உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/016

விக்கிமூலம் இலிருந்து




துளு நாடு

பழைய பெயரும் புதிய பெயரும்

சங்க காலத்தில் துளு நாடு என்றும் கொங்கண நாடு என்றும் பெயர் பெற்றிருந்த நாடு இக்காலத்தில் தென் கன்னட மாவட்டம் என்று பெயர்பெற்றிருக்கிறது. வடகன்னடம், தென்கன்னடம் என்று பெயர் பெற்ற இரண்டு மாவட்டங்கள் பாரத நாட்டின் மேற்குக் கரையோரமாக இப்போது இருக்கின்றன. இவற்றில் வடகன்னட மாவட்டம், முன்பு பம்பாய் மாகாணம் என்று பெயர் பெற்றிருந்து இப்போது மகாராட்டிர தேசம் என்று பெயர் வழங்குகிற இராச்சியத்தில் இருக்கிறது. தென் கன்னட மாவட்டமானது, பழைய சென்னை மாகாணத்தோடு இணைந்திருந்து, பாரத நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மைசூர் இராச்சியத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தென்கன்னட மாவட்டந்தான் பழைய துளு நாடு. துளு நாட்டுக்குக் கொங்கண நாடு என்றும் கொண்கன நாடு என்றும் கொண் பெருங்கானம் என்றும் சங்க காலத்தில் பெயர் இருந்தது.

துளு நாடாகிய கொங்கண நாடு தென் கன்னட மாவட்டம் என்று பெயர்பெற்றது மிகச் சமீப காலத்தில்தான். ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியார் தென் இந்தியாவில் வந்து வாணிகஞ் செய்துகொண்டே நாடு பிடித்த காலத்தில், துளு நாடாகிய கொங்கண நாடு கி.பி. 1799 ஆம் ஆண்டில் அவர்கள் ஆட்சிக்கு வந்தது. பிறகு அவர்கள் இந்த நாட்டுக்குத் தென்கன்னட மாவட்டம் என்று தவறான பெயர் கொடுத்துச் சென்னை மாகாணத்தின் ஒரு பிரிவாக இணைத்துவிட்டனர். எனவே, இதற்குத் தென் கன்னடம் என்னும் பெயர் மிகச் சமீப காலத்தில் தவறாக ஏற்பட்டதாகும். ஆனால், அதன் பழைய பெயர் துளு நாடு அல்லது கொங்கண நாடு என்பது.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாரத நாட்டையரசாண்ட அசோகச் சக்கரவர்த்தி தம்முடைய சாசனத்தில் கூறுகிற 'சத்தியபுத்திர நாடு' என்பது துளு நாடே. இது பற்றி வேறு கருத்துகளும் உண்டு (இணைப்பு 1 காண்க). கடைச்சங்க காலத்தின் இறுதியில் (கி.பி. 2 நூற்றாண்டு) இருந்த தாலமி (Ptolemy) என்னும் யவனர், துளு நாட்டில் டமிரிகெ (Damirike) தொடங்கியது என்று கூறுகிறார். டமிரிகெ என்பது திராவிடகம் என்னும் தமிழகம் ஆகும். எனவே, துளு நாடு அக்காலத்தில் தமிழ்நாடாக இருந்தது என்பது தெரிகிறது. சங்கச் செய்யுள்களும் துளு நாட்டுக்கு அப்பால் மொழி பெயர்தேயம் (வேறு பாஷை பேசப்பட்ட தேசம்) இருந்ததாகக் கூறுகின்றன.

துளு என்றால் போரிடுதல், எதிர்த்தல் என்பது பொருள். பழங் கன்னட மொழியில் துளு என்னுஞ் சொல்லுக்கு இந்தப் பொருள் உண்டு. எனவே, துளு நாடு என்றால் வீரர்கள் உள்ள நாடு என்று பொருள் கொள்ளலாம். துளு நாட்டு வீரர்களைப் பற்றிச் சங்க நூல்கள் கூறுகின்றன.

கொங்கண நாடாகிய துளு நாட்டைப் பிற்காலத்துச் சோழர் சாசனங்கள் ‘குடமலை நாடு' என்று கூறுகின்றன.

துளு நாட்டுக்குக் கிழக்கில் உள்ளது குடகு நாடு என்னும் சிறு நாடு. இந்தக் குடகு நாட்டில் தலைக்காவேரி என்னும் இடத்தில் காவிரி ஆறு உண்டாகிறது. “குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி” என்று மலைபடுகடாம் (அடி 527) கூறுகிறது. இந்தக் காவேரி ஆறு கடைசியில் சோழ நாட்டில் புகுந்து பாய்கிறது.

துளு நாட்டு எல்லை

இப்போதுள்ள தென் கன்னட மாவட்டமே ஏறத்தாழ பழைய துளு நாடாகும். ஆனால், சங்க காலத்தில் (கி.பி. 200க்கு முன்பு) துளு நாட்டின் தென் எல்லை சற்றுத் தெற்கே இருந்தது. ஏழில் மலைக்குத் தெற்கே அதன் பழைய தெற்கெல்லை இருந்தது.

துளு நாட்டின் மேற்கில் அரபிக்கடல் எல்லையாக இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் (சஃயாத்ரி மலைகள்) இதன் கிழக்கு எல்லையாக அமைந்திருக்கின்றன. கிழக்கு எல்லையாக அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் சில இடங்களில் கடல் மட்டத்துக்கு 3000 அடி உயரமாகவும் வேறு சில இடங்களில் 6000 அடி உயரமாகவும் இருக்கின்றன. ஆகவே, துளு நாட்டின் கடற்கரையோரங்கள் சம நிலமாகவும் கிழக்குப் பகுதிகள் உயரமான மலைப் பிரதேசங்களாகவும் இருக்கின்றன. துளு நாடு ஏறத்தாழ வடக்குத் தெற்காக 150 மைல் நீளம் உள்ளது. இதன் அகலம், கடலுக்கும் மலைகளுக்கும் இடையே சில இடங்களில் 50 மைலும், சில இடங்களில் 25 மைலும் ஆக அமைந்திருக்கிறது. எனவே, துளுநாடு கடலுக்கும் மலைக்கும் இடையிலே உள்ள அகலம் குறைந்த நீளமான பிரதேசம் என்பது தெரிகிறது (படம் 1 காண்க).

இனி, சங்க இலக்கியங்களிலே கூறப்படுகிற துளு நாட்டு ஊர்கள் மலைகள் முதலியவற்றை ஆராய்வோம்.

துளு நாடு (கொண்கானம்)

‘தோகைக் காவின் துளு நாடு’(அகம் 15:5) என்று மாமூலனார் என்னும் புலவர் துளு நாட்டின் பெயரைக் கூறுகிறார். துளு நாட்டுக் காடுகளில் தோகைகள்(மயில்கள்) இருந்தன என்று கூறுகிறார்.

துளு நாட்டை நன்னன் என்னும் பெயருள்ள வேள்குல அரசர் ஆண்டனர். அவர்கள் ‘கொண்கானம் கிழான்’ என்றும் பெயர் பெற்றிருந்தனர். அதாவது, கொண்கான நாட்டுக்குத் தலைவன் என்பது பொருள். பாலைபாடிய பெருங்கடுங்கோ என்னும் சேர அரசர் தாம் பாடிய நற்றிணை 391 ஆம் செய்யுளில், ‘பொன்படு கொண்கான நன்னன்’ என்று கூறுகிறார். மோசிகீரனார் என்னும் புலவர் ‘கொண் கானம் கிழான்’ ஒருவனைப் பாடுகிறார். அதில் கொண்கான நாட்டின் மலைகளில் பல அருவிகள் பாய்வது தூய வெண்ணிற ஆடைகளை வெயிலில் உலர்த்துவது போல இருந்தன என்று கூறுகிறார்.

அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடல் எனக்கு எளிதே

(புறம்.154:10-13)

என்று அவர் பாடுகிறார். கொண்கானத்து (துளு நாட்டுக்குக் கிழக்கேயுள்ள உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இன்றும் பல அருவிகள் தோன்றிப் பாய்வதைக் காண்கிறோம். இப்புலவரே ‘கொண் பெருங் கானத்துக்' கிழானைப் புறம் 155 ஆம் பாட்டில் பாடியுள்ளார். கொண்கானங் கிழான் தன்னை நாடி வரும் இரவலருக்குப் பொருள் கொடுத்தான் என்றும் அவன் பிற வேந்தரை வென்று அவர்களிடம் திறை வாங்கினான் என்றும் புறம் 156 ஆம் செய்யுளில் இப்புலவர் கூறுகிறார். இச்செய்யுள்களில் இவர் கொங்கண நாட்டைக் கொண் பெருங்கானம் என்று கூறுவது காண்க. கொங்கணம், கொண்கானம், கொண்பெருங்கானம் என்பன எல்லாம் ஒன்றே.

நன்னனுடைய கொங்கணக் காட்டில் (கழை) மூங்கில் அதிகமாக விளைந்தன என்று கூறுகிறார். கொங்கணத்தைக் ‘கானம்’ என்று சுருக்கமாகக் கூறுகிறார்.

விழைதக ஓங்கிய கழைதுஞ்சு மருங்கில்
கானமர் நன்னன்
(அகம் 392: 26-27)

என்று அவர் கூறுவது காண்க (கான் - கானம், கொங்கானம்).

செல்லூர்

மருதன் இளநாகன் என்னும் புலவர் இவ்வூரைக் கூறுகிறார். மழுவாள் நெடியோனாகிய பரசுராமன் இவ்வூரில் யாகம் செய்த கதையை இவர் கூறுகிறார் (இணைப்பு 2 காண்க)

கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க்
கடாஅ யானைக் குழூஉச்சமந் ததைய
மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்விக்
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண்
(அகம் 220:3-8)

என்பது அப்பாட்டில் இச்செய்தியைக் கூறும் பகுதி.

இந்தச் செல்லூர் கடற்கரைக்கு அருகில் இருந்தது என்றும் அவ்வூருக்குக் கிழக்கில் கோசருடைய நியமம் (ஊர்) இருந்தது என்றும் இப்புலவரே இன்னொரு செய்யுளில் கூறுகிறார்.

அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கட் கோசர் நியமம்
(அகம்90 : 9 -12)

என்று இவர் கூறுகிறார்.

எனவே, துளுநாட்டுச் செல்லூரில் பரசுராமன் செய்த வேள்விக்கு நினைவாக ஒரு தூண் அமைக்கப்பட்டிருந்த தென்றும், அச்செல்லூர் கடற்கரைக்கு அருகில் இருத்ததென்றும் தெரிகின்றன.

ஐயூர் முடவனார் என்னும் சங்க காலத்துப் புலவரும் தம்முடைய செய்யுளில் இச்செல்லூரைக் கூறுகிறார். ஆனால், பரசுராமன் கதையைக் கூறவில்லை. செல்லூரை யாண்ட அரசன் ஒருவன் ஆதன் எழினி என்பவனுடன் போர் செய்து அவனைக் கொன்ற செய்தியை அப்புலவர் கூறுகிறார்.

கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்
கழனி யுழவர் குற்ற குவளையும்
கடிமிளைப் புறவிற் பூத்த முல்லையொடு
பல்லிளங் கோசர் கண்ணி யயரும்
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத் துலையாச் செறிசுரை வெள்வேல்
ஆதன் எழினி அருநிறத் தழுத்திய
பெருங்களிற்று எவ்வம்
(அகம் 216:8-15)

இச்செய்யுளிலும், செல்லூர் கடற்கரைக்கு அருகில் இருந்ததென்பது கூறப்படுவது காண்க.

பாரம்

துளு நாட்டில் இருந்த இன்னொரு ஊர் பாரம் என்பது. இவ்வூரில் நன்னனுடைய சேனைத் தலைவனாகிய மிஞிலி என்பவன் இருந்தான். “பாரத்துத் தலைவன் ஆர நன்னன்” (அகம்.152:12) என்றும், “பூந்தோள் யாப்பின் மிஞிலிகாக்கும் பாரம்" (நற் 265: 4-5) என்றும் இவ்வூர் கூறப்படுகிறது.

பாழி

இவ்வூர் பாழி என்னும் மலைக்கு அருகிலே இருந்தது. ஆகவே அம்மலையின் பெயரே இவ்வூருக்கும் பெயராயிற்று. பாழிமலை, ஏழில் மலையின் ஒரு பகுதி “பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச்சிலம்பு” (அகம் 152: 12- 13). இவ்வூரைச் சூழ்ந்து கோட்டை மதில் இருந்தது என்பது, ‘செம்பு உறழ் புரிசைப் பாழி’ (அகம் 375: 13) என்பதனால் தெரிகிறது. மேலும், இவ்வூர் ‘கறையடி யானை நன்னன் பாழி’ (அகம்.142:9) என்றும்

சூழி யானை சுடர்ப்பூண் நன்னன்
பாழி யாங்கண் கடியுடை வியன்நகர்
(அகம் 15:10-11)

என்றும் கூறப்படுகிறது. பாழி நகரைச் சூழ்ந்து இருந்த இடம் ‘பாழிப் பறந்தலை’ (அகம் 208: 6) என்று பெயர் பெற்றிருந்தது. பாழிமலை மேலிருந்து பார்த்தால் அதனைச் சூழ்ந்திருந்த நாடுகள் தெரிந்தன.

அருந்தெறல் மரபிற் கடவுள் காப்பப்
பெருந்தேன் தூங்கும் நாடுகாண் நனந்தலை
அணங்குடை வரைப்பிற் பாழி
(அகம் 372:1-3)

பாழி நகரக் கோட்டையில், நன்ன அரசர் பெருநிதியைச் சேர்த்து வைத்திருந்தனர். இதனை,

அணங்குடை வரைப்பிற் பாழியாங்கண்
வேள் முது மாக்கள் வியன் நகர்க் கரந்த
அருங்கல வெறுக்கை
(அகம் 372:8-5)

என்றும்,

நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்
(அகம் 258:1-3)

என்றும் வருவனவற்றால் அறியலாம். நன்னர், வேள்குல அரசராவர்.

கொடுகூர்

இவ்வூர் துளுநாட்டில் இருந்தது. நன்ன அரசருக்குரிய இவ்வூரைச் சேரன் செங்குட்டுவன் வென்றான் (பதிற்றுப்பத்து 5ஆம் பத்துப் பதிகம்).

வியலூர்

இதுவும் துளு நாட்டில் இருந்த ஊர்.

நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர்
(அகம் 97:12-13)

என்றும் இது கூறப்படுகிறது. இது கடற்கரைப் பக்கமாக இருந்த ஊர். இவ்வூரையும் சேரன் செங்குட்டுவன் வென்றான்.

உறுபுலி யன்ன வயவர் வீழச்
சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து
(பதிற்றுப்பத்து 5ஆம் பத்து பதிகம்)

என்று கூறுகிறது.

கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையிற்
சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்
( சிலம்பு, நடுகல் 114-115)

நறவு

இது துளு நாட்டில் கடற்கரையிலிருந்த துறைமுகப் பட்டினம். கள்ளுக்கு (மதுவுக்கு) நறவு என்றும் ஒரு பெயர் உண்டு. ஆகவே, நறவு என்னும் பெயருடைய இந்த ஊரைத் ‘துவ்வா நறவு’ (உண்ணப்படாத நறவு) என்று தமிழ்ப் புலவர்கள் கூறினார்கள். துளு நாட்டை சேர அரசர் வென்ற பிறகு இத்துறைமுகப்பட்டினத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (இவன் செங்குட்டுவனுக்கும் நார்முடிச் சேரலுக்கும் தம்பி) தங்கியிருந்தான் (பதிற்றுப். 6ஆம் பத்து 10: 9- 12). கிரேக்கரோம வாணிகர்கள் நறவை ‘நவ்றா’ என்று கூறினார்கள். துளு மொழியில் இது நாறாவி என்று கூறப்பட்டது. இங்கு யவனக் கப்பல்கள் வந்து வாணிகஞ் செய்ததாகத் தெரிகின்றது.

சேரநாட்டுத் தொண்டித் துறைமுகந்தான் நறவு என்று சிலர் கருதுகின்றனர். துளு நாட்டிலுள்ள மங்களூர்தான் நறவு என்று வேறு சிலர் கருதுகிறார்கள். நறவு துளு நாட்டிலிருந்த கடற்கரைப் பட்டினம் ஆகும்.

ஏழில்மலை

இது துளு நாட்டில் இருந்த மலைகளில் ஒன்று. இது துளு நாட்டின் தெற்கே இருந்தது. ஏழில் நெடுவரை என்றும், ஏழிற்குன்று என்றும் இதனைக் கூறுவர். ஏழில்மலையின் ஒரு பிரிவு பாழிமலை (பாழிச்சிலம்பு) என்று பெயர் பெற்றிருந்ததையும் அங்குப் பாழி என்னும் ஊர் இருந்ததையும் முன்னமே கூறினோம்.

பாரத்துத் தலைவன் ஆர நன்னன்
ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பு
(அகம் 152: 12-13)

என்றும்

பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு
ஏழிற் குன்றம்
(நற்.391:6-7)

என்றும்

நன்னன் நன்னாட்டு
ஏழிற் குன்றம்
(அகம் 349; 8-9)

என்றும்

ஓங்கு புகழ்க்
கானமர் செல்வி அருளலின் வெண்கால்
பல்படைப் புரவி எய்திய தொல்லிசை
நுணங்குநுண் பனுவல் புலவன் பாடிய
இனமழை தவழும் ஏழிற் குன்றத்து
(அகம் 345: 3-7)

என்றும் இது கூறப்படுகிறது.

இதனால் ஏழில்மலையில் கானமர் செல்வியாகிய கொற்றவைக்கும் கோவில் இருந்தது என்றும், ஏழில்மலையை ‘நுணங்கு நுண்பனுவல் புலவன்’ ஒருவன் பாடினான் என்றும் தெரிகின்றன. ஏழில்மலையைப் பாடிய புலவன் பரணராகவோ அல்லது மோசிகீரனாராகவோ இருத்தல் வேண்டும்.

ஏழில்மலை, மேற்குக் கடற்கரையோரமாகக் கண்ணனூருக்கு வடமேற்கே 16மைல் தூரத்தில் இருக்கிறது. ஏழில்மலை என்னும் இரயில் நிலையமும் உண்டு.

சங்க காலத்தில் துளு நாட்டைச் சேர்ந்திருந்த இந்த ஏழில்மலை இப்போது மலையாள நாட்டில், மலபார் மாவட்டத்துச் சிறைக்கல் தாலுக்காவில் சேர்ந்திருக்கிறது. ஆனால், இது முன்பு துளுநாட்டைச் சேர்ந்திருந்தது. பிற்காலத்தில், மலையாளிகள் இதனை ‘ஏழிமல’ என்று அழைத்தனர். ழகரத்தை உச்சரிக்கத் தெரியாத மேல்நாட்டார் முதலியோர் இதனை ‘யய்முல்லை’ (Yai Mullay) என்று கூறினார்கள். சிலர், ஏழில்மலையை எலிமலை என்று வழங்கினார்கள். வடமொழியாளர், எலிமலை என்பதை மூஷிகமலை என்று மொழிபெயர்த்துக் கொண்டு தங்கள் வழக்கம்போல மூஷிக வம்சம் என்னும் பெயருள்ள நூலை எழுதினார்கள். மூஷிக வம்சத்தில் ஏழில்மலையை யரசாண்ட பிற்கால அரசர்களைப் பற்றியும் அது சம்பந்தமான புராணக் கதைகளையும் எழுதி வைத்தனர்.

பிற்காலத்தில் வாணிகத்துக்காக வந்த போர்ச்சுக்கீசியர் இந்த மலையை எலிமலை என்றே கூறினார்கள். அவர்கள் ‘மவுண்ட் - டி - எலி (Monte D' Ele) என்று கூறினார்கள். அப்பெயர் பிற்காலத்தில் ‘டெல்லி’ (Delli) என்று குறுகிற்று.

ஏழில்மலை, அரபிக்கடலில் 27 மைல் தூரம் வரையில் தெரிந்தது. வாஸ்கோ-டி-காமா என்னும் போர்ச்சுக்கீசியர் முதல் முதல் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்குக் கடலில் முதல் முதலாகக் காணப்பட்ட இடம் இந்த மலையே. 1498 இல், ஏழில்மலையைக் கடலில் இருந்து கண்ட அவர் தன் கப்பலைக் கண்ணனூருக்கு அருகில் செலுத்திக் கரை இறங்கினார்.

ஏழில்மலை கடற்கரைக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. இங்குக் கடற்கொள்ளைக்காரர் இருந்தனர் என்று முற்காலத்துப் பிற்காலத்து அயல் நாட்டார் எழுதியிருக்கிறார்கள். துளு நாட்டை யரசாண்ட நன்ன அரசர்களும் கடற்கொள்ளைக்காரருக்கும் உதவியாக இருந்தனர் என்பது தெரிகின்றது.

கடம்பின் பெருவாயில்

கடம்பின் பெருவாயில் என்னும் ஊர் துளு நாட்டில் இருந்தது. இவ்வூரில் நடந்த போரில், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், நன்னனை வென்றான்.

உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செறுவின் ஆற்றலை யறுத்தவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
(பதிற்று. 4ஆம் பத்து, பதிகம்)

வாகைப் பெருந்துறை

இதுவும் துளு நாட்டின் தெற்கில் இருந்த ஊர். இது வாகைப்பறந்தலை என்றும் பெயர் பெற்றிருந்தது. இவ்வூரில் பசும்பூட் பாண்டியனுடைய சேனைத் தலைவனான அதிகமான் என்பவன் போர் செய்து இறந்தான்.

கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
(குறுந்393:3-5)

களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் இவ்வூரில் நன்னனுடன் போர் செய்தான்.

குடாஅது
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற்
பொலம்பூண் நன்னன் பொருது களத்தொழிய
வலம்படு கொற்றத் தந்த வாய்வாட்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
(அகம்199: 18-22)

கடல் துருத்தி

துளு நாட்டைச் சேர்ந்து அரபிக்கடலில் சிறுசிறு தீவுகள் சில இருந்தன. அந்தத் தீவுகள் துளு நாட்டு ‘நன்ன’ அரசரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. அத்தீவுகள் ஒன்றில் நன்னனுக்குக் கீழடங்கிய குறும்பத் தலைவன் ஒருவன் இருந்தான். அவன் கடம்ப மரத்தைத் தன்னுடைய காவல் (அடையாள) மரமாக வளர்த்து வந்தான். அவன் நன்னனுடைய தூண்டுதலின் மேல் சேர நாட்டுக்கு வாணிகத்தின் பொருட்டு வந்த யவனக் கப்பல்களைத் தடுத்துக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தான். அந்தக் குறும்ப அரசனை, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் மகனான சேரன் செங்குட்டுவனைக் கொண்டு வென்றான் (பதிற்றுப்பத்து 2ஆம் பத்து, 5ஆம் பத்து).

துளுநாட்டுக்கும் சேர நாட்டுக்கும் (இப்போதைய மலையாள தேசம்) மேற்கே அரபிக்கடலில் நூறு மைலுக்கு அப்பால் லக்ஷத்தீவு என்று பெயருள்ள தீவுகள் இருக்கின்றன. இத்தீவுகள் பவழப் பூச்சிகளால் உண்டானவை. கடல் மட்டத்துக்கு மேல் 10 அல்லது 15 அடி உயரம் உள்ளவை. வடக்குத் தெற்காக இத்தீவுகள் 1 மைல் முதல் 6 மைல் நீளமும் ஏறத்தாழ ஒரு மைல் அகலமும் உள்ளவை.

இத்தீவுகளுக்கு அருகில் கடல் அலை இல்லாமல் கப்பல்கள் தங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது. புயல் அடித்தாலும் இங்குக் கப்பல்களுக்கு ஆபத்து நேரிடுவதில்லை.

இத்தீவுகளில் வடக்குப் பாகத்தில் உள்ள 8 தீவுகளுக்கும் அமிந்தீவு என்று இப்போது பெயர் கூறப்படுகிறது. இவை துளு நாட்டோடு சேர்ந்தவை. இங்குப் பலாமரமும் கமுகுமரமும் பயிராகின்றன. தென்னையும் உண்டு. வரகு, கேழ்வரகு தானியங்கள் பயிராகின்றன. நெல் பயிராவதில்லை.

சங்க நூல்களில் கூறப்படுகிற கடல் துருத்தி என்பது இத்தீவுகளாக இருக்கக்கூடும். கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்த குறும்பர்கள் இத்தீவுகளில் இருந்தவராதல் வேண்டும். இங்கிருந்த குறும்பர் துளு நாட்டு நன்னனுக்குக் கீழடங்கி வாணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்தனர். சேரன் செங்குட்டுவனால் வெல்லப்பட்டவர் இத்தீவினராதல் வேண்டும்.

மங்களூர்

இதற்கு மங்கலாபுரம் என்னும் பெயரும் உண்டு. இது துளு நாட்டில் நேத்திராவதி என்னும் ஆறு கடலில் கலக்கிற இடத்துக்கு அருகில் இருந்தது. இது இப்போதும் அப்பெயரோடு இருக்கிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டிலிருந்த தாலமி (Ptolemy) கூறுகிற மகனூர் என்பது இந்த மங்களூரே. இங்குள்ள மங்களதேவியின் பெயரே இவ்வூருக்கு அமைந்து மங்களூர் என்று பெயர் பெற்றது. மங்களாதேவி என்பது பௌத்த மதத் தெய்வம். மங்களா தேவிக்கு ஆதிதேவி என்றும் தாராதேவி என்றும் வேறு பெயர்கள் உண்டு. (J. R. A. S., 1894, P. 85). இக் கோவில் இப்போதும் கிராம தேவதைக்கோவிலாக இருந்து வருகிறது. இதற்குச் சிறிது தூரத்தில் ‘துர்க்கை’ கோயில் ஒன்று இருக்கிறது. அது வேறு கோவில்.

மங்களூருக்குத் தெற்கே 21/2 மைல் தூரத்தில் கதிரி என்னும் பேர் பெற்ற இடம் இருக்கிறது. இங்கு மஞ்சுநாதர் கோவில் இருக்கிறது. இது அக்காலத்தில் பேர்போன பௌத்தக் கோவிலாக இருந்தது. பௌத்தக் கோவில்களாகையால் இந்தக் கதிரிக் கோவிலுக்கும் மங்களாதேவி கோவிலுக்கும் ஆதி காலத்தில் தொடர்பு இருந்தது. சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற மங்கலாதேவி கோவிலும் பாசண்டச் சாத்தன் கோவிலும் முறையே மங்கலாதேவி கோவிலும் கதிரிக் கோவிலும் ஆகும். கதிரிக் கோவில் இப்போது மஞ்சுநாதர் கோவில் என்று கூறப்படுகிறது. மஞ்சு நாதர் என்பது பௌத்தரின் போதிசத்துவருக்குப் பெயர். இக்கோவிலில் இப்போதுள்ள லோகேசுவரர் உருவம் பௌத்தரின் அவலோகீஸ்வரர் உருவமே. மகாயான பௌத்தத்தில், லோகேசுவரர் என்னும் லோகநாதர் தாரை தேவியின் கணவன் என்று கூறப்படுகிறார்.

கதிரி மஞ்சுநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள மலையில் இயற்கையாக அமைந்த குகைகள் உள்ளன. அவை பௌத்தப் பிக்குகள் தங்கியிருந்த குகைகளாகும். அக்குகைகள் இப்போது பாண்டவ குகைகள் என்று கூறப்படுகின்றன.

மங்களூரில் உள்ள மங்கலாதேவியின் கோவிலைப் பற்றியும் அதன் அருகில் உள்ள கதிரிக் கோவிலைப் பற்றியும் சிலப்பதிகாரத்தில் இவ்வாறு கூறப்படுகிறது: “மங்கல மடந்தை கோட்டம்”(சிலம்பு, வரந் தருகாதை 88).‘ ஆயிழைக் கோட்டம்' (சிலம்பு, வரந். 61. ஆயிழைக் கோட்டம் - மங்கலா தேவி கோயில். அரும்பதவுரை)

மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்
செங்கோட் டுயர்வரை சேணுயர் சிலம்பில்
(சிலம்பு, வரந்தரு.153-154)

(இதில் மங்கல மடந்தை என்பதற்கு மங்கல தேவி என்று அரும்பதவுரையாசிரியர் உரை எழுதுவது காண்க. இதன் அடிக்குறிப்பில் சிலப்பதிகாரப் பதிப்பாசிரியராகிய டாக்டர் உ.வே. சாமிநாதையர், “மங்கலா தேவி என்றது, கண்ணகியை; மங்கலாபுரம் அல்லது மங்களூர் என்பது இத்தேவி காரணமாக வந்த பெயர்” என்று குறிப்பு எழுதியிருப்பது தவறு என்பது சொல்லாமலே தெரிகிறது. இதுபற்றி இங்கு விளக்கம் தேவையில்லை.)

மங்கலாதேவியின் கோட்டத்துக்கு அருகில் இருந்ததாகச் சிலம்பு கூறுகிற ‘செங்கோட்டுயர் வரை சேணுயர்சிலம்பு’ கதிரிக்கு அருகில் உள்ள மலையாகும். இங்குப் பௌத்த முனிவர் தங்கியிருந்த இயற்கைக் குகைகள் இருந்தன என்று முன்னமே கூறினோம். இங்குள்ள சுனைகளில் வெள்ளைக்கடுகு போன்ற கற்களும் முருக்கம்பூ நிறம் போன்ற சிறுகற்களும் இருந்தன என்றும் மாவைக் கரைத்தது போன்ற நீர் இங்கு இருந்தது என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

மங்கல மடந்தை கோட்டகத் தாங்கண்
செங்கோட்டுயர்வரைச் சேணுயர் சிலம்பில்
பிணிமுக நெடுங்கல் பிடர்ச்சிலை நிரம்பிய
அணிகயம் பலவுள. ஆங்கவை யிடையது
கடிப்பகை நுண்கலும் கவிரிதழ்க் குறுங்கலும்
இடிக்கலப் பன்ன இழைந்துகு நீரும்
உண்டோர் சுனை அதனுள்புக் காடினர்
பண்டைப் பிறவியர் ஆகுவர்
(சிலம்பு, வரந்தரு.53-60)

(கடிப்பகை நுண்கல் - வெண்சிறு கடுகு போன்ற நுண்ணியல் கல். கவிர் இதழ்க் குறுங்கல் - முருக்கம்பூப் போன்ற நிறத்தையுடைய குறிய கல். இடிக் கலப்பன்ன - மாவைக் கரைத்தா லொத்த. அரும்புதவுரை)

சங்க இலக்கியங்களிலிருந்து அறியப்படுகிற துளுநாட்டு ஊர்களையும் இடங்களையும் இதுகாறும் அறிந்தோம். இனி, சங்க இலக்கியங்களிலிருந்து அறியப்படுகிற நன்ன அரசருடைய வரலாற்றைப் பார்ப்போம்.