உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/007

விக்கிமூலம் இலிருந்து

6. பழங்காலத் துறைமுகப் பட்டினங்கள்

கடல் வழியாகக் கப்பல்களில் வாணிகம் நடைபெற்றது. தரை வாணிகத்தைவிடக் கடல் வழி வாணிகம் அதிகமாக நடந்தது. தரை வாணிகத்தைவிடக் கடல் வாணிகம் அதிகச் செலவில்லாமலும் விரைவாகவும் இருந்தபடியால் கப்பல் வாணிகம் சிறப்பாக நடந்தது. கடல் வாணிகத்துக்குக் கப்பல்கள் தேவை. கப்பல் கட்டும் தொழில்கள் ஒவ்வொரு நாட்டிலும் நடந்தன. கப்பல்களைக் கடலில் ஓட்டிக் கொண்டுபோய்ப் பொருள்களை இறக்குமதி ஏற்றுமதி செய்வதற்கு அந்தந்த நாடுகளில் துறைமுகங்கள் தேவை. ஆகவே, ஒவ்வொரு நாட்டிலும் துறைமுகப் பட்டினங்கள் ஏற்பட்டிருந்தன. பெரும்பாலும் துறைமுகப் பட்டினங்கள், ஆறுகள் கடலில் சேர்கின்ற புகர் முகங்களில் இருந்தன; ஆற்று முகத்துவாரங்கள் இல்லாத துறைமுகப் பட்டினங்களும் சில இருந்தன. ஒவ்வொரு பெரிய துறைமுகங்களிலும் கலங்கரை விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. துறைமுகங்களில் ஏற்றுமதி இறக்குமதியாகும் பொருள்களுக்குச் சுங்கம் வாங்கப்பட்டது. அந்தச் சுங்கப்பணம் அந்தந்த நாட்டை யாளும் அரசர்களுக்குரியது.

வட இந்தியாவில் கங்கையாறு முக்கியமான பெரிய ஆறு. அது கடலில் சேர்கிற இடத்தில் கப்பல்கள் உள்நாட்டில் நுழைந்து காசி (வாரணாசி), பாடலிபுரம் முதலான துறைமுகங்களுக்குப் போயின. அக்காலத்திலே பாரத தேசத்திலே இருந்த துறைமுகப் பட்டினங்களைக் கூறுவோம். பாரத நாட்டின் கிழக்குக் கரையில் (தமிழ்நாட்டுக்கு வடக்கே) இருந்த பேர்போன துறைமுகங்கள் தமிலிப்தியும் கலிங்கப் பட்டினமும் ஆகும். தமிலிப்தி என்பது அக்காலத்தில் உலகப் புகழ் பெற்ற பெரிய துறைமுகம். அது கங்கையாறு கடலில் கலக்கிற இடத்தில் வங்காள தேசத்தில் இருந்தது. அதற்குத் தெற்கே கலிங்க தேசத்தில் கலிங்கப்பட்டினத்தில் ஒரு துறைமுகப்பட்டினம் இருந்தது. இந்தத் துறைமுகப் பட்டினங்களுக்கு இடையே வேறு சில துறைமுகப் பட்டினங்களும் அக்காலத்தில் இருந்திருக்கக்கூடும். அவற்றைப் பற்றி இப்போது நமக்குத் தெரியவில்லை.

அக்காலத்துத் தமிழகத்தின் துறைமுகப்பட்டினங்களைக் கூறுவோம்.

கிழக்குக்கரைத் துறைமுகங்கள்

தமிழகத்தின் கிழக்குக் கரையிலிருந்த பழங்காலத் துறைமுகப் பட்டினங்களைக் கூறுவோம். இவை குணகடலில் (வங்காளக்குடாக் கடலில்) இருந்தவை. அந்தத் துறைமுகப் பட்டினங்கள் பிற் காலத்தில் மறைந்து போய்விட்டன. (வேறு புதிய துறைமுகங்கள் ஏற்பட்டுள்ளன). பழைய துறைமுகப்பட்டினங்களைப் பற்றிப் பழங்கால இலக்கிய நூல்களிலிருந்து அறிகிறோம். தமிழ்நாட்டின் கிழக்குக் கரைத் துறைமுகங்கள் கொல்லத் துறை, எயிற்பட்டினம் (சோபட்டினம்), அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், தொண்டி, மருங்கை, கொற்கை என்பவை. தமிழ்நாட்டுக்கு அருகிலுள்ள இலங்கைத் தீவுடன் அக்காலத்தில் தமிழர் வாணிகம் செய்தபடியால் அங்கிருந்த முக்கியத் துறைமுகப் பட்டினங்களையும் இங்குக் கூறுவோம். அவை மணிபல்லவம் (ஜம்பு கொலப் பட்டினம்), திருக்கேத்தீச்சரம் என்பவை.

தமிழகத்தின் தெற்கே கன்னியாகுமரியில் குமரித் துறைமுகம் இருந்தது. இந்தத் துறைமுகங்களை விளக்கிக் கூறுவோம்.

கொல்லத் துறை

கொல்லத் துறை என்னும் துறைமுகப்பட்டினம் வடபெண்ணை யாற்றின் தென்கரையில் அந்த ஆறு கடலில் கலக்கிற முகத்துவாரத்தில் இருந்தது. இதற்கு மேற்கே நெல்லூர் வட பெண்ணையாற்றின் கரை மேல் இருக்கிறது. இக்காலத்தில் இவை ஆந்திர தேசத்தைச் சேர்ந்து இருக்கின்றன. ஆனால் பழங்காலத்தில் கடைச்சங்க காலத்திலேயும் இவை தமிழ்நாடாக இருந்தன. அக்காலத்தில் இது தொண்டை நாட்டுத் துறைமுகப்பட்டினமாக இருந்தது. கொல்லத்துறை, நெல்லூர், பெண்ணையாறு என்னும் பெயர்களே தமிழ்ப் பெயர்களாக இருந்தன. கொல்லத்துறை பழந்தமிழ் நாட்டின் வடகோடியில் கிழக்குக் கரையில் இருந்தது. கொல்லத் துறை என்னும் பெயர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் கண்ட கோபாலபட்டினம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் அதன் பழைய பெயர் மறைந்துவிடவில்லை. கொல்லத் துறையான கண்ட கோபால பட்டினம் என்று அது கல்வெட்டுச் சாசனங்களில் கூறப்படுகின்றது.

தமிழ்நாட்டின் வடஎல்லை வேங்கடமலை (திருப்பதிமலை) என்று பழந்தமிழ் நூல்கள் கூறினாலும் அதன் சரியான வட எல்லை வட பெண்ணையாறே. ஆற்றைக் கூறாமல் மலையை எல்லையாகக் கூறியதன் காரணம் அது மலை என்பதற்காகவே. பழந்தமிழ் நாட்டின் வடஎல்லை வட பெண்ணையாற்றின் தென்கரையாக இருந்தது. தொண்டை நாட்டின் (அருவா நாட்டின்) இருபத்து நான்கு கோட்டங்களில் வடகோடிக் கோட்டமாக இருந்த பையூர் இளங்கோட்டம் வடபெண்ணை யாற்றின் தென்கரையில் இருந்தது என்பதைக் கல்வெட் டெழுத்துச் சாசனங்களில் அறியப்படுகின்றது. பழந்தமிழ் நாட்டின் வட எல்லைக்கும் பழைய ஆந்திர நாட்டின் தென் எல்லைக்கும் வரம்பாக வட பெண்ணையாறு அமைந்து இருந்தது. வடபெண்ணையாற்றின் முகத்துவாரத்தில் தென்கரை மேல் இருந்த கொல்லத்துறை அக்காலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது.

கொல்லத்துறைத் துறைமுகத்தைப் பற்றிச் சங்கச் செய்யுட்களில் கூறப்படவில்லை. எல்லாத் துறைகளையும் கூறுவது அச்செய்யுட்கள் இயற்றப்பட்டதன் நோக்கமும் அன்று. தற் செயலாகத் தமிழகத்தின் சில துறைமுகப்பட்டினங்களை அச்செய்யுட்களில் சில கூறுகின்றன. அச்செய்யுட்கள் கூறாத வேறு சில துறைமுகப்பட்டினங்களும் இருந்தன. உதாரணமாக எயிற் பட்டினமாகிய சோ பட்டினத்துக்கும் (இப்போதைய மரக்காணம்) காவிரிப்பூம்பட்டினத்துக்கும் இடையில் ஒரு துறைமுகமும் யவனரின் பண்டகசாலையும் இருந்தன. சோ பட்டினத்தையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் கூறுகிற சங்கச் செய்யுட்கள் இந்தத் துறைமுகத்தைக் கூறவில்லை. ஆனால் பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூலில் இந்தத் துறைமுகம் கூறப்பட்டுள்ளது. இத்துறைமுகத்தை அந்நூல் போதவுக்கே (Poduke) என்று கூறுகிறது. புதுச்சேரிக்குத் தெற்கேயுள்ள அரிக்கமேடு என்னும் மண்மேட்டை 1945இல் தொல்பொருள் ஆய்வாளர் அகழ்ந்து பார்த்தபோது அங்குக் கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட பொருள்களும் யவனர் (கிரேக்க- ரோமர்) களின் அக் காலத்துப் பொருள்களும் கிடைத்தன. அந்த இடம் அக்காலத்தில் துறைமுகமாகவும் பண்டக சாலையாகவும் இருந்தது என்பது வெளியாயிற்று. பெரிப்ளூஸ் நூல் கூறுகிற 'போதவுகே' துறைமுகம் இதுதான் என்பதும் இப்போது அறியப்படுகிறது. ஆகவே, சங்கச் செய்யுட்களில் கூறப்படாத வேறு சில துறைமுகப்பட்டினங்களும் இருந்தன என்பதும் அவற்றில் கொல்லத் துறையும் ஒன்று என்பதும் தெரிகின்றது.

கொல்லத்துறை கடைச்சங்க காலத்தில் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது. அங்குக் கடல் வாணிகமும் நடைபெற்றது. யவனர் கப்பல்களில் வந்து அங்கு வாணிகம் செய்தார்கள். அதற்குச் சான்றாக, அத்துறைக்கு மேற்கேயுள்ள பழைய பட்டின மாகிய நெல்லூரில் உரோம் தேசத்துப் பழங்காசுகள் கிடைத் துள்ளன. உரோம் தேசத்துப் பழங்காசுகள் அடங்கிய ஒரு பானைப் புதையல் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது. கொல்லத் துறைத் துறைமுகத்துக்கு அருகிலே யுள்ள நெல்லூரில் கிடைத்த இந்தப் புதையல் அக்காலத்தில் யவன வாணிகர் இங்கு வந்து வாணிகஞ் செய்ததைத் தெரிவிக்கின்றது.1

தொல் பொருள் ஆய்வாளர் அரிக்கமேட்டை அகழ்ந்து பார்த்துக் கண்டுபிடித்தது போல, கொல்லத் துறையான இவ்விடத்தையும் அகழ்ந்து பார்த்தால் இங்கும் பழைய பொருள்கள் கிடைக்கக் கூடும். கிடைக்கும் பொருள்களிலிருந்து வரலாற்றுச் செய்திகளை அறிய இயலும். இதுவரையில் இங்கு அகழ் வாராய்ச்சி நடக்கவில்லை. தொல்பொருள் ஆய்வாளர் இனியேனும் இந்த இடத்தை அகழ்ந்து ஆராய வேண்டும்.

எயிற் பட்டினம் (சோ பட்டினம்)

சங்க காலத்திலே தொண்டை நாட்டில் முக்கியத் துறைமுகப் பட்டினமாக இருந்தது எயிற் பட்டினம். இதற்குச் சோ பட்டினம் என்றும் பெயர் இருந்தது. எயில் என்றாலும் சோ என்றாலும் மதில் என்பது பொருள். இந்தத் துறைமுகப் பட்டினத்தைச் சூழ்ந்த மதில் இருந்தபடியால் இப்பெயர் பெற்றது. இது பிற்காலத்தில் மரக்காணம் என்று பெயர் பெற்றது. பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க மொழி நூல் இந்தப் பட்டினத்தைச் 'சோ பட்மா' என்று கூறுகிறது. சோ பட்மா என்பது சோ பட்டினம் என்பதன் மரூஉ.

இடைக்கழி நாட்டுநல்லூர் நத்தத்தனார் தாம் பாடிய சிறுபாணாற்றுப் படையில் இந்தப் பட்டினத்தைக் குறிப்பிடுகிறார். “மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய, பனிநீர்ப் படுவிற் பட்டினம்" (சிறுபாண். 152-153) என்று கூறுகிறார்.

‘ஓங்கு நிலை யொட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரைமா விறகு’

என்று (சிறுபாண், 154-155). இவர் கூறியபடியால் விரைமரம் (அகில் கட்டை) இங்கு இறக்குமதியான பொருள்களில் ஒன்று எனத் தெரிகிறது. இந்த விரை மரம், கடலில் இருந்து வந்தது என்று கூறுகின்றபடியால் இது சாவக நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தெரிகிறது. அகிற்கட்டை, சந்தனக் கட்டை முதலான பொருள்கள் அக்காலத்தில் சாவக நாட்டிலிருந்து வந்தன. முடிச்சு உள்ள அகில் மரக்கட்டை, படுத்துத் தூங்கும் ஒட்டகம் போன்ற உருவமாக இருந்தது என்று கூறுகிறார்.

'வாளைலுப் புரவியொடு வடவளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படைப்பை
மாடமோங்கிய மணல் மலி மறுகில்
பரதர் மலித்த பல்வேறு தெருவின்'
(பெரும்பாண், 320-323)

என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுகிறார். இதனால், இத்துறைமுகப்பட்டினத்தில் நாவாய்களில் வந்து இறங்கின பொருள்களில் குதிரைகளும் வடஇந்தியப் பொருள்களும் இருந்தன என்று கூறுகிறார். வடவளம் (வடநாட்டுப் பொருள்கள்) இன்னவை என்று இவர் கூறவில்லை. பரதர் (கப்பலோட்டிகள்) மலிந்த தெருக்கள் இங்கு இருந்தன என்று கூறுகிறபடியால் கப்பல் வாணிபம் இங்குச் சிறப்பாக நடந்தமை தெரிகிறது. இங்கிருந்த கலங்கரை விளக்கைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் சிறப்பாகக் கூறுகிறார். பட்டினப்பாலையில் காவிரிப் பூம்பட்டினத்தைப் பாடினவரும் இவரே). கடலில் ஓடுகிற கப்பல்கள் இராக் காலத்தில் துறைமுகம் உள்ள இடத்தையறிந்து கரைசேர்வதற்காகக் கலங்கரை விளக்குகள் துறைமுகங்களில் அமைப்பது வழக்கம் (கலம் = மரக்கலம், நாவாய். கரை - அழைக்கிற, கூவுகிற. விளக்கம் விளக்கு நிலையம்). எயிற் பட்டினத் துறைமுகத்திலிருந்த கலங்கரை விளக்கை இவர் இவ்வாறு கூறுகிறார்.

'வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்தியை வேற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை'
(பெரும்பாண், 346-350)

கலங்கரை விளக்கு நிலையம் உயரமான கட்டடமாக (வானம் ஊன்றிய மதலை போல) இருந்தது. அது சாந்து (சுண்ணம்) பூசப்பட்டுத் தள வரிசையுள்ளதாக (வேயாமாடமாக) இருந்தது. அதன் உச்சியில் இராக்காலத்தில் தீயிட்டு எரித்தார்கள். உச்சியில் ஏறி விளக்கு ஏற்றுவதற்கு (தீ ஏற்றுவதற்கு) ஏணிப்படிகள் இருந்தன. இவ்வாறு கலங்கரை விளக்கின் அமைப்புக் கூறப்படுகின்றது.

காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகத்திலும் அக்காலத்தில் கலங்கரை விளக்கு நிலையம் கட்டப்பட்டிருந்ததை இளங் கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். ‘இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கம்’ (கடலாடு காதை, 141) இதற்குப் பழைய அரும்பத உரையாசிரியர் பொருள் கூறுவது இது. ‘கலங்கரை விளக்கம் - திக்குக் குறிகாட்டிக் கலத்தை (நாவாய்களை) அழைக்கிற விளக்கம்’ இன்னொரு உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், ‘நிலையறியாது ஓடுங்கலங்களை அழைத்தற்கு இட்ட விளக்கு’ என்று உரை எழுதியுள்ளார்.

துறைமுகங்கள் தோறும் கலங்கரை விளக்கங்கள் கட்டப்பட்டிருந்தன. அவை உயரமாக மணல் மேட்டின் மேல் கட்டப்பட்டிருந்தன. மீகாமர் கலங்கரை விளக்கின் உதவியினால் மரக் கலங்களை இராக் காலத்தில் துறைமுகங்களுக்கு ஓட்டினார்கள். கலங்கரை விளக்குக்கு மாடவொள்ளெரி என்ற பெயரை மருதன் இளநாகனார் கூறுகிறார்.

'உலகுகிளர்ந் தன்ன உருகெழுவங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின் றாகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்
கோடுயர் திணிமணல் அகன்றுறை நீகான்
மாடவொள்ளெரி மருங்கறிந்து ஓய்யா
(அகம், 255:1-6)

இதனால் எயிற்பட்டினம் முதலான துறைமுகங்களில் கலங்கரை விளக்குகள் இருந்தமை தெரிகிறது. எயிற் பட்டினத் துறை முகத்தைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை.

அரிக்கமேடு (பொதவுகே)

எயிற் பட்டினத்துக்கு (மரக்காணத்துக்குத் தெற்கே ஒரு துறைமுகம் சங்ககாலத்தில் இருந்தது. அது இப்போதைய புதுச்சேரிக்குத் தெற்கே இரண்டு மைல் தூரத்தில் இருந்தது. அதன் பெயர் இன்னதென்று தெரியவில்லை. சங்கச் செய்யுட்களிலும் அத்துறைமுகத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இப்போது அந்த இடம் அரிக்கமேடு என்று கூறப் படுகிறது. அது கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்து வாணிகம் செய்த யவனருடைய பண்டகசாலையாக இருக்கவேண்டும் என்று சமீப காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியினால் தெரிகிறது. பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூல், தமிழ்நாட்டின் கிழக்குக் கரையில் காமராவுக்கு (காவிரிப்பூம்பட்டினத்துக்கு) வடக்கே 60 மைல் தூரத்தில் போதவுகே (Podouke) என்னும் பட்டினத்தைக் குறிக்கிறது. அந்தப் போதவுகே இந்த அரிக்கமேடாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. உரோம் சாம்ராச்சியத்தை ஆட்சிசெய்த அகுஸ்தஸ் (கி.மு. 23-க்கும் கி.பி. 14-க்கும் இடையில் அரசாண்டவன்) காலத்தில் தமிழ்நாட்டுக்கும் ரோமாபுரிக்கும் கடல் வாணிகம் விரிவாக்கப் பட்டது. அக்காலத்தில் அரிக்கமேடு, யவன வாணிகரின் பண்டக சாலையாக அமைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சங்க காலத்தின் இறுதியில் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் சிறப்பாக இருந்த இந்தத் துறைமுகம் பிற்காலத்தில் மண் மூடிமறைந்து போயிற்று. சமீப காலத்தில் 1945இல் இந்த இடம் தொல் பொருள் ஆய்வுத்துறையினரால் அகழ்ந்தெடுக்கப்பட்டு ஆராயப்பட்டது. இங்கே கிடைத்த பல பொருள்களிலிருந்து இந்த இடம் கி.பி. முதற் நூற்றாண்டில் யவனருடைய பண்டக சாலையாக இருந்தென்பது தெரிகிறது.

கி.பி. 45-க்கும் 50-க்கும் இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்டு, மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பாண்டங்களும், அம்போரெ என்னும் மது (ஒயின்) வைக்கும் சாடிகளும் இங்குக் கண்டெடுக்கப்பட்டன. இவை உடைந்து கிடந்தன. அக்காலத்து அரசர், யவனர் கொண்டு வந்த மதுபானத்தை யருந்தினார்கள் என்பது நக்கீரர் பாட்டினால் தெரிகிறது. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை அவர் இவ்வாறு வாழ்த்துகிறார்.

'யவனர், நன்கலம் தந்ததண் கமழ்தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து
ஆங்கினி தொழுகுமதி ஓங்குவாள் மாற'
(புறம், 56:18-21)

நக்கீரர், யவனர் கொண்டுவந்த 'தண் கமழ் தேறலை'க் கூறுவதற்கு ஏற்பவே யவனருடைய மதுச்சாடிகள் அரிக்கமேட்டு அகழ்வாராய்ச்சியில் அகப்பட்டுள்ளன.

சிவப்புக் களிமண்ணால் செய்யப்பட்ட யவன விளக்கின் உடைந்த துண்டுகளும் அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்டன. சங்க லக்கியங்களிலே யவன விளக்குகள் கூறப்படுகின்றன. யவன விளக்கை நக்கீரர் கூறுகிறார்.

‘யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையேந் தையகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉத் திரி கொளீய குரூஉத்தலை நிமிர்ஒளி’
(நெடுநல்வாடை, 101-103)

என்று பாவை விளக்கைக் கூறுகிறார்.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் 'யவனர் ஓதிம விளக்’கைக் கூறுகிறார். ஓதிம விளக்கு என்பது அன்னப்பறவையின் உருவம் போன்றது. மீன்குத்திப் பறவை வேள்வித் துணிகள் மேல் அமர்ந்திருப்பது ‘யவனருடைய ஓதிம விளக்கு' போல இருந்தது என்று உருத்திரங்கண்ணனார் கூறுகின்றார் (பெரும்பாணாற்றுப் படை, 311-318). ஆனால் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த யவனர் விளக்குத்துண்டு யவனருடைய பாவை விளக்கும் அன்று; ஓதிம விளக்கும் அன்று. அது சாதாரணமான கைவிளக்கின் உடைந்த பகுதி. இந்த விளக்கு கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்டது.

அரிக்கமேடு துறைமுகப் பண்டகசாலை கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்தது என்பதற்கு மற்றொரு சான்று. அங்குக் கிடைத்த மட்பாண்ட ஓட்டில் எழுதியுள்ள பிராமி எழுத்துகள் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட அக்காலத்து மட்பாண்டங்களின் உடைந்த ஓடுகள் அங்குக் கிடைத்தன. அவ்வோடுகளில் சிலவற்றின் மேல் பிராமி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. பிராமி எழுத்துக்கள் கடைச்சங்க காலத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தன. அரிக்கமேட்டில் கிடைத்த பானையோடுகளில் பிராமி எழுத்து எழுதப்பட்டிருப்பதனால் அவை கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட பானைகள் என்பது தெரிகின்றது. இவ்வாறு, அரிக்கமேடு கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்த துறைமுகப் பண்டக சாலை என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. இது பற்றி விரிவாக அறிய விரும்புவோர், 'ஏன்ஷியன்ட் இந்தியா' என்னும் வெளியீட்டின் இரண்டாவது எண்ணில் (பக்கம் 17 முதல் 124) கண்டு கொள்க.2

காவிரிப்பூம்பட்டினம்

சங்க காலத்திலே சோழ நாட்டில் காவிரியாறு கடலில் கலக்கிற புகர்முகத்தில் இருந்த காவிரிப்பூம்பட்டினம் அக்காலத்திலே உலக புகழ் பெற்றிருந்தது. காவிரிப்பூம்பட்டினத்துக்குப் புகார் என்னும் பெயர் உண்டு. பழைய பௌத்த மத நூல்களில் இது கவீரபட்டனம் என்று பெயர் கூறப்படுகிறது. காகந்தி என்றும் இதற்கு ஒரு பழைய பெயர் உண்டு. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் உரோமபுரியிலிருந்து யவன வணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். தூரக் கிழக்கிலிருந்தும் சாவக நாட்டிலிருந்தும் வட இந்தியாவிலிருந்தும் கப்பல் வாணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். சோழ நாட்டுக் கப்பல் வாணிகர் இந்தத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சாவக நாடு, காழகம், கங்கைத் துறைமுகம் முதலான இடங்களுக்குச் சென்று வாணிகம் செய்தார்கள். பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூலில் இந்தத் துறைமுகம் கமரா என்று கூறப்படுகிறது. கமரா என்பது காவிரிப்பூம்பட்டினம் என்பதன் சுருக்கமாகும். தாலமி என்னும் கிரேக்க யவனர் இத்துறைமுகத்தைச் சபரிஸ் துறைமுகம் என்று கூறுகின்றார். சபரீஸ் என்பது காவிரி என்பதன் திரிபு.

சோழநாட்டின் முக்கியமான துறைமுகப்பட்டினமாகையால் காவிரிப்பூம்பட்டினத்தில் சோழ இளவரசர்கள் வாழ்ந்திருந்தார்கள். கரிகாற் சோழனுக்குப் பிறகு இருந்த கிள்ளிவளவன் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்தான். இவன் காலத்தில் இப்பட்டினத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காவியங்களின் தலைவர் களான கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோர் வாழ்ந்திருந்தார்கள். பேர் போன பௌத்த மதத் தலைவராகிய அறவண அடிகளும் அக்காலத்தில் இப்பட்டினத்தில் இருந்தார்.

காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர் முகத்தில் அவ்வாற்றின் வடகரைமேல் காவிரிப்பூம்பட்டினம் அமைந்திருந்தது. இப் பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரண்டு கூறாகப் பிரிந்திருந்தது. இரண்டு பிரிவுக்கும் இடை நடுவில் நாளங்காடி என்னும் தோட்டம் இருந்தது. கடற்கரையோரமாகக் காவிரி ஆற்றின் கரைமேல் கலங்கரை விளக்கம் அமைந்திருந்தது. கலங்கரை விளக்குக்கு அருகில் கப்பல்கள் வந்து தங்கிய துறைமுகம் இருந்தது. இங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களுக்குச் சோழ அரசனுடைய அலுவலர்கள் சுங்கம் வாங்கினார்கள். சுங்கம் வாங்கினதற்கு அடையாளமாக அப்பொருள்களின் மேலே சோழ அரசனுடைய புலி முத்திரையைப் பொறித்தார்கள். இதைப் பட்டினப்பாலை கூறுகிறது.

நல் இறைவன் பொருள் காக்கும், தொல்லிசைத் தொழில் மாக்கள்........ வைகல் தொறும் அசைவின்றி, உல்கு செயக்குறை படாது........ நீரினின்றும் நிலத்தேற்றவும், நிலத்தினின்று நீர்ப்பரப்பவும், அளந்தறியாப் பல பண்டம், வரம்பறியாமை வந்தீண்டி, அருங்கடிப் பெருங் காப்பின் வலியுடை வல்லணங்கினோன், புலி பொறித்துப் புறம் போக்கி, மதி நிறைந்த மலி பண்டம்” (பட்டினப்பாலை, 120-136) (உல்கு - சுங்கவரி)

காவிரியாற்றின் முகத்துவாரம் ஆழமாகவும் அகலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கு ஏற்றதாகவும் இருந்தது. வாணிகக் கப்பல்கள் பாய்களைச் சுருட்டாமலும் பாரத்தைக் கழிக்காமலும் நேரே ஆற்றினுள் புகுந்து துறைமுகத்தையடைந்தன.

'கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம், தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியுங்
கடற்பல தாரத்த நாடுகிழ வோயே'
(புறம்:30)

என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்கிறார். துறைமுகத்தில் வந்து தங்கிய நாவாய்கள் (கப்பல்கள்), யானைப்பந்தியில் நிற்கும் யானைகள் அசைந்து கொண்டு நிற்பனபோல, அசைந்து கொண்டிருந்தன. பாய் மரத்தின் மேலே கொடிகள் பறந்தன.

'வெளில் இளங்கும் களிறு போலத்
தீம்புகார்த் திரை முன்துறைத்
தூங்கு நாவாய் துவன்றிருக்கை
மிசைக் கூம்பின் நசைக் கொடி'
(பட்டினப்பாலை, 172-175)

துறைமுகத்தை யடுத்த மருவூர்ப்பாக்கத்தில் அயல்நாடுகளிலிருந்து கப்பல் ஓட்டி வந்த மாலுமிகளும், கப்பலோட்டிகளும் கடற்கரைப் பக்கத்தில் தங்கியிருந்தார்கள். அவர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்தபடியால் வெவ்வேறு மொழிகளைப் பேசினார்கள். அவர்களில் யவனரும் (கிரேக்கர்) இருந்தார்கள்.

'மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்'
(பட்டினப்பாலை, 216-218)

என்று பட்டினப்பாலை கூறுகின்றது.

'கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பு’
(5:11-12)

என்று சிலப்பதிகாரமுங் கூறுகின்றது. (கலம் - மரக்கலம், புலம் பெயர் மாக்கள் – அயல்நாடுகளிலிருந்து வந்த கப்பலோட்டிகள்)

'கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள்
வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பு'
(சிலம்பு, 6:130-131)

(கலம் - மரக்கலம், நாவாய். புலம் பெயர் மாக்கள் - வெளி நாட்டிலிருந்து வந்த கப்பலோட்டிகள். வாலுகம் - மணல்). இவர்களைமணிமேகலை, “பரந்தொருங்கீண்டிய பாடைமாக்கள்” என்று கூறுகின்றது (1:16) அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் இரவு முழுவதும் விளக்கு எரிந்தது. “மொழி பெயர்தே எத்தோர் ஒழியா விளக்கம்” (சிலம்பு, 6:143) (ஒழியா விளக்கு விடிவிளக்கு) வெளிநாட்டுக் கப்பலோட்டிகளோடு யவனர்களும் (கிரேக்க ரோமர்) தங்கியிருந்தார்கள்.

'கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்’
(சிலம்பு, 5:9-10)

இப்படிப்பட்ட சிறந்த பட்டினத்தில் தமிழ்நாட்டுக் கப்பல் வாணிகர் பலர் இருந்தார்கள். பல கப்பல்களையுடைய பெரிய கடல் வாணிகருக்கு மாநாவிகர் என்று பெயர் கூறப்பட்டது. (நாவிகர் - கப்பலையுடையவர். நாவாய் - கப்பல்). மாநாவிகர் என்னும் சொல் திரிந்து மாநாய்கர் என்று வழங்கப்பட்டது. கண்ணகியின் தந்தை ஒருமாநாவிகன் (மாநாய்கன்). கோவலனுடைய தந்தை ஒரு பெரிய மாசாத்துவன் (சாத்து வாணிகச் - சாத்து, வாணிகக் குழு, தரை வாணிகக் குழுவுக்குச் சாத்து என்பது பெயர். சாத்து வாணிகன் ஆகையால் மாசாத்துவன் எனப்பட்டான்). அந்தக் காலத்திலே காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் வந்து றங்கின பொருள்களைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகிறார். இந்தப் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து கடல் வழியாகக் கப்பல்களில் வந்தவை.

'நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
 காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு’
(பட்டினப்பாலை 185-193)

இவற்றை ஆராய்வோம். பரிப்புரவிகள் (குதிரைகள்) கடல் வழியாகக் கப்பல்களில் வந்து இறங்கின. குதிரை தமிழ்நாட்டுக்கோ அல்லது பாரத நாட்டுக்கோ உரிய விலங்கு அன்று. அவை பாரசீகம், சிந்து தேசம் முதலான நாடுகளிலிருந்து கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டவை. அக்காலத்து அரசர்கள் நான்கு வகையான படைகளை வைத்திருந்தார்கள். அப்படைகளில் குதிரைப்படையும் ஒன்று. தேர்ப்படைக்கும் குதிரை தேவைப்பட்டது. ஆகவே வெளிநாடுகளிலிருந்து குதிரைகள் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டன. காவிரிப்பூம்பட்டினத்தில் குதிரைகளும் இறக்குமதியாயின என்பது இதனால் தெரிகின்றது. தமிழ் வாணிகர் குதிரைகளை இலங்கைக்குக் கொண்டு போய் விற்றார்கள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சேனன், குட்டகன் என்னும் இரண்டு தமிழர் இலங்கையரசனை வென்று இருபது ஆண்டு இலங்கையை யரசாண்டார்கள் என்றும் அவர்கள் அஸ்ஸ (அசுவ அசுவம் குதிரை) வாணிகனின் மக்கள் என்றும் மகாவம்சம் என்னும் சிங்கள் நாட்டு வரலாற்று நூல் கூறுகின்றது. சூரதிஸ்ஸன் என்னும் சிங்கள அரசன் இலங்கையை அரசாண்ட காலத்திலே சேனன், குட்டகன் என்னும் பெயருள்ள இரண்டு தமிழர் சூரதிஸ்ஸனை வென்று அரசாட்சியைக் கைப்பற்றி அனுராதபுரத்திலிருந்து நீதியோடு இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டார்கள். இவர்கள் அஸ்ஸ (அசுவ) நாவிகனின் மக்கள் என்று மகாவம்சம் (XXI: 10-11) கூறுகிறது. இவர்கள் கி.மு. 177 முதல் 155 வரையில் இலங்கையை அரசாண்டார்கள்.

காலின் வந்த கருங்கறி மூடையும் என்பது காற்றின் உதவியினால் கப்பல்களில் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட கறி (மிளகு) மூட்டை. அக்காலத்தில் சிறந்த மிளகு சேர நாட்டு மலைச்சரிவுகளில்தான் உண்டாயிற்று. அதற்கு அடுத்தபடியாகச் சாவக நாட்டில் (ஜாவா சுமத்ரா தீவுகளில்) மிளகு உண்டாயிற்று. ஆனால், சாவக நாட்டு மிளகு சேர நாட்டு மிளகைப்போல அவ்வளவு சிறந்ததன்று. சேர நாட்டு மிளகை யவனர்கள் பெரிய நாவாய்களில் வந்து பெருவாரியாக வாங்கிக் கொண்டு போன படியால் அது பற்றாக்குறைப் பொருளாக இருந்தது. ஆகவே கிழக்குக் கரைப்பக்கத்திலிருந்த சோழ நாட்டு வாணிகர் சாவக நாட்டிலிருந்து மிளகைக் கொண்டு வந்து விற்றார்கள். இந்த மிளகைத்தான் 'காலின் வந்த கருங்கறி மூடை' என்று கூறப் பட்டது. (கால் - காற்று, காலின் வந்த – காற்றின் உதவியினால் கப்பலில் வந்த)

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் என்பன இமயமலைப் பக்கத்தில் கிடைத்த மணியும் பொன்னும். இவை வட இந்தியாவிலிருந்து கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடலில் வந்தவை. குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் என்பன மேற்குத் தொடர்ச்சி மலைகளில் (சைய மலைகள்) உண்டான சந்தனக் கட்டை, அகிற் கட்டையாகும். இதைத் தெய்வங்களுக்கும் மகளிர் கூந்தலை உலர்த்துவதற்கும் அக்காலத்தில் பெரிதும் உபயோகப்பட்டவை. சந்தனம் சாந்தாக அரைக்கப்பட்டு உடம்பில் பூசப் பட்டது. இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கிடைத்தன. (இவையல்லாமல் ஆரமும் அகிலும் சாவக நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்டன.)

தென்கடல் முத்து என்பது பாண்டி நாட்டுக் கடல்களில் (கொற்கை, குமரி முதலான இடங்களில்) உண்டான முத்து. பாண்டி நாட்டுக் கொற்கை முத்து உலகப் புகழ் பெற்றது.

குணகடல் துகிர் என்பது கிழக்குக் கடலில் உண்டான பவழம். (துகிர் - பவழம், குணகடல் - கிழக்குக் கடல்) சாவக நாட்டில், பசிபிக் மாக்கடல்களில் பவழப் பூச்சிகளால் உண்டான பவழங்கள் அந்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. (இவை யல்லாமல் மத்திய தரைக் கடலில் உண்டான பவழங்களை யவன வாணிகரும் மேற்கிலிருந்து கொண்டு வந்தனர்)

கங்கை வாரி என்பது வடக்கே கங்கையாற்றங்கரை மேலிருந்த பாடலிபுரம், வாரணாசி (காசி) முதலான ஊர்களிலிருந்துகொண்டு வரப்பட்ட பொருள்கள். அப்பொருள்களின் பெயர் கூறப்படவில்லை. காவிரிப் பயன் என்பது காவிரியாறு பாய்கிற சோழநாட்டுப் பொருள்கள். இவை உள்நாட்டுப் பொருள்கள். இவற்றின் பெயர் கூறப்படவில்லை. இவை ஏற்றுமதிக்காக இத்துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

ஈழத்து உணவு என்பது இலங்கையில் உண்டான உணவுப் பொருள்கள் (ஈழம் - இலங்கை). அந்த உணவுப் பொருள்களின் பெயரும் தெரியவில்லை.

காழகத்து ஆக்கம் என்பது காழகத்து (பர்மா தேசம்) பொருள்கள். இவற்றின் பெயரும் கூறப்படவில்லை. அரியவும் பெரியவும் என்பது தமிழ்நாட்டில் கிடைத்ததற்கு அருமை யானவையும் விலையுயர்ந் தவை யும் ஆன பொருள்கள்.

இவ்வாறு பல அயல்நாட்டுப் பொருள்கள் காவிரித் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டன என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன.

‘மலைப்பஃறாரமும் கடற்பஃ றாரமும்
வளம் தலை மயங்கிய துளங்குகல இருக்கை'

என்று சிலம்பு (6:153-155) கூறுகிறது. (தாரம் - பண்டங்கள்) மலையில் உண்டாகும் பொருள்களும் கடலில் உண்டாகும் பொருள் களும் இத்துறைமுகத்தில் இறக்குமதியாயின.

இவ்வாறு வாணிகப் புகழ் பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம், கி.பி. ரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயற்காற்றடித்து வெள்ளப் பெருக்கெடுத்து நீரில்முழுகிவிட்டதை மணிமேகலை கூறுகிறது. ஆனால் இப்பட்டினம் அடியோடு முழுகிவிடவில்லை. வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் இப்பட்டினம் நெடுங்காலம் பேர் பெற்றிருந்தது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இருந்த பட்டினத்து அடிகள் (பட்டினத்துப் பிள்ளையார்) காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர். அவர் துறவி யாவதற்கு முன்பு இப்பட்டினத்தில் பேர் போன கப்பல் வாணிகனாக (மாநாய்கனாக) இருந்தார். பிற்காலச் சோழர் காலத்திலும் காவிரிப்பூம்பட்டினம் பேர் பெற்றிருந்தது. பிறகு இப்பெரிய பேர் போன பட்டினம் சிறப்புக்குன்றிச் சிறிது சிறிதாகப் பெருமை குறைந்து இப்போது குக்கிராமமாக இருக் கிறது. இங்கு அண்மையில் தொல்பொருள் துறை ஆய்வாளர் நிலத்தை யகழ்ந்து பார்த்த போது பல பழம்பொருள்கள் கிடைத்தன. அவை இப்பட்டினத்தின் பழங்காலச் சிறப்புக்குச் சான்றாக இருக்கின்றன.

தொண்டித் துறைமுகம்

சங்க காலத்திலே கிழக்குக் கரையிலும் மேற்குக் கரையிலும் இரண்டு தொண்டிப் பட்டினங்கள் இருந்தன. இரண்டும் துறைமுகப் பட்டினங்கள். ஒரு தொண்டி சேரநாட்டில் மேற்குக் கடற்கரையில் இருந்தது; மற்றொரு தொண்டி பாண்டிநாட்டில் கிழக்குக் கடற்கரையில் இருந்தது. இந்தத் தொண்டி கிழக்குக் கரையிலிருந்த பாண்டி நாட்டுத் தொண்டியாகும். கடைச் சங்க காலத்துப் புலவரான அம்மூவனார் ஐங்குறு நூற்றில் நெய்தற்றிணையில் தொண்டிப் பத்து என்னும் தலைப்பில் பத்துச் செய்யுட்களைப் பாடியுள்ளார். அது சேர நாட்டுத் தொண்டி அந்தப் புலவரே அகநானூறு பத்தாம் செய்யுளில் பாண்டி நாட்டுத் தொண்டியைப் பாடியுள்ளார். இந்தத் தொண்டியை இவர் இவ்வாறு கூறுகிறார்.

'கொண்ட லொடு
குரூஉத் திரைப் புணரி யுடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி’
(அகம்.10:8-13)

கிழக்குக் கடலிலிருந்து வீசுகிற கடற்காற்றுக் கொண்டல் காற்று என்பது பெயர். இந்தத் தொண்டி கிழக்குக் கடற்கரையிலிருந்தது என்பதைக் கொண்டல் காற்று வீசுகிற தொண்டி என்று கூறுவதிலிருந்து அறிகிறோம். இந்தத் தொண்டி பாண்டி நாட்டில் இப்போதைய இராமநாதபுர மாவட்டத்தில் இருந்தது என்று தோன்றுகிறது.

இந்தத் தொண்டித் துறைமுகத்தைச் சிலப்பதிகாரக் காவியமும் கூறுகின்றது. கடல் கடந்த நாடுகளிலிருந்து அகிற் கட்டை, சந்தனக் கட்டை, பட்டுத் துணி, சாதிக்காய், இலவங்கம், குங்குமப்பூ, கருப்பூரம் முதலான வாசனைப் பொருள்களை ஏற்றி வந்த நாவாய்கள் கொண்டல் காற்றின் உதவியினால் தொண்டித் துறைமுகத்துக்கு வந்ததையும் இறக்குமதியான அந்தப் பொருள்களைத் தொண்டியிலிருந்து பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு அனுப்பப்பட்டதையும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

‘ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
 தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியரசு’.
(ஊர் காண் காதை, 106-112)

இங்குக் குறிப்பிடப்பட்ட பொருள்கள் எல்லாம் கிழக்குக் கடலுக்கப்பால் கீழ்க்கோடி நாடுகளிலிருந்து வந்தவை. இந்தக் காலத்தில் இந்தோனேஷியா என்றும், கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் கூறப்படுகின்ற தீவுகள் அந்தக் காலத்தில் சாவக நாடு என்று கூறப்பட்டன. இங்குக் கூறப்பட்ட பொருள்கள் எல்லாம் அந்தக் காலத்தில் சாவக நாட்டுக்கேயுரியவை. இப்பொருள்கள் அந்தக் காலத்தில் வேறு எங்கும் கிடைக்காதவை. கீழ்க்கடல் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டுத் தொண்டித் துறைமுகத்தில் இறக்குமதியான பொருள்கள் அகில், துகில், ஆரம், வாசம், கருப்பூரம் முதலானவை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இவற்றை விளக்கிக் கூறுவோம்.

அகில்

இது ஒருவகை மரத்தின் கட்டை. நெருப்பில் இட்டுப் புகைக்கப்படுவது; புகை மணமாக இருக்கும். கோவில்களில் தெய்வங்களுக்கு நறுமணம் புகைக்கவும், மகளிர் கூந்தலுக்குப் புகைத்து மணமேற்றவும் மற்றும் சிலவற்றுக்கும் உபயோகிக்கப்பட்டது. அகில் மரங்கள் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் இருந்தன. ஆனால் சாவக நாட்டு அகில் தரத்தில் உயர்ந்தது, பேர் போனது. கிழக்குக் கோடி நாடுகளிலிருந்து வந்த காரகில் சிறந்தது என்பதைச் சிலப்பதிகாரம் “குணதிசை மருங்கில் காரகில்” என்று (சிலம்பு, 4:36) கூறுகின்றது. துகில்

துகில்

துகில் என்பது இங்குப் பட்டுத் துணிகளைக் குறிக்கிறது. சங்க காலத்தில் பட்டுத் துணிகள் சீன நாட்டில் மட்டும் கிடைத்தன. அக் காலத்தில் பட்டு வேறு எங்கும் கிடைக்கவில்லை. சீன நாட்டு வாணிகர் பட்டு முதலான பொருள்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்து சாவக நாட்டில் (கிழக்கிந்தியத் தீவுகளில்) விற்றார்கள். அக்காலத்தில் சீனர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. சாவக நாட்டோடு நின்றுவிட்டார்கள். அவர்கள் சாவக நாட்டுக்குக் கொண்டு வந்த பட்டுகளைத் தமிழ்நாட்டு வாணிகர் அங்கிருந்து கொண்டு வந்து தமிழ்நாட்டில் விற்றார்கள். தமிழ் நாட்டிலிருந்து பட்டுத் துணியை மேல்நாட்டு வாணிகர் வாங்கிக் கொண்டு போய் மேற்கு நாடுகளில் விற்றார்கள்

ஆரம்

ஆரம் என்பது சந்தனம். சந்தன மரம் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை (சய்ய மலை)களிலும் உண்டாயிற்று. ஆனால் இந்தச் சந்தனத்தைவிடச் சாவக நாட்டுச் சந்தனம் தரத்திலும் மணத்திலும் உயர்ந்தது. அது வெண்ணிறமாக இருந்தது. அகிற்கட்டையைப் போலவே சந்தனக் கட்டையும் சாவக நாட்டிலிருந்து அக்காலத்தில் இங்கு இறக்குமதி யாயிற்று.

வாசம்

வாசம் என்பது வாசனைப் பொருள்கள். அவை கிராம்பு (இலவங்கம்), குங்குமப்பூ, தக்கோலம், சாதிக்காய் முதலியவை. இந்த வாசப் பொருள்கள் அக்காலத்தில் சாவக நாட்டில் மட்டும் உண்டாயின; வேறெங்கும் இவை அக்காலத்தில் கிடைக்கவில்லை.

கருப்பூரம்

கருப்பூரம் என்பது சாவக நாட்டில் சில இடங்களில் உண்டான ஒருவகை மரத்தின் பிசின். கருப்பூரத்தில் பலவகையுண்டு. ஆகையினால் இது ‘தொடு கருப்பூரம்’ என்று கூறப்பட்டது. கருப்பூர வகைக்குப் பளிதம் என்றும் பெயர் உண்டு. ஒருவகைப் பளிதம் தாம்பூலத்துடன் அருந்தப்பட்டது. அது மணமுள்ளது, விலையுயர்ந்தது.

கிழக்குக் கடற்கோடியில் கடல் கடந்த சாவக நாட்டுத் தீவுகளில் உண்டான இந்தப் பொருள்கள் தொண்டித் துறைமுகத்தில் இறக்குமதி யானதைச் சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து அறிகிறோம். தொண்டித் துறைமுகத்தைப் பற்றி நாம் அறிவது இவ்வளவுதான்.

‘தொண்டியோர்’ என்பதற்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் தம்முடைய உரையில் ‘சோழ குலத்தோர்’ என்று உரை எழுதுகிறார். இது தவறு என்று தோன்றுகின்றது. தொண்டி இவர் காலத்தில் சோழர் ஆட்சிக்குக் கீழடங்கியிருக்கக்கூடும். ஆனால், சிலப்பதிகாரக் காலத்தில் தொண்டி, கூடல் (மதுரை) அரசனாகிய பாண்டியனுக்குக் கீழடங்கியிருந்தது. தொண்டியில் பாண்டிய குலத்து அரசன் ஒருவன் இருந்தான் என்று தோன்று கிறது. பாண்டி நாட்டின் முக்கியத் துறைமுகமாகிய கொற்கையில் பாண்டிய குலத்து இளவரசன் இருந்து போலவே, தொண்டித் துறைமுகப் பட்டினத்திலும் ஒரு பாண்டிய இளவரசன் இருந்திருக்கக் கூடும்.

தொண்டித் துறைமுகப் பட்டினம் பிற்காலத்தில் சிறப்புக் குன்றி இக்காலத்தில் குக்கிராமமாக இருக்கிறது.

மருங்கூர்ப் பட்டினம்

மருங்கூர்ப் பட்டினம் மருங்கை என்றும் கூறப்பட்டது. இது பாண்டி நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த துறைமுகம். பாண்டி நாட்டுப் புலவரான நக்கீரர், காயல்களும் (உப்பங்கழிகள்) தோட்டங்களும் உள்ள மருங்கூர்ப் பட்டினத்தின் கடைத்தெரு செல்வம் கொழித்திருந்தது என்று கூறுகின்றார்.

'விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து
எல்லுமிழ் ஆவணம்'
(அகம், 227:19-21)

அங்காடியில் குவித்து வைத்திருந்த இறால்களைக் கவர்ந்து கொண்டு போய்க் காக்கைகள் துறைமுகத்தில் நிற்கும் கப்பல்களின் பாய்மரக் கம்பத்தில் அமர்ந்து தின்றன என்றும் அவர் கூறுகிறார்.

"அகலங்காடி யசை நிழல் குவித்
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினம்'
(நற்றிணை, 258:7-10)

மருங்கூர்ப் பட்டினத்துக்கு மேற்கே அதைச் சார்ந்து ஊணூர் என்னும் ஊர் இருந்தது. ஊணூர் மதில் அரண் உடையதாக இருந்தது.

“கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினம்
(அகம், 227:18-20)

ஊணூரைச் சூழ்ந்து நெல்வயல்கள் இருந்தன. 'முழங்குகடல், ஓதம் காலைக் சொட்கும் பழம்பல் நெல்லின் ஊணூர்' என்று மருதன் இளநாகனார் (அகம் 220) கூறுகிறார்.

சோழநாட்டிலிருந்த பேர் போன காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகப் பகுதி மருவூர்ப்பாக்கம் என்றும் நகர்ப்பகுதி பட்டினப் பாக்கம் என்றும் இருகூறாகப் பிரிந்திருந்ததுபோல இவ்வூரும் மருங்கூர்ப் பட்டினம், ஊணூர் என்று இருகூறாகப் பிரிந்திருந்தன. காவிரிப்பூம் பட்டினத்தின் பட்டினப்பாக்கம் மதிலையும் அகழியையும் கொண்டிருந்தது போல ஊணூரும் மதில் சூழ்ந்திருந்தது.

மருங்கூரும் ஊணூரும் சேர்ந்து நெல்லூர் அல்லது சாலியூர் என்று பெயர் பெற்றிருந்தது என்பதை மதுரைக் காஞ்சியினால் அறிகிறோம். தாலமி என்னும் கிரேக்கர்கள் கூறுகிற சாலூர் (Salour) என்பது இந்தச் சாலியூர் ஆகும். மதுரைக் காஞ்சி இந்த நெல்லூரின் துறைமுகத்தைக் கூறுகிறது. தொடுவானம் பொருந்திய அச்சந்தருகின்ற பெரிய கடலிலே (அக்கரைத் தீவுகளிலிருந்து) அலைகளைக் கிழித்துக் கொண்டு காற்றின் உதவியினால் இக்கரையை யடைவதற்குப் பாய்களை விரித்துக் கொண்டு வந்த பெரிய நாவாய்கள் இந்தத் துறைமுகத்திலே கூட்டமாக வந்து தங்கின. நாவாய்களிலிருந்து பண்டங்களை இறக்குமதி செய்த போது முரசு முழங்கிற்று. கப்பல்கள் துறைமுகத்தில் தங்கியிருந்த காட்சியானது வெள்ளத்தை முற்றுகை செய்யும் மலைபோலத் தோன்றிற்று. இப்படிப்பட்ட வாணிக வளமுள்ள சாலியூரைக் (நெல்லூரை) கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன்' என்று பொருளுள்ள செய்யுளைக் கூறுகின்றது மதுரைக் காஞ்சி:

வான் இயைந்த இருமுந்நீர்ப்
பேஎ நிலைஇய பெரும் பௌவத்துக்
கொடும் புணரி விலங்கு போழக்
 கடுங் காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை எடுத்து
இன்னிசைய முரசம் முழங்கப்
பொன் மலிந்த விழுப் பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருநாவாய்
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங்கிருக்கைத்
தெண்கடற் குண்டகழிச்
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ'
(அடி 75-88)

பாண்டி நாட்டுக் கடற்கரை வளத்தையும் வாணிகத்தையும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் கூறுகிறார்.

கடலில் உண்டான முத்துக்களும் சங்குகளை அறுத்து உண்டாக்கின வளைகளும், கப்பல் வாணிகர் கொண்டு வந்த நவதானியங்களும், மீன்களை உப்பிட்டுப் பதப்படுத்திய உப்புக் கண்டங்களும் (கருவாடு) ஆகியவற்றை நாவாய்களில் ஏற்றிக் கொண்டு போய் அயல்நாடுகளில் விற்று அங்கிருந்து குதிரை முதலான பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்ததைக் கூறுகிறார்.

‘முழங்கு கடல் தந்த விளங்குகதிர் முத்தம்
அரம் போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறை இய துடிக்கட் டுணியல்
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோடனைத்தும்
 வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
(மது.கா.315-324)

கொற்கை

மருங்கூர்ப் பட்டினத்துக்குத் தெற்கே கொற்கைக் குடாக் கடலும் அதன் மேற்குக் கரையில் கொற்கைப் பட்டினமும் இருந்தன. கொற்கையை, பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூல் கொல்கிஸ் (Kolkius) என்று கூறுகின்றது. தாலமியும் இதைக் கூறுகிறார். கொற்கைக் குடாக் கடல் அக்காலத்தில் நிலத்தின் உள்ளே ஐந்து மைல் ஊடுருவியிருந்தது. இங்கு முத்துச் சிப்பிகளும் சங்கு வளைகளும் உண்டாயின. கொற்கை முத்து உலகப் புகழ்பெற்றது. கொற்கைக் குடாக் கடலில் அக்காலத்தில் தாமிர பரணி ஆறு சென்று விழுந்தது. அந்த ஆற்றின் கரைமேல் கடற் கரைப் பக்கத்தில் பேர் போன கொற்கைப் பட்டினம் இருந்தது. இங்குப் பாண்டிய இளவரசன் இருந்தான். கி.பி.10-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கொற்கைக் குடாக் கடல் மண் தூர்ந்துடைய மறைந்து போய் இப்போது நிலமாக மாறிவிட்டது. கொற்கைக் குடாக்கடல் நிலமாக மாறிப் போனதற்குக் காரணம், தாமிரபரணி ஆறு அடித்துக் கொண்டு வந்த மணலும் கடல் அலை அடித்துக் கொண்டு வந்த மணலும் ஆக இரண்டு புறத்திலும் மணல் தூர்ந்தபடியினால்தான். மணல் தூர்ந்தது வெகுகாலமாக நடந்து கொண்டு வந்து கடைசியில் கடலே மறைந்து போயிற்று. கொற்கைப்பட்டினம் இருந்த இடம் இப் போது கடற்கரைக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் மாற மங்கலம் என்னும் பெயர் பெற்றிருக்கின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொற்கையிலிருந்த பாண்டிய இளவரசன் வெற்றிவேற்செழியன்.

கொற்கைப் பட்டினம் துறைமுகப்பட்டினமாக இருந்ததுமல்லாமல், அங்கு முத்துக்களும் சங்குகளும் விற்கப்பட்டன. கொற்கைக் கடலில் முத்துச் சிப்பிகளும் சங்குகளும் உண்டான படியால் இங்கு முத்துக்களும் சங்குகளும் கிடைத்தன.

குமரி

இது பாண்டி நாட்டின் தெற்கே குமரிக் கடலில் இருந்தது. கன்னியாகுமரி என்றுங் கூறப்படும். இது துறைமுகப்பட்டினமாகவும் புண்ணியத் தீர்த்தமாகவும் இருந்தது. இந்தத் துறை முகத்தைத் தாலமி, பெரிப்ளூஸ் என்னும் கிரேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொமரா, கொமராய், கொமரியா என்று அவர்கள் குமரியைக் கூறியுள்ளனர். இத் துறைமுகத்தைக் 'குமரியம் பெருந்துறை' என்று மணிமேகலை கூறுகின்றது. பாண்டியனைக் 'கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்' என்று சிலம்பு கூறுகின்றது. பிற்காலத்தில் இராமேசுவரம் புண்ணிய தீர்த்தமாகக் கருதப்படுவதற்கு முன்பு கொற்கைத் துறை புண்ணிய தீர்த்தமாகக் கருதப்பட்டு, கங்கையில் நீராடினவர் குமரிக்கு வந்து நீராடிச் சென்றார்கள். பிற்காலத்தில் இந்தத் துறைமுகத்துக்கு வாணிகக் கப்பல்கள் வருவது நின்று போயிற்று. கொற்கைத் துறைமுகத்துக்கு அப்பால் கொற்கை என்னும் ஊர் இருந்ததென்றும், அங்குக் கோட்டைகள் அமைந்திருந்தன வென்றும், அங்கு ஒரு கப்பல் தொழிற் சாலையிருந்ததென்றும் பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க மொழி நூல் கூறுகின்றது.

அடிக்குறிப்புகள்

1. (Hoard of Roman Coins in a pot Latest recond of Coin of Antonius piu (S.A.D. 161) Asiatic Researches. II (1970. P.P. 331-32).

2. Arikamedu; (An Indo - Roman Trading - Station on the east coas of India'. PP.17 - 124. Ancient India. Number 2. July 1946).