உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/004

விக்கிமூலம் இலிருந்து


களப்பிரர் காலத்து இலங்கை அரசர்

களப்பிரர் தமிழகத்தை ஆண்ட காலத்தில் பக்கத்து நாடாகிய இலங்கையின் அரசியல் நிலை எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம். இலங்கையிலும் நிலைத்த ஆட்சி யில்லாமல் அரசியல் குழப்பங்களும் கலகங்களும் இருந்தன.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் நெடுங்காலமாக அரசியல் தொடர்பும் வாணிகத் தொடர்பும் சமயத் தொடர்பும் இருந்து வந்தன. ஏறத்தாழ கி. மு. 5ஆம் நூற்றாண்டிலிருந்து, இலங்கை - தமிழ்நாடு உறவு இருந்தது. களப்பிரர் காலத்திலும் இரு நாடுகளுக்கும் தொடர்பு இருந்தது. அந்தத் தொடர்பைச் சுருக்கமாகக் கூறுவோம். களப்பிர அரசர்களைப் பற்றின வரலாற்றுச் செய்திகள் வரன்முறையாகத் தெரியவில்லை யானாலும் அக்காலத்து இலங்கையரசருடைய வரலாறு வரன்முறையாவும் தொடர்ச்சியாகவும் தெரிகின்றது. சூலவம்சம் என்னும் நூலிலே இலங்கை வரலாறு தெரிகின்றது. பாண்டிய நாட்டைக் களப்பிர அரசர் ஆண்ட காலத்திலே பாண்டிய அரச குலத்தார் இலங்கையைக் கைப்பற்றிச் சிலகாலம் அரசாண்ட செய்தியை இலங்கை வரலாற்றிலிருந்து அறிகிறோம். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இலங்கையை யரசாண்ட அரசர்களைக் கூறுவோம். இந்த அரசர்கள் ஆண்ட காலத்தை இலங்கை வரலாற்றுச் சுருக்கம் என்னும் நூலிலிருந்து எடுத்துள்ளோம். (A Short History of Ceylon, H. W. Codringtion, 1929).

திஸ்ஸன்

திஸ்ஸன் என்னும் இவன் ஸ்ரீதாசனுடைய மகன். இவன் விவகாரம் (சட்டம்) அறிந்தவனாகையால் ஓகாரிக திஸ்ஸன் என்று பெயர் பெற்றான். இவன் இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் இலங்கையில் மகாயான பௌத்த மதம் நுழையத் தொடங்கிற்று. இலங்கையில் பழைய தேரவாதப் பௌத்தத்துக்கு மாறானது மகாயான பௌத்த மதம். தேரவாதப் பௌத்தத்துக்கு இடையூறாக இருந்த மகாயான பௌத்தம் இலங்கை யில் நுழைந்தபோது, ஓகாரிக திஸ்ஸன் தன்னுடைய அமைச்சனானகபிலன் என்பவனைக் கொண்டு மகாயானத்தை அடக்கி தேரவாதப் பௌத்தத்தை நிலைக்கச் செய்தான்.

அபயநாகன்

இவன் ஓகாரிக திஸ்ஸனுடைய தம்பி. இவனுக்கும் இராணிக்கும் கூடா ஒழுக்கம் இருந்தது. இது கண்டறியப்பட்ட போது இவன் தமிழ்நாட்டுக்கு ஓடிவிட்டான். தமிழ்நாட்டில் எங்குத் தங்கினான் என்பது தெரியவில்லை. ஆனால், களப்பிர அரசனுடைய ஆதரவில் தங்கியிருந்தான் என்று கருதலாம். தமிழ்நாட்டில் தங்கியிருந்த இவன் சில காலத்துக்குப் பிறகு பெரிய சேனையை அழைத்துக்கொண்டு இலங்கைக்குப் போய் அண்ணனாகிய அரசனோடு போர் செய்தான். ஓகாரிக திஸ்ஸன் தன்னுடைய இராணியுடன் இலங்கையின் மத்தியில் உள்ள மலைநாட்டுக்கு ஓடினான். அபயநாகன் அவனைத் தொடர்ந்து சென்று போர் செய்து ஓகாரிக திஸ்ஸனைக் கொன்று அவனுடைய இராணியைக் கைப்பற்றிக் கொண்டுவந்து அவளை இராணியாக்கி அரசாண்டான். இவன் எட்டு ஆண்டுகள் அரசாண்டான்.

ஸ்ரீநாகன் II

இவன் ஓகாரிக திஸ்ஸனுடைய மகன். இவனை இரண்டாம் ஸ்ரீநாகன் என்றும் கூறுவர். அபயநாகன் இறந்த பிறகு ஸ்ரீநாகன் இலங்கையை இரண்டு ஆண்டுகள் அரசாண்டான்.

விஜயகுமரன்

ஸ்ரீநாகனுக்குப் பிறகு அவனுடைய மகனான விஜயகுமாரன் அரசனானான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் சங்க திஸ்ஸன், கங்கபோதி, கோதாபயன் என்னும் மூன்று பேர் வந்து அரசாங்க ஊழியராக அமர்ந்தார்கள். இவர்கள் அரசகுலமல்லாத இலம்பகன்னர்.

ஸ்ரீகங்கபோதி (கி.பி. 252 - 254)

இவனுடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், இவனுக்கு அமைச்சனாகவும் பொக்கிஷதாரனுமாக இருந்த கோதாபயன் என்னும் இலம்பகன்னன், நாட்டில் இவனுக்கு எதிராகக் கலகஞ்செய்தான். நாட்டிலே கலகமும் குழப்பமும் ஏற்பட்டன. கோதாபயன் சேனையோடு வந்து இவன்மேல் போர் தொடுத்தான். அரசனான ஸ்ரீகங்கபோதி இவனோடு போர்செய்யாமல் ஓடினான். ஓடிய இவனைப் பிடித்து ஒரு சேனைத் தலைவன் இவன் தலையை வெட்டிக் கோதாபயனிடம் அனுப்பினான். கோதாபயன் அதைத் தக்கமுறையில் அடக்கஞ் செய்துவிட்டு, மேகவண்ணாபயன் என்று பெயர் சூட்டிக்கொண்டு அரசனானான்.

மேகவண்ணாபயன் (கி. பி. 254-267)

கோதாபயன், மேகவண்ணாபயன் என்று பட்டப்பெயர் கொண்டு பதின்மூன்று ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக்காலத்தில் இலங்கையில் வேதுல்லியமதம் (மகாயான பௌத்தம்) பரவத்தொடங்கிற்று. பழைய தேரவாதப் பௌத்தத்துக்கு மாறுபட்டதான வேதுல்லியமதத்தை நீக்கி இவ்வரசன் பழைய தேரவாதப் பௌத்தத்தை நிலை நிறுத்தினான். மகாயான பௌத்தத்தைச் சார்ந்த பௌத்தப் பிக்குகளை இவ்வரசன் நாடு கடத்தினான். நாடுகடத்தப்பட்ட பிக்குகள் தமிழ்நாட்டுக்கு வந்து சோழ நாட்டில் தங்கினார்கள். அக்காலத்தில் சோழ நாட்டில் மகாயானப் பௌத்தத் தலைவராக இருந்த சங்கமித்திரன் என்னும் தமிழப் பிக்கு, நாடுகடத்தப்பட்டு வந்த சிங்கள நாட்டுப் பிக்குகள் கூறியதைக் கேட்டுத் தான் இலங்கைக்குப் போய் மேகவண்ணாபய அரசனுடைய சபையில் தேரவாதப் பௌத்தர் களோடு சமயவாதஞ்செய்து வென்றார். மேகவண்ணாபயன் வெற்றி பெற்ற சங்கமித்திரரை ஆதரித்தான். தன்னுடைய மக்களான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்பவர்களைச் சங்கமித்திரரிடத்தில் கல்வி கற்க விட்டான். மேகவண்ணாபயன் காலமான பிறகு அவன் மகனான ஜேட்டதிஸ்ஸன் அரசனானான்.

ஜேட்டதிஸ்ஸன் (கி. பி. 267 - 277)

இவன் மேகவண்ணாபயனுடைய மூத்த மகன். இவன் பத்து ஆண்டுகள் அரசாண்டான். இவன் சங்கமித்திரரிடம் கல்வி பயின்ற மாணவன். ஆனால், அவரிடத்தில் இவன் பகை கொண்டிருந்தான். ஆகையால், சங்கமித்திரர் இவன் காலத்தில் இலங்கையிலிருந்து சோழ நாட்டுக்கு வந்துவிட்டார்.

மகாசேனன் (கி. பி. 277 - 304)

ஜேட்டதிஸ்ஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாசேனன் அரசனானான். இவன் அரசனாவதையறிந்த இவனுடைய குருவாகிய சங்கமித்திரர் சோழநாட்டிலிருந்து இங்கு வந்து தம்முடைய கையினாலே இவனுக்கு முடிசூட்டினார். இவ்வரசனுடைய ஆதரவைப்பெற்ற இவர், மகாயான பௌத்த மதத்தை இலங்கையில் பரவச்செய்தார். இலங்கையில் தேரவாத (ஈனயான), மகாயானச் சமயப் பூசல்கள் ஏற்பட்டன. மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த பேர் போன சிவன் கோயில்களை இடித்து அழித்தான்.

ஸ்ரீமேகவண்ணன் (கி. பி. 304-332)

இவன் இலங்கையின் பழைய தேரவாதப் பௌத்தத்தை ஆதரித்தான். பல பரிவேணைகளையும் விகாரைகளையும் கட்டினான். இவனுடைய ஒன்பதாம் ஆட்சியாண்டில் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தருடைய பல் தாதுவை அநுராதபுரத்தில் வைத்துச் சிறப்புச் செய்தான். வட இந்தியாவை இவன் காலத்தில் ஆட்சி செய்தவன் சந்திரகுப்தன் (கி. பி. 345 - 380). ஸ்ரீமேகவண்ணன், சந்திரகுப்த அரசனிடத்தில் இரண்டு பௌத்தப் பிக்குகளைத் தூது அனுப்பி, புத்தகயாவுக்கு யாத்திரை போகிற இலங்கைப் பௌத்தப் பிக்குகளுக்குப் பாதுகாப்புக் கொடுத்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டான். இவன் இருபத்தெட்டு ஆண்டு ஆட்சி செய்தான் (சூல வம்சம் 37ஆம் பரிச்சேதம் 51 - 99, Culavamsa, Part I Translated by Wilhelm Geiger, 1929). இவனுடைய கல்வெட்டுச் சாசனங்கள் இலங்கையில் கிடைத்துள்ளன. அந்தச் சாசனங்களில் இவ்வரசன் கிரி மேகவண்ண என்றும் கிரி மேகவன என்றும் கூறப்படுகிறான்.

ஜேஸ்ரீட்டதிஸ்ஸன் II (கி. பி. 332-341)

ஜேட்டதிஸ்ஸன், ஸ்ரீமேகவண்ணனுடைய தம்பி. இவன் யானைத் தந்தத்தில் அழகான உருவங்களையும் கலைப் பொருள்களையும் செய்வதில் வல்லவன். அந்தத் தொழிலைப் பலருக்கு கற்பித்தான். இவன் இலங்கையை ஒன்பது ஆண்டுகள் அரசாண்டான் (சூலவம்சம் 37ஆம் பரிச்சேதம் 100 - 104).

புத்ததாசன் (கி. பி. 341-370)

இவன் ஜேட்டதிஸ்ஸனுடைய மகன். மருத்துவக் கலையில் வல்லவனான இவன் மனிதரின் நோயைத் தீர்த்ததுமல்லாமல் ஒரு பாம்பின் நோயையும் தீர்த்தானாம். நாட்டில் ஆங்காங்கே மருத்துவர்களை நியமித்து நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய ஏற்பாடு செய்தான். மருத்துவருக்கு மருத்துவ விருத்தி நிலங்களைக் கொடுத்தான். யானை, குதிரைகளின் நோய்களையும் போரில் புண்பட்ட வீரர்களின் நோயையும் போக்க வைத்தியர்களை நியமித்தான்.

இவ்வரசன் காலத்தில் மகாதம்ம கீர்த்தி என்னும் பிக்கு பௌத்த சூத்திரங்களைச் சிங்கள மொழியில் பெயர்த்தெழுதினார். இவ்வரசனுக்கு எண்பது மக்கள் இருந்தார்களாம். ப-ஹியன் (Fa-Hain) என்னும் சீன யாத்திரிகர் இவ்வரசன் காலத்தில் இலங்கைக்கு வந்து தங்கினார். ப-ஹியன் இலங்கையில் கி. பி. 411 - 12 ஆம் ஆண்டு தங்கினார் என்று அறியப்படுகிறது. புத்ததாச அரசன் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான் (சூலவம்சம் 37 ஆம் பரிச்சேதம் 105 – 178).

உபதிஸ்ஸன் (கி.பி. 370-412)

புத்ததாசன் காலமான பிறகு அவனுடைய மூத்த மகனான உபதிஸ்ஸன் இலங்கையை யரசாண்டான். இவனை இரண்டாம் உபதிஸ்ஸன் என்பர். பௌத்தப் பள்ளிகளுக்கும் பௌத்தப் பிக்கு களுக்கும் இவன் தான தருமங்களைச் செய்தான். அங்கு ஊனம் உள்ளவர்க்கும் குருடர் நோயாளிகளுக்கும் மருத்துவ மனைகளை அமைத்தான். இவன் 42 ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய இராணி, இவனுடைய தம்பியான மகாநாமன் என்பவனோடு கூடாவொழுக்கங் கொண்டிருந்தாள். மகாநாமன் பௌத்தப் பள்ளியில் சேர்ந்த பௌத்தப் பிக்குவாகத் துறவு கொள்ள இருந்தான். அவன் புத்தப் பள்ளியில் பப்பஜா என்னும் நிலையில் இருந்தான். பப்பஜா என்பது துறவு பூணுவதற்கு முந்திய புகுநிலை. (முழுத்துறவு கொள்வதற்கு உபசம்பதா என்பது பெயர்.) மகாநாமனோடு கூடாவொழுக்கங் கொண்டிருந்த இராணி அரசனைக் (உபதிஸ்ஸனை) குத்திக் கொன்றுவிட்டாள். இதையறிந்த பௌத்தப் பள்ளியில் இருந்த மகாநாமன் அரண்மனைக்கு வந்து அரசாட்சியைக் கைக்கொண்டான் (சூலவம்சம் 37ஆம் பரிச்சேதம் 179 - 210).

மகாநாமன் (கி.பி.412-434)

உபதிஸ்ஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாநாமன் அரசனானான். இவன் தன்னுடைய அண்ணனுடைய இராணியைத் தன்னுடைய பட்ட மகிஷியாக்கிக் கொண்டான். இவர்களுக்கு ஆண் மக்கள் இல்லை. ஒரே ஒரு பெண்மகள் சங்கா என்பவள் இருந்தாள். மகாநாமனுக்கு இன்னொரு மனைவி இருந்தாள். அவள் தமிழ் குலத்தைச் சேர்ந்தவள். ஆகவே, அவள் தமிழமகிஷி என்று கூறப்பட்டாள். அந்தத் தமிழ் இராணிக்கு சொத்திசேனன் என்னும் ஒரு மகன் இருந்தான்.

மகாநாமனுடைய ஆட்சிக் காலத்தில் புத்த கோஷர் என்னும் பெயருள்ள பேர் போன பௌத்தப் பிக்கு இலங்கைக்கு வந்தார். அவர் இலங்கைக்கு வருவதற்கு முன்பு ஆந்திர நாட்டிலும் பிறகு தமிழ்நாட்டிலும் இருந்தார். தமிழ்நாட்டுப் பௌத்த விகாரைகளில் தங்கியிருந்தபோது, அப்பள்ளியில் இருந்த சுமதி, ஜோதிபாலர் என்னும் தமிழ்ப் பிக்குகள் புத்தகோஷரை இலங்கைக்குப் போய் அங்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த பௌத்த மத உரை நூல்களைக் கற்கும்படித் தூண்டினார்கள். புத்தகோஷர், மகாநாமன் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு வந்து தங்கி பௌத்த விகாரைகளில் இருந்த சிங்கள உரை நூல்களைக் கற்றார். இலங்கையில் மகாவிகாரையில் இருந்த பௌத்த சங்கத்தலைவரான சுங்கபாலர் என்னும் மகாதேரர் புத்தகோஷருக்குச் சிங்கள மொழியில் இருந்த திரிபிடக உரைகளைக் கூறினார். அவற்றையறிந்த பிறகு புத்தகோஷர் விசுத்திமக்கம் முதலான நூல்களைப் பாலி மொழியில் எழுதினார். புத்தகோஷர் தம்முடைய நூலில், சோழ நாட்டை யரசாண்ட அச்சுதவிக்கந்தன் என்னும் களப்பிர அரசரைக் குறிப்பிடுகிறார்.

மகாநாமன் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு காலமானான் (சூலவம்சம் 37ஆம் பரிச்சேதம் 210 - 247).

சொத்திசேனன் (கி. பி. 434)

மகாநாமன் இறந்த பிறகு அவனுடைய ஒரே மகனான சொத்தி சேனன் இலங்கையில் அரசனானான். இவன் மகாசேனனுக்கும் அவனுடைய தமிழ மகிஷிக்கும் பிறந்த மகன். சொத்திசேனன் முடி சூடின அதே நாளில் அவனுடைய மாற்றாந்தாயின் மகளான சங்கா என்பவளால் கொலை செய்யப்பட்டிறந்தான். சங்காவின் தாய் சிங்களவள். அவள் தன்னுடைய முதல் கணவனான உபதிஸ்ஸனைக் கொன்று அரசாட்சியைத் தன்னுடைய காதலனான மகாநாமனுக்குக் கொடுத்ததை யறிந்தோம். அவளுடைய மகளான சங்காவும் தன் தாயைப் போலவே, கொலைக்கு அஞ்சாதவளாய்த் தன்னுடைய தம்பியான தமிழசொத்தி சேனனைக் கொன்றுவிட்டாள். தாயைப் போல சேய் என்னும் பழமொழிக்கு ஏற்பத் தாயினுடைய கொலையுள்ளம் சங்காவுக்கும் இருந்தது.

சத்தக்காகசன் (கி. பி. 434)

இவனுடைய இயற்பெயர் தெரியவில்லை. சத்தக்காகசன் என்பது சத்திரக்காகசன் என்பதன் சிதைவு. சத்திரம் என்றால் அரசனுடைய கொற்றக்குடை என்பது பொருள். இவன் மகாநாமனின் கொற்றக்குடை ஏந்தும் அலுவலனாக இருந்தான். மகாநாமன் தன்னுடைய சிங்கள மனைவியின் மகளான சங்கா என்பவளை இவனுக்கு மணஞ் செய்வித்தான். மகாநாமன் இறந்த பிறகு அவனுடைய மகனான சொத்திசேனன் அரசனானான். சொத்திசேனன், மகாநாமனுடைய தமிழ மகிஷியின் மகன் என்பதையறிந்தோம். இவன் முடிசூடின அன்றைய தினமே இவனுடைய சிங்களச் சகோதரியினால் கொல்லப்பட்டிறந்ததையும் அறிந்தோம். சொத்திசேனனுக்குப் பிறகு சத்தக்காகசனாகிய இவன் சிங்கள அரசின் சிம்மாசனம் ஏறினான். இவன் ஓராண்டு காலம் அரசாண்டான். இவன் இறந்த பிறகு இவனுடைய உடம்பை அமைச்சன் அரண்மனையிலேயே கொளுத்தி விட்டு, மித்தசேனன் என்பவனை அரசனாக்கினான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 3-4).

மித்தசேனன் (கி. பி. 435-436)

சத்தக்காகசன் இறந்த பிறகு, அமைச்சன் (அவன் பெயர் தெரிய வில்லை) மித்தசேனன் என்பவனைச் சிங்கள நாட்டுச் சிம்மாசனத்தில் அமர்த்தினான். அக்காலத்தில் சிங்கள அரச குலத்தைச் சேர்ந்தவர் ஒருவருமிலர் என்று தோன்றுகிறது. அரசனாக அமர்ந்த மித்தசேனன் யார், இவன் எந்த முறையில் அரசாட்சிக்கு உரியவன் என்பது தெரிய வில்லை. நிச்சயமாக இவன் அரசுக்கு உரியவனல்லன். ஏனென்றால், இந்த மித்தசேனன் பேர்போன அரிசிக் கொள்ளைக்காரனாக இருந்தவன். இவனை அரசனாக்கிய அமைச்சன் இவனை வெளியில் காட்டாமலே மறைத்து வைத்திருந்தான். அரசன் நோயாக இருக்கிறபடியால் அரண் மனையை விட்டு வெளியே வர இயலாமல் இருக்கிறான் என்று அமைச்சன் நாட்டு மக்களிடம் கூறினான்.

எத்தனை நாள் ஒளிந்திருக்க முடியும்? நாட்டு மக்கள் வற்புறுத்தலின்மேல், மித்தசேனன் திருவிழாக் காலத்தில் யானை ஏறி உலா வந்தான். இவன் ஆட்சிக் காலத்தில், ஓராண்டுக்குப் பிறகு தமிழ் நாட்டிலிருந்து பாண்டிய அரச குலத்துப் பாண்டியன் ஒருவன் படை யெடுத்துவந்து மித்தசேனனைப் போரில் கொன்று சிங்கள ஆட்சியைக் கைப் பற்றி யரசாளத் தொடங்கினான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 4 – 11).

இலங்கையில் பாண்டியர் ஆட்சி (கி. பி. 436-463)

தமிழகத்தைச் (சேர, சோழ, பாண்டிய நாடுகளை) களப்பிர அரசர் ஆட்சி செய்தபோது பழைய சேர, சோழ, பாண்டிய அரச பரம்பரையார் களப்பிரருக்குக் கீழடங்கிச் சிற்றரசர்களாக இருந்தார்கள். அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. பாண்டி நாட்டில் கீழடங்கியிருந்த பாண்டிய பரம்பரையில் ஒரு பாண்டியன், தன்னுடைய இரண்டு மகன்களையும் ஒரு தமிழ்ச் சேனையையும் அழைத்துக்கொண்டு, இலங்கைக்கு வந்தான். அங்கு அரசாண்டு கொண்டிருந்த மித்தசேனனோடு போர் செய்தான். மித்தசேனன் போரில் இறந்து போனான். பாண்டியன் இலங்கையாட்சியைக் கைப்பற்றி அனுராத புரத்திலிருந்து இலங்கையை யரசாண்டான். இந்தப் பாண்டியனுடைய பெயர் தெரியவில்லை. இவனைப் பாண்டு (பாண்டியன்) என்று இலங்கை வரலாறு கூறுகிறது.

பாண்டு (பாண்டியன், கி. பி. 436 - 441

பாண்டியன் இலங்கையை யரசாண்டபோது தலைநகரமான அநுராதபுரத்திலிருந்த சிங்கள அரச குடும்பத்தவரும் பெருங்குடி மக்களும் தெற்கே உரோகண நாட்டுக்குப் போய் விட்டார்கள். இலங்கையின் தென்கிழக்கிலிருந்த உரோகண நாடு அந்தக் காலத்தில் கலகக்காரர்களுக்குப் புகலிடமாக இருந்தது. உரோகண நாட்டுக்குச் சென்றவர்கள் தனக்கு எதிராகக் கலகஞ் செய்வார்கள் என்பதையறிந்த பாண்டியன் தன்னுடைய சிங்கள இராச்சியத்தின் தெற்கெல்லைகளில் பல கோட்டைகளை அமைத்துப் பாதுகாப்புகளைச் செய்தான். அவன் தெற்கு எல்லையில் இருபத்தொரு கோட்டைகளை அமைத்துப் பாதுகாத்தான்.

பாண்டியனுடைய இலங்கை இராச்சியம் வழக்கம் போல இராஜரட்டம் (இராஜ ராட்டிரம்) என்று கூறப்பட்டது. அதன் எல்லை கிழக்கு மேற்கு வடக்குப் புறங்களில் கடல்களும் தெற்கே மாவலி கங்கையாறும் ஆக அமைந்திருந்தன. மாவலிகங்கை என்பது இலங்கையின் பெரிய ஆறு. இதன் சரியான பெயர் மாவாலுக கங்கை என்பது. மா - பெரிய. வாலுகம் - மணல், கங்கை - ஆறு. மாவாலுக கங்கை என்பது மாவலிகங்கை என்று வழங்கப்படுகிறது.

அநுராதபுரத்தில் மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் மோரிய குலத்தைச் சேர்ந்த ஒரு பௌத்தப் பிக்கு இருந்தான். அவனுடைய தங்கை மகனான தாதுசேனன் என்பவன், மகாவிகாரையைச் சேர்ந்த தீக சந்தனப் பரிவேணையில் (பரிவேணை பௌத்த மதக் கல்லூரி) பௌத்த மத நூல்களைப் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்குஅரசாளும் ஊழ் இருக்கிறது என்று நம்பிய அந்தப் பிக்கு அவனுக்கு மதக்கல்வியைப் போதிக்காமல் அரசியல் நூல்களைக் கற்பித்துக் கொண்டிருந்தான்.

தனக்கு எதிராகப் பௌத்த விகாரையில் தாதுசேனன் மறைவாக இருக்கிறான் என்பதையறிந்த பாண்டியன் அவனைப் பிடித்துக் கொண்டுவரும்படி தன்னுடைய வீரர்களை அனுப்பினான். பிடிக்க வருகிறார்கள் என்பதை முன்னமேயறிந்த தாதுசேனனும் அவனுடைய மாமனான பிக்குவும் நகரத்தை விட்டுப் புறப்பட்டுத் தெற்கு எல்லையான மாவலிகங்கையைக் கடந்து தெற்கே போய்விட்டார்கள். அவர்கள் தெற்கு சென்று கோணஓயாவைப் (இபோதைய காளஓயா) கடந்து உரோகண நாட்டுக்குப் போய்விட்டார்கள். அவர்கள் உரோகண நாட்டில் கலகக்காரர்களோடு சேர்ந்துகொண்டு அரசனுக்கு எதிராகக் கலகஞ்செய்யும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாண்டியன் இலங்கை இராச்சியத்தை ஐந்து ஆண்டுகள் அரசாண்ட பிறகு காலமானான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 11 – 29).

பரிந்தன் (கி. பி. 441 - 444)

பாண்டியன் காலமான பிறகு அவனுடைய மூத்த மகனான பரிந்தன் இலங்கையை யரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்து வரலாறு தெரியவில்லை. இவனுடைய ஆட்சிக் காலத்தில் உரோகண நாட்டிலிருந்த தாதுசேனன் கலகக்காரர் களைச் சேர்த்துக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்தான் என்று தோன்றுகிறது. பாண்டியன் பரிந்தன் மூன்று ஆண்டுகள் அரசாண்டான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 29).

இளம்பரிந்தன் (குட்டபரிந்தன், கி. பி. 444 - 460)

பாண்டியன் பரிந்தன் காலமான பிறகு அவனுடைய தம்பியான இளம்பரிந்தன் அரசாண்டான். இவனைக் குட்டபரிந்தன் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. குட்டபரிந்தன் என்றால் இளம்பரிந்தன் என்பது பொருள். அதாவது பரிந்தனுடைய தம்பி என்பது பொருள். இவன் பதினாறு ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில், கலகக்காரனான தாதுசேனன் படை திரட்டிக் கொண்டு வந்து இவனோடு போர் செய்தான். குட்டபரிந்தன் அவனோடு போர் செய்து வென்றான். தோற்றுப் போன தாதுசேனன் போர்க்களத்தைவிட்டு ஓடினான். போரின்போது தாதுசேனனை ஆதரித்துக் கலகஞ் செய்தவர்களை அடக்கினான். குட்டபரிந்தன் பல நன்மையான காரியங்களையும் தீமையான காரியங்களையும் செய்தான் என்று சூலவம்சம் கூறுகிறது. (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 30 - 31). என்ன நன்மைகளைச் செய்தான், என்ன தீமைகளைச் செய்தான் என்று கூறவில்லை. கலகக்காரர்களை அடக்கியது தீமையாகாது.

பாண்டியன் குட்டபரிந்தன் இலங்கை நாட்டின் மதமான பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிறான். இவனுடைய கல்வெட்டுச் சாசனம் கிடைத்திருக்கிறது. இந்தச் சாசன எழுத்து இலங்கையின் பழைய தலைநகரமான அநுராதபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு இப்போது அநுராதபுரத்து ஆர்க்கியாலஜி இலாகாவின் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனத்தில் இவன், பரிதேவன் என்றும் பரிததேவன் என்றும் புததாசன் (புத்ததாசன்) என்றும் கூறப்படுகிறான். இவனுடைய இராணி பௌத்த விகாரைக்குத் தானஞ் செய்ததை இந்தக் கல்வெட்டுக் கூறுகிறது ('Annuradhabura Slab Inscription of Kuddha Parinda' by S. Paranavitana, Epigraphia Zeylonica, Vol. IV, 1934 - 41, pp. 111 - 115).

திரிதரன் (ஸ்ரீதரன் கி. பி. 460)

இவன் குட்டபரிந்தனுக்குப் பிறகு அரசாண்டான். இவன் இளம் பரிந்தனுக்கு எந்த வகையில் உறவினர் என்பது தெரியவில்லை. இவன் அரசனான இரண்டாம் மாதத்தில் கலகக்காரனான தாதுசேனன் இவன் மேல் படையெடுத்து வந்து போர் செய்தான். அந்தப் போரில் இவன் இறந்து போனான். போர்க்களத்தில் இறந்துபோனாலும் வெற்றி இவனுக்குக் கிடைத்தது. தாதுசேனன் தோற்று ஓடினான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 32).

தாட்டியன் (கி.பி.460-463)

திரிதரன் போர்க்களத்தில் இறந்த பிறகு பாண்டியன் தாட்டியன் அரசனானான். இவனுக்கும் முந்திய அரசனுக்கும் உள்ள உறவு தெரிய வில்லை. இவன் தாட்டியன் என்றும் தாட்டிகன் என்றும் மகாதாட்டிக மகாநாகன் என்றும் மகாதானிக மகாநாகன் என்றும் கூறப்படுகிறான். இவன் மேல் போர் செய்ய வந்த தாது சேனனை இவன் வென்று துரத்தினான். உரோகண நாட்டில் உள்ள பேர் போன கதரகாம (கதிர்காமம்) நகரத்தில் தாட்டிகனுடைய கல்வெட்டுச் சாசனம் சிதைந்து காணப்படுகிறது. இந்தச் சாசனம் இவன் கிரிவிகாரை என்னும் பௌத்தப் பள்ளிக்குத் தானஞ்செய்ததைக் கூறுகிறது. எனவே, இவனும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிறான். இலங்கையின் தென்கிழக்குக் கோடியில் இவனுடைய கல்வெட்டுச் சாசனம் கிடைத்திருக்கிறபடியால், இவன் தாதுசேனன் இருந்த உரோகண நாட்டில் மேல் படையெடுத்துச் சென்று அவனோடு போர் செய்து வென்றான் என்பது தெரிகிறது. அங்கு வெற்றியடைந்தபோது இந்தத் தானத்தைச் செய்து இக்கல்வெட்டெழுத்தை எழுதினான். உரோகண நாட்டில் இவன் சில காலந் தங்கியிருந்தான் என்று தெரிகிறது (Epigraphia Zeylonica, Vol. III, pp. 216-219).

இந்தப் பாண்டியனுக்கும் கலகக்காரனான தாது சேனனுக்கும் பல போர்கள் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்தப் போர்களைப் பற்றிச் சூலவம்சம் ஒன்றும் கூறவில்லை. கூறாதபடியினால் தாதுசேனன் பல தடவை தோற்றுப் போனான் என்று ஊகிக்கலாம். கடைசியாக நடந்த போரிலே பாண்டியன் மகாதாட்டிக மகாநாகன் இறந்து போனான். இறந்து போனாலும் வெற்றி இவனுக்கே கிடைத்தது (சூலவம்சம் 38 ஆம் பரிச்சேதம் 33).

பிட்டியன் (கி. பி. 463)

தாட்டிகனுக்குப் பிறகு பிட்டியன் அரசனானான். களப்பிரர் காலத்தில் இலங்கையை யரசாண்ட பாண்டியர்களில் இவன் கடைசிப் பாண்டியன். இவன் ஆட்சிக் காலத்தில் ஏழாம் மாதத்தில் தாதுசேனன் இவன் மேல் படையெடுத்து வந்து போர் செய்தான். அந்தப் போரில் பிட்டியன் இறந்து போனான். ஆகவே, தாதுசேனன் இலங்கை யாட்சியைக் கைப்பற்றினான்.

களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பாண்டிய மரபைச் சேர்ந்த ஆறு பாண்டியர்கள் இலங்கையை இருபத்தேழு ஆண்டுகள் அரசாண்டார் கள் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 3 - 4). களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இலங்கையை யரசாண்ட வேறு சிங்கள அரசர்களைப் பற்றிக் கூறுவோம்.

தாதுசேனன் (கி. பி. 463 - 479)

பாண்டியருக்கு எதிராக இருபத்தேழு ஆண்டுகளாக கலகஞ் செய்துகொண்டிருந்த தாதுசேனன் கடைசியில் இலங்கையின் அரசனானான். ஆனால், தாதுசேனனுடைய வாழ்க்கை துன்பகரமாகவும் இரங்கத்தக்கதாகவும் இருந்தது. இவனுக்கு இரண்டு மனைவியர் இருந்தனர். இவர்களில் ஒருத்தி இவனுக்குச் சமமான குலத்தைச் சேர்ந்தவள். இவளுக்கு ஒரு அழகான பெண்மகளும் மொக்கல்லானன் என்னும் ஒரு மகனும் பிறந்தனர். தாதுசேனனுடைய இன்னொரு மனைவி இவனை விடச் சற்றுத் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவள். இவளுக்குக் கஸ்ஸபன் என்னும் ஒரு மகன் பிறந்தான். தாழ்ந்த குலத்தில் பிறந்தவனாகையினால் கஸ்ஸபனுக்கு அரசாளும் உரிமை இல்லை.

தாதுசேனன் தன்னுடைய அருமை மகளைத் தன்னுடைய மருமகனுக்குத் (தங்கையின் மகனுக்கு) திருமணஞ் செய்து கொடுத்தான். கொடுத்து அவனைத் தன்னுடைய சேனாபதியாக்கிக் கொண்டான். இவனுடைய பெயர் உபதிஸ்ஸன். இவ்வாறு இருந்தபோது, தன்னுடைய மருமகனும் சேனாபதியுமான உபதிஸ்ஸன் தன்னுடைய மனைவியைச் (அரசனுடைய மகளை) சவுக்கினால் துடைகளிலே அடித்துவிட்டான். இரத்தம் பீறிட்டு வெளிப்பட்டது. இதனைக் கண்ட அரசன், தன் மகளைக் கண்போல நேசித்தவனாகையினால், பெருஞ்சினங்கொண்டான். அடித்த காரணத்தை விசாரித்தான். காரணம் இல்லாமலே தன்னுடைய மகள் அடிக்கப்பட்டாள் என்று அறிந்தபோது, இதற்குக் காரணமான தன்னுடைய தங்கையை (சேனாதிபதியின் தாயை) உயிரோடு நெருப்பில் இட்டுக் கொளுத்திக் கொன்றுவிட்டான். தன்னுடைய தாய் பதைபதைத்துத் தீயில் வெந்து இறந்த கொடுமையைக் கண்ட மருமகனாகிய சேனாதிபதி அரசன் மேல் பெருஞ்சினங்கொண்டான். தன்னுடைய தாயைச் சுட்டுக் கொன்ற அரசனைப் பழிக்குப்பழி வாங்கத் தீர்மானஞ் செய்துகொண்டான். அரசனை ஆட்சியிலிருந்து விலக்கி அவனைத் துன்புறுத்திக்கொல்லத் திட்டம் இட்டான். தன்னுடைய திட்டத்துக்கு உதவியாக, கருவியாக அரசனுடைய மகனான கஸ்ஸபனைப் பயன்படுத்திக் கொண்டான். அரசு உரிமை இல்லாத கஸ்ஸபனுக்கு அரசாட்சி ஆசையை உண்டாக்கி அரசனுக்கு எதிராகக் கலகஞ் செய்து ஆட்சியைக் கைப்பற்றும் படித் தூண்டிவிட்டான்.

உபதிஸ்ஸனுடைய பேச்சைக் கேட்டு அரசாட்சிப் பதவியைப் பெறுவதற்கு ஆசைகொண்ட கஸ்ஸபன் நகர மக்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு தன்னுடைய தந்தையான தாதுசேன அரசனைப் பிடித்துச் சிறைச்சாலையின் இருட்டறையில் அடைத்துவிட்டுத் தான் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அரசனைச் சார்ந்தவர்களையெல்லாம் துன்புறுத்தி அடக்கினான். அரசாட்சிக்கு உரிமையுள்ளவனான மொக்கல்லானனை விஷம் இட்டுக் கொல்ல முயன்றான். மொக்கல்லானன் உயிர் தப்பித் தமிழ்நாட்டுக்கு ஓடி அடைக்கலம் புகுந்தான். அவன் தமிழ்நாட்டிலிருந்து சேனையைச் சேர்த்துக்கொண்டு வந்து கஸ்ஸபன் மேல் போர்செய்து ஆட்சியைப் பெறுவதற்காகத் தமிழ்நாட்டுக்குப் போனான். போனவன் களப்பிர அரசரின் ஆதரவைப்பெற அவர்களிடம் சென்றான் போலும். சிறைச்சாலையில் தாதுசேன அரசனுக்குச் சரியாக உணவும் கிடைக்கவில்லை. தன்னுடைய மகனான மொக்கல்லானன் தமிழ்நாட்டுக்குப் போய் விட்டதையறிந்து அவன் மனக்கவலையும் துன்பமும் அடைந்தான். பழிக்குப்பழி வாங்கத் திட்டமிட்ட சேனாபதியான உபதிஸ்ஸன் தன்னுடைய திட்டத்தில் வெற்றியடைந்தான். ஆனால், சேனாபதி இதோடு நிற்கவில்லை. அரசனைச் சித்திரவதை செய்து கொல்லத் திட்டமிட்டான்.

அவன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள கஸ்ஸபனிடஞ் சென்று, 'உம்முடைய தந்தை தாதுசேன மன்னன் அரண்மனையில் இரகசியமாகப் பெருஞ்செல்வத்தை வைத்திருக்கிறாரே, அது பற்றி அவர் உம்மிடம் ஒன்றும் சொல்லவில்லையா?' என்று கேட்டான். கஸ்ஸபன் 'ஒன்றுஞ் சொல்லவில்லை' என்று கூறினான். அதற்குச் சோனபதி 'அவருடைய உள்நோக்கம் உமக்குத் தெரியவில்லையா? அவர் தம்முடைய செல்வமகனான மொக்கல்லானனுக்குக் கொடுக்க அதை வைத்திருக்கிறார்' என்று கூறினான். சேனாபதி கூறியதை உண்மை என்று நம்பிய கஸ்ஸபன், பொருளாசை கொண்டவனாகித் தன்னுடைய ஆட்களைச் சிறைச்சாலையிலுள்ள தாதுசேனனிடம் அனுப்பி அவர் பொருள் வைத்திருக்கும் இடத்தையறிந்து வரும்படி சொன்னான். அவர்கள் சென்று கேட்டபோது அரசன் 'இந்தக் கொடியவன் என்னைக் கொன்றுவிடுவதற்குச் செய்யும் சூழ்ச்சி இது' என்று எண்ணி, பதில் ஒன்றும் பேசாமலிருந்ததைக் கூறினார்கள். கஸ்ஸபன் பலமுறை தன்னுடைய ஆட்களை அனுப்பிக்கேட்டான். கடைசியாக வந்து கேட்டபோது, காலவாபிவரியில் என்னை நீராட அழைத்துக் கொண்டு போனால் அங்குச்சென்று அந்த இடத்தைக் காட்டுவேன் என்று கூறினான். ஆட்கள் வந்து அரசன் கூறியதைச் சொன்னார்கள். கஸ்ஸபன், தாதுசேனனை காலவபியில் நீராட அனுமதி கொடுத்தான். தாதுசேனன் காலவபியில் நீராடின பிறகு, அரசனுடைய ஆட்களிடம் ஏரியைக் காட்டி, ‘இதுதான் நான் பொருள் வைத்துள்ள இடம்' என்றுகூறினான். தாதுசேனன் பொருள் உள்ள இடத்தைத் தெரிவிக்காமல் இருப்பதை அறிந்த கஸ்ஸபன் அரசனைக் கொன்றுவிடும்படி சேனாபதிக்குக் கட்டளையிட்டான்.

இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சேனாபதி, தன்னுடைய பழிவாங்கும் எண்ணம் நிறைவேறிற்று என்று மகிழ்ச்சியடைந்து அரண்மனைக் கட்டடத்தின் ஓரிடத்தில் சுவரில் உயரமாக அமைந்திருந்த மாடத்தில், தாதுசேன அரசனைக் கொண்டுபோய், அவனுடைய ஆடைகளைக் களைந்து அவனை அம்மணமாக மாடத்தில் சுவரோடு சுவராக நிறுத்திச் செங்கல்லினால் மாடத்தை மூடிக் கட்டிவிட்டான். தன்னுடைய தாயைத் தீயிட்டுக் கொன்ற தாதுசேனனை உயிரோடு சுவரில் வைத்துக் கட்டிப் பழி தீர்த்துக் கொண்டான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 37 – 110).

கஸ்ஸபன் I (கி. பி. 479 - 497)

தன் தந்தையான தாதுசேன அரசனிடமிருந்து அரசாட்சியைக் கைப்பற்றிக்கொண்டு அவனைச் சிறையில் அடைத்துப் பிறகு கொன்றுவிட்டுக் கஸ்ஸபன் இலங்கையின் அரசனானான். இவனை முதலாம் கஸ்ஸபன் என்று கூறுவர். இவனுடைய தம்பியான மொக்கல்லானன் தமிழ்நாட்டுக்குச் சென்றிருப்பதையறிந்த இவன், எப்படியும் மொக்கல்லானன் தமிழ்ச் சேனையோடு வந்து தன்னைக் கொன்று விடுவான் என்று அஞ்சித் தன்னுடைய பாதுகாப்புக்காகச் சீககிரி மலைமேல் கோட்டையமைத்து அதனுள் அரண்மனை கட்டிக்கொண்டு அங்கிருந்து அரசாண்டான். (சீககிரி என்பது இப்போது சிகிரிம் என்று கூறப்படுகிறது. இந்த மலை அநுராதபுரத்திலிருந்து தென்கிழக்கே 38 கல் தூரத்திலும் தம்புல்லா என்னும் ஊரிலிருந்து வடகிழக்கே பத்துக் கல் தூரத்திலும் இருக்கிறது. கஸ்ஸபன் இந்த மலைமேல் கட்டின கோட்டைக் கொத்தளங்களும் அரண்மனைக் கட்டடமும் இன்றும் சிதைந்த நிலையில் உள்ளன.)

கஸ்ஸபன் பதினெட்டு ஆண்டுகள் அரசாண்டான். உதவியை நாடித் தமிழகத்துக்குச் சென்ற மொக்கல்லானன் தமிழகத்தில் களப்பிரருடைய உதவியை நாடியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், உடனே அவனுக்கு உதவி கிடைக்கவில்லை. பதினெட்டு ஆண்டு அவன் தமிழ்நாட்டிலே தங்கிவிட்டான். பன்னிரண்டு தமிழ் நண்பர்கள் அவனுக்கு உதவியாக வந்தனர். அவர்கள் போர் செய்வதில்தேர்ந்த சேனைத் தலைவர்கள் என்று தோன்றுகிறது. மொக்கல்லானன் சேனையோடு வந்து கஸ்ஸபனோடு போர் செய்தான். போரில் கஸ்ஸபன் தோல்வியடையும் நிலை ஏற்பட்டபோது அவன் தன்னுடைய யானை மேல் இருந்தபடியே வாளால் குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டான். மொகல்லானன் ஆட்சியைக் கைப்பற்றினான் (சூலவம்சம் 39 ஆம் பரிச்சேதம் 1 – 28)

கஸ்ஸபனுடைய காலத்தை ஒருவாறு நிச்சயிக்கலாம். இவன் சீனநாட்டு அரசனுக்கு எழுதின திருமுகம் கி. பி. 572இல் போய்ச் சேர்ந்தது என்று தெரிகிறபடியால் இவன் அந்த ஆண்டில் வாழ்ந்திருக்கிறான் என்பது தெரிகிறது (J.R.A.S. Ceylon Branch, XXIV, p. 85).

மொக்கல்லானன் II (கி. பி. 497 - 515)

கஸ்ஸபனுக்குப் பிறகு மொக்கல்லானன் அரசாண்டான். இவன், கஸ்ஸபனால் துரத்தப்பட்டுத் தமிழ்நாட்டுக்குப் போய் அடைக்கலம் புகுந்தான் என்பதை அறிந்தோம். கஸ்ஸபனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் மொக்கல்லானன் என்னும் வீர மன்னன் நிகந்தர்களின் செய்தியறிந்து பன்னிரண்டு வீரர்களான நண்பர்களோடு ஜம்புத் தீவிலிருந்து (தமிழ்நாட்டிலிருந்து) இங்கே (இலங்கைக்கு) வந்தான் என்று சூலவம்சம் கூறுகிறது (சூலவம்சம் 39ஆம் பரிச்சேதம் 20). நிகந்தர் என்பது இங்குக் களப்பிரரைக் குறிக்கிறது. நிகந்தர் என்றால் சமணர் அல்லது ஜைனர் என்று சூலவம்சம் கூறுகிறது. எனவே, மொக்கல்லானன் தமிழ்நாட்டிலிருந்தும் களப்பிர அரசரின் உதவி பெற்று இலங்கைக்குப் போனான் என்பது தெரிகிறது.

மொக்கல்லானன் அரசனானவுடனே தன்னுடைய தந்தையான தாதுசேனனைக் கொல்வதற்குக் கஸ்ஸபனோடு உதவியாக இருந்த ஆயிரம் பேரைக் கொன்றுவிட்டான். மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த பலரைப் பிடித்து அவர்களுடைய காதையும் மூக்கையும் அரிந்து அவர்களை நாடுகடத்திவிட்டான். தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மேல் போர் செய்யப் படையெடுத்து வருவார்கள் என அஞ்சி இவ்வரசன் இலங்கையின் மேற்குக் கடற்கரையோரங்களில் ஆங்காங்கே பாதுகாப்புகளை அமைத்தான். மொக்கல்லானன் பதினெட்டு யாண்டு அரசாண்டான் (சூலவம்சம் 39ஆம் பரிச்சேதம் 29 - 58). குமார தாதுசேனன் (கி. பி. 515 - 524)

மொக்கல்லானன் இறந்த பிறகு அவனுடைய மகனான குமார தாதுசேனன் அரசாண்டான். இவனும் காளிதாசன் என்பவனும் நெருங்கிய நண்பர்கள். காளிதாசன் மொக்கல்லானனுடைய அமைச்சனுடைய மகன். குமார தாதுசேனன் ஒன்பது ஆண்டு அரசாண்டான் (சூலவம்சம் 41 ஆம் பரிச்சேதம் 1 - 3). இவன் தன்னுடைய நண்பனான காளிதாசன் இறந்தபோது அந்தத் துயரம் பொறுக்க முடியாமல் அவனுடைய ஈமத்தீயில் விழுந்து உயிர்விட்டான் என்பர்.

கீத்திசேனன் (கி.பி.524)

பிறகு, குமார தாதுசேன்னுடைய மகனான கீத்திசேனன் அரசனானான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் 9ஆம் மாதம் இவனுடைய தாய்மாமனான சிவன் என்பவன் இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றி யரசாண்டான் (சூலவம்சம் 41ஆம் பரிச்சேதம் 4).

சிவன் (கி. பி. 524)

தன்னுடைய மருமகனான கீத்திசேனனைக் கொன்று அரசனான சிவன் இருபத்தைந்தாம் நாளில் உபதிஸ்ஸன் என்பவனால் கொல்லப்பட்டு இறந்தான் (சூலவம்சம் 41ஆம் பரிச்சேதம் 5 – 6).

உபதிஸ்ஸன் III (கி.பி.525-526)

சிவனைக்கொன்று இலங்கையாட்சியைக் கைப்பற்றின உபதிஸ்ஸன், மொக்கல்லானனுடைய தங்கையை மணந்தவன். கஸ்ஸபனுக்கு அரசாட்சி ஆசையையுண்டாக்கித் தாதுசேன அரசனைச் சிறையில் அடைக்கச் செய்து, பிறகு அவ்வரசனைச் சுவரில் வைத்துக்கட்டிக் கொன்றவன். இவன் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் முக்கியமானவர் களுக்கு அரசாங்க அலுவல்களைக் கொடுத்து அவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டான். இவன் தன்னுடைய மகளைச் சிலா காலன் என்பவனுக்கு மணஞ் செய்துகொடுத்தான். இவனுக்குக் கஸ்ஸபன் என்று ஒரு மகன் இருந்தான்.

உபதிஸ்ஸனுடைய மகளை மணஞ்செய்த சிலாகாலன் ஆட்சியில் அமர்ந்து அரசனாக இருக்க ஆசைப்பட்டுத் தன்னுடைய மாமனாரான உபதிஸ்ஸனோடு போர் செய்தான். உபதிஸ்ஸன் வயதானவனாகையால் அவனுடைய மகனான கஸ்ஸபன் சிலாகாலனோடு போர்செய்தான். சில போர்களில் கஸ்ஸபன் வெற்றி பெற்றுச் சிலாகாலனைத் துரத்திவிட்டான். கடைசியில் சிலாகாலன் போரில் வெற்றியடைந்தான். தோல்வியடைந்த கஸ்ஸபன் (சிலாகாலனுடைய மைத்துனன்) போர்க்களத்தில் தற்கொலை செய்துகொண்டிறந்தான். இச்செய்தியை யறிந்த வயது தளர்ந்தவனான உபதிஸ்ஸன் மனம் உடைந்து இறந்து போனான். உபதிஸ்ஸன் ஒன்றரை யாண்டு அரசாண்டான் (சூலவம்சம் 41ஆம் பரிச்சேதம் 7 - 26).

சிலாகாலன் (கி.பி.526-539)

தன்னுடைய மாமனாரான உபதிஸ்ஸனை வென்று ஆட்சியைக் கைப்பற்றி அரசனான சிலாகாலன் பதின்மூன்று ஆண்டு இலங்கையை அரசாண்டான். இவனை அம்பாசாமணேர சிலாகாலன் என்றும் கூறுவர். இவ்வரசனுக்கு மூன்று மக்கள் இருந்தனர். அவர்களின் பெயர் மொக்கல்லானன், தாட்டாபபூதி, உபதிஸ்ஸன் என்பது. மூத்த மகனான மொக்கல்லானனுக்கு ஆதிபத என்று சிறப்புப் பெயர் சூட்டி அவனைக் கிழக்கு நாடுகளின் அதிபதியாக்கினான். இரண்டாவது மகனான தாட்டாபபூதிக்கு மலையராஜன் என்று சிறப்புப் பெயர் கொடுத்து அவனை மலைய நாட்டுக்கும் தக்கிண தேசத்துக்கும் அதிபதியாக்கினான். கடைசி மகனான உபதிஸ்ஸனைத் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான்.

இவன் அரசாண்ட காலத்தில், மகாநாகன் என்னும் வழிப்பறிக் கொள்ளைக்காரன் இருந்தான். அவன் சிலாகாலனிடம் வந்து அரசாங்க அலுவலில் அமர்ந்தான். அலுவலில் அமர்ந்த மகாநாகனைச் சிலாகாலன், தென்கிழக்கேயுள்ள உரோகண நாட்டுக்கு அனுப்பி இறை (வரி) தண்டிவரும்படி நியமித்தான். அவன் சென்று இறை தண்டிவந்து கொடுத்தான். அவனுக்கு அரசன் அண்ட சேனாபதி என்னும் பெயர் கொடுத்து உரோகண நாட்டின் வரி தண்டும் அலுவலனாக அமைத்தான். உரோகண நாட்டுக்குச் சென்ற அண்டசேனாபதி மகா நாகன் அங்கேயே தங்கியிருந்து வரிப்பணத்தைத் தானே வைத்துக் கொண்டு சுதந்தரனாக இருந்தான் (சூலவம்சம் 41ஆம் பரிச்சேதம் 69 - 89, 26 – 41).

தாட்டாபபூதி (கி. பி. 539 - 540)

சிலாகாலன் காலமான பிறகு அவனுடைய இரண்டாவது மகனான தாட்டாபபூதி தக்கண நாட்டிலிருந்து வந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். மூத்த மகனான மொக்கல்லானன் முறைப்படி அரசுக்கு உரியவன். அவனுக்குரிய ஆட்சியை அவனுடைய தம்பியான தாட்டாபபூதி கைப்பற்றிக் கொண்டதைக் கடைசித் தம்பியான உபதிஸ்ஸன் கண்டித்தான். கண்டித்தவனைத் தாட்டாபபூதி கொன்றுவிட்டான். கிழக்கு நாட்டிலிருந்து மொக்கல்லானன், தனக்குரியதான ஆட்சியைத் தன்னுடைய தம்பியான தாட்டாபபூதி கைப்பற்றிக் கொண்டதையறிந்து படையெடுத்து வந்து போர்செய்யத் தொடங்கினான். இருவர் சேனையும் போர்க்களத்தில் சந்தித்தன. அப்போது மொக்கல்லானன், தாட்டாபபூதிக்கு இவ்வாறு செய்தி அனுப்பினான்: "நமக்காகப் போர் வீரர்கள் வீணாக மடிய வேண்டாம். நாம் இருவர் மட்டும் போர் செய்வோம். போரில் வென்றவருக்கே அரசாட்சியுரியதாகும்" என்று சொல்லியதற்குத் தாட்டாபபூதியும் இசைந்தான். இருவரும் தங்கள்தங்கள் யானைமேல் அமர்ந்து போர்செய்யத் தொடங்கினார்கள். மொக்கல்லானனுடைய யானை தாட்டாபபூதியின் யானையைத் தன்னுடைய தந்தங்களினால் குத்திற்று. குத்துண்ட யானை அஞ்சிப் புறங்கொடுத்து ஓடிற்று. அப்போது தனக்குத் தோல்வி நேரிடப் போவதைஅறிந்த தாட்டாபபூதி தன்னுடைய போர்வாளை எடுத்துத் தன்னையே குத்திக்கொண்டு இறந்து போனான். தாட்டாபபூதி ஆறு திங்கள் ஆறு நாட்கள் அரசாண்டான் (சூலவம்சம் 41 ஆம் பரிச்சேதம். 42 - 53).

மொக்கல்லானன் IV (கி. பி. 540-560)

தாட்டாபபூதி இறந்த பிறகு அவனுடைய அண்ணனான மொக்கல்லானன் இலங்கையை அரசாண்டான். இரண்டாம் மொக்கல்லானனாகிய இவனைச் சுல்ல மொக்கலானன் (சிறிய மொக்கல்லானன்) என்று கூறுவர். இவன் இருபது ஆண்டு அரசாண்டான் (சூலவம்சம் 54 - 63).

கீர்த்தி ஸ்ரீமேகன் (கி. பி. 560 - 561)

மொக்கல்லானன் இறந்த பிறகு அவனுடைய இராணி, உறவினர்களை நஞ்சு இட்டுக் கொன்றுவிட்டு அரசாட்சியைத் தன்னுடைய மகனான கீர்த்தி ஸ்ரீமேகனுக்குக் கொடுத்தாள். அவள் அரசாட்சியைத் தானே நடத்தினாள். கீர்த்தி ஸ்ரீமேகவண்ணனுக்கு முன்பு ஒரு கீர்த்தி ஸ்ரீமேகவண்ணன் இருந்தபடியால் இவனைக் குட்டகீர்த்தி ஸ்ரீமேக வண்ணன் என்று கூறுவர். இவனுடைய தாய் அரச காரியங்களில் அடிக்கடி தலையிட்டபடியால் அரசாட்சி முறையாகவும் ஒழுங்காகவும் நடைபெறவில்லை. ஆட்சி முறையில் குழப்பங்கள் நேர்ந்தன. அரசாங்கத்து அலுவலர்கள் கைக்கூலி வாங்கியபடியால் ஆட்சி ஒழுங்கீனமாக இருந்தது. வலியோர் எளியோரை அச்சுறுத்தி வருத்தினார்கள். ஆட்சியில் குழப்பமும் கலகமும் ஏற்பட்டன.

கீர்த்தி ஸ்ரீமேகனுடைய பாட்டனான சிலாகால அரசனால் உரோகண நாட்டில் இறை தண்டும் அலுவலில் நியமிக்கப்பட்டிருந்த மகாநாகன் என்பவன், இராஜராட்டிரத்தில் குழப்பமான ஆட்சி நடப்பதையறிந்து இதுவே தக்க சமயம் என்று கண்டு உரோகண நாட்டிலிருந்து படையெடுத்து வந்து கீர்த்தி ஸ்ரீமேகனோடு போர்செய்து வென்று அரசாட்சியைக் கைப்பற்றினான். கீர்த்தி ஸ்ரீமேகன் இலங்கையைப் பத்தொன்பது நாட்கள் அரசாண்டான் (சூலவம்சம் 91-92).

களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருந்த அரசியல் நிலையை இதனோடு நிறுத்துகிறோம். அரசனை ஊழியர் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுவதும் தந்தையை மகன் கொன்றும் அரசனை இராணி கொன்றும் தமயனைத் தங்கை கொன்றும் மருகனை மாமன் கொன்றும் இவ்வாறெல்லாம் இலங்கை அரசியலில் கொலைகள் மலிந்து இருந்த காலம் அது.