மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/018
நன்னர் காலம்
துளு நாட்டு அரசர்களைப் பற்றிய வரலாறு, கி. பி. 4ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கின்றன. ஆனால், அவ்வரசர்கள் நன்ன அரசர் பரம்பரையினர் அல்லர்; வேறு அரச பரம்பரையினர். ஆனால், சங்க காலத்துத் துளு நாட்டின் பழைய வரலாறு சங்க நூல்களைத் தவிர வேறெங்கும் கிடைக்கவில்லை. சங்க நூல்களிலே துளு நாட்டைப் பற்றியும் துளு மன்னர்களைப் பற்றியும் கூறியுள்ளவற்றை மேலே விளக்கிக் கூறினோம். மூன்று நன்னர் இருந்ததையும் அவர்கள் ஏறத்தாழக் கி. பி. 100 முதல் 180 வரையில் இருந்தார்கள் என்பதையும் கூறினோம். இதுவே ஏறத்தாழச் சரியான காலம் என்பதை இங்கு விளக்குவோம்.
I. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர நாட்டை யரசாண்ட காலத்தில் துளு நாட்டை முதலாம் நன்னன் அரசாண்டான் என்று கூறினோம். நன்னன் ஆட்சிக் காலத்திலே அவனுடைய மகனான இரண்டாம் நன்னன் இளவரசனாக இருந்தான் என்பது சொல்லாமலே அமையும். முதலாம் நன்னனுடைய ஆட்சிக் காலத்தில் அவன் ஆட்சிக்குட்பட்டிருந்த கடல் துருத்தியில் (கடல் தீவில்) குறும்ப அரசன் ஒருவன் நெடுஞ்சேரலாதனுக்கு எதிராகக் குறும்பு செய்தான் என்றும் அவனை நெடுஞ்சேரலாதன் கடற்போரில் வென்று அடக்கினான் என்றும் கூறினோம். அந்தக் கடற்போரை நேரில் சென்று நடத்தியவன் அவனுடைய இளைய மகனான சேரன் செங்குட்டுவன் (கடல் பிறக்கோட்டிய குட்டுவன்) என்றுங் கூறினோம். அப்போது செங்குட்டுவன் இளவரசனாக இருந்தான் என்பதையும் தெரிவித்தோம். ஆகவே, முதலாம் நன்னனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் சமகாலத்தினர் என்பது தெரிகின்றது.
II. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறந்தபிறகு சேரநாட்டை யரசாண்டவன் அவனுடைய மூத்த மகனான களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். இவன் காலத்தில் துளு நாட்டையரசாண்டவன் நன்னன் இரண்டாவன். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் அரசாண்ட காலத்தில் அவனுடைய தம்பியாகிய சேரன் செங்குட்டுவனும் இளைய தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் சேரநாட்டின் வெவ்வெறிடங்களை ஆட்சி செய்தனர்.
நார்முடிச் சேரலின் காலத்தில் பாண்டி நாட்டையரசாண்டவன் பசும்பூண் பாண்டியன். பசும்பூண் பாண்டியனுடைய சேனைத்தலைவனாக இருந்தவன் தகடூர் அரசனாகிய அதிகமான் நெடுமிடல் என்பவன். அதிகமான் நெடுமிடலை நார்முடிச்சேரல் போரில் வென்றான். பிறகு, அதிகமான் நெடுமிடல் துளு நாட்டில் சென்று போர் செய்தான். அவனை நன்னன் இரண்டாவனுடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் போரில் கொன்று விட்டான்.
நார்முடிச் சேரல் சேனாதிபதியாகிய வெளியன் வேண்மான் ஆய்எயினன் என்பவனைத் துளு நாட்டின் மேல்போர் செய்ய அனுப்பினான். அவனை நன்னனுடைய சேனாதிபதி மிஞிலி போரில் கொன்றுவிட்டான். பிறகு, நார்முடிச்சேரலும் அவன் தம்பியராகிய செங்குட்டுவனும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் துளு நாட்டின்மேல் போர்செய்து நன்னன் இரண்டாவனைப் போரில் கொன்று துளு நாட்டைக் கைப்பற்றினார்கள் என்பதைக் கூறினோம்.
நன்னன் இரண்டாவன் இறந்த பிறகு அவனுடைய மகனான நன்னன் மூன்றாவன் சேரருக்குக் கீழடங்கி நன்னன் உதியன் என்று பெயர் சூட்டிக்கொண்டு அரசாண்டான் என்பதையும் கூறினோம்.
மூன்று நன்னர்களும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், அவன் மக்களான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், செங்குட்டுவன் (கடல் பிறக்கோட்டிய குட்டுவன்), ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்பவர்களின் சமகாலத்தவர் என்பதை மேலே விளக்கிக் கூறினோம்.
துளு நாட்டுப் போர்களில் சேரன் செங்குட்டுவன் முக்கியமான பங்குகொண்டிருந்தான். தன் தந்தை நெடுஞ்சேரலாதன் காலத்தில் நிகழ்ந்த கடற்போரில் தானே முன்நின்று போரை நடத்தி வெற்றிபெற்றான். தன் தமயனான நார்முடிச் சேரல் செய்த துளுநாட்டுப் போரில் இவன் முக்கியப் பங்கு கொண்டு போரை வென்றான். இவைகளைப் பற்றி முன்பே விளக்கிக் கூறியுள்ளோம்.
இந்தப் போர்கள் எல்லாம் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தின் முற்பகுதியிலே முடிந்துவிட்டன. அவன் இளவரசனாக இருந்தபோது அரசாட்சி பெற்ற உடனே முடிவடைந்துவிட்டன.
சோழன் கரிகாலன் இறந்த பிறகு செங்குட்டுவனின் மைத்துனனான கிள்ளிவளவனுக்கும் ஒன்பது தாயாதிகளுக்கும் நடந்த அரசாட்சி உரிமைப் போரில், செங்குட்டுவன் தன் மைத்துனனுக்காகச் சோழ மன்னர் ஒன்பது பேருடனும் போர் செய்து வென்று சோழ ஆட்சியைத் தன் மைத்துனனுக்குக் கொடுத்ததும். கங்கைக் கரைக்குச் சென்று கனக விசயரை வென்று சிறைப்பிடித்துக் கொண்டுவந்ததும், கண்ணகிக்குப் பத்தினிக்கோட்டம் அமைத்ததும் ஆகியவை எல்லாம் செங்குட்டுவனின் ஆட்சிகாலத்தின் பிற்பகுதியில் துளு நாட்டுப் போர்கள் முடிந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்தன.
III. இது வேறு விதமாகவும் தெளிவாகிறது. பரணர் என்னும் புலவர், மேலே கூறிய சேர அரசர், நன்ன அரசர்களின் சமகாலத்தில் இருந்தவர். அவர் நெடுஞ்சேரலாதன், நார்முடிச் சேரல், செங்குட்டுவன் ஆகிய சேர அரசர் காலத்திலும் நன்னன் முதலாவன், நன்னன் இரண்டாவன், நன்னன் மூன்றாவன் என்னும் மூன்று துளுவ அரசர் காலத்திலும் இருந்தவர் என்பது அவருடைய பாடல்களினால் தெரிகின்றது.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆரிய அரசரை வென்றதையும் யவனரைச் சிறைப்பிடித்து வந்ததையும் இமயத்தில் வில் பொறித்ததையும் பரணர் கூறுகின்றார் (அகம் 396: 16-18). நெடுஞ் சேரலாதன் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியுடன் போர் என்னும் இடத்தில் போர் செய்து இருவரும் புண்பட்டுப் போர்க்களத்தில் விழுந்து சிலகாலம் உயிர் போகாமல் கிடந்தபோது அவர்களைப் பரணர் நேரில் பாடியுள்ளார் (புறம் 63) இச்செய்யுளின் அடிக்குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரை அக்காலத்திற் பரணர் பாடியது” என்று அக்குறிப்புக் கூறுகிறது.1
நெடுஞ்சேரலாதன் காலத்தில் இருந்த முதலாம் நன்னனையும் பரணர் தம்முடைய செய்யுட்களில் குறிப்பிட்டுள்ளார். அந்த நன்னன் பெண் கொலை புரிந்தவன் என்றும் (குறுந். 292: 1-5) அவனுடைய மாமரத்தைக் கோசர் சூழ்ச்சி செய்து வெட்டிவிட்ட செய்தியையும் (குறுந். 73: 2-4) பரணர் கூறுகின்றார்.
இதனால் பரணரும் நெடுஞ்சேரலாதனும் முதலாம் நன்னனும் சமகாலத்திலிருந்தவர் என்பது தெரிகின்றது. நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு அவன் மகனான நார்முடிச்சேரல் சேரநாட்டையரசாண்டான். நார்முடிச்சேரல் அதிகமான் நெடுமிடல் என்பவனை வென்றான் என்று பதிற்றுப்பத்து (4ஆம் பத்து 2:10) கூறுகிறது. நார்முடிச் சேரல் வென்ற நெடுமிடல் என்பவனைப் பரணருங் கூறுகிறார். பசும்பூண் பாண்டியனின் சேனாபதி அதிகமான் நெடுமிடல் என்றும் அவனை அவனுடைய பகைவர்அரிமணவாயில் உரத்தூர் என்னும் ஊரில் வென்றனர் என்றும் (அகம் 266:10-14), பிறகு அவன் துளு நாட்டு வாகைப் பறந்தலைப் போரில் இறந்து போனான் என்றும் (குறுந்.393: 3-6) அவன் நன்னன் (இரண்டாவன்) உடைய சேனாபதியாகிய மிஞிலியால் கொல்லப்பட்டான் என்றும் கூறுகிறார் (அகம் 142: 9-13).
நார்முடிச் சேரலின் சேனாபதியாகிய வெளியன் வேண்மான் ஆய்எயினன் என்பவன் நன்னன் (இரண்டாவன்) உடைய சேனாபதி யாக மிஞிலியால் கொல்லப்பட்ட செய்தியையும் பரணர் கூறுகிறார் (Á 148: 7-8, 181:4-7, 208: 5-9, 396: 2-6).
இதனால், பரணர் நார்முடிச்சேரல், அதிகமான் நெடுமிடல், நன்னன் இரண்டாவன், அவனுடைய சேனாதிபதி மிஞிலி ஆகியோர் காலத்தில் இருந்தவர் என்பது தெரிகின்றது.
நெடுஞ்சேரலாதனின் இரண்டாவது மகனும் நார்முடிச் சேரலின் தம்பியுமாகிய சேரன் செங்குட்டுவனைப் பரணர் பதிற்றுப்பத்து 5ஆம் பத்துப் பாடினார். அதில் செங்குட்டுவனுடைய ஆட்சியின் முற்பகுதி நிகழ்ச்சிகளை மட்டும் கூறுகின்றார். செங்குட்டுவன் கடலில் சென்று கடற்போர் செய்து குறும்பரை அடக்கியதையும் மோகூர் மன்னனை வென்றதையும் சிறப்பித்துக் கூறுகிறார்.
(செங்குட்டுவன் காலத்துப் பிற்கால நிகழ்ச்சிகளான மைத்துன வளவனுக்காக ஒன்பது சோழரை வென்றதும் கங்கைக் கரையில் கனக விசயரை வென்று சிறைப்பிடித்ததும், கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்ததும் முதலிய பிற்கால நிகழ்ச்சிகளைப் பரணர் 5ஆம் பத்தில் கூறவில்லை. எனவே, இந்நிகழ்ச்சிகள் நிகழ்வதற்கு முன்னே 5 ஆம் பத்துப் பாடினார் என்பது தெரிகிறது)2
நன்னன் மூன்றாவனாகிய நன்னன் உதியனைப் பரணர் தம் செய்யுளில் கூறுகிறார். (அகம் 258:1.3) எனவே பரணர், செங்குட்டுவன், நன்னன் மூன்றாவன் காலத்திலும் இருந்தவர் என்பது தெரிகின்றது.
இதனால், மூன்று நன்னர் காலத்திலும் நெடுஞ்சேரலாதன், அவன் மக்களாகிய நார்முடிச்சேரல், செங்குட்டுவன் ஆகியோர் காலத்திலும் பரணர் இருந்தார் என்பது சந்தேகமில்லாமல் தெரிகின்றது. பரணர், சேரன் செங்குட்டுவன் ஆட்சியின் முற்பகுதியிலே காலஞ்சென்றிருக்க வேண்டும்.
IV. சேரன் செங்குட்டுவன் வஞ்சிமா நகரத்தில் பத்தினிக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்தபோது அவ்விழாவுக்குக் 'கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்' (முதலாம் கஜபாகு) வந்திருந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. கஜபாகு அரசன் கி.பி. 173 முதல் 195 வரையில் அரசாண்டான். செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் கஜபாகு ஆட்சிக்கு வந்தான். செங்குட்டுவன் ஐம்பத்தைந்து ஆண்டு அரசாண்டான் என்று 5ஆம் பத்தின் பதிகக் குறிப்புக் கூறுகிறது. இது அவனுடைய இளவரசு ஆட்சிக் காலமும் சேர்ந்ததாகும்.
செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்த காலத்தில் அவன் தலை நரைத்து முதிர்ந்த வயதுடையவனாய் இருந்தான் என்று கூறப்படுகிறான். செங்குட்டுவன் உத்தேசம் கி.பி. 180 இல் காலஞ்சென்றிருக்க வேண்டும். அவன் பத்தினிக் கோட்டம் அமைத்தது ஏறத்தாழ கி.பி. 175.இல் இருக்கலாம். அவன் 55 ஆண்டு ஆட்சி செய்தான் என்பதனால், அவன் ஏறத்தாழ கி.பி. 125 முதல் 180 வரையில் அரசாண்டான் என்று கருதலாம்.
கி.பி. 125இல் இளவரசுப் பட்டம் பெற்றபோது செங்குட்டுவனுக்கு ஏறத்தாழ இருபது வயதிருக்கலாம். அவனுடைய தந்தையான நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டாண்டு அரசாண்டான் என்று கூறப்படுகிறான். எனவே, அவன் ஏறத்தாழக் கி. பி. 72 முதல் 130 வரையில் அரசாண் டிருக்கக்கூடும். அவனுடைய மூத்த மகனான நார்முடிச்சேரல் இருபத்தைந்து ஆண்டு அரசாண்டான் என்பதனால் (இளவரசுக் காலத்தையும் சேர்த்து) ஏறக்குறைய கி.பி. 120 முதல் 145 வரையில் அரசாண்டிருக்க வேண்டும். சேரன் செங்குட்டுவன் ஏறத்தாழ கி.பி. 125 முதல் 180 வரையில் அரசாண்டிருக்கக்கூடும்.
எனவே, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் சமகாலத்தவனாகிய முதலாம் நன்னன் ஏறத்தாழ கி.பி. 100 முதல் 125 வரையிலும் அவன் மகனான இரண்டாம் நன்னன் ஏறத்தாழ கி.பி. 125 முதல் 150 வரையிலும் அவன் மகனான மூன்றாம் நன்னன் ஏறத்தாழ கி.பி 150 முதல் 180 வரையிலும் அரசாண்டிருக்கக்கூடும் என்றும் கருதலாம்.
✽✽✽
அடிக்குறிப்புகள்
1. இந்தச் சேரனும் சோழனும் போர்ப்புறத்தில் புண்பட்டு விழுந்து உயிர் போகாமல் கிடந்தபோது கழாத்தலையார் என்னும் புலவரும் இவர்களை நேரில் பாடினார் (புறம் 368).
2. வயது முதிர்ந்தவரான பரணர் செங்குட்டுவன்மேல் 5 ஆம் பத்துப் பாடிய பிறகு சில காலத்துக்குப் பின்னர் இறந்துபோனார். இந்த வரலாற்றையறியாத சிலர், செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்ததும் இமயம் சென்றதும் முதலிய செய்திகளை அவனைப் பாடிய 5ஆம் பத்தில் கூறாதபடியால் இவை பிற்காலத்தில் கட்டப்பட்ட கதைகள் என்று கூறுகிறார்கள். பிற்காலத்தில் நிகழ்ந்த செய்திகளை முன்னமே இறந்துபோன பரணர் எவ்வாறு கூறமுடியும்? செங்குட்டுவன் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் நடந்த இச்செய்திகளைச் செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறினார். செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகு, அவனைப் பரணர் பாடிய 5 ஆம் பத்தின் பதிகத்தில் அவனுடைய பிற்கால நிகழ்ச்சிகளைக் குறித்து வைத்தனர். ஆழ்ந்து ஆய்ந்தோய்ந்து பாராமல் மேற்புல்லை மேய்கிற 'ஆராய்ச்சிக்காரர்' களுக்கு உண்மைச் செய்திகள் புலப்படா. பரணர், செங்குட்டுவன் ஆட்சியின் முற்பகுதியிலேயே காலமானார் என்பதை உணராமல், அவர் செங்குட்டுவனின் இறுதிக் காலத்தில் 5 ஆம் பத்துப் பாடினார் என்று தவறாகக் கருதிக் கொண்டு இவ்வாறெல்லாம் எழுதிவிட்டனர்.