உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/004-052

விக்கிமூலம் இலிருந்து


3. கொங்கு நாட்டில் சேரர் ஆட்சி

கொங்குவைச் சேரர் கைப்பற்றியது

பழங்கொங்கு நாட்டைச் சிற்றரசர்கள் அரசாண்டார்கள் என்றும் அக்காலத்தில் அந்நாட்டில் பேரரசர் இல்லை என்றும் அறிந்தோம். கொங்கு நாட்டின் சுற்றுப்புறங்களில் இருந்த சேர, சோழ, பாண்டியர் கொங்குச் சிற்றரசர்களை வென்று அந்நாட்டைத் தங்கள் தங்கள் இராச்சியத்துடன் சேர்த்துக் கொள்ளக் கருதி அவர்கள் தனித்தனியாகப் படையெடுத்து வந்து கொங்கு நாட்டில் போர் செய்தார்கள். கொங்கு நாட்டரசர் தங்கள் நாட்டை எளிதில் விட்டுவிடவில்லை. படையெடுத்துப் போருக்கு வந்த அரசர்களோடு அவர்கள் கடுமையாகப் போர் செய்து எதிர்த்தார்கள். இவ்வாறு பல காலமாகக் கொங்குநாட்டில் போர்கள் நடந்தன. கடைசியாகச் சேர அரசர் கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கொங்கு நாட்டின் தென்பகுதியில் சில ஊர்களைக் கைப்பற்றினார்கள். பாலைக்காட்டுக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டில் வந்து சேர அரசர், யானைமலைக் காடுகளை முதலில் கைப்பற்றினார்கள். யானை மலைப் பிரதேசத்துக்கு அக்காலத்தில் உம்பல் காடு என்று பெயர் இருந்தது (உம்பல் - யானை). அங்குப் பல ஊர்கள் இருந்தன.

சேர மன்னர் கொங்கு நாட்டில் கால் ஊன்றுவதைக் கண்ட சோழ அரசரும் பாண்டிய மன்னரும் சும்மா இருக்கவில்லை. சேரருக்கு எதிராக அவர்கள் போர் செய்து சேரரின் ஆதிக்கத்தைத் தடுத்தார்கள் அவர்கள் கொங்குச் சிற்றரசர்களுக்கு உதவியாக இருந்து, சேர அரசரின் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள். இதன் காரணமாகச் சேர மன்னர் கொங்கு நாட்டை எளிதில் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியோடு போர் செய்து கொங்கு நாட்டில் சிறிதுசிறிதாகச் சேர அரசர் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள்.

சேர நாட்டு அரசனான உதியஞ் சேரலுக்கு இரண்டு மக்கள் இருந்தார்கள். அவர்கள் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் (பதிற்றுப்பத்து 2 ஆம் பத்தின் தலைவன்) பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் (பதிற்றுப்பத்து 3 ஆம் பத்துத் தலைவன்) ஆவர். இளையனாகிய குட்டுவன் பெரிய யானைப்படையை வைத்திருந்தபடியால் அவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று பெயர் பெற்றான். இவன் உம்பற் காட்டையும் (யானைமலைப் பிரதேசம்) அகப்பா என்னும் கோட்டையையும் வென்றான். உம்பற் காட்டை வென்ற இவன் அங்குத் தன் ஆட்சியை நிறுவினான். நிறுவித் தன்னுடைய உறவினரில் முதியவர்களுக்கு அந்நாட்டைப் பிரித்துக் கொடுத்தான். இதை

“உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ
அகப்பா எறிந்து பகல்தீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியவரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்து”


என்று பதிற்றுப்பத்து மூன்றாம் பத்துப் பதிகங் கூறுகின்றது. “முதியரை மதியுறழ் மரபிற் றழீஇ மண்வகுத்தீத்தெனக் கூட்டித் தன்குலத்தில் தனக்கு முதியரை மதியொடொத்த தன் தண்ணிளியால் தழீஇக்கொண்டு அவர்க்குத் தன் நாட்டைப் பகுத்துக் கொடுத்து என உரைக்க” என்பது பழைய உரை.

உம்பற்காடு என்னும் நாட்டை அடக்கி அதனைத் தன்னுடைய ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தது இவனுடைய முக்கியச் செயலாகும். இவனுடைய தமயனான நெடுஞ் சேரலாதன், தன்னைப் பாடிய (இரண்டாம் பத்து) குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற் காட்டில் ஐந்நூறூர்களைப் பிரமதாயமாகக் கொடுத்தான் (பதிற்றுப்பத்து 2 ஆம் பத்துப் பதிகக் குறிப்பு).

இதனால் உம்பற்காடு அக்காலத்தில் சேர அரசர்களுக்கு உரியதாயிற்று என்பது தெரிகின்றது.

✽ ✽ ✽