மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/029-052
5. வைணவ ஆழ்வார்கள்
இக்காலத்தில் பக்தி இயக்கம் தோன்றியிருந்ததை முன்னரே கூறினோம். நரசிம்மவர்மனான மாமல்லன் காலத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், அப்பூதியடிகள், முருகநாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலிய நாயன்மார்கள் இருந்தார்கள் என்பதையும், அவர்களில் அப்பரும், சம்பந்தரும் தமிழ்நாடெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்து பௌத்த மதத்தையும் சமண சமயத்தையும் கண்டித்துச் சைவசமயப் பிரசாரம் செய்தார்கள் என்பதையும் கூறினோம்.
இக்காலத்திலேயே வைணவ சமயத்து ஆழ்வார்கள் யீசலர் இருந்தார்கள். இவ்ஆழ்வார்களும் பக்தி இயக்கத்தையும் வைணவ சமயத்தையும் தமிழ்நாட்டில் பரப்புவதற்குப் பாடுபட்டார்கள். இவர்கள் காலத்தில் இருந்த ஆழ்வார்கள் நால்வர். இவர்களில் பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என்பவர் மூவரும் முதலாழ்வார் என்று கூறப்படுவார்கள். திருமழிசை ஆழ்வார் என்பவர் முதலாழ்வார்கள் காலத்திலே இருந்தவர். ஆனால், வயதினால் அவர்களுக்கு இளையவர்.
இந்த நான்கு வைணவ ஆழ்வார்களும் நரசிம்மவர்மனான மாமல்லன் காலத்தில் இருந்தவர்கள். இவர்களில் முதலாழ்வார் மூவரும் பக்திநிலையில் நின்று யோகிகளாக இருந்தவர்கள். ஆகவே இவர்கள் சமணபௌத்த சமயங்களைத் தாக்காமலே தமது கொள்கையை மட்டும் நிலைநிறுவினார்கள். இவர்களுக்கு இளையரான திருமழிசையாழ்வார், பக்தி இயக்கத்தையும் வைணவ சமயத்தையும் நிலைநாட்டுவதில் அதிக ஊக்கமுடையவராயிருந்தார். இவர் சமணபௌத்த மதங்களை மட்டுமல்லாமல் சைவ மதத்தையும் கண்டித்துப் பிரசாரம்செய்தார். இவர்கள் வரலாற்றினைச் சுருக்கமாக ஆராய்வோம்.
பொய்கையாழ்வார்
காஞ்சீபுரத்திலே திருவெஃகா என்னும் திருக்கோயிலுக்கு அருகிலே இவர் பிறந்தவர் என்று வைணவ வரலாறு கூறுகிறது. பொய்கையிலே (குளத்திலே) பிறந்தபடியினாலே இவருக்குப் பொய்கையாழ்வார் என்றுபெயர் வழங்கியதாகக் கூறப்படுகிறது. பொய்கையூர் அல்லது பொய்கைநாட்டைச் சேர்ந்தவர் ஆகையினால் பொய்கையார் என்னும் பெயர்பெற்றார் என்று கருதுவது தவறாகாது பொய்கையார் என்னும் பெயருடைய புலவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள். கடைச்சங்க காலத்திலே இருந்த களவழிநாற்பது பாடிய பொய்கையாரும் இந்தப் பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று சிலர் கூறுவர். கி. பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டில் செங்கட்சோழன் காலத்தில் இருந்த பொய்கையார் வேறு, கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்த பொய்கையாழ்வார் வேறு.1
திருமாலிடத்தில் பக்தியுடையவரான இவர் யோகியாய்த் தியானத்தில் அமர்ந்து தம் வாழ்நாளைக் கழித்தார். உலகப்பற்றை அறவே ஒழித்த இவர், தமது காலத்தில் நிகழ்ந்த பௌத்தசமண சமயக் கலகங்களிலும் கருத்தைச் செலுத்தாமல் ஒதுங்கியிருந்தார். ஆகையினால்தான் இவருடைய பாடல்களில் பௌத்த சமண சமயங்களைப்பற்றிய குறிப்புக்கள் காணப்படவில்லை.
இவர், இயற்பா முதல் திருவந்தாதியை இயற்றினார். இது அந்தாதித்தொடரில் நூறு வெண்பாக்களையுடையது.
இவர், பேயாழ்வார் பூதத்தாழ்வார் ஆகிய இருவரையும் திருக்கோவலூரில் சந்தித்தார் என்றும், திருமழிசையாழ்வாருடனும் பழகியவர் என்றும் இவர் வரலாறு கூறுகிறது.
பூதத்தாழ்வார்
இவர் கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்திலே பிறந்தவர். இவரும் திருமால் பக்தராக இருந்தவர். உலகப்பற்றை அறவே நீத்தவர். பௌத்தசமண சமயக் கலகங்களில் தலையிடாமல் யோகியாக வாழ்ந்தவர். பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் என்னும் ஆழ்வார்களுடனும் திருமழிசையாழ்வாருடனும் நட்புடையவன். இவர் இயற்றிய இயற்பா - இரண்டாந்திருவந்தாதி, நூறு வெண்பாக்களாலான அந்தாதித் தொடையால் அமைந்தது.
பேயாழ்வார்
இவர் சென்னைப்பட்டினத்துக்கு அடுத்த மயிலாப்பூரில் பிறந்தவர் இவரும் திருமால் பக்தராயும் யோகியாயும் இருந்தவர். மற்றச் சமயப் பூசல்களில் தலையிடாதவர் பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் இவர்களுடன் நட்புடையவர். இவர் இயற்றிய இயற்பா - மூன்றாந்திருவந்தாதி, அந்தாதித் தொடையில் நூறு வெண்பாக்களாலானது.
சைவ சமயத்தவராக இருந்த திருமழிசையாழ்வாரை வைணவ சமயத்தில் சேர்த்துத் திருமாலடியாராகத் திகழச்செய்தவர் பேயாழ்வார். அதுபற்றி,
“பெருக்க முடன் திருமிழிசைப்
பிரான் தொழுவோன் வாழியே.”
என்று வைணவர்கள் இவரை வாழ்த்துவது வழக்கம்.
திருமழிசையாழ்வார்
தொண்டை நாட்டிலே திருமிழிசை என்னும் ஊரில் பிறந்தவர். ஆகையினாலே இவருக்குத் திருமழிசையாழ்வார் என்று பெயர் அமைந்தது. இளமையில் கல்விகற்றுத் தேர்ந்து, திருநாவுக்கரசரைப் போலவே, பல சமயங்களை ஆராய்ந்தவர். அதன் பயனாகச் சிலகாலம் பௌத்தராகவும் சில காலம் சமணராகவும் இருந்து பிறகு சைவ சமயத்தில் சேர்ந்து சிவவாக்கியர்1 என்னும் பெயர் பூண்டிருந்தார்.
இவர் சைவ சமயத்தவராக இருந்த காலத்தில், பேயாழ்வார் இவரை வைணவராக்கித் திருமால் பக்தராகச் செய்தார் என்றும், வைணவராகி இவர் யோகத்தில் அமர்ந்திருந்தபோது முதலாழ்வார்கள் மூவரும்வந்து இவருடன் சிலகாலம் தங்கியிருந்தார்கள் என்றும் இவருடைய வரலாறு கூறுகிறது. இவருக்குப் பக்திசாரர் என்று வேறுபெயரும் உண்டு.
இவர் காஞ்சீபுரஞ்சென்று திருவெஃகா என்னும் திருப்பதியில் தங்கியிருந்து பெருமாளை வழிபட்டிருந்தார். அக்காலத்தில், கணிகண்ணன் என்பவர் இவரிடம் வந்து சீடராக அமர்ந்து இவருக்கும் தொண்டுசெய்திருந்தார். காஞ்சி நகரத்திலிருந்து பல்லவ அரசனுடைய அரண்மனைக்குக் கணிகண்ணர் பிச்சைக்காகச் செல்வதுண்டு. ஒரு செய்யுள் பாடச் சொன்னான். அவர் அரசனைப்பாடாமல் காஞ்சி நகரத்தைப் பாடினார். அதனால் சினங்கொண்ட பல்லவ மன்னன் அவரை ஊரைவிட்டுப் போகும்படி சொன்னான்.
அவரும் ஆழ்வாரிடம் வந்து நடந்ததைக்கூறித் தனக்கு விடைகொடுக்க வேண்டும் என்று கேட்டார். ஆழ்வார், தாமும் அவருடன் வருவதாகக் கூறிக் கோயிலிலிருந்த பெருமாளையும் அழைத்துக் கொண்டு மூவருமாகப் புறப்பட்டுப் போயிவிட்டார்கள். பெருமாள் போய்விட்டதையறிந்த அரசன், அவர்களை மீண்டும் நகரத்துக்கு வரும்படி அழைத்தான். அதற்கு உடன்பட்டு ஆழ்வாரும் கணிகண்ணரும் பெருமாளுடன் காஞ்சிக்குத் திரும்பிவந்தனர் என்று இவருடைய வரலாறு கூறுகிறது. காஞ்சியை விட்டுப்போய் இவர்கள் ஓர் இரவு தங்கியிருந்த ஊருக்கு ஓரிரவிருக்கை என்று பெயர் உண்டாயிறு. இவ்வூர் காஞ்சிக்குத் தெற்கே இரண்டு மைலுக்கப்பால் இருக்கிறது.
கணிகண்ணரை அரசன் நகரம் கடத்தியதும் அவருடன் திருமழிசையாழ்வார் சென்றதும், அரசனைப் பாடாததற்காகக் கொடுக்கப்பட்ட தண்டனையன்று. சமய சம்பந்தமாகக் காஞ்சியில் ஏதோ கலகம் ஏற்பட்டிருக்கலாம்; அக்கலகத்தில் கணிகண்ணரும், மறைமுகமாக ஆழ்வாரும் தொடர்புகொண்டிருக்கலாம். இதனால்தான் இவர்கள் நகரத்தினின்று வெளியேற்றப்பட்டனர் என்று கருதுவது தவறாகாது. பின்னர், அக்கலகம் சமாதானமுறையில் அடக்கப்பட்டபிறகு இவர்கள் நகரத்திற்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு திருமழிசையாழ்வார், காஞ்சிமா நகரத்தைவிட்டுக் குடந்தை என்னும் கும்பகோணத்திற்குப்போய் அங்கே கடைசிவரையில் தங்கியிருந்தார். குடந்தைக்குப் போகிறவழியில், பெரும்புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் தங்கினார். சிதம்பரத்தில் தங்கிய இவர், தில்லைத் திருச்சித்ர கூடத்தைப் பாடவில்லை. ஏனென்றால் இவர் காலத்தில் தில்லைக் கோவிந்தராசப் பெருமாளுக்குத் திருக்கோயில் அமைக்கப்படவில்லை. இவருக்குப் பின்வந்தவரான திருமங்கையாழ்வார் காலத்தில் தில்லைக் கேவிந்தராசனுக்குத் திருக்கோயில் அமைக்கப்பட்டிருந்தபடியால், திருமங்கையாழ்வார் தில்லைத் திருச்சித்ர கூடத்தைப் பாடியிருக்கிறார்.
திருமழிசையாழ்வார் தமது பாடல்களில் பௌத்தர் சமணர், சைவர் ஆகிய மூன்று சமயத்தவரையும் கண்டிக்கிறார். இவர் இயற்றிய இயற்பா - நான்முகன் திருவந்தாதி, அந்தாதித் தொடையாக அமைந்த தொண்ணூற்றாறு வெண்பாக்களையுடையது. இவர் பாடிய திருச்சந்த விருத்தம் நூற்றிருபது ஆசிரிய விருத்தத்தைக் கொண்டது. “அன்புடன் அந்தாதி தொண்ணூற்றா றுரைத்தான் வாழியே” என்றும், “எழிற் சந்த விருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே” என்றும் வைணவர் இவரைப் போற்றுகிறார்கள்.
இந்த ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
முதலாழ்வார், திருமழிசையாழ்வார்காலஆராய்ச்சி.
I
பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் இம்மூவரும் முதலாழ்வார் எனப்படுவர். இம்மூவரும் ஒரேகாலத்தில் இருந்தவர்கள். இவர்கள் காலத்தில் இருந்த திருமழிசையாழ்வார் இவர்களுக்கு இளையவர். ஆனால், நால்வரும், ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்பதற்கு இவர்களின் வரலாறு சான்றுகூறுகிறது. வைணவ அடியார்களான இவர்கள், சைவ அடியார்களான நாவுக்கரசர், ஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், முருகநாயனார் முதலிய சைவநாயன்மார்கள் வாழ்ந்திருந்த அதே காலத்தில், அஃதாவது மாமல்லன் நரசிம்மன் காலத்தில் இருந்தவர்கள். இந்த ஆழ்வார்களின் காலத்தை எளிதாகக்கண்டு இவர்கள் நூல்களிலே சான்றுகள் இல்லை. ஆனால், பூதத்தாழ்வார் தமது செய்யுளில் மாமல்லபுரத்தைக் குறிப்பிடுகிறார். அந்தக் குறிப்பைக்கொண்டு, இவரும் இவருடனிருந்த மற்ற ஆழ்வார்களும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், மாமல்லன் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில், இருந்தவர்கள் என்று தீர்மானிக்கலாம். இதனை ஆராய்வோம்.
பூதத்தாழ்வார் பாடிய திருவந்தாதியில்,
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
தமருள்ளுந் தண்பொருப்பு வேலை - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்.
என்னும் செய்யுளைப் பாடியுள்ளார்.1
இச்செய்யுளில் மாமல்லபுரத்தை மாமல்லை என்று கூறுகிறார். பூதத்தாழ்வார் பிறந்ததும் மாமல்லபுரந்தான். மாமல்லபுரம் இப்போது மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிறது.
மாமல்லை என்னும் மாமல்லபுரம் பல்லவ அரசர்களின் துறைமுகப்பட்டினம். ஆகவே, இங்குப் பல்லவ இளவரசர்கள் வாழ்ந்திருந்தார்கள். தந்தையாகிய மகேந்திவர்மன் காலத்தில், இளவரசனாயிருந்த நரசிம்மவர்மன் இந்நகரத்தில் வாழ்ந்திருந்தான். நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்னும் சிறப்புப்பெயரும் உண்டு. இவன் காலத்து முன்பு இத்துறைமுகப்பட்டினத்துக்கு மாமல்லபுரம் என்னும் பெயர்இல்லை. வேறு பெயர்இருந்தது. மாமல்லன் காலத்தில் இவ்வூருக்கு இவன்பெயர் சூட்டப்பட்டு மாமல்லபுரம் என்று அழைக்கப்பட்டது. மாமல்லபுரம் மாமல்லை என்று சுருக்கமாக வழங்கப்பட்டது. தமது செய்யுளிலே மாமல்லபுரத்தைக் குறிப்பிடுகிறபடியால், பூதத்தாழ்வார் மாமல்லன் காலத்திலாவது அவன் காலத்திற்குப் பின்னராவது வாழ்ந்திருக்க வேண்டும்.
ழூவோ தூப்ராய் அவர்கள் தமது ‘பல்லவர் பழமை’ என்னும் நூலிலே, நரசிம்மவர்மன்தம் சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரினால் மாமல்லபுரத்தைப் புதிதாக உண்டாக்கினான் என்று கூறுகிறார்.1 இவர் கூறுவதுபோல மாமல்லன் புத்தம்புதிதாக இவ்வூரை உண்டாக்கவில்லை. இவ்வூரின் பழையபெயரை மாற்றித் தன்பெயரைச் சூட்டினான். அரசர்கள், ஊரின் பழைய பெயரை மாற்றித் தமது பெயரைச் சூட்டுவது மரபு. இதற்குச் சாசனங்களில் பல சான்றுகள் உள்ளன.
மாமல்லபுரம் சங்ககாலம் முதல் வேறுபெயருடன் இருந்துவந்ததென்றும், பெரும்பாணாற்றுப் படையில் கூறப்படுகிற நீர்ப்பெயற்று அல்லது நீர்பெயர்த்து என்பது அதன் பழையபெயர் என்றுங்கூறுவர்.2 நீர்ப்பாயல் என்று இவ்வூருக்குப் பெயர் இருந்ததென்றும் அப்பெயரையே பிற்காலத்தவர் ஜலசயனம் என்று வழங்கினார்கள் என்று கருதுவோரும் உளர். கடல்மல்லை என்பது இதன் பழையபெயர் என்றும், பிறகு மாமல்லன் தன்பெயரை இட்டு மாமல்லபுரம் என்று வழங்கினான் எனக் கூறுவோரும் உளர்.
இதன் பழைய பெயர் எதுவாக இருந்தாலும், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இருந்த முதலாம் நரசிம்மவர்மனால் மாமல்லபுரம் என்னும் புதியபெயர் இடப்பெட்டதென்பதில் சிறிதும ஐயமில்லை. பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் பிறந்தவர் என்று சொல்லப்படுகிறபடியாலும், அவ்வூரை மாமல்லை என்று அவர் தமதுசெய்யுளிலே கூறுகிறபடியாலும், அவ்வூருக்கு மாமல்லபுரம் என்னும் பெயர் ஏற்பட்டபிறகு இருந்தவராதல்வேண்டும். ஏனைய ஆதாரங்களை ஒத்திட்டுப் பார்க்கும்போது, பூதத்தாழ்வார், நரசிம்மவர்மன் காலத்திலே, மாமல்லபுரம் என்னும் பெயர் ஏற்பட்ட காலத்திலேயே இருந்தவராகத் தெரிகிறார். ஆகவே, பூதத்தாழ்வாரும் அவருடன் நண்பர்களாக இருந்த பொய்கையாழ்வார் பேயாழ்வார் திருமழிசையாழ்வார் ஆகிய ஏனைய மூன்று ஆழ்வார்களும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலே வாழ்நதிருந்தவர் என்பது தெரிகிறது. இதே கருத்தைத் திரு. கோபிநாதராயரும் கொண்டுள்ளார்.1
பூதத்தாழ்வார் தாம் பிறந்த மாமல்லபுரத்தை மாமல்லை என்று வெளிப்படையாகக் கூறியிருக்க, மு. இராகவையங்கார் அவர்கள் தமது ஆழ்வார்கள் காலநிலை என்னும் நூலில், மல்லை என்பதை மா என்னும் அடைமொழியுடன் ஆழ்வார் கூறினார் என்று பண்டிதர்முறையில் வலிந்து பொருள்கூறுகிறார். அவர் கூறுவது இது: “மல்லை என்றும் அவ்வூர் ஆழ்வார் திருவாக்குகளில் வழங்குகின்றது. ‘மாமல்லை கோவல்மதிற் குடந்தை’ என்று பூதத்தாழ்வார் அருளிய தொடருள் ‘மல்லை’ என்பதற்குக் கொடுககப்பட்ட விசேடணம்:
“நீளோதம், வந்தலைக்கு மாமயிலை மாவல்லிக் கேணியான்”
என்ற திருமழிசைப்பிரான் வாக்கிற்போல வந்த அடைசொல்லாககட் கொள்ளற்குரியதன்றி, மாமல்லபுரம் என்பதன் திரிபாகவே கொள்ளவேண்டும் என்னும் நியதியில்லை.2
இவ்வாறு மாமல்லை என்பது மாமல்லபுரம் என்பதன் திரிபுஅல்ல என்றும், மாமல்லை என்பதில் மா என்பது விசேடணம் (அடைமொழி) என்றும் வலிந்து பொருள் கூறுகிறார் அய்யங்கார். அப்படியானால், பூதத்தாழ்வார்.
“மாமல்லை மாகோவல் மாக்குடந்தை என்பரே”
என்று கூறாமல்,
“மாமல்லை கோவல் மதிட்குடந்தை என்பரே”
என்று ஏன் கூறினார்? மல்லைக்குக் கொடுத்த மா என்னும் அடையைக் கோவலுக்கும் குடந்தைக்கும் ஏன் கொடுக்கவில்லை?
இந்த ஐயம் அவருக்கும் ஏற்பட்டுப் பிறகு மாமல்லை என்பது மாமல்லபுரமாகத்தான் இருக்கவேண்டும் என்னும் முடிவுக்குவருகிறார். அவர், அதே ஆழ்வார்கள் காலநிலை என்னும் நூலில் 32ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதுகிறார்:
“இவ்வாறு கடல்வளம் பெற்றிருந்த பண்டைத் துறைமுகப்பட்டினம், முதல் நரசிம்மவர்மனால் பின்பு புதுப்பிக்கப்பட்டு மாமல்லன் என்ற அவன் சிறப்புப்பெயரைப் பெற்றிருத்தலும், அதனால், கடன்மல்லை என்ற தன் பழம் பெயரையன்றி, மாமல்லபுரம் என்று புதுப்பெயரும் அதற்குப் பெரு வழக்காயமைந்திருத்தலும் கூடியனவே.”
இவ்வாறு மாமல்லை என்பதற்கு மாமல்லபுரம் என்னும் பொருளை இவர் ஒப்புக்கொள்கிறார். இதனோடு நிற்கவில்லை. மாமல்லன் நரசிம்மவர்மனுடைய தந்தையாகிய முதலாம் மகேந்திரவர்மனுக்குச் சத்துருமல்லன் என்னும் சிறப்புப்பெயர் உண்டென்பதைக் கூறி சத்துருமல்லன் என்னும் பெயரால் மல்லை என்னும் பெயர் வந்திருக்கக்கூடும் என்று குறிப்பாகக் கூறுகிறார்.1 இவர் குறிப்பாகக் கூறுவதுபோல இவ்வூருக்குச் சத்துருமல்லபுரம் என்றபெயர் வழங்கியதாக இதுவரையில் சாசனங்களிலும் இலக்கியங்களிலும் சான்றுகிடையாது. ஆகவே, மாமல்லை என்பது மாமல்லபுரம் என்பது உறுதியாகிறது.
மேலும், அய்யங்கார் அவர்கள் மாமல்லபுரத்து ஆதிவராகர் சந்நிதியுள் மகேந்திரவர்மனுக்கும் அவன் தந்தை சிம்மவிஷ்ணுவுக்கும் சிலையுருவங்கள் உள்ளன என்று கூறி அதனால் அக்கோயில் நரசிம்மவர்மன் காலத்துக்குமுன்பே ஏற்பட்டதென்று கூறுகிறார். இதுவும் தவறு. ஆதிவராகர் சந்நிதியுள், நரசிம்மவர்மன் காலத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட சிங்கத்தூண்கள் இருப்பதனால், அக்கோயில் நரசிம்மன் காலத்துக்கு முற்பட்டதல்ல.
எனவே, பூதத்தாழ்வார் மாமல்லையாகிய மாமல்லபுரத்தைக் கூறுகிறபடியினாலே, அப்பெயர் ஏற்பட்ட மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் அல்லது அதற்குப் பிற்பட்ட காலத்தில் இருந்தவராதல் வேண்டும். மற்ற ஆதாரங்களைக்கொண்டு பார்கிறபோது, நரசிம்மவர்மன் காலத்திலே இருந்தவராகத் தெரிகிறார். ஆகவே அவர் காலத்தில் அவருடன்நண்பர்களாக இருந்த மற்ற மூன்று ஆழ்வார்களும் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவராதல் வேண்டும் என்பதில் ஐயமில்லை.
II
பூதத்தாழ்வார் காலத்தில் மேலே ஆராய்ந்து, அவர் காலம் நரசிம்மவர்மன் காலம் என்று கூறினோம். அவருடன் அவர்காலத்தில் இருந்த பொய்கையாழ்வாரைப் பற்றிய சில ஐயங்களைப்பற்றி இங்கு ஆராய்வோம். நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த பொய்கை ஆழ்வாரும், கடைச்சங்ககாலத்தின் இறுதியில் இருந்த களவழி நாற்பது பாடியவரும்ஆன பொய்கையாரும் ஒருவரே என்றும், ஆகவே பொய்கையாழ்வார் கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்தவர் என்றும் சிலர் கருதுகீறார்கள். பொய்கை என்னும் பெயர் ஒற்றுமை ஒன்றைமட்டும் சான்றாகக்கொண்டு இவ்வாறு கூறுகின்றனர். இது பொருந்தாது.
சங்ககாலத்தின் கடைசியில் இருந்த பொய்கையார், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர அரசனுடைய அவைப்புலவர். இவரே கோக்கோதை மார்பன் என்னும் சேர அரசனையும் பாடியிருக்கிறார். (புறம். 48, 49). சோழன் செங்கணான், கணைக்கால் இரும்பொறையைப் போரில்வென்று பிடித்துச் சிறைவைத்தபோது, அவனைச் சிறை மீட்பதற்காகப் பொய்கையார் களவழி நாற்பது பாடினார். அரசரைப்பாடி அரசரிடம் ஊழியம்செய்து வாழ்ந்தவர் பொய்கையார் என்னும் புலவர்.
பொய்கையாழ்வாரோ, மானிடரைப் பாடாதவர். திருமாலைத்தவிர வேறு ஒருவரையும் மறந்தும் பாடாதவர். இதனை இவரே தெள்ளத்தெளியக் கூறுகிறார்:
“திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்”
என்றும்1.
“நாடிலும் நின்னடியே நாடுவன் நாள்தோறும்
பாடினும் நின்புகழே பாடுவன்”
என்றும்,2
“மாயவனை யல்லால் இறையேனும் ஏத்தாது என்நா.”
என்றும்,3
பொய்கையாழ்வார் கூறுவது காண்க. ஆகவே, களவழிநாற்பது பாடிய பொய்கையார் வேறு; முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாழ்வார் வேறு என்பது வெள்ளிடை மலைபோல் தெரிகிறது. ஆனால், பொருந்தாக் காரணத்தைப் பொருத்திக்கூறி இருவரும் ஒருவரே என்று சொல்பவரும் உளர்.
“....சோழன் கோச்செங்கணானைக் களவழி நாற்பது என்ற நூலாற் புகழ்ந்த பொய்கையார், மேற்கூறிய தமிழ் முனிவரான பொய்கையாழ்வாராகவே இருத்தல் கூடும் என்பது என் கருத்து” என்று மு. இராகவையங்கார் அவர்கள் கூறுகிறார்கள்.1
கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று அய்யங்கார் அவர்கள் கருதுகிற பொய்கையார் என்னும் புலவரே பொய்கையாழ்வாராக இருப்பாரானால், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இருந்த பூதத்தாழ்வாருடன் அவர் எப்படி நண்பராக இருக்க முடியும்? பூதத்தாழ்வார் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர் என்று மேலேகாட்டினோம். ஆகவே அவருடன் நண்பராக இருந்த பொய்கையாழ்வாரும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக வேண்டும். எனவே, சோழன் செங்கணானைப் பாடிய பொய்கையார் என்னும் புலவரே பொய்கையாழ்வாராக இருக்கமுடியாது.
பொய்கையார் என்னும் பெயரையுடையவர் பலர் வெவ்வேறு காலத்தில் இருந்திருக்கிறார்கள். களவழி நாற்பது பாடிய பொய்கையாரை யன்றி, பன்னிருபாட்டியல் என்னும் நூலில் காணப்படுகிற இலக்கண சூத்திரங்களை எழுதிய பொய்கையாரும், யாப்பருங்கல விருத்தியில் மேற்கோள் காட்டப்படுகிற செய்யுள்களைப் பாடிய பொய்கையாரும், இன்னிலை என்னும் நூலைப் பாடியவர் என்று கூறப்படுகிற பொய்கையாரும் இவ்வாறு பல பொய்கையார்கள் இருந்திருக்கின்றனர். பொய்கையார் என்னும் பெயர் முற்காலத்தில் மக்கள் பெயராகப் பலருக்கு வழங்கிவந்துள்ளது. ஆகவே பெயர் ஒற்றுமையை மட்டும் ஆதாரமாகக்கொண்டு சங்ககாலத்துப் பொய்கையாரையும் நரசிம்மவர்மன் காலத்துப் பொய்கையாரையும் ஒருவரே என்று கூறுவது பொருந்தாது. 7 ஆம் நூற்றாண்டில் இருந்த பூதத்தாழ்வாரின் நண்பர் என்று கூறப்படுகிறப்படியால் பொய்கையாழ்வாரும் இக்காலத்திலேதான் இருந்திருக்க வேண்டும். மற்றொரு நண்பரான பேயாழ்வாரும் இக்காலத்தில் இருந்திருக்கவேண்டும்.
III
பூதத்தாழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆ கிய முதலாழ்வார் மூவர் காலத்திலே அவர்களோடு நண்பர்களாக இருந்தவர் திருமழிசையாழ்வார். ஆனால், இவர் மற்ற மூவரிலும் ஆண்டில் இளையவர், திருமழிசையாழ்வார் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதியில்,
“காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்
ஆப்பு அங்கொழியவும் பல்லுயிர்க்கும் - ஆக்கை
கொடுத்தளித்த கோனே! குணப்பரனே! உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்”.
என்று பாடுகிறார். இதில் குணப்பரனே என்று வருவதால், குணப்பரன் என்னும் சிறப்புப் பெயருடைய மகேந்திரவர்மனை (முதலாவன்) இது குறிக்கிறது என்றும், ஆகவே, திருமழிசையாழ்வார் மகேந்திர வர்மன் காலத்தவர் என்றும் சீநிவாசஅய்யங்கார் அவர்கள் கூறுகிறார்.1 மு. இராகவையங்கார் அவர்களும் இதனை ஒருவாறு ஏற்றுக் கொள்கிறார். “ஆழ்வாரும் (திருமழிசையாழ்வாரும்) குணபரப் பெயரை வழங்கினர் என்பது ஏற்றுக் கொள்ளப்படின், அப் பெயர்கொண்ட மகேந்திரவர்மனது ஆட்சிக் காலத்தைத்(618 - 646) திருமழிசை யாழ்வாரது வாழ்நாளின் பிற்பகுதியாகக் கொள்ளலாம்” என்று அவர் எழுதுகிறார்.2 மேலும், “இவற்றால், சமயவாதஞ் செறிந்து நிகழ்ந்த மகேந்திரவர்மனது ஆட்சிக்காலமே திருமழிசைப் பிரானுக்கும் உரியதென்று கொள்வதுபெரிதும் பொருந்தும் என்னலாம் இதற்கேற்ப, குணபரன் என்ற பல்லவன் பெயரையே, பொருடபேறு சிறத்தல்பற்றி அவ்வாழ்வார் திருமாலுக்கு வழங்கலாயினர் என்று மேற்கூறிய கருத்தும் ஏற்புடைத்தாயின், அப்பல்லவன் ஆட்சிபுரிந்த 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கமே, திருமழிசையாரது வாழ்நாளின் பிற்பகுதியென்று துணியத் தடையில்லை”3 என்று கூறுகிறார். ஆழ்வார், குணப்பரனே என்று கூறியது குணபரன் என்னும் மகேந்திரவர் மனைத்தான் குறிக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், இவர்கள், இவ் வாழ்வாருக்கு முடிவு கட்டுகிற காலம் எமது ஆராய்ச்சிக்கு ஏறக்குறைய இணைந்து வருகிறது. இவர்கள், திருமழிசையாழ்வார் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்கின்றனர். எமது ஆராய்ச்சியில், இவ்வாழ்வார் அதே நூற்றாண்டில் ஆனால், மகேந்திரவர்மன் மகனான மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர் என்பது தெரிகிறது. இதனை ஆராய்வோம்.
திருமழிசை ஆழ்வாரையும் அவர் சீடரான கணிகண்ணரையும் காஞ்சிபுரத்திலிருந்து ஒரு பல்லவ அரசன் “நாடு கடத்தினான்” என்று வரலாறு கூறுகிறது. இவர்களை “நாடு கடத்திய” பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் ஆக இருக்கக்கூடும் என்றும், இவ் வரசர்கள் மிகுந்த சைவப் பற்றுள்ளவர்கள் என்றும் ஸ்ரீநிவாச அய்யங்கார் கருதுகிறார்.1
இவர்களை மகேந்திரவர்மன் நாடு கடத்தியிலிருக்க முடியாது. அவன் மகனான முதலாம் நரசிம்மவர்மன்தான் நாடு கடத்தியிருக்கக்கூடும் ஏனென்றால், மாமல்லபுரத்திற்கு அப்பெயரைச் சூட்டியவன் நரசிம்மவர்மனே. மாமல்ல புரமாகிய மாமல்லனையைப் பூதத்தாழ்வார் தமது செய்யுளில் பாடியிருப்பதை மேலே காட்டினோம். ஆகவே, மாமல்லனான நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த பூதத்தாழ்வாரின் நண்பரும் சமகாலத்தவருமான திருமழிசையாழ்வாரை அந்த நரசிம்மவர்மன் நாடு கடத்தியிருக்கக்கூடும் என்பது பொருத்தமானது. இதனாலும், இந்த ஆழ்வார்கள் நால்வரும் நரசிம்மவர்மன் காலத்தில் கி.பி.7 ஆம்நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்பது மேலும் உறுதியாகிறது.
திருமழிசையாழ்வாரைக் காஞ்சியிலிருந்து பல்லவ அரசன் நாடு கடத்தியதற்குக் காரணம் ஒன்று கூறப்படுகிறது. ஆழ்வாரின் சீடராகிய கணிகண்ணரை அரசன் தன்னைப் பாடும்படி கேட்டான் என்றும், அதற்கு அவர் மறுக்கவே அவன் அவரை நகரத்தைவிட்டுப் போகும்படி கட்டளையிட்டான் என்றும், அதனால் கணிகண்ணருடன் திருமழிசையாழ்வாரும்அவருடன் கோயிலிலிருந்த பெருமாளும் நகரத்தை விட்டுப் போய்விட்டார்கள் என்றும், பிறகு நகரத்தை விட்டுப் போய்விட்டார்கள் என்றும், பிறகு அரசன் அவர்களைத் திரும்பி வரும்படி கேட்டுக் கொண்டான் என்றும் கூறப்படுகிறது. இந்தக் காரணம் சரியென்று தோன்றவில்லை. வேறு காரணம் இருக்க வேண்டும். அக்காரணம் யாது ?
கணிகண்ணருடன் திருமழிசை யாழ்வார் காஞ்சீபுரத்தில் இருந்த போது இவர்களால் அந்நகரத்தில் சமயப்பூசல் நேரிட்டிருக்கலாம். அஃதாவது சைவ வைணவர் கலகம் ஏற்பட்டிருக்கலாம். சைவனாகிய நரசிம்மவர்மன் கலகத்தை யடக்க இவர்களைக் காஞ்சியிலிருந்து “நாடு கடத்தி” யிருக்கலாம். திருமழிசை யாழ்வார் பாடல்களில் இதற்கு சான்றுகள் உள்ளன. இவர் பௌத்த சமண சமயங்களைக் கடுமையாகத் தாக்கிப் பாடுகிறார். அதனுடன் சைவர்களையும் கடுமையாகத் தாக்குகிறார். இதனால் சைவர்கள் சினங்கொண்டு எதிர்வாதம் செய்திருக்கக் கூடும். இதனால் சமயப் பூசலும் குழப்பமும் ஏற்பட்டிருக்கும். நகரத்தில் இருக்கும் அரசன், இக்குழப்பத்துக்குக் காரணராயிருந்த திருமழிஐசயாழ்வாரையும் கணிகண்ணரையும் தற்காலிகமாக நாடு கடத்தியிருக்கக் கூடும். கலகம் அடங்கியவுடன் அரசன் நகரத்திற்கு வர அனுமதியளித்திருக்கக் கூடும்.
திருமழிசையாழ்வாராது பாடல்களில் சைவர்களைத் தாக்கும் செய்யுள்கள் சிலவற்றைக் காட்டுவோம்.
“அறியயார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பில் - வெறியாய
மாயவனை மாலவனைமாதவனை யேத்தாதார் ஈனவரே யாதலால் இன்று”1
“ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலையுகத் துஐரத்தான் மெய்த்தவத்தோன் - ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு”2
“குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி - கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை யாங்கு.”1
“முண்டன்நீறன் மக்கள் வெப்புமோடி அங்கி ஓடிடக்
கண்டுநாணி வாணனுக்கு இரங்கினான் எம்மாயனே”2
விரிவஞ்சி நிறுத்துகிறோம்
சிவவாக்கியர் என்னும் பெயருடன் பழுத்த சைவ அடியாராக இருந்து சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தவ இவர். பேயாழ்வாரால் வைணவ பக்தராக்கப்பட்ட பிறகு, இவ்வாறெல்லாம் சிவனையும் சைவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பாடியது சைவருக்கு ஆத்திரம் மூட்டியிருக்கலாம். இதனால் நகரத்தில் சைவ வைணவ கலகங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். கலகத்தை யடக்குவதற்காக, அதற்கு முதுற் காரணராயிருந்த ஆழ்வாரை நாடு கடத்தியிருக்கலாம். இவ்வாறு இவரை நாடு கடத்திய பல்லவ அரசன் மாமல்லனான நரசிம்மவர்மனாகத்தான் இருக்க முடியும். இதனாலும, திருமழிசையாழ்வாரும் மற்ற மூன்று ஆழ்வார்களும் நரசிம்மவர்மன் காலத்தவர் என்பது தெரிகிறது.
IV
இதுகாறும் ஆராய்ந்தவற்றால் பொய்கை பூதம் பேய் திருமழிசை என்னும் ஆழ்வார்கள் நால்வரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டிலே மாமல்லனான நரசிம்மவர்மன் காலத்திலே இருந்தவர்கள் என்பது தெரிகிறது.
திரு. மு. இராகவையங்கார் அவர்கள் இவ்வாழ்வார்கள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் 7ஆம் நூற்றாண்டுவரையில் இருந்தவர்கள் என்று கூறுகிறார்கள்:
“இதுவரை கூறியவற்றால் முதலாழ்வார் மூவரும் திருமழிசையாழ்வாரும் 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை வாழ்ந்த பேரடியார்கள் என்பது... ஒருபடியாகத் தெரியலாம்.3 என்றும்
“முதல் நந்திவர்மன் (கி.பி. 534) சிம்ம விஷ்ணு(கி.பி. 590) போன்ற பரம பாகவதரான அரசர்களதாட்சியில் பூதத்தாழ்வார் போன்றவர்களும், மகேந்திரவர்மனை குணபரனதாட்சியில் திருமழிசையாழ்வாரும் விளங்கியவர்கள் என்ற என் கருத்து எவ்வகையினும் பொருந்துவதாதல் அறிந்து கொள்ளத்தக்கன”1 என்றும் கூறுகிறார்.
இவர் கூறும் காலம் ஏற்கத்தக்கதல்ல. பூதத்தாழ்வார் தமது பாடலில் மாமல்லையைப் பாடியிருப்பதால், அவர் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தவர் என்பதையும் அவருடன் நண்பர்களாக இருந்த மற்ற பேயாழ்வார் பொய்கை யாழ்வார் திருமழிசை யாழ்வார்களும் இவ்வரசன் காலத்தில் இருநதவர்கள் என்பதையும் மேலே விளக்கினோம்.இராகவையங்கார் அவர்கள் தமதுஆராய்ச்சி முடிவை உறுதியாகக் கூறாமல் வழவழவென்று நெகிழ்த்திக் கொண்டே போகிறார். முதலில் இவர் பொய்கையாழ்வாரைக் களவழி நாற்பது நூலின் தலைவனாகிய செங்கட் சோழன் காலத்தவர் என்று கூறினார். செங்கட் சோழன காலம் உத்தேசம் கி.பி. 350 இல் ஆகும். அவன் மகள் காலத்தில் களபரர் என்னும் கலியரசர்வந்து சேரசோழ பாண்டிய நாடுகளைப் பிடித்து அரசாண்டனர். அவ்வாறு அரசாண்ட களபர அரசர்களில் அச்சுதவிக்கந்தன் என்பவன் கி.பி. 450 இல் சோழநாட்டை யரசாண்டான். ஆகவே சோழன் செங்கணான் கி.பி. 350 இல் இருந்தவனாதல் வேண்டும். அக்காலத்திலேயே, அய்யங்கார் கருத்துப்படி பொய்கையாழ்வாரும் மற்ற ஆழ்வார்களும் இருந்தவராதல் வேண்டும். ஆனால், மேலேகாட்டியபடி முதல் நந்திவர்மன் (கி.பி. 534) சிம்மவிஷ்ணு (கி.பி.590) போன்ற பல்லவ அரசர் ஆட்சியில் பூதத்தாழ்வார் முதலியவர்கள் இருந்தார்கள் என்கிறார். இவ்வாறு உறுதியில்லாமலும் உறுதியான சான்றுகள் இல்லாமலும கூறுகிற இவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் காலத்தை நீட்டுகிறார். ஏறக்குறைய 250 ஆண்டுகளை இவ்வாழ்வார்களின் ஆயுள் காலமாகக் காட்டுகிறார்.
ஆழ்வார்கள் யோகிகளாய்ப் பல நூற்றாண்டுகள் வாழ்ந்திருந்தார்கள் என்பதைச் சமய நம்பிக்கையும் பக்தியும் உள்ளவர்கள் நம்பட்டும் ஆனால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இவ்வளவு நீண்ட காலத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒப்புக்கொள்வதும் தவறு, இவ்வாழ்வார்கள் நால்வரும் பொதுவாக நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர்கள் என்றுகொண்டு, உத்தேசம் கி.பி. 600 முதல் 700 வரையில் இருந்தவர்கள் என்று கருதலாம். மாமல்லன் நரசிம்மவர்மன் ஆட்சியும் இக்காலத்தில் அடங்குகிறது. சைவ அடியார்களான திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் காலமும இதில் அடங்குகிறது. பக்தி யியக்கம் சிறந்திருந்த காலமும் இதுவே.
திவான்பகதூர் சுவாமிக்கண்ணுப் பிள்ளையவர்கள், வான நூல் முறைப்படி கணித்து ஆழ்வார்கள் காலத்தை முடிவு கூறுகிறார். பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார் மூவரும் கி.பி. 719 இல் பிறந்தவர்கள் என்றும் திருமழிசை யாழ்வார் கி.பி. 720 இல் (ஜனவரி மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை) பிறந்தவர் என்றும் கூறுகிறார்.[1] இது ஒரு நூற்றாண்டு பின் தள்ளிப் போகிறது. அன்றியும் ஏனைய சரித்திர ஆதாரங்களுக்கு ஒத்திருககவில்லை. ஆகவே இந்த முடிவையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொய்கை, பூதம், பேய், திருமழிசை ஆழ்வார்கள் மாமல்லன் நரசிம்மவர்மன் (கி.பி. 630 - 668) காலத்தில் இருந்தவர்கள் என்பதும், இதே காலத்தில் சைவ அடியார்களாகிய நாவுக்கரசரும் ஞானசம்பந்தர் முதலியவர்களும் இருந்தார்கள் என்பதும் எமது ஆராய்ச்சியின் முடிவு ஆகும்.
அடிக்குறிப்புகள்
1. நாலாயிரம், இரண்டாம் திருவந்தாதி 70.
2. Pallava Antiquities Vol. I, G. Jouvean Dubreuil.
3. Mamalla puram at the Sangam age by Pandit M. Raghava Aiyangar, Journal of Oriental Research, Madras. P. 152 -155. Vol. II, 1928.
4. P. 16. History of Sri Vaishnavas by T.A. Gopinatha Rao. 1923
5. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம். 32-33.
6. பக்கம். 62.
7. முதல் திருவந்தாதி: 64
8. முதல் திருவந்தாதி : 88.
9. முதல் திருவந்தாதி: 94.
10. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம் : 28.
11. P. 305 Tamil studies by M. Srinivasa Aiyengar, 1914.
12. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம் : 37.
13. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம் : 41.
14. P. 306. Tamil Studies by M.Srinivasa Aiyengar, 1914.
15. நான்முகன் திருவந்தாதி : 6.
16. மேற்படி : 17.
17. மேற்படி : 9
18. திருச்சந்த விருத்தம் : எ. 72.
19. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம் : 48.
20. மேற்படி பக்கம்.
- ↑ The Date of Alvars Dewan Bahadur L.D. Swamikannu Pillai, pp. 231 - 261. Journal of the south Indian Association, VOL. IV.