ளி | சாத்தந்தையார், நக்கண்ணையார் |
புறம். 80, 81, 82, 83, 84, 85 | |
முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | ஷை 13 | |
வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி | கழாத்தலையார் | ஷை 368 | |
இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி | உலோச்சனார், ஔவையார், பாண்டரங்கண்ணனார், பேரிசாத்தனார் |
ஷை 377, ஷை 367, ஷை 16, ஷை 125 | |
மேலே கண்ட அட்டவணையில் ஒருவனைப் பாடிய புலவர் மற்றொருவனைப் பாடிய தொடர்புச் செய்தி காணப்படவில்லை. இந்த நிலையில் இவர்களைக் கால வரிசைப்படுத்த வேறு சான்றைத்தான் தேடவேண்டியுள்ளது.
மேலே கண்ட எட்டுப் புலவர்களால் பாடப்பட்டவேறு அரசர்களை நினைவுகூர்வோம்.
புலவர் | அரசர் | பாடல் |
சாத்தந்தையார் | தித்தன், ஆமூர்மல்லன், பொருநன் |
புறம். 80, ஷை 80, 81, 82, ஷை 82 |
நக்கண்ணையார் | அழிசி | நற். 87 |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | அந்துவஞ்சேரல், ஆய் அண்டிரன் |
புறம். 13, ஷை 127, 135, 247, 374, 375 |
கழாத்தலையார் | குடக்கோ நெடுஞ் சேரலாதன், பெருஞ்சேரலாதன், கரிகாலன் |
ஷை 62, 368, ஷை 65, ஷை 65 |
உலோச்சனார் | பெரியன் | அகம். 100, நற்.131 |
பாண்டரங்கண்ணனார் | ... ... | ... ... |
பேரிசாத்தனார் | மாந்தஞ்சேரல், மலையன், நன்மாறன் (இலவந்தி, கைப்பள்ளித் துஞ்சியவன்) |
புறம். 125, ஷை 125, ஷை 198 |
ஔவையார் | மாரி வெண்கோ பசும்பூட்பொறையன், உக்கிரப் பெருவழுதி (கானப் பேரெயில் கடந்தவன்), அதியமான், தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், பாரி, முடியன், வெள்ளிவீதி பரணர் |
ஷை 367, அகம். 303, புறம். 367, பல பாடல்கள், புறம். 95, ஷை 140, அகம். 303, நற்.390, அகம். 147, புறம். 99 |
சேர அரசர்களான அந்துவஞ்சேரலும், மாந்தரஞ்சேரலும் முறையே காலத்தால் முந்தியவரும் பிந்தியவரும் ஆவர் என்பது அவரது வரலாறுகளினால் தெரிகிறது. எனவே, அவர்களோடு தொடர்புடைய பெருநற்கிள்ளிகளான முடித்தலைக் கோவும், இராசசூயம் வேட்டவனும் முறையே காலத்தால் முற்பட்டவனும் பிற்பட்டவனும் ஆவர். எஞ்சியுள்ள இருவரில் போர்வைக்கோ, தித்தன் காலத்தவன் என்பது தெளிவாகத் தெரியும் சான்று. ஆதலால், முடித்தலைக்கோ மேற்கண்ட தித்தனின் மகனான வெளியனிடமிருந்து நாட்டைக் கைப்பற்றினான் என்பது நாம் முன்பு கூறியதுபோல் உய்த்துணரக் கிடப்பதாலும், போர்வைக் கோவை, முடித்தலைக் கோவிற்கு முந்தியவன் என்று கொள்கிறோம். எஞ்சியுள்ளவன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி. இவன் நெடுஞ்சேரலாதனோடு போரிட்டு மாண்டவன். சேர அரசர்களான அந்துவனும் உதியனும் சம காலத்தவர் ஆதலால், உதியனின் மகனான நெடுஞ்சேரலாதனோடு போரிட்டு மாண்ட வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியை முடித்தலைக் கோவுக்கு அடுத்த தலைமுறையினனாகக் கொள்ளலாம்.
இந்த முறையில் நாம் மேலே கண்ட காலநிரல் அமைவதைக் காணலாம். இனி இவர்களது வரலாறுகளைத் தனித்தனியே நோக்குவோம்.
பெருநற்கிள்ளி - 1
சோழ மன்னருள் காலத்தால் மிகவும் முற்பட்டவனாகத் தோன்றுகிறான். உறையூரை ஆண்ட முதல் சோழ அரசனாக இவன் விளங்கினான்.
போர்கள்
ஆமூர், முக்காவல் நாட்டின் தலைநகர். இந்த ஊரில் ஆமூர் அரசன் மல்லனுக்கும், போர்வை அரசன் (கோ) பெருநற்கிள்ளிக்கும் போர் நடந்தது.
இந்தப் போரில் சோழன் மல்லனைத் தாக்கினான்; மல்லனது ஊரிலேயே தாக்கினான். சோழன் போரிட்ட காட்சி கண்ணுக்குப் பெரு விருந்தாய் அமைந்திருந்தது. பசியால் பனைமரத்தை முரிக்கும் யானை போல அவன் போரிட்டான். ஒடியும் பனை மரம்போல் மல்லனது படை இரு பகுதியாகச் சிதைந்தது. சிதைந்தபடை பின்புறமும் வளைத்துக் கொண்டு சோழனைத் தாக்கியது. சோழன் மண்டியிட்டுக்கொண்டு முன்னும் பின்னும் திரும்பித்தாக்கிப் போரிட்டான்; பகைவர்களைக் கொன்று குவித்தான். இது ஆமூரில் நடந்த போர்[76].
போர்வை அரசன் பெருநற்கிள்ளி மற்றொரு போரில் ஈடுபட்டான். அந்தப் போர் ஊரைக் கைப்பற்ற வந்த பொருநனோடு நடத்திய போர்[77]. ஊரைக் கைப்பற்ற வந்த பொருநன் யார்? எந்த ஊரைக் கைப்பற்ற வந்தான்? எங்குப் போர் நடைபெற்றது என்பதைத் தெளிவாக உணர்த்தக்கூடிய சான்று இல்லை. இந்தப் போர் ஆமூரில் நடைபெறவில்லை என்பது மட்டும் உறுதி. ஆமூர் இந்தச் சோழனின் நாடு அன்றாகையால் இந்த உறுதி பெறப்படுகிறது.
பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் இவன் நிகழ்த்திய போர் ஒன்றைக் கண்டு பாடியுள்ளார். தம் இல்லத்தில் இருந்து கொண்டே போரைக் கண்டிருக்கிறார்[78]. எனவே, அவர் கண்ட போர் பெருங்கோழியூரில் நடைபெற்றது என்பது தெளிவாகிறது. உறையூருக்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு. பேரரையும் சிற்றரையும் என்பன ஓர் ஊரின் பகுதிகளாய் விளங்கியமை போலப் பெருங் கோழியூர் என்பது கோழியூரின் ஒரு பகுதியாய் விளங்கியிருக்கலாம். இந்த வகையில் இப்போர் உறையூரில் நடந்தது என்று கொள்கிறோம்.
உறையூரைக் கைப்பற்ற வந்தவன் யார்? 'பொருநன்' என்று பாடல் கூறுகிறது[79].
தலையாலங்கானத்துப் போரில் நெடுஞ்செழியனை எதிர்த்த எழுவருள் ஒருவன் 'பொருநன்' என்னும் பெயர் கொண்டவன்[80]. இந்தப் பொருநன் தான் இந்தத் தாக்குதலைச் செய்தவனா என்று எண்ண இயலாது. தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் காலத்தால் மிகவும் பிற்பட்டவனாவான்.
உறையூரில் அப்போது ஆட்சி செலுத்தி வந்தவன் தித்தன் என்பவன்[81]. பொருநன் உறையூரைத் தாக்கியபோது தித்தனுக்குப் போர்வை அரசன் பெருநற்கிள்ளி உதவ முன்வந்தான். இந்த உதவியைத் தித்தன் விரும்பவில்லை[82]. எனினும் சோழ நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்பது கிள்ளியின் விருப்பம்.
பொருநனுக்குச் சோழர் குடியைச் சேர்ந்த வேறொருவன் நண்பன். அவன் பெயர் செம்பியன்[83]. இந்தச் செம்பியனுக்கும் இந்தப் போருக்கும் தொடர்பு இல்லை. என்றாலும் அந்தச் செம்பியனுக்குச் சோழ நாட்டுத் தலைமையை அளிக்க அவன் செய்த முயற்சியே, இந்த உறையூர்ப் போராய் இருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது.
போரில் பெருநற்கிள்ளியின் கைகள் விரைந்து செயற்பட்டன[84]. இவன் போர்க்களம் புகுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராமல் இவன் போர்க்களத்தில் தோன்றினான். பொருநனின் போர் வீரர்கள் வெருண்டு ஓடினர்[85].பெருநற்கிள்ளிக்கு உறையூர் சொந்த ஊர் அன்று. (அவனது சொந்த ஊர் போர்வை.) எனவே, உறையூரில் இருந்தவர்களில் சிலர் போர்வை அரசன்வெற்றி பெற்றான் என்று கூறினர். சிலர் தன் அரசன் தித்தனே வெற்றி பெற்றான் என்பாராய், போர்வை அரசன் பெற்றது வெற்றி அன்று என்று கூறினர். உண்மையில் வென்றவன் போர்வை அரசனே ஆவான்[86].
நாடு
'போர்வைக்கோ' என்னும் அடைமொழியுடன் இவன் கூறப்படுவதால் போர்வை என்பது இவன் ஆட்சிபுரிந்த நாடு எனத் தெரிகிறது. போர்வை நாட்டின் தலைநகர் போர் என்பதும் போர் நகரின் புறப்பகுதி போர்ப்புறம் என்னும் பெயர் பெறும் என்பதும். அது திரு என்னும் அடைமொழி பெற்றுத் திருப்போர் புறம் என அமையும் என்பதும் சொல் ஒப்புமையால் பெறப்படும் பொருத்தமான முடிவுகள்.
போர், சோழனின் படைத்தலைவன் பழையன் இருந்து அரசாண்ட ஊர். போர்ப்புறம், வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் போரிட்டு மாண்ட ஊர். திருப்போர்ப் புறம் செங்கணானுக்கும், கணைக்கால் இரும்பொறைக்கும் போர் நடைபெற்ற இடம். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் காவிரி ஆறு பாயும் பகுதியில் இருந்தது என்பதைப் பழையன் வரலாற்றில் காணலாம். இப்போதுள்ள திருப்பூர் மேலே குறிப்பிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.
தோற்றப் பொலிவு
கழல் காலில் விளங்கியது; கறுகறுத்த மீசை முகத்தில் விளங்கியது[87]; சோழர் குடிக்குரிய ஆத்தி மாலையை அவன் அணிந்திருந்தான்[88]. போர்க் காலங்களில் அவனுக்கு நல்ல உணவுகூடக் கிடைக்கவில்லை; புல்லரிசிச் சோறுதான் கிடைத்தது. எனினும் அவனது போர்த்திறம் குறையவில்லை[89].
காதல்
கடல் வாணிகர் 'நாய்கன்' என்று குறிப்பிடப்பட்டனர். கண்ணகியின் தந்தை பெயர் 'மாநாய்கன்' இதற்கு ஒரு சான்று. பெருங்கோழியூரில் (உறையூரில்) வாழ்ந்த கடல்வாணிகன் ஒருவன் 'பெருங்கோழி நாய்கன்' என்று அறிமுகமாகியிருந்தான். அவனது மகள் நக்கண்ணையார். கண்ணின் சிரிப்பைக் காட்டும் கண்ணகி என்னும் பெயரைப் போன்றதே கண்ணின் நலத்தைக் காட்டும் நக்கண்ணையார். போர்வை அரசன் பெருநற்கிள்ளி பொருநன் படையை எதிர்த்துப் போரிடுகையில் கண்டு அவன்மீது காதல் கொண்டாள். கிள்ளி போரில் கண்ணும் கருத்துமாய் இருந்தான். இவளுடைய நிலை அவனுக்குத் தெரியாது.
உறையூர்ப் போர் முடிந்ததும் ஆமூரின் போர் தொடங்கிவிட்டது. உறையூர் போர்வைக்கோவின் ஊர் அன்மையால், அவன் திரும்ப உறையூருக்கு வரவும் இல்லை. எனவே, நக்கண்ணையார் காதல் என்றும் ஒருதலைக் காதலாய் முடிந்து விட்டது; இருதலையும் (ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும்) தோன்றி மணக்க வாய்ப்பின்றி முடிந்தது.
தித்தன் உறவு
தித்தன் உறையூர் அரசன். இவன் போர்வைக்கோவின் உதவியை நாடவும் இல்லை; அவன் உதவுவதை விரும்பவும் இல்லை. எனினும் பொருநனை முறியடிப்பதில் தானே வலிய வந்து போர்வைக்கோ உதவினான். இந்த உதவியை வெற்றிக்குப் பின்னரும் பாராட்டவில்லை. உறையூர்ப் போருக்குப் பின் ஆமூர்ப் போர் மூண்டது. இந்தப் போர் தித்தன் மல்லனைத் தாக்கிய போர். போர்வைக்கோ முன்புபோலவே தித்தன் பக்கம் வலிய வந்து நின்று போராடினான். இவன் போரிட்ட பாங்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 'இதனையேனும் தித்தன் காண்பானாக! விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காண்பானாக!' என்று புலவர் பாடியுள்ளார். தித்தன் புலவர் கூற்றைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
தித்தனுக்கும் போர்வைக்கோவுக்கும் இத்தகைய முரண்பட்ட உறவையே நாம் காண்கிறோம். சிலர் போர்வைக்கோவைத் தித்தனின் மகன் என்று கூறுகிறார்கள். அவர்கள் கூற்றுக்குப் பொருத்தமான சான்று இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பின் தந்தை மகனிடையே இருந்த இந்த மனமுறிவு கோப்பெருஞ்சோழனுக்கும் அவனது மக்களுக்கும் இடையே தோன்றிய மன முறிவை ஒப்பிட்டு எண்ண வைக்கும். கோப்பெருஞ்சோழன் வரலாற்றில் மக்கள் (மகன்மார்) தவறு செய்கிறார்கள். தித்தன் வரலாற்றில் தந்தை தவறு செய்கிறான் என முடியும்.பெருநற்கிள்ளி - 2
இவன் மதம்கொண்ட யானைமீது நமக்கு அறிமுகமாகிறான். மதங்கொண்ட யானையை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அந்த யானை கருவூர்த் தெருவழியாக, சோழனது கட்டுக்கு அடங்காமல் ஓடியது. அப்போது கருவூர் வேண்மாடத்தில் இருந்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் கண்டு அருகில் இருந்த சேர அரசன் அந்துவனிடம் நிலைமையை விளக்கினார். அவன் யானை மீதிருந்து படையெடுத்து வருவது போலத் தோற்றமளித்தாலும் அவன் உண்மையில் படையெடுத்து வரவில்லை என்பதையும் விளக்கினார்[90]. முடிவு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. சேரனும் யானையின் மதத்தை அடக்க உதவி செய்திருக்கலாம். சோழன் பிழைத்துத் திரும்பியிருக்கலாம். இதற்கு மாறாகவும் நிகழ்ந்திருக்கலாம்.
நாடு
முடித்தலை என்னும் நாட்டை ஆண்டமையால் இவன் 'முடித்தலைக்கோ' என்று கூறப்பட்டிருக்கலாம். முடித்தலை என்பது இப்போதுள்ள 'கொடுமுடி' எனலாம். இந்தக் கொடு முடிக்கும் கருவூருக்கும் இடையில் உள்ள தூரம், கருவூருக்கும் உறையூருக்கும் இடையில் உள்ள தூரத்தை நோக்க மிகக் குறைவு. எனவே, மதங்கொண்ட யானைமீது ஏறிக் கருவூரில் நுழைந்த நிகழ்ச்சி இயல்பாய் முடிகிறது. எனினும் உறையூர் ஏணிச்சேரியில் வாழ்ந்த புலவர் முடமோசியாருக்கு இந்தச் சோழன் நன்கு அறிமுகமாகி யிருத்தலை எண்ணும்போது இவனை உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன் என்று கொள்வதே பொருத்தம். ஆயினும், இவனது தொடக்க கால ஆட்சி, அதாவது அரியணையேறும் முதல் நிகழ்ச்சி இளவரசன் என்ற நிலையிலேனும் கொடுமுடியில் நிகழ்ந்திருக்கக் கூடும்[91].பெருநற்கிள்ளி - 3
(வேல்பஃறடக்கை)
கழாத்தலையார்
சேர அரசன் நெடுஞ்சேரலாதனுக்கும் இவனுக்கும் போர் நடைபெற்றது. போர்ப்புறம் என்ற இடத்தில் நடைபெற்ற அந்தப் போரில் இரண்டு அரசர்களும் போர்க்களத்திலேயே மாண்டனர்[92]; இவனைப் 'பெருநற்கிள்ளி' என்றும், 'பெருவிறற் கிள்ளி' என்றும் சுட்டுவது மரபு.
போரும் வீழ்ச்சியும்
சேர அரசன் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும் இவனுக்கும் போர் நடந்தது. இந்த நெடுஞ்சேரலாதன் செங்குட்டுவன் தந்தை என்பதை அவனது வரலாற்றில் காணலாம் போர், 'போர்ப்புறம்' என்னுமிடத்தில் நடந்தது[93].
போர் அவலக் காட்சியில் முடிந்தது. யாருக்கும் வெற்றியில்லை; தோல்வியும் இல்லை. நாற்படையும் களத்தில் அழிந்தன. தம் படை அழிந்தமை கண்டு இரண்டு பெரு வேந்தர்களும் தாமே நேரடிப் போரில் ஈடுபட்டனர். போர்ப்பறை முழங்க இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. இறுதியில் இருவரும் போர்க்களத்திலேயே மாண்டனர்[94].
இவர்களுடைய மனைவிமார் கைம்மைக் கோலத்துடன் பச்சைக் கீரையை மட்டும் தின்றுகொண்டு, தண்ணீரிலேயே குளித்துக் கொண்டு வாழ விரும்பாமல் போர்க்களம் வந்து தம் கணவர் மார்பைத் தழுவியராய் மாய்ந்தனர்[95]. எங்கும் அவலம்.(ஆ) கோப்பெருஞ்சோழன்
சோழர் வரலாற்றில் கோப்பெருஞ்சோழன், தனித்துக் காணப்படுகிறான். அவனுடைய சமகாலத்திய பாண்டிய அரசன் அறிவுடை நம்பி என்பவனாவான். அவனைப் பாடிய புலவர்களும் நம்பியைத் தவிர வேறு யாரையும் பாடவில்லை. உறையூரில் இருந்து இவன் ஆட்சி செய்ததனால், கரிகால் பெரு வளத்தானுக்குக் காலத்தால் முற்பட்டவனாக இருத்தல் கூடும். இவனைப் பாடிய பிசிராந்தையார் எனும் புலவரின் பெயர், மிகப் பழங்காலத்தில் வழங்கிய பெயருமாகும். எனவே, கோப் பெருஞ்சோழனைப் பழைய அரசனாகக் கொள்ளலாம்.
கோப்பெருஞ்சோழன், சோழ நாட்டை ஆண்டு வந்தான். அவனது தலைநகரம் உறையூர் ஆகும். அவ்வூரில் மாட மாளிகையோடு கூடிய அவனது அரண்மனை இருந்தது.
பதிற்றுப்பத்தைத் தொகுத்த ஆசிரியர் இவனைப் 'பொத்தி ஆண்ட பெருஞ்சோழன்'[96] என்று குறிப்பிடுகிறார். இதில் 'பொத்தி' என்னும் சொல் பொத்தியார் என்னும் புலவரை உணர்த்துவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பொத்தியாருக்கும் இவனுக்கும் இடையே இருந்தது, நட்புறவே அன்றி ஆண்டான் அடிமை என்ற நிலையில்லை. எனவே, பொத்தியாரை இவன் ஆண்டான் என்பது பொருந்தாது. இவன் பொத்தியாரை மட்டும்தான் ஆண்டானா? ஏனையோரை ஆளவில்லையா? என்று வினவுவதற்கும் இடம் உண்டாகிறது. ஆதலின், இவன் பொத்தி என்னும் இடத்தை ஆண்டான் என்று கொள்வதே பொருத்தமாய் அமைகிறது. இந்த இடம் எது? அந்த இடத்தை இவன் ஆண்டான் எனல் இயல்பாக அமைகிறதா என்பனவற்றை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
காவிரியின் வடகரையில் பொத்தனூர் என்னும் ஊர் ஒன்று உள்ளது. அது மிகப் பழமையான ஊர். அந்த ஊரின் பழம் பெயர் அல்லது மருவிய பெயர் 'பொத்தி' என்பதாக இருக்கலாம். கோப்பெருஞ்சோழன் தொடக்ககாலத்தில் இவ்வூரில் தன் ஆட்சியைத் தொடங்கியிருக்கலாம். அப்போது உறையூரை ஆண்ட சோழ அரசனைச் சார்ந்தவனாக இவன் இவ்விடத்தில் ஆட்சியைத் தொடங்கியிருக்கலாம். பின் செல்வாக்கினைப் பெற்று உறையூர்க் கோட்டையைத் தாய உரிமை முறையிலோ வேறு முறையிலோ கைப்பற்றியிருக்கலாம். இந்தப் பொத்தனூருக்குக் கிழக்கிலுள்ள இடையாற்றுப் பகுதியில் கரிகாலனின் ஆட்சி நடைபெற்றிருக்கக் கூடும் என்பதை அவனது வரலாற்றில் காண்போம். திருப்பூர்ப் பகுதியில் பெருநற்கிள்ளி ஒருவனின் (போர்வைக்கோ) ஆட்சி தொடங்கப் பெற்றிருக்கலாம் என்று அவனது வரலாற்றில் கண்டோம். எனவே, இந்தப் பொத்தனூரில் கோப்பெருஞ்சோழனின் ஆட்சி தொடங்கியிருக்க முடியும்.
சேரனோடு போர்
சேர அரசன் இளஞ்சேரல் இரும்பொறைக்கும் கோப்பெருஞ் சோழனுக்கும் போர் மூண்டது. போரில் சோழன் தோற்றான்[97].
சங்க காலத்தில் காவிரிக்குத் தெற்கேயிருந்த கொங்குநாட்டுப் பகுதியைப் (தென்கொங்கு) பொறையர் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் ஆண்டுவந்தனர். அவர்களது தலைநகர் கருவூர்,[98] வஞ்சிமுற்றம்[99] ஆகியவை. இவர்கள் காவிரிக்கு வடக்கில் இருந்த வடகொங்கு நாட்டிலும் தங்களது செல்வாக்கைப் பரப்ப முயன்றனர். இந்த முயற்சியின் விளைவுதான், சோழர்களோடும் அதியமானோடும் நடத்திய போர்கள். இவற்றை ஆங்காங்கே விரிவாகக் காணலாம். இவற்றையெல்லாம் நாம் இங்கு நினைவுகூர்வதன் நோக்கம் இந்தப் பொத்தனூர் எங்கு அமைந்திருந்தது எனத் தெளிவதற்கும், போரின் காரணங்களை உய்த்துணர்வதற்குமே ஆகும்.
மகன்மார்மீது போர் தொடுத்தல்
கோப்பெருஞ்சோழனுக்கு ஆண்மக்கள் இருவர் இருந்தனர். அவர்கள்மீது இவனுக்குக் கசப்பு உணர்வு தோன்றியது. கசப்பு உணர்வுக்குக் காரணம் புலப்படவில்லை. சிற்றினச் சேர்க்கையால் அறிவு பேதுற்று, தந்தைபால் பகைமைகொண்டு போருக்கு எழுந்தனர் போலும்[100]. இந்தக் கசப்பு உணர்வு படையெடுப்பில் முடிந்தது. இரண்டு மகன்மாரும் இருவேறு இடங்களில் இருந்து கொண்டு அரசாண்டு அரசியலில் பயிற்சி பெறும்படி அமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை இவர்கள்மீது கோப்பெருஞ்சோழன் போர் தொடுத்தான் என்பதிலிருந்து அறியலாம்.
தந்தை தன் மக்கள் இருவரையும் எதிர்த்துப் போர் தொடுப்பதை, நாட்டின் நல்லாட்சியை விரும்பிய சான்றோர்கள் விரும்பவில்லை. புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் இத்தகைய எண்ணத்தோடு கோப்பெருஞ்சோழனை நேரில் கண்டு, போரைக் கைவிட்டு விடும்படி அறிவுரை கூறிப் பாடினார்.
போரில் மக்கள் வெற்றி பெற்றுவிட்டால் தந்தை எண்ணம் நிறைவேறாது. தந்தையின் அரசாட்சி மக்களுக்குக் கிடைக்கும். மக்கள் தோற்றுவிட்டால், தந்தை தான் வென்ற அரசாட்சியைத் தனக்குப் பின் யாருக்குத் தரமுடியும்? தோற்ற அந்த மக்களுக்குத்தாமே தரவேண்டும். இது பிற அரசர்கள் பழிக்க ஏதுவாகும் என்னும் கருத்துகளைப் புலவர் எடுத்துரைத்தார். கோப்பெருஞ்சோழன் புலவரது அறிவுரைகளை ஏற்றுப் போரைக் கைவிட்டான். இதற்குப்பின் தன் மகன்மாருக்கு எதிராகத் தான் தொடர்ந்து ஆட்சி புரிவதையும் அவன் விரும்பவில்லை. அவன் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தான்.
வடக்கிருத்தல்
வடக்குத் திசையை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர்துறப்பது வடக்கிருத்தல் ஆகும். கோப்பெருஞ்சோழன் இவ்வாறு வடக்கிருந்தான்.
ஆற்றின் இடையே இருந்த நிலப்பகுதியில், புள்ளி புள்ளியாக இருந்த அருநிழலில் உட்கார்ந்துகொண்டு அவன் வடக்கிருந்தான்[101].
இவன் வடக்கிருப்பதற்கு ஓர் இடம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் வந்து அமர்ந்த அரசன் மற்றும் ஓர் இடம் தன் நண்பர் பிசிராந்தையாருக்கு அமைத்து ஒதுக்கவேண்டும் என்று கூறினான்[102]. பிசிராந்தையார் பாண்டிய நாட்டின் தென்கோடியில் வாழ்ந்து வந்தார். எனவே, சான்றோர் சிலர் 'பிசிராந்தையார்' வரமாட்டார் என்று கூறினர். கோப்பெருஞ்சோழன் கட்டாயம் வருவார் என்றே நம்பினான். 'நான் செல்வம் துய்க்கும்போது வரவில்லை என்றாலும், நான் அல்லல் படும்போது வராமல் இருக்கமாட்டார்' என்று அவன் கூறினான்[103].
அவன் கூறியபடியே பிசிராந்தையார் வந்து சேர்ந்தார்[104]. இதற்கு முன அவன் பிசிராந்தையாரைப் பார்த்ததில்லை அவரது அகவை முதலியவற்றால் சான்றோர்கள் இவ்வாறு இருப்பார் என்று கற்பனை செய்து வைத்திருந்தனர். அவர்களது கற்பனைப்படி பிசிராந்தையார் நரைதிரை உடையவராகத் தோன்றவில்லை. மாறாகக் கறுகறுத்த முடி இருந்தது. இதனைச் சுட்டிக் காட்டிக் காரணம் கேட்டார்கள். அமைதி நிறைந்த இனிய வாழ்க்கையே இதற்குக் காரணம் என்பதைப் புலவர் விளக்கினார்[105].
கோப்பெருஞ்சோழன் வடக்கிருப்பதைக் கண்ட சான்றோர் பலர், தாமும் அவனுடன் உயிர்விடத் துணிந்து வடக்கிருந்தனர்[106].
இவ்வாறு வடக்கிருக்க அமர்ந்த சான்றோர்களில் ஒருவர் பொத்தியார் என்பவர். அவரை அப்போது வடக்கிருக்க வேண்டா என்று கோப்பெருஞ்சோழன்தடுத்துவிட்டான். பொத்தியாரின் மனைவி முதன் முறையாக நிறைமாதமாய் இருந்தாள். பொத்தியார் சோழனின் நெருங்கிய நண்பர். அதனால், அவன் அவரது குடும்ப நிலையை உணர்ந்திருந்தான். எனவே, அவரை இல்லத்திற்குத் திரும்பிச் சென்று, அவருக்கு மகன் பிறந்தபின் வரலாம் என்று கூறிவிட்டான். பொத்தியார் வேறு வழியின்றி உறையூர் மீண்டார். உறையூரில் இருந்த மன்றம் (அரசவை) கோப்பெருஞ்சோழன் இல்லாமல் வெறுமனே கிடக்கும் காட்சியைக் கண்டு கலங்கி அவர் பாடினார்[107].
சில நாள்களில் கோப்பெருஞ்சோழன் இறந்தான். அவன் இறந்ததும், அவனை அவ்விடத்தில் புதைத்து அடையாளக்கல் நட்டு விட்டனர். பொத்தியாருக்கு மகன் பிறந்துவிட்டான். மகனைக் கண்டு மகிழ்ந்துவிட்டு, நண்பனைக் கண்டு நண்பனோடு அமர்ந்து உயிர்துறக்க எண்ணி ஓடோடி வந்தார் பொத்தியார். கோப்பெருஞ்சோழன் இல்லை. அவனது நடுகல்தான் இருந்தது. கல்லைக் கண்டபோது, கல்லாகி நிற் கோப்பெருஞ்சோழனின் நற்பணிகள் அவர் நினைவிற்கு வந்தன; எண்ணி உருகிப் பாடினார்[108].
தனக்கு இடம் தரும்படி அந்தக் கல்லைக் கேட்டார்[109]. நடுகல் தனக்கு இடங்கொடுத்துவிட்டதாகக் கருதினார். கல்லாகிய பின்னும் சோழன் தனக்கு இடம் கொடுத்தான் என்று அவர் கருதினார்; வடக்கிருந்தார்;[110] உயிர் துறந்தார்.
தோற்றப் பொலிவு
இவன் பெண்களைப்போல் மென்மையான மேனி நலம் (சாயல்) கொண்டவன். எனினும், வலிமையில் ஆண்களுக்கெல்லாம் தலைவன் என்னும்படி மிக்க வலிமை படைத்தவன்[111].
கொடைத்தன்மை
'பாணர் பசிப்பகை' என்று இவன் கூறப்படுகிறான்[112]. இதனால் பாணர்களுக்கு இவன் கொடை வழங்கியமை பெறப்படும். அன்றியுப் பாடுநர், ஆடுநர், புலவர் முதலானோர்க்கும் இவன் கொடை வழங்கியுள்ளான். நண்பனிடமிருந்து வருவதாக அறிந்தால் பறவைகள் ஆயினும் மக்கள்போல் மதித்து அணிகலன்கள் வழங்குவான் என்று பிசிராந்தையார் இவனைப்பற்றிக் குறிப்பிடுகிறார்[113]. இதில் கொடை மாண்பைக் காட்டிலும் நட்பின் மாண்பு சிறந்து நின்றமையையே காண்கின்றோம். இவ்வாறே இவன் கல்லாகிய பின்னும் இடங்கொடுத்தாகப் பொத்தியார் கூறுவதும் அமைகிறது.
இவன் பாடல்கள்
இவ்வரசனே ஒரு புலவனாகவும் விளங்கினான். இவன் பாடல்களில் இவனது நட்பின் பண்பு வெளிப்படுகிறது. முயற்சிக்குத் தக்க பயன் உறுதியாகக் கிடைக்கும் என்று இவன் கூறுவது இவன் உழைப்பில் நம்பிக்கை உடையவன் என்பதைக் காட்டுகிறது. பிறர் கூற்றாக அமைந்தாலும் 'பேதைச் சோழன' என்று இவன் தன்னையே குறிப்பிட்டுக் கொள்வது இவனது அடக்க உணர்வை வெளிப் படுத்துகிறது.
பெயர்களும் அடைமொழிகளும்
'கோப்பெருஞ் சோழன்',[114] 'பெருஞ்சோழன்,[115]
'பெருங்கோக்கிள்ளி',[116] "பொலந்தார்த் தேர்வண் கிள்ளி',[117]
'அடுமான் தோன்றல்'[118]
ஆகிய பெயர்களும், பெயர் அடைமொழிகளும், இவனுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களையும் போர்க்கோலத் தோற்றத்தை புலப்படுத்துகின்றன.
(இ) சென்னி மரபினர்
இளஞ்சேட்சென்னி - 1 (நெய்தலங்கானல்)
(பாமுள்ளூர் எறிந்தவன்)
'சென்னி' எனும் சோழர் குடியைச் சேர்ந்த இரு அரசர்கள். கரிகால் பெருவளத்தானுக்கு முன்னர் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி (இளஞ்சேட் சென்னி-1), செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி எனும் உருவப்பஃறேர் (இளஞ்சேட் சென்னி-2). இவர்களுக்கு இடையே இருந்த உறவுமுறை யாதென்பது தெரியவில்லை. பாட்டனும் பேரனுமாக இவர்கள் இருப்பார்களானால், இவர்களுக்கு இடையே வேறோர் அரசன் ஆட்சி செய்திருக்கவேண்டும். அவன் யார் என்பதை அறிய இயலவில்லை. இவர்கள் இருவரும் சமகாலத்தில் அரசாண்டவர் எனக் கொள்ளுவோரும் உண்டு.
கிள்ளி மரபினருக்கும் சென்னி மரபினருக்கும் இடைப்பட்ட நிலையில் கோப்பெருஞ்சோழன் விளங்குகிறான். அவனுடைய இயற்பெயர் தெரியாததனால், சிறப்புப் பெயராலேயே அவனைச் சுட்டியுள்ளோம்.செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி உறையூரிலிருந்து அரசாண்டு கொண்டிருந்த காலத்தில், இவன் புகார்நகரப் பகுதியில் இருந்து கொண்டு சோழநாட்டின் ஒரு பகுதியை அரசாண்டான்.
நெய்தலங்கானல் இளங்சேட் சென்னியின் பெயர் 'சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி' என்று புறநானூற்றுக் கொளுவில் காணப்படுகிறது. இதில் சேரமான் என்னும் அடைமொழி வேறு எந்தப் பெயர்த் தொடரிலும் காணப்படாத முறையில், கூறப்படும் அரசனுக்கு அடைமொழியாய் அமையாமல் அடைமொழியாகிய 'பாமுள்ளூர்' என்பதற்கு அடைமொழியாய் அமைந்துள்ளது. இதனால் இந்தப் பெயர்த் தொடரில் ஏதோ தவறு இருக்கிறது என்று எண்ணவேண்டியுள்ளது. அல்லது இவனது வரலாற்றில் மேலும் குழப்பம் இருக்கிறது என்று எண்ண வேண்டியுள்ளது.
போர்
பாமுள்ளூர் என்ற ஊரை இவன் தாக்கி அழித்தான் என்பது இவனது பெயருக்கு அடைமொழியாகப் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் 'பாமுள்ளூர் எறிந்த' என்பதைக் கொடுத்ததிலிருந்து தெரிகிறது.
கொடை
இவன் பாணர்களுக்குப் பகைவர் கோட்டைகளைப் பரிசிலாகக் கொடுத்தான். கோட்டை பகைவர்களின் கைவசம் இருக்கும்போதே தான் கைப்பற்றப்போகும் உறுதிநோக்கிப் பரிசிலாகக் கொடுத்தான்[119].
இளஞ்சேட் சென்னி - 2
(செருப்பாழி எறிந்தவன்)
செருப்பாழிப்போர்[122]
எழிமல்லைப் பகுதியில் பாழி என்பது ஒரு நகரம். நன்னன் இதனைத் தலைநகராகக் கொண்டு ஒரு காலத்தில் ஆண்டு வந்தான். இந்தப் பாழி நகரத்தில் வேளிர் குடியினரும் வாழ்ந்தனர். இந்நகரில் அடிக்கடி போர்மூண்டது. காரணம் இது வடநாட்டிலிருந்து மேற்குக் கடற்கரை வழியே தமிழ்நாட்டில் கிழக்கு நோக்கி நுழைவார்க்கு வாயிலாய் அமைந்திருந்ததே ஆகும். அடிக்கடி போர் நிகழ்ந்த காரணத்தால் இந்த நகரம் 'செருப்பாழி' (செரு நடக்கும் பாழி) என்று வழங்கப்பட்டது[123]. செருப்பாழிப் பகுதியில் வழிப்பறி மிகுதியாக இருந்தது. சோழ நாட்டு வாணிகர் தரைவழியே மேலைக் கடற்கரைக்குச் சென்ற வழி இது. எனவே, இங்கு நடந்துகொண்டிருந்த வழிப்பறியைத் தடுக்கவேண்டிய பொறுப்புச் சோழனுடையதாயிற்று ('குடிக் கடன்'). இந்தக் கடமையைச் செய்ய முன்வந்தான் இந்த இளஞ்சேட் சென்னி.
பாழி நகரில் செம்பை உருக்கி வார்த்த கோட்டை இருந்தது. இவன் அதனைத் தாக்கி அழித்தான். வம்ப வடுகர் அவனை எதிர்த்தனர். வம்ப வடுகர் என்பவர் வடநாட்டு வடுகர்;[124] மௌரியர் தமிழ்நாட்டில் நுழைய வழியமைத்துக் கொடுத்தவர். தமிழரோடு ஒன்றுபட்டு வாழ்ந்த எருமை நாட்டு வடுகர் போன்றவர் அல்லர். 'எருமை' அரசன் வரலாற்றில் இவர்களைப் பற்றிக் காணலாம். சோழன் வம்ப வடுகரைத் தரையில் சாய்த்து யானைக் காலால் துவட்டினான்;[125] வாட்போர் செய்து வென்றான்[126]. தோற்ற வடுகர்களில் சிலர் திரும்பி ஓடிவிட்டனர்.
தென்பரதவரை அடக்கல்
தென்னாட்டுப் பரதவர் தம் வலிமையைக் காட்டிக் கலகம் செய்து வந்தனர். எனவே, இவன் தென்திசைப் போரில் ஈடுபட்டு இவர்களது கொட்டத்தை அடக்கினான்.
இவன் பகைவர் பிணங்களை நெல்லின் தாள் போல் உதறி, யானைகளை எருதுகள் போல் நடத்திப் போரடித்த காட்சி, புலவர் உள்ளத்தில் நிலைபெற்றது[127].கொடை
ஊன் பொதி பசுங்குடையார் என்னும் புலவர் தடாரி என்னும் இசைக்கருவியை முழக்கிக்கொண்டு போர்க்களத்திற்குச் சென்று, அவனது வெற்றியைச் சிறப்பித்துப் பாடினார். அவனது பட்டத்து யானையைப் பரிசிலாகக் கேட்டார். சோழன் கொடுத்திருப்பான் என்று நாம் கருதலாம். இப்போர்க்களிற்றைப் பரிசிலாகப் பெற்றுக் கொள்வதன் மூலம் இனிமேல் கொடிய போர்களில் அவன் ஈடுபடக்கூடாது என்பதைப் புலவர் குறிப்பால் உணர்த்தினார் போலும்[128].
இளஞ்சேட்சென்னி - 3
(உருவப்பஃறேர்)[129]
நாடு
இவன் நாடு மழைவளம் குன்றினும் நீர்வளம் குறையாது.
போர்
போர்களில் ஈடுபட்டதால் இவனது வாள் மழுங்கிக் குருதிக்கறை படிந்திருந்தது. இவனது தாளிலிருந்த வீரக்கழல் போர்க் களத்தில் நடந்ததால் குருதிக்கறை படிந்திருந்தது. மார்புக் கவசம் பல துளைகளை உடையதாய் இருந்தது[130]. புலிபோன்ற இவனது குதிரைகள் கடிவாளம் பூண்டு சிவந்த வாயை உடையன. எமன்போன்ற இவனது யானைகள் கதவைக் குத்திக் கோடுகளின் நுனி மழுங்கப் பெற்றிருந்தன. இவ்வாறு இவனது படைகள் கூறப்படுவதால் இவன் பல போர்களில் ஈடுபட்டான் எனத் தெரிகிறது.
கொடை
பெருங்குன்றூர்கிழார் என்னும் புலவர், விருந்தினரைக் கண்டால் ஒளிந்து கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் தன் வறுமை நிலையை விளக்கிக் கூறிப் பரிசில் தரும்படி இவனை வேண்டினார். இவன் பரிசில் நல்கினான் என்று கருதலாம்[131].தோற்றம்
வெண்கொற்றக் குடையின்கீழ் இவன் காட்சியளித்தான்[132]. கடலிடையே தோன்றும் செங்கதிர்போலப் படைகளுக்கிடையே தானும் படைக்கலம் தாங்கிப் பொன்தேரின்மேல் பொலிவுடன் தோன்றினான்[133].
இந்தக் காட்சி இவனது பெயரில் அமைந்துள்ள 'உருவப் பல்தேர்' என்னும் அடைமொழியை விளக்கும் சான்றாய் விளங்குகிறது.
மகன்
'உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி' என்று புறநானூற்றுத் தொகுப்பாசிரியர் குறிப்பிடும் பெயர், அவன் மகன் காலத்துப் புலவரான முடத்தாமக்கண்ணியாரால் 'உருவப்பஃறேர் இளையோன்' என்று கூறப்படுகிறது[134].
பொருநராற்றுப் படையில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ள கரிகாற் பெருவளத்தான் இவன் மகன்.
இளஞ்சேட் சென்னி ஒப்புநோக்க முடிவு
இதுவரை புறநானூற்றுத் தொகுப்பாசிரியர் பெயர் சுட்டியுள்ளபடி மூன்று இளஞ்சேட்சென்னியரின் வரலாறுகளைத் தனித்தனியே பார்த்தோம். இனி அவர்கள் மூவர்தாமா? இருவரா? ஒருவரா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
செருப்பாழி எறிந்தவனையும், பாமுள்ளூர் எறிந்தவனையும் ஒருவனே என்று கொள்ள முடியவில்லை. அவர்களிடையே மூன்று வேற்றுமைகள் தெளிவாகத் தெரிகின்றன:
(1) ஒருவன் செருப்பாழியை வென்றான். மற்றொருவன் பாமுள்ளூரை வென்றான்.
(2) செருப்பாழியை வென்றவன் உறையூரிலிருந்து கொண்டு அரசாண்டான். பாமுள்ளூரை வென்றவன் நெய்தலங்கானலில் இருந்து கொண்டு (புகாரிலிருந்து கொண்டு) அரசாண்டான்.(3) செருப்பாழி எறிந்தவன் இளம்பெருஞ்சென்னி என்ற பெயரில் வேறுபாடு உடையவனாகக் காணப்படுகிறான்[135].
இவற்றை ஒப்பிட்டு எண்ணும்போது, இளம்பெருஞ்சென்னி அண்ணன் என்றும், இளம்சேட்சென்னி தம்பி என்றும் கருதுவது மிகப் பொருத்தமான முடிவாய் அமைவதைக் காணலாம்.
உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி' பொலந்தேர்மிசைப் பொலிவுடன் தோன்றினான்' என்றும், 'நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி இயல்தேர்ச் சென்னி' என்றும் தேரால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளனர். பொலந்தேர் என்பது பொன்னலாகிய அழகிய தேர் ஆதலின் உருவப் (அழகிய) பல்தேர் என வழங்கப்படுதல் இயல்பாகும். இயல்தேரை உருவப் பல்தேர் என்று கொள்வது அத்துணைச் சிறப்பில்லை. எனவே, இயல்தேர்ச் சென்னி என்று குறிப்பிடப்படும் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி வேறு; உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி வேறு என்று நாம் கொள்கிறோம்.
இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் இவர்களுடைய மக்களின் வரலாறும் அமைந்துள்ளமையை அடுத்துக் காணலாம்.
கரிகால் பெருவளத்தான்
கரிகாலன் என்னும் பெயருடைய சோழ அரசன் சங்க காலத்தில் ஒருவன்தான் இருந்தான். அவனுக்குப் பல்வேறு வகையில் வழங்கிவந்த பெயர்களும், அவனது பல்வேறு செயல்களும் பல்வேறு பாடல்களில் பல்வேறு புலவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை யெல்லாம் திரட்டி ஒப்புநோக்கும் போது கரிகாலன் என்னும் அரசன் ஒருவன்தான் இருந்தான் என்பது பெறப்படுகிறது.
பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் உள்ள பட்டினப்பாலை என்னும் பாட்டைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்; பொருநராற்றுப்படை என்னும் பாட்டைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார். இவர்களது இந்தப் பாட்டுகள் கரிகாலன்மீது பாடப் பட்டவை. இவர்களால் பாடப்பட்டுள்ள கரிகாலன் ஒருவனே என்பதை அந்தப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அவனது பெயர்களை நோக்கி அறியலாம்.'திருமாவளவன்',[136] ,'கரிகாலன்',[137] 'சோழன் கரிகாற் பெருவளத்தான்",[138] 'பெருவளக் கரிகால்',[139]
கொளுக்குறிப்பு, பத்துப்பாட்டைத் தொகுத்தவரால் தரப்பட்டது. இவர் அந்தப் பாட்டுகள் பாடப்பட்ட காலத்தவர் அல்லது நம் எல்லோரையும் காட்டிலும் பாட்டுகள் தோன்றிய காலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர். எனவே, இவர் ஒரே பெயரை இரண்டு பாட்டுகளின் தலைவனுக்கும் குறிப்பிடுவதால் இவற்றில் கூறப்பட்டவன் ஒருவனே என்பது தேற்றம்.
கரிகாலனைப்பற்றிப் பாடப்பட்ட பாடல்கள் புறநானூற்றில் நான்கு உள்ளன. அவற்றைப் பாடிய புலவர்கள் மூன்று பேர். இந்த நான்கு பாடல்களுக்கும் தரப்பட்டுள்ள கொளுக் குறிப்பில் கரிகாலனது பெயர் 'சோழன் கரிகாற் பெருவளத்தான்' என்றே உள்ளது. இந்தக் கொளுக் குறிப்பைத் தந்தவர் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர்.
புறநானூற்றைத் தொகுத்தவரும் பத்துப்பாட்டைத் தொகுத்தவரும் ஒருவரா, இருவேறு அறிஞரா என்பது நமக்குத் தெரியாது. எப்படி யாயினும் குறிப்புகள் எல்லாம் 'சோழன் கரிகாற் பெருவளத்தான்' என்னும் ஒரே பெயரையே கையாளுகின்றன. கரிகாலனைப்பற்றிக் கருத்துகள் தரும் அறிஞர்கள் எல்லோரையும்விட இந்தக் கொளுக் குறிப்புத் தந்தவர் கரிகாலன் காலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர். எனவே, புறநானூற்றிலும் பத்துப் பாட்டிலும் குறிப்பிடப்பட்ட அரசன் ஒருவனே ஆவான். இவை பெயரால் தெரியவரும் உண்மை.
ஒரே பெயர்கொண்ட பலர் இருந்திருக்கலாம் அல்லவா என்றும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
கரிகாலன் நடத்திய போர்களில் ஒன்று வெண்ணிப்போர். இந்தப் போர் பொருநராற்றுப்படை, புறநானூறு, அகநானூறு ஆகிய மூன்று நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது. எனவே, ஒரே போரை நடத்திய கரிகாலனை வேறுவேறு அரசர்கள் என்று கொள்ள முடியவில்லை.ஒரே ஊரில் வெவ்வேறு காலங்களில் போர் நடந்திருக்கலாம் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
வெண்ணிப்போரில் கரிகாலனை எதிர்த்துப் போரிட்டவர் பலர். அவர்களுள் சேர அரசன் ஒருவனும், பாண்டிய அரசன் ஒருவனும் இருந்தனர். அவர்கள் இரண்டுபேருமே அந்தப் போர்க்களத்தில் இறந்து போனார்கள் என்று பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது. பரணரின் அகநானூற்றுப் பாடலும்[140] அதையே குறிப்பிடுகிறது. கழாத்தலையாரின் புறநானூறுற்றுப் பாடலும்,[141] மாமூலனாரின் அகநானூற்றுப் பாடலும்,[142] வெண்ணிக் குயத்தியாரின் புறநானூற்றுப் பாடலும்[143] அந்தப் போரில் சேர அரசன் இறந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு வெண்ணிப் போரில் கரிகாலனை எதிர்த்த பகைவர்களும் ஒரே கூட்டத்தாராக உள்ளனர். அப்படியிருக்க வெண்ணியில் வேறு வேறு காலத்தில் நடைபெற்றவை என்று அந்தப் போரைக் கொள்ள முடியவில்லை. எனவே, சங்கககாலத்து வெண்ணிப் போர் ஒன்றுதான்; நிகழ்ந்த காலமும் ஒன்றுதான்; இந்தப் போரில் ஈடுபட்ட கரிகாலனும் ஒருவன்தான்; இதில் குழப்பத்திற்கு இடமில்லை.
கரிகாலன் என்னும் பெயர்கொண்ட அரசர் சங்க காலத்திலேயே பலர் இருந்தனர் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்களது கருத்துரையின் சாரம் இவனுடைய வரலாற்றின் இறுதியில் தரப்பட்டுள்ளது.
நாடு
கரிகாலன் காவிரி ஆறு பாய்ந்த பகுதியை அரசாண்டான் என்பது அடிப்படைச் சான்றுகளில் வெளிப்படை. அவன் உறந்தையைத் தலைநகராகக் கொண்டிருந்தான் என்றும், பின்னர்த் தன் அரசச்சுற்றத்தாரோடு புகாருக்கு வந்து அமர்ந்து, தன் தலைநகரை மாற்றிக் கொண்டான் என்றும் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[144] இதனால் இவன் கிட்டத்தட்ட சோழ நாடு முழுவதையும் விரிவான பரப்பில் ஆண்டுவந்தான் என்பது தெளிவாகிறது. இவன் கழார்த் துறைக்குத் தன் குடும்பத்தாருடன் வந்திருந்து அத்தியின் நீர் விளையாட்டைக் கண்டு மகிழ்ந்ததாகவும்,[145] இடையாறு என்னும் பகுதி இவனது நாட்டில் இருந்ததாகவும்[146] குறிப்பிடும் பாடல்களும் உள்ளன. கழார்த் துறையும் இடையாற்றுப் பகுதியும் இப்போதுள்ள தஞ்சை மாவட்டப் பகுதியில் அப்போது இருந்தவை. இப்போது நாமக்கல் வட்டத்தில் உள்ள இடையாறு என்னும் பழமைச் சிறப்பு வாய்ந்த ஊரும் காவிரிக் கரையில் உள்ளது. பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள இடையாறு என்று கொண்டாலும் எல்லா வகையிலும் பொருந்தும்.
கரிகாலனின் முன்னோன்[147]
கரிகாலனின் முன்னோன் ஒருவன் கடலில் தனது கப்பல்களை ஓட்டினான். அவை பாய்மரக் கப்பல்கள், காற்றின் விசையால் அவை முன்னும் பின்னும் வேண்டிய இடங்களுக்கு ஓட்டிச் செல்லப்பட்டன. இவனது காலத்திற்குமுன் கடலில் மரக்கலங்கள் துடுப்புகளின் உதவியைக் கொண்டு தள்ளியே ஓட்டப்பட்டன. இவன்தான் முதன் முதலில் பருவக்காற்றைப் பயன்படுத்தி அதன் விசையால் கப்பல்களைத் தாமே இயங்கும்படி செய்தான். இதனால் இவன் 'நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன்' என்று குறிப்பிடப்பட்டான்.
இவ்வாறு இவன் ஓட்டிச் சென்ற கப்பல்கள் வெளிநாட்டு வாணிகத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவன் வழியே கரிகாலனது கப்பல்களும் புலிபொறித்த பண்டங்களுடன் சென்று வாணிகம் செய்திருக்கலாம் அல்லது இந்த உரவோனின் கப்பல் வெளிநாட்டுச் செலவுகட்குப் பயன்பட்டிருக்கலாம்.
சேர அரசன் வானவன்[148] கப்பல் ஓட்டி வாணிகம் செய்ததையும், நெடுஞ்சேரலாதனின் கடற்போர் வெற்றிக்குக் கப்பல்கள் பயன்படுத்தப் பட்டிருக்கவேண்டும் என்பதையும் நாம் இங்கு நினைவுகூரலாம். சேரர் கப்பல்கள் அரபிக்கடலிலும். சோழர் கப்பல்கள் வங்காளக் குடாக்கடலிலும் மிதந்து மேலைநாடுகளோடும் கீழைநாடுகளோடும் வாணிகம் செய்து வந்தன. கரிகாலன் காற்று விசையைத் தன் கப்பலுக்குப் பயன்படுத்திய உரவோனின் வழிவந்தவன் என்று குறிப்பிடப்படுகிறான்.தந்தை[149]
கரிகாலன் 'உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்' என்று குறிப்பிடப்படுகிறான். இதில் சிறுவன் என்பது மகன் என்னும் பொருளைத் தருகிறது. 'இளையோன்' என்பது இளஞ்சேட் சென்னி என்பவனைக் குறிக்கிறது என்பதை அப்பெயர்களுக்கு முதலிலுள்ள 'உருவப் பஃறேர்' என்னும் அடைமொழியால் உணரலாம். இதனால், கரிகாலனது தந்தை, உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்பது பெறப்படும்.
அரியணையேறல்
கரிகாலன் தாய் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்தபோதே அவனது தந்தை இறந்துவிட்டான். எனவே, அரசாட்சிப் பொறுப்பு அப்போதே அவனுக்குக் கிடைத்துவிட்டது. இது 'தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி' என்று பொருநராற்றுப் படை[150] குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது.
இந்த நிலையில் இவன் சார்பாக இருந்து ஒருவன் ஆட்சிப் பொறுப்பினை மேற்கொண்டிருந்தான் என்று நம்பலாம். இவ்வாறு அரசு பொறுப்பினை மேற்கொண்டிருந்தவன் அவனது தாய்மாமன் என்று கூறப்படுகிறது. இதனையும் இயல்பென்று நாம் ஏற்கலாம். தாய்மாமன் பெயர் இரும்பிடர்த்தலையார் என்று கூறப்படுகிறது. இரும்பிடர்த் தலையார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் சங்ககாலத்தில் பாண்டிய அரசன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியைக் கண்டு வாழ்த்திப் பாடி அறிவுரை கூறியுள்ளதைப் புறநானூற்றில் நாம் காண்கிறோம். இந்தப் புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவர் தம் பாடலில் 'இரும்பிடர்த் தலையிருத்து' என்னும் தொடரைக் கையாண்டுள்ளார். அதுகொண்டு இவரை இரும்பிடர்த்தலையார் என்று வழங்கி வருகின்றனர். இது போன்ற பெயர் அமைப்புகள் பல சங்ககாலப் புலவர்களுக்கு அமைந்துள்ளன. இந்த அமைப்பு நமக்கு ஓர் உண்மையை வெளிப்படுத்துகின்றது. நூலைத் தொகுத்தவருக்குப் பாடலைப் பாடிய ஆசிரியரின் பெயர் தெளிவாகத் தெரியாவிட்டால், அவர் ஏதோ தம் மனம்போல் குறிக்காமல் உண்மைக்கு முதலிடம் தந்து அவரது பாடலிலிருக்கும் சிறப்பான தொடரால் அவரது பெயரைக் குறிப்பிட்டுருக்கிறார் என்பதே அந்த உண்மை. இத்தகைய இரும்பிடர்த் தலையாரைத் தாய்மாமன் என்று ஒருவர் குறிப்பிடுவாரேயானால், அந்தக் குறிப்பு அவரது பெயர்க் குறியீட்டில் அமைந்த கற்பனை போலவே அமைந்தது என்று கொள்வதைவிட வேறு வழியில்லை[151].
கரிகாலன் எவ்வாறு அரியணையேறினான் என்பதைப் பட்டினப் பாலை குறிப்பிடுகிறது[152]. உவமையாலும் பொருள் விளக்கத்தாலும் அது தெளிவாகக் குறிப்பிடுகிறது.
குட்டி வரிப்புலி கூட்டில் வளர்வதுபோல் இவன் பிறருடைய காப்பில் வளர்ந்தான். பருவம் வந்ததும் இவன் வெளிப்பட்டான். பொய்க்குழியில் அகப்பட்டுக் கிடந்த ஆண்யானை அந்தக் குழியின் கரைகளைக் குத்திச் சரித்துவிட்டுத் தானே மேடேறிச் சென்று தன் பெண்யானையோடு சேர்ந்து கொள்வதுபோல, இவன் இவனது காப்புக் கூட்டைச் சிதைத்துவிட்டு அதாவது, தனக்குத்தானே விடுதலையை உண்டாக்கிக் கொண்டு வாளை உருவிக் கையிலேந்திய கோலத்துடன் வந்து தனது மரபுரிமையாகிய அரசபதவியைத் தானே எடுத்துக் கொண்டான். பட்டினப்பாலையில் கூறப்பட்டிருக்கும் இந்தச் சினக்கோலம் 'முருகற் சீற்றத்து உருகெழு குருசில்' என்று பொருநராற்றுப் படையிலும் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இவனுக்குக் கிடைத்த அரச பதவி அமைதியானது அன்று. அது அச்சந்தரும் அரச பதவி[153]யாகும். இவனும் அமைதியாக அரியணையேறவில்லை. மேனி யெல்லாம் கனல்பொறி பிறந்து சிவந்து தோன்றும் பேரச்சம் தரும் உருவோடு[154] இவன் அரியணையேறிய வரலாறு இவ்வாறு தெளிவாக இருக்கும்போதே, பட்டத்து யானை மாலை சூட்டி அழைத்துவந்த கற்பனைக் கதைகள் வழங்கிவருவது வியப்பிற் குரியதாகும்.கரிகாலும் கால்நெருப்பும்
கரிகாலன் உறையூர்க் கோட்டையில் இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவனது பகைவர்கள் கோட்டைக்குத் தீ மூட்டிவிட்டார்களாம். கரிகாலன் தீயிலிருந்து தப்பி வெளிவந்த போது அவனது கால் கருகிப்போயிற்றாம். அதுமுதல் 'கரிகாலன்' என்னும் பெயருடன் அவன் அழைக்கப்பட்டானாம்[155].
இந்தத் தீ நிகழ்ச்சியில் தப்பிப் பிழைத்த கரிகாலன் தன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தானாம். மக்கள் அரசனைக் காணாது வருந்தித் தேடிமுயன்றும் கிடைக்காமையால் பட்டத்து யானையின் துணைகொண்டு தக்கான் ஒருவனைத் தேர்ந்தெடுக்க முயன்றார்களாம். அதன்படி அவர்கள் பட்டத்து யானையின் கையில் மாலையைக் கொடுத்து அனுப்பி அந்த மாலையை அது யாருக்குச் சூட்டிவிடுகிறதோ அவனையே அரியணையேற்றுவதென்று முடிவு செய்து யானையை அனுப்பினார்களாம். யானை தேடிச்சென்று கால் நெருப்புப் பட்டு அடையாளம் மாறியிருந்த கரிகாலனுக்கு மாலை சூட்டியதாம்[156]. மாலை சூட்டப்பட்டவன் உண்மையான அரசன் கரிகாலனே என்பதை உணர்ந்து மக்கள் பெரிதும் மகிழ்ந்து ஏற்றார்களாம்.
வெண்ணிப் போர்[157]
வெண்ணி[158] என்னும் ஊரின் வாயிலை அடுத்திருந்த வெளியில் கரிகாலன் அவனது பகைவர்களை எதிர்த்துத் தாக்கினான். ஊர் வாயிலில் போர் நடைபெற்றதால் வெண்ணி வாயிலில் நடைபெற்றது என்றும், அந்த வாயில்வெளி போர்க்களமாகப் பயன் படுத்தப்பட்டதால் வெண்ணிப் பறந்தலையில்[159] போர் நடைபெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.வெண்ணிப் போர் கரிகாலன் இளைஞனாய் இருந்தபோதே நடத்திய போர் என்பதைப் பொருநராற்றுப்படை தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
வெண்ணியில் கரிகாலனை எதிர்த்துத் தாக்கியவர்களுள் பதினொரு குலத்தலைவர்களும் இருபெரு வேந்தர்களும் அடங்கியிருந்தனர். இந்தப் பதினொரு வேளிர் யார்? அவர்களுடன் சேர்ந்து போரிட்ட பாண்டியன் யார்? என்பன தெளிவாகத் தெரியவில்லை. எதிர்த்துத் தாக்கிய சேர அரசன் பெயர் மட்டும் பெருஞ்சேரலாதன் என்பது தெரிகிறது.
போரின் முடிவு கரிகாலனுக்கு வெற்றியாய் முடிந்தது. அவனை எதிர்த்த சேரனும் பாண்டியனும் போரில் மாண்டனர். வேளிருள் பலரும் மாண்டிருக்கலாம்.
சேர அரசன் பெருஞ்சேரலாதன் முதுகில் புண்பட்டதையும், அதனால் அவன் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்ததையும். அதன் விளைவுகளையும் அவனது வரலாற்றில் கண்டோம்.
பட்டினப்பாலை, கரிகாலனால் வெல்லப்பட்டவர்கள் என்று ஏழு பேரைக் குறிப்பிடுகிறது.
அவர்களுள் சிலரோ, அவர்களுள் அனைவருமோ இந்தப் போரில் ஈடுபட்டிருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. இவர்கள் இவன் நடத்திய வாகைப் பறந்தலைப் போரில் எதிர்த்துப் போராடியிருக்கவும் கூடும்; அல்லாமல் தனித்துப் போராடியிருக்கவும் கூடும்.
வாகைப் பறந்தலைப் போர்[160]
வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் ஒன்பது மன்னர் கரிகாலனை எதிர்த்துப் போரிட்டனர். அந்தப் போர் கரிகாலன் தன் குதிரைப் படையைக்கொண்டு பகைவர் நாட்டைத் தாக்கிய போர். அந்தப் போரில் கரிகாலன் தானே போர்க்களத்தில் இறங்கிப் போரிட்டான். ஒன்பது மன்னர்களில் யாராலும் அவனை எதிர்த்து நிற்கமுடிவில்லை. அவர்கள் அனைவரும் தம் வெண்கொற்றக் குடைகளைப் போர்க்களத்திலேயே போட்டு விட்டு ஓடிவிட்டனர். கரிகாலன் வெற்றிபெற்றான்.பிற போர்கள்
பட்டினப்பாலை, கரிகாலனது வெற்றிப் புகழைப் பாடுங்கால் அவனுக்கு அடங்கியவர் என்று கொள்ளும் வகையில் இரண்டு அரசர்களையும் ஐந்து இனக்குழுத் தலைவர்களையும் குறிப்பிடுகிறது.
ஒளிநாட்டு மக்கள் ஒளியர் எனப்பட்டனர். அவர்களுள் பலர் இவனது பேராற்றலைக் கேள்விப்பட்டோ, இவனோடு போராடித் தோற்றோ கரிகாலனைப் பணிந்து ஒடுங்கிக் கிடந்தனர்[161].
அருவா நாட்டு மக்கள் அருவாளர். இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள். அவர்களும் ஒளியர் போன்ற நிலையினராய்க் கரிகாலன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் ஏவலராய் மாறினர்[162].
சங்ககாலத்தில் தமிழ்மொழி பேசப்பட்ட எல்லைக்கு வடபால் வாழ்ந்தவர் வடவர். அவர்கள் இவனது தாக்குதலால் வாட்டமடைந்திருந்தார்கள்[163].
குட நாட்டு மக்கள் குடவர் எனப்பட்டனர்; கரிகாலனது வெற்றிகளை எண்ணி எண்ணம் சோர்ந்து கிடந்தனர்[164].
பொதுவர் என்னும் இனக்குழுவினர் சங்ககாலத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இன்னார் என்பது தெரியவில்லை. எனினும், பொதியமலைப் பகுதியில் வாழ்ந்த மக்கள் பொதுவர் எனப் பட்டனர் எனலாம். அவர்களின் கால்வழியை அழியும்படி கரிகாலன் அவர்களை வென்றான்[165].
இருங்கோவேள் கரிகாலனை எதிர்த்துப் போராடி மாண்ட அரசன்[166].
பாண்டியநாட்டு அரசன் தென்னவன் என்று சுட்டப்படுகிறான் கரிகாலன் சீற்றம் கொண்டு தென்னவனின் கோட்டைகளைத் தாக்கி அழித்தான்; இதனால் தென்னவன் அரசாளும் ஆற்றலை இழந்தான்.[167].கரிகாலனது போர்ச் செயலைப்பற்றிச் சில பாடல்கள் பொது வகையில் குறிப்பிடுகின்றன.
கரிகாலன் அரியணையேறியதும், பகைவர் கோட்டைகளைத் தாக்கி அழிக்கும் உழிஞைப் போர் நடத்திப் பகைவர் படைகளை அழித்தான்[168]. இவன் பகைவர்களது வளப்பம்மிக்க நாடுகளைப் பாழாகும்படி அழித்தான்;[169] பகைவர் ஊர்களைத் தீயிட்டுக் கொளுத்தினான்[170].
இலங்கைப் போர்
'இராசாவளி' என்பது இலங்கையின் வரலாற்றைக் கூறும் பிற்கால நூலாகும். இந்த நூலில் கரிகாலனது செயலைப்பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. கரிகாலன் இலங்கையின்மீது படையெடுத்துச் சென்று 12 ஆயிரம் இலங்கை மக்களைச் சிறை செய்து தன் நாட்டுக்குக் கொண்டு வந்தானாம். அவர்களைக் கொண்டு தன்னாட்டில் பாயும் காவிரி ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரைகள் அமைத்தானாம். இவ்வாறு கூறும் அந்த வரலாறு மேலும் சிலவற்றைக் கூறுகிறது. முதலாம் கயவாகு என்னும் இலங்கை அரசன் சோழநாட்டுக்கு வந்து தன்னாட்டுக் கைதிகளை மீட்டுக் கொண்டு சென்றதோடு தமிழ்நாட்டிலிருந்து மேலும் 12 ஆயிரம் பேர்களைக் கைதுசெய்து தன்னாட்டுக்கு அழைத்துச் சென்றானாம். இவ்வாறு கூறப்படும் வரலாறுகளில் வரும் கைதிகளின் எண்ணிக்கை உயர்வுநவிற்சியாக இருக்கக் கூடும். ஆனால், நிகழ்ச்சியில் ஓரளவேனும் உண்மை இருக்கத்தான் செய்யும்.
கரிகாலனின் முன்னோன் கடலில் பருவக்காற்றின் துணை கொண்டு கப்பல் ஓட்டிச் சென்றான் என்பதை முன்பே கண்டோம்.
அவனது வழிவந்த இவனிடம் கடற்படை இருந்தது என்பது பொய்யாகாது. இந்தக் கடற்படையின் துணைகொண்டு இவன் இலங்கை நாட்டைத் தாக்கி வென்று கைதிகளைப் பிடித்து வந்திருக்கலாம். நெடுஞ்சேரலாதன் கடற்போரில் ஈடுபட்டுத் தன் நாட்டை அடுத்திருந்த தீவுகளை வெற்றிபெற்றது போலக் கரிகாலன் தன் நாட்டை அடுத்திருந்த இலங்கையைத் தாக்கி வெற்றி பெற்ற போர் இது என்று எண்ண வேண்டும். கரிகாலனுக்கும் இலங்கைக்கும் வாணிகத் தொடர்பு இருந்ததைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. எனவே, கரிகாலனது இலங்கை வெற்றியை உண்மை எனக் கொள்ளலாம்.
கொடை[171]
கரிகாலன் பாணர்களுக்குக் கொடை வழங்கினான். உணவு, உடை, யானை, தேர் முதலானவை அவன் கொடை வழங்கிய பொருள்களில் சில. பாணர்க்குப் பொன் தாமரை செய்து அணிவித்ததும், நான்கு குதிரைகள் பூட்டிய தேர் நல்கியதும், அத்தேரை நல்கும்போது ஏழடி பின்சென்று மரியாதை செலுத்தி வழங்கியதும், பொருநர் தலையிலிருந்த ஈரையும் பேனையும் வாங்கிவிட்டதும், பொருநர்கள் தாம் செல்ல விரும்பியதைக் குறிப்பிட்டபோது இப்போதே செல்ல வேண்டுமா? இன்னும் சில நாளேனும் என்னுடன் தங்கலாகாதா? என்னும் பொருள்பட 'அகறிரோ' என்று அன்புடன் அருள்கனியக் கூறியதும் இவனது கொடைப் பாங்கில் குறிப்பிடத்தக்கவை.
ஆட்சி
இவனது ஆட்சி செங்கோலாட்சியாக அமைந்திருந்தது. அஃது அறத்தை அடிப்படையாகக் கொண்டது.
இவனது மேலாண்மையில் பல நாடுகள் இருந்தன. அவற்றிற்குத் தனித்தனி அரசுகள் இருந்தன. அவற்றையெல்லாம், தன்னுடைய ஒரு குடைக்கீழ் இவன் ஆண்டான் அரசுகள் எல்லாம் ஒருமைப்பாட்டு உணர்வுடன் இவன் தலைமையின்கீழ் திரண்டிருந்தன. அந்த அரசுகளுக்கிடையே அடிமைநிலை இல்லை; ஆதிபத்தியக் கோட்பாடே பின்பற்றப்பட்டது. பெருந்தன்மையுடைய நட்புறவே இருந்தது. இவ்வாறு இவன் பெருஞ் சிறப்புடன் அரசாண்டான்[172].
சிறப்புச் செயல்கள்
நாட்டு மக்களின் நலனுக்காக இவன் செய்த ஆக்கப் பணிகள் பல.மக்கள் நலனுக்காக உணவளித்து உதவும் அறம் செய்யும் அட்டில் சாலை (அன்னசத்திரம்) ஒன்றை இவன் புகார் நகரத்தில் அமைத்திருந்தான்[173].
இவனுடைய காலத்திற்கு முன்னர், நாட்டிலிருந்த குடி மக்களில் சிலர் பிழைப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் நிலைமை இருந்தது. இவன் இந்த நிலைமையை மாற்றி, இந்நாட்டிலேயே விருப்பமுடன் தங்குவதற்குரிய வசதிகளைச் செய்தான்[174]. பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்ட காட்டைத் திருத்துதல், குளம் வெட்டுதல் போன்ற நாட்டை வளப்படுத்தும் செயல்கள், புதிய குடியேற்றங்களை அமைத்துத் தன் ஆட்சிப் பரப்பின் எல்லையை விரிவுபடுத்தியதைக் காட்டும்.
வேளாண்மைக்கு உதவி[175]
இவன் காடுகளை வெட்டி விளைநிலமாக மாற்றினான்; குளங்கள் வெட்டி வெள்ளநீரைத் தேக்கிவைத்துப் பாய்ச்சி, நிலத்தை நீர்வளமுள்ளவையாக மாற்றினான்.
காவிரிக்குக் கரை அமைத்தல்
இலங்கையில் கரிகாலன் வெற்றி பெற்றபோது 12 ஆயிரம் பேர் இலங்கை மக்களைச் சிறைப்பிடித்து வந்து, அவர்களைக் கொண்டு தனது நாட்டிலுள்ள காவிரி ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரை அமைத்துக் கொண்டான் என்று இலங்கையின் கால்வழிச் செய்திக் கோவை ஒன்று குறிப்பிடுகிறது. இந்த நிகழ்ச்சியைத் தெலுங்கச் சோழர் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. தெலுங்கச் சோழர்கள் தங்களைக் காவிரிக்குக் கரை அமைத்த கரிகாற் சோழன் வழிவந்தவர் என்று கூறிக் கொள்கின்றனர். இவர்கள் கூற்று கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
கல்லணை இந்தக் கரிகாலனால் கட்டப்பட்டது என்று ஒரு செவி வழிச் செய்தி உண்டு; தெளிவான அகச்சான்று கிடைக்கவில்லை. இராசராசனுடைய அண்ணனான ஆதித்த கரிகாலனே கல்லணையைக் கட்டியுள்ளான். அந்த அணையின் அடித்தளத் தொடக்கப் பணிகளேனும் கரிகாலன் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று எண்ண இடமுண்டு.
களவேள்வி[176]
தன்னுடைய வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் இவன் களவேள்விகள் செய்தான். இதனைக் கருங்குழலாதனார் எனும் புலவர் பாராட்டியுள்ளார். இதனால் வைதிக சமயத்தவர் பெற்றிருந்த செல்வாக்குப் புலனாகிறது.
வாணிகம்[177]
புகார் நகரத்தில், கரிகாலன் காலத்தில் கடல் வாணிகமும் தரை வாணிகமும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்த வாணிகம் அரசின் மேற் பார்வையில் நடந்தது என்பதை வாணிகப் பொருள் மூட்டைகளின்மீது, புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது என்று கூறப்படுவதிலிருந்து அறியலாம். அன்றியும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் புலிச்சின்னம் பொறிக்கப் பட்ட கதவுகளையுடைய காப்பகத்தில் வைக்கப் பட்டிருந்தன. அந்தக் காப்பகத்தில் இடம் இல்லாமல் வெளியில் குவிக்கப்பட்டிருந்த பொருள்களுக்கும் அரசனின் காப்பு அமைக்கப் பட்டிருந்தது.
உயர்ந்த குதிரைகள், அரபிக் கடல் வாணிகத்தின் வழியே வந்திறங்கின. ஈழநாட்டு (இலங்கை) உணவுப் பொருள்களும் காழக நாட்டுச் (பர்மா) செல்வமும் (தேக்கு) வங்காள விரிகுடா வழியே நடத்திய வாணிகத்தால் வந்து இறங்கியவை. மிளகு மூட்டைகள் சேரநாட்டுப் பகுதியிலிருந்து தரைவழியே வந்து இறங்கின.
வடமலையில் கிடைத்த மணி, பொன் ஆகியனவும், குடமலையில் கிடைத்த சந்தனம், அகில் ஆகியனவும், கங்கையாற்றுப் பகுதியில் கிடைத்த வளப்பம் நிறைந்த பொருள்களும் தரைவழியாகவும் கடல்வழியாகவும் இங்கு இறக்குமதி செய்யப்பட்டன. தென்கடலில் தோன்றிய முத்துகளும் குணகடலில் தோன்றிய பவளமும் தோன்றிய இடத்திலிருந்து நேரே கொண்டு வரப்பட்டன. வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஏற்றுமதி செய்வதற்காகக் காவிரி ஆற்றுப் பகுதியில் கிடைத்த சிறப்புமிக்க பொருள்கள் (கரும்பு, வெல்லம், இஞ்சி, மஞ்சள் முதலானவை) அங்குக் கொண்டு வந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் நாம் எண்ணும்போது கரிகாலன் வேளாண்மை வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருந்தது போலவே. வாணிக மேம்பாட்டிலும் கண்ணும் கருத்துமாய் இருந்தான் என்பதை அறியமுடிகிறது.
புதுப்புனல் விழா[178]
தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆங்காங்கே சிறப்புமிக்க திருவிழாக்கள் நடந்தன. புகார் நகரத்தில் நடைபெற்ற கடல் நீராடுவிழா, இந்திர விழா என்னும் பெயரைப் பெற்றிருந்தது. உறையூரில் நடைபெற்ற குளநீராடு விழா, 'பங்குனி முயக்கம்' எனப் பெயர் பெற்றிருந்தது. கழார் நகரின் காவிரித் துறையில் நடைபெற்ற விழா, புதுப்புனல் விழா[179]. இந்த விழாவில் அரசனும் கலந்து கொள்ளுவது வழக்கம். ஆட்டன் அத்தி இந்த விளையாட்டில் சிறப்புற்று விளங்கியதை அவனது வரலாற்றில் காணலாம். இந்த ஆற்றுநீர்த் திருவிழாவுக்குக் கரிகாலன் தன் சுற்றத்தாருடன் வந்திருந்தான் என்று கூறப்படுவதால், அரசன் என்ற நிலையில் மட்டுமன்றிச் சோழநாட்டுக் குடிமகன் என்ற முறையிலும் இவன் கலந்து கொண்டான் போலும்.
இந்த விழாவில் கரிகாலன் கலந்து கொண்டு சிறப்பித்த செய்தி சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது[180] அரசிளங்குமரர், அரசனின் உரிமைச் சுற்றம், பரதவ குமரர் (கடல் வாணிகர்). பல்வேறு ஆயத்தார், ஆடும் பெண்கள், பாடும் பெண்கள் முதலானோர் கரிகாலனோடு விழாவில் கலந்து கொண்ட செய்தியை அது கூறுகின்றது.சிறப்புப் பெயர்கள்
'திருமாவளவன்',[181] 'பெருவளத்தான்',[182] என்னும் பெயர்கள் இவனது செல்வ வளத்தைக் காட்டுவனவாய் உள்ளன. 'இயல்தேர் வளவன்'[183] என்னும் அடைமொழி இவன் தேரில் சென்ற காட்சியை நினைவூட்டுகிறது. 'முருகற் சீற்றத்து உருகெழு குருசில்'[184] என்பது இவனது சினமிகுதியைக் காட்டுகிறது.
தோற்றம்[185]
இவனது கால்கள் களிறுகளை நடத்திப் பழக்கப்பட்டவை; அவற்றில் அவன் வீரக் கழல்களை அணிந்திருந்தான். கைகள் அம்புகள் எய்து வளம்பெற்றவை; அவை வில்லையும் அம்பையும் கொண்டிருந்தன. வேண்டாதபோது வில் அவனது மார்பிலே கிடந்தது. மலர்ந்த அவனுடைய மார்பைவிட்டு நீங்கத் திருமகள் மறுத்துவிட்டாள். அந்த மார்பில் தோல் என்னும் பெயர் கொண்ட எறுழ் வன்மையுடையதாகப் பொத்திக் கட்டப்பட்டிருந்தது. இது இவன் போர்க்கோலம் பூண்டிருந்தபோது தோன்றிய உருவம்.
போர்க்கோலம் பூணாத போதும் இவன் அரிமாவைப் (சிங்கத்தைப்) போலக் காட்சியளித்தான். அவனது மார்பிலே ஒளிமிக்க அணிகலன்கள் விளங்கின; சிவந்த சந்தனம் பூசப்பட்டிருந்தது. மகளிர் தழுவவும் மைந்தர் ஏறி விளையாடவும் ஏதுவாய்ப் பரந்து விளங்கியது அது. போர்க்கோலம் பூண்டிருந்தபோது, அவன் மார்பிலே விளங்கிய வலிமைமிக்க தோல் என்னும் கவசம் இல்லை. மாறாக, வேறொரு கவசம் கலைநோக்குடன் செய்யப்பட்டு விளங்கியது. பகையரசர்கள் தலையில் சூடிய முடிமணிகள் அந்த மார்புக் கவசத்தில் பதிக்கப் பட்டிருந்தன.
கையறவு[186]
கரிகாலன் உயிரோடு வாழ்ந்தபோது அவனது வெற்றிச் சிறப்புகளை வியந்து பாடிய கருங்குழலாதனார் அவன் இறந்த பின் அவனது மனைவியர் தம் இழைகளைக் களைந்துவிட்டு நின்ற அவலக் காட்சியைக் கண்டு வருந்திப் பாடியுள்ளார். இடையன் தன் ஆடுகளுக்காகப் பூத்துக் காய்த்து விளங்கிய வேங்கை மரத்தின் கிளைகளை மொட்டை மொட்டையாக வெட்டிச் சாய்த்தபின் மொட்டைக் கிளைகளுடன் நிற்கும் அடி மரம்போல் அவர்கள் அணிகலன்களைக் களைந்துவிட்டு பொலிவிழந்து நின்றார்களாம்.
மனைவியர்[187]
இவன் இறந்தபோது இழை களைந்தவர் 'மெல்லியல் மகளிர்' என்று குறிப்பிடப்படுகின்றனர். கணவன் இறந்தால் அதற்காகத் தம் அணிகலன்களைக் களைந்துவிடுதல் தமிழர் பண்பாடு. இந்த வகையில் இழை களைந்தவர் எல்லாரும் கரிகாலனது மனைவியர் என்பது பெறப்படும். இழை களைந்தவர் 'மகளிர்' என்று பன்மையால் குறிப்பிடப்படுவதால் கரிகாலனுக்குப் பல மனைவியர் இருந்தனர் என்பது புலனாகின்றது.
மகள்
ஆதிமந்தி என்பவள் இந்தக் கரிகாலனின் மகள் என்று கூறப்படுகிறாள். சேர இளவரசன் ஆட்டன் அத்தியை மணந்து இவள் வாழ்ந்தாள். இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைச் சேரர் வரலாற்றில் கண்டோம்.
நலங்கிள்ளி
(சேட்சென்னி)
சேட்சென்னி நலங்கிள்ளி சோழநாட்டில் தங்கி அரசாண்டவன் அவனது தலைநகர் உறந்தை.[188]
தந்தை முதலானோர்
இவனது பெயர் 'சேட்சென்னி நலங்கிள்ளி' என்று பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது[189]. இஃது இவன் சேட்சென்னியின் மகன் என்பதைக் காட்டுகிறது.
மாவளத்தான் என்னும் பெயர்கொண்ட ஒருவன் நலங்கிள்ளியின் தம்பி என்று குறிப்பிடப்படுகிறான். இவர்கள் இருவருடைய தந்தையின் பெயர் 'நலங்கிள்ளி சேட்சென்னி' என்று குறிப்பிடப்படுகிறது. எனவே, மாவளத்தானின் அண்ணன் நலங்கிள்ளி, சேட்சென்னிக்கு மூத்த மகனாய்ப் பிறந்து பாட்டன் பெயர் சூட்டப்பட்டான் எனக் கொள்வது பொருந்தும்.
உறையூர் முற்றுகை
உறையூரில் நெடுங்கிள்ளி என்னும் அரசன் தங்கி அரசாண்டு வந்தான். நலங்கிள்ளி சோழநாடு முழுவதையும் தானே ஆள வேண்டுமென்று கருதினான். எனவே, நெடுங்கிள்ளியோடு போர் தொடுக்க வேண்டி உறையூரை முற்றுகையிட்டான்.
நெடுங்கிள்ளி, கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டான்; நலங்கிள்ளியை எதிர்த்துப் போரிடவில்லை. இந்நிலையில் இளந்தத்தன் என்னும் புலவர் கோட்டைக்கு வெளியிலிருந்து உள்ளே சென்றார். அந்தப் புலவரை நெடுங்கிள்ளி தன் பகைவனான நலங்கிள்ளியின் ஒற்றன் என எண்ணிக் கொல்லப் புகுந்தான். உண்மையில் இளந்தத்தன் நலங்கிள்ளியின் ஒற்றன் அல்லன் நலங்கிள்ளி வேறு எந்த ஒற்றனையும் அனுப்பவில்லை. புலவர் கோவூர்கிழார் இந்த உண்மையை நெடுங்கிள்ளியிடம் எடுத்துரைத்துப் புலவரைக் காப்பாற்றினார்[190].
புலவர் கோவூர்கிழார் இந்த முற்றுகையின்போது அடைத்திருந்தவனையும் அடைக்கப்பட்டிருந்தவனையும் நேரில் கண்டு அறிவுரைகள் பல கூறினார். போரிடப்போகும் இருவரும் சோழர் குடியினராகையால் யாருக்குத் தோல்வி வந்தாலும் சோழர் குடிக்கே தோல்வி கிடைக்கும் என்றும், இந்தத் தோல்வி ஏனைய சேர, பாண்டிய அரசர்கள் ஏளனம் செய்ய ஏதுவாய் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். உண்மை உணர்ந்த சோழ அரசர்கள் போரைக் கைவிட்டனர். நெடுங்கிள்ளி இறுதியில் மாண்ட இடம் காரியாறு என்று குறிப்பிடப்படுவதால் மேலே குறிப்பிட்ட உறையூர்ப் போர் கைவிடப்பட்டது என்பதைத் தெளிவாக உணரலாம்.
தம்பி வழியே போர்
நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் என்று அறிந்தோம். அவன்வழி இவன் போர் தொடுத்ததாகவும் தெரிகிறது. இந்தப் போர் ஆவூரில் நடைபெற்றது. மாவளத்தான் ஆவூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி உள்ளே அடைந்திருந்தான். அங்குக் கோவூர்கிழார் அறிவுரை கூறினார். நெடுங்கிள்ளிக்கு மட்டும் கூறினார். அவன் மாவளத்தானுக்கு ஆவூர்க்கோட்டையை விட்டுக் கொடுத்து விட்டு வெளியேறினான்.
ஆவூர் முற்றுகை. உறையூர் ஆகியவற்றுள் எது முன்னர் நடைபெற்றது என்பதை அறியத்தக்க தெளிவான சான்று இல்லை. நெடுங்கிள்ளி காரியாற்றில் துஞ்சும்வரை உயிருடன் இருந்தான் என்று தெளிவாகத் தெரிகிறது. அக்காலம்வரை அவன் அரசனாய் விளங்கினான் என்றால் ஆவூர் முற்றுகை முதலில் நடைபெற்றது என்றும், அதில் நெடுங்கிள்ளி விட்டுக் கொடுத்தான் என்றும், உறையூர்முற்றுகை பின்னர் நடைபெற்றது என்றும் கொள்ளவேண்டும். முற்றுகையின் காலத்தை மாற்றிக் கொள்வோமானால் ஆவூரை விட்டுக் கொடுத்து விட்டபின் நெடுங்கிள்ளி தான் காரியாற்றில் இறக்கும்வரை அரச பதவியை இழந்து வாழ்ந்தான் என்று கொள்ளவேண்டும்.
உறையூர்ப் போரைத் தவிர, இவன் ஈடுபட்ட போர் என்று குறிப்பிட்டுக் கூறத்தக்கது ஒன்றும் இல்லை. பொதுவாக இவனது போர் ஆற்றல்கள் புலவர்களால் புகழ்ந்து கூறப்படுகின்றன.
வங்காளக் குடாக்கடலைப் பின்பக்கமாகவும் அரபிக் கடலை முன்பக்கமாகவும் கொண்டு வெற்றி வலம் வரும்போது இவனது குதிரைகள் தம் நாட்டுக்கும் வருமே என்று அஞ்சி வடநாட்டு அரசர்கள் இரவெல்லாம் தூங்காமல் இருப்பார்களாம்[191].
தன் சுற்றத்தாரின் சோறு சமைக்கும் பானை நிறைவதற்காக இந்த நலங்கிள்ளி, வஞ்சி நகரையே பரிசாகத் தருவான்; விறலியருக்கு விலையாக மாடமதுரை நகரையே தருவான்; வாருங்கள் பாடுவோம் என்று புலவர் ஒருவர் இவனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்[192].
தென்னம் பொருப்பன் நன்னாட்டில் (பொதியமலைப் பகுதியில்) ஏழெயில் கதவம்கொண்ட கோட்டை ஒன்று இருந்தது. அதனை வென்று தன் புலிச் சின்னத்தைப் பொறிக்கும் ஆற்றல் உடையவன் இவன்[193].
இவனது படை மிகப் பெரியதாகும். பிற அரசர்களின் வாயில்களில் யாராவது காலையில் வலம்புரிச் சங்கை ஊதினாலும் அதனை இவன் போர் தொடுக்கும் ஒலி என்று நினைத்துக் கொள்வானே என்றும், இதனால் போர் மூளுமே என்றும் ஒரு புலவர் வருந்திப் பாடியுள்ளார்[194].
உலகமெல்லாம் நலங்கிள்ளிக்கு உரியது என்று மாற்றான் அவையில் தாம் பாடப்போவதாகவும் அதற்குக் கொடை வழங்க வேண்டும் என்றும் புலவர் ஒருவர் இவனைப் பாடுகிறார்[195].
இவை எல்லாம், இவன் போர் ஆற்றலில் வல்லவன் என்பதைக் காட்டுகின்றன என்ற அளவில்தான் கொள்ள முடியும்.
கொடை
இவனது கொடையில் சிறப்பித்துக் கூறத்தக்கவை சில உண்டு. பாசறையிலும் பாணர்களுக்கு நல்லுணவு அளித்தமை, இவனிடம் பரிசில் பெற்றவர் பிறரிடம் சென்று பின்னும் பரிசில் பெற வேண்டிய நிலை நேராவண்ணம் இவனே மிகுதியாக வழங்கியமை[196] ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவன் பொருநர்களுக்குப் பெருந்தலைவனாய் விளங்கினான். இவனது நாட்டு மக்களும் கொடை உள்ளம்[197] நிரம்பியவர்களாக இருந்தனர்.
பண்பு நலம்
மகளிரை வணங்குவதில் இவன் அவர்களைக் காட்டிலும் மென்மையானவன். ஆடவர்களைத் தன் கட்டுக்குள் அடக்கிக் கொண்டு வருவதில் இவன் மிக வன்மையுடையவன்[198].
பகைவர் பணிவோடு வந்து தன்னிடம் இருந்தால் தன் அரசு முழுவதையும் அவர்களுக்குக் கொடுப்பதோடு தன் உயிரையும் கொடுப்பதற்கு அணியமாய் இருப்பதாக அவனே குறிப்பிடுகிறான். இதனால் இவனது கொடை உள்ளம் நன்கு வெளிப்படுகிறது.
'பகைவரை வென்று அடக்காவிட்டால் தனது மார்பிலுள்ள மலர் மாலைகள் காதலின்றிக் காசுக்காகக்க கட்டித் தழுவும் பெண்களிடம் குழைந்துபோகட்டும்' என்று இவன் வஞ்சினம் கூறியுள்ளான்[199]. இதனால், தன் மனைவியைத் தவிரப் பிற மகளிரைத் தழுவாத நல்லொழுக்க நெறியினன் இவன் என்பது பெறப்படும்.
வாணிகம்
இவன் காலத்தில் வாணிகக் கப்பல்கள் தமது கூம்புகளை உயர்த்திப் பாய்களை விரித்தபடியே புகார் நகரத்திற்குள் நுழைந்தன. கடல் வழியே சென்றபோது இடையிலிருந்த தீவுகளிலும் அவை பொருள்களை இறக்கி வாணிகம் செய்தன[200].
புகார் நகரமே அன்றி நல்லூர் என்னும் ஊரும் அவனது நாட்டிலிருந்த துறைமுகம் ஆகும். இது பாண்டிய நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையே இருந்தது (ஒரு காலத்தில் எவ்வி இதன் அரசன்). இந்த நல்லூரில் பாய்ந்த ஆற்றினூடேயும் பெரிய கப்பல்கள் (வங்கம்) நுழைந்துவந்தன. அந்தக் கப்பல்கள் அவ்வூரில் நாட்டப்பட்டிருந்த வேள்வித் தூண்களில் கட்டிவைத்து நிறுத்தப்பட்டன[201].
இவ்வாறு இவனது ஆட்சிக் காலத்தில் இரண்டு துறைமுகங்கள் வழியே கடல் வாணிகம் சிறப்புடன் நடைபெற்றது.
வேந்தர் வழிப்படல்
அறத்தின் வழியே பொருளும் இன்பமும் செல்லும். அது போல இவனது குடைநிழலின் வழியே ஏனைய இரு வேந்தர்களது குடைகள் சென்றனவாம்[202]. இந்தச் செய்தி இவனது வெற்றியை உணர்த்துவது அன்று; சேர பாண்டியர்களோடு இவனுக்கு இருந்த நட்புறவை விளக்குவது என்று கொள்ளலாம்.
'அணி இவுளி நலங்கிள்ளி', 'கடுமான் தோன்றல்'[203] என்பன இவனது போர்க்கோலத்தை நினைவூட்டுவன.
புலிச் சின்னம்
சோழர்களின் அடையாளச் சின்னம் புலி. இது 'பேழ்வாய் உழுவை' என்று கூறப்படுவதால் திறந்த வாயமைப்பு உடையதாகப் பொறிக்கப்பட்டிருந்தது என்பது தெரியவருகிறது.நலங்கிள்ளியின் சமகாலத்திய சோழமன்னர்
மாவளத்தான்
(நலங்கிள்ளியின் தம்பி)
நலங்கிள்ளியின் உடன்பிறந்த இளவல் மாவளத்தான். உடன் பிறவாப் பங்காளி நெடுங்கிள்ளி. இவர்கள் நலங்கிள்ளியின் காலத்திலேயே வாழ்ந்தவராவர். புறநானூற்றுக் கொளு, மாவளத்தானைச் சோழ அரசன் நலங்கிள்ளியின் தம்பி என்று குறிப்பிடுகிறது[204]. இஃது இவனது உறவுமுறையைத் தெளிவாக அறிய உதவி செய்கிறது. நலங்கிள்ளி, இளஞ்சேட் சென்னியின் மகன் என்பதை அவனது வரலாற்றில் கண்டோம். எனவே, இவனும் இளங்சேட் சென்னியின் மகன் என்பதை அவனது வரலாற்றால் அறிகிறோம். எனவே, இவனும் இளஞ்சேட் சென்னியின் மகன் ஆவான்.
ஆவூர் முற்றுகை
ஆவூர்க் கோட்டையில் இருந்துகொண்டு நெடுங்கிள்ளி அதனைச் சூழ்ந்திருந்த நாட்டை ஆண்டுவந்தான். அப்போது அவனது செல்வாக்கை ஒடுக்கச் சோழர் குடியைச் சேர்ந்த மற்றொரு கிளையினர் கருதினர். நலங்கிள்ளியும் அவன் தம்பி மாவளத்தானும் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.
நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் ஆவூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். கோட்டைக்குள்ளே இருந்த நெடுங்கிள்ளி மாவளத்தானை எதிர்த்துப் போரிடவில்லை. கோட்டைக் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளேயே இருந்தான். கோட்டைக் கதவுகளைத் தகர்க்க மாவளத்தானால் முடியாது என்று அவன் கருதியிருக்கலாம். அல்லது மாவளத்தானை எதிர்த்துப் போரிட்டால், தான் வெற்றிபெற முடியாது என்று நெடுங்கிள்ளி கருதியிருக்கலாம். முற்றுகையின் காலம் நீடித்தது. கோட்டைக்குள்ளேயே இருந்த மக்களும் விலங்கினங்களும் வெளியே வர முடியவில்லை. வெளியில் இருந்தவர் கோட்டைக்குள் வாழ்ந்தவர்களுக்கு வழக்கம் போல் உதவி செய்ய முடியவில்லை. எனவே, கோட்டைக்குள் இருந்த மகளிர், தலையில் பூ இல்லாமல் வெறுமனே தலையை வாரி முடித்துக் கொண்டனர். தாய்மார்களுக்கு நல்ல உணவு இல்லாமையால் குழந்தைகள் தாய்ப்பால் இல்லாமல் அழுதனர். யானைகள் உணவுக் கவளம் இல்லாமல் கட்டுத் தறிகளைத் தாக்கின; குளங்களில் படிய வாய்ப்பின்றி நிலங்களில் புரண்டன[205]. இந்த நிலைக்கெல்லாம் காரணம் நெடுங்கிள்ளி எதிர்த்துப் போரிடாமல் அடைத்துக்கொண்டு கிடக்கும் நிலைதான் என்று கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் எடுத்துரைத்தார். புலவரின் அறிவுரைகள் நெடுங்கிள்ளியைத் திருத்தின. அவன் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டுப் போரிடாமலேயே சென்றுவிட்டான். இதனால், ஆவூர்க் கோட்டை மாவளத்தானுக்குக் கிடைத்தது.
வட்டும் மாண்பும்
இந்த மாவளத்தானும் பார்ப்பனப் புலவர் தாமப்பல் கண்ணனாரும் வட்டு என்னும் சூது விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது புலவர் அரசனை ஏமாற்ற எண்ணி வஞ்சனையாக வட்டுக்காயைத் தம் கையால் மாற்றியமைத்துத் திருட்டுத்தனம் செய்தார். புலவர், அரசனுக்குத் தெரியாமல் இதனைச் செய்ய முயன்றார். என்றாலும் அரசன் பார்த்து விட்டான். அரசனுக்குச் சினம் மேலிட்டது. வட்டுக்காயை எடுத்து அவர்மீது ஓங்கி எறிந்தான். புலவருக்கு நல்ல அடி.
தவறு செய்தது அரசனிடம். அரசன் மேலும் வேறு வகையிலும் அவரைத் தண்டிக்கலாம். தண்டிக்க அவனுக்கு உரிமை உண்டு. அந்தத் தண்டனையிலிருந்தாவது இனித் தப்ப வேண்டுமே என்று புலவர் உணர்ந்தார். தந்திரமாகத் தம் குடிப்பிறப்பைப் பார்ப்பனர் என்று கூறித் தப்பித்துக் கொண்டார்[206].
குடிச்சிறப்பு
மாவளத்தான் கொடைவள்ளல் குடியில் வந்தவன்; புறாவுக்காகத் தன் உடைலையே நிறுத்துத் தந்த சிபியின் வழிவந்தவன்; பிறரால் பிற உயிருக்கு உண்டான துன்பத்தையே கண்டு உள்ளம் தாங்காத சிபியின் வழிவந்தவன்[207]. இதனைப் புலவர் முதலில் நினைவூட்டினார். இதனால், தானே பிறர் ஒருவருக்குத் துன்பம் செய்யக்கூடாது என்னும் கருத்தைக் குறிப்பால் உணர்த்தினார். மேலும், தம்மீது அவனுக்குக் கருணை தோன்ற அவனது முன்னோர்கள் யாரும் பார்ப்பார்க்குத் துன்பம் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார். இவன், பார்ப்பனனாகிய தம்மை அடித்துத் துன்புறுத்தினான் என்று குற்றம் சுமத்தினார். குற்றம் செய்தது புலவர்; குற்றம் சுமத்தப்பட்டது அரசன்மேல், எனினும் அரசன் நாணினான். தான் பிறரைத் துன்புறுத்தியது - அதிலும் பார்ப்பாரைத் துன்புறுத்தியது - தன் தவறு என்று எண்ணிக் கொண்டு நாணினான்.
தோற்றப் பொலிவு
'கடுமான் கைவண் தோன்றல்'[208] என்று இவன் குறிப்பிடப் படுகிறான். இது இவனது போர்க்கோலத்தைக் காட்டுகிறது.
நெடுங்கிள்ளி
(காரியாற்றுத் துஞ்சியவன்)
நலங்கிள்ளியும் மாவளத்தானும் அண்ணன் தம்பியர். இவர்கள் காலத்தில் இருந்த மற்றொரு சோழ அரசன் நெடுங்கிள்ளி. இவன் நலங்கிள்ளியின் பங்காளியாக இருந்திருக்க வேண்டும் என்பது புறநானூற்றுப் பாடல்களால் புலனாகின்றது.
ஆவூர் முற்றுகை
ஆவூரில் நெடுங்கிள்ளி தங்கியிருந்தான். நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான். ஆவூரைத் தாக்கினான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே தங்கிவிட்டான். மாவளத்தான் விட்டபாடில்லை. ஆவூர்க் கோட்டையே வளைத்து முற்றுகையிட்டான். முற்றுகை நீடித்தது[209].
கோவூர்கிழாரின் அறிவுரையினை ஏற்றுக் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டுவிட்டான். இவன் உறையூர்க் கோட்டைக்குள் அடைந்து கிடப்பதை மீண்டும் நாம் காண்பதால், இவன் ஆவூர்க் கோட்டையை மாவளத்தானிடம் இழந்துவிட்டான் எனத் தோன்றுகிறது.உறையூர் முற்றுகை
ஆவூரில் நிகழ்ந்தது போலவே, உறையூரிலும் முற்றுகை நிகழ்ந்தது. நெடுங்கிள்ளி கோட்டைக் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்தான். இங்கு முற்றுகையிட்டிருந்தவன் நலங்கிள்ளி.
முற்றுகையின்போது புலவர்களுக்கு மட்டும் தடை இல்லை. அவர்கள் உள்ளேயும் வெளியேயும் கட்டுப்பாடு இல்லாமல் சென்று வரலாம். ஆவூர் முற்றுகையின்போது கோவூர்கிழார் அவ்வாறு தடையின்றி உள்ளே சென்றதை அறிவோம். உறையூர் முற்றுகையின் போதும் அவர் வெளியிலிருந்து உள்ளேயும், உள்ளேயிருந்து வெளியேயும் வந்து முறையே அடைக்கப்பட்டிருந்தவனுக்கும், அடைத்தவனுக்கும் அறிவுரை கூறுவதை அடுத்துக் காண்போம். இந்த வகையில் இளந்தத்தன் என்னும் புலவர் உறையூருக்குச் சென்றார். உள்ளே இருந்த அரசன் இந்தப் புலவரை நலங்கிள்ளியின் ஒற்றன் என்று கருதிக்கொல்ல நினைத்தான். புலவர்க்கு நேர்ந்த நிலையைக் கோவூர்கிழார் கண்டார்.
இளந்தத்தன் புலவர் என்றும், புலவர்கள் பரிசில் பெற்று உண்டும் வழங்கியும் வாழும் வாழ்க்கையினர் என்றும், பிறருக்குத் தீங்கு செய்து அறியாத அவரது பண்புகளால் அரசன்போல் செம்மாந்து செல்லும் இயல்பினர் என்றும் எடுத்துரைத்தார்[210]. நெடுங்கிள்ளி, கோவூர்கிழாரின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு இளந்தத்தனைக் கொல்லாது விட்டுவிட்டான்.
உறையூர் முற்றுகை நீடித்து. கோவூர்கிழார் அடைத்தவனையும் அடைக்கப்பட்டிருந்தவனையும் கண்டு பாடினார். இருவரும் சோழர்குடியினர். இருவரும் வெற்றி பெறுவது முடியாத செயல். எனவே, யார் தோற்றாலும் தோற்பது சோழர் குடியே. இந்தத் தோல்வி ஏனைய சேரபாண்டியர், சோழரை ஏளனம் செய்ய ஏதுவாகும். இவ்வாறு இரண்டு சோழ அரசர்களிடமும் எடுத்துப் புலவர் கூறினார்.
இந்த அறிவுரையின் விளைவு என்ன என்பது தெரியவில்லை. முற்றுகை கைவிடப்பட்டிருக்கலாம். அல்லது நெடுங்கிள்ளி உறையூரை நலங்கிள்ளிக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம்.இறுதி நிலை
இவனது பெயரைக் 'காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி'[211] என்று புறநானூற்றுக் கொளுக் குறிப்பிடுகிறது. இதனால், இவன் காரியாறு என்னுமிடத்தில் இறந்தான் என்பதை அறியலாம். இந்தச் சிறப்பு, போரின் விளைவு ஆயின் மீண்டும் நலங்கிள்ளியோடு இகலி நடத்திய போரோ என்று எண்ணத்தூண்டும்.
கிள்ளிவளவன் – 1 & 2
கிள்ளி அரசர்களது வரலாற்றைக் காண்கையில் வளத்தான் என்னும் பெயருடன் கிள்ளி அரசர்களின் தம்பியராய் விளங்கியவர்களின் வரலாற்றையும் கண்டோம். இப்போது 'வளவன்' என்னும் பெயர்கொண்ட அரசர்களின் வரலாற்றைக் காண்போம்.
வளவன் என்னும் பெயர்கொண்ட அரசர்களின் வரலாறெல்லாம் புறநானூற்றுப் பாடல்களிலிருந்தே கிடைக்கின்றன. அகத்திணை நூல்களில் அவர்களைப் பற்றிய குறிப்பு இல்லை. காரணம், இவர்கள் காலத்திற்கு முன்பே பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வரலாற்றில் சுட்டியதைப்போல். புறநானூறு தொகுக்கப்பட்டு விட்டதே ஆகும்.
வளவன் என்று குறிப்பிடப்படும் அரசர்கள் இருவர். இருவரும் கிள்ளிவளவன் என்றே குறிப்பிடப்படுகின்றனர். எனவே இவர்களது தந்தை கிள்ளி என்பது பெறப்படும். இவர்களில் ஒரு கிள்ளிவளவன் குளமுற்றம் என்னுமிடத்தில் இறந்தான். மற்றொருவன் குராப்பள்ளி என்னுமிடத்தில் இறந்தான். எனவே, இருவேறு அரசர்கள் இவர்கள் என்பது பெறப்படும். இரு வேறு அரசர்கள் ஒரே பெயர்கொண்டு விளங்கியுள்ளனர். எனவே, ஒரு தந்தையின் மக்கள் என்று கொள்ள இயலவில்லை. இதனால், இவர்களில் ஒருவனை நலங்கிள்ளியின் மகன் என்றும், மற்றொருவனை நெடுங்கிள்ளியின் மகன் என்றும் நாம் கருதலாம். செல்வாக்கு மிகுதிநோக்கி நலங்கிள்ளியின் மகன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று உய்த்துணரலாம்[212].
இனி, இவர்களது வரலாற்றைத் தனித்தனியே நோக்கலாம்.கிள்ளி வளவன் – 1
(குளமுற்றத்துத் துஞ்சியவன்)
தந்தை
கிள்ளிவளவன் என்னும் பெயர் கிள்ளியின் மகன் வளவன் என்னும் பொருளைத் தருகிறது. செல்வாக்குடன் அரசாண்ட கிள்ளி, நலங்கிள்ளி ஆவான். இவனது மகன் என்று இவனைக் கொள்ளலாம்.
இந்தக் கொள்கை சரியானது என்பதைக் கீழ்க்காணும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. நலங்கிள்ளியையும் கிள்ளிவளவனையும் இரண்டு புலவர்கள் கண்டு பாடியுள்ளனர். அவர்களில் ஆலத்தூர் கிழார் தம் பாடலில் இவர்களது பெயர்களைத் தந்தை பெயருடன் கூறுவதன் வாயிலாக உறவுமுறையை நமக்குத் தெளிவுபடுத்துகிறார். இவர் நலங்கிள்ளியைச் 'சேட்சென்னி நலங்கிள்ளி'[213] என்று குறிப்பிடுகிறார். வளவனைப் 'பசும்பூண் கிள்ளிவளவன்'[214] என்று குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்புகள் தெளிவான உறவுமுறை ஒன்றை நமக்குக் காட்டுகின்றன.
சேட்சென்னி
நலங்கிள்ளி
(பசும்பூண்கிள்ளி)
வளவன்
(குளமுற்றத்தில் துஞ்சியவன்)
இந்த உறவுமுறை பொருத்தமானது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் கோவூர்கிழார் பாடல்களும் அமைந்துள்ளன.
மேலே கண்டவாறு ஒரே புலவர் இரண்டு அரசர்களையும் கண்டு பாடியதிலிருந்து அந்த அரசர்கள் சமகாலத்தவர் அல்லது அடுத்தடுத்த காலத்தவர் என்னும் உண்மையை மட்டும்தான் நாம் பெறமுடியும். அண்ணன் தம்பி உறவா, தந்தை மகன் உறவா என்பதை அவர்களது பாடல்களிலிருந்து உணரமுடியவில்லை என்றாலும். அவர்களது பெயர்கள் தந்தை மகன் உறவு முறையையும். அண்ணன் தம்பி உறவுமுறையையும் காட்டுவனவாய் உள்ளன.
நாடு
இவன் உறையூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டுவந்தான்[215].(உறையூரில் அவனது அரண்மனை இருந்தது). அது ஒளிரும் நிலைமாடங்களைக் கொண்டது[216].
மழையில்லாத காலங்களிலும் காவிரி நீரூட்டும் வளம் நிறைந்த நாடு அவன் நாடு[217]. ஒரு பெண்யானை படுக்கக்கூடிய பரப்பளவில் ஏழு ஆண்யானைகளைக் காப்பாற்றும் அளவுக்கு நல்ல விளைவினைத் தரக்கூடிய வளம் நிறைந்த நாடு அது[218]. இவனது நாட்டில் ஆறு தொழில்களைப் புரியும் அந்தணர் அறம் செய்தற் பொருட்டுத் தீ வளர்த்தார்கள்[219].
இத்தகைய வளமும் நலமும் மிக்க நாட்டை இவன் ஆண்டு வந்தான்.
கருவூர் முற்றுகை
தண் ஆன் பொருநை என்னும் ஆறு பாயும் ஊர் கருவூர். இந்த ஆற்று மணலில் மகளிர் கழங்கு விளையாடுவர். இந்தக் கிள்ளிவளவன் அந்தக் கருவூரை முற்றுகையிட்டான்;[220] ஆற்றங்கரையிலிருந்த காவல்மரங்களை வெட்டி வீழ்த்தினான். காவல் மரங்களை வெட்டும் ஒலி கருவூர் நகருக்குள்ளேயும் எதிரொலித்தது. கருவூர் அரசன் சேரன் கருவூரின் கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான்; வெளியில் வந்து காவல் மரத்தை வெட்டுபவனை எதிர்த்துப் போர் செய்யவில்லை. இது சேரனின் கோழைத்தனம். இத்தகைய கோழையோடு வீரனான கிள்ளிவளவன் போரிட நினைப்பது நாணத்தக்க செயல். இதனை வளவனுக்கு எடுத்துக் கூறினார் ஆலத்தூர்கிழார் என்னும் புலவர்[221]. (இது போன்ற செயலை இவனின் தந்தை வரலாற்றிலும் காணலாம்.)புலவர் அறிவுரையைக் கேட்ட வளவன் முற்றுகையைக் கைவிட்டிருக்கலாம்.
செம்பு உருக்கி வார்த்த ஒரு கோட்டைக்குள்ளே வேந்தன் ஒருவன் இருந்தான். அந்தக் கோட்டை முதலை வாழும் அகழிகளையும், இலஞ்சிகளையும் கொண்டது. இது மிகவும் அழகான கோட்டை. கிள்ளிவளவன் அந்தக் கோட்டையின் அழகை எண்ணியாவது அழிக்காமல் விட்டிருக்கலாம். ஆனால், அவன் விடவில்லை; கோட்டையைச் சிதைத்தான்[222].
இந்தக் கோட்டை எந்த ஊரில் இருந்தது? கோட்டைக்குள்ளே இருந்த வேந்தன் யார்? என்பன தெரியவில்லை. இந்தக் கோட்டை முன் கூறிய கருவூர்க் கோட்டையாயின் முன்பு ஆலத்தூர்கிழார் கூறிய அறிவுரையை இந்த வளவன் பொருட்படுத்தாமல் கோட்டையைச் சிதைத்தான் என்று முடியும். இவன் வஞ்சி நகரை வாட்டிய போர் ஒன்றும் உண்டு. இந்தப் போரை இஃது உயர்த்துவதாயும் இருக்கலாம். பாழி நகரம். துவரை நகரம் ஆகியவை செம்புக்கோட்டையைக் கொண்டவை. ஒரு வேளை இவன் அழித்தானா என்பதும் தெரியவில்லை.
நாம் பொருத்தமான வகையில் இதனை எண்ணிப் பார்க்கலாம். கருவூர் முற்றுகையை ஆலத்தூர்கிழார் அறிவுரைப்படி இவன் கைவிட்டான். கருவூர்க் கோட்டைக்குள்ளே இருந்த அரசன் அந்தக் கோட்டையை விட்டுவிட்டுச் சென்று பாழி நகரக் கோட்டைக்குள் தங்கினான். நார்முடிச்சேரல் நன்னனைக் கொன்றுவிட்டதனால் அந்த நகரம் சேரர் ஆட்சிக்கு உட்பட்டுக் கிடந்தது. எனவே, அந்தக் கோட்டையில் இந்தச் சேரன் தங்கியிருந்து கொண்டு சோழனைத் தாக்க வலிமைமிக்க படையைத் திரட்டிக் கொண்டிருந்தான். நிலைமை உணர்ந்த இந்த வளவன் பாழி நகரக் கோட்டையைத் தாக்கி அழித்தான்.
இவ்வாறு கோழைத்தனமாகவும் சூரத்தனம் போலவும் இவனிடம் நடந்து கொண்ட சேரன், யார் என்பது விளங்கவில்லை.
வஞ்சி நகரை வாட்டல்
சேர அரசன் வானவனுக்கும் இவனுக்கும் போர் மூண்டது. போர் வஞ்சி நகரில் நடைபெற்றது. இப்போது தாராபுரம் என வழங்கும் ஊர்க்கு அக்காலத்தில் சேர நாட்டு வஞ்சி நகரின் நினைவாக வஞ்சிமுற்றம் என்னும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்த வஞ்சி நகரில் நடந்த போரில் வானவன் கொல்லப்பட்டான்[223]. வஞ்சிமுற்ற மக்கள் வாடினர்.
கிள்ளிவளவனால் இப்போரில் கொல்லப்பட்ட வானவன் இமயத்தில் வில்லைப் பொறித்தான் என்று கூறப்படுகிறது. இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசன் என்று எண்ண வேண்டியுள்ளது.
பெரு நற்கிள்ளியும் (இராசசூயம் வேட்டவன்) இந்த மாந்தரஞ் சேரலும் போரிட்டபோது சேரன் தோற்றதை நாம் காண்கிறோம். இந்த நிகழ்ச்சியை அடுத்துத் தோன்றிய போரில் கிள்ளிவளவன் இந்த மாந்தரஞ்சேரலோடு (வானவனோடு போரிட்டதையும், போரில் சோழன் வெற்றிபெற்றதையும், சேரன் மாண்டதையும் நாம் காண்கிறோம்.
சேரர்க்கும் சோழர்க்கும் நடந்த போர்களில் குறுநில மன்னர்கள் சோழனுக்குத் துணையாக நின்றதைக் காண்கிறோம். ஓரி, அதியமான், மலையன் ஆகியோர் அவ்வாறு சோழர் பக்கம் இருந்தவர்கள். பெருஞ் சேரல் இரும்பொறையும் அவனது தம்பி மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழர்க்கு எதிர்ப்பாய்க் கொங்கு நாட்டில் தங்களது ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார்கள். பணம் கொடுத்த பக்கம் சேர்ந்து கொள்ளும் மலையமான் மரபினர் சோழர் பக்கம் ஒரு சமயம் சேர்ந்து கொண்டு மாந்தரசேரலுக்கு தோல்வியை உண்டாக்கியது போலவே மற்றொரு சமயம் சேரர் பக்கம் சேர்ந்து கொண்டு கொல்லிமலைத் தலைவன் ஓரியைக் கொன்று அவனது நாட்டைச் சேர அரசர்க்குக் கொடுத்தனர்.
இந்தப் போர்களில் எல்லாம் நாம் குறிப்பிடத்தக்க உண்மை ஒன்று உண்டு. சேரர்கள் குறுநில மன்னர்களை எதிர்த்துத் தாக்கிய போர்களில் வெற்றியையே கண்டனர். கொல்லிப் போரில் சோழ அரசன் அதியமானுக்கு உதவியது போல் முடிவேந்தர் உதவி இருந்த போதும் சேரர்க்கே வெற்றி கிடைத்தது. ஆனால், சோழர்கள் தாமே எதிர்த்துத் தாக்கிய போர்களில் எல்லாம் இந்தச் சேர அரசர்கள் தோல்வியையே கண்டனர். இந்த முடிவுகளே நாம் குறிப்பிடத்தக்கவை.சேர, பாண்டியரை வெல்லக் கருதல்
புலவர்கள் எல்லாரும் இவனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற விரும்பி நாடி வந்தனர். அவர்களுக்கெல்லாம் கொடை வழங்கிய அதேநேரத்தில் இவனது நாட்டமெல்லாம் சேர நாட்டையும் பாண்டிய நாட்டையும் வெல்வதிலேயே இருந்தது[224].
பகைவர்களின் கோட்டைகள் பலவற்றைக் கடந்து வெற்றி பெற்றான் என்றும்,[225] அவர்களது முடிப்பொன்னைக் கொண்டு வீரக்கழல் செய்து அணிந்து கொண்டான் என்றும்[226]. இவன் படையெடுத்து வந்து தம் நாட்டை அழிப்பான் என்று எண்ணிய பகைவர்கள் தீக்கனாக் கண்டு நடுங்கினர் என்றும் [227] கூறப்படும் செய்திகள் இவனது போர் நிகழ்ச்சிகளை நினைவூட்டுகின்றன. ஞாயிற்றிடம் நிலவொளியையும் திங்களிடம் வெயிலையும் விரும்பினால் முயன்று பெறக் கூடியவன் என்று கூறப்படுவது[228] இவனது ஆற்றலைப் புலப்படுத்துகின்றது.
மலையமான் மக்களைக் கொல்ல முயன்றது
புறநானூற்றுக் கொளு, இந்தக் கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானையின் காலடியில் இட்டுக் கொல்ல முயன்றதாகக் குறிப்பிடுகிறது[229]. பாடலில் குழந்தைகள் இன்னார் என்ற குறிப்பு இல்லை. குழந்தைகள் கள்ளமற்ற தன்மையை எடுத்துக்காட்டிக் கோவூர்கிழார் என்னும் புலவர் சோழனது செயலைத் தடுத்து நிறுத்தினார். குழந்தைகள் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டனர்.
காரி, சோழர் பக்கம் சேர்ந்து கொண்டு சேரனை வெல்ல ஒரு சமயம் உதவினான் என்றாலும், பின்பு ஒருமுறை சேரர் பக்கம் சேர்ந்து கொண்டு ஓரியைக் கொன்று கொல்லிமலைப் பகுதியைச் சேர்க்கச் சேரனுக்கு உதவினான் என்பதை அவன் வரலாற்றில் நாம் அறியலாம். இவ்வாறு காரி நிலையின்றிச் சோழர் பக்கமும் சேரர் பக்கமும் மாறியதால், சோழ அரசன் அவன்மீது சினம் கொண்டான். காரியின் குழந்தைகள் அவனுக்குக் கிடைத்த போது, இந்தக் குழந்தைகளும் பெரியவர்கள் ஆனபின் தந்தையைப்போல் சேரர்க்குத் துணையாய் அமைவார்களோ என்று எண்ணியிருப்பான். இந்த எண்ணம் முள்மரத்தை முளைக்கும் போதே கிள்ளி எறிந்துவிடுவது போன்றது என்று அவனது அரச நீதி அவனுக்குக் கூறியிருக்கும்[230]. அதனால், கொல்லத் துணிந்திருப்பான்.
புலவர் குழந்தைகளின் கள்ளமற்ற தன்மையை விளக்கினார். அவனது முன்னோன் புறாவுக்காகத் தன் உடலையே வழங்கிய கொடையை நினைவூட்டினார். சோழன் உள்ளம் மாறியது; குழந்தைகளும் பிழைத்தனர்.
கையறவு
நப்பசைலையார், மாசாத்தனார், முடவனார் என்னும் புலவர்கள் இவன் இறந்தது கண்டு இரங்கிப் பாடியுள்ளனர். கூற்றுவன் கொடியவன் என்றும், இவனது உயிரைக் கொண்டதால் இவனால் போரில் கூற்றுவனுக்குக் கிடைக்கும் இரை கிடைக்காதாகையால் கூற்றுவன் ஓர் அறிவிலி என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்[231]. இதனால், அவனது உடல் தாழியில் இட்டு நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது எனலாம்.
ஆட்சி
வெள்ளி தெற்குத் திசையில் தோன்றினாலும் கவலையில்லை. வெள்ளி எந்தத் திசையில் தோன்றினால் என்ன? தோன்றாமல் போனால்தான் என்ன?[232] இந்த வளவன் இருக்கிறான் உதவுவதற்கு என்று புலவர்கள் மகிழ்ந்திருந்தனர்.
இவனது நாட்டு மக்கள் சோறு சமைக்கும் நெருப்பைத் தவிர வேறு சூடு அறியாராம். (இதனால் பகைவன் இவனது நாட்டை வென்று எரியூட்டியது இல்லை என்பது பொருள்.)[233] இவனது நாட்டார் போர்ப் பூசலைக் கனவிலும் அறியாதார்; குட்டிகளைக் குகையில் காக்கும் புலிபோல் இவன் நாட்டுமக்களைக் காத்து வந்தானாம்[234].வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் இவனுக்குக் கூறும் அறிவுரைகள் இவனது ஆட்சி முறையைப்பற்றி நம்மை எண்ணச் செய்கின்றன, 'காட்சிக்கு எளியனாக இருக்கவேண்டும். வெண் கொற்றக்குடை அரசனுக்கு வெயில்படாமல் மறைப்பதற்கு அன்று: மக்களுக்குத் துன்பம் நேராமல் நிழல் தந்து காப்பாற்றுவதற்காகவே என்று கூறுகிறார். நண்பர் அல்லாதார் பொதுப்படையாகக் கூறும் சொற்களை உண்மை என்று ஏற்றுக்கொள்ளக் கூடாது. உழவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்' என்றெல்லாம் அவர் அறிவுரை கூறியுள்ளார். இவனிடம் ஓரளவேனும் இந்தக் குறைபாடுகள் இருந்ததனால்தான் இவ்வாறு இவர் அறிவுரை கூறவேண்டிய நிலை ஏற்பட்டது என்று கருதலாம்.
கொடை
இவனது கொடைத்தன்மை புலவர்களைப் பொறுத்தவரை 'ஆனா ஈகை'யாக அமைந்திருந்தது[235]. எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் கொடுத்திருக்கலாமே என்றும், வந்தவருக்கெல்லாம் கொடுத்தாலும் இன்னும் பலர் வந்திருந்தால் கொடுத்திருக்கலாமே என்றும் கொடையாளி கருதுவதுதான் 'ஆனா ஈகை'.
இவன் எல்லாருக்கும் எல்லாப் பொருள்களையும் கொடுத்தான் என்றாலும், சிலருக்குச் சில பொருள்களைக் கொடுத்ததில் தனிச் சிறப்பு இருந்தது.
கலையில் வல்ல பாணர்க்கும்,[236] எதிலும் வல்லமையின்றி ஏதோ ஆசையில் பரிசில் பெறலாம் என வந்த பரிசிலர்க்கும் இவன் பரிசில் வழங்கினான்[237]. சிறந்த உணவு,[238] சிறந்த உடை,[239] அணிகலன்கள்[240] முதலான பொருள்களையும், பாணர்க்குப் பொன்னால் செய்யப்பட்ட தாமரையையும்[241] இவன் வழங்கியதில்கூட அத்தனை வியப்பு இல்லை. தன் வாழ்நாளையும் சேர்த்துக்கொண்டு வாழவேண்டும் என்று கொடைவள்ளல் ஒருவனை இவனே வாழ்த்தியதில்தான் இவனது கொடைத்திறனின் உச்சநிலை அமைந்திருக்கிறது.
பண்ணன் அவனது நாட்டிலிருந்த குடிமகன். சிறுகுடியில்[242] அவன் வாழ்ந்துவந்தான். அவன் வழங்கியதெல்லாம் என்ன? சோறு, அதில் என்ன சிறப்பு? வந்தவர்க்கெல்லாம் சோறு, அத்துடன் வாராதவர்களுக்கும் சோற்று மூட்டை கொடுத்தான். இந்தக் கொடைத் தன்மையைக் கண்டான்; வியந்தான். தன் கொடையைக் காட்டிலும் பயன்நோக்கில் விஞ்சி மேம்பட்டு நிற்பதை உணர்ந்தான். தனது வாழ்நாளும் சேர்ந்து பண்ணனுக்கு அமைந்தால் மக்களுக்குப் பயனுடையதாக இருக்குமே என்று கருதினான்; வாழ்த்தினான்; பாடினான்[243].
குடிமகன் அரசனைப் பாராட்டிப் பாடுவது இயல்பு. குடிமகன் மற்றொரு குடிமகனைப் பாராட்டிப் பாடுவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அரசன் ஒருவன் - பேரும் புகழும் ஒருங்கு பெற்ற அரசன் ஒருவன் - தன் நாட்டிலுள்ள குடிமகனை, எளிய குடிமகனைப் பாராட்டிப் பாடுகிறான் என்றால், தன் வாழ்நாளையே அவனுக்குக் கொடுக்க விழைகிறான் என்றால், அவனது கொடைத் தன்மையிலும் பெருந்தன்மையிலும் எத்துணைச் சான்றாண்மைப் பண்புகள் உள்ளன என்பதை நாம் உணரலாம்.
பெயர் அடைமொழிகள்
'பசும்பூண் கிள்ளிவளவன்',[244] பொன்னியல் பெரும்பூண் வளவன்',[245] 'பொலந்தார் வளவன்',[246] 'பலகோள் செய்தார் மார்ப'[247] என்பன அணிகலன்களோடு கூடிய அவனது தோற்றப் பொலிவினைக் காட்டுகின்றன.
'வாய்வாள் வளவன்',[248] 'திண்தேர் வளவன்'[249], 'நெடுங் கொடி நுடங்கும் யானை செடுமா வளவன்'[250] என்பன அவனது போர்க் கோலத்தைக் காட்டுகின்றன.இவனது மரபினர் 'மறங்கெழு சோழர்'[251] என்று குறிப்பிடப் படுகின்றனர்.
முன்னோர்
புறா உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன் உடலையே துலாக் கோலில் (தராசில்) நிறுத்தித் தந்த அரசனான சிபியின் வழி வந்தவன் இவன் என்று குறிப்பிடப்படுகிறான்[252]. அவன் வழிவந்த இவனுக்கும் கொடை உள்ளம் அமைந்தது.
கிள்ளிவளவன் – 2
(குராப்பள்ளித் துஞ்சியவன்)
'காவிரிக் கிழவன்' என்றும் 'உறந்தைப் பொருநன்' என்றும் இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான்[253]. இதனால், இவன் உறையூரில் தங்கிச் சோழநாட்டை ஆண்டுவந்தான் என்பதை உணரலாம்.
கருவூர்ப் போர்
கொங்குநாட்டிலிருந்த கருவூரை இவன் தாக்கினான்[254]. போரில் பிட்டை (பிட்டன்) என்பவன் படுகாயமடைந்தான். இதனால், கொங்கு நாட்டார் தோற்றனர்.
வஞ்சிமுற்றப் போர்
வஞ்சிமுற்றம் என்னுமிடத்தையும் இவன் தாக்கினான்[255]. போரில் எதிரிகளைக் கொன்று குவித்தான். இதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் குடநாட்டுப் படையினர்.
இந்த இரண்டு ஊர்களும் வெவ்வேறு இடங்கள். கருவூர் இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கருவூர், வஞ்சிமுற்றம் என்பது இப்போது கோவை மாவட்டத்தில் உள்ள தாராபுரம். கருவூரில் தாக்கப்பட்ட அரசன் யார் என்பதற்கு வெளிப்படையான சான்று இல்லை என்றாலும், உறுதிமிக்க சான்று உள்ளது. அது பிட்டன் போரில் காயம்பட்டான் என்று குறிப்பிடப்படுவதே ஆகும். பிட்டன் வானவனின் படைத்தலைவன் என்பதைச் சேரர் வரலாற்றுப் பகுதியில் 'வானவன்' என்னும் தலைப்பின்கீழ்க் கண்டோம். எனவே, பிட்டன் போரிட்டபோது கருவூரில் இருந்த அரசன் மாந்தரஞ்சேரல் என்பது பெறப்படுகிறது.
இந்த மாந்தரஞ்சேரல் வரலாறு, சோழர் வரலாற்று நிகழ்ச்சிகளை ஒரு நிரல்செய்து காட்டுகிறது.
மாந்தரஞ்சேரல், காரியின் துணை தனக்குக் கிடைக்காமையால் சோழரை எதிர்த்துத் தாக்கிய ஒரு போரில் தோற்றான். இந்தப் போரில் இவனைத் தாக்கிய சோழ அரசன் பெருநற்கிள்ளி (இராசசூயம் வேட்டவன்).
கிள்ளிவளவன் - 1 (குளமுற்றத்துத் துஞ்சியவன்). கருவூரைத் தாக்கியபோது வானவன் கோட்டைக் கதவை அடைத்துக் கொண்டு உள்ளேயே இருந்தான். அடைத்துக்கொண்டு உள்ளே இருக்கும் அரசனோடு போர்புரிவது அழகன்று என்று புலவரால் அறிவுறுத்தப் பட்ட சோழன் முற்றுகையைக் கைவிட்டான்.
எனினும், வானவன் கருவூர்க் கோட்டைக்குள் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை. தன் படைத்தலைவன் பிட்டனிடம் கருவூரை ஒப்படைத்துவிட்டு பாழி நகருக்குச் சென்று தங்கி பெரும்படை ஒன்றைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். நிலைமை அறிந்த கிள்ளிவளவன் - 1 அவனைப் பாழி நகரிலே தாக்கினான்; பாழிக் கோட்டையை அழித்தான். மாந்தரஞ் சேரல் தன் மற்றொரு கோட்டையான வஞ்சிமுற்றக் கோட்டைக்குத் தப்பிவிட்டான்.
கிள்ளிவளவன் - 1 (குளமுற்றத்துத் துஞ்சியவன்) பாழிக் கோட்டையைத் தாக்கிக் கொண்டிருந்தபோது கருவூரில் அப்போரின் எதிரொலியாக மற்றொரு போர் மூண்டது. அந்தப் போர் பிட்டனுக்கும், கிள்ளிவளவன் - 2 (குராப்பள்ளித் துஞ்சியவன்) என்பவனுக்கும் இடையே நடைபெற்றது. கிள்ளிவளவன் - 2, பிட்டனைப் படுகாயம் அடையும்படி செய்தான்.
பாழியிலிருந்து தப்பிவந்த மாந்தரஞ்சேரல் வஞ்சிமுற்றக் கோட்டையில் இருந்தபோது கிள்ளிவளவன் - 1, கிள்ளிவளவன் - 2 ஆகிய இருவரும் தாக்கினர். மாந்தரஞ்சேரல் கொல்லப்பட்டான்.இந்த நிகழ்ச்சிகள் கிள்ளிவளவன் - 1, கிள்ளிவளவன் - 2 ஆகிய இருவரும் சமகாலத்தவர் என்பதைத் தெளிவாக்குகின்றன[256]. ஒருவன் குளமுற்றத்தில் துஞ்சினான் என்றும், மற்றொருவன் குராப்பள்ளியில் துஞ்சினான் என்றும் கூறப்படுவதால் இவர்கள் இருவரையும் ஒருவர் எனக் கூறமுடியவில்லை.
கிள்ளிவளவன் - 1, கருவூரை முற்றுகையிட்டபோது போரே நடைபெறவில்லை என்பது தெளிவு. கிள்ளிவளவன் - 2, கருவூரை முற்றுகையிட்டபோது போரும் நடந்தது. போரில் பிட்டன் என்பவனும் படுகாயம் அடைந்தான். இந்த வேறுபட்ட நிகழ்ச்சிகள் ஒரே அரசன் காலத்தில் நிகழ்ந்தவை என்று கூறுவது பொருந்தா. இதனாலும், கிள்ளிவளவன் - 1, கிள்ளிவளவன் - 2 ஆகியோர் வேறு வேறு அரசர்களே என்பது பெறப்படும்.
இவர்கள் உடன்பிறந்த அண்ணன் தம்பியராகவோ பெரியப்பன். சிற்றப்பன் மக்களாகவோ இருக்கலாம். நலங்கிள்ளியின் மகன் கிள்ளிவளவன் - 1 என்று அவனது வரலாற்றிலே கண்டோம்.
ஆட்சி
வண்டிச் சக்கரம் கல்லால் தடுக்கப்பட்டாலும், பள்ளத்தில் ஆழ்ந்தாலும் பொருட்படுத்தாமல் பெரிதும் முண்டி இழுத்துச் செல்லும் காளைமாடுபோல இவன் தன் நாட்டை நடத்திச் சென்றான்[257].
இவனது ஆட்சிக்குச் சோதனையாகத் தடைகளும் சோர்வும் பிறந்தன. அவற்றை இவன் வலிமையுடன் சமாளித்து அரசாட்சி நடத்தி வந்தான். இதனால், அவன் நாட்டுமக்கள் முன் அவர்களின் துன்பம் நீக்கும் இவனது ஆட்சிக் கோலமே நின்றது. உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் விறலியும் கடற்கரை ஓரமாகச் சென்றுகொண்டிருந்த போது கடலில் முழுநிலாத் தோன்றுவதைக் கண்டனர். உடனே அவர்களுக்கு இந்தச் சோழனின் வெண்கொற்றக் குடைதான் நினைவுக்கு வந்தது. அந்த நிலாவைச் சோழனது குடையென எண்ணி வணங்கினர்[258].கொடை
இவனது ஆட்சிக் காலத்தில் இன்னல்கள் பல நேர்ந்தன என்று கண்டோம். அந்த இன்னற் காலத்தில் இவனைக் கண்டு, குமரனார் என்னும் புலவர் பாடிப் பரிசில் வேண்டினார். இந்தக் குமரனாரின் சொந்த ஊர் கோனாட்டு எறிச்சலூர். கோனாடு என்பது இப்போதுள்ள புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் இருந்தது. அங்கிருந்து இவர் உறையூர் வந்து இவனைக் கண்டு பாடினார். பாடலில் அவர் இந்தச் சோழன் நல்லறிவுடையவன் என்றும், அவனது வறுமையை என்றும் தாம் எண்ணிப் பார்க்கும் தன்மை உடையவர் என்றும் கூறுகிறார். புலவரிடம் பண்பறிந்து ஒழுகாதவர், நாற்படையில் வலிமை மிக்க வேந்தராயினும் அவர்களைத் தாம் வியந்து மதிப்பதில்லை என்றும், அவர் குறிப்பிடுகிறார். சோழன் பரிசில் நல்காவிடினும் அவனை இவர் பாடியுள்ளார்[259].
தோற்றம்
அவையில் வீற்றிருக்கும்போது பனைக்கொடிக் கடவுள் இவனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளார்[260]. இந்தக் கடவுள் வெள்ளை நிறத்தவர். பாண்டியனுக்கு நீலநிறத் திருமால் உவமை கூறப்பட்டுள்ளார். எனவே, பாண்டியனைக்காட்டிலும் இந்தச் சோழன் சற்றேனும் வெளுப்பான மேனி உடையவனாயிருந்தான் என்பது பெறப்படும்.
கூர்மையான வாளைப் பயன்படுத்தும் வல்லமை மிக்கவனாய் அதனுடன் தோற்றமளித்ததையும், பக்கத்தே வெற்றியின் அறிகுறியாக முரசு முழங்க அவன் உலாவந்த காட்சியையும் தாமோதரனார் குறிப்பிடுகிறார்.
இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
சங்ககாலச் சோழவேந்தருள் சிறப்புமிக்க மாபெரும் மன்னன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆவான். இவனுக்குப் பிறகு ஓர் அளவிற்குப் புகழ்பெற்றவன் சோழன் செங்கணான் ஆவான்.
சேர சோழ பாண்டியர் ஒருமைப்பாடு
தமிழ்நாட்டு மூவேந்தரான சேர, சோழ, பாண்டியர் தம்முள் பகைமைகொண்டு ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொள்வது வழக்கமாக இருந்துவந்தது. இவர்களுள் இருவர் ஒன்றுசேர்ந்து மூன்றாமவனைத் தாக்குதல் உண்டு. இந்த நிகழ்ச்சிகளுக்கு அப்பாற் பட்ட நிலையில் தமிழக வரலாற்றிலேயே முதல் நிகழ்ச்சியாக நாம் காணும் அளவில், இவன் காலத்தில் மூவேந்தரும் அரசியல் முறையில் ஒன்றுகூடி இணைந்து நண்பர்களாகச் செயலாற்றத் தொடங்கினர்.
சேர அரசன் மாரிவெண்கோ, பாண்டிய அரசன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி ஆகியோர் இவனுடன் கூடித் தமிழக முன்னேற்றத்திற்காகத் திட்டமிடத் தொடங்கினர். இந்தக் காட்சியைக் கண்ட ஔவையார் 'இன்றுபோல் என்றும் ஒருமைப் பாட்டுடன் வாழவேண்டு' மென்று வாழ்த்தினார்[261].
அப்போது அவர் பார்ப்பனர்க்குப் பூவும் (நிலமும்) பொன்னும் தாரைவார்த்துக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதும். மகளிர் மதுவூட்ட மகிழ்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துவதும் நம்மை எண்ணத் தூண்டும் செய்திகள் ஆகும்.
சுடுதீ விளக்கம்
குதிரை, யானை, காலாள் படைகளின் துணைகொண்டு தனது பகைவர் நாடுகளைத் தாக்கினான். அங்கிருந்த நன்னீர்த் துறைகளில் தன் யானைகளைப் படியச் செய்து கலக்கினான். விளைந்த வயல்களைக் கவர்ந்தான். வீடுகளில் உள்ள மரங்களை விறகாகக்கொண்டு மாலை வேளையில் தீ வளர்த்தான். இந்தத் தீ, சுடுதீ விளக்கமாக எரிந்தது. கரும்பு வயல்களுக்கும் தீ மூட்டினான். இதனால் வளமான வயல்கள் பாழாயின. இந்தப் போரைக் கொடிய போர் என்பதுபட 'நாம நல்லமர்'- அஞ்சத்தக்க நல்ல போர் - என்று புலவர் குறிப்பிடுகிறார். இந்தப் போர் தொடங்கும்போது இவனுக்குச் சில அரசர்கள் உதவிசெய்ய முன்வந்ததாகத் தெரிகிறது. இவனோ அவர்களை யெல்லாம் வேண்டா என்று கூறிவிட்டுத் தான் மட்டும் தன் படைத்துணையுடன் போரிட்டு வெற்றிபெற்றதாகத் தெரிகிறது[262].
மாந்தரஞ்சேரல் இரும்பொறையோடு போர்
சேர அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் இவனுக்கும் போர் மூண்டது. அப்போது இவன், தேர்வண் மலையன் என்பவனின் உதவியைப் பெற்றான். அவனது துணையால் சேரனை வென்றான். மலையன் வரலாற்றில் இப்போரைப் பற்றிய செய்திகளை மேலும் காணலாம்[263].
படை
பொன் பூண் பூட்டிய தந்தங்களைக் கொண்ட யானைப் படை, கச்சை அணிந்த குதிரைப்படை, மணி ஒலிகொண்ட தேர்ப்படை, வாளால் ஆர்வமுடன் வாழும் மறவர் படை ஆகியவை அடங்கிய இவனது தானை கடல் ஒலிபோல் முழங்கும்[264]. அது வரம்பில்லாப் பெரிய படை.
கொடை
உலோச்சனார் கிணைப்பறையை முழக்கிக்கொண்டு வைகறைக் காலத்திற்கு முன்பே சென்றார். நல்ல பனிக்காலம் (மார்கழி மாதம் எனலாம்); அரண்மனையிலே சோழன் இனிமையாகத் தூங்கிக்கொண்டிருந்த நேரம். அப்போதுதான் இவர் கிணையை முழக்கிக்கொண்டு சென்றார். (இந்தச் செயலை மார்கழி மாதம் விடியற் காலத்தில் தாதன் திருப்பாவை பாடிக்கொண்டு தெருத்தெருவாகச் செல்லும் நிகழ்ச்சியோடு ஒப்பிடலாம்.) 'அறநெஞ்சத்தோன் வாழ்க' என்று இடையிடையே அவர் வாழ்த்தினார். அந்த வாழ்த்து தனக்குத் தான் என்று கொண்டு தொலைநாடு செல்லும் உலோச்சனார் என்னும் புலவரைத் தடுத்து அழைத்துச் சென்று அந்தப் புலவர் கனவு காண்பது போல் மருளும்படி முத்தும், நல்ல உடைகளும், காலையில் பருகும் 'தசும்பு' என்னும் மதுக்குடங்களையும் அளித்தான். புலவர் பெற்று அவனைப் பாராட்டிப் பாடினார்[265].
நாடு என்றால் அவன் நாடுதான் நாடு. வேந்து என்றால் அவன்தான் என்ற முறையில் அவரது பாராட்டு அமைந்திருந்தது.
தோற்றப் பொலிவு
மார்பிலே சந்தனம், புலவு நாற்றம் வீசும் வாள் ஆகியவற்றுடன் இவன் தோன்றினான். இவனது சீற்றம் முருகனது சீற்றம் போன்றது[266]. முருகனது சீற்றம் இதிலிருந்து தெரியவருகிறது.இராசசூயம் வேட்டல்
இவனது பெயர் பெருநற்கிள்ளி, புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் இப்பெயருக்கு 'இராசசூயம் வேட்ட' என்னும் அடைமொழியைத் தந்துள்ளார்[267]. இந்த அடைமொழியால் வைதீக சமயவழிப்பட்ட இராசசூய வேள்வியை இவன் செய்திருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.
சோழன் செங்கணான்
சோழன் கிள்ளிவளவன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்) காலமான பின் சோழநாட்டை அரசாண்ட சோழ அரசன் செங்கணான் எனலாம். சங்க இலக்கியங்களிலிருந்து அறியப்படுகிற சோழ அரசர்களுள் கடைசி அரசன் இவன். இவன் சைவ அடியார்களுள் ஒருவரான செங்கட்சோழ நாயனார் அல்லன்[268].
சங்ககாலத்தின் இறுதியில் சோழநாட்டை ஆண்ட சோழன், செங்கணான் என்று கூறினோம். சோழன் செங்கணான் காலத்தில் கொங்குநாட்டை அரசாண்டவன் கணைக்கால் இரும்பொறை. பொறையர் குடி அரசர்களுள் கடைசி அரசன் இவன்.
சோழநாட்டை அரசாண்ட (குளமுற்றத்துத் துஞ்சிய) கிள்ளி வளவன் கொங்குநாட்டை வென்று, சேரநாட்டை அரசாண்ட கோதை அரசனின் படைத் தலைவன் பிட்டனையும் வென்றான் என்று அறிந்தோம். கிள்ளிவளவனுக்குப் பிறகு சோழநாட்டை அரசாண்ட செங்கட்சோழன் கொங்குநாட்டை ஆண்ட கணைக்கால் இரும் பொறையுடன் போர் செய்தான். போர் செய்ய வேண்டிய காரணம் தெரியவில்லை. இவனை எதிர்த்துச் செங்கணான் போர் செய்தான். அந்தப் போர் 'போர்' என்னும் ஊரில் நடந்தது. (போர் என்னும் ஊருக்குப் போர்வை என்னும் பெயரும் இருந்தது.) இந்தப் போரில் கணைக்கால் இரும்பொறை தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் செங்கணானால் சிறைப் பிடிக்கப்பட்டான். சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறையைச் சோழன் செங்கணான் குடந்தைக் (கும்பகோணம்) கோட்டையில் மேற்கு வாயில்புறத்தில் இருந்த குடவாயில் சிறைக்கோட்டத்தில் அடைத்து வைத்தான்.
சிறையில் இருந்த கணைக்கால் இரும்பொறை நீர்வேட்கை கொண்டு நீர் கேட்டான். சிறைக்கோட்ட ஊழியர் அலட்சியமாக இருந்து நெடுநேரஞ்சென்று நீர் கொண்டுவந்து கொடுத்தனர். அவன் நீரைப் பருகாமலே ஒரு செய்யுளைப் பாடினான். இச்செய்யுளின் அடிக் குறிப்பு இவ்வாறு கூறுகிறது. 'சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.'
'பிறந்த குழந்தை இறந்தாலும், பிறக்கும் முன்பே குழந்தை இறந்து பிறந்தாலும் அக்குழந்தை வீர ஆள் ஆகவில்லை என்று கருதி அதனை வீர ஆளாக மடியச் செய்வாராய் அதன் உடலில் வாளால் காயப்படுத்திப் புதைப்பதோ எரிப்பதோ செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது. நானோ வீரர்களுக்குத் தலைவனான அரசனாக விளங்கியும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட வேட்டைநாய் போல் சிறையில் அடைப்பட்டுள்ளேன். பகைவர் கூட்டத்தில் உள்ள நண்பரல்லாத ஒருவர் அளித்த நீரை மான உணர்வின்றி எனது நீர் வேட்கையைத் தணிக்கும் பொருட்டுக் கெஞ்சிக் கேட்டுப் பருகுதலை இவ்வுலகத்திலுளள யாரேனும் விரும்புவரோ? விரும்பார்?[269] (எனவே நானும் விரும்பேன்).'
இந்தக் கருத்தமைந்த பாடலைப் பாடிவிட்டுத் தண்ணீர் பருகாமல் நாச்சுருண்டு சோர்ந்து கணைக்கால் இரும்பொறை சோழனது சிறையில் மாண்டு போனான்.தொண்டித் துறைமுகப் பட்டினத்தில் வாழ்ந்திருந்த பொய்கையார் கோக்கோதை மார்பன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆகியோர் காலத்தில் இருந்தவர். இந்தப் பொய்கையார் அவ்வரசர் காலத்துக்குப் பிறகு கணைக்கால் இரும்பொறை. சோழன் செங்கணான் ஆகியோர் காலத்திலும் வாழ்ந்திருந்தார். அவர் கணைக்கால் இரும்பொறை குடவாயிற் கோட்டத்தில் செங்கணானால் சிறை வைக்கப்பட்டதை அறிந்து செங்கணானிடம் சென்று 'களவழி நாற்பது' என்னும் நூலைப் பாடி அதற்குப் பரிசாகக் கணைக்கால் இரும்பொறையைச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு கேட்டார் என்றும், செங்கணான் கணைக்கால் இரும்பொறையை விடுவித்தான் என்றும், விடுவிப்பதற்கு முனபே சிறைக்கோட்டத்தில் கணைக்கால் இரும்பொறை துஞ்சினான் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு புறநானூற்றுச் செங்கணானுக்கும் களவழியில் கூறப்பட்டுள்ள சோழ அரசனுக்கும் தொடர்பு இருப்பதாகக் கொள்வது பொருந்துமாறில்லை. காரணங்களை எண்ணிப் பார்க்கலாம். இதனுடன் சைவ அடியார்களில் ஒருவனாய் விளங்கிய செங்கணானைப் பற்றியும் எண்ணலாம்.
போரில் வெற்றிபெற்ற அரசனது பெயர் சோழன் செங்கணான் என்று புறநானூற்றுக் கொளுக் குறிப்பிடுகிறது. செங்கண்மால்,[270] செங்கட்சினமால்,[271] திண்டேர்ச் செம்பியன்,[272] பொன்னார மார்பிற் புனை கழற்காற் செம்பியன்[273] என்ற முறையில் ஓரளவு சிறப்பு வகையாலும் புனல்நாடன்[274] புனல் நீர் நாடான்,[275] நீர் நாடான்,[276] காவிரி நாடன்,[277] சேய்,[278] "பைம்பூட்சேய்[279] என்ற முறையில் ஓரளவு பொதுவகையாலும் வெற்றிபெற்ற சோழ அரசன், 'களவழி' நூலில் குறிக்கப்படுகிறானே அன்றிச் சோழன் செங்கணான் என்று குறிக்கப்படவில்லை. மால் (திருமால்) என்றும், சேய் (முருகன்) என்றும் இவன் குறிப்பிடப்படுவது மனிதன் மீது கடவுள் தன்மை ஏற்றப்பட்ட நிலையாகும், மற்றும், 'செங்கண்மால்', 'செங்கட் சினமால்' என்னும் பெயர்களை நோக்கும்போது போர்க் காலத்தில் சினம் மிகுதியால் சிவந்திருந்த கண் நோக்கிய தெளிவுரைப் பெயரே அன்றிச் சோழன் செங்கணான் என்று சங்ககால இயற்பெயர் போன்றது அன்று. மற்றும் 'செங்கணான் கோச்சோழன்' என்று திருமங்கை ஆழ்வாரால் குறிப்பிடப்படுபவன் சிவபெருமானுக்கு 70 கோயில்கள் கட்டியவன். இவர்கள் மூவரும் வெவ்வேறு அரசர்கள். வரிசைப்படி காலத்தால் வேறுபட்டவர்.
இந்தச் சோழனை எதிர்த்துப் போரிட்ட அரசனின் பெயரைப் புறநானூற்றுக் கொளு, 'கணைக்கால் இரும்பொறை' என்று குறிப்பிடுகிறது. களவழியில் சோழனது பெயர் குறிப்பிடப்படாதது போலவே, சோழனை எதிர்த்துப் போரிட்டவனின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. 'வஞ்சிக்கோ'[280] என்று பொதுவகையால் ஓரிடத்தில் குறிப்பிடப்படுகிறான். மற்றோரிடத்தில் 'கொங்கர் படையைக் கொண்டவன்[281] என்று குறிப்பிடுகிறார். மற்றும், பகைவர் என்றும் பிறவாறும் பொருள் தரக்கூடிய பல சொற்களால் (அடங்கார், உடற்றியார், ஒன்னார், காய்ந்தார், கூடார், செற்றார், தப்பியார், தெவ்வர், நண்ணார், நேரார், பிழைத்தார், புல்லார், மேவார்) சோழனை எதிர்த்தவர் குறிப்பிடப்படுகின்றனர். மற்றும் சங்க காலத்தில் செங்கணானை எதிர்த்தவன் கணைக்கால் இரும்பொறை என்று மட்டும் தெரியவருகிறது. களவழியிலோ தெவ்வேந்தர்,[282] வேந்தர்[283] என்றெல்லாம் பல்வேறு அரசர்கள் சோழனை எதிர்த்ததாகக் குறிப்புள்ளது. திருமங்கை ஆழ்வார் குறிப்பிடும் சோழன் எதிரி 'கழல் மன்னர்'[284] விழல் மன்னர்',[285] 'படை மன்னர்'[286] என்று பன்மையால் காட்டப்படுகின்றனர். மற்றும் சிவனடியான் கோச்செங்கணானால் வெல்லப்பட்டவன் 'விளந்தைவேள்'[287] என்ற தெளிவான குறிப்பும் உள்ளது. இந்த வகையிலும் மேற்கண்ட மூவேறு பகைவர்களும் வேறுபட்டவர் என்பது தெளிவாகிறது.
புறநானூற்றுக் கொளுவில் போர் நடந்த இடம் 'திருப்போர்ப் புறம்' என்று கூறப்பட்டுள்ளது. களவழியிலோ போர் நடந்த இடம் 'கழுமலம்'[288] என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருமங்கை ஆழ்வார் போர் நடந்த இடம் 'அழுந்தை'[289] என்று குறிப்பிடுகிறனர். இந்த வகையிலும் மேற்கண்ட மூன்று போர் நிகழ்ச்சிகளும் வெவ்வேறானவையாய் அமைந்து விடுகின்றன.
புறநானூற்றுப்படி சோழனை எதிர்த்தவன் சிறையிலடைக்கப்பட்டு மானம் கருதி உயிரைவிடுகிறான். களவழிப்படி சோழனை எதிர்த்தவன் தன் யானையுடன் போர்க்களத்திலேயே உயிர் துறக்கிறான்[290]. களவழி உரைகாரரோ சோழனை எதிர்த்தவன் சிறையில் அடைக்கப்பட்டுப் பொய்கையாரின் களவழி நூலால் விடுதலை பெறுகிறான் என்று கற்பனை செய்கிறார். மற்றும் திருமங்கை ஆழ்வாரோ சோழனை எதிர்த்தவர் மாண்டனர் என்கிறார். மற்றும் கலிங்கத்துப் பரணி விலங்கைத் தகர்த்து விடுதலை செய்யப்பட்டதோடு அரசுரிமையும் அளிக்கப்பட்டான் என்று கூறுகிறது[291]. இவையெல்லாம் வரலாற்றுச் செய்திகளைச் சொல்வதில் தழுவியும் நழுவியும் செல்வதைப் பார்க்கும்போது வெவ்வேறு நிகழ்ச்சிகள் என்றே கொள்ளத்தகும்.
இவை ஒருபுறம் இருக்க இவ்வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிக்கும் புலவர்களையும் எண்ணுவோம். சங்க காலத்து நிகழ்ச்சியைப் பாடிய புலவர் பொய்கையார். இவர் கோக்கோதை மார்பனைப் பாடியுள்ளார்[292]. மற்றும் 'பொறையன்' என்னும் சேர அரசனையும் குறிப்பிட்டுள்ளார்[293] இந்தப் பொறையன் கணைக்கால் இரும்பொறைதான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாவிட்டாலும் பெயர் ஒப்புமை கருதி ஓரளவு ஏற்கத்தான் வேண்டும். ஆயின், இந்தக் கோதை மார்பனின் படைத்தலைவன் பிட்டன் என்று வரலாற்றுப்படி முடியும். பிட்டன் காலம் வேறு; கோச் செங்கணான் காலம் வேறு. முன்னது சங்ககாலத்தின் இடைப்பகுதி; பின்னது கடைப்பகுதி. மற்றும் கோக்கோதை மார்பன் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னன் என்று கொள்வது பொருத்தமானது என்று அவர்களது வரலாற்றில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பொய்கையாருக்கும் கோச்செங்கணானுக்கும் தொடர்பில்லை எனல் சாலும். மற்றுக் களவழி நூலைப் பாடிய புலவரும் பொய்கையார் என்றாலும், களவழிப் பாடலில் காணப்படும் நடைவேறுபாட்டை எண்ணி அவர்களை வெவ்வேறு பொய்கையார் என்று கொள்ளலே தகும். மற்றும், மூன்றாவது நிகழ்ச்சியோடு தொடர்புடைய பொய்கையாரோ ஆழ்வார் (திருமால் அடியவர்). புலவர் தொடர்பான இந்த வேறுபாடுகளும் இவர்களை வெவ்வேறு காலத்தவராகவே கொள்ள வைக்கின்றன.
இந்த வரலாறு மூவேறு நிகழ்ச்சிகளாகக் கொள்ளத்தக்கது. செங்கணானுக்கு நல்லடி என்று ஒரு மகன் இருந்தான் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் குலத்தில் நல்லடி என்றும் ஒருவர் இருந்தார்[294]. சோழநாட்டைக் களப்பிரர் கைப்பற்றி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏறத்தாழக் கி.பி. 250 அளவில் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றினார்கள். அவர்களுக்குச் சோழநாடும் கீழ்ப்பட்டது. சேர பாண்டிய நாடுகளைக் களப்பிரர் கைப்பற்றிக் கொண்டதுபோலவே, சோழ நாட்டையும் கைப்பற்றிக் கொண்டார்கள்.
சோழன் செங்கணானோடு, சங்க காலத்துச் சோழர் ஆட்சி முடிவுற்றது எனலாம்.
பிற சோழ அரசர்கள் - 1
அரசுகட்டில் ஏறி நாடாளும் உரிமை பெறாத சில சோழ அரசர் குடியினரைப்பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அக்குறிப்புகளிலிருந்து, அந்த அரசக் குடியினர் செங்கோல் வேந்தரின் தம்பியராகவோ, சிற்றப்பன் பெரியப்பன் பிள்ளைகளாகவோ இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. அவர்களுள் சிலர், சிறப்புமிகு பாவலராகவும் விளங்கினர். 'எலி போன்றவர் நட்பு வேண்டா, புலிபோன்றவர் நட்பே போற்றிப் பேணத்தக்கது' எனும் அரிய கருத்தை அறிவுறுத்தும் சோழன் நல்லுருத்திரன்,[295] சோழன் நலங்கிள்ளியைப் போன்ற உணர்ச்சித் துடிப்பும் கற்பனை வளமும் வாய்ந்த புலவனாவான்.
கிள்ளிமரபினைச் சேர்ந்தோர்
நெடுமுடிக்கிள்ளி
மணிமேகலை என்னும் காப்பியத்தால் அறியப்படும் சோழ அரசன் நெடுமுடிக்கிள்ளி. 'இவனும் நெடுங்கிள்ளியும் ஒருவரா? வெவ்வேறானவரா?' என்னும் ஐயம் அறிஞர்களிடையே உண்டு. ஒருகால் இவன் ஒரு கற்பனைப் படைப்பாகவும் இருக்கக்கூடும். கிள்ளி என்பவன் புகார் நகரத்தில் இருந்து கொண்டு அரசாண்டான் என்பது மணிமேகலை வரலாற்றால் அறியப்படுகிறது. இவன் மகன் உதயகுமரன். இவன் மணிமேகலையைக் காதலித்தான். அவளை அடைய முயன்ற போதெல்லாம் அடைய முடியாமல் ஏமாந்தான். இறுதியில் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அவளைப் பலவந்தமாக அடையக் கருதி அவளது இருப்பிடம் சென்றபோது வேறொருவனால் கொல்லப்பட்டு மாண்டான். மகன் இவ்வாறு ஒருத்தியைக் கற்பழிக்க முயன்ற குற்றத்தைச் செய்து அந்தக் குற்றத்திற்காக வேறொருவனால் கொல்லப்பட்டு இறந்த செய்தியை நெடுமுடிக்கிள்ளி கேள்விப்பட்டான்; வருந்தினான். தன் மகன் இறந்தானே என்பது அவன் வருத்தம் அன்று. பிழை செய்தவனைத் தன் கையால் கொல்ல வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்பதுதான் அவனது வருத்தம்.
இவனது முன்னோனான சோழ அரசன் ஒருவன் (மனுநீதிச் சோழன்) தன் மகனைத் தானே கொன்று தண்டனையை நிறைவேற்றினான். (துள்ளி விளையாடிய கன்றுக்குட்டி தவறிக் தேர்க்காலில் சிக்கி இறந்தது) தேரைச் செலுத்திச் சென்றவன் சோழ அரசன் மனுவின் மகன். தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடித்தபோது வந்து பார்த்து, நிலைமையை அறிந்த அரசன் தன் ஒரே மகனை அதே இடத்தில் கீழே கிடத்தி, அவன்மேல் தன் தேரை ஏற்றிக் கொன்று தாய்ப் பசுவுக்கு நீதி வழங்கினான்.
இந்த நிகழ்ச்சியை நெடுமுடிக்கிள்ளி நினைத்தான். தன் மகனைத் தன் கையால் கொன்று நீதி வழங்கும் வாய்ப்பு இல்லையே என்று வருந்தினான்.
இந்த நிகழ்ச்சிபற்றிய செய்தி பிற வேந்தர்களின் காதுகளில் படுவதன் முன்னர்த் தன் மகனது உடலைத் தன் கண்ணில் படாமல் எரித்து விடும்படி ஆணையிட்டான். இவனது இந்தச் செங்கோன்மையை எண்ணும்போது தமிழர் உள்ளம் பெருமிதம் கொள்கிறது.
மற்றும் இந்த அரசன் தன் மகன் கொல்லப்படக் காரணமாயிருந்த அந்தப் பெண்ணையும் கைதுசெய்து காவலில் வைக்குமாறு கூறினான். இவன் இவ்வாறு செய்ததிலும் தவறு இல்லை. அவன் அந்தப் பெண்ணைக் 'கணிகையின் மகள்' (விலைமாதர் மகள்) என்றே எண்ணியிருந்தான். இவளது வலையில்பட்டு இன்னும் பலர் தன் நாட்டில் அவலநிலை எய்தக்கூடும் என்று கருதினான். நாட்டு மக்களின் நலனுக்காகவே அவளைச் சிறையில் அடைக்கச் செய்தான். மணிமேகலை சிறையில் அடைக்கப்பட்டாள்.
நெடுமுடிக்கிள்ளியின் மனைவி இராசமாதேவி செய்தியை அறிந்து மகனைப் பிரிந்த துன்பத்தால் மணிமேகலைக்குப் பல துன்பங்கள் செய்தாள். மணிமேகலை அத்துன்பங்களைக் களைந்து நலமுடன் இருந்தது கண்டு அரசி அவளிடம் மன்னிப்பு வேண்டினாள்.மேலே கூறப்பட்ட அரசமாதேவியின் பெயர் சீர்த்தி. அவள் திருமாலுக்கு மூன்றடி மண் வழங்கி மாண்ட 'மாவலி' அரச பரம்பரையில் தோன்றிய ஒருவனின் மகள்[296].
நெடுமுடிக்கிள்ளி 'புன்னையங்கானல்' மணல்வெளியிலே உலாவிக் கொண்டிருந்தான். அங்கே தனித்து நின்ற ஓர் அழகியைக் கண்டான். பால் உணர்வுகள் அவர்களைக் கூட்டிவைத்தன. ஒரு மாதம் அவளுக்கும் அவனுக்கும் அவ்விடத்தில் களவு ஒழுக்கம் நடைபெற்றது. ஒரு மாதத்திற்குப் பின் அவளை அவ்விடத்தில் காண முடியாமல் ஏங்கினான். அங்கே வந்த சாரணர் அவள் நாகநாட்டு இளவரசியாய் இருக்கக்கூடும் என்றனர். நாகநாட்டு அரசன் வளைவணன்.அவனது மனைவி வாசமயிலை. இவர்கள் இருவருக்கும் பிறந்தவள் பீலிவளை[297]. இவள் பிறந்தபோது 'இவள் வயது வந்தபின் கதிர்க் குலத்தவன் ஒருவனைக் களவில் கூடிக் கருவுற்ற நிலையில் திரும்பி வருவாள்' என்று கணியர்கள் கணித்துக் கூறினர். இந்தச் செய்தி சாரணர்க்குத் தெரியும். அரசன் கூறிய கூற்றைச் சாரணர் கேட்டனர். சோழ அரசன் சூரிய குலத்தினன் எனவே, பீலிவளையைத்தான் அரசன் அடைந்து மகிழ்ந்திருக்க முடியும் எனக் கூறினர்.
(கருவுற்றுச் சென்ற பீலிவளை தான் கருவுற்ற நிலையை உணர்ந்தாள். உயிருடன் தன் தந்தை தாயாருக்குச் சுமையாக வாழ விரும்பவில்லை. எனினும், வயிற்றில் உள்ள குழந்தைக்காக வாழ்ந்தாள். குழந்தை பிறந்தது; ஆண் குழந்தை. அங்கு வந்த வாணிகர் கண்களில் படும்படி குழந்தையைக் கிடத்தி விட்டுச் சென்றுவிட்டாள். வாணிகர்கள், யாரும் இல்லாமல் கிடந்த குழந்தையைக் கண்டு எடுத்துவந்து சோழநாட்டில் சேர்ப்பித்தனர். தாய் மாண்டாள்; குழந்தை தன் தந்தை நாட்டுக்கே வந்துவிட்து.)[298]
வஞ்சி வெற்றி
நெடுமுடிக்கிள்ளி நாட்டுப் பரப்பை விரிவுபடுத்தக் கருதினான். இதனால் இவன் வஞ்சி நகரைத் தாக்கினான். வெற்றி பெற்றான்.காரியாற்றுப் போர்
இவனது தம்பி இவனுக்காகக் காரியாறு என்னுமிடத்தில் போரிட்டான். இவனை எதிர்த்துச் சேரரும் பாண்டியரும் போரிட்டனர். வெற்றி சோழர்களுக்குக் கிடைத்தது[299].
பெயர்களும் அடைமொழிகளும்
'கிளர்மணி நெடுமுடிக்கிள்ளி',[300] 'அணிகிளர் நெடுமுடி அரசாள்வேந்தன்',[301] 'மாவண் கிள்ளி'[302] இவற்றில் முதல் இரண்டு தொடர்களும் இவன் தலையில் அணிந்திருந்த முடியின் சிறப்பை உணர்த்துகின்றன. 'மாவண்கிள்ளி' என்னும் தொடரும் 'மாவண் சோழர்'[303] என்னும் தொடரும் எந்த அளவு ஒற்றுமை உடையவை என்பது விளங்கவில்லை.[304]
இசைவெங்கிள்ளி
இவன் கைகளிலெல்லாம் மலர் மாலைகளை அணிந்து கொண்டான். இவன் களிற்றின்மேல் ஏறிப் போருக்கெழும் கோலம் அன்றைய மக்கள் உள்ளத்தைக் கவர்ந்திருந்தது[306].
இசைவெங்கிள்ளி என்பதற்கு இசைத் தமிழில் வேட்கையுடைய கிள்ளி என்றோ, புகழ்மீது வேட்கையுடைய கிள்ளி என்றோ பொருள் கொள்ளலாம்.
கைவண் கிள்ளி
கரிகாலன் பெரும்போரில் ஈடுபட்ட ஊர் வெண்ணி என்பதை அறிவோம். இந்த வெண்ணியினைத் தலைநகராகக் கொண்டு ஒரு சமயம் 'கைவண் கிள்ளி'[307] என்பவன் ஆண்டுவந்தான்.
சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் 'கைவண் தோன்றல்'[308] என்று குறிப்பிடப்படுகிறான். இந்தக் கைவண்மை குதிரை பூட்டிய தேரை ஓட்டுவதில் இவன் பெற்றிருந்த திறமையைக் குறிக்கிறது. இதனோடு மேற்கூறிய கைவண் கிள்ளிக்கு எந்த அளவு தொடர்பு உண்டு என்பது தெரியவில்லை.
பொலம்பூண் கிள்ளி[309]
பொலம்பூண் கிள்ளி என்று குறிப்பிடப்படும் இவன் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்துகொண்டு காவிரி ஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள நாட்டை ஆண்டுவந்தான்.
இவன் கோசர்களின் படையை அழித்தான். அன்றியும், அவர்களது நாட்டையும் கைப்பற்ற முயன்றான்.
கடுமான் கிள்ளி
வாள்பட்ட புண் ஆறி வடுப்பட்ட மேனியுடன் விளங்கிய ஏனாதிப் பட்டம் பெற்ற திருக்கிள்ளி என்னும் படைத்தலைவன் 'கடுமான் கிள்ளி' என்று குறிப்பிடப்படுகிறான்[310].
சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் என்பவன் 'கடுமான் தோன்றல்'[311] என்று குறிப்பிடப்படுகிறான்.
மேலே கூறப்பட்ட கடுமான் தோன்றல் அடுத்துக் கண்ட இருவருள் ஒருவனாகவோ, தனியொருவனாகவோ இருக்கலாம்.
மணக்கிள்ளி
'சோழன் மணக்கிள்ளி' என்னும் பெயரைப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
'நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்’'[312] செங்குட்டுவன் என்று அது குறிப்பிடுமிடத்தில் இப்பெயர் பெண்ணின் பெயராக அமைந்திருப்பதைக் காண்கிறோம். மணக்கிள்ளி என்னும் சோழ அரசனின் மகனது பெயரும் மணக்கிள்ளி என்றே வழங்கப்பட்டிருக்கலாம்.
'செங்குட்டுவனின் தாய்ப்பாட்டான்' 'ஞாயிற்றுச் சோழன்' என்றும் குறிப்பிடப்படுகிறான்[313]. இங்கும் செங்குட்டுவனது தாயின் பெயர் காணப்படவில்லை. (ஆனால் இந்தப் பகுதிக்கு உரை கூறுகையில் அடியார்க்குநல்லார் ஞாயிற்றுச் சோழனை நெடுந்தேர்ச் சோழன் என்று சிறப்பித்துக் கூறி அவனது மகளுக்கு 'நற்சோணை' என்னும் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.)
பிற சோழ அரசர்கள் - 2
பிற இடங்களில் (ஆர்க்காடு, வல்லம் ஆகிய இடங்களில்) இருந்து கொண்டு அரசாண்ட சோழ அரசர்களின் பெயர்கள் தெரிய வருகின்றன.
ஆர்க்காட்டுச் சோழர்[314]
நாடு
ஆர்க்காடு நீர்வளம் மிக்க ஊர். நெல்வயல் நீரில், நெய்தல் பூவிலுள்ள தேன் கலந்து பாயும்[315]. இந்த ஆர்க்காட்டைச் சூழ்ந்திருந்த பகுதியை நாம் ஆர்க்காட்டு நாடு என்று குறிப்பிட்டுக் கொள்வோம். இந்த ஆர்க்காட்டு நாட்டில் வாழ்ந்த குடியினருள் ஒருவர் இளையர். இந்த இளையர் குடியினர் அலையலையாக வரும் வெள்ளம்போல் அணியணியாகச் சென்று வேட்டையாடுவார்கள். அவர்கள் வேட்டையாடிப் பெற்ற பொருள்களில் குறிப்பிடத்தக்கது யானைக்கோடு[316]. இந்த இளையர் குடியினர் வாள் வீரர்களாய் விளங்கினர்[317]. இவர்களின் பெருமகனாய் (தலைவனாய்) அழிசி என்பவன் விளங்கினான்.
ஆர்க்காட்டு நாட்டில் இருந்த காடு இந்த அரசன் அழிசியின் பெயராலேயே' அழிசியம் பெருங்காடு' என வழங்கப்பட்டது[318]. இந்தக் காட்டு நெல்லிக்கனிகள் சிறப்புப் பெற்றவை.
நீர்வளம், நெல்லைமரக் காடு, சோழர் குடியினர் ஆட்சி ஆகியவற்றை எண்ணும்போது இந்த ஆர்க்காடு தஞ்சை மாவட்டத்தில் உள்ளதாக இடைக்காலக் கல்வெட்டுகள் குறிப்பிடும் ஆர்க்காட்டுக் கூற்றமோ என்று எண்ண வேண்டியுள்ளது.
இந்த ஆர்க்காட்டைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட அரசர்களுள் மூன்று பேரைப் பாட்டன் - தந்தை - மகன் என்னும் உறவு முறையில் நாம் காணமுடிகிறது. அவர்கள் இவர்கள்:ஆதன்
அழிசி
சேந்தன்
ஆதன்[319]
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் தன் அரசவையில் நட்புரிமையுடன் விளங்கிய ஐந்து பேரைக் குறிப்பிடுகையில் ஆதன் அழிசி என்னும் ஒருவனைக் குறிப்பிடுகிறான். இந்த அழிசி பிற புலவர்களால் குறிப்பிடப்படும் ஆர்க்காட்டு அரசன் அழிசியே என்று கொள்வதில் தவறில்லை. ஆயின், அந்த அழிசியின் தந்தை பெயர் ஆதன் என்பது பெறப்படுகிறது. இவனைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.
அழிசி
மேலே குறிப்பிட்டபடி இவன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனுடைய நண்பனாக விளங்கினான். இதனால் இவன் சோழப் பேரரசின் தலைமை இடத்தோடு முரண்பட்டிருந்தானோ என்று எண்ண வேண்டியுள்ளது. பேரரசர்கள் பகையரசனின் சிற்றரசர்களைத் தம்வயப்படுத்திக் கொள்வது உண்டு. அந்த வகையில் இந்த அழிசி பாண்டியனின் நண்பனாய் விளங்கியிருக்கலாம்.
இவன் காவிரி ஆற்றங்கரையிலுள்ள மருதமரத்தில் கட்டி வைக்கப்பட்டான் என்றும், இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது என்றும் கூறப்படுகிறது[320] இவன் பாண்டியனோடு சேர்ந்து கொண்டதால் சோழர்க்கு எதிராகப் படையெடுத்தான் என்று கருதிச் சோழப் பேரரசன் இவனை இவ்வாறு பலரும் நீராடும் நீர்த்துறையில் கட்டிவைத்து இழிவுபடுத்தியிருக்க கூடும் என்று எண்ண இடமுண்டு.
அழிசி, 'வெல்போர்ச் சோழர்' குடியில் தோன்றியவன்,[321] இளையர் குடியினரிடையே தலைமையாக விளங்கியவன்,[322] மலர்மாலை அணிந்து கொண்டு இவன் தேரில் உலாவருதல் கண் கொள்ளாக் காட்சி[323] ஆகும்.சேந்தன்
அழிசி பாண்டியனின் நண்பனாக விளங்கினான் என்று கூறுவதைத் தவிர அவனது சிறப்புமிக்க அரசியல் தொடர்பான செயல்கள் வேறு ஒன்றும் இல்லை. அன்றியும் இவனது பெயரும் புகழும் அக்காலத்திலேயே பிற நாடுகளில் அவ்வளவாகப் பரவவில்லை. (எனினும், அவன் நாட்டுமக்கள் ஆர்க்காட்டையே அழிசியம் பெருங்காடு' என்று குறிப்பிடும் அளவுக்கு அவனைப் பெரிதும் போற்றி மதித்தனர்.) எனவே, அயல்நாட்டு மக்களுக்கும் புலப்படும்படி இவனை அறிமுகப்படுத்தும் புலவர்கள் இவன் மகன் சேந்தனைக்கொண்டு அறிமுகப்படுத்துவராயினர். அவர்கள் 'சேந்தன் தந்தை அழிசி' என்றே தெளிவாகக் குறிப்பிடுகின்றனர்[324].
போர்
சேந்தன் அரிய கோட்டையைத் தாக்கி வென்றான் என்று கூறப்படுகிறது. அந்தப் போரின்போது அவன் வேலில் படிந்த புள்ளி புள்ளியான குருதிக் கறையைத் துடைக்காமல் வெற்றிச் சின்னமாக அப்படியே வைத்துக் கொண்டு தோற்றமளித்த நிலைமையைப் புலவர் வியந்து குறிப்பிட்டுள்ளார்[325].
இவன் 'ஏந்து கோட்டு யானைச் சேந்தன்' என்று சிறப்பிக்கப் பட்டுள்ளான். இதனால், இவன் யானைமீது ஏறிக் காட்சி தந்த நிகழ்ச்சிகள் பல எனலாம். இவன் தந்தை தேரில் ஏறிக் காட்சி தந்ததை இவ்விடத்தில் ஒப்புநோக்கலாம். யானை வேட்டையாடுவதில் வல்ல இளையர் குடியினர்க்கு இவன் தந்தை, தலைவனாக விளங்கியதற்கும், இவன் யானைமீது தோன்றியதற்கும் தொடர்பு இருப்பதைக் காணலாம்.
இந்தச் சேந்தன் சோழப் பேரரசனுக்குத் துணைவனாய் விளங்கினான் என்று கொள்ளலாம். இதனால், இவன் தந்தை இவனைக் கொண்டு அறிமுகப்படுத்தப்படுகிறான் என்றே கொள்ளலாம். படை எடுத்த கொடியவனை நேரடியே அறிமுகப்படுத்த விரும்பாத புலவர், அவனது மகன் நல்லவனைக் கொண்டு அறிமுகப்படுத்துகிறார் என்று எண்ணுவது பொருத்தமே.அழிசி தன்னலத்துக்காகப் பாண்டியனோடு உறவு பூண்டான். அவன் மகன் சேந்தன் தன் நாட்டு மக்கள் நலனுக்காகத் தன் தந்தைக்கு மாறாகச் சோழப் பேரரசனுக்குத் துணையாய் விளங்கினான். இதனால், சேந்தன் போற்றப்பட்டான். இந்த நல்லவன் வழியே தீயவன் அறிமுகப்படுத்தப்படுகிறான். (கதைகளிலும் நாடகங்களிலும் நல்லவனைத் தலைவனாகவும், அவன் வழிக் கயவனை இழிந்தவனாகவும் காட்டுவது போலக் காட்டப்படுகிறான்.)
சோழர் மருகன் நல்லடி
நல்லடி என்னும் அரசன் 'சோழன் மருகன்' என்று குறிப்பிடப் படுகிறான். 'சோழர்வழி வந்தவன்' என்பது இதன் பொருள். இவன் 'வல்லங்கிழவோன்' என்று குறிப்பிடப்படுவதால் வல்லம் என்னும் ஊர்மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற அரசியல் தலைவனாக விளங்கினான் என்பது பெறப்படும்.
இவனது கோட்டைக் கதவுகளை இவனது பகைவர்கள் தாக்கினார்கள். பகைவர்கள் தாக்குவார்கள் என்று நல்லடி எதிர்பார்க்காத போதே தாக்கினார்கள்.
ஆரியப் படை, வல்லம் என்னும் ஊரைத் தாக்கியது என்பதையும், அவ்வூரை அடுத்திருந்த காவற்காட்டில் அந்தத் தாக்குதல் முறியடிக்கப்ட்டது என்பதையும் பின்னர்க் காணலாம். இந்த ஆரியரே இந்த நல்லடியைத் தாக்கியவர்கள் என்றும், நல்லடி அவர்களை முறியடித்தான் என்றும் நாம் கொள்ளலாம்.
சோழரின் படைத்தலைவர்கள்
சோழ வேந்தர்களின் படைத்தலைவராய் விளங்கியவர்களுள் நான்கு பேர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. பழையன் (சோழன் மறவன்),[326] ஏனாதி திருக்கிள்ளி,[327] சோழிய ஏனாதி திருக்குட்டுவன்,[328] மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்[329]. இந்த நால்வருள் பழையன் வரலாறும் மலையமான் வரலாறும் குறுநிலத் தலைவர்கள் வரிசையில் விளக்கப்படுகின்றன. சோழிய ஏனாதி திருக்குட்டுவன் வரலாறு சேரர் வரலாற்றுப் பகுதியில் உள்ளது. எஞ்சியுள்ள ஏனாதி திருக்கிள்ளி வரலாறும் கிள்ளி அரசர் வரிசையில் உள்ளது. தொகுத்துக் காட்டும் முறையில் இவர்களை இங்குக் குறிப்பிட்டோம்.
சோழ வேந்தரின் கால அடைவு
சங்ககாலச் சோழ வேந்தரின் வரலாற்றை வரைவதற்குச் சங்க இலக்கியப் பாடல்களே பேருதவியாக உள்ளன. ஆனால், அவற்றில் ஒரு குறையுண்டு. அரசர்களின் ஆட்சிக் காலத்தைப் பற்றியோ, எந்த ஆண்டில் யார் ஆட்சிக்கு வந்தனர் என்பதைப் பற்றியோ அவை யாதும் கூறுவது இல்லை. காலவரன்முறை, வரலாற்றின் கண்ணாகப் போற்றப்படுகிறது. காலத்தை வரையறுக்க நமக்கு அகச்சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும், அப்பாடல்களில் காணப்படும் சிற்சில குறிப்புகளையும், அம்மன்னர்களைப் பாடிய புலவர்களைச் சில தலைமுறையினராக வகைப்படுத்துவதற்குரிய செய்திகளையும், புறச்சான்றுகள் சிலவற்றையும் கொண்டு, சங்ககாலச் சோழ வேந்தர்களை ஒருவகையாகக் 'காலத்தால் முற்பட்டவர் - பிற்பட்டவர் யாவர்' என்பதைத் துணிந்து, அம்முறையில் அவர்களுடைய வரலாற்றை வரைந்துள்ளோம்.
இனி, அவர்களுடைய ஆட்சிக் காலத்தைக் கணிக்கும் முயற்சியில் ஈடுபடலாம். அசோகனின் கல்வெட்டுகளால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சோழ வேந்தர் தமிழகத்தில் ஆட்சி புரிந்தனர் என்பதை நாம் முன்னரே கண்டோம்.
பண்டைத் தமிழகத்து வேந்தருள் காலத்தால் மிகவும் முற்பட்டவனாகக் கரிகாலன் காட்சி அளிக்கிறான். அவனைப் பற்றிப் பல வரலாற்றுச் செய்திகளை அறிய முடிகிறது. அவனை வெண்ணிக் குயத்தியார்,[330] கருங்குழலாதனார்,[331] குடவாயில் கீரத்தனார்,[332] கழாஅத் தலையார்,[333] பரணர்[334] போன்ற புலவர்கள் பாடியுள்ளனர். கரிகாலன் காலத்தில் சேரமான் பெருஞ்சேரலாதன் எனும் சேர அரசன் சிறப்புற்று விளங்கினான்.[335] கழாஅத்தலையார் என்னும் புலவர் அவனைச் சுட்டுகிறார்[336].இப்பெருஞ்சேரலாதன் பதிற்றுப்பத்தின் முதற்பத்தில் பாராட்டப் படும் பெருஞ் (சோற்றுதியன்) சேரலாதனாக இருத்தல் கூடும். இதைக் கருதுகோளாகக் கொண்டால், இவனுடைய மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பது போதரும். இமயவரம்பன் மகனே (கடல் பிறக்கோட்டிய) செங்குட்டுவனாவான். இதனால், சேரன் செங்குட்டுவன் கரிகால் பெருவளத்தானுக்கு இரு தலை முறைகள் பிற்பட்டவனாவான்.
கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறப்புற்று விளங்கியது. அதன் சிறப்பினைப் 'பெரிபுளூஸ்' எனும் நூல் சுட்டுகிறது. இந்நூல் தொகுக்கப்பட்ட காலம் கி. பி. 81-க்கும் கி.பி. 96-க்கும் இடைப்பட்ட காலமாகும்[337]. எனவே, இதற்கு முன்பே கரிகாலனால் பூம்புகார் வலிவும் பொலிவும் பெற்றிருக்கவேண்டும் என்பது புலனாகிறது. இதனால், கரிகாலன் கி. பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவனாகத் தோன்றுகிறது.
சேரன் செங்குட்டுவன் - கயவாகு (காமனி அபயன்) காலக் கணிப்பினை அறிஞர்கள் கணித்துள்ளனர். பரணவிதானே எனும் இலங்கை வரலாற்றறிஞர் கயவாகுவின் காலத்தைக் கி. பி. 111 - 136 என்று கணக்கிட்டுள்ளார்[338]. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் குடமுழுக்கு விழா நடத்தியது, அவனுடைய ஆட்சியின் இறுதிப் பகுதியிலாகும். அப்பொழுது தான் கயவாகு ஆட்சிக்கு வந்து சில ஆண்டுகளே கழிந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. கி.பி. 115-ல் வஞ்சிமாநகரில் இத்திருவிழா நடந்ததாகக் கூறலாம். இதற்குப் பிறகு நான்கைந்து ஆண்டுகளே செங்குட்டுவன் ஆட்சி செய்ததாக அறிகிறோம். அவன் மொத்தம் 55 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகப் பதிற்றுப்பத்துப் பதிகம் தெரிவிக்கிறது. இவ்வடிப்படையில், செங்குட்டுவன் கி. பி. 65 முதல் கி. பி. 120 வரை ஆட்சி செய்தவனாகலாம்.
அவனுடைய தந்தையான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகப் பதிற்றுப்பத்தின் பதிகத்தால் அறிகிறோம். அவன் கி. பி. 7 முதல் கி. பி. 65 வரை ஆட்சி செய்தவனாகலாம். இவனுடைய தந்தை பெருஞ்சேரலாதன் கரிகாலனோடு போரிட்டு மாண்டான். அவனுக்குப் பிறகு இவன் அரசுகட்டில் ஏறியுள்ளான். எனவே, பெருஞ்சேரலாதன் இறந்தது கி. பி. 7 ஆம் ஆண்டு எனத் துணியலாம்.
கரிகாலன் சேரனோடு நடத்திய போர் வெண்ணிப்போர் என்பதாகும்[339]. அஃது அவனுடைய கன்னிப் போராகும். எனவே, கி. பி. 7 ஆம் ஆண்டிற்குச் சற்று முன்பே கரிகாலன் ஆட்சிக்கு வந்திருத்தல் கூடும். கரிகாலன் கி. பி. 6 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததாகக் கொள்ளலாம். ஓர் அரசனுடைய ஆட்சிக் காலத்தை 25 ஆண்டுகள் கொண்டதாகக் கொள்ளுவது ஆராய்ச்சியாளர் வழக்கம். இவ்வடிப்படையில் கரிகாலன் கி. பி. ஆறாம் ஆண்டு முதல் கி. பி முப்பதாம் ஆண்டுவரையில் ஆட்சி செய்ததாகக் கொள்ளலாம்.
இந்தக் காலத்தை மையமாகக் கொண்டால், கரிகாலனுக்கு முற்பட்ட பெருநற்கிள்ளி, சேட்சென்னி அரசர்களும், கோப்பெருஞ் சோழனும் கி. மு. முதல் இருநூற்றாண்டுகளில் ஆட்சி செய்தவர்களாகத் தோன்றுவர்.
கரிகாலனுக்குப் பிறகு நலங்கிள்ளி ஆட்சிக்கு வந்ததாகத் தெரிகிறது. அவன் கி. பி. 30 - 55 வரை ஆட்சி செய்ததாகக் கொள்ளலாம். அவனுடைய மகன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கி. பி. 56 முதல் கி. பி. 80 வரை ஆட்சி புரிந்திருக்கக்கூடும். இவனுடைய காலத்தை யொட்டிக் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் ஆண்டதாகக் கண்டோம். எனவே, கி. பி. 81 முதல் கி. பி. 105 வரை ஆண்டதாகத் தெரிகிறது. இதற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று தலைமுறைச் சோழ அரசர்கள் யாவர் எனத் துணிய இயலவில்லை.
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியின் சமகாலத்தவனாக இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காணப்படுகிறான். இவன் தலையாலங்கனாத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவனாவான். இவனுடைய சமகாலத்துப் புலவரான நக்கீரர். கிள்ளிவளவனிடத்துப் பழையன் மாறன் தோற்றோடியதைச் சுட்டுகிறார்[340]. எனவே, கிள்ளிவளவனுக்குப் பிறகு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இரண்டு தலைமுறை சோழராட்சியில் இடைவெளி காணப்படுவதாகக் கொண்டு கணக்கிட்டால். கி. பி. 155 முதல் 180 வரை இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆட்சி செய்ததாகக் கொள்ளலாம். இவனுக்குப் பிறகு யார் ஆட்சி செய்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
சோழ மரபின் சிறப்புமிக்க கடைசி அரசன் சோழன் செங்கணான். அவன் இராசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குக் காலத்தால் இரண்டு மூன்று தலைமுறைகள் பிற்பட்டவனாவான். இவன் கணைக்கால் இரும்பொறையோடு போரிட்டான் என்பதைக் கண்டோம். கணைக்கால் இரும்பொறை என்றும் சேர வேந்தன் மாரிவெண்கோ என்னும் சேர அரசனுக்குக் காலத்தால் மிகவும் பிற்பட்டவன்; எனவே, இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னால் தோன்றியவன் எனக் கொள்ளலாம். மாரிவெண்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் சமகாலத்து அரசன் என்பது முன்னர்ச் சுட்டப்பட்டது. எனவே, சோழன் செங்கணான் கி. பி. 230 முதல் கி. பி. 255 வரை ஆட்சி புரிந்ததாகக் கூறலாம்.
ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகள் (கி. மு. 300 முதல் கி. பி. 300வரை) சங்ககாலச் சோழ மன்னர் ஆட்சிபுரிந்தமை இந்தக் காலக்கணிப்பினால் புலனாகிறது. செங்கணானுக்குப் பிறகு களப்பிரர் இடையீட்டால், தமிழக அரசியல் வானிலிருந்து சோழ அரசமரபு பைய மறைந்துவிட்டது. ஆந்திர நாட்டில் ஆந்திரச் சோழ அரசமரபு ஒன்று கி. பி. நான்காம் நூற்றாண்டில் தோன்றியுள்ளதைக் காணுகின்றோம்.
- ↑ * தமிழ்நாட்டு வரலாறு: சங்க காலம் - அரசியல் (1983) எனும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.
- ↑ 1. யவனர், அரபுநாட்டுக்கு மேற்கிலுள்ள செங்கடலையும் அதற்கு இப்பால் உள்ள பாரசீகக் கடலையும் அதற்கப்பால் உள்ள அரபிக்கடலையும், குமரிக் கடலையும், குண கடலையும் செங்கடல் (எரித்திரையக் கடல்) என்று கூறினார்கள்.
- ↑
'கடல் கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கெல்லையெனச் சொல்' - பழம்பாடல் - ↑ புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலைக்கு மேற்கில் தொடங்கி அறந்தாங்கிக்குத் தென்மேற்குப் பகுதியில் ஓடி, மணல்மேல்குடி என்னும் ஊருக்கு வடபால் கடலில் கலக்கிறது.
- ↑ இப்போதுள்ள தான்தோன்றி மலைப்பகுதி சங்ககாலத்தில் 'தாமான் தோன்றிக்கோன்' என்னும் அரசனால் ஆளப்பட்டது. அவன் காலத்தில் கிள்ளிவளவன் என்னும் சோழ அரசனும் ஆண்டான். (புறம். 399). இந்த நிலை மேற்கண்ட உய்த்துணர்வுக்கு இடமளிக்கிறது.
- ↑ 'உறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றம்'. (அகம். 4 : 14 - 15)
- ↑ Ptolemy
- ↑ Ortheura
- ↑ Periplus
- ↑ Kamara
- ↑ Chaberis
- ↑ வேங்கடசாமி, மயிலை சீனி., 'சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்’ (சங்ககாலத்து நகரங்கள்), பக். 126 - 150
- ↑ அகம். 60 : 13 - 14
- ↑ நற்.379 : 7 - 9
- ↑ அந்தச் சிறைச்சாலைக்குக் குடவாயில் கோட்டம் என்று பெயர். சோழன் செங்கணான், சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் போரில் சிறைப்பிடித்துக் கொண்டு வந்து குடவாயில் சிறையில் அடைத்துவைத்தான் என்று கூறப்படுவது இந்தச் சிறைச்சாலை போலும்.
- ↑ நற். 227 : 5 - 6
- ↑ குறுந். 258 : 7; நற். 190 : 4 : 6
- ↑ Sorai
- ↑ Arkatos
- ↑ புறம். 395
- ↑ மணிமே. 24 : 27
- ↑ Coramandal Coast
- ↑ தஞ்சை மாவட்டம் திருவிடைக்கழி என்னும் ஊரை அடுத்துள்ள திருக்களாச் சேரி என்பது திருக்குராச்சேரி என்பதன் திரிபு வழக்கு என்பது கோயிலில் தலவிருட்சம் குராமரமாக இருப்பதனால் உய்த்துணரக் கிடக்கிறது. (செந்தமிழ்ச் செல்வி 40, பக். 13, 79) 'துஞ்சிய' என்பதற்கு ஓய்வு எடுத்துக் கொண்ட என்னும் ஒரு பொருளும் உண்டு.
- ↑ நற். 281 : 3
- ↑ அகம். 6 : 20
- ↑ ஷை 226 : 7-8
- ↑ ஷை 222 : 5
- ↑ ஷை 376 : 4 - 10
- ↑ அகம். 186 : 15
- ↑ புறம். 217, 220, 221, 222 (சேலம் மாவட்டம் காவிரியின் வடகரையிலுள்ள பொத்தனூர் இந்த ஊராயிருக்கலாம்.
- ↑ அகம். 220 : 18
- ↑ நற். 73 : 8 - 9
- ↑ அகம். 336 : 22-23
- ↑ ஷை 55 : 10 - 11 : புறம். 66 : 3-4; பொருநர். 143 - 148
- ↑ தொல். பொருள், செய். 75 : 3
- ↑ ஷை புறத். 5 : 4
- ↑ வரதராசனார், மு. 'தமிழ் இலக்கிய வரலாறு', பக். 5
- ↑ குறள், 955, பரிமே. உரை
- ↑ Mukerji, R. K. The Fundamental Unity of India, p. 54
- ↑ Sircar, D. C. (ed.) Inscriptions of Asoka, pp. 47, 58
- ↑ மணிமே. பதி. 9 - 12
- ↑ மணிமே. 4 : 25 - 28
- ↑ ஷை 22 : 40 - 79
- ↑ ஷை 22 : 146 - 158
- ↑ புறம். 37 : 5 - 6, 39 : 1-3, 43: 5-7
- ↑ ஷை 46 : 1 - 2
- ↑ ஷை 43 : 4 - 8
- ↑ சிலப். 27 : 166 - 169
- ↑ சிலப். 5 : 65 - 67; 6 : 7 - 13
- ↑ ஷை : 29, அம்மானை வரி 1
- ↑ மணிமே. 1 : 4; 19 - 20
- ↑ புறம். 39 : 5 - 6
- ↑ திருத்தொண்டர் புராணம், திருநகரச் சிறப்பு
- ↑ Mendis, G. C. 'Ceylon' in A Comprehensive History of India, Vol. 2., The Mauryas and Satavahanas, p. 579
- ↑ சிலப். 20 : 53 - 55, 29; அம்மானை வரி 2
- ↑ மணிமே. 22 : 210
- ↑ 'தூங்கெயில் கதவம்' (பதிற். 31 : 19)
- ↑ புறம். 39 : 6
- ↑ சிறுபாண். 81 - 82
- ↑ நற். 236 : 8
- ↑ ஷை 234 : 7
- ↑ ஷை 14 : 4 - 5
- ↑ அகம். 36 : 13 : 16
- ↑ புறம். 37 : 5 - 6
- ↑ களவழி. 6 : 5 - 6, 23 : 4 - 5 33 : 4 - 5, 38 : 3 - 4
- ↑ சிலப். 29: அம்மானை வரி 1
- ↑ மணிமே. 1 : 4
- ↑ புறம், 228 : 9; சிலப். 28 : 95
- ↑ பன்னிருபாட்டியல் 76
- ↑ Gerini, Col., Researches, pp. 85-90
- ↑ Kols
- ↑ Bhandarkar, D. R., Ancient India, p. 89
- ↑ துரையரங்கனார், மொ. அ., 'சங்க காலச் சிறப்புப் பெயர்கள்', பக். 227
- ↑ Ramaswami Aiyar. L. V., Collected Papers, p. 42
- ↑ துரையரங்கனார், மொ. அ. மு. கு. நூ. பக். 228 - 230
- ↑ புறம். 80
- ↑ ஷை 82
- ↑ ஷை 85 : 6
- ↑ ஷை 82 : 5
- ↑ அகம். 36 : 19 - 20
- ↑ புறம். 80 : 6
- ↑ ஷை 80 : 5 - 9 ஆமூர்ப் போர்
- ↑ அகம். 36 : 15
- ↑ புறம். 82 : 3 - 4
- ↑ ஷை 84 : 3 - 5
- ↑ ஷை 85 : 7 - 8
- ↑ புறம். 83 : 1
- ↑ ஷை 82 : 6
- ↑ ஷை 84 : 1
- ↑ புறம் 13
- ↑ இவ்வாறு கொள்ளின் இந்தச் சோழன் சேர அரசனின் கருவூருக்கு மேற்கில் ஆண்டான் என்று முடியும். சோழ அரசன் சார்பில் பழையன் என்பவன் போர் (திருப்பூர்)ப் பகுதியை ஆண்டு கொண்டிருந்ததையும் அந்நாட்டை ஆண்ட சோழ அரசன் ஒருவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்று பெயர் பெற்றிருந்ததையும் எண்ணும்போது கொடுமுடியில் இருந்துகொண்டு சோழ அரசன் ஒருவன் அரசாண்டான் என்று கூறுவது இயல்பாகவே முடியும். அன்றியும் அந்துவன் என்னும் சேர அரசனின் தலைநகரான கருவூர் மேற்குக் கடற்கரையை அடுத்த கருவூராகவும் இருக்கலாமன்றோ? அந்துவனுக்குச் சமகாலத்துச் சேர அரசனான உதியஞ்சேரல் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அரசாண்டான் என்று கொள்வதால், அந்துவனது தலைநகரான கருவூரைக் கொங்குநாட்டுக் கருவூர் என்று கருதுகிறோம்.
- ↑ புறம். 368
- ↑ இந்த ஊர் 'திருப்போர்புறம்' என்றும் சுட்டப்படும். செங்கணானுக்கும் கணைக்கால் இரும்பொறைக்கும் இவ்விடத்தில்தான் போர் நடந்தது
- ↑ புறம் 62 : 7 - 9
- ↑ ஷை 62 : 14 - 15
- ↑ பதிற். பதி. 9 : 6
- ↑ பதிற். பதி. 9 : 3 - 6
- ↑ திருச்சி மாவட்டம்
- ↑ கோவை மாவட்டம்
- ↑ புறம் 213 : 4
- ↑ ஷை 219 : 1 - 2 உறையூருக்கு அருகில் காவிரி ஆறும், உய்யக்கொண்டான் ஆறும் ஒன்று கூடுகின்றன. இந்த இடத்தில் இக்காலத்தில் ஒரு மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் உள்ள இடத்தில்தான் அக்காலத்தில் கோப்பெருஞ்சோழன் அருநிழலில் அமர்ந்து உயிர்விட்டான் என்பர்.
- ↑ புறம். 216 : 11 - 12
- ↑ ஷை 215 : 10 - 12
- ↑ ஷை 217 : 7 - 8
- ↑ ஷை 191
- ↑ ஷை 219 : 2 - 4
- ↑ ஷை 220 : 5 - 7
- ↑ புறம். 221
- ↑ ஷை 222 : 5 - 6
- ↑ ஷை 223 : 3 - 4
- ↑ ஷை 221 : 5
- ↑ ஷை 212 : 6 - 7
- ↑ ஷை 67 : 13 - 14
- ↑ புறம். கொளு, 212 : 8
- ↑ பதிற். பதி. 9 : 6
- ↑ புறம். 67 : 11
- ↑ ஷை 220 : 5 - 6
- ↑ ஷை 213 : 8
- ↑ புறம். 203 : 9 - 11
- ↑ ஷை 370, 378
- ↑ அகம். 375 : 10 - 15
- ↑ புறம். 378
- ↑ பூழி நாட்டிலிருந்த செருப்பு மலை வேறு பதிற். 21 : 23
- ↑ புறம். 378 : 2
- ↑ அகம். 375 : 13 - 15
- ↑ புறம். 378 : 2
- ↑ ஷை 370 : 15 - 16 (சிதைவு)
- ↑ புறம். 370 : 18-21
- ↑ ஷை 266
- ↑ ஷை 4 : 1 - 7
- ↑ ஷை 266 : 10 - 13
- ↑ ஷை 266 : 7
- ↑ ஷை 4 : 14 - 19
- ↑ பொருநர். 130
- ↑ அகம். 375 : 10 - 13
- ↑ பட்டினப், 299; பொருநர், வெண்பா; திருமாவளவனை இரண்டாம் கரிகாலன் என்பர்.
- ↑ ஷை வெண்பா; ஷை
- ↑ ஷை கொளு; பொருநர், கொளு.
- ↑ அகம். 125 : 18
- ↑ அகம். 246 : 8 - 12
- ↑ புறம். 65 : 6 - 11
- ↑ அகம். 55 : 10 - 12
- ↑ புறம். 66 : 6 - 8
- ↑ பட்டினப். 285
- ↑ அகம். 376 : 10 - 11
- ↑ ஷை 141 : 23
- ↑ புறம். 66 : 1 - 2
- ↑ ஷை 126 : 14
- ↑ பொருநர். 130
- ↑ பொருநர். 132
- ↑ இக்கருத்தினை ஏற்றுக் கொள்ள இயலாது. பழமொழி நானூற்றில் (239 : 1 - 2)
'சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்று'
என வருகிறது. இந்தப் பிடர்த்தலையாரை நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர் கரிகாலனுடைய தாய்மாமன் எனச் சுட்டுகிறார், (ப-ர்) - ↑ பட்டினப். 220 - 227
- ↑ 'உருகெழு தாயம்' (பட்டினப். 227)
- ↑ 'உருகெழு குருசில்' (பொருநர். 131)
- ↑ பட்டினப். வெண்பா
- ↑ பழமொழி. 230
- ↑ பொருநர். 143 - 148; புறம். 65, 66 : 6; அகம். 55 : 10, 246: 9 - 10
- ↑ கோயில் வெண்ணி - தஞ்சை மாவட்டம், வெண்ணில் என்பது வெண்ணி என மருவியுள்ளது.
- ↑ போர் நடைபெற்ற முரம்பு நிலம்
- ↑ அகம். 125 : 19
- ↑ பட்டினப். 274
- ↑ ஷை 275
- ↑ ஷை 276
- ↑ ஷை 276
- ↑ ஷை 281
- ↑ பட்டினப். 282
- ↑ ஷை 277
- ↑ ஷை 235 - 239; புறம். 224 : 1
- ↑ பட்டினப். 240 - 245
- ↑ புறம். 7 : 7 - 8
- ↑ பொருநர். 74 - 78, 158 - 171;புறம். 224
- ↑ ஷை 226 - 230
- ↑ பட்டினப். 42 - 46
- ↑ அகம். 141 : 22 - 24
- ↑ பட்டினப். 283 - 284
- ↑ புறம். 224 : 9
- ↑ பட்டினப். 119 - 137, 184 - 193
- ↑ அகம். 376 : 3 - 10
- ↑ இதனைச் சேர நாட்டில் 'ஆறாட்டு' என்பர்.
- ↑ சிலப். 6 : 155 - 160
- ↑ பட்டினப். 299; பொருநர். வெண்பா
- ↑ ஷை கொளு, பொருநர். கொளு
- ↑ புறம்.7 : 10
- ↑ பொருநர். 131
- ↑ புறம். 7: 1-6; பட்டினப். 293 -299
- ↑ ஷை 224 : 14 - 17
- ↑ ஷை 224 : 17
- ↑ புறம். 68 : 18
- ↑ ஷை 225 : 9
- ↑ புறம். 47
- ↑ புறம். 31 : 3 - 17
- ↑ ஷை 32 : 1 - 6
- ↑ ஷை 33 : 7 - 9
- ↑ ஷை 225
- ↑ ஷை 68
- ↑ புறம். 382 : 3 - 11
- ↑ ஷை 2 : 9 - 20
- ↑ ஷை 68 : 6 - 7
- ↑ ஷை 73 : 11 - 14
- ↑ ஷை 30 : 10 - 14
- ↑ புறம். 31
- ↑ ஷை 31 : 1 - 3
- ↑ ..........
- ↑ புறம். 43
- ↑ புறம். 44 : 1 - 7
- ↑ புறம். 43 : 13 - 15
- ↑ ஷை 43 : 4 - 8
- ↑ ஷை 43 : 11 - 12
- ↑ புறம். 44
- ↑
- ↑ புறம். 47 கொளு
- ↑ இருவரும் ஒருவனே என்பாரும் உண்டு. குளத்தின் பக்கத்தில் இருந்த கூடாரத்தில் (குராப்பள்ளியில்) இறந்தவன் என்று டாக்டர் ஜி. யூ. போப் கூறுவார். காண்க: Tamilian Antiquary, vol. 29, p. 250, F. N. 2
- ↑ புறம். 225 : 9
- ↑ ஷை 69 : 15 - 16
- ↑ புறம். 39 : 8 - 9
- ↑ ஷை 69 : 12
- ↑ ஷை 35 : 6 - 11
- ↑ ஷை 40 : 10 - 11
- ↑ ஷை 397 : 20 - 21
- ↑ ஷை 36
- ↑ புறம். 36 : 11 - 13
- ↑ ஷை 37 : 7 - 13
- ↑ புறம். 39 : 16
- ↑ புறம். 42 : 22 - 24
- ↑ ஷை 40 : 1 - 2
- ↑ ஷை 40 : 3 - 5
- ↑ ஷை 41 : 4 - 11
- ↑ ஷை 38 : 7 - 9
- ↑ ஷை 46
- ↑ குறள். 879
- ↑ புறம். 226, 227, 228
- ↑ ஷை 386 : 20 - 24
- ↑ ஷை 70 : 8 - 9
- ↑ ஷை 42 : 8 - 11
- ↑ புறம். 42 : 1
- ↑ ஷை 34 : 14 - 15, 69 : 1 - 4
- ↑ ஷை 38 : 14 – 17
- ↑ ஷை 34 : 8 - 14, 386 : 3 - 7, 393 : 14. 397 : 14
- ↑ 393 : 17 - 18, 397 : 15
- ↑ ஷை 397 : 22
- ↑ ஷை 69 : 20
- ↑ திருச்சிராப்பள்ளி மாவட்டம்
- ↑ புறம். 173 : 1
- ↑ ஷை 69 : 15 - 16
- ↑ ஷை 227 : 8 – 9
- ↑ ஷை 226 : 4 - 6
- ↑ ஷை 397 : 8 – 9
- ↑ ஷை 393 : 24
- ↑ ஷை 226 : 6
- ↑ ஷை 228 : 10
- ↑ ஷை 39 : 8
- ↑ ஷை 37 : 5 - 6, 39 : 1 - 3, 40 : 1-2
- ↑ புறம். 58 : 1, 9 : 6
- ↑ ஷை 373 : 8
- ↑ ஷை 373 : 24
- ↑ இருவரும் ஒருவனே என்பதைத் தெரிவிக்கின்றன (ப-ர்)
- ↑ புறம். 60 : 7 - 9
- ↑ ஷை 5 : 59
- ↑ ஷை 197
- ↑ ஷை 58 : 14
- ↑ புறம். 367
- ↑ புறம். 16 : 10 - 19
- ↑ ஷை 125
- ↑ ஷை 377 : 23 - 30
- ↑ புறம். 377 : 16 - 20
- ↑ அகம். 158 : 16
- ↑ புறம். 16 கொளு
- ↑ சுந்தரமூர்த்தி நாயனார் தம்முடைய திருத்தொண்டத் தொகையில் தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்' என்று ஒரு செங்கட் சோழனைக் கூறுகிறார். நம்பியாண்டார் நம்பி இயற்றிய 'திருத்தொண்டர் திருவந்தாதி'யில் கோச்செங்கட் சோழ நாயனாரைக் கூறுகிறார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தில் கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் பாடினார். இந்தக் கோச்செங்சேட் சோழன் ஒருவரே என்று சிலர் கூறியும் எழுதியும் வருகிறார்கள். ஆழ்ந்து நுணுகி ஆராயும் போது இந்த இரண்டு செங்கணான்களும் வெவ்வேறு காலங்களில் இருந்தனர் என்பது தெரிகிறது.
- ↑ புறம். 74 : 4 - 7
- ↑ களவழி, 4 : 3, 5 : 3, 11 : 5
- ↑ ஷை 15 : 3 - 4, 21 : 4 - 5
29 : 3 - 4, 30 : 3, 40 : 3 - ↑ ஷை 6 : 5, 23 : 4, 33 : 4
- ↑ ஷை 38 : 3
- ↑ 1 : 4, 2 : 4, 9 : 3, 10 : 3, 14 : 3
16 : 4, 20 : 3, 25 : 3, 26 : 4, 27 : 3
28 : 5, 31 : 3, 36 : 4, 37 : 3, 39 : 3 - ↑ ஷை 8 - 4, 17 : 4, 22 : 5, 41 : 4
- ↑ களவழி, 3 : 3, 19 : 3, 24 : 4, 32 : 3
- ↑ ஷை 7 : 3, 12: 4, 35 : 3, 36 : 2
- ↑ ஷை 13 : 4, 18 : 3
- ↑ ஷை 34: 4 - 5
- ↑ ஷை 39 : 4
- ↑ ஷை 14 : 4
- ↑ ஷை 6 : 5 - 6
- ↑ ஷை 16 : 5
- ↑ 'கவ்வைமா களிறுந்தி வெண்ணி ஏற்றக் கழல்மன்னர் மணிமுடிமேல் காகம் ஏறத் தெய்வவாள் வலங்கொண்ட சோழன்' (பெரிய திருமொழி, 6-6-3)
- ↑ வெங்கண்மா களிறுந்தி வெண்ணி ஏற்றி விறல்மன்னர் திறல்அழிய வெம்மா உய்த்த செங்கணான் கோச்சோழன் (ஷை 6-6-4)
- ↑ 'பாரானர் அவர்இவர் என்று அழுந்தை ஏற்றப் படைமன்னர் உடல்துணியப் பரிமா உய்த்த தேராளன் கோச்சோழன்' (பெரிய திருமொழி, 6-6-9)
- ↑ 'மின்னாடு வேல் ஏந்தும் விளந்தை வேளை விண்ஏறத் தனிமேல் உய்த்து உலகம் ஆண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன்' (ஷை 6-6-6)
- ↑ களவழி. 36 : 2
- ↑ விளந்தை என்பதற்கு 'விளைந்த' என்பதும் பாடம் (ஷை 6-6-6)
- ↑ களவழி. 35 : 3 - 5
- ↑ 'களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய உதியன் கால்வழித் தளையை வெட்டிஅர சிட்ட அவனும்' (கலிங். இராச பாரம்பரியம், தாழிசை.18) உதியன் - சேரன், இங்குக் கணைக்கால் இரும்பொறையைக் குறிக்கிறது. கால்வழித்தளை - காலில் இடப்பட்ட விலங்கு
- ↑ புறம். 48, 49
- ↑ நற். 18 : 5
- ↑ 'கடும்பகட்டு யானைச் சோழர் மருகன் நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் நல்லடி யுள்ளா னாகவும் ஒன்னார்' (அகம். 356 : 12 - 14)
- ↑
'விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி உள்ளதம்
வளன்வலி யுறுக்கும் உளம்இ லாளர்' (புறம். 190 : 1 - 4) - ↑ மணிமே. 19 : 54 - 55
- ↑ மணிமே.24 : 54 - 60
- ↑ அடைப்புக் குறிப்பில் உள்ள கதைப் பகுதி செவிவழிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டது. வரலாற்று உண்மையன்று.
- ↑ மணிமே. 19 : 124 - 127
- ↑ மணிமே. 24 : 29
- ↑ ஷை 22 : 215
- ↑ ஷை 19 : 127
- ↑ அகம். 123 : 10
- ↑
மாவண் கடலன் (அகம்.81 : 13) மாவண் கழுவுள் (அகம். 365 : 12)
மாவண் தித்தன் (புறம். 352 : 9)
மாவண் பாரி (புறம், 236:3
பதிற். 61 : 8) மாவண் புல்லி (அகம்.61 : 12, 359 : 12)
மாவண் தோன்றல் (புறம். 121 : 4)
அகம். 394 : 12 (தலைமகன்) என்னும்
தொடர்களையும் ஒப்புநோக்கி எண்ண வேண்டியுள்ளது. - ↑ பாடலில் 'பாண்டில்' என்றே உள்ளது. இச்சொல்லுக்குக் 'காளை' என்பது பொருள். காளையொடு பொருதான் எனில் வெற்றிக்கொடி நாட்டினான் என்பது பொருளின்றி முடியுமாகையால் ஏற்புடை வழியில் பாண்டிய அரசன் என்று கொள்ளப்பட்டது.
- ↑ சல்லியங்குமரனார். நற். 141
- ↑ நற். 390 : 3
- ↑ புறம். 43 : 12
- ↑ அகம். 205 : 10
- ↑ புறம். 167 : 10
- ↑ ஷை 43 : 11 – 12
- ↑ பதிற். பதி. 5 : 2 - 3
- ↑ சிலப். 29 : உரைப்பாட்டுமடை
- ↑ புறம். 71 : 13; நற். 87 : 3, 190 : 4, குறுந். 258 : 7
- ↑ நற். 190 : 6; சிலப். 29 : உரைப்பாட்டு மடை
- ↑ 'அரியல்அம் புகவின் அம்தோடு' குறுந். 258 : 5 புகா - உணவு, அரி - அரிசி. அரி அல்லாத அழகிய புகா - யானை. எனவே, கொல்லிமலை மக்கள் யானைக் கோட்டை விற்று வாழ்ந்த நிலையை ஓரி வரலாற்றில் கண்டு ஒப்புநோக்கலாம்.
- ↑ குறுந். 258 : 6
- ↑ நற். 87 : 3
- ↑ புறம். 71 : 13
- ↑ குறுந். 258 : 2 - 3
- ↑ நற். 87 : 3
- ↑ குறுந். 258 : 6
- ↑ நற். 190 : 4
- ↑ ஷை 190 : 3-4; குறுந். 258 : 4-7
- ↑ நற். 190 : 1-2
- ↑ அகம். 326 : 9
- ↑ புறம். 167
- ↑ ஷை 394
- ↑ ஷை 174
- ↑ புறம். 66
- ↑ ஷை 7, 224
- ↑ அகம். 44 : 13 - 14
- ↑ புறம், 65, 202 : 12
- ↑ அகம். 326 : 5
- ↑ புறம். 65
- ↑ ஷை
- ↑ McCrindle, Indian Antiquary, Vol. VIII, p. 145
- ↑ Paranavitane, History of Ceylon, Vol. I, pp. 124-126, 181-185
- ↑ புறம். 66 : 6
- ↑ அகம். 346 : 19 - 22