உள்ளடக்கத்துக்குச் செல்

மருமக்கள்வழி மான்மியம்/கேலிப்‌ படலம்‌

விக்கிமூலம் இலிருந்து

3. கேலிப் படலம்

என்மகன் சாமி, ஏதோ ஒருநாள்,
அத்தை மகளென விளையாட்டாகவோ,
வேண்டு மென்றோ, 'வீர லெச்சுமி!
குலுக்கை[1] போலக் குறுகிப் போனாயே!
எருமை போல இளைத்துப் போனாயே! 5
பனந்தூர்[2] போலப் பாறிப் போனாயே!
வயிற்றில் உனக்கு மடிப்புகள் எத்தனை?
இன்னும் சிலநாள் இங்கிருப் பாயேல்,
வாசலும் வேறு மாற்றவே வேண்டும்.
குதிலும்[3] வெளியாய்க் கொஞ்ச நாளாச்சுதே! 10
பத்தய நெல்லும் பாதி யாச்சுதே!
நீங்களும் வந்து நெடுநா ளாச்சுதே!
இந்த ஆடி முழுதுமிங் கிருந்து
புதுநெல் வரினும் போகமாட் டீரோ?

நல்லது நல்லது, நல்லது அம்மா! 15
தின்பவ னெல்லாம் தின்பான் போவான்.
திருக்கணங் குடியான் தெண்ட மிறுப்பான்.[4]
அவியல் பொரியல் துவையல் தீயல்
பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி
சாம்பார் கூட்டுத் தயிர்ப்புளி சேரி[5] 20
சேனை[6] ஏத்தன் சேர்த்தெரி சேரி
பருப்பு பப்படம் பாயசம் பிரதமன்[7]
பழமிவை யோடு படைப்புப் போட[8]
எத்தனை நாளைக் கெங்களால் ஏலும்?
அரசனும் கூட ஆண்டியா வானே! 25
இப்படி உண்மை யிருக்க, 'யாவும்
மக்களுக் காக வாரிக் கொடுத்தான்.
கடன்கள் வாங்கினான், கைச்சீட் டெழுதினான்,[9]

ஒற்றிக் கோடுத்தான்'[10] என்றுன் பெற்றோர்
எங்கள் ஐயாவைத்[11] தூற்றுவ தெல்தாம் 30
உணர்வில்லாமல் உளறுவ தல்லவோ?'
என்று கூறிய மொழிகள் யாவையும்
மங்கை கேட்டு, மனம்நொந் தழுது,
ஒன்றைப் பத்தாய்ப் பெருக்கி, உடனே
தாய்க்குச் சொன்னாள்; தந்தையும் அறிந்தார்; 35
பையப் பையப் பாட்டியும் அறிந்தாள்;
யாவரும் கூடி, என்கண் மணியை
'உனக்கிங் கென்ன உண்டடா பயலே?
உடையக் காரியைத் தடைவையோ[12] பயலே? 40
பத்திர மாயிரு! பழைய காட்டுக்கு[13]
அனுப்பி விடுவேன், அறிநீ பயலே!'
என்றிப்படிநா எழுந்தது சொல்லி,
ஏசி வசைகள் பேசிப் பிரம்பால்
ஐயோ! ரத்தம் சிந்த அடித்தனர்.
காணாதென்று கண்ணில் மிளகும் 45
இட்டனர், இரக்கம் கெட்டவர் பாவிகள்.
நடத்தை யெல்லாம் நன்கறிந் தாலும்,
யாதும் பேசா திருப்பர் என் கணவர்.


  1. 4. குலுக்கை - குதிர்.
  2. 6. பனந்தூர்- பனைமரத்தின் அடி.
  3. 10-11. குதில். பத்தயம் முதலியவற்றுள்ள நெல்லெல்லாம் தீர்ந்துவிட்டது, இவர்கள் வந்து நீண்டநாள் தங்கி உண்டதனால் என்பது குறிப்பு.
  4. 16-17. 'தின்றவன் தின்றான். திருக்கணங் குடியான்
    தொண்டமிறுப்பான்' என்பது ஒரு பழமொழி: செலவு செய்பவன் ஒருவன்; ஆனால் சுகமும் அனுபவமும் பெறுபவன்
    வேறொருவன் என்பது பொருள். திருக்கணங்குடி- திருக்குறுங்குடி. தெண்டம் இறுப்பான்-வரியைக் கொடுப்பான்.
  5. 18-20. கறிவகைகள்.
  6. 21. சேனை - சேனைக்கிழங்கு. ஏத்தன் - ஏத்தங்காய் (ஒரு வகை வாழைக்காய்). எரிசேரி - இவற்றைச் சேர்த்துச் செய்யும் கறிவகை.
  7. 22. பப்படம் - அப்பளம். பிரதமன் - பாயசவகை.
  8. 23. படைப்புப் போட: சிறு தெய்வங்களுக்குப் படைக்கும் அன்னம், கறியகை முதலியவற்றைப் படைப்புப் போடுதல் என்று சொல்லுவர். விசேஷ பிரார்த்தனை (சிறப்பு) காலங்களில் செய்யும் இவ்வகைப் படைப்பில் எல்லா வகையான கறிவகைகளும், கனிவர்க்கங்களும் பரிமாறியிருப்பர். இங்கும் அதுபோல் அவியல், பொரியல் முதலிய ஏராளமான கறிவகைகள் வைத்துத் தினமும் பெருவிருந்து உண்ணுகிறார்கள் என்பது கருத்து.
  9. 28. கைச்சீட்டு: கையால் எழுதிய குறிப்புச் சீட்டு.
  10. 29. ஒற்றி கொடுத்தல்: சொத்தை அனுபவிக்கும் பாத்தியதையுடன் அடைமானம் வைத்தல்.
  11. 30. ஐயா - தந்தை.
  12. 39. உடையக்காரியைத் தடைவையோ - சொத்துக்கு உடையவளை நீ தடை செய்வாயோ.

  13. 40. பழைய காட்டுக்கு - முன்னிருந்த இடத்துக்கு. தாய் வீடான நல்லூருக்கு! அங்கு ஏழைக் குடும்பமாதலால் சாப்பாட்டுக்கு வழியின்றிக் கஷ்டப்பட வேண்டி வரும் என்பது கருத்து.