மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/007
களப்பிரர் ஆட்சியில் சமயங்கள்
தமிழ் நாட்டிலே இருந்த பழமையான மதங்கள் சைவமும் வைணவமும் ஆகும். கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலே சந்திரகுப்த மௌரியன் காலத்திலும் அவனுடைய பேரனான அசோகச் சக்கரவர்த்தி காலத்திலும் ஜைன மதமும் பௌத்த மதமும் தமிழ் நாட்டுக்கு வந்தன. வந்த மதங்கள் பையப்பையத் தமிழகத்தில் பரவிக்கொண்டிருந்தன. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் ஜைனமும் பௌத்தமும் மேன்மேலும் சிறப்புப் பெற்றுப் பெருகி வளர்ந்தன. பொதுவாகக் களப்பிர அரசர்கள் ஜைன, பௌத்த மதங்களுக்குச் சார்பாக இருந்தார்கள். களப்பிர அரசர் அச்சுதப் பரம்பரையினர் என்று கூறப்படுகிறபடியால் அவர்கள் வைணவ சமயத்தார் என்று கருத வேண்டியிருக்கிறது. கூற்றுவ நாயனார் போன்ற ஒன்றிரண்டு களப்பிர அரசர் சைவ சமயத்தவராக இருந்தனர் என்பதும் உண்மையே. ஆனால், பொதுவாகக் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் ஜைன, பௌத்த மதங்கள் சிறப்படைந்திருந்தன. இந்த மதங்கள் சிறப்படைந்ததற்குக் காரணம் இந்த மதங்களின் பிரச்சாரம் என்று தோன்றுகிறது. சைவ சமயம் சிறப்படையாமல் மங்கிக் கிடந்தது. வைதிக மதமும் மங்கியிருந்தது.
களப்பிரரும் பிராமணரும்
களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் என்று சிலர் எழுதியுள்ளனர், பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி, கொற்கைகிழான் நற்கொற்றன் என்னும் பிராமணனுக்கு முற்காலத்தில் வேள்விக்குடி என்னும் ஊரைத் தானங் கொடுத்ததை அவனுடைய குடும்பத்தார் பரம்பரையாக அனுபவித்து வந்ததைக் களப்பிரர் தங்கள் ஆட்சிக் காலத்தில் அந்த ஊரைப் பிடுங்கிகொண்டனர் என்னும் சாசனச்சான்றை ஆதாரமாகக் காட்டுகின்றனர். வேள்விக்குடிச் செப்பேடு இந்தச் செய்தியைக் கூறுகிறது. " கொல்யானை பலவோட்டிக் கூடா மன்னர் குழாந் தவிர்த்த பல்யானை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்ட்யாதிராசன் நாகமா மலர்ச் சோலை நளிர்சினை மிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கண்ணாளர் சொலப்பட்ட ச்ருதி மார்க்கம் பிழையாத கொற்கைகிழானற் கொற்றன் கொண்ட வேள்வி முற்றுவிக்க கேள்வி அந்தணாளர் முன்பு கேட்க என்றெடுத்துரைத்து வேள்விசாலை முன்பு நின்று வேள்விக்குடி என்றப் பதியைச் சீரோடு திருவளரச் செய்தார். வேந்தனப் பொழுதேய் நீரோடட்டிக் கொடுத்தமையால் நீடுபுக்தி துய்த்த பின் னளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னும் கலியரைசன் கைக் கொண்டதனை இறக்கிய பின் ..." (பாண்டியர் செப்பேடுகள் பத்து, வேள்விக்குடிச் செப்பேடு 31-40).
“அங்கொருநாண் மாடமாமதிற் கூடற்பாடு நின்றவர் ஆக்ரோதிக்கக் கொற்றனேய் மற்றவரைத் தெற்றென நன்கு கூவி ‘என்னேய் நுங்குறை' என்று முன்னாகப் பணித்தருள ‘மேனாணின் குரவராற் பான்முறையின் வழுவாமை மாகந்தோய் மலர்ச் சோலைப்பாகனூர்க் கூற்றத்துப் படுவது, ஆள்வ தானை அடல் வேந்தாய்! வேள்விக்குடி என்னும் பியர் உடையது ஒல்காத வேற்றானை ஓடோதவேலி உடன் காத்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பரமேச்வரனால் வேள்விக்குடி என்னப்பட்டது.கேள்வியாற்றரப் பட்டதனை துளக்கமில்லாக் கடற்றானை யாய் களப்ர ராலிறக்கப்பட்டது என்று நின்றவன் விஞ்ஞாப்யஞ் செய்ய... ...” (வேள்விக்குடிச் செப்பேடு, வரி 104-112)
களப்பிரர், வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்று செப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால், அதன் காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் அல்லர். களப்பிரர் பிராமணருக்குத் தானங்கொடுத்து ஆதரித்ததை அகலிடமும் அமருலகும்' எனத் தொடங்குகிற செய்யுள் (இணைப்பு 1 காண்க) கூறுகிறது.
பொருகடல் வளாகம் ஒரு குடை நிழற்றி
இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து
மனமகிழ்ந்து
அருள்புரி பெரும் அச்சுதர் கோவே
என்று அந்தச் செய்யுள் கூறுவது காண்க. இதனால் களப்பிரர் பார்ப்பனரை வெறுத்தவர் அல்லர் என்பது தெரிகிறது.
ஜைன சமய வளர்ச்சி
ஜைன, பௌத்த மதங்கள் செழித்து வளர்ந்ததையும் சைவ வைதிக மதங்கள் ஒடுங்கிப் போவதையும் சேக்கிழார் பெரிய புராணத்தில் தெளிவாகக் கூறுகிறார்.
மேதினிமேல் சமண்சையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதி அரு மறைவழக்கம் அருகி அரன் அடியார் பால்
பூதிசாதன விளக்கம் போற்றல் பெறாதொழியக் கண்டு
ஏதமில் சீர் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்(திருஞான சம்பந்த நாயனார் புராணம் 18)
(சமண்-சமணர், சாக்கியர்- பௌத்தர், அருவறை வழக்கம்-வேதவேள்வி செய்யும் வைதிக மதம், அரன்-சிவன், பூதிசாதனம்-திருநீற்றுச் சாதனம்)
களப்பிரர் காலத்தில் வளர்ந்து சிறப்படைந்திருந்த ஜைன, பௌத்த மதங்கள் அவர்களின் ஆட்சிக்குக் காலத்துக்குப் பிறகும் சிறப்படைந்திருந்ததைச் சேக்கிழார் கூறுகிறார்.
மெய்வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக்
கைவகை முறைமைத் தன்மை கழியமுன் கலங்குங்காலை(திருஞானசம்பந்த நாயனார் புராணம். 599)
என்றும்
பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில் சீர்ப்பதிகள்- எல்லாம்
பாழியும் அருகர்மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்
சூழிருட் குழுக்கள் போலத் தொடை மயிற்பீலி யோடு
மூழிநீர் கையிற்பற்றி அமணரே யாகி மொய்ப்ப(திருஞான சம்பந்த நாயனார் புராணம். 601)
(பூழியார் தமிழ்நாடு-பாண்டிநாடு; பாழி-குகை; அருகா- ஜைனர்)
என்றும்
பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
செறியு முக்குடையுமாகித் திரிபவர் எங்கும் ஆகி
அறியுமச் சமயநூலின் அளவினில் அடங்கிச் சைவ
நெறியினில் சித்தஞ் செல்லா நிலைமையில் நிகழுங்காலை(திருஞானசம்பந்த நாயனார் புராணம். 602)
என்றும் சேக்கிழார் கூறுகிறார். இது களப்பிரர் வீழ்ச்சிக் காலத்துக்குப் பின் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சமயங்கள் இருந்த நிலை. இந்த நிலை களப்பிரர் காலத்திலிருந்து தொடர்ந்து இருந்தது.
மதுரையை யாண்ட களப்பிரர் அரசன் ஒருவன் சிவன் கோவில் களில் வழிபாடு செம்மையாக நடக்காதபடி தடைசெய்தான். சிவன் கோவிலில் சந்தனக் காப்பு வழிபாடு நடக்காதபடி தடைசெய்தான் (மூர்த்தி நாயனார் புராணம் 17). அவன் சடையன் (சிவன்) அடியாரை வன்மை செய்தான்.
மலைக்குகைகளிலே சமண (ஜைன) சமயத்து முனிவர்கள் தங்கித் தவஞ்செய்தார்கள். அவர்கள் பாண்டி நாட்டிலே எட்டுக் குன்றுகளில் இருந்தனர். அந்த மலைகளை ‘எண்பெருங் குன்றம்' என்றும், அங்கிருந்து தவஞ்செய்தவர்களை ‘எண்பெருங் குன்றத்து எண்ணாயிரவர்’ என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார் (திருஞானசம்பந்த நாயனார் புராணம் 631,855). ஆனைமாமலை ஆதியாய இடங்களில்’ ஜைன முனிவர் இருந்ததைத் திருஞானசம்பந்தர் கூறுகிறார் (திருவாலவாயப் பதிகம்). ‘எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்’ என்று கூறுவதன் பொருள் மலையொன்றுக்கு ஆயிரம் பேராக எட்டு மலைகளில் எட்டாயிரம் சமணர் என்று கருதக்கூடாது. ஆயிரம் என்பது இங்குப் பெருந்தொகையைக் குறிக்கிறது.
ஆனைமலை, அழகர்மலை, திருப்பரங்குன்றம், சமணர் மலை, கழுகுமலை, சித்தன்னவாசல், கொங்கர் புளியங்குளம், கீழைவளவு, முத்துப்பட்டி, நாகமலை (விக்கிரம மங்கலம்), சித்தர்மலை, விருச்சியூர், மருகால்தலை முதலான மலைக்குன்றுகளில் ஜைனத் துறவிகள் தங்கித் தவஞ்செய்ததற்கு அடையாளமாக இன்றும் அங்கெல்லாம் ஜைனத் தீர்த்தங்கரர்களின் திருமேனிகளும் வட்டெழுத்துச் சாசனங்களும் காணப்படுகின்றன. களப்பிரர் வருவதற்கு முன்னேயே இந்தக் குகைகளில் ஜைன முனிவர் இருந்து தவஞ்செய்தனர். சில குகைகளில் பௌத்தப் பிக்குகளும் தங்கித் தவஞ்செய்தார்கள்.
களப்பிரர் ஆட்சிக் காலத்திலே ,பல்லவ அரசர் ஆட்சிசெய்த தொண்டை நாட்டிலும் ஜைன மதம் சிறப்பாக இருந்தது. குணபரன் என்றும் குணதரன் என்றும் சிறப்புப் பெயர் படைத்த மகேந்திரவர்மனும் ஜைன சமயத்தவனாக இருந்தான் என்று அறிகிறோம். தொண்டை நாட்டிலே பாடலிநகரத்தில் (திருப்பாதிரிப்புலியூரில்) அந்தக் காலத்தில் பேர்போன திகம்பர ஜைன மடம் இருந்தது. அந்த ஜைன மடத்தில் சிம்மசூரி என்னும் ஜைனப் பெரியார் இருந்து லோகவிபாகம் என்னும் பெயருள்ள ஜைன மதநூலைச் சமஸ்கிருத பாஷையில் மொழி பெயர்த்தார் என்று அறிகிறோம். பாணராஷ்டிரத்தில் (தொண்டை நாட்டில்) பாடலி நகரத்தில் இருந்தபோது அவர் சகர ஆண்டு 380இல் (கி.பி.458 இல்) சிம்ம வர்மன் என்னும் அரசனுடைய 22ஆம் ஆட்சியாண்டில் இந்த நூலை அவர் பெயர்த்தெழுதினார் (Mysore Archaeological Report for the year 1909-10). இந்த ஜைன மடத்திலே கி.பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருள்நீக்கியார் என்பவர் (பிற்காலத்தில் திருநாவுக்கரசர்) தருமசேனர் என்னும் பெயர்பெற்று மடத்தலைவராக இருந்தார் (திருநாவுக்கரசு நாயனார் புராணம்: 38,39,40).
தேவசேனர் என்னும் ஜைன சமய ஆசாரியர், விக்கிரம சம்வத்சரம் 909இல் (கி.பி. 853இல்) திகம்பரதர்சனம் என்னும் நூலை எழுதினார். அந்த நூலில் அவர், பாண்டி நாட்டில் வச்சிரநந்தி ஆசாரியர் திரமிள (திராவிட- தமிழ்) சங்கத்தை நிறுவினதாக எழுதியுள்ளார். பூஜ்ஜிய பாதர் என்னும் தேவநந்தி ஆசாரியரின் மாணாக்கர்களில் வச்சிரநந்தி ஆசாரியாரும் ஒருவர். வச்சிரநந்தி விக்கிரம ஆண்டு 525இல் (கி.பி. 470இல்) தக்கிண மதுரையில் (பாண்டி நாட்டு மதுரையில்) திரமிள சங்கத்தை நிறுவினார். இந்தக் காலம் மதுரையில் களப்பிர அரசர் ஆட்சிசெய்த காலம். களப்பிரர் ஜைன மதத்தை ஆதரித்தவராகையால் அவர்கள் காலத்தில் வச்சிரநந்தி திராவிட சங்கத்தை (ஜைன முனிவர்களின் திராவிட சங்கத்தை) நிறுவினார். ஏற்கனவே பாண்டி நாட்டில் வேர் ஊன்றி நிலைத்திருந்த சமண சமயம், ஜைனத் துறவிகளைக் கொண்ட திராவிட சங்கத்தை வச்சிரநந்தி மதுரையில் நிறுவினபோது, மேன்மேலும் தழைத்து வளர்வதற்குக் காரணமாக இருந்தது. சமண சமயத்தை வளர்ப்பதற்காக வச்சிரநந்தி அமைத்த திரமிள சங்கத்தையும் சங்க காலத்தில் பாண்டியர் தமிழ் மொழியை வளர்க்க அமைத்த தமிழ்ச் சங்கத்தையும் ஒன்று என்று கருதுவது தவறு. இந்த இரண்டு சங்கங்களும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு காரணத்துக்காக அமைக்கப்பட்ட சங்கங்கள். இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கூறுவது வரலாறு அறியாதவரின் தவறான கூற்றாகும் (இணைப்பு 2 காண்க).
பௌத்த சமய வளர்ச்சி
பௌத்த மதம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகச் சக்கரவர்த்தியின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்துக்கு வந்தது என்று கூறினோம் (மயிலை சீனிவேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்) பௌத்தப் பிக்குகள் நாடெங்கும் பிரசாரஞ் செய்து பௌத்த மதத்தை வளர்த்தார்கள். ஆகவே, பௌத்த மதம் பையப்பைய வளர்ந்து தமிழ் நாட்டில் சிறப்படைந்து, களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பௌத்தம் தமிழ் நாட்டில் மேலும் பரவி வளர்ந்தது. தமிழகத்துக்குப் பக்கத்தில் உள்ள இலங்கையிலும் பௌத்த மதம் பரவியிருந்தபடியால் அதன் காரணமாகவும் பெளத்தம் வலிவு பெற்றிருந்தது.
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தங்களுடைய தேவாரப் பாடல்களில் பிண்டியர் போதியரையும் சாக்கியர் சமணரையும் கூறுகிறார்கள் (பிண்டியர்-சமணர், போதியர்- பௌத்தர், சாக்கியர்- பௌத்தர், சமணர்-ஜைனர்). தேவார காலத்துக்கு முன் (கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்பு) களப்பிரர் காலத்தில் சமண சமயத்தைப் போலவே பௌத்த மதமும் செழித்திருந்தது. களப்பிரர் காலத்தில் இருந்த பௌத்தர்களின் ஊர்கள் சில தெரிகின்றன. காவிரிப்பூம்பட்டினம், உறையூர் (உரகபுரம்), பூதமங்கலம், சங்கமங்கை, நாகைப் பட்டினம், மயூர பட்டணம், மதுரை, பாண்டி நாட்டுத் தஞ்சை, காஞ்சிபுரம் முதலான ஊர்கள் பௌத்த மதம் வேரூன்றியிருந்த ஊர்களாகும்.
சாக்கிய நாயனார்
திருத்தொண்டர் புராணத்தில் (பெரியபுராணத்தில்) சாக்கிய நாயனார் புராணமும் ஒன்று. சாக்கிய நாயனார் பௌத்த மதத்தவர் (சாக்கியம்-பௌத்தம்). இவர் பழைய சிவனடியார்களில் ஒருவர். பௌத்தராக இருந்துகொண்டே சிவனை வழிபட்டவர். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த திருநாவுக்கரசருக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தவர். சாக்கிய நாயனார், தொண்டை நாட்டில் சங்கமங்கை என்னும் ஊரில் பிறந்தார். பிறகு காஞ்சிபுரத்துக்குப் போய் அங்கு அக்காலத்தில் பேர்போன பௌத்த ஆசிரியர்களிடம் சென்று சமயக்கல்வி பயின்றார். வயது வந்த பிறகு துறவு பூண்ட இவர் ஆடையணிந்து பௌத்தப் பிக்கு ஆனார் (சாக்கியநாயனார் புராணம் 2,3,4). சில காலஞ்சென்ற பிறகு சைவ சமயத்தை மேற்கொண்டார். சிவலிங்க வழிபாடலைச் செய்ய எண்ணினார். ஆனால், அக்காலத்தில் பௌத்த மதம் பலமாக இருந்தபடியால், வெளிப்படையாகப் பௌத்த மதத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர இயலாமற்போயிற்று. சிவலிங்கப் பூசை செய்த பிறகு உணவுகொள்ள வேண்டும் என்று அவர் உறுதிகொண்டார். இவர் அணிந்த பௌத்தத் தோற்றத்தை மாற்றாமலே ஒரு பொட்டலில் இருந்த சிவலிங்கத்தைச் சிறு கல்லால் எறிந்து, அக்கல்லை மலர்போலப் பாவித்துப் பூசை செய்தார். இவ்வாறு நாள்தோறும் தவறாமல் செய்து வந்தார். இச்செயலைக் கண்ட பௌத்தர் சிவலிங்கத்தைக் கல்லால் எறிகிறார் என்று எண்ணி மகிழ்ந்தனர். இதனால், அக்காலத்தில் பௌத்த மதம் ஆதிக்கம் பெற்றிருந்தது என்பதும், சைவ சமயம் எளிய நிலையில் இருந்ததென்பதும் தெரிகின்றன.
களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் பேர்போன பௌத்தர்கள் இருந்தார்கள். அவர்களுடைய முழுவரலாறு தெரியவில்லை. அங்குமிங்குமாகச் சில பௌத்தப் பெரியார்களுடைய வரலாறுகள் தெரிகின்றன.
சங்கமித்திரர்
இவர் சோழ நாட்டில் இருந்த தமிழ்ப் பௌத்தர்.கி.பி 4ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்தவர். மகாயான பௌத்த மதத்தைச் சேர்ந்த இவர் இலங்கைக்குச் சென்று தம்முடைய மகாயான பௌத்தக் கொள்கையை அங்குப் பிரசாரஞ் செய்தார். இவர் காலத்தில் இலங்கையில் கோதாபயன் (மேகவண்ணாபயன்) என்னும் அரசன் (கி.பி.302-315) அரசாண்டிருந்தான். அக்காலத்தில் இலங்கையில் தேரவாதப் பௌத்தம் (ஈனயானம்) நெடுங்காலமாக இருந்து வந்தது. அப்போது அநுராதபுரத்தில் அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பௌத்தப் பிக்குகள் வைதுல்ய மதத்தை (மகாயான பௌத்தத்தை) மேற்கொண்டனர். அது கண்ட மகாவிகாரையில் இருந்த தேரவாத பௌத்தப் பிக்குகள் அரசனிடஞ்சென்று அபயகிரி விகாரைப் பிக்குகள் மகாயான பௌத்தத்தை மேற்கொண்டதையும் பழைய தேராவாதப் பௌத்தத்தைக் கைவிட்டுவிட்டதையும் கூறினார்கள். கோதாபய அரசன், மகாயான பௌத்தத்தைக் கைக்கொண்ட அறுபது பிக்குகளையும் நாடுகடத்தி விட்டான்.
நாடு கடத்தப்பட்ட பிக்குகள் சோழ நாட்டுக்கு வந்து சங்கமித்திரரைக் கண்டனர். சங்கமித்திரர், இலங்கைக்குப் போய்த் தம்முடைய மகாயான பௌத்தத்தைப் போதித்தார். அப்போது தேரவாதப் பௌத்தப் பிக்குகள் இவரைப் பற்றி அரசனிடம் கூறினார்கள். அரசன் சங்கமித்திரரை அழைத்துத் தேரவாத பௌத்தரின் தலைவரான சங்கபாலருடன் சமய வாதம் செய்யும்படிக் கூறினான். சங்கபாலரும் சங்கமித்திரரும் அரசசபையில் வாதம் செய்தார்கள். வாதத்தில் மகாயான பௌத்தரான சங்கமித்திரர் வெற்றியடைந்தார். அரசன் இவருடைய ஆழ்ந்த புலமையையும் கல்வியையும் பாரட்டினான். தன்னுடைய பிள்ளைகளான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்பவர்களை இவரிடம் கல்விகற்க மாணாக்கராக விட்டான். இதனால், சங்கமித்திரரின் மகாயான பௌத்தம் இலங்கையில் பரவத் தொடங்கிற்று.
கோதபயன் இறந்த பிறகு அவனுடைய மகனான ஜேட்ட திஸ்ஸன் முடி சூடி அரசாண்டான் (கி.பி. 323-333). அவன் காலத்தில் சங்கமித்திரர் சோழ நாட்டுக்கு வந்துவிட்டார். ஜேட்டதிஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாசேனன் அரசனானான் (கி.பி 334-361). இந்த அரசன் காலத்தில் சங்கமித்திரர் சோழ நாட்டிலிருந்து இலங்கைக்குப் போய் மீண்டும் தம்முடைய மகாயான பௌத்த மதத்தைப் பிரசாரஞ்செய்து பரப்பினார். அரசனுடைய அமைச்சனான சோணன் என்பவன் இவருக்கு உதவியாக இருந்தான். தேரவாத (ஈனயான) பௌத்தருக்கும் மகாயான பௌத்தருக்கும் சமயச் சார்பாகப் பகைமை முற்றிற்று. அதன் காரணமாகச் சங்கமித்திரர் கொல்லப்பட்டு இறந்தார் (மகாவம்சம் 37ஆம் பரிச்சேதம் 36).
புத்ததத்த மகாதேரர்
புத்ததத்த மகாதேரர் சோழ நாட்டுத் தமிழர். பௌத்த மதத் துறவியாக வாழ்ந்தவர். பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த மத நூல்களையும் திரிபிடகங்களையும் நன்றாகக் கற்றவர். பாலி மொழியில் இனிமையாகக் கவி இயற்றும் ஆற்றல் பெற்றவர். கி. பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்ந்திருந்தார். தேரர் என்பது பௌத்தப் பிக்குகளில் சிறந்தவருக்கு வழங்கும் பெயர். ஆசாரியர் என்றும் தேரர் என்றும் இவர் சிறப்புப் பெயர் பெற்று ஆசாரிய புத்ததத்த தேரர் என்று பெயர் கொண்டிருந்ததிலேயே இவருடைய சிறப்பும் உயர்வும் நன்கு தெரிகிறது. இலங்கையை யாண்ட சிறிகுட்டன் (கி.பி. 409-430) காலத்தில் இவர் இலங்கைக்குச் சென்று அநுராதபுரத்திலிருந்த மகாவிகாரை என்னும் பௌத்த விகாரையில் தங்கியிருந்தார். சிறிகுட்ட அரசனுக்கு மகாநாமன், ஸ்ரீநிவாகன் என்னும் பெயர்களும் இருந்தன.
புத்ததத்த மகாதேரர் கவீரபட்டினம் (காவிரிப் பூம்பட்டினம்), உரகபுரம் (உறையூர்), பூதமங்கலம், காஞ்சிபுரம் முதலான ஊர்களில் இருந்த பௌத்த விகாரைகளில் தங்கியிருந்தார். அநுராதபுரத்து மகாவிகாரையில் இருந்தபோது அந்த விகாரையின் தலைவரான சங்கபால மகாதேரரின் வேண்டுகோளின்படி இவர் உத்தரவினிச்சயம் என்னும் நூலை எழுதினார். காவிரிப்பூம்பட்டினத்தில் களப்பிர அரசனுடைய அமைச்சனாக இருந்த கண்ணதாசன் கட்டின பௌத்த விகாரையில் இவர் தங்கியிருந்தபோது தம்முடைய மாணவரான புத்தசிகா என்பவரின் வேண்டுகோளின்படி இவர் மதுராந்த விலாசினீ என்னும் நூலை எழுதினார். இது திரிபிடகத்தில் ஒன்றான சூத்திரபிடகத்தில் குட்டக நிகாயம் என்னும் பிரிவில் புத்தவம்சம் என்னும் உட்பிரிவுக்கு உரையாகும். ஆகையால் இந்த நூலுக்கு புத்தவம்சாட்டகதா (புத்த வம்சத்தின் அர்த்த கதை) என்றும் பெயர் உண்டு. இவர் தம்முடைய சீடரான புத்திசிகா என்பவரின் வேண்டுகோளின்படி வினயவினிச்சயம் என்னும் நூலை எழுதினார். சோழ நாட்டில் பூதமங்கலம் என்னும் ஊரில் வேணுதாசர் என்பவர் கட்டிய பௌத்த விகாரையில் தங்கியிருந்தபோது இவர் இந்த நூலை எழுதினார். இந்த நூல், களப்பிர அரசன் அச்சுத விக்கந்தன் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டது (பௌத்தமும் தமிழும் என்னும் நூலைக் காண்க).
புத்ததத்த மகாதேரர் தம்முடைய இன்னொரு மாணவரான சுமதி என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அபிதம்மாவதாரம் என்னும் நூலையும் எழுதினார். இது திரிபிடகங்களில் ஒன்றான அபிதம்மபிடகத்துக்குப் பாயிரம் போன்றது. ரூபா ரூப விபாகம் என்னும் நூலையும் இவர் எழுதியுள்ளார். புத்த பெருமானைப் பற்றி ஜினாலங்காரம் என்னும் நூலையும் இவர் எழுதியதாகக் கூறுவர். இவர் எழுதிய இந்த நூல்கள் எல்லாம் பாலி மொழியில் எழுதப்பட்டவை. புத்ததத்த மகாதேரரும் புகழ்பெற்ற புத்தகோஷ மகாசாரியரும் சமகாலத்தவர். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர் (பௌத்தமும் தமிழும்).
சுமதி, ஜோதிபாலர்
இவர்கள் இருவரும் தமிழப் பௌத்தப் பெரியார்கள். புத்ததத்த மகாதேரர் வாழ்ந்த கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள். காஞ்சிபுரத்தில் ஒரு பௌத்த விகாரையில் இவர்கள் இருந்தனர். புத்தகோஷ ஆசாரியர் காஞ்சிபுரத்துக்கு வந்து இவர்கள் இருந்த விகாரையில் தங்கியிருந்தார். இவர்களின் விருப்பப்படி புத்த கோஷாசாரியர் ஸாரத்த பகாசினீ, மனோரத பூரணீ என்னும் இரண்டு பௌத்த மத நூல்களைப் பாலி மொழியில் எழுதினார். சுமதியும் ஜோதிபாலரும் புத்தகோஷரை இலங்கைக்குப் போய் அநுராதபுரத்து மகாவிகாரையில் இருந்த பௌத்த மத நூல்களை ஆராயும்படி தூண்டினார்கள். அப்படியே அவர் அங்குப் போய்ப் பௌத்த மத நூல்களை எழுதினார். இந்தச் செய்தியை அவர் எழுதிய மனோரத பூரணீ என்னும் நூலில்,
ஆயாசிதோ ஸூ மதினாதேரேன பத்தந்த ஜோதிபாலேன
காஞ்சீபுரா திஸுமயா புப்பே ஸத்திம் வஸம்தேன
புத்தமித்திரர்
புத்தமித்திரர் என்று பெயர் பெற்ற பௌத்த தேரர்கள் சிலர் இருந்தனர். அவர்களில் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை எழுதிய புத்தமித்திரர் களப்பிரர் காலத்தவர் அல்லர்; பிற்காலத்தில் இருந்தவர். இங்குக் கூறப்படுகிற புத்தமித்திரர் மயூரப்பட்டணத்தில் ஒரு பௌத்த விகாரையில் இருந்தவர். மயூரப்பட்டணம் என்பது இப்போது ‘மாயவரம்' என்று கூறப்படுகிற மாயூரமாக இருக்கலாம். புத்தகோஷாசாரியர் மயூரபட்டணத்துப் பௌத்த விகாரைக்கு வந்து தங்கியிருந்த போது இந்தப் புத்தமித்தரரின் விருப்பப்படி பஞ்ச சூடானீ என்னும் நூலைப் பாலி மொழியில் எழுதினார். இந்த நூல் திரிபிடகத்தின் ஒரு பகுதியாக மஜ்ஜிம நிகாயத்துக்கு உரைநூல் ஆகும்.
ஆசாரிய திக்நாகர்
இவரைத் தின்னாகர் என்றுங் கூறுவர். காஞ்சிபுரத்துக்குத் தெற்கே இருந்த சிம்மவக்தரம் என்னும் ஊரில் இவர் பிறந்தார். சிம்மவக்தரம் என்பது சீயமங்கலம் என்னும் ஊராக இருக்கலாம் என்று தோன்றுகிறது (சிம்மம் - சிங்கம்- சீயம்). சீயமங்கலம் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில் பிராமண குலத்தில் பிறந்தவராகிய இவர் வைதிக நூல்களைக் கற்றுப் பிறகு காஞ்சிபுரத்தில் பௌத்த நூல்களைக் கற்றுப் பௌத்தப் பிக்கு ஆனார். பிறகு, வடஇந்தியாவுக்குப் போய் அங்குப் பேர்போன வசுபந்து என்னும் பௌத்த ஆசிரியரிடத்தில் மகாயான பௌத்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர், நளாந்தா பல்கலைக்கழகத்துக்குச் சென்று பல நாள் தங்கி அங்குப் பல நூல்களைக் கற்றார். இவருடைய மாணவர்களில் காஞ்சிபுரத்திலிருந்த தருமபால ஆசாரியரும் ஒருவர்.
ஆசாரிய திக்நாகர் தர்க்க நூல்களை நன்கு கற்றவர். நியாயப் பிரவேசம், நியாயத்துவாரம் என்னும் இரண்டு தர்க்க நூல்களை இவர் வடமொழியில் எழுதினார். இவர், பௌத்த மதத்தில் விஞ்ஞானவாதப் பிரிவை உண்டாக்கினார் என்பர். வசுபந்து கி.பி. 420 முதல் 500 வரையில் வாழ்ந்திருந்தார் என்று கூறப்படுகிற படியால் அவரிடம் பயின்ற இவரும் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராதல் வேண்டும். இவர், பற்பல நாடுகளுக்குச் சென்று பலரோடு தர்க்கவாதம் செய்து மீண்டும் காஞ்சிபுரத்துக்கு வந்தார் என்பர். காஞ்சிபுரத்துக்கு வருவதற்கு முன்பே ஒருயா நாட்டில் காலமானார் என்று சிலர் கூறுவர். (பௌத்தமும் தமிழும் என்னும் நூலில் ‘தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்’ என்னும் தலைப்புக் காண்க.)
போதி தருமர்
இவர் காஞ்சிபுரத்தை யரசாண்ட ஓர் அரசனுடைய மகன். இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்து பௌத்தப் பிக்கு ஆனார்; பௌத்த மதத்தில் தியானமார்க்கம் என்னும் பிரிவைச் சேர்ந்தவர். கி.பி. 520 இல் இவர் சீன நாட்டுக் கான்டன் பட்டினம் போய்ச் சேர்ந்தார். கி.பி. 525இல் சீன தேசத்துக்குப் போனார் என்று சிலர் கூறுவர். சீன நாட்டிலும் ஜப்பான் தேசத்திலும் இவர் தம்முடைய பௌத்தக் கொள்கையைப் பரப்பினார். இவர் போதித்த பௌத்தக் கொள்கையைச் சீனர் ‘சான்’ மதம் என்பர். ஜப்பானியர். ஜென்மதம் என்பர். போதிதருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமயக் குரவர்களில் ஒருவராகப் போற்றுகிறார்கள். ஜப்பான் தேசத்திலும் சீன தேசத்திலும் இவருடைய நினைவாகக் கோவில்கள் உண்டு (பௌத்தமும் தமிழும்).
காஞ்சி தருமபால ஆசாரியர்
இவர் காஞ்சிபுரத்தில் பிறந்து வாழ்ந்தவர். காஞ்சிபுரத்து அரசனுடைய அமைச்சராக இருந்த ஒருவரின் மகன். பெற்றோர் இவருக்குத் திருமணஞ்செய்யத் தொடங்கினபோது இவர் திருமணத்துக்கு உடன்படாமல் பௌத்த மதத்தைச் சேர்ந்து பௌத்தத் துறவியானார். பல நாடுகளுக்குச் சென்று தம்முடைய கல்வியை வளர்த்துக் கொண்டார். திக்நாகரிடத்திலும் இவர் சமயக் கல்வி பயின்றார். வடநாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்தபோது கௌசாம்பி நகரத்தில் பௌத்தருக்கும் வேறு மதத்தாருக்கும் சமயவாதம் நடந்த போது பௌத்தர் எதிர்வாதம் செய்யமுடியாத நிலையில் இருந்ததைக் கண்டு இவர் தனித்து நின்று எதிர்வாதம் செய்து வெற்றி பெற்றார். எதிர் வாதம் செய்தவர்களையும் தலைமை தாங்கிய அரசனையும் பௌத்த மதத்தை மேற்கொள்ளச் செய்தார். இவர் மகாயான பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். ஈனயான பௌத்தரோடு ஏழு நாட்கள் சமயவாதஞ் செய்து அவர்களை வென்று தம்முடைய மகாயான பௌத்தக் கொள்கையை நிலைநாட்டினார்.
தருமபால ஆசாரியர் பல நூல்களைக் கற்றுத் தேர்ந்து பேராசிரியராக விளங்கினபடியால், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நாளந்தாப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி எளிதில் வாய்ப்பது அன்று. துறைபோகக் கற்ற பேரறிஞர்கட்கே இந்தப் பதவி கிடைக்கும். இவர் இளமையிலேயே காலமானார் என்பர். கி.பி.528 முதல் 560 வரையில் இவர் உயிர் வாழ்ந்திருந்தார் என்று தெரிகிறது. இவருக்குப் பிறகு இவருடைய மாணாக்கரான சீலபத்திரர் நாளந்தாப் பல்கலைக்கழகத்தின் தலைவரானார் (பௌத்தமும் தமிழும்).
தஞ்சை தருமபால ஆசாரியர்
இவர் பாண்டி நாட்டுத் தஞ்சாவூரில் இருந்தவர். 'தம்பரட்டே வசந்தேன நகரே தஞ்சா நாமகே' என்று கூறப்படுகிறபடியால், தம்பராட்டிரமான தாம்பிரபரணி பாய்கிற திருநெல்வேலியில் இருந்த தஞ்சை நகரத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறார். சோழ நாட்டுத் தஞ்சாவூரில் இவர் இருந்தார் என்று திரு. பி.ஸி. லா அவர்கள் கருதுவது தவறு (B.C. Law, Geography of Early Buddhism). தருமபால ஆசாரியர் பாலி மொழியிலுள்ள பௌத்த மத நூல்களை நன்குக் கற்றவர். தமிழ், சிங்களம், பாலி மொழிகளை நன்றாகக் கற்றவர். பௌத்த உரையாசிரியர்களில் சிறந்தவர். இலங்கையின் அநுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளிக்குப் போய் அங்குத் திரிபிடகங்களுக்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த உரைநூல்களைப் பயின்றார். பிறகு, தமிழ்நாட்டுக்குப் பௌத்தப் பள்ளிகளில் இருந்த பிடக நூல்களின் திராவிட (தமிழ்) உரைநூல்களைப் பயின்றார்.
சூத்திரபிடகத்தின் ஐந்தாவது பிரிவாகிய குட்டக நிகாயத்தைச் சேர்ந்த உதான, இதிவுக்தக, விமானவத்து, பேதவத்து, தேரகாதா, தேரிகாதா, சரியாபிடகம் என்னும் பகுதிகளுக்குத் தருமபால ஆசாரியர் பாலி மொழியில் சிறந்த உரை எழுதினார். இவர் எழுதின உரைக்குப் பரமார்த்த தீபனி என்று பெயர். மற்றும் பரமார்த்த மஞ்சுஸா, நெட்டிப கரணாட்டகதா என்னும் நூல்களையும் இவர் எழுதினார். ‘இதிவுத்தோதான சரியாபிடக தேர தேரீ விமானவத்து பேதவத்து நெட்டியட்டகதாயோ ஆசாரிய தம்மபால தேரோ அகாஸீ ஸோ ச ஆசாரிய தம்ம பால தேரோ ஸீஹௗ தீபஸ்ஸ ஸமீபே தமிள நாட்டே படராதித்தமிஹி நிவாஸித்தா ஸீஹௗதீபே ஏவ ஸங்கஹேத்வா வத்தபோ’ என்று சாசன வம்சம் என்னும் நூல் இவரைப் பற்றிக் கூறுகிறது. இதன் கருத்து: 'ஆசாரிய தம்ம பாலதேரர் சிங்களத் (இலங்கை) தீவுக்கு அருகில் உள்ள தமிழ் நாட்டில் படராதித்த விகாரையில் இருந்தபோது இதிவுத்தகம், உதானம், சரியாபிடகம், தேரகதா, தேரிகதா, விமானவத்து, பேதவத்து, நெட்டியட்டகதா என்னும் உரை நூல்களை எழுதினார். இந்த ஆசாரியதம்ம பாலிதேரர் சிங்களத் தீவுக்கு அருகில் உள்ள தமிழ்த் தேசத்தில் படராதித்த விகாரையில் இருந்தபோது இவற்றை எழுதினார்' என்பது. இவர் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் எனத் தெரிகிறது.
களப்பிரர் ஆட்சிக் காலத்தில், பௌத்த மதம் சமண சமயத்தைப் போலவே நாட்டில் பரவி வளர்ந்திருந்தது. பௌத்த மத நூல்கள் பிற்காலத்தில் அழிந்துபோனபடியால் பௌத்த மதத்தின் முழு வரலாற்றையறிய முடியவில்லை.
முரண்பட்ட மூன்று மதங்கள்
கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண சமயமும் பௌத்த மதமும் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்கு வந்தன என்பதையறிவோம். அந்தக் காலத்திலேயே இன்னொரு மதமும் தமிழ் நாட்டுக்கு வந்தது. அது வடமொழி வேதத்தை முதன்மையாகக் கொண்ட மதம். இருக்கு, யஜுர், சாமம், அதர்வனம் என்னும் நான்கு வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வைதிக மதம் அக்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்தது. வைதிக மதத்தைப் பிரமாணர் போற்றினார்கள். வேள்வி (யாகம்) செய்வதையே முதன்மையாகக் கொண்டது வைதிக மதம். பிராமணர் மிகச் சிறு தொகையினர். அன்றியும் சாதி வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட குறுகிய நோக்கமுடையது. பிராமணரைத் தவிர வேறு சாதியார் வேதம் ஓதுவது கூடாது, பிராமணர்தான் உயர்ந்த சாதி, இவ்வாறு குறுகிய சிறிய கொள்கையுடைய வைதிகப் பிராமணர் மதம் நாட்டில் செல்வாக்கடையாமல் மக்களிடையே பரவாமல் மூலையில் முடங்கிக் கிடந்தது.
ஜைன மதமும் பௌத்த மதமும் தத்தம் மதக் கொள்கையை நாடெங்கும் பிரசாரஞ் செய்து மக்களைத் தங்கள் மதத்தில் சேரும்படி அழைத்தன. தங்கள் மதக் கொள்கைகளை நாடெங்கும் பரப்பின. எந்தச் சாதியரானாலும் இந்த மதங்களைச் சேர்ந்து ஒழுகினால் அவர்களைச் சிறப்புப் செய்து போற்றின. சமய நூல்களை நன்கு கற்று அதன்படி ஒழுகிறவர்களைச் சமய காரியரர்களாக உயர்த்தி வைத்தன. ஆகவே, பௌத்த மதமும் சமண சமயமும் நாட்டில் செல்வாக்குப் பெற்றுப் பரவி வளர்ந்தன. வைதிக மதமாகிய பிராமண மதமோ வேதத்தைப் பிறருக்குப் போதிக்கவில்லை. பிறர் வேதத்தைப் படிக்கவும் விடவில்லை. பிராமணப் பதவி என்னும் பதவியை அமைக்காமல் பிராமணப் பிறப்பு என்று ஜாதிக்கு ஏற்றம் தந்தது. ஆகவே, வைதிகப் பிராமண மதம் தாழ்ந்து மங்கி மூலையில் கிடந்தது.
பௌத்தம், சமணம், வைதிகம் என்னும் இந்த மூன்று மதங்கள் ஆதிகாலம் முதல் பிறவிப் பகைமையுடைய மதங்கள். பிராமணர், பௌத்த சமண சமயங்களைப் பகைத்து வெறுத்து விஷம் போலக் கருதினார்கள். பிராமணர், பௌத்த சமண சமயங்களைத் தாக்கிப் பிரசாரஞ் செய்தார்கள். அது போலவே, பௌத்த மதம் வைதிக மதத்தையும் சமண மதத்தையும் கண்டித்து ஒதுக்கியது. வைதிகம், சமண சமயக் கொள்கைகளைத் தாக்கிக் கண்டித்தது. சமண சமயமும் வைதிக மதத்தையும் பெளத்த மதத்தையும் பகைத்து அந்த மதக் கொள்கைகளை வெறுத்துப் பிரசாரஞ் செய்தது. இவ்வாறு வைதிக மதம், சமண சமயம், பௌத்த மதம் ஆகிய மூன்று மதங்களும் ஒன்றையொன்று பகைத்துக் கண்டித்து முரண்பட்டு இருந்தன. வடநாட்டிலும் சரி தென்னாட்டிலும் சரி இந்த மூன்று மதங்களும் ஒன்றையொன்று வெறுத்துப் பகைத்து வந்தன. களப்பிரர் ஆட்சிக்காலத்திலும் இந்த நிலைமைதான் இருந்தது. பௌத்தமும் சமணமும் விரிந்து பரந்த கருத்துள்ள மதங்களாகையால் நாட்டில் செழித்து வளர்ந்தன. வைதிக மதமான பிராமண மதம் குறுகிய கொள்கையும் சுருங்கிய கருத்தும் கொண்டிருந்தபடியால் நாட்டில் செல்வாக்குப் பெறாமலும் வளர்ச்சியடையாமலும் முடங்கிக் கிடந்தது.
வைணவ சமயம்
சைவ சமயத்தைப் போலவே வைணவ சமயமும் மிகப் பழமையானது. களப்பிர அரசர் வைணவ சமயத்தவர் என்பதை முன்னமே கூறினோம். திருமாலுக்கு அச்சுதன் என்னும் பெயரும் உண்டு. களப்பிர அரசர் தங்களை அச்சுத குலத்தவர் என்று கூறிக்கொண்டனர். அதாவது. திருமாலின் வழிவந்தவர் என்பது பொருள். அவர்கள் திருமாலை (விஷ்ணுவை) வழிபட்டு திருமாலின் அருளினால் பெரிய இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பதை முன்னமே கூறினோம்.
இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை
ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த
நந்திமால்வரை சிலம்பு நத்தி
என்று களப்பிர அரசர் கூறப்பட்டதைக் கூறினோம். திகிரியையும் (சக்கரம்) வலம்புரியையும் (வலம்புரிச்சங்கு) கையில் ஏந்தியுள்ள திருமாலை வேண்ட அவர் இவனுக்குப் பெரிய நிலத்தைக் (இராச்சியத்தை) கொடுத்தார் என்பதை அறிந்தோம். இதனால் களப்பிரர், அச்சுதனை (திருமாலை) வழிபட்டவர் என்பது தெரிகிறது.
களப்பிரர் சமண சமயச் சார்புடையவர் என்று வரலாற்றாசிரியர் பலரும் எழுதியுள்ளனர். அது தவறான கருத்து என்று தோன்றுகிறது. கன்னட நாட்டில் களபப்பு (சிரவண பௌகொள்) என்னும் நாட்டைக் களப்பிரர் ஆதிகாலம் முதல் அரசாண்டவர் ஆனபடியாலும், களபப்பு நாட்டைச் சேர்ந்த சிரவணபெளகொளத்தில் பத்திரபாகு முனிவரும் சந்திர குப்த மௌரிய அரசரும் ஜைன முனிவர்களோடு வந்து தங்கின இடமாகையால் ஜைன மதச் சூழலில் நெடுங்காலம் இருந்த படியாலும் களப்பிரர் சமண சமயச் சார்பு கொண்டிருந்தனர் என்று கருதுவது தவறாகாது. ஆனால், அவர்களின் சொந்தச் சமயம் வைணவம் என்பது ஐயமில்லாமல் தெரிகிறது.
ஆனால், வைணவ மதம், பௌத்த சமண சமயங்களின் வளர்ச்சியினால் சிறப்புப் பெறாமல் தாழ்ந்த நிலையையடைந்திருந்தது என்பதை அறிகிறோம்.
சைவ சமயம்
களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் சைவசமயம் குன்றிக் குறைந்திருந்தது என்பதை அறிகிறோம். களப்பிர அரசர்கள் சைவ சமயத்துக்கு மாறுபட்டவர் என்றும் சமண சமயத்துச் சார்புடையவர் என்றும் பொதுவாகக் கருதப்படுகின்றனர். ஒரு களப்பிர அரசன், பாண்டி நாட்டில் சிவன் கோவிலில் வழிபாடு நடைபெறாதபடிச் செய்தான் என்பதைப் பெரியபுராணம், மூர்த்தி நாயனார் புராணத்தில் அறிகிறோம். என்றாலும், சைவ சமயத்தைச் சார்ந்த கூற்றுவன் என்னும் களப்பிர அரசன் சிவன்கோவில்களுக்குச் சிறப்புச் செய்து வழிபட்டதைக் கூற்றுவ நாயனார் புராணத்தில் அறிகிறோம். ஏதோ ஒரு களப்பிர அரசன் சைவசமயத்துக்கு மாறுபாடாக இருந்தான் என்பது பற்றி எல்லாக் களப்பிர அரசர்களும் சைவ சமயத்துக்கு மாறுபட்டவர் என்று கருதுவது கூடாது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சைவ சமயம் பொதுவாக மங்கி மறையும் நிலையில் இருந்ததற்குக் காரணம் பௌத்த, சமண சமயங்களின் பிரசாரமே என்று கருதலாம். தத்தம் மதங்களைப் பிரசாரஞ் செய்து வளர்த்த சமண, பௌத்தப் பிரசாரகர் தங்கள் மதங்களை உயர்த்திப் பேசி, அதே சமயத்தில் சைவத்தைத் தாழ்த்திக் குறைத்துப் பேசிப் பிரசாரம் செய்தார்கள். இதனால், சைவசமயம் செல்வாக்குப் பெறாமலும் உயர்வு அடையாமலும் குன்றிக் குறைவதாயிற்று. பௌத்த, சமண சமயத்தாரைப் போலச் சைவ சமயத்தார் சைவ சமயத்தைப் பற்றிப் பிரசாரஞ் செய்யாததும் சைவ சமய வீழ்ச்சிக்கு இன்னொரு காரணமாகும்.
கி.மு. நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சைவ சமயத்தைப் பௌத்தரும் சமணரும் தாக்கினார்கள் என்பது தெரிகிறது. அக்காலத்தில் இலங்கையை யரசாண்ட மகாசேனன் என்னும் சிங்கள அரசன், இலங்கையில் அக்காலத்தில் பேர்போன சிவன் கோயில்களை இடித்து அழித்து அந்த இடங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டினான். கோகன்ன (கோகர்ண) விகாரை, எரகாவில்ல விகாரை, கலந்த விகாரை, மிக்காம விகாரைகளைக் கட்டினான் என்று மகாவம்சம் கூறுகிறது (மகாவம்சம் 37ஆம் பரிச்சேதம் 40-41). கோகர்ண விகாரை இலங்கையின் கிழக்குக் கரையோரமாக இருந்தது என்றும் மற்ற இரண்டு விகாரைகள் இலங்கையின் தென்கிழக்கே உரோகண நாட்டில் இருந்தன என்றும் இதனுடைய டீகை (உரை) கூறுகிறது. மற்றும் இந்த உரை இதனைக் கீழ்வருமாறு விளக்குகிறது: 'ஏவம் ஸப்பத்த லங்க தீபமிஹி குதிட்டகானம் ஆலயம் வித்தம்ஸேத்வர ஸிவலிங்காயதோ நாஸேத்வர புத்த ஸாஸனம் ஏவ பதிட்டபேஸி'. இதன் பொருள், இலங்கைத் தீவெங்கும் ஆலயங்களை அழித்துச் சிவலிங்கம் முதலானவைகளை நாசஞ் செய்து புத்த சாசனத்தை நிறுவினான்' என்பது.
இதனால், அக்காலத்தில் மதப் பூசல்கள் இருந்தது தெரிகிறது.
பக்தி இயக்கம்
சைவ சமயம் நாளுக்கு நாள் நலிவடைந்து குன்றிக் குறைந்து மங்கி வருவதைக் கண்ட சைவ சமயத்தார் விழிப்படைந்தனர். சைவ சமயத்தை வளர்த்து ஓங்கச் செய்வதற்கு முயன்றார்கள். நாட்டில் பொது மக்களின் ஆதரவுபெற வழிவகைகளைத் தேடினார்கள். தேடி நல்லதோர் கொள்கையைக் கண்டார்கள். அதுதான் பக்தி இயக்கம். செல்வாக்குப் பெற்று வளர்ந்துகொண்டிருந்த பௌத்த, சமண சமயங்களை வீழ்த்தவும் சைவசமயத்தை ஓங்கச் செய்யவும் பக்தி இயக்கம் அரியதோர் சாதனமாக அமைந்தது. பக்தி இயக்கம் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (வச்சிர நந்தியின் திராவிட ஜைன சங்கம் ஏற்பட்ட பிறகு) தோன்றியது. பக்தி இயக்கத்தில் வைணவரும் சேர்ந்து தங்கள் வைணவ மதத்தை வளர்க்க முயன்றார்கள். பக்தியால் முக்தி எளிதாகும், பக்தியினால் இம்மை மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் என்பதே பக்தி இயக்கத்தின் அறைகூவலாக இருந்தது. பக்தி இயக்கம் நாட்டு மக்களின் மனத்தைக் கவர்ந்தது. இந்த இயக்கம் நாளடைவில் பௌத்த சமண சமயங்களை வீழ்த்துவதற்கும் சைவ வைணவ மதங்களை வளர்ப்பதற்கும் ஏற்றதோர் கருவியாக அமைந்தது. அடுத்த நூற்றாண்டில் சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தோன்றிப் பௌத்த, சமண சமயங்களை அழிக்கவும் சைவ, வைணவ மதங்களை வளர்க்கவும் பக்தி இயக்கம் காரணமாக இருந்தது. பக்தி இயக்கம் நாட்டில் மக்களிடையில் செல்வாக்குப் பெற்று சைவ, வைணவ மதங்களின் வளர்ச்சிக்கும் பௌத்த, சமண சமயங்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது. தெய்வ வழிபாட்டில் நாயக - நாயகி பாவக் கொள்கை ஏற்படுவதற்கும் பக்தி இயக்கம் காரணமாக இருந்தது. அதாவது, சிவனை நாயகனாகவும் (தலைவனாகவும்) அவனை வழிபடும் அடியார்களை நாயகிகளாகவும் (தலைவிகளாகவும்) பாவிக்கும் வழிபாட்டு முறை ஏற்பட்டது. வைணவர்களும் நாயக-நாயகி பாவத்தை ஏற்றுக்கொண்டனர்.
ஆனால், சைன சமயத்தவரும் பௌத்த மதத்தவரும் நாயக-நாயகி பாவத்தை (பேரின்பக் காதலை) ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இந்தக் கொள்கைக்கு மாறுபட்டிருந்தனர். சைவ, வைணவ பக்தர்கள் தங்கள் கடவுளை நாயகனாகவும் தங்களை நாயகியாகவும் பாவித்து அகத்துறையமைந்த பாடல்களைப் பாடியது போல சைன, பௌத்த சமய இலக்கியங்களில் காணப்படவில்லை.
பக்தி இயக்கம் தோன்றுவதற்கு முன்புள்ள அகப்பொருள் இலக்கண இலக்கிய நூல்கள் மனிதக் காதலைக் கூறுகின்றனவேயல்லாமல் தெய்வ-மனிதக் காதலைக் கூறவில்லை. சைன பௌத்த மதத்தவர் நாயக-நாயகி பக்திக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதது போலவே, சைன,பௌத்தரல்லாத ஏனைய தமிழர்களும் இந்தப் புதிய நாயக- நாயகிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். ஆகையால், இந்தக் கொள்கைக்கு ஆதாரமான நூல் வேண்டியிருந்தது. அந்த ஆதார நூல்தான் இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் நூல் (இந்த இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் நூலைப் பற்றி இந்நூலில் இணைப்பு 3இல் காண்க.)
பக்தி இயக்கமும் பேரின்பக் காதல் (நாயக-நாயகி பாவம் கொள்கையும் சைவ, வைணவ மதத்துக்குப் பேருதவியாக இருந்தன. இந்தக் கொள்கைகள் சைன, பௌத்த மதங்களை வீழ்த்திச் சைவ வைணவ மதங்களை வளர்ப்பதற்குப் பேருதவியாக இருந்தன. சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் சைவ, வைணவ மதங்களை ஓங்கி வளரச் செய்யவும் சைன, பௌத்த மதங்களைத் தாழ்த்தவும் செய்ததற்கு முதற்காரணமாக இருந்தது பக்தி இயக்கந்தான் என்பதில் சற்றும் ஐயமில்லை.
✽✽✽