உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/032-052

விக்கிமூலம் இலிருந்து


மூன்றாம் நந்திவர்மன்

குறிப்பு: மூன்றாம் நந்திவர்மன் (1958) என்னும் தலைப்பில் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூலிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

1. மூன்றாம் நந்திவர்மன்

நந்திவர்மன் வரலாறு

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் பல்லவ இராச்சியத்தை ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டு அரசாண்டான். இவன் அரசாண்ட காலம் கி. பி. 847 முதல் 872 வரையில் என்பர். தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் புகழ்வாய்ந்த இந்த அரசன், பல்லவ அரசர் பரம்பரையில், நந்தி என்னும் பெயர்பெற்ற அரசர்களில் மூன்றாவன். ஆகவே இவனை மூன்றாம் நந்திவர்மன் என்று கூறுவர்.

பெற்றோர்

இவனுடைய தந்தையின் பெயர் தந்திவர்மன் என்பது. நந்திவர்மன் மனைவி, கடம்ப அரசர் குலத்தில் பிறந்தவளான அக்களநிம்மதி என்பவள். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவன் நந்திவர்மன் மூன்றாவன். இவன் அரசாட்சிக்கு வந்தவுடன் பல பேர்களைச் செய்து வெற்றி பெற்றான். இச்செய்திகளை வேலூர்ப்பாளையத்துச் செப்பேட்டுச்சாசனம் இவ்வாறு கூறுகிறது.

"வீரர்களுக்குத் தலைவனாய் உலகத்தை ஆளும் ஆற்றல் படைத்த இந்தப் பல்லவ மாகராசனுக்கு (தந்திவர்மனுக்கு), முப்புரங்களை வென்ற வீரனுக்குக் (சிவபொருமானுக்கு) கௌரி மனைவியாக வாய்த்ததுபோல, கடம்பகுல சூளாமணியான புகழ்வாய்ந்த அரசனுடைய மகளான அக்களநிம்மதி என்பவள் மனைவியாக வாய்ந்தாள்.”

"ஒளியை (சூரியனை) வைகறைப்பொழுது தந்தது போலவும், வியக்கத்தக்க வேலையுடைய குமரக் கடவுளை அம்பிகை தந்தது போலவும், வெற்றிமிக்க சயந்தனைச் சசி தந்ததுபோலவும், புகழ்வாய்ந்த நந்திவர்மனை இவள் (அக்களநிம்மதி) தந்தாள்.”

“இவன் (நந்திவர்மன்), தன் தோள்வலியினாலும் ஆற்றலினாலும், தன் வாளினால் கொன்ற யானைகளின் மருப்புக்களிலிருந்து வெளிப்பட்ட முத்துக்கள் நகைப்பது போலக் காணப்பட்ட போர்க்களத்திலே, தன்பகைவர்களைக் கொன்று, மற்றவர்களால் கைப்பற்ற முடியாத அரசாட்சியைக் கைப்பற்றினான்.”1

தந்திவர்மன் அரசாண்ட காலத்தில், வரகுண பாண்டியன், பல்லவ இராச்சியத்தின் தென் பகுதியாகிய சோழ நாட்டின்மேல் படையெடுத்து வந்து, சோழநாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். ஆகவே, பல்லவ இராச்சியத்துக்குட்பட்டிருந்த சோழ நாடு பாண்டியன் வசமாயிற்று. தந்திவர்மன் காலஞ்சென்ற பிறகு, அவன் மகனான நந்திவர்மன் அரசனானான்.

பல்லவ அரசர் பரம்பரை
நந்திவர்மன் I


சிம்ம விஷ்ணு பீம வர்மன்

மகேந்திர வர்மன் I  புத்த வர்மன்

நரசிம்ம வர்மன் I  ஆதித்ய வர்மன்
    (மாமல்லன்) 
┌┴───────────────┬கோவிந்த வர்மன்
மகேந்திரவர்மன் II பரமேசுவரவர்மன் I
இரணிய வர்மன்
நரசிம்ம வர்மன் II 
(இராஜசிம்மன்)நந்திவர்மன் II
┌──────────────┴(பல்லவ மல்லன்)
மகேந்திர வர்மன் III பரமேசுவர வர்மன் II 
தந்தி வர்மன்

நந்தி வர்மன் III
(தெள்ளாறெறிந்தவன்)

பகைவரும் நண்பரும் மூன்றாம் நந்திவர்மன் அரசாட்சியை ஏற்றுக்கொண்டவுடன் பல பகையரசருடன் போர் செய்ய நேரிட்டது. மேலே கூறியபடி, பல்லவ இராச்சியத்துக்குட்பட்டிருந்த சோழநாட்டை வரகுண பாண்டியன் சிறிது சிறிதாகக் கைப்பற்றிக் கொண்டு, தொண்டை நாட்டையும் கைப்பற்றிக்கொள்ள முயற்சி செய்தான். பாண்டியனுக்கு உதவியாக அவன் மகன் ஸ்ரீ மாறனும், சேர அரசனும், நந்தியின் தாயாதி முறையினரான தம்பிமார்களும் இருந்தார்கள். அதே காலத்தில், வடக்கிலிருந்து இராஷ்டிரகூட அரசனான அமோகவர்ஷன் என்பவனும் பல்லவ நாட்டின்மேல் படையெடுத்து வந்தான். அவனை முதலாம் அமோகவர்ஷன் என்றும் கூறுவர். அவனுக்கு சர்வன் என்னும் பெயரும் உண்டு.

நந்திவர்மன், அமோகவர்ஷனைக் குறுகோடு என்னும் இடத்தில் எதிர்த்துப் போர் செய்தான். அப்போரிலே நந்திவர்மன் வெற்றிபெற்றான். தோல்வியடைந்த அமோவர்ஷன், நந்திவர்மனுடன் நட்புக்கொண்டான். இந்த நட்பு இருவருக்கும் நன்மையாக முடிந்தது. நந்தியின் நட்பு அமோகவர்ஷனுக்கும், அவனுடைய நட்பு நந்திவர்மனுக்கும் தேவையாக இருந்தன. ஏனென்றால், அமோகவர்ஷனைக் கீழைச்சாளுக்கிய அரசனும் மேலைக்கங்க அரசனும் எதிர்த்துப் போரிட்டார்கள். நந்திவர்மனைப் பாண்டியனும் அவனுடன் சேர்ந்தவர்களும் எதிர்த்துப் போரிட்டார்கள். இவ்வாறு பல்லவனும் இராஷ்டிரகூட அரசனும் நட்புக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நட்பு உறவை உறுதிப்படுத்த அமோகவர்ஷன் தன் மகளான சங்கை என்பவனை நந்திவர்மனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். மேலும், தன் மகன் தேவன் என்பவனை நந்திவர்மனுக்குத் துணையாகப் பாண்டியனை எதிர்க்க அனுப்பினான்.

குறுகோட்டை

குறுகோடு என்னும் குறுகோட்டையை நந்திவர்மன் வென்றதை, நந்திக் கலம்பகம் என்னும் நூல் கூறுகிறது. தன் யானைப் படையினால் நந்திவர்மன் குறுகோட்டைப் போரை வென்றான்.

“இனவேழம், கோமறுகிற் சீறிக்
குறுகோட்டை வென்றாடும்”

“குன்றஞ்செய் தோள்நந்தி நாட்டங்குறி
குறுக்கோட்டையின்மேல்
சென்றஞ்சப் பட்டதெல்லாம்படும்
மாற்றலர் திண்பதியே”

“குறுகோட்டை குறுகாமன்னர் போர்க்கின்ற
புகர்முகத்துக் குளித்தவாளி”
“கேளார், குஞ்சரங்கள் சாயக் குருகோட்டையைத்தனையும்
மஞ்சரங்கள் ஆர்த்தான்”2

என்று நந்திக் கலம்பகம் கூறுகிறது.

குறுகோடு என்னும் பெயருள்ள ஊர்கள் சில இப்போதும் உள்ளன. அவற்றில் ஒன்று ஆந்திரநாட்டில் பல்லாரி மாவட்டத்தில் பல்லாரி தாலுகாவில் இருக்கிறது. இது, இப்போது குறுகோடே என்று பெயர் கூறுப்படுகிறது. இங்குச் சாளுக்கியர் மரபுப்படி அமைக்கப்பட்ட கோயில்களும், குன்றின் மேலே ஒரு கோட்டையும் உள்ளனவாம்.

மற்றொரு குறுகோடு, மைசூரைச் சேர்ந்த கோலார் மாவட்டத்தில் இருக்கிறது. இதற்கு இப்போது தொட்ட குறுகோடே என்று பெயர் வழங்கப்படுகிறது. (தொட்ட என்றால் பெரிய என்பது பொருள்). இது கங்க அரசர்களின் தலைநகரமாக இருந்ததென்று கருதப்படுகிறது. இந்த இரண்டு குறுகோடுகளில் நந்தி வென்றது எது என்பது தெரியவில்லை. சாளுக்கியருக்குரியதாயிருந்த பல்லாரி மாவட்டத்துக் குறுகோட்டையை வென்றதாகக் கருதலாம்.

தெள்ளாற்றுப் போர்

மேலே கூறியபடி, பல்லவ அரசரின் சோழநாட்டை வரகுணபாண்டியன் கைப்பற்றிக் கொண்டு தொண்டை மண்டலத்துக்கு வந்து பெண்ணாற்றங்கரையின் மேலுள்ள அரைசூரில் பாசறை அமைத்தான்3 நந்திவர்மன், பாண்டியனைத் தெள்ளாறு4 என்னும் ஊரில் எதிர்த்துப் போர் செய்தான். இப்போரில் நந்தி, பாண்டியனையும் அவனுக்குத் துணையாய் வந்த மற்ற அரசர்களையும் முறியடித்து வெற்றி கொண்டான். அன்றியும், தோற்றுப் பின்னடைந்த பாண்டியனைத் துரத்திச்சென்று சோழ நாட்டுப் பழையாறு, நள்ளாறு5 என்னும் ஊர்களிலும் அவர்களுடன் போர் செய்து வென்றதோடு, பாண்டி நாட்டில் வைகைக்கரை வரையில் துரத்திச் சென்றான்6 இந்தப் போர்களில் நந்திவர்மனுக்கு உதவியாக இருந்தவன், அவன் மாமனாகிய இராஷ்டிரகூட அரசன். இராஷ்டிரகூட அரசன் மகன் தேவன் என்பவன் (நந்தியின் மைத்துனன்), பழையாறையில் போர் வென்ற செய்தியை இராஷ்டிரகூட அரசன் சாசனம் ஒன்று கூறுகிறது.7

நந்திவர்மன் செய்த போர்களிலே தெள்ளாற்றுப் போர் மிக முக்கியமானது. ஆகையினால், அப்போரை வென்ற இவனுக்குத் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்னும் பெயர் வழங்குவதாயிற்று. தெள்ளாற்றுப் போர், நந்திவர்மன் ஆட்சியின் 10-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், 10-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அவனுடைய தில்லஸ்தானக் கல்வெட்டுச் சாசனம், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்று கூறுகிறது.8 இதற்கு முந்தியுள்ள சாசனங்கள் இப்போரைக் குறிக்கவில்லை.

பாண்டியன் உறவு

தோல்வியடைந்த பாண்டியன், நந்திவர்மனிடம் நட்புக்கொண்டான். அதன் காரணமாகப் பாண்டியன் மகளை நந்திவர்மன் மணஞ்செய்து கொண்டான் எனத் தெரிகிறது. அதாவது, பாண்டியன் மகள் மாறன் பாவை என்பவளை மணஞ் செய்துகொண்டான். மாறன் பாவை, ஸ்ரீமாறன் என்னும் பாண்டியனின் மகள்போலும் வரகுணனுடைய பேர்த்தி. இராஷ்டிரகூட அரசன் மகள் சங்கை என்பவளை நந்திவர்மன் மணம் செய்திருந்ததை முன்னமே கூறினேன். அந்தச் சங்கை என்னும் மனைவிக்குப் பிறந்தவன் நிருபதுங்க வர்மன் என்பவன்.

போர்க்களங்கள்

நந்திவர்மன் தெள்ளாற்றுப் போர் வென்றதை அவனுடைய கலம்பகம் பலமுறை கூறுகிறது.

"குரைகழல் விறல்நந்தி, அமரிற்றெள்ளாற் றஞ்சிய நெஞ்சத்
தரசர்கள் திரள்போகும்"

"கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
கோமுற்றப் படைநந்தி குவலய மார்த்தாண்டன்”

“தன்மீது, தெள்ளாற்று நள்ளார் முனையு மன்றேக
முனிந்த பிரான்”

"தெள்ளாற்றுக்கண் சிவந்தான்”

"தெவ்வர் தேயத், தெள்ளாற்றில் செருவென்ற
செங்கோல் நந்தி”

"தெள்ளாற்றில் வென்ற கோன்”

"இகல்வேல் மன்னர், சினக்கரியும் பாய்மாவும்
தெள்ளாற்றுச் சிந்துவித்த செங்கோல்நந்தி”

“மூண்டார் தெள்ளாற்றுள்ளே மூழ்க முனிவாறி
மீண்டான் நந்தி”9

வெள்ளாறு என்னும் இடத்தில் நந்திவர்மன் போர் வென்றதை நந்திக் கலம்பகம் இவ்வாறு கூறுகிறது:

“விரவாத மன்னரெல்லாம் விண்ணேற
வெள்ளாற்று வெகுண்ட கோன்”

“அரசர் கோமான் அடுபோர் நந்தி
மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த
செருவேல் உயர்வு”

"தோள் துணையாக மாவெள் ளாற்று
மேவலர்க் கடந்த அண்ணல் நந்தி”10

மேலும், நந்திவர்மன் வெறியலூர்ச், பழையாறை என்னும் ஊர்களில் போர் வென்றதை, "வெறியலூர்ச் செருவென்றேன்" என்றும், “படையாறு சாகப் பழையாறு வென்றான்" என்றும் நந்திக் கலம்பகம் கூறுகிறது"11 பாண்டியனுடைய தொண்டி நகரத்தைக் கைப்பற்றியதையும் கலம்பகம் கூறுகிறது.

"தம்பியர் எண்ணமெல்லாம் பழுதாக
வென்ற தலைமான் வீரதுவசன்
செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து
மாய செருவென்ற பாரி”

என்று இவன் வென்ற அரசரைக் கூறுகிறது.12

இராச்சியத்தின் பரப்பு

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் பகைவரை வென்று தொண்டை நாட்டையும் சோழநாட்டையும் அரசாண்டான். இவனுடைய இராச்சியம், வடக்கே வேங்கடம் முதல் தெற்கே புதுக்கோட்டை வரையில் பரவியிருந்தது. வடவேங்கட நாடுடை மன்னர்பிரான் என்றும், வாழ்கின்றதோர் புகழ்நந்திதன் வேங்கடமலை என்றும், தொண்டையர் கோன் நந்திபல்லவன் என்றும், தொண்டை நாடுடைய கோவே என்றும், காவிரி வளநாடன் என்றும், தொண்டையர் வேந்தன் கோனாடன் என்றும் நந்திக் கலம்பகம் கூறுவதிலிருந்தும் இவனுடைய சாசனங்களைக் கொண்டும் இதனை அறியலாம்.

நந்திவர்மனைக் “குமரிக் கொண்கன் கங்கை மணாளன்” என்று கலம்பகம் கூறுவது மிகைபடக் கூறல் என்று தோன்றுகிறது. இவ்வரசன் கடற்படையைக் கொண்டிருந்தபடியினாலே, குமரித்துறையையும் கங்கையாற்றையும் உடையவன் என்று கூறியதாகக் கொள்ளலாம். ஆனால், இவன் கங்கையாற்றையும் குமரித்துறையையும் வென்று கொண்டதாகச் சான்று இல்லை.

சிற்றரசர்கள்

நந்திவர்மன் காலத்தில் சோழநாடு பல்லவ அரசுக்குட் பட்டிருந்தது. ஆதிகாலத்தில் சுதந்தரராக இருந்த சோழ அரசரைக் களபரர் என்பவர் கி. பி. 4-ஆம் நூற்றாண்டிலே வென்று சோழநாட்டை அரசாண்டனர். பின்னர், சிம்ம விஷ்ணு என்னும் பல்லவன் கி. பி. 6- ஆம் நூற்றாண்டில் களபரரை வென்று சோழநாட்டைத் தொண்டை நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். ஆகவே, சோழ அரசர்கள் முதலில் களபரருக்கும் பின்னர் பல்லவ அரசருக்கும் கீழடங்கி இருந்தார்கள். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலும் சோழர்கள் அவனுக்குக் கீழடங்கியே யிருந்தார்கள். சோழ அரச குடும்பத்தார், உறையூர், பழையாறை, குடந்தை, திருவாரூர் முதலிய ஊர்களில் சிற்றரசர்களாக இருந்தார்கள்.

பல்லவ இராச்சியத்தின் சில பகுதிகளை நந்திவர்மனுக்குக் கீழடங்கிச் சில சிற்றரசர்கள் அரசாண்டார்கள். சிற்றரசரைச் சாமந்த அரசர் என்றும் கூறுவர். நந்திவர்மனுக்குக் கீழடங்கிய சிற்றரசர் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. ஆனால், குமாராங்குசன், சாத்தன் பழியிலி, விக்கிரமாதித்தியன், நரசிங்க முனையரையர் என்னும் நால்வர் பெயர் தெரிகின்றன.

குமாராங்குசன் என்னும் சிற்றரசன் சோழர்குலத்தைச் சேர்ந்தவன். சோழ நாட்டின் தென் பகுதியை அரசாண்டான். இவனுடைய தலைநகரம் தஞ்சாவூர்.

விக்கிரமாதித்தியன் என்பவன் வாண (பாண) அரசர் பரம்பரையைச் சேர்ந்தவன். “பாண வாணாதிராயனான விக்கிரமாதித்தியன்” என்று இவனை இவனுடைய சரசனம் கூறுகிறது. தொண்டமண்டலத்தின் வடபகுதியிலுள்ள குடிமல்லம், திருவல்லம் முதலிய பகுதிகளை இவன் அரசாண்டான். இவன், நந்திவர்மனுடைய 17-ஆம் ஆண்டில், மூன்று கிராமங்களை ஒன்றாக இணைத்து அதற்கு விடேல் விடுகு விக்கிரமாதித்திய சதுர்வேதிமங்கலம் என்று பெயர் இட்டான்.13 விடேல் விடுகு என்பது நந்திவர்மனுடைய சிறப்புப் பெயர். நந்தியின் சிறப்புப் பெயரையும் தன்னுடைய இயற்பெயரையும் ஒன்று சேர்த்து இவ்வூருக்கு இவ்வாறு பெயரிட்டான்.

இவனுடைய இன்னொரு சாசனம், சித்தூர் மாவட்டத்து சந்திரகிரி தாலூகா அவிலால கிராமத்து கபிலேசுவரர் கோவிலில் இருக்கிறது. இது, விஜயநந்தி விக்கிரமவர்மனின் 21-வது ஆண்டில் எழுதப்பட்டது. இந்தச் சாசனத்தில் இச்சிற்றரசன் விக்கிரமாதித்திய மகாபலி வாணராயர் என்று கூறப்படுகிறான்.14

நரசிங்க முனையரையர் திருமுனைப்பாடி நாட்டை அரசாண்ட சிற்றரசர். திருநாவலூர் என்பது இவருடைய தலைநகரம். நரசிங்க முனையரையர் சைவ அடியார்களில் ஒருவர்.

"தேடாத பெருவளத்தில் சிறந்ததிரு முனைப்பாடி
நாடாளுங் காவலனார் நரசிங்க முனையரையர்"

என்று இவரைப் பெரியபுராணம் கூறுகிறது.15 இவர், தெம்முனைகள் பல கடந்து (பல போர்களில் பகைவரை வென்று) அரசாண்டார் என்று பெரிய புராணம் கூறுகிறபடியினாலே, இவர் தமது மன்னராகிய நந்திவர்மன் செய்த போர்களிலே பங்கு கொண்டார் என்று கருதலாம். இந்த நரசிங்க முனையரையர், நம்பி ஆரூராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வளர்ப்புத் தந்தை என்று பெரியபுராணம் கூறுகிறது.16

தென் ஆர்க்காடு மாவட்டத்து திருக்கேயிலூர் தாலுகா மணலூர் பேட்டைச் சாசனம் ஒன்று, நந்திவர்மனுடைய சாமந்த அரசர்களில் வயிரமேகன் என்பவனைக் கூறுகிறது.17 இவன், திருக்கோயிலூர் வட்டாரத்தை அரசாண்ட சிற்றரசனாகக் காணப்படுகிறான். இவன் தகப்பன் பெயர் வாணகோவடிகள் சித்தவடவன் என்பது.

சேனைத் தலைவர்

நந்திவர்மனுடைய சேனைத் தலைவர்களில் கோட்புலி என்பவரும் ஒருவர். இவரைக் கோட்புலிநாயனார் என்று பெரியபுராணம் கூறுகிறது. கோட்புலியார், நந்தியின் சேனைத் தலைவர் என்பதற்கு நேரான சான்றுகள் இல்லை என்றாலும், நன்திவர்மன் காலத்தில் அவனுடைய நாட்டில் வாழ்ந்திருந்த இச் சேனைத் தலைவர், நந்திவர்மனுடைய சேனைத் தலைவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

“செங்கோல் அரசன் அருளுரிமைச்
சேனாபதியாம் கோட்புலியன்”18

என்றும்,

“நலம்பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடிவேளாண்
குலம்பெருக வந்துதித்தார் கோட்புலியன் எனும்பெயரார்
தலம்பெருகும் புகழ்வளவர் தந்திரியராய் வேற்றுப் பார்”19

புலம்பெருகத் துயர்விளைப்பப் போர்விளைத்துப் புகழ்விளைப் என்றும்,

“வேந்தன் ஏவலின் பகைஞர் வெம்போரில் செல்கின்றார்”20

என்றும்,

“மன்னவன்தன் தெம்முனையில்
வினைவாய்த்து மற்றவன்பால்
நன்நிதியின் குவைபெற்ற
நாட்டியத்தான் குடித்தலைவர்”21

என்றும் பெரியபுராணம் கூறுகிறது.

“கூடாமன்னரைக் கூட்டத்துவென்ற
கொடிறன் கோட்புலி"

என்று, இவருடைய நண்பராகிய சுந்தரமூர்த்தி நாயனார் இவரைத் திருநாட்டியத்தான்குடி பதிகத்தில் கூறுகிறார்.

சோழநாட்டு நாட்டியத்தான்குடி என்னும் ஊரில் இருந்த கோட்புலியாரை, வளவன் (சோழன்) சேனாபதி என்று பெரிய புராணம் கூறுகிறதுபோலும். உண்மையில் பல்வ மன்னனுடைய சேனாபதியாகத் தான் இருந்திருக்க வேண்டும். என்னை? சோழ அரசர்கள் அக் காலத்தில் பல்லவருக்குக் கீழடங்கிக் குறுநில மன்னர்களாக இருந் தார்கள். அவர்கள் வேற்றரசருடன் சுதந்தரராகப் போர் செய்திருக்க முடியாது. பல்லவருக்குக் கீழடங்கிய அவர்கள் பல்லவ அரசர் சார்பாகத்தான் போர் செய்திருக்க முடியும். ஆகவே, கோட்புலியார், நந்திவர்மன் கீழ் சேனாபதியாக இருந்து போர்செய்து வென்றார் என்பதே பொருத்தமாகும்.

அதே காலத்தில், சோழநாட்டுத் திருமங்கலம் என்னும் ஊரில் இருந்த, ஏயர்கோன் கலிக்காமர் என்பவரைச் சோழருடைய சேனா பதிக்குடியில் பிறந்தவர் என்று பெரிய புராணம் கூறுகிறது. சோழ நாட்டுக் கஞ்சாறூரில் இருந்த மானக்கஞ்சாரரும், அரசரிடம் சேனாபதித் தொழில் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவருடைய மகனை மேற்சொன்ன ஏயர்கோன் கலிக்காமர் மணஞ் செய்தார். இவர்கள், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில், அதாவது நந்திவர்மன் காலத்தில் இருந்தவர்கள். ஆனால், இவர்கள் போர்க்களம் சென்று போர் செய்ததாகப் பெரிய புராணம் கூறவில்லை.

நந்திவர்மனுடைய முதல் அமைச்சராக இருந்தவன், அக்ரதந்த மரபில் வந்த நம்பன் என்பவன்.22

சிறப்புப் பெயர்கள்

தெள்ளாறெறிந்த நந்திவர்மனுக்குச் சில சிறப்புப் பெயர்கள் உண்டு. அவை: விடேல் விடுகு, அவனிநாரணன் உக்ரதகோபன், குவலய மார்த்தாண்டன், தேசபண்டாரி, மானோதயன், நயபரன், கழற்சிங்கன், பல்லவர் கோளரி முதலியன. இவ்வரசன் பேரில் இயற்றப்பட்ட நந்திக் கலம்பகம் இப்பெயர்களைக் கூறுகின்றன. பாரத வெண்பா; இவனைப் பண்டிதவத்சலன் என்று கூறுகிறது.

விடேல் விடுகு என்னும் பெயர், நந்திவர்மன் முடிசூடியபோது பெற்ற பெயர். இப்பெயர் இவனுடைய ஆணையைக் குறிக்கிறது. இப்பெயரை இவனுடைய பாட்டனான இரண்டாம் நந்திவர்மனும் கொண்டிருந்தான். பாட்டன் கொண்டிருந்த திருவாணைப் பெயராகிய விடேல்விடுகு என்னும் பெயரை இவனும் பெற்றிருந்தான் என்பதை நந்திக் கலம்பகத்தினாலும் அறியலாம்.

“வெஞ்சாயல் மறைத்த தனிக்குடையான்
விடைமண் பொறியோலை விடேல்விடுகே”

என்பது நந்திக் கலம்பகம். இதில், விடைமண் பொறியோலை என்பது, விடை (எருது) முத்திரை பொறிக்கப்பட்ட திருமுக ஓலை என்பதாம். பல்லவ அரசரின் முத்திரை எருது. ஆகவே, அவர்களுடைய திருமுகங்களிலும் செப்பேட்டுச் சாசனங்களிலும் எருது (விடை) முத்திரை பொறிக்கப்படுவது வழக்கம். விடேல் விடுகு என்பது பல்லவ அரசரின் ஆணையைக் குறிப்பது.

“வினைவார்கழல் நந்தி விடேல் விடுகின், கணைவார் முரசு” என்றும், “விண்தொடும் கிரியளவும் வீரஞ்செல்லும் விடேல் விடுகு”23 என்றும் கலம்பகம் இப்பெயரைக் கூறுகிறது. விடேல் விடுகு என்னும் சிறப்புப் பெயரையுடைய ஊர்களும் ஏற்படுத்தப்பட்டன. விடேல் விடுகு விக்கிரமாதித்திய சதுர்வேதி மங்கலம் என்பதும், விடேல் விடுகு குதிரைச்சேரி23 என்பதும் அவ்வாறு ஏற்பட்ட பெயர்களாம்.

அவனி நாராயணன் என்னும் பெயரையும் கலம்பகம் கூறுகிறது. “அலைகதிர் வேல்படை அவனி நாராயணன்” என்றும், “அதிர்குல மணிநெடுந்தேர் அவனிநாரணன்”25 என்றும் கூறுவது காண்க. வட ஆர்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த காவேரிப்பாக்கத்தின் பழைய பெயர் அவனி நாராயண சதுர்வேதிமங்கலம் என்பது. இப்பெயர் நந்திவர்மனுடைய சிறப்புப் பெயரினால் ஏற்பட்டது.25

உக்ரமகோபன், குவலய மார்த்தாண்டன், தேசபண்டாரி, மானோதயன், நயபரன், நயபானு என்னும் பெயர்களையும் நந்திக்கலம்பகம் கூறுகிறது.27

முரசு

தெள்ளாறெறிந்த நந்திவர்மனுடைய முரசு, கடுவாய்ப் பறை என்று பெயர் பெற்றிருந்தது.

“விண்ட வேந்தர் தந்நாடும்
        வீரத் திருவும் எங்கோனைக்
கண்ட வேந்தர் கொண்மின்கள்
        என்னும் கன்னிக் கடுவாயே”28

“கடுவாய் இரட்ட வளைவிம்ம மன்னர்
        கழல்சூட வங்கண் மறுகே”29

“கடுவாய் போல் வளையதிர நின்னோடு
        மருவார்மன்னர் மனந் துடிக்கும்மே”30

என்பன நந்திக் கலம்பகம். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் கடுவாய்ப்பறையைப் பெற்றிருந்தது போலவே இவனுடைய பாட்னான இரண்டாம் நந்திவர்மனும் கடுவாய்ப் பறையைப் பெற்றிருந்தான். இதனைத் திருமங்கையாழ்வார் கூறுகிறார்:

“கறையுடையவாள் மறமன்னர் கெடக்
கடல்போல் முழங்கும்குரல் கடுவாய்
பறையுடைப் பல்லவர் கோன்”

என்பது அப்பாசுர வாசகம்.31

கழற்சிங்கன்

தெள்ளாறெறிந்த நந்திவர்மனுக்குக் கழற்சிங்கன் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. போரில் வெற்றி பெற்ற வீரர்கள் தமது கால்களில் வீரக்கழல் அணிவது வழக்கம். வீரக்கழல் அணிந்த வீரர்களைப் பற்றிச் சங்க நூல்கள் கூறுகின்றன. தெள்ளாறு, நள்ளாறு, பழையாறு, குறுகோடு முதலிய போர்களில் பகைவரை வென்ற நந்திவர்மன் காலில் வீரக்கழல் அணிந்து சிங்கன் (போரில் சிங்கம் போன்றவன்) என்று சிறப்புப் பெயர் படைத்திருந்ததில் வியப்பில்லை. நந்திக்கலம்பகம், குறைகழல் நந்தி என்றும், பொற்கழல் நந்தி என்றும், அறைகழல் முடித்தவன் என்றும் கூறுகிறது.32 மேலும் பல்லவர் கோளரி என்றும் கூறுகிறது.33 (கோளரி = சிங்கம்)

கழற்சிங்கன்

இவ்வரசன் காலத்தில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில்,

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”

என்று கூறியது தெள்ளாறெறிந்த நந்திவர்மனைத்தான் என்று சரித்திரம் ஆராய்ந்தோர் கூறுகிறார்கள். “கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்" என்று நிகழ் காலத்திலே கூறுகிறபடியினாலே, சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திலே தெள்ளாறெறிந்த நந்திவர்மன் இருந்தான் என்பது தெரிகிறது. காடவர் என்பது பல்லவ அரசர்களின் குலப்பெயர். சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

“மண்ணுலகம் காவல் பூண்ட
        உரிமையால் பல்லவர்க்குத் திரைகொடா
மன்னவரை மறுக்கஞ் செய்யும்
        பெருமையால் புலியூர்ச் சிற்றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றாமன்றே”

என்று கோயில் பதிகத்தில் பாடியதும் இப்பல்லவனையே என்பர்.

காடவர்கோன் கழற்சிங்கனாகிய தெள்ளாறெறிந்த நந்திவர்மனைச் சிவனடியார்களில் ஒருவனாகச் சுந்தர மூர்த்தி நாயனார் கூறியதுபோலவே, நந்திக்கலம்பகமும் இவனைச் சிறந்த சிவபக்தன் என்று கூறுகிறது.

“இலகொளி மூவிலை வேல்
        இறைவாநின் இயற்கயிலைக்
குலகிரியும் அரும றையும்
        குளிர்விசும்பும் வறிதாக
அலைகதிர்வேல் படைநந்தி
        அவனி நாராயணன் இவ்
உலகுடையான் திருமுடியும்
        உள்ளமுமே உவந்தனையே”

என்றும்

“சிவனை முழுதும் மறவாத சிந்தையான்”

என்றும் கூறுவது காண்க.34 இவ்வரசனுடைய வேலூர்ப் பாளையத்துச் செப்பேட்டுச் சாசனமும் இவனைச் சிவபக்தன் என்று கூறுகிறது. வடமொழியில் கூறப்பட்ட அந்தச் சாசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இது:-

“எதிர்காலத்தில் உலகத்தை ஆளப்போகிறவர்களே! அரசர்களுக்குக் கொடிபோன்ற நந்திவர்மன், சிவபெருமானுடைய மலரடிக்ளாகிய சூளாமணியால் விளங்கப்பெற்ற தனது தலையை வணங்கித், தாமரைபோன்ற கைகளைக்குவித்து இந்த நல்ல வேலையை (இந்த அறச்செயலை) எப்போதும் காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறான்.”35 ஆகவே இவன் சிறந்த சிவபக்தன் என்பதில் ஐயமில்லை. சுந்தரமூர்த்தி நாயனார் கூறிய காடவர்கோன் கழற்சிங்கரும், பெரியபுராணம் கூறுகிற கழற்சிங்க நாயனாரும், தெள்ளா றெறிந்த நந்திவர்மனும் ஒருவரே என்று சரித்திரம் ஆராய்ந்தோர் கூறுவது சாலவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்” என்று இவ்வரசனைச் சுந்தரர் கூறியதற்கு ஏற்பவே, நந்திக் கலம்பகமும் இவனை, “அவனை நாராயணன்” என்று கூறுகிறது. மேலும்,

“வடவரை யளவும் தென்பொதி யளவும்
விடையுடன் மங்கல விசையமும் நடப்ப”

என்றும்,

“அலைகதிர்வேல் படை தந்தி
        அவனிநாராயணன் இவ்
உலகுடையான் திருமுடியும்
        உள்ளமுமே உவந்தனையே”

என்றும் கலம்பகம்36 கூறுவதனால், இவன் பாரத நாட்டிலே அக்காலத்தில் பேர்பெற்ற அரசனாக விளங்கினான் என்பதை அறியலாம்.

குறுகோடும் வாதாபியும்

குறுகோட்டைப் போரைப் பற்றித் தவறான கருத்துக்கள் கூறுப்படுவதை இங்குக் காட்ட விரும்புகிறேன். நந்திக் கலம்பகம் 2, 16, 35,84-ஆம் செய்யுள்களில் நந்திவர்மன் குறுகோட்டையை வென்றான் என்று கூறுகிறது. கொடும்பாளுர் மூவர்கோயில் சாசனம் கூறுகிற விக்கிரமகேசரியின் பாட்டனான் வாதாபிஜித் என்பவனை, குறு கோட்டைப் போருடன் சில சரித்திரக்காரர்கள் இணைக்கிறார்கள். திரு. சி. மீனாட்சி, தாம் எழுதிய பல்லவர்காலத்து அரசாட்சியும் சமூக வாழ்க்கையும் என்னும் ஆங்கில நூலில் இந்தக் கருத்தை வெளி யிட்டிருக்கிறார்.37

அவர் எழுதுவதன் கருத்து இது :

“விக்கிரமகேசரியின் பாட்டன் பாதாபிஜித் (வாதாபியை வென்றவன்) என்று கூறப்படுகிறான். 9-ஆம் நூற்றாண்டின் இடையில் இருந்த அந்தச் சிற்றரசனுடைய சிறப்புப் பெயர், இதுவரையில் அறிஞர்களைத் திகைக்கச் செய்திருந்தது. அவர்களுக்கு இப்போது இந்த யோசனையைக் கூறுகிறேன். அது என்னவென்றால்: மூன்றாம் நந்திவர்மனுக்குக் கீழ்ப்பட்டிருந்த சிற்றரசனாகிய பரதுர்க்கமர்த்தனன், நந்திவர்மனின் வடநாட்டுப் படையெடுப்பில் கலந்து கொண்டிருக்கக்கூடும். இராஷ்டிரகூட அரசனுடன் நடந்த அந்தப் போரிலே, இராஷ்டிரகூட அரசனுக்கு உதவியாக, அவனுக்குக் கீழடங்கியிருந்த சளுக்கிய சிற்றரசனும் வந்திருக்கக்கூடும். குறுகோட்டைப் போரிலே, அந்தச் சளுக்கிய சிற்றரசனைத் தென்னாட்டுக் குறுநில மன்னன் (கொடும்பாளூர் பரதுர்க்கமர்த்தனன்) வென்றதினாலோ, இராஷ்டிரகூட அரசனைக் குறுகோட்டைப் போரில் வென்ற பிறகு வாதாபி நகரத்தின் மேல் பல்லவ அரசன் நரேடியாகப் படையெடுத்துச் சென்றபோது, பரதுர்க்கமர்த்தனனும் அவ்வாதாபிப் போரிலே கலந்துகொண்ட படியினாலோ, அவன் வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றிருக்கக்கூடும். சுழற்சிற்க நாயனாரைப் பற்றிப் பெரியபுராணம், அவ்வரசன் வடநாட்டுப் போரை வென்றதாகக் கூறுவதனாலும் அக்காலத்து இலக்கியங்களையும் சாசனங்களையும் ஆராய்ந்து பார்ப்பதனாலும் இது தெரியும்.”

இவ்வாறு கூறிய அவர், மேற்படி அடிக்குறிப்பில் மேலும் கூறுகிறார்: “குறுகோட்டையை வென்றபடியினாலேயே பரதுர்க்க மர்த்தனன் வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளக் காரணமாயிருந்தது” என்று கூறுகிறார்.

இவர் கூறுவதைப் பகுத்தறிவுள்ளவர் எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரையுடைய பரதுர்க்கமர்த்தனன், கி. பி. 7-ஆம் நூற்றாண்டில், வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவன். அவனை கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்த தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்தவனாகக் கூறுவது தவறு. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில், கொடும்பாளூர் சிற்றரசர், பல்லவ அரசருக்கு உதவியாக இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், முத்தரையர் என்னும் சிற்றரசர் பல்லவர் சார்பில் இருந்ததைச் சாசனங்கள் கூறுகின்றன. மூன்றாம் நந்திவர்மன், குறுகோட்டையை வென்றதாக நந்திக்கலம்பகம் கூறுகிறதே தவிர, வாதாபி நகரத்தை வென்றதாக எங்கும் கூறவில்லை. அவனுடைய சாசனங்களும் கூறவில்லை. நந்திவர்மன் வாதாபியை வென்றிருந்தால் கட்டாயம் அச்செய்தியை நந்திக்கலம்பகம் கூறியிருக்கும். பரதுர்க்கமர்த்தனன் குறுகோட்டையை வென்றிருந்தால், குறுகோட்டைஜித் என்று பெயர் பெறுவானேயல்லாமல், வாதாபிஜித் என்று எப்படிப் பெயர்பெறுவான்? வாதாபிஜித்தாகிய பரதுர்க்கமர்த்தனன், கி. பி. 7-ஆம் நூற்றாண்டில், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில், வாதாபிப் போரில் கலந்துகொண்டவன். அவனை நந்திவர்மன் காலத்தவனாகக் கூறுவது பொருந்தாது. அதிலும், குறுகோட்டையை வென்றபடியால் வாதாபிஜித் என்று பெயர் பெற்றான் என்பது சிறிதும் பொருந்தாது. இதுபற்றி இந்நூலாசிரியர் எழுதியுள்ள “மாமல்லன் நரசிம்மவர்மன்" என்னும் நூலில் விரிவாகக் காண்க.

அடிக்குறிப்புகள்

1. S.I.I. Vol. II. P. 501 - 517.
2. நந்திக் கலம்பகம், 2, 16, 35, 84.
3. Ep. col. No. 105 of 1905.
4. தெள்ளாறு, வடஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் இருக்கிறது. காஞ்சிபுரத்துக்குத் தெற்கே 15 மைலில் உள்ளது.
5. பழையாறு என்பது பழையாறை. இது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்குத் தெற்கே 5 மைலில் இருக்கிறது. நள்ளாறு என்பது மேற்படி மாவட்டத்தில் காரைக்காலுக்கு அருகில் இருக்கிறது.
6. Ind Ant. Vol. XXXVI. P. 172.
7. E.C. X cd. 76.
8. Ep. Col. No.52 of 1895.
9. நந்திக் கலம்பகம் 28, 29, 33, 38, 49,52,53,71.
10. நந்திக் கலம்பகம் 19, 23, 61.
11. நந்திக் கலம்பகம் 27, 31.
12. நந்திக் கலம்பகம் 81.
13. S.I.I. Vol. III P. 93.
14. Ep. Col. 188 of 1937 - 38.
15. நரசிங்க முனையரைய நாயனார் புராணம் 1.
16. தடுத்தாட் கொண்ட புராணம் 5.

17. Ep. Col. 469 of 1937 - 38.
18. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 37.
19. கோட்புலி நாயனார் புராணம் 1.
20. கோட்புலி நாயனார் புராணம் 3.
21. கோட்புலி நாயனர் புராணம் 6.
22. S.I.I. Vol. II P. 509.
23. நந்திக் கலம்பகம் 13, 74.
24. S.I.I. Vol. III. P. 93, 12 of 1895.
25. நந்திக் கலம்பகம் 1, 14, 18, 22,64,66.
26. S.I.I. Vol. III. part. I. P. 95.
27. நந்திக் கலம்பகம் 20, 55, 29, 2, 4,87,66,80,7,51.
28. நந்திக் கலம்பகம் 5.
29. நந்திக் கலம்பகம் 6.
30. நந்திதக் கலம்பகம் 61.
31. பெரிய திருமொழி 2ஆம் பத்து 9 ஆந் திருமொழி 9.
32. நந்திக் கலம்பகம் 28, 30, 60.
33. நந்திக் கலம்பகம் 59.
34. நந்திக் கலம்பகம் 1.
35. S.I.I. Vol. II. 501-517.
36. நந்திக் கலம்பகம் 1.
37. A.S.L.W.P. by C. Minakshi, P. 302 - 303.