உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/035-052

விக்கிமூலம் இலிருந்து


பாண்டியர்

குறிப்பு: தமிழ்நாடு சங்க்காலம் (அரசியல்) (1983) என்ற நூலிலிருந்து
இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

1. பாண்டியர்

பாண்டிய நாடு தமிழகத்தின் தென்கோடியில் கிழக்கே வங்காளக் குடாக் கடலையும், தெற்கே குமரிக் கடலையும், மேற்கே அரபிக் கடலையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. யவனர் இம் மூன்று கடல்களையும் செங்கடல் என்றும் பொருட்பட எரித்திரையக்கடல்1 என்று அழைத்தனர். பாண்டிய நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் உள்ளது. இராமேசுவரத்திற்கு வடபால் உள்ள கடற்பகுதி ‘பாக்' கடலிணைப்பு என்றும், தெற்கிலுள்ள சிறு பகுதி ‘மன்னார் வளைகுடா' என்றும் வழங்கப்படுகின்றன. இக் கடற்பகுதிகளைப் பெரிபுளூஸ் நூல் ‘ஆர்கலஸ்’2 என்றும், தாலமி 'ஆர்கலிக் கடல்' என்றும் குறிப்பிடுகின்றனர். இதனால் ‘ஆர்கலி கடல்' என்னும் பெயர்3 இப் பகுதிக்கு வழங்கியதாகக் கொள்ளலாம்.4

இப்போது இராமேசுவரம் இருக்கும் பாம்பன் தீவு முற்காலத்தில் பாண்டிய நாட்டோடு இணைந்திருந்தது. நானூறு ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசியர் வந்து வாணிகம் செய்த காலத்தில் பெரும்புயல் ஒன்று அடித்து இந் நிலப்பகுதி கரைந்து தீவாக உருக் கொண்டது. ஆகையால், சங்க காலத்தில் இந்தத் தீவு பாண்டிய நாட்டோடு இணைந் திருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் இப்போதுள்ள இலங்கைத் தீவும் பாண்டிய நாடும் இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. கன்னியாகுமரிக்குத் தெற்கிலும், கிழக்கிலும் அக்காலத்தில் நிலங்கள் இருந்தன. பின்னர் அவ்வப்போது தோன்றிய புயல்களினாலும், கடல் கொந்தளிப்பினாலும் கரைந்தும் சிதைந்தும் அந்நிலப் பகுதிகள் மறைந்துபோயின. இப்பொழுது இலங்கை என்று வழங்கப் பெறும் நிலப்பகுதி சங்க காலத்தில் ‘ஈழம்’ எனப் பெயர் பெற்றிருந்தது.

இலங்கை தனியாகப் பிரிந்துபோன பிறகும், எஞ்சியிருந்த நிலப்பகுதிகளில் பல, கொஞ்சம் கொஞ்சமாகக் கடலில் முழுகிப் போயின. முழுகிப்போன பகுதிகளில் பல பாண்டியருடைய ஆட்சியில்இருந்தன. பாண்டிய அரசர்கள் அமைத்திருந்த தலைச்சங்கம். இடைச்சங்கம் என்ற இரண்டு தமிழ்ச் சங்கங்களும், கடலில் மூழ்கிப்போன நாட்டில் இருந்தன என்று பழைய செவிவழிச் செய்தி கூறுகிறது. சிலப்பதிகார

மும், கலித்தொகையும், இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரமும் பாண்டிய நாட்டின் தெற்கே பரவியிருந்த நிலப்பகுதிகள் கடலில் மூழ்கிப் போனதைப்பற்றிக் கூறுகின்றன. 5இலங்கை வரலாற்றைக் கூறும் மகாவம்சமும் இச் செய்தியை வலியுறுத்துகிறது.6 அக் காலத்திலும் குமரித்துறை புண்ணிய தீர்த்தமாகக் கருதப்பட்டது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் குமரித் துறையில் இருந்து இலங்கைப் பக்கமாக கடலில் இடையிடையே பாறைக்கற்கள் காணப்பெற்றதை மணிமேகலை கூறுகிறது.7 இந்திய நாட்டு மக்கள் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய பிறகு குமரித் துறையிலும் நீராடினர். பாண்டிய நாட்டிற்குத் தெற்கே இலங்கை வரையில் இருந்து பின்னர் மூழ்கிப்போன நிலம் ‘லெமூரியா’ என்றும். 'குமரிக்கண்டம்' என்றும் கூறப்படுகிற பழங்காலப் பெரிய நிலப்பரப்பு அன்று. இப்பொழுது இந்தியப் பெருங்கடல் என்று கூறப்பெறுகிற பெரிய நிலப்பரப்பு மிகப்பழைய காலத்தில் ஆப்பிரிக்காக் கண்டம் முதல் ஆஸ்திரேலியா வரையில் பரந்த பெரிய நிலமாக இருந்தது என்றும், அதற்கு 'லெமூரியா' என்னும் பெயர் வழங்கியதென்றும், பின்னர் அக்கண்டம் மறைந்துபோய் இந்தியப் பெருங்கடல் தோன்றியதென்றும் நிலப் பொதியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மிகப் பழங்காலத்தில் இருந்த லெமூரியாக் கண்டம் வேறு; சங்க காலத்தில் கன்னியாகுமரிக்கு அருகிலே இருந்து மறைந்து போன நிலப்பரப்பு வேறு. இவை இரண்டையும் ஒன்றாகக் கூறுவது கூடாது.8

மேற்கு எல்லைப் பகுதி

சங்க காலத்துப் பாண்டிய நாடு மேற்குக் கரைப்பக்கத்தில் இப்போதைய தென்திருவாங்கூர் வரையில் பரவி இருந்தது. பொதிகை மலை நாடும், நாஞ்சில் நாடும் தென்திருவாங்கூர் வரையில் பாண்டிய நாட்டுடன் சேர்ந்திருந்தன. ஆய் என்னும் வேள் அரசர் பொதிகை மலை நாட்டை அரசாண்டார். பாண்டிய அரசர்களைச் சேர்ந்திருந்த ஆய்ச் சிற்றரசர்களின் நாடு, மேற்குக் கடற்கரை வரையில் விரிந்து இருந்தது.

வடக்கு எல்லைப் பகுதி

முதுகோடி (தனுஷ்கோடி) பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது.9 தென்வெள்ளாறும் அதன் பகுதியாகிய கொடும்பாளூரும் பாண்டிய நாட்டின் வடஎல்லைகளாகும். கொடும் பாளூரையாண்ட குறுநில மன்னர்கள் இருங்கோவேள் என்பவராவர்.10 திண்டுக்கல் பாறையும், கோடைக்கானல் மலைகளும் பாண்டிய நாட்டின் வடக்கே இருந்தன. கோடைக்கானலில் தென்னவன் மறவனான கோடைப் பொருநன் பாண்டியருடைய சேனாதிபதியாக இருந்தனன்.11 பன்றிமலைகள் எனப்படும் வராக மலைகளும் பாண்டிய நாட்டின் வடபகுதியில் இருந்தன. அரபிக் கடலை அடுத்திருந்த வேணாடு சங்ககாலத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது.

பாண்டிய நாட்டு மலைகள்

இருங்குன்றம்

இக் குன்றம் அக்காலத்தில் கீழ்இரணியமுட்ட நாட்டைச் சேர்ந்திருந்தது. ஓங்கிருங்குன்றம். கேழிருங்குன்றம், மாலிருங்குன்றம், திருமால்குன்று. திருமால் இருஞ்சோலை, சோலைமலை முதலான சிறப்புப் பெயர்கள் இதற்கு வழங்கின. இம் மலையில் கண்ணன். பலராமன் ஆகிய இருபெருந் தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தன.12 புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று பொய்கைகள் இங்கிருந்தன.13 சிலம்பாறு அல்லது நூபுரகங்கை இம் மலையில் தோன்றிப் பாய்ந்தது.

சுமார் 16 கி. மீ. நீளமுள்ள இம் மலைகளின் குகைகளில் பல சமண முனிவர்கள் வாழ்ந்தனர்.

திருப்பரங்குன்றம்

சங்ககாலத்துப் புலவர்களால் சிறப்பித்துப் பாடப்பெற்ற தெய்வம், திருப்பரங்குன்றத்து முருகனாகும். இக் குன்றத்தின் உச்சியில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளில் முனிவர்களின் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள தமிழ் எழுத்துக் கல்வெட்டுகளில் சங்க காலத்திய நல்லந்துவனார் பெயர் காணப்படுகிறது.14

ஆனைமலை

சங்கச் செய்யுள்களில் ஆனைமலையைப்பற்றி ஒன்றும் சொல்லப் பெறவில்லை. எனினும் 'சங்க கால எழுத்துகள் இம்மலையில் உள்ளன.

பறம்பு மலை

பாண்டிய நாட்டில் இருந்த இம்மலைக்குத் தலைவன் பாரி வள்ளலாகும்.

பொதிகை மலை

பொதியில், பொதியம் என்று வழங்கப்பெறும் இம் மலைக்குத் தென்னவன் பொதியில், ஆய்பொதியில் என்னும் பெயர்கள் வழங்கப் பெறுவதால், இது பாண்டிய நாட்டு மலை என்பது தெளிவாகும். சங்கப் புலவர்களில் ஒருவராகிய அகத்தியர் பொதிகை மலையில் இருந்ததாகக் கூறப்படும் கதை கி. பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. சிலப்பதிகாரத்தில் கூறப்பெறும் பொதியில் முனிவர் அகத்தியர் அல்லர். வடமொழியில் உள்ள பாகவத புராணத்தில் பொதிகை கூறுகிறதேயன்றி, அகத்தியர் தவம் செய்ததாகக் கூறவில்லை.

கழுகு மலை

மதுரை மாவட்டம் மீனாட்சிபுரத்தையடுத்துள்ள இந்த மலையைப் பற்றிச் சங்கப் பாடல்களில் குறிப்புகள் இல்லை. எனினும் சங்க காலத்துக் கல்வெட்டுகள் இந்த மலையில் காணப்பெறும் சமணர் குகைகளில் உள்ளன. பாண்டிய அரசன் நெடுஞ்செழியன்பற்றியம் அவனது பகைவன் கடலன் வழுதிபற்றியும் அக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.15

ஆறுகள்

வையை, சிலம்பாறு, பஃறுளி, குமரி ஆகிய ஆறுகள் பாண்டிய நாட்டில் பாய்ந்தன என்று சங்கப்பாடல்களால் அறிகிறோம். இவற்றுள் குமரியாறும் பஃறுளியாறும் கடலில் மூழ்கிப்போன நிலப்பகுதியில் வாய்ந்தன. வையையாற்றிற்கு வைகை என்னும் பெயரும் வழங்கியது. இவ்வாற்றின் தென்கரையில் மதுரை நகரம் இருந்தது. இந் நகரம் வட்ட வடிவமாக தாமரைப் பூப்போல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நகரத்தின் கோட்டைச் சுவருக்கு வெளியே அதைச் சூழ்ந்திருந்த அகழியில் வையை நதியின் நீர் பாய்ந்தது.16 வையையில் திரு மருதந் துறை என்னும் இடத்தில் சங்ககாலத்து மக்கள் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தனர்.

சிலம்பாறு

திருமாலிருஞ்சோலை மலையில் தோன்றிப் பாய்ந்தது.17

பஃறுளியாறு

இது கன்னியாகுமரிக்குத் தெற்கிலிருந்த ஓர் ஆறு. கி. பி. முதல் நூற்றாண்டிற்கு முன் கடல்கோளினால் மறைந்து போயிற்று. குமரியாறும் மேற்கூறப்பெற்ற கடல்கோளினால் மறைந்தது.18

துறைமுகப் பட்டினங்கள்

சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் நிலைபெற்றிருந்த தொண்டி, மருஞ்கூர்ப்பட்டினம், கொற்கை, குமரி, விழிஞம் முதலிய துறை முகங்களைப்பற்றிச் சற்று விரிவாகக் காணலாம். இக்காலத்தில் தொண்டி என்ற துறைமுகங்கள் இரண்டில் ஒன்று மேற்குக் கரையில் சேர நாட்டிலும், மற்றொன்று பாண்டியநாட்டுக் கிழக்குக் கரையிலும் இருந்தது. கிழக்குக் கரையிலிருந்த தொண்டி, பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையில் இருந்தது. இத்துறைமுகத்தில் கிராம்பு, இலவங்கம், தக்கோலம், சாதிக்காய், கற்பூரம் முதலிய நறுமணப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பெற்றன.19 இத் துறைமுகப்பட்டினம் பிற்காலத்தில் மறைந்து இப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்னும் சிற்றூராக இருக்கிறது. மருங்கூர்ப்பட்டினம் மருங்கை என்றும் வழங்கியது. இதற்கு மேற்கில் ஊணூர் என்னும் இடமும், அதைச் சூழ்ந்து மதிலும், அம் மதிலைச் சூழ்ந்து நெல் வயல்களும் இருந்தன.20 நெல் வயல்கள் மிக் கிருந்த ஊர் சாலியூர் இதற்கும் நெல்லினூர் என்னும் பெயர் பெற்றிருந்த ஊருக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். நெல்லினூர்த் துறைமுகத்தில் பெரிய நாவாய்கள் தங்கிச் சென்றன. தாலமி என்ற யவன ஆசிரியர், ‘சாலோர்’ என்று குறிப்பிடும் இடம் சாலியூர் ஆகலாம்.21

கொற்கை, குமரி, விழிஞம்

உலகப் புகழ்பெற்ற பாண்டி நாட்டுத் துறைமுகப்பட்டினம் கொற்கையாகும். இத் துறைமுகம் ஒரு வளைகுடாவில் இருந்ததனால் முத்துக் குளிக்கும் இடமாகவும், சங்கு எடுக்கும் இடமாகவும் விளங்கியது. கொற்கையில் கிடைத்த முத்துகள் உலகப் புகழ் பெற்றவையாகும். சங்கப் புலவர்களும் இங்குக் கிடைத்த முத்துகளின் பெருமையைப் புகழ்ந்துள்ளளனர். கொற்கை, பாண்டிய இளவரசர்களுடைய இருக்கையாகவும் திகழ்ந்தது. யவனர்கள் ‘கொல்கொய்’ என்று வழங்கிய துறைமுகம் கொற்கையேயாகும்.22 கடல் கொண்ட கவாடபுரம் கொற்கையாக இருக்கலாம் எனச் சில அறிஞர்கள் கருதுவர். பாண்டிய நாட்டின் தென் கோடியில், கன்னியாகுமரிக்கருகில் குமரித்துறைமுகம் இருந்தது. இது துறைமுகமாகவும் புனித நீராடும் இடமாகவும் கருதப்பெறுகிறது. தமிழ் நாட்டவரும், மற்றையோரும் இங்குப் புனித நீராடுவதுண்டு. குமரித் துறைமுகத்திற்கருகில் குமரி என்னும் ஊரும், அங்கு ஒரு கப்பல் அமைக்கும் தொழிற்சாலையும் இருந்ததென்று யவனர்களுடைய குறிப்புகளிலிருந்து அறிகிறோம். பாண்டிய நாட்டின் மேற்குக் கடற்கடற்கரையில் ஆய் நாட்டில் விழிஞம் என்னும் துறைமுகப்பட்டினம் இருந்தது. ஆய் நாட்டுக் குறுநிலமன்னர்கள் பாண்டியர்களுக்கு அடங்கிய சிற்றரசர்கள் ஆவர். ஆய் நாட்டில் (எலங்கோன்) என்னும் துறைமுகம் இருந்ததென்று தாலமி என்னும் ஆசிரியர் கூறியுள்ளது விழிஞம் துறைமுகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.23

முற்காலப் பாண்டிய நாட்டு நகரங்கள்

கடல்கொண்ட மதுரை

கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த நிலப்பரப்பில் ஆதி மதுரை இருந்து பின்னர்க் கடலில் மூழ்கியது.24 இக்கடல்கோளுக்குப் பிறகு கவாடபுரம் பாண்டியர்களுடைய தலைநகராயிற்று.25 இக் கவாடபுரத்தில்தான் இடைச்சங்கம் இருந்ததெனச் செவிவழிச் செய்தி கூறுகிறது. இரண்டாவது கடல்கோளில் இக்கவாடபுரம் அழிந்து போயிெற்று. கவாடபுரத்தில் முடத்திருமாறன் என்ற பாண்டிய அரசன் இருந்ததாகவும், அவ்வரசவையை யாற்றங்கரையில் மதுரை நகரத்தை அமைத்து அதைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தான் எனவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.26

கூடல் நகர்

கவாடபுரம் கடலில் மூழ்கியபிறகு கூடல் நகரம் பாண்டிய நாட்டின் தலைநகரமாயிற்று. இந் நகரம் தாமரை மலர்போல் வட்ட வடிவமாக அமைக்கப்பெற்றதென்றும், அம் மலரின் நடுவிலுள்ள பொகுட்டுப்போலப் பாண்டியனுடைய அரண்மனை இருந்ததாகவும், அரண்மனையைச் சூழ்ந்திருந்த தெருக்கள் தாமரை மலரின் இதழ்களைப் போலவும், அந் நகரத்தில் வாழ்ந்த மக்கள் மலரில் இருந்த மகரந்தப் பொடிபோல இருந்தனர் எனவும் கூறப்பெறுகிறது.27 மதுரை நகரத்தைச் சூழ்ந்து மூன்று மதில்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தன. கோட்டை மதிலுக்கு வெளியே மிளைக்காடு நிறைந்த காவற்காடு இருந்தது. மிளைக் காட்டைச் சூழ்ந்து அகழி இருந்தது. கோட்டை வாயிலின் மேலே பாண்டியருடைய கயற்கொடி பறந்தன. கையில் பந்து ஏந்திய பெண் பாவை உருவங்கள் கோட்டை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்தன. கூடல் நகரத்திற்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருந்தது.28 கோட்டை வாயிலில் யவன வீரர்கள் காவல் புரிந்தனர். அவர்களுடைய தோற்றம் அஞ்சத்தக்கதாக இருந்தது.29 தாலமி ‘மதௌர’ என்னும் பெயரால் இந் நகரைச் சுட்டியுள்ளார். மதுரை நகரக் கோட்டையைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக மதிலின்மீது போர்க்கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.30 மதுரைக்கு அருகில் மோகூர் இருந்தது. பிற்காலத்தில் இது 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகத் திருமோகூர் எனப் பெயர் பெற்றது. பாண்டிய மன்னர்களின் படைத்தலைவனாகிய பழையன் மாறன் இவ்வூர்ப்பகுதியின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்தான். இவனது காவல்மரமாகிய வேம்பு, இவ்வூரில் ஓங்கி வளர்ந்திருந்தது. சேரன் செங்குட்டுவன் பழையனை வென்று இதனை வெட்டிச் சாய்த்தான்.

தங்கால் என்னும் ஊர் திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ளது. இது திருத்தங்கால் என்றும் அழைக்கப்பெறுகிறது. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், தங்கால் ஆத்திரேயன், செங்கண்ணனார் ஆகிய சங்கப் புலவர்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அலைவாய் எனபப்டும் திருசிசெந்தில் பாண்டிய நாட்டின் கீழைக்கரை ஓரத்தில் உள்ளது. சங்ககாலம் முதல் இங்கு முருகன்கோயில் ஒன்று இருந்து வருகிறது. பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த மற்றோர் ஊராகும். இவ்வூரில் வாழ்ந்த புலவர் பிசிராந்தையாருக்கும் சோழ நாட்டரசனாகிய கோப்பெருஞ்சோழனுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.31

இவை சங்க காலத்துப் பாண்டிய நாட்டின் எல்லைகளையும் அந்நாட்டில் சிறந்து காணப்பெற்ற மலைகள், ஆறுகள், பட்டினங்கள், நகரங்கள் ஆகியவற்றையும்பற்றிச் சங்க இலக்கியச் சான்றுகளால் அறிவனவாகும். இனி, அக்காலத்துப் பாண்டிய மன்னர்களைப் பற்றி ஆராய்வோம்.

பாண்டிய மன்னர்களின் குலம்32

1. அயலகக் குறிப்புகளால் அறியப்படும் பாண்டிய மன்னர்கள்

பாண்டிய மன்னர்களைப்பற்றிய வரலாறு தொடர்ச்சியாகவும் வரன்முறையாகவும் கிடைக்கப்பெறவில்லை. அயல் நாட்டவருடைய குறிப்புகளைக் கொண்டு சில பாண்டிய மன்னர்களின் வரலாறுகளை அறியமுடிகிறது. இவர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இல்லை.

கி.மு. நான்காம் நூற்றாண்டுப் பாண்டியன்

இலங்கை நாட்டின் முதல் அரசனான விசயனுக்குப் பெண் கொடுத்த பாண்டியன் ஒருவனைப்பற்றித் தீபவம்சம், மகாவம்சம் ஆகிய இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. விசயன், தன்னுடைய 700 தோழர்களோடு வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து, அங்கு அரசு செலுத்தி வந்த இயக்கர் என்னும் இனத்தாரை வென்று, தனது அரசை நிறுவீனான். விசயனுக்கு முடிசூட்ட விரும்பிய அரசன் அவனது புதல்வியை மணம் பேசித் திருமணம் செய்வித்தனன். ஆனால், விசயனுக்கு மகட்கொடை செய்த பாண்டிய அரசனுடைய பெயர் இவ்வரலாற்று நூல்களில் குறிப்பிடப் பெறவில்லை. மற்றும் விசயனுக்குப் பாண்டியன் மகளைத் திருமணம் செய்வித்த அவனுடைய 700 தோழர்களும் பாண்டிய நாட்டுப் பெருங்குடியிலிருந்து மகளிரை மணந்து கொண்டனர் என்றும் இந் நூல்கள் கூறுகின்றன. மணமகளான பாண்டிய குமாரியையும், மற்றும் பிற மணமகளிரையும் படைச் சிறப்புடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். அவர்களோடு தன் நாட்டிலிருந்து கொல்லர், தச்சர், உழவர், குயவர் முதலான பதினெட்டு வகையான தொழிலாளர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர் ஆயிரவரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். இலங்கை மன்னனாகிய விசயன் தன்னுடைய மாமனாராகிய பாண்டியனுக்கு ஆண்டுதோறும் இரண்டு இலட்சம் பொன் பெறுமானம் உள்ள முத்துகளைக் காணிக்கையாக அனுப்பிக் கொண்டிருந்தான். இந் நிகழ்ச்சிகள் கி.மு. நான்காம் நூற்றாண்டில் நடந்ததாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இச் செய்திகளை உறுதி செய்யக்கூடிய சான்றுகள் தமிழ் நாட்டில் கிடைக்கவில்லை. இலங்கை மன்னன் விசயனுக்கு மகட்கொடை அளித்ததைத் தவிர, அப்பாண்டியமன்னனைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

பாண்டிய அரசி

சந்திரகுப்த மௌரியருடைய ஆட்சிக் காலத்தில் கி. மு. 304-ல் செலியூகஸ் நிகேட்டாருடைய தூதனாகப் பாடலிபுத்திரத்தில் இருந்த மெகஸ்தனீஸ் தாம் எழுதிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டில் ஒரு பெண் ஆட்சி செய்தாள் என்று கூறியுள்ளார். அவளது பெயர் தடாதகைப் பிராட்டி என்று தமிழ்ப் புராணங்கள் கூறினாலும் அவளுடைய சரியான பெயர் தெரியவில்லை.

கி. மு மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோகன் தனது பாறைக் கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டிய அரசர்களைப்பற்றிக் குறிப்பிடுகிறான்.33 தன்னுடைய தருமத்தை மக்களிடையே பிசாரம் செய்யவும். மக்களுக்கும் விலங்குகளுக்கும் உதவி செய்வதற்கும் பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பெற்றதாகக் கூறியுள்ளான். இக் கல்வெட்டுகள் பாண்டியர்கள் என்று குறிக்கின்றனவேயன்றிக் குறிப்பிட்ட அரசனுடைய பெயரைக் கூறவில்லை.

கலிங்க நாட்டை அரசாண்ட காரவேலன் ஏறத்தாழக் கி. மு. 185 இல் தென்னாட்டின்மீது படையெடுத்து வந்து தமிழ் நாட்டு மன்னர்களை வென்று அவர்களிடமிருந்து பொன், மணி, முத்துகள் முதலியவற்றைப் பெற்றான் என்று கூறும் அத்திகும்பா கல்வெட்டிலும் பாண்டிய மன்னனுடைய பெயர் குறிப்பிடப்பெறவில்லை.

ஆகையால், இயற்பெயர் தெரியாத இந்தப் பாண்டிய அரசனும் அரசியும் அயலகக் குறிப்புகளால் அறியப்படும் அரச அரசியர் ஆவர்.

2. செழியன் என்னும் பெயருடைய அரசர்கள்

செழியன்

இப் பெயர் பொதுவாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே சுட்டுவதாகும். தெளிவாக அறியப்பெறும் செய்திகளின் அடிப்படையில் சமணரைப் பேணியவன், ஆரியப் படை கடந்தவன். தலையாலங்கானத்துச் செருவென்றவன் ஆகிய மூவரைக் காலவரிசைப்படக் கூறலாம். எனினும், இவர்களது ஆட்சிக் காலங்களுக்கு இடையில் நிலவிய நிகழ்ச்சிகளைப் பற்றியோ அரசர்களைப் பற்றியோ தெளிவாக அறியமுடியவில்லை.

சமணரைப் பேணிய நெடுஞ்செழியன்

இவனைப்பற்றிய செய்திகள் மீனாட்சிபுரம் தாமிழிக் கல்வெட்டுகளால் அறியப்பெறுகின்றன. வானநூல் அறிஞரான நந்தி என்னும் சமணப் பெரியாருக்கு, இந்த நெடுஞ்செழியன் மலைக் குகையில் கற்படுக்கைகளைச் சமைத்துக் கொடுத்தான் என்ற செய்தியை இக் கல்வெட்டால் அறியமுடிகிறது. மேலும், இக்கல்வெட்டில் கடலன் வழுதி என்னும் பெருந்தச்சனைப்பற்றியும் குறிப்பிடப் பெற்றுள்ளது. இத் தச்சன் கற்படுக்கைகளின் தரையைச் செம்மைப்படுத்தினான். சடிகன், இளஞ்சடிகன் ஆகிய இருவருடைய பெயர்களும் இக் கல்வெட்டில் காணப் பெறுகின்றன.34

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

இவன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் காணப்பெறுகிறது. இப் பாடல் கல்வியின் சிறப்பைச் சித்திரிக்கிறது. இதில் அக்காலத்திய நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பெற்றிருந்த குறிப்பும் காணப்பெறுகிறது.35 கோவலனைக் கொலைசெய்தவன்

‘வடவாரியர் படைகடந்து
தென்றமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்’36

என்று குறிப்பிடப்படுகிறான். இவ்வாறு குறிப்பிடப்பெறும் ‘ஆரியப் படை கடந்த’ என்னும் தொடரும் புறநானூற்றைத் தொகுத்தவர் குறிப்பிடும் ‘ஆரியப்படை கடந்த’ என்னும் தொடரும் ஒன்றாக அமைவதால் இவ்விருவரும் ஒருவரே என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் இவனோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் இவனது வரலாற்று நிகழ்ச்சிகளே என்று கூறலாம்.

வார்த்திகனைச் சிறையிட்டது

சோழநாட்டில் பராசரன் என்னும் பார்ப்பனன் ஒருவன் இருந்தான். அவன் சேரஅரசன் ஒருவன் மறையவன் ஒருவனுக்கு வீடுபேறு கொடுத்த செய்தியைக் கேள்விப்பட்டு (பல்யானைச் செல்கெழு குட்டுவன்) அவனைத் தானும் நேரில் கண்டு பரிசில் பெற்றுத் திரும்பினான்; வழியில் தங்கால் என்னும் இடத்தில் ஓர் ஆலமரத்தடியில் தங்கி இளைப்பாறினான். அப்போது பார்ப்பனச் சிறுவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். பராசரன் தன்னோடு வழுவின்றி வேதம் ஓதுபவர்க்கு ஒரு பரிசு நல்குவதாகக் கூறினான். அவ்வூரில் வாழ்ந்த வார்த்திகன் என்னும் அந்தணனின் மகன் வழுவின்றி வேதம் ஓதக் கேட்டுத் தன்னுடைய முத்துப் பூணூலை அச் சிறுவனுக்கு அளித்தான். ஏழை வார்த்திகன் மகனின் மார்பில் விலையுயர்ந்த முத்துப் பூணூலைக் கண்ட அரசு காவலர் அரண்மனையில்திருடிய குற்றம் சாட்டி வார்த்திகனைச் சிறையிலிட்டனர்.

வார்த்திகனின் மனைவி கார்த்திகை தன் மகனுக்கு இழைக்கப் பெற்ற கொடுமையை ஐயை கோயிலில் முறையிட்டு அழுதாள். ஐயைத் தெய்வம் தன் கோயிற் கதவுகளை அடைத்துக் கொண்டது. தன்னாட்சியில் கொடுங்கோன்மை நிகழ்ந்துள்தோ என வினவிப் பாண்டியன் ஆராய்ந்தபோது, காவலர் வார்த்திகனுக்கு உண்டாக்கிய துனபத்தைக் கூறினர். மன்னன் வார்த்திகனை வருவித்து அவனிடம் மன்னிப்பு வேண்டினான். ஐயை கோயில்கதவு திறந்து கொண்டது. இங்குக் குறிப்பிடப்படும் மன்னனுடைய பெயரும் ஆரியப்படை கடந்த நெடுட்ஞ்செழியன் என்று கருதத்தக்கது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மதுரைநகர் (அரண்மனை) அழியும் என்ற நிமித்திக வாக்கு மக்களிடையே நிலவி வந்தது.37 அரியணையில் அமர்ந்தபடியே இறந்துபோனமையால் இந்தப் பாண்டியன் அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்றான். வார்த்திகன் நிகழ்ச்சியில், அறியாத மக்களின் சொல்லைக் கேட்டு, இவன் கொடுமை செய்தது போலவே கோவலன் நிகழ்ச்சியிலும் அரண்மனைப் பொற்கொல்லன் சொல்லைக் கேட்டு இவன் கோவலனைக் கொன்றுவிடச் செய்கிறான். முனனர்ச் சிறையில் இருந்து விடுதலையால் அப் பிழை பொறுக்கப்பட்டது. இப்பொழுது கொலையுண்ட உயிருக்கு ஈடாகத் தன் உயிரையே கொடுக்கவேண்டிய நிலை நேர்ந்துவிடுகிறது. தன் தவற்றினை உணர்ந்தபோது, தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர்துறந்தான். பாண்டிமாதேவியும் கோவலன் கொலைக்கு ஒருவகையில் காரணமாகயைால் கணவனுடன் தானும் மாண்டு செங்கோலை நிலை நாட்டுகிறாள்.

ஆரியப்படையை வென்றது

தமிழ்நாட்டுத் தெற்கிலிருந்த நிலப்பகுதியைக் கடல் கொண்டமையால் தமிழர், தம் நாட்டுப் பரப்பை வடக்கில் விரிவாக்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஆரியரும், தெற்கில் தம் நாட்டை விரிவுபடுத்திக் கொண்டிருந்தனர். இந்தப் போட்டியில் நிகழ்ந்த போர்களில் நெடுஞ்செழியன் ஆரியப் படைகளை வென்றிருத்தல் வேண்டும். ஆகையால், இவனுக்கு ‘ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்’ என்னும் பெயர் வழங்கியிருத்தல் வேண்டும். இங்குச் சுட்டப்படும் ‘ஆரியர், தொடக்க காலப்பல்லவராக இருத்தல் கூடும்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அப்போரில் ஏழு அரசர்களை வென்றவன் ஆவான், வென்வேற் செழியன் என்றும் ஒரு பாடலில் குறிப்பிடப்படுகிறான்.38 இப் பாடல் பாண்டியன் நெடுஞ்செழியன்மீது பாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.39 எனவே, ‘வென்வேற் செழியன்’பாண்டியன் நெடுஞ் செழியன்’ ஆகிய பெயர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே சுட்டுகின்றன. இப் போரில் ஏழு பேரை வென்ற அரசனைப் ‘பசும்பூட் செழியன்’ என்று குறிப்பிடப்படும் அரசனும் இவனே எனத் தெரிகிறது.40 வென்வேற் செழியன் என்னும் பெயர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பிறகு மதுரையில் அரியணை ஏறிய வெற்றிவேற் செழியன் என்னும் பெயரை நினைவுபடுத்துகிறது.41 இவன் தொடக்கத்தில் கொற்கை கோமான் என்றும், மதுரையை ஆண்ட அரசன் என்றும் குறிப்பிடப்படுகிறான்.42 கொற்கையில் ஆட்சியைத் தொடங்கிய இவன் ‘கடுந்தேர்ச்செழியன்’ என்றும், ‘தென்புலங் காவலர் மருமான்’ என்றும் குறிப்பிடப் படுகிறான். மற்றொரு பாடல் ‘இயல்தேர்ச் செழியன்’, ‘நெடுந்தேர்த் தென்னவர் கோமான்’ எனவும் குறிப்பிடுகிறது.43 தேர் அடைமொழியும், தென்னர் குடித் தலைமையும் சேர்ந்து மேலே கண்ட கருத்துகளை உறுதிப்படுத்துகின்றன. மற்றும் ‘கொடித்தேர்’ என்னும் அடைமொழியாலும் சிறப்பிக்கப்படுகிறான். 44 அடுபோர், வெம்போர், மறப்போர், நெடுந்தேர், கடுந்தேர், இயல்தேர், கொடித்தேர், திண்டேர் முதலிய சொற்கள் தலையாலங்கனாத்துச் செருவென்ற பாண்டியனைக் குறிக்கின்றன எனக் கூறலாம். வெற்றிவேற் செழியன் என்பதும் இவனையே உணர்த்தியது என்றும் நினைக்கலாம்.

நாடு

தொடக்க நிலையில் இவன் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்திருந்த நிலப்பரப்பை ஆண்டு வந்தான். கொற்கையை அடுத்த கடலில் முத்து எடுக்கப்பட்டது. அந்தக் கடற் பகுதியும் இவனாட்சிக்கு உட்பட்டிருந்தது.45 தென்னர் கோமான் என்றும், தென்புலம் காவலர் மருமான் என்றும் இவன் கூறப்படுவதால் தென் பாண்டிநாடு இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததெனத் தெரிகிறது. ஆலங்கானப்போர் இவனது இளமைப் போர் எனத் தெரிய வருவதால் அப்போருக்குப் பின்னர், இவன் தன்னாட்டின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான் எனத் தெரிகிறது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அரியணையிலிருந்து வீழ்ந்து இறந்தபிறகு பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்ற அரசன் இல்லை. நாட்டில் நல்லாட்சி இன்மையால், பாண்டிய நாடு மழை வளங்குன்றி நலிவுற்றது.46 இந்நிலை ஏற்படுவதற்குச் சில ஆண்டுகள் பிடித்திருக்கும். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.47 பின்னர்த்தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கூடல்நகரைக் கைப்பற்றி அரசனானான்.48 பின் இவன் எவ்வியை வென்று அவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த மிழலைக் கூற்றத்தைக் கைப்பற்றினான். வேளிரை வென்று முத்தூற்றுப் பகுதியைக் கைப்பற்றினான். கொங்கர்களை அவர்களது நாட்டைவிட்டுத் துரத்தினான். சேர அரசனுடைய முசிறியையும் கைப்பற்றினான். இவ்வகையில் இவனது நாட்டுப் பரப்பு விரிவடைந்தது. இவற்றால் அள்ளூர், சிறுமலை முதலிய பகுதிகள் இவனது ஆட்சிக்குட்பட்டன.49

போர்கள்

ஏழு அரசர்கள் ஒருங்குகூடித் தலையாலங்கானம் என்னுமிடத்தில் இந்த நெடுஞ்செழியனைத் தாக்கினர்.50 சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஏழு அரசர்கள் இந்தக் கூட்டுக் குழுவிலிருந்த பகையரசர்களாவர்.51 இப் போர் நடந்தபோது நெடுஞ்செழியன் மிகவும் இளைஞனாக இருந்தான் என்று தெரிகிறது.52 இந்தப் போரைப்பற்றிப் பல புலவர்கள் பல பாடல்களில் குறித்துள்ளனர். வேற்படையின் துணைகொண்டு அவன் வெள்ளிபெற்றதுபற்றியும், பிற அரசர் துணையின்றிப் போரிட்டு வென்றது. போருடை அணிந்த வீரர்கள் பேரெண்ணிக்கையில் வந்து தாக்கியது, கிணை முழக்குடன் ஒரு பகலிலேயே ஆரவாரமின்றி அடக்கத்துடன் திறமையாகப் போரிட்டது. தலையாலங்கானப் போரின் தொடர்ச்சியாகப் பகைவர்களைத் துரத்தியடித்து அவர்களுடைய அரண்களைத் தாக்கும் போரில் ஈடுபட்டது. கூலிப்படையின் துணையால் பகைவர் நாடுகளைச் சூறையாடியது. திங்கள் தோன்ற ஞாயிறு மறைந்ததுபோல அவர்களை வென்றது முதலான செய்திகள் கூறப்பெற்றுள்ளன. பகை மறவரின் மூதிற் பெண்கள் அழுதரற்றவென்று, ஒரு பகலில் வெற்றிபெற்றுப் பகைவரின் முரசு, குடை முதலியவற்றைக் கைப்பற்றிக் களவேள்வி செய்த வீரச் செயல்களையும்பற்றி மேற்கூறப் பெற்ற புலவர்கள் கூறியுள்ளனர். இப் புலவர்களில், இடைக் குன்றூர் கிழார், கல்லாடனார், குடபுலவியனார், நக்கீரர், வெங்கண்ணியார், மாங்குடி மருதனார் முதலியோர் முக்கிய மானவர் ஆவர்.

ஆலங்கானப் போரில் நெடுஞ்செழியன் உழிஞைப் பூச்சூடிப் போரிட்டான் என்று கூறப்பட்டுள்ளது.53 இவ்வகைப் போர் பகைவரின் கோட்டையைத் தாக்கும் போர்முறை என்பதை நாம் அறிவோம். இதனால், நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தை முதலில் தாக்கினான் என்பதும், அத்தாக்குதலை முறியடிக்கவே ஏழு அரசர்கள் ஒன்று சேர்ந்தனர் என்பதும் தெரியவருகின்றன. அப்போரில் நெடுஞ் செழியனை எதிர்த்த எழுவரில் ஐவர் குறுநில மன்னர்கள், எஞ்சிய இருவர் முடியுடை வேந்தர்கள் ஆவர். நெடுஞ்செழியனை எதிர்த்த சேரஅரசன் இன்னான் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சேரல் என்று அவனது பெயர் பொதுவகையால் சுட்டப் பெற்றுள்ளது. சேரல் என்னும் பொதுப் பெயருடன் நெடுஞ்சேரலாதன், நார்முடிச்சேரல், அந்துவஞ்சேரல், மாந்தரஞ்சேரல், பெருஞ்சேரல், இளஞ்சேரல் ஆகிய பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் ஆதன் என்னும் பின் அடையோ, இளமை, பெருமைப் பண்பை உணர்த்தும் முன் அடையோ இன்றிக் காணப்படும் அரசர்கள் நார்முடிச் சேரல், குட்டுவன்சேரல், மாந்தரஞ்சேரல் என்னும் மூவரேயாவர். இந்த மூவரில் மாந்தரஞ்சேரல் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறையிலிருந்து தப்பிச் சென்றான் என்று ஒரு பாடலில் கூறப்படுவதால், மேற் கூறப்பட்ட போரில் இந்தப் பாண்டியனை எதிர்த்துத் தோற்றவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையே என்று நாம் கருதலாம். இவன் சிறையில் இருந்து தப்பிச் சென்ற செயல், குழியில் அகப்பட்ட யானை, குழியைத் தூர்த்துக் கொண்டு தப்பிச் சென்றது போல் அமைந்திருந்தது என்று கூறப்படுவதால், சிறையில் அடைக்கப்பட்டான் என்பது தெளிவாகிறது.

நெடுஞ்செழியனை எதிர்த்த சோழன்

இவன் பெயர் செம்பியன் என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. இவன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் வழியில் வந்தவன் எனலாம். இச் செய்தியின் விளக்கத்தைச் சோழர் வரலாற்றில் நாம் கண்டோம்.

கடற்போர்

தலையாலங்கானத்துப் போர் நெடுஞ்செழியனுடைய இளமைக் காலத்தில் நடந்ததாகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பிறகு மதுரையை ஆண்ட அரசன் இன்னான் என்பது தெளிவாக விளங்கவில்லை. பசும்பூண் பாண்டியன் போன்ற அரசர்கள் இடைக் காலத்தில் அரசாண்டு உட்பூசலில் மாண்டுபோய், நாடு அரசனின்றி இருந்தது எனக் கருதலாம். இந்நிலையில் நெடுஞ்செழியன் கூடல் நகரத்தைத் தாக்கிப் பாண்டிய நாட்டின் அரியணையைக் கைப்பற்றி யிருக்க வேண்டும்.54 நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டினைக் கைப்பற்றுவதைச் சோழனும் சேரனும் எதிர்த்துள்ளனர். இவர்களுடைய முயற்சி வெற்றிபெறாது. தங்களுடைய முரசங்களைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு ஓடினர். நெடுஞ்செழியன் பெருவெற்றி பெற்றான்.55

எவ்வி, வேளிரோடு போர்

நெடுஞ்செழியன் கொற்கையிலிருந்து மதுரைக்குத் தலைநகரை மாற்றிக்கொள்ளவே, பாண்டிய நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையில் கிழக்குப் பகுதியில் மிழலைக் கூற்றத்தை ஆண்டுவந்த எவ்வி என்ற குறுநில மன்னன் பாண்டியனுக்குக் கப்பம் கட்டாது ஆளத்தொடங்கினான் போலும். இதனால், நெடுஞ்செழியன் எவ்வியைத் தாக்கி நல்லூரைத் தன்னகத்தே கொண்ட அவனது மிழலைக் கூற்றத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அக்காலத்தில் முத்தூறு என்னும் பகுதியில் வாழ்ந்த தொன்முது வேளிர் என்னும் குடிமக்கள், தம்முள் ஒன்று கூடி நெடுஞ்செழியனை எதிர்த்தனர். நெடுஞ்செழியன் அவர்களை வென்று, அவர்களது முத்தூற்றுகூற்றத்தைத் தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டான்.

பல்குட்டுவரை வென்றது

சேர அரசர்களில் இளஞ்சேரல் இரும்பொறை, குட்டுவர் ஏறு என்று கூறப்பெறுகின்றான். இவனது தந்தை குட்டுவன் இரும்பொறை என்று குறிப்பிடப்படுகிறான். எனவே, பொறையர் குடியைச் சேர்ந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குக் குட்டுவர் குடியைச் சேர்ந்த சிற்றரசர்கள் உறுதுணையாய் விளங்கி வந்தனர். நெடுஞ்செழியன் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைத் தாக்கிய பொழுது பல குட்டுவர்களுடன் போரிட நேர்ந்தது.

முசிறிப்போர்

பல்குட்டுவரை வென்றதன் காரணமாக, கீழைச் சேரர் செல்வாக்கை ஓரளவு இவன் அடக்கிவிட்டான். அப்போது மேலைச் சேரர் இவனை எதிர்த்து நின்றனர். சேரன் செங்குட்டுவனுக்குக் குட்டுவன் சேரல், குட்டுவன்கோதை என இருமக்கள் இருந்தனர். குட்டுவன் சேரல் பரணருக்குப் பணிவிடையாளாகக் கொடுக்கப்பட்டான். குட்டுவன் கோதையே நாட்டையாண்டு வந்தான்; தன் தந்தை செங்குட்டுவனுக்குப் பிறகு தொண்டி, வஞ்சி முதலிய இடங்களில் ஆட்சி புரிந்தான். குட்டுவன் கோதையின் துறைமுகப்பட்டினமாகிய முசிறியை நெடுஞ்செழியன் தாக்கி, அவனுடைய யானைப் படையை அழித்தான். குட்டுவன் கோதையும் தோல்வியுற்றான். இதனால் நெடுஞ்செழியன் பல குட்டுவரை வென்றவன் என்று பாராட்டப் பெற்றான்.

நெல்லினூர் கொண்டது

பெருங் கப்பல்கள் வந்து தங்கி, வாணிகச் சிறப்புடன் விளங்கிய ‘நெல்லினூர்’ என்னும் ஊரையும் நெடுஞ்செழியன் கைப்பற்றினான். நெல் சிந்தம் என்னும் மேற்குக் கடற்கரைத் துறைமுகம் வாணிகத்தில் சிறப்புற்று விளங்கி, பாண்டியர்களுக்குரியதாய் விளங்கியது பற்றியும் கிரேக்க ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நெல்லினூரையே அவர்கள் நெல்சிந்தம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நெல்லினூரையே நெடுஞ்செழியன் கைப்பற்றினான்.56 குட்டுவரையும் முசிறியையும் வென்ற செய்திகளுக்கு இவ்வெற்றி தொடர்புடையதாகிறது.

முதுவெள்ளிலையும், முதுபொழில் மண்டிலமும்

முதுவெள்ளிலை மருதநில வளமும் நெய்தல்நில வளமும் ஒருங்கமையப்பெற்ற ஓர் ஊர். இவ்வூரை நெடுஞ்செழியன் கைப்பற்றிக் கொண்ட பிறகு இவனது நல்லாட்சியில் மகிழ்ந்து அவ்வூர் மக்கள் அவனைப் பெரிதும் பாராட்டினர்.57 முதுபொழில் மண்டிலம் என்பது சிறப்பாக ஓர் இடத்தைக் குறிப்பது அன்று. நாவலந் தன் பொழிலாகிய நாடு முழுவதுமே முதுபொழில் மண்டியலமாகும். இவன் பல நாடுகளை வென்று தன் ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்த செயலே முதுபொழில் மண்டலம் முற்றியதாகக் கூறப்படுகிறது.58

ஆட்சி

குளம் வெட்டி நாட்டில் நீர்வளத்தைப் பெருக்க வேண்டும் என்று புலவர் ஒருவர் இவனிடம் அறிவுரை கூறினார்.59 இவரது அறிவுரைப் படி இவன் பெருங்குளம் என்னும் பெயருடைய குளத்தை அமைத்தான்.60 இவன் நான் மறைகள் கூறும் வேள்விகளைச் செய்தான்.61 அன்றியும் களச்சோறு வழங்கும் வேள்வியும் செய்தான்.62 இந்த வேள்விகள் பல நாடுகளை வென்றதன் நினைவாகச் செய்த அறக்கொடைகள் ஆகும். இந்த அறக்கொடைகள் வீரர்க்கும், பாணர் முதலானோர்க்கும், நான்மறைவல்ல அந்தணர்களுக்கும் வழங்கியவையாகும்.

புறநானூற்றுச் செய்யுளில் நம்பி நெடுஞ்செழியனைப்பற்றிக் கையறு நிலையில் பேரெயின் முறுவலார் என்ற புலவர் பாடியுள்ளார். நம்பி நெடுஞ்செழியன் போரில் ஈடுபட்டு உயிரிழந்தான். போர்க்களத்தில் இறந்த அவனுடைய தலைமாத்திரம் கிடைத்த நிலையில் பேரெயின் முறுவலார் பின்வருமாறு இரக்கம் கொண்டு பாடியுள்ளார். ‘நம்பி நெடுஞ்செழியன், சந்தனம் பூசி மலர்மாலையணிந்து உரிமை மகளிரைத் தழுவி மகிழ்ந்தான்; பகைவர்களை அடியோடு ஒழித்தான்; நண்பர்களுக்கு உயர்வளித்தான். தன்னைவிட வலிமை உடையவ ராயின் அவர்களிடம் வணங்குவதோ, தன்னைக் காட்டிலும் வலிமை குறைந்தவர்கள் முன்னிலையில் தன்னைப் புகழ்ந்துபேசிக் கொள்வதோ இவனிடம் காணமுடியாத பண்புகள். பிறரிடம் இரப்பதோ, இரந்தவர் களுக்குக் கொடுக்க மறுப்பதோ இவனிடம் கிடையாது. பல அரசர்கள் கூடியிருந்த சபையில் தலைமை தாங்கினான்; தாக்க வரும் படையை எதிர்க்கத் தான் முதலில் சென்றான்; பல படைகள் தன் முன் நிற்க மாட்டாது புறமிட்டு ஓடியதைக் கண்டு மகிழ்ந்தான்; குதிரைமீதும், தேர்மீதும், களிறுமீதும் ஊர்ந்து சென்று அந்தந்தப் படைகளின் தலைமையை ஏற்றுப் போரிட்டான்; பாணர்களின் பசியைத் தீர்த்தான்; மிகுதியாகக் குடிக்காமல், அளவோடு பருகி, கள் மயக்கம் கொண்டு பேசும் வழக்கம் இவனிடம் இல்லை. இத்தகைய நற்பண்புகள் உடையவனாக இருந்தான்.63

நம்பி நெடுஞ்செழியன்

பாண்டியன் அறிவுடை நம்பி என்னும் அரசன் ஒருவன் சங்க காலத்தில் விளங்கினான்.64 நம்பி நெடுஞ்செழியன் என்ற பெயரை நோக்குகையில் இவனை அறிவுடை நம்பியின் மகன் என்று கருதலாம்.

3. மாறன் என்னும் பெயருடைய அரசர்கள்

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய புலவர்களான மருதன் இளநாகனாரும் நக்கீரரும் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் நேரில் கண்டு பாடியுள்ளனர்.65 இவனைப் பாடியுள்ள பிற புலவர்களை நோக்கும் போது இவன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனுக்குப் பிறகு ஆட்சி புரிந்தவன் எனத் தோன்றுகிறது. நெடுஞ்செழியனுக்கும் இவனுக்கும் இருந்த உறவையும் நெடுஞ்செழியனுக்கு அடுத்து அரியணையில் அமர்ந்தான் என்பதையும் திட்டவட்டமாகக் கூற இயலாத நிலை உள்ளது. இவன் நெடுஞ்செழியனுடைய மகனா என்பது பற்றியும் கூறமுடியவில்லை.

நெடுஞ்செழியன் மதுரையில் வேரரசனாக விளங்கியபோது இவன் கொற்கைப் பகுதியில் இருந்து நாடுகாவல் புரிந்து வந்தான் என்று கருதலாம். இவனை நேரில் கண்டு வாழ்த்திய புலவர் ஒருவர் செந்தில் கடற்கரையில் உள்ள மணலினும் மேலான பல காலம் இவன் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றார்.66எந்த இடத்திலும் இவன் மதுரையில் இருந்து அரசாண்டான் என்று குறிப்பிடப்பெறவில்லை. பாண்டியப் பேரரசர்களின்கீழ் ஆண்ட அரசன் என்ற நிலையிலேயே இவன் காலம் முடிந்துவிட்டதோ என்று எண்ண வேண்டியுள்ளது. பிறர் நாட்டைக் கைப்பற்றும் போது அவர்களது வயல்களிலுள்ள விளைச் சல்களை வீரர்கள் கவர்ந்து கொண்டாலும் கொள்ளட்டும்; அவர்களது பேரூர்கள் எரியூட்டப்பட்டாலும் படட்டும்; பகைவீரர்களைக் கொன்றாலும் கொல்லட்டும். ஆனால், பகையரசர்களுடைய காவல்மரத்தை மட்டும் வெட்டவேண்டா என்று புலவர் ஒருவர் இவ்வரசனுக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்த அறிவுரை இவன் போருக்கு எழுந்தபோது, போர் வேண்டா என்று தடுத்துரைத்த அறிவுரையாகலாம்.67 இவன் தாராளமாகக் கொடை வழங்கியதாகத் தெரியவில்லை. பரிசில் வழங்கக் காலம் தாழ்த்தியிருக்கக்கூடும். இவனது போக்கைக் கண்டித்துப் புலவர்கள் இவன் நோயின்றி வாழ்ந்தால் சரி என்று வாழ்த்தியுள்ளார்கள்.68 இவனது மனைவி கடவுள் சான்ற கற்பினை உடையாள்; சிறந்த செம்பொன் அணிகலன்களுடன் விளங்கினாள்; பெண்மைக்குரிய மடயைத் தன்மை கொண்டவள்.69

இவனுக்கு ஆண்மக்கள் சிலர் இருந்தனர். அவர்கள் கிண்கிணி அணிந்த காலுடன் விளங்கியதைக் கண்ட புலவர்கள் வாழ்த்தியுள்ளனர். காலைக் கதிரவன் போலவும், வளர்பிறை போலவும் இவன் வாழவேண்டும் என்று வாழ்த்தும் புலவர் ஒருவர் இவன் சினத்தால் எமனையும், வலிமையிற் பலராமனையும் புகழால் திருமாலையும், எண்ணிய செயலை முடித்தலில் முருகனையும் ஒத்தவன் என்று குறிப்பிட்டுள்ளார்.70

‘பூந்தார் மாற’71 என்று இவன் கூறப்படுவதிலிருந்து இவரது மலர்மாலை அணிந்து விளங்கிய கோலத்தையும், ‘கடுமான் மாற’72 என்று கூறப்படுவதிலிருந்து இவனது குதிரைச் சவாரியையும் ‘திண்டேர் அண்ணல்’73 என்று கூறப்படுவதிலிருந்து இவன் தேரில் உலாவச் சென்ற காட்சியையும் நாம் உணரமுடிகிறது. இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் என்னும் பெயர் இவன் இலவந்திகைப் பள்ளி என்னுமிடத்தில் மாண்டதைத் தெரிவிக்கிறது. இலவந்திகை என்னும் சொல் தாமரைக் குளத்தை சூழ்ந்த சோலையாகும்.

சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்

இவனைப் பாடிய புலவர் வேறு எந்த அரசனையும் தமது பாடல்களில் குறிப்பிடவில்லை. ஆகவே, இவனது காலத்தை திட்டவட்டமாக அறிய முடியவில்லை. மணிமேகலையை இயற்றிய மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவர் அல்லர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்விருவரும் ஒருவராயின் இவரால் பாடப்பெற்ற இந்த நன்மாறன் சேரன் செங்குட்டுவன் காலத்தவன் என்று கூறலாம்.

இவனது அகன்ற மார்பில் முத்தாரம் அணிந்திருந்தான். இவனது கைகள் முழந்தாள்வரை நீண்டு இருந்தன. பகைவர்களைக் காய்வதில் இவன் ஞாயிறு போன்றவன்; பொய் என்பதை முற்றிலும் வெறுத்தவன். இவனது இறுதிக்காலம் சித்திரமாடம் என்னுமிடத்தில் முடிவுற்றது. இஃது ஒரு மாளிகையின் பெயராகவோ, ஊர்ப் பெயராகவோ இருக்கலாம்.

முடத்திருமாறன்

இவன் ககாடபுரத்தில் இருந்த இடைச்சங்கத்தைப் புரந்து வந்தான் என்றும், கபாடபுரம் கடல்கோளுக்கு இரையானபோது தப்பி மதுரைக்கு வந்து கடைச்சங்கத்தை நிறுவினான் என்றும் இவனைப்பற்றிச் செவிவழிச் செய்தி கூறுகிறது.74 சிறந்த புலவனாகவும் விளங்கிய இவனது பாடல்கள் இரண்டு சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவன் தனது நண்பனான குட்டுவன் என்னும் சேர அரசனைத் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளான். இவன் குடவரைப் பகுதிக்கு அரசன். குடவரை என்பதை மேற்குத் தொடர்ச்சிமலையாகக் கொள்ளலாம். நீரும் நிழலும் இல்லாத வழியில் பொருள் தேடச் செல்லும் தலைவன் தன் காதலியை நினைத்துக்கொண்டு கவல்வதாகவும், களவு வழியில் காதலியைப்பெறத் தலைவன் மின்னல் வெளிச்சத்தில் வழியை அறிந்து வரும் அச்சந்தரும் காட்சியையும் தனது இரு பாடல்களில் சிறப்பித்துப் பாடியுள்ளான்.75

மாலைமாறன்

மாறன் என்று பாண்டியரை உணர்த்தும் சொல் இவனது பெயரில் உள்தால் இவனது வரலாற்றை இங்குக் கூறுகிறோம். மற்றபடி, இவன் ஒரு புலவன் என்ற நிலையிலேயே காணப்படுகிறான். இவனது பாடல் சங்கநூலில் இடம் பெற்றுள்ளது.76 களவு வழியில் கூடிய தலைவனை எண்ணி எண்ணி உருக்குலைந்த தன் நிலையைப்பற்றிக் கூடக் கவலைப்படாது, தலைவன் மீது பழிதூற்றுவார்களே என்று தலைவி ஒருத்தி வருந்துவதாக இவன் பாடியுள்ள பாடல் பெண்களின் பெருந்தகைமையைப் புலப்படுத்துவதாக உள்ளது.77

பழையன் மாறன்

பழையன் என்னும் பெயர் கொண்ட இருவர் சங்ககால வரலாற்றில் காணப்படுகின்றனர். ஒருவன் மோகூர் மன்னன் என்ற முறையில் அறிமுகமாகிறான்.78 மற்றொருவன் ‘போர்’ என்னும் ஊரின் தலைவன். மோகூர்ப் பழையன் பாண்டிய அரசர்களுக்கு உறுதுணையாய் விளங்கியவன். போர்ப் பழையன் சோழர் படைத்தலைவன். வித்தை என்னும் இடத்தை ஆண்ட அரசன் ‘இளம் பழையன்’ மாறன் என்னும் பெயர் பெற்றுள்ளான்.79 மோகூர் அரசனைச் சேரன் செங்குட்டுவன் வென்றான். விந்தை அரசன் இளம்பழையன் மாறனை இளஞ்சேரல் இரும்பொறை வென்றான். போர் அரசன் பழையனை நன்னன் முதலான ஏழுபேர் கூட்டாகத் தாக்கிப் போரில் கொன்றனர். மாறன் என்றால் இவனையே குறிக்கும் அளவிற்கு இவனது பெயர் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தில் பரவியிருந் தமையால் இவன், பெரும்பெயர் மாறன் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறான்.80 பாண்டியன், மோகூரின் ஆட்சிப் பொறுப்பினை இவனிடம் ஒப்படைத்திருந்தான்; கோசர் இவனது அரசவையைச் சிறப்பித்தனர்.81 இவனுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் கூடல் நகரில் ஒரு போர் நடந்தது.82

கிள்ளிவளவன் என்ற சோழ அரசன் மதுரையில் வெற்றி பெற்ற செய்தி நமக்கு ஒரு வரலாற்றுத் தொடர்நிகழ்ச்சியை உய்த்துணர உதவி செய்கிறது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் செங்குட்டுவன் காலத்தவன். கோவலனது கொலையால் இவன் தன் அரியணையிலிருந்து வீழ்ந்து இறந்தான். பிறகு பழையன் மாறன் மதுரையில் செல்வாக்குப் பெற முயன்றான்.83 அந்த முயற்சியில் சோழன் கிள்ளிவளவன் வெற்றி பெறவே, மதுரை சோழர் வசமாகிவிட்டது. பழையன் மாறன், பின் மோகூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரலானான். சோழன் கிள்ளிவளவன் பசும்பூண் பாண்டியன் என்பவனைப் பாண்டிய நாட்டிற்கு அரசனாகச் சில காலம் ஆண்டுவரச் செய்தான்.

பசும்பூண் பாண்டியன் சோழருக்குட்பட்டு அவர்களுக்குத் திறை செலுத்திக்கொண்டு, நாட்டை ஆண்டு வந்திருக்கலாம். இந்நிலை பாண்டியரின் விடுதலையுணர்வைத் தூண்டி தன்னாட்சி பெறும் மனப்பான்மையை வளர்த்தது. இந்த உயர்வே வெற்றிவேற்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற நிலையில் நமக்கு அறிமுகமாகி மதுரையைக் கைப்பற்றி ஆண்ட நிகழ்ச்சியில் முடிந்தது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது வெற்றியில் சோழனும் சேரனும் தோல்வியுற்றத்தை அவனது வரலாற்றில் காணலாம்.

மதுரை நகரில் அரியணையில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அமர்ந்தபின் பழையன் மாறன் அவன் படைத்தலைவனாக விளங்கினான். மோகூர் ஆட்சிப் பொறுப்பும் அவனிடம் இருந்தது. கோசர் படையில் தலைவனாகவும் கோசர் குடிமக்களைத் தன் அரசவையில் கொண்ட மன்னனாகவும் இவன் விளங்கினான்.

மேற்கூறப்பெற்ற போரில் இவனது காவல்மரமான வேம்பு வெட்டி வீழ்த்தப்பட்டது. அம் மரத்தின் அடித்துண்டை வெற்றி பெற்ற செங்குட்டுவன் முரசு செய்து கொள்வதற்காகத் தன் தலைநகருக்கு இழுத்துச் சென்றான். போரில் இறந்த வீரர்களின் மனைவியர் கைம்மை நோன்பிற்காகக் களைந்த தலைமயிரைக் கொண்டு கயிறு திரித்து அந்தக் கயிற்றில் வெட்டிய வேப்பமரத்துண்டைக் கட்டி யானைகளில் பிணைத்து தன் தலைநகர்க்கு இழுத்துச் சென்றான். இந்தப் போரில் பழையன் மாறன் மாண்டிருக்கலாம்.84

சிறப்புகள்

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு இவன் பலபோர்களில் வெற்றி தேடிச் தந்திருக்கிறான். இதனைப் பாராட்டி நெடுஞ்செழியன் இவனுக்கு வேலைப்பாடு அமைந்த மாலை ஒன்றைச் சூட்டிச் சிறப்பித்தான்; மாறன் என்னும் பட்டத்தையும் அளித்தான்.85 பழையன் என்று பொதுப்பட வழங்கப்பட்டுவந்த இவன், இந் நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பழையன் மாறன்’ என்று வழங்கப்படலானான் என்பதைப் ‘பெரும்பெயர் மாறன்’ என்னும் தொடர் உணர்த்துகிறது.

தோற்றம் - குடி

‘நெடுந்தேர் இழையணி யானைப் பெரும்பெயர் மாறன்’ என இவன் சிறப்பிக்கப்படுதலால், தேரிலும் யானையிலும் இவன் உலாப்போந்த காட்சி நமக்குக் காட்டப்படுகிறது. பழையன் இவனது பெயர். இவன் பழையர் குடியைச் சேர்ந்தவனாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இளம் பழையன் மாறன்

இவன் ‘வித்தை’ என்னும் இடத்தையாண்ட அரசன். இவன் இளஞ்சேரல் இரும்பொறையோடு போரிட்டுத் தோல்வியுற்றான்.86 பெயர் அமைதிகொண்டு பழையன் மாறனின் தம்பியாக இவன் இருக்கக்கூடும் என்று எண்ணத்தோன்றுகிறது. இருவரும் மாறன் என்ற பட்டம் பெற்றிருப்பதும், சேர அரசர்களிடம் தோல்வியடைந்ததும் இக்கருத்திற்கு வலுவூட்டுகின்றன.

4. வழுதி என்னும் பெயருடைய அரசர்கள்

‘வழுதி’ என்பது பாண்டியர்க்கு வழங்கப்பட்ட பெயர்களுள் ஒன்று. இச்சொல் ‘வழித்தோன்றல்’ என்னும் பொருளில் தோன்றியதாக எண்ண இடமுண்டு. இப் பெயரைக் கொண்ட அரசர்கள் சங்க காலத்தில் பலர் இருந்தனர். பெருவழுதி என்னும் பெயர்பெற்றுள்ள அரசர்கள் நால்வேறு அடைமொழிகளைக் கொண்ட நிலையில் காணப்படுகின்றனர். சிறப்பு அடைமொழிகளை நோக்கி, இவர்களை வெவ்வேறு அரசர்கள் என்று கொள்வதே பொருத்தமாக அமைகின்றது.

பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி

வழுதி எனப்படும் அரசர்களுள் இவனே காலத்தால் முந்தியவனாகக் காணப்படுகிறான்87 இவனை வாழ்த்தும் புலவர் பஃறுளியாற்றின் மணலைக்காட்டிலும் பல்லூழி வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்.88 பஃறுளியாறு சங்ககாலத்திலேயே கடலால் கொள்ளப்பட்டது. எனவே, இவன் அந்த ஆறு கடலால் கொள்ளப்படுவதற்குமுன் வாழ்ந்தவன் என்று தெரிகிறது. ஆதலால், இவனைப் பிறரினும் பழமையானவன் என்று நாம் கொள்ளலாம். இவனைப் பாடிய எல்லாப் புலவர்களும் இவனை மட்டுமே பாடியுள்ளனர். இவர்கள் வேறு அரசர்களையும் பாடியிருந்தால் அவ்வாறு பாடப்பெற்ற அரசர்களின் காலத்தைக் கொண்டு இவ்வரசனுடைய காலத்தைக் கணிக்கக் கூடும்.

இவன் பஃறுளியாறு கடலோடு கலக்குமிடத்தில் நிகழ்ந்த விழாவில் கலந்துகொண்டான்.89 அவ் விழாவில் யாழில் வல்ல வயிரியர்களுக்குச் சொக்கத் தங்கத்தைப் பரிசாக வழங்கினான்.90 அத்துடன், தன் கோமகனையும் அவர்களுக்குப் பரிசாக அனுப்பி வைத்தான். அவன் ‘கடல்விழா நடத்தி மகிழ்ந்த நெடியோன்’ என்னும் பெயரினன்.91 கடல்விழா என்பது வணிகர்விழா. முதுகுடுமிப் பெரு வழுதியின் மகன் நெடியோன் ஆவான். இவன் ‘குடுமி தன்கோ’ என்று குறிப்பிடப்படுகிறான். முதுகுடுமியின் மகனான நெடியோனின் கால்வழித் தோன்றியவன்தான் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.92

போர்கள்

முதுகுடுமிப் பெருவழுதி பல போர்களில் ஈடுபட்டு வெற்றி கண்டான். இமயமலைக்கு வடக்கிலுள்ள நாடுகளிலும், குமரி முனைக்குத் தெற்கிலுள்ள கடல் தீவுகளிலும், கீழைக்கடலிலும், மேலைக்கடலிலும் இருந்த தீவுகளிலும் இவனது புகழ் பரவியது.93 இவனிடம் கடற்படையும் யானைப்படையும் இருந்தனவாகக் கருதலாம். இவற்றைக்கொண்டு இவன் இந்த வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும். தான் வெற்றிபெற்ற இடங்களில் கிடைத்த செல்வங்களைக்கொண்டு தன்னிடம் பரிசில் நாடி வருவோர்க்கெல்லாம் வாரி வழங்கினான். நல்வேள்ளி என்று சிறப்பிக்கப்படும் வேள்வியை இவன் செய்தான்.94 கள்ளும் கறிச் சோறும் அளித்தான், போரில் வெற்றிபெற உதவியவர்களையும் வெற்றி பெற்றபின் பாராட்டியவர்களையும் தானே அழைத்து, வேண்டிய பரிசில்களைக் கொடுத்துக் கொண்டாடும் வேள்வி, நல்வேள்வியாகும்.95 இந்த நல்வேள்வியில் நான்மறை முனிவரை இவன் பாராட்டாதது கண்ட புலவர் ஒருவர்96 மனம் வருந்தி நான்மறை முனிவர்க்குத் தலை வணங்கியும், சிவ பெருமான் நகர்வலம் வரும்போது தன் குடையைச் சாய்த்துப் பிடித்தும் மரியாதை செய்ய வேண்டும் என்று கூறினார். முதுகுடுமி, புலவர் அறிவுரையை ஏற்று அவர் விருப்பப்படி செய்தான். நான்மறை முறைப்படி யூபம் என்னும் வேள்வித் தூண்கள் பல நட்டான், நான்மறை வல்ல அந்தணர்களைக் கொண்டு பல வேள்விகளைச் செய்வித்தான்.97 இவ்விதம் பல வேள்விகளைச் செய்தமையால் இவன் ‘பல்யாகசாலை' என்னும் அடைமொழியுடன் வழங்கப்பட்டான்.

புலவர்களுக்கும் பொற்றாமரைப் பூக்களைப் பரிசளித்துச் சிறப் பித்ததும், புலவர்களுக்கு யானைகளையும், தேர்களையும் பரிசில்களாக நல்கியதும் இவனது கொடைகளில் நினைவுகூரத் தக்கவை.

பகைவர் நாட்டின் தேர் சென்ற தெருக்கள் எல்லாவற்றிலும் கழுதைகளைப் பிணைத்துத் திரியவிட்டதும். அறுவடை செய்யும் நிலையில் உள்ள விளைச்சல் வயல்களில் தன்னுடைய தேர்ப்படையுடன் சென்று பாழாக்கியதும் இவன், தனது பகைவர்கள் நாட்டிற்குச் செய்த கொடுமையாகும். இஃது அக்காலப் போர் மரபாகக் கருதப் பட்டதுபோலும். முதுகுடுமி என்னும் இவனது பெயர் முதுமையை உணர்த்தும் நரைத்தலை முடி உடையவனாக இவன் விளங்கியதால் அமைந்திருக்கலாம். போரில் மிகுதியாகப் பழகியதால், இவனது மனைவிமார் ஊடல் கொண்டபோதும் அன்பாகப் பேசாமல் அடக்கு முறையைப் பின் பற்றி வந்தான். இதனால் மகளிர் சினந்தால், எதிராகச் சினங்கொள்ளக்கூடாது என்று புலவர் இவனுக்கு அறிவுரை கூறினார்.99

கானப்பேர் எயில் கடந்த உக்கிரப்பெருவழுதி100

இவனது பெயரை நமக்கு அறிவிப்பவர் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியரே ஆவர். அவர் ஓரிடத்தில் கடந்த என்னும் சொல்லாலும் மற்றோரிடத்தில் ‘தந்த’ என்னும் சொல்லாலும் இவனைக் குறிப்பிடுகிறார். கானப்பேர் எயில்பற்றியும், அதனை வேங்கைமார்பன் என்பவன் ஆண்டதுபற்றியும், காவற்காடு. காவல் சிற்றூர்கள், ஆழ்ந்த அகழி, உயர்ந்த மதில், முன் பூத்தன்ன ஞாயில் ஆகியவற்றைக் கொண் டிருந்த தன் கானப்பேர் எயில் கோட்டையைப் பறிகொடுத்துவிட்டு வேங்கைமார்பன் ஓலமிட்டு வருந்தியது பற்றியும் சங்கப் பாடல்களில் தெளிவான செய்திகள் உள்ளன. இந்த வெற்றி இவனது வரலாற்றில் மிகவும் சிறப்புடையதாய் விளங்கியதுபற்றி, இவன் ‘கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி’ என்று சிறப்பித்துக் கூறப்பட்டான்.

மூவேந்தர் நட்பு

தமிழக வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக எண்ணத்தக்க மூவேந்தர் நட்பு இவன் காலத்தில் அமைந்தது. சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியோருடன் இவனும் சேர்ந்து முத்தீப் போல அமர்ந்திருந்து செயல்படும் காட்சியைப் புலவர் ஒருவர் கண்டு வாழ்த்தியுள்ளார்.101 பார்ப்பார்க்குப் பூவும் பொன்னும் தாரை வார்த்துத் தரவேண்டும் என்றும், மகளிர் பொற்கலத்தில் ஊட்டும் தேறலை உண்டு மகிழ்ந்து களித்திருக்க வேண்டும் என்றும் கூறி அவர் வாழ்த்தினார்.

மூவேந்தரின் இத்தகைய கூட்டுறவு பாரியைப் பொறுத்தமட்டில் தீதாய் முடிந்தாலும், தமிழைப் பொறுத்தமட்டில் நன்மையாக முடிந்தது. தமிழ்நாட்டு மூவேந்தர்களிடையே பகைமை நீங்கி அமைதி நிலவியது. பாண்டியன் தமிழில் பாடல்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டான். உக்கிரப் பெருவழுதி காலத்தில்தான் குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை என்னும் நூல்கள் தொகுக்கப்பட்டன. நெடுந்தொகை அல்லது அகநானூறு என்னும் நூலைத் தொகுக்கும் பணியைத் தானே மேற்கொண்டான்; உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திரசன்மன் என்னும் புலவரைத் தலைமைப் புலவராக அமர்த்தி அத் தொகுப்புப் பணியைச் செய்து முடித்தான். திருக்குறள் அரங்கேற்றமும், இறையனார் களவியலுக்கு நக்கீரர் என்பார் எழுதிய உரையும் இவனது அவையில் அரங்கேற்றப்பெற்றன என்பது செவிவழிச் செய்திகளாகும். நாஞ்சில் வள்ளுவன் இவன் காலத்தில் வாழ்ந்தவன்.102

வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி103

சோழ அரசன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் இந்தப் பாண்டிய அரசனும் ஒருங்கிருக்கக் கண்ட புலவர் ஒருவர் இவர்களுடைய நட்பு நீடிக்கவேண்டுமென்று வாழ்த்துகிறார். இவர்கள் கூடியிருந்த இடம் சோழ நாட்டுத் தலைநகர் என்பது. புலவர் சோழனை முன்னிலைப்படுத்தியும் பாண்டியனைப் படர்க்கையில் குறிப்பிட்டும் பாடியிருப்பதிலிருந்து தெரிகிறது. இவ்வரசனைப் பாடிய புலவர். பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும்104 பிட்டங்கொற்றனையும் தனித்தனியே நேரில் கண்டு பாடியுள்ளார்.105 பிட்டங்கொற்றன், சேர அரசன் கோதையின் படைத்தலைவன் என்பதும்106 கோதை அல்லது கோதை மார்பன். கிள்ளி வளவனிடம் பழையன் மாறன் மதுரையில் தோற்றபோது மகிழ்ந்தான் என்பதும்107 பல பாடல்களைத் திரட்டி அறியப்படும் சமகால நிகழ்ச்சிகள்.

இந் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து எண்ணும்போது பழையன் மாறன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்காக மதுரையில் போரிட்டான். அச்சமயத்தில் பாண்டியநாட்டு அரியணையைப் பெறப் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனின் உதவியை வேண்டினான். அப்போதுதான் சோழன் அவையில் இருவரையும் ஒருங்கு கண்டு புலவர் வாழ்த்தினார். பெருந்திருமா வளவன் குராப்பள்ளியில் துஞ்சியவன் என்பது அவனது பெயரால் தெளிவாகிறது.108 அந்த அடைமொழியைக் கொண்ட கிள்ளிவளவன் என்பது இவனே ஆவான்.109 திருமாவளவன் என்பது இச் சோழனின் இயற்பெயர். கிள்ளிவளவன் என்பது கிள்ளியின் மகன் வளவன் என்று விளங்கும் பெயர்.

கிள்ளிவளவன் தன்னை நாடிவந்து உதவி வேண்டிய வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதிக்கு உதவினான். பாண்டியனின் கூடல் நகரத்தைத் தாக்கி வென்று, பெருவழுதிக்கு அளித்தான். இந்தப் பெருவழுதி மதுரையில் இருந்து அரசாண்டு வரும்போது, வெள்ளியம்பலம் என்று வழங்கப்பெறும் மதுரைச் சொக்கநாதர் கோயில் மன்றத்தில் உயிர்நீத்தான்.110 இந்தப் பெருந்திருமாவளவனும், பெரு வழுதியும் சேர்ந்து வென்ற நாடுகளில் புலிச் சின்னமும் கயற்சின்னமும் சேர்த்துப் பொறிக்கப்படவேண்டும் என்று புலவர் அறிவுரை கூறினார். இவனது ஆட்சிக் காலத்தில் சோழ, பாண்டிய நாட்டு இலச்சினைகள் இவ்வாறு விளங்கின எனக் கொள்ளலாம். (இந்த கூட்டுச் சின்னத்தை மீண்டும் தனிச் சின்னமாக்கியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.) பாண்டியர் ஐந்து கூறுகளாகப் பிரிந்து நாடாண்டு வந்தனர்.111

இளம்பெருவழுதி

இவன் புலவன் என்ற நிலையிலேயே காணப்படுகிறான். வழுதி என்னும் பெயர் அமைதியை எண்ணி, ஏதாவது ஓரிடத்தில் இளவரசனாகவேனும் இருந்திருக்கக்கூடும் என்று கருதலாம். வழுதியர் குடியில் தோன்றியவன் எனக் கொள்ளலாம். கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் பெயரால் இவனைப் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் குறிப்பிடுகிறார். தேவாமிர்தமே கிடைத்தாலும் தனியாக உண்ணாமல் பகுத்துண்ணல், பிறர் அஞ்சுகிறார்களே என்று தானும் பழிக்கு அஞ்சிச் செயலாற்றுதல், புகழ் தரத்தக்க செயலுக்காக உயிரையே கொடுத்தல், பழிக்கத்தக்க செயல்களில் உலகமே பரிசாகக் கிடைப்பதாயினும் அவற்றைச் செய்யாமை, தனது ஊக்கமான செயல் முயற்சிகளைப் பிறர் நலம் கருதிச் செய்தல் ஆகிய சிறந்த பண்புடையவர்கள் உலகில் வாழ்வதால்தான் இந்த உலகம் அழியாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்னும் கருத்தமைந்த பாடலை இவன் பாடியுள்ளான்.112 இவன் கடலுள் மூழ்கி இறந்து போனான். கடற்போரில் ஈடுபட்டிருந்தபொழுது இந்தச் சாவு நிகழ்ந்து இருக்கலாம். முதுகுடுமிப் பெருவழுதி கடற்போரில் ஈடுபட்டதையும், செங்குட்டுவன் கடல் வாணிகத்திற்கு உதவும் பொருட்டுப் போரிட்டதையும் நாம் இங்கு நினைவுகூரலாம்.

முதுகுடுமிப் பெருவழுதி கடற்போரில் ஈடுபட்டதைக் கண்டோம். இப் பாண்டியன் கடலில் மாண்டவன் என்பது தெரிகிறது. இருவர் பெயர்களும் பெருவழுதி என்றமைந்துள்ளன. ‘முது’, ‘இள’ என்னும் அடைமொழிகள், மூத்தவன், இளையவன் என்னும் பொருளைத் தருவனவாய் இவர்களுக்கு அமைந்தனவோ என்று ஐயுற வேண்டியுள்ளது.

பெரும்பெயர் வழுதி

இவன் (பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்) ‘வழுதி’ என்று குறிப்பிடப்படுகிறான். பாண்டியருள் ‘கவுரியர்’ என்னும் குடியினரும் ஒருவராவர். தனுஷ்க்கோடியை அடுத்த பகுதியிலும் கவிரம் என்று சங்ககாலத்தில் வழங்கப்பெற்ற செங்கோட்டைப் பகுதியிலும் இவர்கள் வசித்தனர். இவர்களுடைய வழித் தோன்றல்களில் ஒருவன் பெரும்பெயர் வழுதி.113 இவன் போரில் வெற்றி பெற்று யானை மீதேறி உலா வந்தான். ‘தவிரா ஈகைக் கவுரியர் மருக’ என்று கூறப்படும் பகுதியில் இவனது முன்னோர் கொடைச் சிறப்புடன் இவனது கொடைச் சிறப்பும் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது. வழிப்பறிமிக்க காட்டு வழிகளில் புலவர்கள் இவனை நாடிப் பரிசில் பெறுவதற்கு வருவார்கள் என்றும். அவர்கள் வந்ததும் அவர்களுடைய குறிப்பறிந்து உதவ வேண்டும் என்றும் அவனுக்கு அறிவுறுத்திப் புலவர் பாடியுள்ளனர்.

அகன்ற மார்பு, உலர்ந்த சந்தனம், கால்களில் பொன்னால் செய்யப் பெற்ற வீரக்கழல் இவற்றுடன் காணப்பட்டான். நிலமே தலைகீழாக மாறினாலும் வாக்குத் தவறக்கூடாது என இவன் அறிவுறுத்தப்பட்டிருக்கிறான். இவனுடைய மனைவி செம்பொன்னாலாகிய அணிகலன்களை அணிந்த கற்பரசியாக விளங்கினாள். இவன் மதுரையில் இருந்த ஆட்சி செலுத்தியதாகத் தெரிகிறது. 114 கூடலைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வழுதி ஒருவன் ‘வாடா வேம்பின் வழுதி’ என்றும், ‘அரண் பல கடந்த முரண் கொள் தானை’ உடையவன் என்றும் கூறப்படுகிறான்.115 கூடல் நகரத் தலைமை வேறு எந்த வழுதிக்கும் குறிப்பிடப்படாததால் இவனைக் ‘கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி’ என்றே கருதலாம். இவன் பல கோட்டைகளை வென்றபோது இவனுடைய வலிமைமிக்க கைகளில் ஒளிபொருந்திய வாள் ஒன்று சிறப்புற்று விளங்கியது. இதனால் இவன் ‘கருங்கை ஒள்வாள்’ என்ற அடைமொழியைத் தன் பெயருக்குமுன் பெற்றான்.

குறுவழுதி

‘அண்டர் மகன் குறுவழுதியார்’ என்னும் பெயருடன் குறிக்கப்படும் இவரும் புலவர் என்ற நிலையிலேயே காணப்படுகிறார். அண்டர் என்போர் ஒரு குடியினர் ஆவர்.116 நள்ளி என்ற அரசனுடைய தோட்டிமலைப் பகுதிகளில் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.117 நார்முடிச் சேரல் இவர்களை வென்று பின்னிடும்படி துரத்தினான்.118 அண்டர் அல்லது ஆயர்குடியில் தோன்றியவர் என்பதும், ஆட்சிப் பொறுப்பேற்று விளங்கியவர்கள் என்பதும் பெறப்படும். பாண்டியரில் ஒரு கிளைக் குடியினர் கண்டீரமலைப் பகுதியில் அண்டர் என்னும் பெயருடன் செல்வாக்குப் பெற்று விளங்கினார்கள் எனலாம். இந்த அண்டர்களுக்குப் பெருந்தலைவனாக விளங்கியவன்தான் குறுவழுதி. இவன் சிறந்த புலவனாக விளங்கியதால் ‘ஆர்’ என்னும் சிறப்பு அடைமொழி சேர்த்துக் ‘குறுவழுதியார்’ என்று வழங்கப்பட்டான். இவனுடைய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு ஆகிய மூன்றிலும் காணப்பெறுகின்றன. இவன் பாண்டிய மரபில் தோன்றியவனாகத் தெரியவில்லை.

நல்வழுதி

நல்வழுதியர் என்னும் புலவராக அறிமுகமாகும் இவரை வழுதி என்ற பெயரைக்கொண்டு, ஒரு சிறு பகுதிக்கு மன்னனாக விளங்கியிருக்கலாம் எனக் கொள்கிறோம். வையை ஆற்றைச் சிறப்பித்துப் பாடும் இவர் அதனைப் ‘போரடு தானையான் யாறு’119 என்று குறிப்பிடுகிறார். இதனால், வையை அவருக்கு உரிய ஆறு அன்று என்பது பெறப்படுகிறது. இவர் பிற வழுதியரைப் போலவே, பாண்டிய நாட்டின் தென்பகுதியில் ஒருபால் ஆண்டுவந்தார் என்று கருதலாம்.

பாண்டியன் மாறன் வழுதி

பாண்டியன் பன்னாடு தந்தானும் பாண்டியன் மாறன் வழுதியும் ஆகிய இருவரும் புலவர்களாகக் கருதப்பெறுகின்றனர்.120 இந்த இரண்டு பெயர்களும் ஒருவனையே குறிப்பன என்று கொள்ளத்தக்க வகையில் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்ற நிலையில் அமைந்த பெயரும் காணப்படுகிறது. இப்பெயர் கொண்டவன் நற்றிணை என்னும் தொகுப்பு நூலை உருவாக்கியவன்.121

‘கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி’ என்பானை புலவர்கள் பாடியுள்ளனர். தமிழ்நாடு. மூவேந்தர்க்கும் பொது என்று கூறினால் இவன் பொறுக்கமாட்டானாம். தனக்கே உரியது என்று ஆககிக்கொள்ளப் போருக்கு எழுவானாம். இவ்வாறு போருக்கெழுந்த போது. ஏதோ ஒருவகையில் தமிழ்நாடு முழுவதும் இவனுக்குரியதாயிற்று என்ற நிலை வந்ததுபோலும். அதன்பின்னும் இவனது போர்வேட்கை தணியவில்லை. 'வடபுல மன்னர் வாட அடல்குறித்து' எழுந்தான்,122 இதன் விளைவு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு வடக்கில் இருந்த சில சிற்றரசர்களையேனும் இவன் வென்றிருக்கலாம். சினப்போர் வழுதி, ‘இயல்தேர் வழுதி’ என்னும் அடைமொழிகள் இவனது சினமிகுதியையும், தேரில் உலா வந்த பாங்கையும் நம் நினைவிற்குக் கொண்டுவருகின்றன. பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும், இந்த மாறன் வழுதியும் ஒரே காலத்தில் அகத்திணைத் தமிழ்ப் பாடல்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களைப் பாடிய புலவர்களைக் கொண்டு இவர்கள் சமகாலத்தவர் என்பதை உணரலாம்.123

கடலன் வழுதி

மதுரை மாவட்டம் மீனாட்சிபுரத்தையடுத்த கழுகுமலையில் உள்ள சமணர் படுக்கைகளுக்குமேல் உள்ள பாறைகளில் சங்க காலத்துத் தாமிழ் எழுத்துகள் உள்ளன. அந்த எழுத்துகள் கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அந்த எழுத்துகளில் கடலன் வழுதி என்ற பெயர் வருகிறது. இந்த வழுதி நெடுஞ்செழியனின் பணி மேற்கொண்டவன்.124 இவன் கவிஞனாகிய நந்தி என்னும் சமணத் துறவிக்கு கழுகுமலைப் பாறையில் படுக்கை வெட்டிக் கொடுத்தான்

மருங்கை வழுதி

மருங்கூரைத் தலைநகராகக் கொண்டு வழுதி என்ற ஒருவன் ஆண்டுவந்தான். இவன் பசும்பூண் வழுதி என்று குறிப்பிடப்படுகிறான். கொற்கை வழுதி கொற்கைத் துறைமுகத்தைக் தலைநகராகக் கொண்டு வெற்றி வேற்செழியன் ஆண்டுவந்ததுபோல இவன் ‘நற்றேர் வழுதி’ என்று சிறப்பித்துக் கூறப்படுகிறான்.125

பிற வழுதி அரசர்கள்

‘தாடோய் தடக்கை வழுதி’ என்று கூறப்படும் வழுதி ஒருவன் தன் வேலை உயர்த்திப் பகைவர்களைப் புறங்கண்டான்,126 சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் இவனைப் போலவே தாடோய் தடக்கை வழுதி என்று கூறப்படுகிறான். இதனால் இருவரும் ஒருவராக இருக்கலாம். இவன் ‘வெல்போர் வழுதி’ என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளான். ‘போர்வல் வழுதி’ என்று கூறப்படும் வழுதி ஒருவனுக்குப் பகைவர்கள் பெறற்கரிய உயர்ந்த திறைப்பொருள்களைக் கொடுத்தனர். இப் போர்வல் வழுதி மேற்கூறப்பெற்ற சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று கருத இடமுண்டு. 127 கடல்போன்ற பெரிய படையைக் கொண்ட ‘கலிமா வழுதி’ என்ற பெயரும் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைக் குறிக்கக்கூடும்.

புலிமான் வழுதி என்பவன் தன் மனைவி மக்களுடன் சென்று திருப்பரங்குன்றத்து முருகவேளை வழிபட்டதாகத் தெரிகிறது. அகநானூறு தொகுக்கப்படக் காரணமாக இருந்த உக்கிரப்பெரு வழுதிக்கு இப்பெயர் வழங்கியது என்று கருதலாம்.

5. பாண்டியன் என்னும் பெயருடைய அரசர்கள்

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்

இவனது பாடல்களில் இரண்டு. சங்க நூல்களில் இடம் பெற்றுள்ள வகையில் புலவனாக இவன் நமக்கு அறிமுகமாகிறான். என்றாலும், இவனது வஞ்சினப் பாடலும் இவன் பெயருக்குமுன் உள்ள ‘ஒல்லையூர் தந்த’ என்னும் அடைமொழியும் இவன் சிறந்த அரசனாக நாடாண்டு வந்தவன் என்பதைத் தெரிவிக்கின்றன. தன்னுடைய பகைவர்களைப் புறம் காணாவிட்டால் தனக்குத் தன் மனைவியைப் பிரிந்து வாழும் நிலை நேரட்டும். அறநெறி தவறாத அரசவையில் திறமை இல்லாத ஒருவனை அமர்த்தித் தீமை செய்தவன் என்ற பழி நேரட்டும். மையற் கோமான் மாவன், எலாந்தை, அந்துவன் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகிய ஐவருடனும் பிறருடனும் கூடி மகிழ்ந்திருக்கும் பேறில்லாமல் வறண்ட நிலத்தின் மன்னனாக அடுத்த பிறவி அமையட்டும் என்றெல்லாம் இவன் வஞ்சினம் கூறுமிடத்து இவனது நற்பண்புகள் வெளிப்படுகின்றன,128 ஒல்லையூர் என்பது இப்பொழுது உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த நாடு. இவன் அந்த நாட்டில் நடந்த போரின்போது இவ்விதம் வஞ்சினம் கூறினான். தான் கூறியவாறு ஒல்லையூர் நாட்டை வென்று தன் நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவன் இறந்ததற்காகப் பாணர்கள் பெரிதும் வருந்திய செய்தியைக் கூறும் பாடல் ஒன்று உள்ளது.129 இந்தச் சாத்தன் இறந்தது பூதப்பாண்டியன் நடத்திய போரில் நிகழ்ந்திருக்கலாம்.

தமிழ் இலக்கியங்களில் வடக்குப் பகுதியிலுள்ள மலைகளைக் கடந்து பொருள் தேடச் சென்றவர்களைப் பற்றியே மிகுதியாகப் பேசப்படுகிறது. ஆனால், இவன் தமிழக மக்கள் பொதிய மலையைக் கடந்து பொருள் தேடச் சென்ற மக்களைக் குறிப்பிடுவது நினைவுகூரத்தக்து.130

பொதிமலைப் பகுதியில் திதியன் என்பவன் ஆண்டு வந்ததை இவன் குறிப்பிடுவதோடு, அவனது செல்வச் செழிப்பையும், அவனது அரண்மனையில் முழங்கிய இன்னிசை முழக்கத்தையும் பாராட்டிக் கூறியுள்ளான். இதனால் திதியன் இவனது சிறந்த நண்பன் என்பது தெரிகிறது. இத் திதியன், பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனை எதிர்த்துத் தாக்கியது அவர்களது வரலாறுகளில் காணலாம். தலையாலங்கானத்துப் போர், நெடுஞ்செழியன் கொற்கையில் ஆண்டு கொண்டிருந்தபொழுது நிகழ்ந்ததாகையால் அக்காலத்திலோ, அதற்குச் சற்று முன்னரோ பூதப்பாண்டியன் மதுரையிலிருந்து அரசாண்டான் என்று கூறலாம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பின்னும் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனுக்கு முன்னும் உள்ள இடைப்பட்ட காலத்தில் இவன் ஆட்சி செலுத்தினான் என்று கூறலாம்.

போரில் வஞ்சினம் கூறியபோது, புறங்காணாவிட்டால் ‘பேர் அமர் உண்கண் இவளினும் பிரிசு’ என்று வஞ்சினம் கூறும் அளவிற்கு இவனது அன்பு. மனைவியிடம் சிறந்து விளங்கியது. இவனைப் போலவே இவனது மனைவியும் இவன்மீது பேரன்பு கொண்டு விளங்கினாள். பூதப்பாண்டியன் இறந்தபோது அவளும், அவனை எரித்த தீயில் பாய்ந்து உயிர்துறந்தாள். அவள் பெயர் பெருங்கோப்பெண்டு.131

பசும்பூண் பாண்டியன்

‘பசும்பூண்’ என்னும் அடைமொழியைமட்டும் கொண்டு இந்தப் பாண்டியனைத் தனியான ஓர் அரசன் என்று கொள்ள முடியுமா என்பது ஆய்விற்குரியது.132 இப் பெயர் கொண்ட அரசன், மதுரையில் இருந்து மிகச் சிறப்புடன் அரசாண்டதாகத் தெரிகிறது. அப்படியிருந்தும் எந்தப் புலவரும் இவனை நேரில் கண்டு வாழ்த்திப் பாடியதாகப் புறநானூற்றில் பாடல்கள் இல்லை. எனவே, பசும்பூண் பாண்டியன் என்னும் பெயர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனாக இருக்கலாமென்று கருதப்படுகிறது.

அரசுகட்டிலைக் கைப்பற்றிய போர்

பாண்டிய நாட்டின் அரியணையைக்கைப்பற்றவே இவன் போராடி இருக்கிறான். போரில் வெற்றிகண்டதால் வெண்கொற்றக் குடையை உயர்த்திப் பெரும்புகழுடன் அரசாண்டிருக்கிறான்.133 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் இதே நிலையினன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகனை வென்றது

அதிகன் என்பவன் கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசன். பசும்பூண் பாண்டியன் ஒரு யானைப் படையுடன் சென்று அதிகனை வென்று தன் வெற்றிக்கொடியை உயர்த்தி. அவனது கொல்லி மலையில் யானைப் படையின் வெற்றி அணிவகுப்பை நடத்தினான். இப் போருக்குப்பின் அதிகன் பாண்டியனுடைய நண்பன் ஆனான். பின்னர்த் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் நாட்டைப் பறிகொடுத்து இந்தப் பாண்டியனின் பரடத்தலைவனாக மாறிவிட்டான்.134

கொங்கரை ஓட்டியது

அதிகன் கீழைக் கொங்கர்களின் தலைவன். பசும்பூண் பாண்டியனம் அதிகனும் நண்பர்களாக மாறியபின் கீழைக் கொங்கரும் பாண்டியனுக்கு நண்பர் ஆயினர். இந்நிலையில் மேலைக் கொங்கர்கள் பொறையர் குடியைச் சேர்ந்த சேர அரசர்களுடன் சேர்ந்துகொண்டு பாண்டியனுக்கு எதிர்ப்பாய் விளங்கினர். பசும்பூண் பாண்டியன் இந்தக் கொங்கர்களோடு போரிட்டு அவர்களை நாட்டைவிட்டே துரத்தி விட்டான்.135 தங்களது வேற்படைகளைப் போர்க்களத்திலேயே எறிந்து விட்டுத் தப்பியோடிய கொங்கர், குடகடல்பக்கம் ஓடிவிட்டனர். இந்தப் போரில் இவனுக்கு ஆய் அரசன் உதவி செய்தான் எனத் தெரிகிறது.136 ஓடிய கொங்கர்களில் சிலர் வழியில் இருந்த நாட்டில் அரசாண்ட நன்னனுடன் சேர்ந்துகொண்டனர். நன்னன் மூவேந்தருக்கும் எதிரியாக இருந்தான்.

வாகைப் பறந்தலைப் போர்

ஆய் எயினனுக்கும் நன்னது படைத்தலைவன் ஞிமிலிக்கும் நன்னனின் தலைநகர் பாழியில் போர் நடந்தது. போரில் ஆய் எயினன் மாண்டான். இந்நிலையில் ஞிமிலி, ஆய் எயினனின் நகர் வாகையைக் கைப்பற்ற முயன்றான். வாகையைப் பாதுகாக்கப் பசும்பூண் பாண்டியன் தன் படைத்தலைவன் அதிகனை அனுப்பியிருந்தான். பாண்டியன் தலைவனான அதிகனுக்கும், ஞிமிலிக்கும் வாகைப்பறந்தலையில் போர் நடந்தது. போரில் நன்னனுக்கு உதவியாகக் கொங்கர்கள் உதவினர். யானை மீதிருந்து போரிட்ட அதிகன் யானையுடன் கொல்லப்பட்டான். இந்த நிகழ்ச்சியில் கொங்கர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.137

பொதியமலை வெற்றி

அதிகனை வென்று கொல்லிமலையில் யானைகளை வெற்றி உலாவரச் செய்தான் இப் பாண்டியன் என்பதை முன்னரே பார்த்தோம். அதுபோலவே, இவன் பொதியமலையைக் கைப்பற்றினான் போலும்,138 இதன் பயனாகப் பொதியமலை அரசன் ஆய், அதிகனைப் போலப் பாண்டியனின் நண்பன் ஆனான். அதிகன் வாகைப் பறந்தலையில் பாண்டியனுக்காகப் போரிட்டது போலவே, ஆய் அரசன் கொங்கர்களை ஓட்டுவதில் பசும்பூட் பாண்டியனுக்கு உதவினான்.139

நெடுமிடல் படைத்தலைமை

பசும்பூண் பாண்டியனுக்குப் படைத்தலைவனாக விளங்கியவன் நெடுமிடல் என்பவனாவான்.140 பசும்பூண் பாண்டியனுடைய பகைவர்கள் இப் படைத்தலைவனைக் கொன்ற பிறகு அரிமணவாயில் உறத்தூரில், கள்ளுடைப் பெருஞ்சோறு உண்டு வெற்றிவிழாக் கொண்டாடினர் என்று அறிகிறோம்.141 இந்த நெடுமிடல் என்பவனுடன் கொடுமிடல் என்பவனும் மற்றொரு படைத்தலைவனாக இருந்தவன் எனத் தெரிகிறது. இவர்களைப் போரில் கொன்றவன் நார்முடிச் சேரல் என்று கூறப்படுகிறது.142 இதைக் கருதுமிடத்துப் பசும்பூண் பாண்டியன் வடக்கில் கொல்லிமலை, தெற்கில் பொதியமலை ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட பெருநிலப்பரப்பை, அதிகன் முதலிய சிறப்பு மிக்க வள்ளல்களின் துணையுடன் அரசு புரிந்தான் எனக் கொள்ளலாம்.

பாண்டியன் அறிவுடைநம்பி

இவனை நேரில் கண்டு பாடிய புலவர் ‘அறிவுடைவேந்தன்’ என்னும் தொடரைப் பொதுப்படையாகக் குறிப்பிடுகிறார்.143 இதனால் இவனை அறிவுடைநம்பி என்று குறித்தார்களோ என்று எண்ணவேண்டியுள்ளது. இவனது பாடல்கள் இன்பப் பயனை விளக்குவனவாக உள்ளன. நம்பி என்னும் பெயர், முறுக்கான உடற்கட்டுக்கொண்டு அழகுடன் பொலிவும் ஆடவர்க்கெல்லாம் வழங்கப்பெற்ற பொதுப்பெயர் ஆகும்.

இவன் அரியணையில் அமர்வதற்குமுன் அரசியல் அலுவலர்கள் குடிமக்களின் நிலையைப் பார்த்து மிகுதியான வரிகளை வசூலித்ததாகத் தெரிகிறது. புலவர் இவனை நேரில்கண்டு சிறிதுசிறிதாகப் பல தவணைகளில் மக்கள் வரிகளைச் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பாக உணர்த்தினார்.144 அரசன், புலவரின் அறிவுரையை ஏற்று மக்களின் விருப்பம்போல் பல தவணைகளில் வரிசெலுத்த அனுமதித்தான் எனலாம். வாழ்க்கையில் பலவகையான செல்வ வளங்களும் ஒருங்கமையப் பெற்றிருந்தாலும் மக்கட்செல்வம் இல்லாவிட்டால் இன்பம் அமையாது என்று இவன் தன்னுடைய பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளான்.145

சங்கப்பாடல் தொகுதிகளில் இவனுடைய பாடல்களாக அகத்துறைப் பாடல்கள் மூன்று இடம்பெற்றுள்ளன. தினைப்புனம் காக்கச்சென்ற பெண் ஒருத்தி அதனை மறந்து அவளது காதலனோடுகூட மகிழ்ந்தே காலம்போக்குவதை அவளது தோழி பக்குவமாகத் தவறு என்று அறிவுறுத்தும் வகையில் ஒரு பாடல் அமைந்துள்ளது.146 காதலன் ஒருவன் அடிக்கடி காதலியிடம் கள்ளத்தொடர்பு கொள்வதைத் தோழி வன்மையாகக் கண்டிப்பதாய் மற்றொரு பாடல் அமைந்துள்ளது.147

கற்பரசி ஒருத்தியின் கையில் இருந்த குழந்தையைப் பேய் ஒன்று பிடுங்கிக் கொண்டது போலத் தோழியிடமிருந்து தலைவியைத் தலைவன் பிடுங்கிக் கொண்டான் என்றும், பூப்போன்ற அவளைத் தேனீப் போன்று நலம்நுகர்ந்து சென்றனான் என்றும் நயம்படப் பாடிய பாடல் ஒன்றும் கிடைத்துள்ளது.148 நம்பி நெடுஞ்செழியன் எனும் பெயர்கொண்ட அரசன் ஒருவன் மிகச் சிறந்த போர்த்திறம் படைத்த அரசனாக விளங்கியதை நெடுஞ்செழியன் வரலாற்றில் காணலாம் இந்தப் பெயர் நம்பியின் மகன் நெடுஞ்செழியன் என்பதாக இருக்கக்கூடும்.

பாண்டியன் கீரஞ்சாத்தன்

கீரன் மகன் சாத்தன் என்னும் பெயர் கீரஞ்சாத்தன் என்று அமைந்திருக்கக்கூடும். பாண்டியன் என்னும் அடைமொழியைக்கொண்டு இவன் பாண்டியர் குடியைச் சேர்ந்தவன் அல்லது பாண்டியர் படைத்தலைவன் என்பது தெரியவருகிறது. கள்ளுண்ட மயக்கத்தால் கடமையை மறந்து சில போர்வீரர்கள் அஞ்சியிருந்தபோது, எஞ்சிய படையினருக்குப் பாதுகாவலனாகத் தழுவிக்கொண்டு போரில் குதித்து முன்னேறிச் சென்றான். போர் வீரர்கள் காயம்பட்டு உணவு கொள்ளாமல் இருந்தபொழுது இவன், நீங்கள் உணவு கொள்ளாவிட்டால் நானும் உண்ணமாட்டேன்’ என்று சூளுரைத்து அவர்களை உண்ணும்படி செய்தான். இதனால் இவன் சிறந்த படைத்தலைவனாகவும், படை வீரர்களைத் தன் உயிரைப்போல் போற்றும் உயர்ந்தோனாகவும் விளங்கினான். பாண்டியன் என்னும் பெயர், பாண்டிய அரசர்கள் இவனைப் பாடிய புலவர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனையும் பாடியுள்ளார். ஆகையால், இவன் நன்மையுடைய படைத்தலைவனாக இருந்தான் என்று கூறலாம்.149

6. பழங்கதைகளால் அறியப்படும் அரசர்கள்

தமிழ்நாட்டில் வழங்கும் சில மரபு வழிச் செய்திகள் பாண்டிய மன்னர்களுடைய செயல்களைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றில் சில புராணத் தலைவர்களோடு தொடர்புடையனவாக இருப்பதால் உண்மையான வரலாற்றுச் செய்திகள் என்று கொள்ள முடியவில்லை.

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

நிலப்பகுதியைத் தங்கள் நாட்டுப் பரப்பில் கொண்டிருந்ததோடு நீர்ப்பரப்பாகிய கடலையும் ஓர் எல்லை வரையில் தங்களுக்கு உரியதாகப் பாண்டிய மன்னர்கள் கொண்டிருந்தனர். அந்த எல்லைப்பகுதி எதுவரையில் என்று பாண்டிய அரசன் ஒருவன் தன்னுடைய வேலை வீசிக் காட்டினான்.150 வடிம்பு என்பது வேலின் நுனியாகும். எனவே, இவன் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான்.

இவன் தன்மீது வேலை வீசியதால் சினங்கொண்ட கடல் பொங்கியெழுந்தது; பாண்டிய நாட்டின் நிலப்பகுதியை விழுங்கியது. இதனால், பாண்டியன் தன்நாட்டுப் பரப்பில் குமரியாறு பாய்ந்த நிலம், குமரிக்கோடு முதலான பல மலைகளைக் கொண்டிருந்த நிலம் ஆகியவற்றை இழந்தான். இந்த நில இழப்பை ஈடுசெய்வதற்காக அவன் வடதிசை நோக்கிப் படையெடுத்துச்சென்று கங்கைச் சமவெளியையும் இமயமலைப் பகுதியையும் கைப்பற்றிக்கொண்டான். இந்த அரசன் தென்னன் என்று குறிப்பிடப்படுகிறான்.

நெடியோன் என்னும் பஃறுளி ஆற்றோடு தொடர்புடையவனாகவும், ‘நிலந்தருவின்’ நெடியோன் என்று நிலப்பரப்பினைத் தன்நாட்டோடு சேர்த்துக்கொண்டவனாகக் காட்டப்படுவதால் இந்த அரசனை வடிவம்பல நின்ற பாண்டியன் என்று கருதுகின்றனர். பிற்காலத் தமிழ்நூல் ஒன்று இவனை ‘ஆழி வடிவு அலம்ப நின்றான்’ என்று குறிப்பிடுகிறது. இந்நூல் இவனை யதுகுல அரசன் என்றும், ஏழிசை நூல் சங்கத் தலைவன் என்றும், தேவர்களுக்காகத் தூதுசென்றவன் என்றும், பாரதப் போரில் கலந்துகொண்டவன் என்றும் குறிப்பிடுகிறது.

இந்திரன் ஆரம்பூண்ட பாண்டியன்

தேவர்கோனாகிய இந்திரன் எல்லா அரசர்களையும் விருந்திற்கு அழைத்தான். விருந்திற்குச் சென்ற அரசரெல்லாரும் இந்திரன்முன் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்தினர். பாண்டியன் மாத்திரம் தலை தாழ்த்தி வணக்கம் செய்யாது, தன் பெருமிதம் தோன்ற நிமிர்ந்துசென்றான். இதைக்கண்ட இந்திரன் தன் முத்தாரத்தை அந்தப் பாண்டியனுக்கு அளித்துப் பெருமைப்படுத்தினான்.

மழை பிணித்தாண்ட மன்னவன்

பாண்டியன் ஒருவன் இந்திரனுடைய தலையிலிருந்த முடி வளையை உடைத்து எறிந்தான். அதனாற் சினங்கொண்ட இந்திரன் தனது ஆணைக்குட்பட்டு நடந்துவந்த மேகங்களை அழைத்துப் பாண்டிய நாட்டில் பெய்யக்கூடாதென்று கூறித் தடுத்துவிட்டான். இதனால் பாண்டிய நாட்டில் மழையில்லாமல் போயிற்று. பாண்டியன் ஒருவன் அந்த மேகங்களைத் தடுத்து மழைபெய்யச் செய்தான்.

பொற்கைப் பாண்டியன்

இவனுடைய ஆட்சிக் காலத்தில் மதுரை நகரில் வாழ்ந்த கீரந்தை என்பான் தன்னுடைய மனைவியைத் தனியே வீட்டில்விட்டு வெளியூருக்குப் போனான். பாண்டியனுடைய ஆட்சி, தனித்திருக்கும் தன் மனைவிக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பது அவனுடைய நம்பிக்கை. கீரந்தை வெளியூருக்கும் போயிருப்பதை அறிந்த பாண்டியன் இரவில் நகர்வலம் வரும்போது கீரந்தையின் மனைவிக்கு யாதொரு தீங்கும் நேராதபடி அவள் அறியாமலே காத்துவந்தான். நெடுநாள் சென்றபிறகு, நள்ளிரவில் கீரந்தை வீட்டிற்குள் யாரோ இருவர் பேசுங்குரல் கேட்டது. நள்ளிரவில் நகர்வலம் வந்த பாண்டியன், யாரேனும் கீரந்தையின் மனைவிக்குத் தீங்குசெய்ய வந்தனரோ என்று கருதி அந்த வீட்டுக் கதவைத்தட்டினான். உள்ளிருந்து கணவனாகிய கீரந்தையின் குரல் ‘யார் அது?’ என்று கேட்டது. கீரந்தை ஊரிலிருந்து திரும்பி வந்துவிட்டான். அவனுடைய பேச்சுக்குரல்தான் உள்ளிருந்துகேட்டது. கதவைத் தட்டினபடியால் அவன் அவள்மீது ஐயப்படுவானே. அவனுடைய ஐயத்தைப் போக்கவேண்டும்’ என்று கருதிய பாண்டியன் அந்தத் தெருவிலுள்ள எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டிக்கொண்டே அரண்மனைக்குப் போய்விட்டான்.

அடுத்தநாள் அந்த வீதியில் உள்ளோர் எல்லோரும் முன்னிரவு தங்கள் வீட்டுக் கதவுகளை யாரோ தட்டிவிட்டுச் சென்றார்கள் என்று மன்னனிடம் முறையிட்டனர். தன் மனைவியின்மீது ஐயங்கொண்ட கீரந்தை எல்லாம் வீட்டுக் கதவுகளும் தட்டப்பட்டதை அறிந்த தன் மனைவியின்மேல் ஐயம் நீங்கினான். பிறகு பாண்டியன் தானே அந்தக் குற்றம் செய்ததை அரசவையில் ஒப்புக்கொண்டு, கதவுகளைத் தட்டின குற்றத்திற்காகத் தன்னுடைய கையை வெட்டிக் குறைத்துக் கொண்டான் என்று கதை கூறப்படுகிறது.

மலையத்துவச பாண்டியன்

மலயத்துவசன் என்னும் பெயர் மலையைத் தன்னுடைய அடையாளமாகக் கொண்டவன் என்ற பொருளுடையதாகும். சங்க இலக்கியத்துள் இவனைப் பற்றிய குறிப்பு இல்லை. மலையத்துவச பாண்டியன் காஞ்சனை என்ற பெயருள்ள பாண்டி மாதேவியோடு வாழ்ந்தான். இவ்விருவருக்கும் மகப்பேறில்லாமையால் தவம்செய்து ஒரு பெண்மகவைப் பெற்றனர். அக்குழந்தைக்குத் தடாதகை என்று பெயரிடப்பெற்றது. அப்பெண் பாண்டிய நாட்டை அரசாண்டாள் என்று புராணம் கூறுகிறது.

மலையத்துவச பாண்டியனைப் பற்றி வடமொழி பாகவத புராணம் மற்றொரு வரலாற்றைக் கூறுகிறது. இப்புராணக் கதைகள் நம்பத்தகுந்தன அல்ல.

தடாதகைப் பிராட்டியார்

மலையத்துவச பாண்டியனுக்குப் பிறகு அவனுடைய மகளாகிய தடாதகைப் பிராட்டியார் அரசாண்டதாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறுகின்றன? அங்கயற்கண்ணியாகிய மீனாட்சி அம்மையே தடாதகைப் பிராட்டியாகப் பிறந்தார் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாடலிபுத்திரத்தில் செலியூகஸ் நிகேடாரின் தூதுவராக இருந்த மெகஸ்தனீஸ் தம்முடைய காலத்தில் பாண்டிய நாட்டை ஒரு பெண்ணரசி அரசாண்டாள் என்று கூறியுள்ளார். ஹெர்க்குலிஸ் என்ற கிரேக்க வீரனுக்குப் பண்டேயா என்று பெயரிட்டான் என்பதும், பாண்டிய நாட்டைத் தடாதகையார் அரசாண்டார் என்பதும் ஒரே வரலாற்றைக் குறிக்கின்றன எனலாம்.

பாண்டிய அரசைப்பற்றி மெகஸ்தனீஸ் இன்னொரு செய்தியையும் கூறியுள்ளார். பாண்டிய அரசிக்கு 365 ஊர்கள் இருந்தன. ஒவ்வோர் ஊராரும் அரண்மனைக்கு நாள்தோறும் கடமை செலுத்தினார்கள். இந்த அரசிறை, காசாக இல்லாமல் பொருளாகச் செலுத்தப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதரி என்ற இடைக்குல மடந்தை அரண்மனைக்குச் சேரவேண்டிய இறைவரியை நெய்யாகச் செலுத்தினாள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆரியப்படை கடந்து, அரசு கட்டிலில்
துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்

கடைச் சங்ககாலத்தில் ஆட்சிசெய்த பாண்டியரில் சிலர் நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களின் பெயர் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவர்களை, இன்னின்ன நெடுஞ்செழியர் என்று பிரித்தறிவதற்கு அவர்பெயர்களுடன் சில அடைமொழியிட்டு வழங்கினார்கள். நம்பி நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பெயர்களைக் காண்க. இங்கு ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுடைய வாழ்க்கை வரலாற்றை ஆராய்வோம்.

மதுரையிலிருந்து பாண்டி நாட்டை யரசாண்ட இந்த நெடுஞ்செழியன் கல்விகற்ற அறிஞன்; செய்யுள் இயற்றவல்ல கவிஞன். கவிஞனாக விளங்கிய இவன் இயற்றிய செய்யுட்கள் முழுவதும் நமக்குக் கிடைக்கவில்லை. நற்காலமாக இவன் இயற்றிய ஒரே ஒரு செய்யுள் புறநானூற்றில் 183 ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செய்யுள் இது:

"உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
 பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
 பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளுஞ்
 சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்.
 ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
 மூத்தோன் வருக வென்னாது அவருள்
 அறிவுடை யோனாறு அரகஞ் செல்லும்.
 வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங்
 கீழ்ப்பா லொருவன் கற்பின்,
 மேற்பா லொருவனும் அவன்கட் படுமே."

(திணை- பொதுவியல்; துறை பொருள்மொழிக் காஞ்சி. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது.)

விழுமிய பொருள் பொதிந்த இந்தச் செய்யுள் புறநானூற்றில் தொகுக்கப்டும் சிறப்புப்பெற்றுள்ளது. இச்செய்யுளை இயற்றிய இந்தப் பாண்டியன் யாரிடங் கல்வி பயின்றான் என்பது தெரியவில்லை.

கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் சென்றபோது பாண்டி நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்தவன் இந்த நெடுஞ்செழியனே. மதுரையில் வாணிகஞ் செய்து பொருளீட்ட எண்ணிய கோவலன், வாணிக முதலீட்டுக்காகக் கண்ணகியின் பொற்சிலம்பை விற்கச் சென்று வஞ்சகன் ஒருவனால் 'கள்வன்' என்று குற்றஞ்சாட்டப்பட்டபோது, அக்குற்றத்தைத் தீர விசாரிக்காமல் அவனைக் கொல்வித்தவனும் இந்த நெடுஞ்செழியனே. கோவலன் மேல் சுமத்தப்பட்ட பொய்ப்பழியை நீக்குவதற்காகக் கண்ணகி வழக்குத் தொடுத்து வாதாடியபோது, தான் கோவலனுக்குக் கொலைத் தண்டனை விதித்தது அரசநீதி என்று எடுத்துக்காட்டியவனும் இந்த நெடுஞ்செழியனே. பிறகு கண்ணகி, குற்றஞ்செய்யாதவன்மேல் பொய்க்குற்றஞ் சாட்டிக் கொலை செய்வது அநீதி என்று சான்று காட்டி நிறுவிய போது, தான் செய்தது தவறுதான் என்று கண்டு, தன் தவற்றை யுணர்ந்து அஞ்சி நடுங்கி அரசுகட்டிலில் (சிம்மாசனத்தில்) இருந்தபடியே உயிர் விட்டவனும் இந்த நெடுஞ்செழியனே. இவனுடைய ஆட்சிக்காலத்தில் வடநாட்டிலிருந்து மதுரையின்மேல் படையெடுத்து வந்து போர் செய்த ஆரியப்படையை வென்று ஓட்டித் துரத்தியவனும் இந்த நெடுஞ்செழியனே. இவற்றையெல்லாம் சிலப்பதிகாரம், மதுரைக்காண்டத்தின் இறுதிச் செய்யுளினால் அறிகிறோம்.

“வட வாரியர் படை கடந்து
தென்றமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பிற் றேவி தன்னுடன்
அரைசு சட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்”

என்பது அதன் வாசகம்.

கல்வி கற்றுப் புலவனாக விளங்கிய இந்தப் பாண்டியன் போர்க்களத்தில் பகைவரை வென்று புகழ் பெற்று விளங்கினான். அந்த வெற்றியின் காரணமாக இவன் “ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்” என்று சிறப்புப்பெயர் பெற்றான். அரசுக் செல்வமும், கல்விச் செல்வமும் கைவரப் பெற்ற இந்தப் பாண்டியன் ஆய்ந்தோய்ந்து பாராமல் அவசரப்பட்டுக் கோவலனைக் கொன்ற தவற்றின் காரணமாகக் கண்ணகி இவன்மீது தொடுத்த வழக்கில் தோற்றுத் தான் செய்தது தவறு என்று கண்டபோது மனம் பதறித் தான் நடத்தியது கொடுங்கோல் என்பதை அறிந்து நெஞ்சம் பதறிச் சிம்மாசனத்திலேயே உயிரை விட்டான். இவன் அரசு கட்டிலில் (சிம்மாசனத்தில்) இருந்து உயிர்விட்டபடியால் “அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன்” என்றும் பெயர் பெற்றான். இஃது இவன் இறந்த பிறகு பெற்ற பெயர்.

நெடுஞ்செழியன் ஆரியப்படையை வென்றான் என்று கூறப்படுகிறான். ஆரியப்படை இவன்மேல் படையெடுத்து வந்தார்? இவன் ஆரியப் படையின்மேல் போருக்குச் சென்றானா? ஆரியப் படை என்றால் என்ன? இவை பற்றி ஆராய வேண்டியது சரித்திரம் அறிவதற்கு முதன்மையானது.

சங்க காலத்துத் தமிழர் பாரதநாட்டை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்திருந்தார்கள். அவை தமிழகம் (தமிழ் நாடு), வடுக நாடு மேற்கே அரபிக் கடல் முதல் கிழக்கே வங்காளக் குடாக்கடல் வரையில் நீண்டிருந்தது. வடுக நாட்டின் மேற்குப் பகுதியைக் கன்னடரும் கிழக்குப் பகுதியைக் கலிங்கரும் (ஆந்திரரும்) ஆட்சி செய்தனர். கன்னட நாடும் ஆந்திர நாடும் சேர்ந்ததே வடுக நாடு. கன்னடரும், ஆந்திரரும் வடவர் அல்லது வடுகர் என்று பெயர் பெற்றனர்.

வடுக நாட்டுக்கு அப்பால் (விந்திய மலைக்கு வடக்கே) இருந்தது ஆரியநாடு. அது வடஇந்தியா முழுவதும் அடங்கியிருந்தது. ஆரிய நாட்டிலே இருந்தவர் ஆரியர். ஆரிய நாட்டிலிருந்த படை ஆரியப்படை

கடைச்சங்க காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் வடமேற்கு இந்தியாவில் சில கூட்டத்தார் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் கூட்டத்தாரில் யௌத் தேயர், அர்ச்சுனீயர் என்னும் பிரிவினர் முக்கியமானவர். இவர்களுடைய தொழில் போர் செய்வது. யுத்தம் (போர்) செய்வதை வாழ்க்கையாகக் கொண்டவர்யௌத் தேயர். அர்ச்சுனீயர் என்பவர் அர்ச்சுனன் வழியில் வந்த போர் வீரர். இவர்களுக்கு அரசன் இல்லை. இவர்கள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தனர். தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். யாரெனும் அரசன் இவர்களைத் துணைக்கு அழைத்தால் அவனைச் சார்ந்து அவனுடைய பகைவனுடன் போர் செய்வது இவர்களுடைய தொழில். சில சமயங்களில் இவர்கள் கூட்டமாக வேறு நாட்டுடன் போர் செய்வதும் உண்டு. யௌத்தேய கணம் (கணம் - கூட்டம்) தமிழ்நாட்டின் மேல் அடிக்கடி போருக்கு வந்தது. யௌத்தேய கணத்தைச் சங்ககாலத் தமிழர் ஆரியப்படை என்று பெயரிட்டழைத்தனர். வடுக நாட்டுக்கு அப்பால் ஆரிய நாட்டிலிருந்து வந்தவர் ஆகையால் அவர்கள் ஆரியப்படை என்று பெயர் பெற்றனர். ஆரியப் படை (யௌத்தேய கணம்)யின் வரலாற்றை நான் எழுதிய கட்டுரையில் காண்க. (ஆரியப்படையும் யௌத்தேய கணமும். பக்கம் 128-134, கல்வெட்டுக் கருத்தரங்கு. 1966)

அகநானூறு 386 ஆம் செய்யுளில் கூறப்படுகிற ஆரியப் பொருநன், ஆரியப் படையைச் சேர்ந்தவன் என்று தோன்றுகிறான். சோழநாட்டு வல்லத்துக் கோட்டை மேல் ஆரியப்படை வந்து முற்றுகையிட்டபோது அக்கோட்டையிலிருந்த சோழன் அவ்வாரியப் படையை வென்று துரத்தினான். ஆரியப்படை உடைந்து ஓடிற்று. இதனை அகநானூறு 336 ஆம் செய்யுளினால் அறிகிறோம். பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் ஓர் ஆரியப்படை போர் செய்ய மதுரைக்கு வந்ததையும் அப்படையை அவன் வென்று துரத்தியதையும் சிலப்பதிகார மதுரைக்காண்டம் கட்டுரைச் செய்யுளி னாலும், புறநானூறு 183 ஆம் செய்யுளின் அடிக்குறிப்பினாலும் அறிகிறோம்.

இவ்வளவு சிறந்த வீரனும் அறிஞனும் புலவனுமாக இருந்த இந்தப் பாண்டியன், மகளிர் மாட்டு வேட்கையுடையனாய்ச் சிற்றின்பப் பிரியனாக இருந்தான் என்பதை இவனுடைய சமகாலத்தில் வாழ்ந்தவரான இளங்கோவடிகள் (சேரன் செங்குட்டுவனுடைய தம்பியார்) கூறுகிறார். சிலப்பதிகாரம் கொலைக்களக் காதையில் இதனை இவர் கூறுகிறார்:

“கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவலன் உள்ளம் கவர்ந்த வென்றுதன்
ஊடல் உள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக்
குலமுதற் றேவி கூடா தேக
மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன்
சிந்தரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புடை வாயிற் கடைக்கா ணகவயின்”. (வரி, 131 - 140)

இச் செய்தியையே இளங்கோவடிகள் கட்டுரை காதையில் மதுராபதி தெய்வத்தின் வாயிலாக மீண்டும் கூறுகிறார். பாண்டியன் கல்வி கற்றுப் புலமை வாய்ந்தவனாக இருந்தும், மனத்தை அடக்காமல் சிற்றின்பத்தில் நாட்டஞ் செலுத்தினான் என்றும், ஆனாலும் இவ்வொழுக்கம் அரச குடியில் பிறந்த இவனுக்கு இழுக்காகாது என்றும் மதுராபதி கூறியதாக இளங்ககோவடிகள் கூறுகிறார்:

“நன்னுதல் மடந்தையர்
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத் திளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா வுள்ளத் தோடும் ஆயினும்
ஒழுக்கொடு புணர்ந்த இவ்விழுக்குடிப் பிறந்தோர்க்கு
இழுக்கந்த தாராது.” (கட்டுரைகாதை, 35-41.)

இந்த நெடுஞ்செழியனிடத்தில் இன்னொரு குறைபாடும். இருந்தது. அஃது அரசர்மாட்டிருக்கக் கூடாத குறைபாடு. நீதி விசாரணைகளை இவன் பொறுப்பேற்று நடத்தாமல் தன் கீழ்ப்பட்ட அதிகாரிகளிடம் விட்டு விட்டான். அதனால், அவர்கள் தம்முடைய விருப்பம்போல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறினார்கள். அவர்கள் செய்த பிழைபட்ட தவறான தீர்ப்பு இவ்வரசனுக்குக் கெட்டபெயரை யுண்டாக்கிற்று. இச் செய்தியையும் இளங்கோவடிகளே கூறுகிறார். இதனை விளக்கிக் கூறுவோம்.

பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் சேர நாட்டில் இருந்தவன்' பல்யானைச் செல்கெழுகுட்டுவன். இந்தக் குட்டுவனைப் பதிற்றுப்பத்து மூன்றாம்பத்தில் பாடியவர் பாலைக் கௌதமனார். அவருக்குக் குட்டுவன் பெருஞ் செல்வங் கொடுத்ததை யறிந்த சோழ நாட்டுப் பார்ப்பான் பராசரன் என்பவன், அவனிடஞ் சென்று வேத பாராயணஞ் செய்து பொன்னையும் மணியையும் பரிசாகப் பெற்றுக் கொண்டு திரும்பி வரும் வழியில் பாண்டி நாட்டுத் தண்கால் (திருத்தண்கால்). என்னும் ஊரில் வந்து அரச மரத்தடியில் இளைப்பாறினான். அப்போது அவ்வூர்ப் பார்ப்பனச் சிறுவர் அவனிடஞ் சென்றனர். பராசரன் அவ்விளைஞர்களை அழைத்துத் தன்னுடன் வேதம் ஓதும்படி கூறினான். அவ்விளைஞர்களில் தக்கிணன் என்னும் சிறுவன் பிழையில்லாமல் வேதம் ஓதியபடியால், பராசரன் தக்கிணனுக்கு முத்துப் பூணூலையும் பொன் கடகத்தையும் பரிசாகக் கொடுத்தான். பிறகு அவன் தன் சோழ நாட்டுக்குப் போய் விட்டான்.

முத்துப் பூணூலையும் பொற் கடகத்தையும் பரிசாகப் பெற்ற தக்கிணன் என்னும் சிறுவன் அவற்றை அணிந்து கொண்டான். அதனைக் கண்டு பொறாமை கொண்ட அவ்வூர்ப் பார்ப்பனர், தக்கிணனுடைய தந்தையான வார்த்திகன் என்னும் பிராமணன் இந்த நகைகளை எங்கிருந்தோ திருடிக் கொண்டு வந்தான் என்று ஊர் அதிகாரிகளிடம் கூறினார்கள். பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அந்த ஊழியர்கள், தீர விசாரியாமல் நகைகளைப் பிடுங்கிக் கொண்டு வார்த்திகனைச் சிறையில் அடைத்தார்கள். வார்த்திகன் அந்த நகைகளைக் களவாடியிருக்க வேண்டும், அல்லது அவனுக்குப் புதையல் கிடைத்திருக்க வேண்டும். களவு செய்தது குற்றம். புதையல் கிடைத்திருந்தால், அதை அரசாங்கத்தில் சேர்க்காமல் போனது குற்றம் என்று அவர்கள் தீர்ப்புக் கூறினார்கள்.

வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பவள் வருந்தி அழுதாள். அப்போது அவ்வூர் ஐய (கொற்றவை) கோவிலின் கதவு திறவாமல் மூடிக்கொண்டது.இச் செய்தி அரசன் செவிக்கு எட்டியது. பாண்டியன், தண்காலில் இருந்த அரச ஊழியர்களை யழைத்து விசாரித்தான் அப்போது முத்துப் பூணூலின் வரலாறு தெரிந்தது. அரசன் வார்த்திகனை விடுதலை செய்து தன் ஊழியர் ஆநீதி செய்ததற்குத்தண்டமாக அவனுக்கு வயலூரில் நிலத்தைத் தானஞ் செய்தான். பிறகு கொற்றவைக் கோயில் கதவு திறந்து கொண்டது. இச் செய்திகளைக் கட்டுரைகாதை (வரி, 61-131) யில் காண்க. இதனால், இவன் நீதி விசாரணையில் கண்டிப்பாக இராமல் தன் கீழ்ப்பட்ட ஊழியரிடத்தில் அதிகாரத்தை விட்டிருந்தான் என்பது தெரிகின்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பொது மக்களுக்கு இவன்மீது நம்பிக்கை போய் விட்டது. ஒரு சோதிட வார்த்தையும் உலவ ஆரம்பித்தது. அது,

“ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோ டரைசு கேடுறும்”
(கட்டுரை. 133 136)

என்பது.

வழக்கு விசாரணைகளைச் சரிவரச் செய்யாமல் போனது இவனுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்து விட்டது. பாண்டிமாதேவியின் பொற்சிலம்பைத் திருடின கள்ளன் தன்னிடம் இருக்கிறான் என்று பொற்கொல்லன் பாண்டியனிடம் கூறியபோது, பாண்டியன் அதனை நன்றாக விசாரணை செய்யவில்லை. அல்லது, தக்க பொறுப்புக்க அதிகாரியிடத்தில் ஒப்படைத்து விசாரிக்கச் செய்யவும் இல்லை. அவன் தன் கடமையைச் செய்யாமல் தவறினான். இஃது அவனுடைய இயற்கை. பொற்கொல்லனுடைய வார்த்தையை அவன் முழுவதும் நம்பினான். விசாரணை செய்யாமலே, ஊர் காப்பாளரை அழைப்பித்து,

“தாழ்பூங் கோதைத்தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கு”

என்று கட்டளை யிட்டான். இந்தச் சோர்பு இவன் உயிருக்கே ஆபத்தாக முடிந்தது. இவன்மீது கண்ணகி வழக்குத் தொடுத்து வழக்காடியபோது, இவ்வரசன் தான்செய்தது பிழை என்பதை அறிந்தான். அறிந்து அரசு கட்டிலிலேயே உயிர்விட்டான்.

ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில், துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனின் இந்த வரலாறுகளையெல்லாம் சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். இவனுடைய சமகாலத்திலிருந்த சேர அரசர்கள், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் அவன் தம்பியான பல்யானைச் செல்கெழுகுட்டுவனும், சேரன் செங்குட்டுவனும் ஆவர். கொங்குநாட்டில் சேரரின் இளைய வழியைச் சேர்ந்த மாந்தரஞ்சேரல் (செல்வக் கடுங்கோவாழியாதன்) அரசாண்டிருந்தான். சோழநாட்டில் இருந்தவன் வடிவேற்கிள்ளி. தொண்டை நாட்டைக் காஞ்சியிலிருந்து அரசாண்டவன் வடிவேற்கிள்ளியின் தம்பியான இளங்கிள்ளி, இவர்கள் எல்லோரும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்கள்.

இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றித் திரு. ச. வையாபுரிப்பிள்ளை அவர்கள் ஓரிடத்தில் சரியாகவும் வேறொரிடத்தில் தவறாகவும் எழுதியிருக்கிறதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. 1940 ஆம் ஆண்டில் சைவசித்தாந்த சமாசம் வெளியிட்ட சங்க இலக்கியம் (எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்) என்னும் நூலின் பதிப்பாசிரியராக இருந்தவர் திரு. வையாபுரிப்பிள்ளை அவர்கள், அந்த நூலில், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னுந் தலைப்பில், இவன் பாடிய புறம் 183 ஆம் செய்யுளைப் பிள்ளையவர்கள் பதிப்பித்திருக்கிறார்கள். ஆனால், பிள்ளையவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ்மொழி’ ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் 145ஆம் பக்கத்தில் இந்தப் பாண்டியனைச் சந்தேகிக்கிறார். (இந்த ஆங்கில நூல் 1956 ஆம் ஆண்டில் இவர் காலஞ்சென்றபிறகு அச்சிடப்பட்டது). இந்த அரசன் உண்மையில் உயிர்வாழ்ந்திருந்தானா என்று இவர் ஐயப்படுகிறார். சங்க இலக்கியத்தை அச்சிட்டபோது இவருக்கு இல்லாத ஐயம் பிற்காலத்தில் இவருக்கு எப்படி ஏற்பட்டது! இந்தப் பாண்டியன் கற்பனைப் புருஷன் என்றால், இவன் பாடிய செய்யுள் எப்படிப் புறநானூற்றில் தொகுக்கப்பட்டிருக்கும்?

ஆனால், வையாபுரிப்பிள்ளையின் நண்பரும் தமிழ் நூல்களும் தமிழ்நாட்டுச் சரித்திரங்களும் பிற்காலத்தவை என்று கூறுகிறவருமான திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி இந்தப் பாண்டியனைப்பற்றி ஐயப்படவில்லை. இந்தப் பாண்டியன் உண்மையில் வாழ்ந்திருந்தவன் என்றும் புறநானூற்று 183ஆம் செய்யுளைப் பாடியவன் என்றும் சேரன் செங்குட்டுவனின் சமகாலத்திலிருந்தவன் என்றும் கோவலனைத் தவறாகக்கொன்று அந்தத் தவற்றைப் பிறகு அறிந்து சிம்மாகனத்தி லிருந்தபடியே உயிர் விட்டவன் என்றும் சாஸ்திரியார் எழுதுகிறார். (P. 524/544.A Comprehensive History of India. Vol. 2. 1957).

ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான வெற்றிவேற்செழியன், கொற்கையில் இளவரசனாக இருந்தவன், மதுரைக்கு வந்து அரசாண்டான். அவனுக்குப் பிறகு பாண்டிநாட்டை யரசாண்டவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம்

சங்க காலத்திலே, மதுரைமா நகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய செய்யுள்கள் கடைச்சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச்சங்கம் கி. பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது.

ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும், நேர்மையாகவும், சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச்சங்கம் கி.பி.5 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர் எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மையானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித்துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமரை மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள்கூட, ஆராய்ந்து பார்த்து உண்மை காணத் தெரியாமல், பிள்ளையவர்களின் தவறான முடிபுகளை உண்மையானவை எனக்கொண்டு மயங்குகிறார்கள். பிள்ளையவர்கள் பதிப்பித்த நூல்கள் போற்றற்குரியவை; பழைய நூல்களைப் பதிப்பிப்பதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், சொந்தமாக அவர் எழுதிய நூல்களில் மெய்போலத் தோன்றுகிற பல தவறான செய்திகள் கூறப்படுகின்றன. பொறுப்புவாய்ந்த உயர்ந்த பதவியிலிருந்துகொண்டு, அதிலும் சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற நிலையத்தில் தமிழ்ப்பகுதியின் தலைமைப்பீடத்தில் அமர்ந்துகொண்டு பிள்ளையவர்கள் வெளியிட்ட தவறான’ ஆராய்ச்சி முடிபுகளை, அசைக்கமுடியாத உண்மைகள் என்று இன்றும் பலர் கருதிக்கொண்டிருப்பதில் வியப்பில்லை. அவருடைய முடிபுகள் தவறானவை என்பதை இதுவரையில் யாரும் விளக்காமல் இருப்பதுதான் வியப்பைத்தருகிறது.

பையாபுரிப் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றவுடனே வெளிவந்த அவருடைய ‘தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் ஆங்கில நூலிலே (History of Tamil Language and Literature (1956) New Century Book House, Madras 2.) பல பிழைபட்ட தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இது ஆங்கில நூலாக இருப்பதனாலே, இதனைப் படிக்கிற தமிழ்அறியாத மற்றவர்கள், இவருடைய பிழையான கருத்துக்களை உண்மையானவையென்று நம்புகிறார்கள். இவருடைய தவறான கருத்துக்கள் மேலைநாடுகளிலும் பரவி, தமிழ்மொழியைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் பிழைபடக் கருதும்படி செய்கின்றன ஏன்? நமது நாட்டிலும் இவருடைய தவறான முடிபுகளை நம்புகிறவர்களும் பலர் உள்ளனர்.

இங்கு, பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பிள்ளையவர்கள் கூறும் கருத்தை ஆராய்வோம். இவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலிலே இவ்வாறு எழுதுகிறார்:

“வச்சிரநந்தியின் பேர்போன சங்கம் கி. பி. 470-இல் நிறுவப்பட்டது. தொல்காப்பியம் இச்சங்கத்தின் முதல்வெளியீடாக வெளிப்பட்டிருக்கக்கூடும் (பக்கம் 14). கி. பி. 470-இல் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் ஒரு முதன்மையான நிகழ்ச்சி ஏற்பட்டது. அந்நிகழ்ச்சி என்னவென்றால், மதுரையிலே வச்சிர நந்தியின் மேற்பார்வையில் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கமாகும். (பக்கம்-58) பழைய பாண்டியருக்குரிய சாசனங்களில், சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டுச்சாசனம் (கி. பி. 10-ஆம் நூற்றாண்டு) மதுரையில் இருந்த சங்கத்தைக் கூறுகிறது. தலையாலங்கானத்துப் போர்வென்ற நெடுஞ்செழியனுக்குப்பிறகு இருந்த ஒரு பாண்டியனால் மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்-பட்டதாக இச்சாசனம் கூறுகிறது. இச்சாசனம் கூறுகிற சங்கம் வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் ஆகும். வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருக்கக்கூடும். (பக்கம் 59) மதுரையில் இருந்த சங்கம் என்னும் பெயரால் அழைக்கப்பட்ட மூன்று கழகங்களும் சமணர்களால் உண்டாக்கப்பட்டவை. இவை சமண சமயத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் முயற்சியால் உண்டாக்கப்பட்டவை என்பதைச் சங்கம் என்றும் பெயர் ஆதரிக்கிறது. (பக்கம் 60) வச்சிர நந்தியின் சங்கத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அச்சங்கம் ஏற்பட்ட பிறகு குறிப்பிடத்தக்க அளவு இலக்கண நூல்களும் அற நூல்களும் வெளிவந்திருப்பது அதனுடைய பெரிய வெற்றிக்குச் சான்றாக இருக்கிறது. (பக்கம் 161)


பிள்ளையவர்கள் இவ்வாறு தமது ‘தமிழ் மொழி, இலக்கிய வரலாறு’ என்னும் ஆங்கில நூலிலே எழுதியிருக்கிறார். இந்தத் தெளிவான பொருள் என்னவென்றால் - வச்சிரநந்தி என்னும் சமணர் கி. பி. 470 இல் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவினர், சமணர்கள்தாம் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தினார்கள், வச்சிரநந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கத்தில்தான் தொல்காப்பியம் இயற்றப்பட்டது. தொல்காப்பியமும் தமிழ்ச் சங்கமும் கி. பி. 5-ஆம் நூற்றாண்டில் தோன்றியவை என்பனவாம்.

இவற்றை நாம் ஆராய்வோம். சின்னமனூர்ச் செப்பேட்டை இவர் ஆதாரம் காட்டுகிறார். அச்செப்பேட்டின் செய்தி இது.

“தடம் பூதம் பணிகொண்டு
தடாகங்கள் பலதிருத்தியும்
அரும்பசிநோய் நாடகற்றி
அம்பொற்சித்ர முயரியும்
தலையாலங் கானத்திற்
றன்னொக்க விருவேந்தனரைச்
கொலைவாளிற் றலைதுயித்துக்
குறைத்தலையின் கூற்தொழிந்தும்
மஹாபாரதத் தமிழ்ப் படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்துப்
மஹாராஜரும் ஸார்வ பௌமரும்
தம்மகிமண்டலங் காத்திருந்தபின்...”

வையாபுரிப் பிள்ளையவர்கள் மேற்கோள் காட்டாத இன்னொரு பாண்டியனுடைய செப்பேட்டுச் சாசனமும் பாண்டிய மன்னர் மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவிய செய்தியைக் கூறுகிறது. பாண்டியர் பராந்தகன் வீரநாராயணன் எழுதிய அந்த செப்பேட்டுச் சாசனத்தின் பகுதி இது.

“மண்ணதிரா வகைவென்று
தென்மதுரா புரஞ்செய்தும்
அங்கதனில் லருந்தமிழ்நற்
சங்கம்இரீஇத் தமிழ்வளர்த்தும்
ஆலங்கானத் தமர்வென்று
ஞாலங்காவல் ஈன்செய்தியும்
கடிநாறு கலினலங்கற்
களப்பாழர் குலங்கனைந்தும்
முடிசூடி முரண்மன்னர்
எனைப்பலரு முனிகந்தபின்”

இந்த இரண்டு செபேட்டுச் சாசனங்களும் பாண்டிய அரசர்களின் காலத்தில் எழுதப்பட்டவை. இச்சாசனங்கள் இரண்டும் பாண்டிய அரசர் மதுரை மாநகரத்தில் தமிழ்ச்சங்கம் வைத்து நடத்தியதைக் கூறுகின்றன. பட்டம் பகல் வெட்டவெளிச்சம்போல் தெரிகிற இந்தச் செய்தியைப் பிள்ளையவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந்திருக்கவேண்டும். ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் சமணர் என்று கூறுகிறார். இந்தச் சாசனங்களிலே, வச்சிர நந்தியோ வேறு சமணர்களோ தமிழ்ச்சங்கம் வைத்ததாகக் கூறவில்லை; பாண்டியமன்னர் தமிழ்ச்சங்கம் வைத்து நடத்தியதாகத்தான் கூறுகின்றன. பிள்ளையவர்கள், பாண்டியரின் தமிழ்ச்சங்கத்தோடு, வச்சிரநந்தியின் திராவிட சங்கத்தை இணைத்துப் பிணைத்து முடிபோடுகிறார். சாசனங்களிலும் பழைய நூல்களிலும் கூறப்படுகிறபடி பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழாராய்ந்தார்கள் என்னும் செய்தியை அடியோடு மறைத்துவிடுகிறார். வச்சிர நந்தியின் திராவிடசங்கம் வேறு, பாண்டியரின் தமிழ்ச்சங்கம் வேறு என்பதை அறியாமல் இரண்டும் ஒரே சங்கம் என்று காரணம் கூறாமல், சான்று காட்டாமல் எழுதுகிறார். இது பிள்ளையவர்கள் செய்த முதல் தவறு. இனி, மேலே செல்வோம்.

வச்சிநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526-இல் (கி. பி. 470) மதுரையில் திரமிள சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தேவசேனர் என்னும் சமண ஆசிரியர் தமது தர்சனசாரம் என்னும் நூலில் எழுதியிருக்கிறார். இந்தச் சான்றைக் காட்டி வையாபுரிப் பிள்ளையவர்கள் வச்சிரநந்தியின் திரமிள சங்கந்தான் பாண்டியரின் தமிழ்ச் சங்கம் என்று கூறுகிறார். இந்தச் செய்தியில், பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் வச்சிரநந்தியின் திரமிள சங்கமும் ஒன்று என்று கூறப்படவில்லை. பிள்ளையவர்கள் தாமாகவே இட்டுக்கட்டிக் கூறுகிறார். இனி, வச்சிரநந்தியின் திரமிள சங்கம் என்பது யாது என்பதை ஆராய்வோம்.

வச்சிரநந்தி சமண சமயத்தைச் சேர்ந்த முனிவர். இவர் மதுரையிலே திரமிள சங்கத்தை ஏற்படுத்தினார். திரமிளம் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்றே. இவற்றின் பொருள் தமிழ் என்பது. திரமிள சங்கம் என்றால் தமிழ்ச் சங்கம் என்பது பொருள். ஆனால், வச்சிர நந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியை ஆராயும் சங்கம் அன்று; தமிழ்ச் சங்கம் அன்று; தமிழச் சங்கம், சமண சமய சம்பந்தமான சங்கம். அதாவது, சமண சமயத்தைப் பரப்புவதற்காக ஏற்படுத்துப்பட்ட சங்கம்.

சமணத் துறவிகள் அந்தக் காலத்தில் பெருங் கூட்டமாக இருந்தனர். சமண முனிவர்களின் கூட்டத்திற்குச் சங்கம் என்பது பெயர். பௌத்த பிட்சுக்களின் கூட்டத்திற்கும் சங்கம் என்பது பெயர் சமண முனிவரின் சங்கங்கள் (கூட்டங்கள்) நான்கு பெரும் பிரிவுகளாகவும், பல உட்பிரிவுகளாகவும் அக்காலத்தில் பிரிக்கப்பட்டிருந்தன. நான்கு பெரும் பிரிவுகள் நந்தி கணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என்பன. (கணம் - சங்கம்). இந் நான்கு கணங்களில் நந்தி கணம் பேர்போனது. திரமிள சங்கத்தை ஏற்படுத்திய வச்சிரநந்தியும் நந்தி கணத்தைச் சேர்ந்தவரே. நந்தி கணத்தில் சமண முனிவர் கூட்டம் அதிகமாகப் பெருகிவிட்டபடியினாலே, வச்சிரநந்தி ஆசாரியர், அந்தக் கணத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவுக்குப் பழைய நந்திச் சங்கம் என்றும், மற்றொரு பிரிவுக்குத் திரமிள சங்கம் என்றும் பெயர் கொடுத்தார் என்பது சமண சமய வரலாறு. தமிழ் முனிவர்கள் அதிகமாக இருந்தபடியினாலே திரமிள சங்கம் என்று பெயர் சூட்டினார்.

நந்தி சங்கத்தின் பிரிவுதான் திரமிள சங்கம் என்பதற்குக் கன்னட தேசத்தில் உள்ள ஒரு சாசனச் செய்யுள் சான்றாக இருக்கிறது. அச்செய்யுள் இது:

“ஸ்ரீமத் திரமிள லங்கேஸ்மிம் நந்தி
லங்கேஸ்தி அருங்களா!
அன்வயோ பாதி நிஸ்ஸேடி ஸாஸ்த்ர
வராஹி பாரஹைஹி”

இந்தச் சுலோகத்திலே நந்தி சங்கத்தோடு கூடிய திரமிள சங்கத்து அருங்கலான்வயம் என்னும் பிரிவு கூறப்படுதல் காண்க.

எனவே, சமண முனிவராகிய வச்சிர நந்தி மதுரையில் திரமிள சங்கத்தை நிறுவினார் என்றால், சமண முனிவரின் திராவிட சங்கத்தை நிறுவினார் என்பது பொருளாகும். அதாவது மத சம்பந்தமாக சமண முனிவரின் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தினார் என்பது பொருள். வச்சிர நந்தி ஏற்படுத்திய தமிழச் சங்கம் தமிழ் மொழியை ஆராய்வதற்காக ஏற்பட்ட சங்கம் அன்று. சமண சமயத்தைப் பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட சங்கம் ஆகும்.

இதை அறியாமல் வையாவுரிப் பிள்ளையவர்கள், வச்சிர நந்தியின் தமிழ்ச் சங்கமும் பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் ஒன்றே என்று கூறுகிறார். முதற் கோணல் முற்றுங்கோணல் என்பது பழமொழி. வச்சிரநந்தியின் சமண முனிவர் சங்கமும், பாண்டியரின் தமிழ் ஆராய்ச்சிச் சங்கமும் ஒன்றே என்று தவறான முடிவு கொண்ட பிள்ளையவர்கள், கி. பி. 470- இல் தான் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது என்றும் இந்தச் சங்கத்தில்தான் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறி மற்றும் பல தவறான முடிவுகளைக் கூறுகிறார்.

கடுந் துறவிகளாகிய சமண முனிவர்கள் - சிற்றின்பத்தையும், கொலைகளையும் கடுமையாக வெறுக்கிற சமண முனிவர்கள் - தமிழ்ச் சங்கம் வைத்துக்கொண்டு காதற் செய்திகளையும், போர்ச் செய்திகளையும் கூறுகிற அகநானூறு, நற்றிணை நானூறு பிற நானூறு, முதலிய செய்யுள்களை ஆராய்ந்தனர், இயற்றினர் என்று கூறுவது எவ்வளவு அசம்பாவிதம்! முற்றத் துறந்த சமண முனிவர்கள் இசையையும் நாடகத்தையும் ஆராய்ந்தனர் என்று கூறுவது எவ்வளவு முரண்பட்ட செய்தி! சங்கம் என்னும் சொல்லை வைத்துக்கொண்டு அவற்றின் உண்மைப் பொருளை ஆராயாமல் வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு நோக்கமுடைய சங்கங்களை ஒன்றாக இணைத்து முடிபோடுவது என்ன ஆராய்ச்சியோ!

வச்சிரநந்தி மதுரையில் ஏற்படுத்திய திரமிள சங்கம் (சமண முனிவர் சங்கம்) மதுரையைச் சூழ்ந்துள்ள கட்டுக் குன்றங்களில் நிலைத்து, “எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்”களாகப் பெருகியது. அந்தச் சமண சங்கம் பாண்டிநாட்டில் சமண சமயத்தைச் செழிக்கச் செய்தது. அதனால் பிற்காலத்திலே சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோன்றி, சமண சமயத்துடன் சமயப் போர் நிகழ்த்தினர். இச்செய்தியைப் பெரிய புராணம் முதலிய நூல்களில் காண்கிறோம். எனவே, வையாபுரிப் பிள்ளை கூறுகிறபடி, வச்சிரநந்தி உண்டாக்கிய திரமிள சங்கமும் பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கமும் ஒன்றல்ல, வெவ்வேறு சங்கங்கள் ஆகும். அவை வெவ்வேறு காலங்களில் ஆட்களால் உண்டாக்கப்பட்டவை. இரண்டையும் ஒன்றாகப் பொருத்திக் கூறுவது தவறாகும்.

பாண்டியர் ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் கி. பி. 300 க்குப் பிறகு இருந்திருக்க முடியாது. கி. பி. 300-க்கு முன்புதான் பாண்டியரின் தமிழ்ச் சங்கங்கள் இருந்திருக்க வேண்டும். இதனைத் தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றைக்கொண்டு அறியலாம். ஏறக்குறைய கி. பி. 300- இல் களபரர் என்னும் அரசர் தமிழ்நாட்டிற்கு வந்து, சேர, சோழ, பாண்டியர் ஆகிய தமிழ்நாடு முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தக் களபரர் தமிழகத்திற்கு அப்பாலிருந்து வந்தவர்கள். களபரர் தமிழகத்தைக் கைப்பற்றிய பிறகு சேர, சோழ, பாண்டிய மன்னர் களபரருக்குக்கீழ் அடங்கியிருந்தார்கள். களபரரின் ஆட்சி ஏறக்குறைய 300 ஆண்டுகள் தமிழகத்தில் இருந்தது. பிறகு ஏறக்குறையக் கி. பி. 600-இல், கடுங்கோன் என்னும் பாண்டியன் களபரரை வென்று பாண்டிய நாட்டை மீட்டுக் கொண்டான். ஏறக் குறைய அதே காலத்தில், தொண்டை நாட்டிலிருந்த சிம்ம விஷ்ணு என்னும் பல்லவ அரசன் களபரரை வென்று சோழநாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். அப்போது, களபரருக்குக் கீழ் அடங்கியிருந்த சோழர், பல்லவர்களுக்குக்கீழ் அடங்கவேண்டியதாயிற்று. ஏறக்குறைய அதே காலத்தில் சேர நாடும் களபரர் ஆட்சியிலிருந்து சுயேச்சையடைந்தது. களபரர் ஆட்சிக் காலத்தில்தான் வச்சிரநந்தி கி. பி. 470-இல் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார். களபரர்கள் சமண, பௌத்தச் சமயங்களை ஆதரித்தவர்கள். அவர்கள் தமிழ் மொழியை ஆதரித்ததாகத் தெரியவில்லை. கி. பி. 470-இல் அரசாண்ட களபர அரசன் அச்சுத விக்கந்தன் என்பவன். எனவே, பாண்டியரின் தமிழ்ச் சங்கம் கி. பி.300-க்கும் 600-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டிருக்க முடியாது. கி. பி. 300-க்கு முற்பட்ட காலத்திலேதான் ஏற்பட்டிருக்கமுடியும். கி. பி. 600-க்குப் பிறகு பாண்டியர் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. ஏனென்றால் கி. பி. 630-இல் வாழ்ந்திருந்த திருநாவுக்கரசு சுவாமிகள் தமது தேவாரப் பதிகத்திலே தமிழ்ச் சங்கம் நீண்ட காலத்துக்கு முன்பு இருந்ததாகக் கூறுகிறார். எனவே, கி. பி. 470-இல் களபரர் ஆட்சிக் காலத்தில் வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் தமிழ் ஆராய்ச்சிச் சங்கம் அன்று. அது சமண சமயம் பற்றிய சமண முனிவர்களின் சங்கமாகும். இந்த விதத்திலும் வையாபுரிப் பிள்ளையின் கருத்துத் தவறாகிறது.

இதுகாறும் ஆராய்ந்ததிலிருந்து தெரிகிறது என்னவென்றால், வையாபுரிப் பிள்ளையவர்கள், பொருளைத் தவறாகக் கருதிக் கொண்டு பொருந்தாத காரணங்களைப் பொருத்திக் காட்டியிருக்கிறார் என்பதும், அவருடைய முடிபுகள் தவறானவை என்பதும் ஆகும். வச்சிரநந்தியின் திராவிட சங்கம்வேறு, பாண்டியரின் தமிழ்ச் சங்கம் வேறு என்பது இங்கு நன்கு விளக்கப்பட்டது. பாண்டியரின் சங்கம் கி.பி.300-க்கு முன்பு இருந்திருக்க வேண்டும் என்பதும் விளக்கப்பட்டது.

வையாபுரிப் பிள்ளை பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தைப்பற்றிக் கூறுகிற இன்னொரு செய்தியையும் ஆராய்வோம். தலையாலங்கானத்துச் செருவென்றபாண்டியன் நெடுஞ்செழியனுடைய காலத்துக்குப் பிறகுதான் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஒரு பாண்டியனால் நிறுவப்பட்டது என்று சின்னமனூர்ச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது என்பதைப் பிள்ளை அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள் (பக்.59). உண்மைதான். மேலே நாம் காட்டியுள்ள சின்னமனூர்ச் சாசனப் பகுதி, பிள்ளையவர்கள் சுட்டிக் காட்டியதுபோல, பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகுதான் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டதாகக் கூறுகிறது. அச் சாசனப் பகுதிக்குக் கீழே நாம் காட்டியுள்ள பாண்டியனுடைய மற்றொரு செப்பேட்டுச் சாசனப் பகுதி அதற்கு மாறாகக் கூறுகிறது. தமிழ்ச் சங்கம் ஏற்பட்ட காலத்திற்குப் பிறகு பாண்டியன் நெடுஞ் செழியன் இருந்ததாக இச் சாசனம் கூறுகிறது. ஆகவே, பிள்ளையவர்கள் கூறுவதுபோல நெடுஞ்செழியனுக்குப் பிறகுதான் பாண்டியரின் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டதென்பது தவறாகிறது. இதுபற்றி விளக்கமாக எழுதினால் இக்கட்டுரை பெருகி விரியும். ஆகையினாலே, இது பற்றித் தனியாக எழுதுவோம். ஒன்றைமட்டும் கூறுவோம். பாண்டியன் நெடுஞ்செழியன், கடைச் சங்க காலத்திலே, தமிழ்ச் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலே இருந்தவர் என்பது உறுதி. நெடுஞ் செழியன் காலத்துக்குப் பிறகுதான் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது என்று கூறுவது தவறு என்பதைக் கூறிக் கொண்டு இதனை முடிக்கிறேன். பிள்ளை யவர்களின் ஏனைய ஆராய்ச்சிகளைப் பற்றிப் பின்னர் எழுதுவோம்.

✽ ✽ ✽

அடிக்குறிப்புகள்

1. எரித்திரையக் கடலின் ஆதிப்பெயர் `Erythraean' `e' என்பதாகும். எரிதிரியன்கள் (என்போர்) என்ற செந்நிறமுடைய மக்கள் அக் கடல்களில் வாணிகம் செய்துவந்தனர்.

2. Argalus

3. Orgalic s.a.

4. முதுமொழிக்காஞ்சி ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்று கூறுமிடத்து அச்சொல் கடலின் பொதுப் பெயராக அமைந்திருந்ததைக் காணலாம்.

5. ‘பஃறுளி யாற்றுடன் பண்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள’ (சிலப் 11 : 19–20)
‘மலி திரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவா நாடு இடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்’ (கலித்.104 – 1 – 4)
‘அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்து கடல் கொள்ளப்பட்ட மதுரையும்
கபாடரமும் என்ப.’ (இறையனார் அகப் பொருள் உரைப்பாயிரம்)

6. மகாவம்சம், 22:20

7. மணிமே.. 5: 37.

8. லெமூரியாபற்றிய தீர்ந்த முடிவு இதுகாறும் கிடைக்கவில்லை. எனினும், லெமூரியாக் கண்டம் இருந்தது உண்மையே என்றும் 1,50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் மூதாதையர்கள் அங்கு வாழ்ந்திருக்கக்கூடும் மென்றும் இந்நூலின் முதல் தொகுதியில் ‘தொல்பழங்காலம்’ பக்கம் 25 இல் விளக்கப்பட்டுள்ளது. அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்களின் மூதாதையர்கள் என்று தீர்மானமாகக் கூற

முடியாவிட்டாலும் தென்னிந்தியாவை ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுடன் இணைத்த ஒரு பெருநிலப்பகுதி இருந்திருக்கலாம். அண்மையில் ஜப்பான் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்பு இருந்திருப்பதாகச் சில அறிஞர் கூறுகின்றனர். கபாடபுரத்தை வடநாட்டுக் காப்பியங்கள் குறிப்பிடுவதி லிருந்து ஒரு நிலப்பகுதி குமரிக்குத் தெற்கில் இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

9. ‘வென்வேற் கவுரியர் தொன்முது கோடி' (அகம். 70-13).

10. கொடும்பளூர் இக்காலத்திய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

11, அகம் 13:10

12. பரிபா. 1:1-5, 2:19-21, 13: 27-33, 15: 13-14

13. சிலப். 11: 94-97.

14. இந்நூலின் அடிப்படைச் சான்றுகள் - II, கல்வெட்டு வரிசை எண் 44 முதல் 46 வரை.

15. இந்நூலின் அடிப்படைச் சான்றுகள் -II, கல்வெட்டு வரிசை எண் 1-6.

16. பரிபா. 12: 9-10; கலி, 67: 3-4.

17. சிலப். 11 : 108; பரிபா. 15:21-23.

18. 'அக்காலத்து அவர் நாட்டிற்குத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகி பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதம் - கடல் கொண்டு ஒழிதலால் குமரியாகிய பௌவம் என்றார்'. சிலப். 8: 1-2 அடியார் உரை.

19. சிலப்.14: 108-112

20. அகம் : 220:13.

21. பெரிபுளூஸ் ‘நெல்சிந்தா' என்று குறிப்பிடும் மேற்குக் கடற்கரைத் துறைமுகத்தையும் 'நெல்லினூர்' என்று கொள்ள இடமுண்டு, இதுவும் பாண்டியருக்குச் சொந்தமானது என்று பெரிபுளூஸ் நூல் கூறுகிறது.

22. Kol Kei.

23. Elankon of Ptolemy

24. ‘சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. (களவியலுரை)

25. 'அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கபாடபுரத்தென்ப, அக்காலத்துப்போலும் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது.' (களவியலுரை)

26. இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம்.

27. பரிபா. தி. 7: 1-5.

28. முருகு, 67-77.

29. சிலப். 14 : 67.

30. சிலப். 15 : 207-16.

31. புறம். 215: 6-7.

32. திருக்குறளின் சிறந்த உரையாசிரியராகிய பரிமேலழகர் 'குடிமை' என்னும் அதிகாரத்தில் ஐந்தாவது திருக்குறளுக்குப் பொருள் கூறுமிடத்துப் ‘பழங்குடி' என்னும் சொல்லிற்குச் 'சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வருதல்' எனக் கூறியுள்ளார். ஆகையால், பாண்டியர் குலம் இன்ன காலத்தில் தோன்றியதென்று அறுதியிட்டுக் கூற இயலாது. தென்னிந்தியத் தலபுராணங்களில் பாண்டியர்கள் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பெறுகிறது. இக் கூற்றுகள் பாண்டிய மன்னர்களுடைய நீண்டகாலத் தொடர்பைக் குறிக்கின்றன. பாண்டிய மன்னர்களின் குலத்தைச் சார்ந்தவர்கள் தற்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ளனரா? என உறுதியாகக் கூறுவதற்கில்லை. சில வரலாற்றாசிரியர்கள் தென்தமிழ்நாட்டு மறவர் குலத்தைப் பாண்டிய மன்னர்களுடைய சந்ததியார் என்று கூறுவர். மற்றும் சிலர் கள்ளர்கள் இனத்தைச் சார்ந்தவர்களே பாண்டியர்களுடைய சந்ததியார் ஆவர் என உரைப்பர். இப்பொழுது தென்மாவட்டங்களில் வாழும் 'பள்ளர்' இனத்தைச் சேர்ந்தவர்களே பாண்டிய மன்னர்களின் மூதாதையர்கள் என்றும், 'மள்ளர்' என்று சங்க இலக்கியங்களில் காணப்படும் குலப்பெயர் பள்ளர் என்று திரிந்துவிட்டது என்றும் சிலர் கூறுவர். இக்கூற்றில் எவ்வளவு வரலாற்றுண்மை பொதிந்துள்ளது' என்பது அறிஞர்களின் ஆய்விற்கு உரியதாகும். சங்க இலக்கியங்களில் பயன்றுள்ள 'மள்ளர்' என்னும் சொல் பள்ளர் எனத் திரிந்தது என்பதற்கு, இப் பள்ளர்கள் பாண்டிய மன்னர்களின் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. (ப-ர்.)

33. Rock Edicts IIandXIII.

34. இந்நூல் அடிப்படைச் சான்றுகள் II, கல்வெட்டு எண்கள் 1 முதல் 6.

35. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனந் திரியும
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னரது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை திரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. (புறம்.183)

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. (புறம்.183)</poem>

36. சிலப். 23 : கட்டுரை 14-18.

37. ‘ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
     அழற்குட் டத்து அட்டமி ஞான்று
     வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண
     உரைசால் மதுரையோடு அரைசுகே டுறும்எனும்
     உரையும் உண்டே நிரைதொடி யோயே’ (சிலப். 23 : 133-137)

38. தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
     மன்னுயிரப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
     நின்னொடு தூக்கிய வென்வேற் செழியே! (புறம். 19:2-4.)

39. புறம். 19:2-4.

40. புறம். 76: 9.

41. கொள்கையில் இருந்த வெற்றிவேற்செழியன் (சிலப். உரைபெறு கட்டுரை)

42. ‘கொற்கைக் கோமான்
     தென்புலங் காவலர் மருமான்’ (சிறுபாண். 62-63).

43. அகம். 209 : 3-4.

44. ‘இழையணி நெடுந்தேர்க் கைவண் செழியன்’ (அகம். 47 : 15)

45. ‘முத்தின்தெண்கடல் பொருநன் திண்டேர்ச் செழியன்’ (அகம். 137 : 13-14).

46. சிலப். 23 : உரைபெறு கட்டுரை.

47. பசும்பூண் பாண்டியன் எனக் கொள்ள இடமுண்டு.

48. அகம். 149:13-14.231:12-13; நற். 39 : 9-10.

49. அகம். 46:14, 47:16.

50. இத்தலையாலங்காணம் என்னுமிடம் தஞ்சை மாவட்டத்திலுள்ள தலையாலங்காடு என்று கருதப்பெறுகிறது.

51. அகம். 36 : 15-20

52. புறம். 77 :6

53. புறம் 76: 5-9

54. ‘நண்ணார் ஆண்டலை மதிலர் ஆகவும் முரசுகொண்டு
    ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன், பெரும்பெயர்க்கூடல்’ (நற்.39:7-10)

55. ‘ஆடுகொள்முரசின் அடுபோர்ச் செழியன்
           மாடுமூதூர் மதிற்பறம் தழீஇ - யாத்தகுடை (அகம். 335 : 10-14)

56. சிலர் நெல்சிந்தம் என்பது கிழக்குக் கடற்கரைத் துறைமுகமெனக் கூறுவர். அங்ஙனமாயின் அது பாண்டியருடைய துறைமுகமாகும். அதனைக் கைப்பற்றப் பாண்டியன் முயன்றிருக்க இயலாது.

57. மதுரைக் 119.

58. மதுரைக். 190.

59. புறம்.18:28-30.

60. நற். 340:3

61. புறம்.26:13-15.

62. புறம். 372 : 5-12.

63. புறம். 239.

64. ‘பாண்டியர’ என்னும் பகுதியில் விளக்கம்’

65. புறம்.55,56.

66. புறம். 55:18-21.

67. புறம். 57:5-11.

68. புறம். 57.

69. புறம். 196 :13-15.

70. புறம். 198 : 10, 56:9-15.

71. புறம் 55:6.

72. புறம் 198:2

73. புறம் 198:6.

74. இறையனார் களவியல் உரை.

75. நற். 105: 15-10, 228.

76. குறுந். 245.

77. குறுந் 2.6.

78. பதிற். 44: 14, 49 : 8; பதி. 5: 13.

79. பதிற். பதி. 9:7.

80. மதுரைக். 772-74.

81. ‘பழையன் மோகூர் அவையகம் விளங்க
           நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன’ (மதுரைக். 508-509)

82. அகம். 346: 19-22.

83. மதுரையில் நடந்த போரில் பழையன் மாறன் கிள்ளிவளவனிடம் தோற்றுத் தன் கோநகரமாகிய மதுரையையும் யானைகளையும் குதிரைகளையும் இழந்து மோகூர் என்னும் ஊருக்கு ஓடி, அதைக் கோநகரமாகக் கொண்டு ஆளத்தொடங்கினான். இவனது தோல்வியைக்கேட்ட சேரன் கோதைமார்பன் மகிழ்ச்சியடைந்தான்.

84. பழையன் மாறன் என்னும் பெயர்கொண்ட ஒருவன் பாண்டியன் தலையாலங் கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனின் படைத்தலைவனாக விளங்கினான். இவனுடைய பெயரிலிருந்து மோகூர் அரசன் பழையனின் மகனாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

85. அகம். 346:19.

86. வித்தை போர்ப்பயிற்சி என்று கொள்வாரும் உளர்.

87. அடுத்த வழுதி சங்ககாலக் கல்வெட்டில் காணப்படும் கடலன் வழுதி.

88. புறம். 9:10-11.

89. காவிரி கடலோடு கலக்குமிடத்தில் புகாரில் நடைபெற்ற இந்திரவிழாவில் சோழ அரசர்கள் கலந்துகொள்வது போன்று.

90. ‘வயிர்’ என்னும் ஒருவித இசைக்கருவியை இயக்குபவர்கள்.

91. ‘முந்நீர் விழவின் நெடியோன்’ (புறம். 9-10)

92. மதுரைக். 759 -768.

93. புறம் 6:1-8

94. மதுரைக். 760.

95. வேள்வி - யாகம்.

96. புறம்.6:19-20.

97. புறம்.15: 17-21.

98. புறம்.20: 13-14.

99. புறம்.21.

100. புறம்.367:13.

101. புறம்.367.

102. புறம்.58.

103. புறம்.57.

104. புறம். 169,171.

105. புறம். 172:8-11.

106. அகம். 346:25.

107. புறம்.373.

108. புறம்.50, 68, 197.

109. 'துஞ்சினான்' என்பதற்கு ஓய்வு எடுத்துக்கொண்டான் என்னும் பொருளும் உண்டு எனக் கூறப்பெறுகிறது.

110. மதுரைக் 775, பொலம்பூன் ஐவர்.

111. புறம். 182.

112. புறம். 3:13 - உரை.

113. அகம். 315: 7-8.

114. அகம். 315.

115. குறுந். 117 : 3; அகம். 59: 5.

116. குறுந். 210: 1.

117. பதிற் 88 : 7-10.

118. பரிபா. 12: 86.

119. நற். 97.301: குறுந். 270.

120. சங்க இலக்கியங்கள், ‘வரலாறு’, வையாபுரிப்பிள்ளை, பக் 1373

121. புறம். 52: 5

122. புறம். 52: 5

123. மருதன் இளநாகனார், ஔவையார்.

124. அடிப்படைச் சான்றுகள் - 11 கல்வெட்டு எண்1.

125. அகம். 130 : 11.

126. அகம். 312 : 11-12.

127. கலி. 41: 24-25.

128. புறம். 71: 4-19.

129. புறம். 242.

130. அகம். 25:20.

131. புறம். 246 :13-15.

132. நற்.279 : 2; பெருபாண் 458; பரிபா. 3: 53.

133. அகம். 231 : 12.

134. அகம். 162: 18.

135. அகம். 253: 4-5.

136. புறம்.130: 5–6.

137. குறுந்.393 : 3–6.

138. அகம். 338: 5–6.

139. புறம்.130.: 5–6.

140. அகம். 266.: 12.

141. 'அரிமண வாயில்' என்பது புதுக்கோட்டைக்கருகில் உள்ள அரிமளம்.

142. பதிற். 32: 9–11.

143. புறம்.184:5

144. புறம்.184.

145. புறம்.188.

146. அகம். 28: 3–14.

147. அகம்.28.

148. நற்.15: 7–10.

149. புறம்.196.

150. சிலப். 11: 17–22.