மருமக்கள்வழி மான்மியம்/முன்னுரை
முன்னுரை
I
நாஞ்சில் நாடு இப்போது திருவிதாங்கூர் இராச்சியத்தின் தெற்குப் பகுதியாயுள்ளது. பெரும் புகழ் பெற்ற 'குமரி' இந்நாட்டினகத்தேதான் இருக்கிறது. இந்நாட்டினர் அனைவரும் தமிழார்வம் மிக்கவர்களாகவே உள்ளவர்கள். இன்றும் இந்நாட்டில் தமிழ்மொழியே வழங்கி வருகிறது. இன்றிருப்பது போலவே சுமார் 1800 ஆண்டுகட்கு முன்பும் தமிழ் கூறு நல்லுலகத்தின் பகுதியாகவே இந்நாடு விளங்கிற்று. தொல்காப்பியத்தின் பாயிரத்தில்,
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறு நல்உலகத்து
என வருவதைக் கொண்டு மேற் கூறியதன் உண்மை தெளியலாம். இப்பாயிரத்தில் வரும் அதங்கோட்டாசான் குமரிக்கருகிலுள்ள திருவிதாங்கோடு என்னும் ஊரினர் என்பதும் இங்கே மனங்கொளத்தக்கது. பாண்டியனுக்குரியதாகக் ‘குமரிச் சேர்ப்பன்’ என்று ஒரு பெயர் திவாகரத்தில் காணப்படுகிறது. இப் பெயரால், இந்நாடு தொன்றுதொட்டுப் பாண்டியனுக்குரியதாயிருந்தமை புலனாம். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் குறித்த அச்சமும் புகழும் தெற்கின்கண் உள்ள கன்னிக்குத் தெற்கும் பரவுகவென அப்பாண்டியனைக் காரிகிழார் என்ற புலவர் பாடுகிறார் (புறம் 6). பாண்டியனுக்கு உரியதாகவே குமரியைத் அடுத்துள்ள பஃறுளியாறுங் கூறப்பட்டுள்ளது (புறம் 9). தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் குறித்து,
தென்குமரி வட பெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப(70-72)
என மதுரைக் காஞ்சி என்ற நூல் கூறுகிறது. இங்கே ‘தொன்று மொழிந்து‘ என்பது ‘மிகவும் பழங்காலந் தொட்டுத் தொடர்புடையராயுள்ளமையைப் பாராட்டிச் சொல்லி‘எனப் பொருள்படுதலாலே, பாண்டியர்களுக்கு அநாதியாகவே தென்குமரியைச் சார்ந்த நாடு உடைமையாயிருந்ததென்பது விளங்கும்.
பாண்டியர் பரம்பரைக் குரியதாயிருந்த இந்நாடு சங்ககாலத்தில்தானே சேரர்களால் பலமுறை அபகரிக்கப்பட்டதெனப் புறநானூற்றாலும் (17) பதிற்றுப் பத்தினாலும் அறிகிறோம். பிற்குறித்த நூலில்,
ஆரியர் துவன்றிய பேரிசை இமையந்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே(11)
எனவும்,
வடதிசை யெல்லை இமைய மாகத்
தென்னங் குமரியொடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமந் ததைய ஆர்ப்பெழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ(43)
நாஞ்சில் என்ற பெயரும் சங்ககாலத்தில் வழங்கி வந்த தொன்றேயாம். புறநானூற்றிலே.
உயர் சிமைய உழாஅ நாஞ்சிற் பொருந(139)
என வருகின்றது. இங்கே ‘உழாஅ நாஞ்சில்’ என்பது ’பாயா வேங்கை’, ’பறவாக் கொக்கு’ என்பனபோல, உழுதல் செய்யாத நாஞ்சில் அஃதாவது, நாஞ்சில் என்னும் மலையெனப் பொருள் படுகின்றது. இது மலையேயாம் என்பது ’உயர் சிமைய’ (உயர்ந்த சிகரத்தையுடைய) என்ற அடையால் உணரலாகும். இப் பழம் பெருநூலின் உரைகாரரும் ’நாஞ்சில் என்னும் பெயரையுடைய மலைக்கு வேந்தே’ என்று இவ்வடிக்குப் பொருள் கூறினர். நாஞ்சில் மலையைத் தன்னகத்தே கொண்ட நாடு ’நாஞ்சில் நாடு’ ஆகும். இந்நாட்டிலே வீரத்தாற் சிறந்து விளங்கிய வள்ளுவன் என்னும் பெயருடையான் ஒருவன் சங்ககாலத்தில் வாழ்ந்தனன். இவனைக் குறித்துப் புறநானூற்றில் ஐந்து செய்யுட்கள் (137,138,139.140, 380) உள்ளன. இவற்றுள் நான்கு செய்யுட்களில் இவன் ’பொருநன்’ என்றே
சிறப்பிக்கப்படுகிறான். இவன் பெருங்கொடை வள்ளலாகவும் விளங்கியவனென்பது பாணாற்றுப்படையாகப் பாடப்பெற்ற 138ஆம் செய்யுளால் தெளியலாம். இவன் ஒரு வேந்தனுக்குப் படைத் துணையாய் அமைந்தவனென்பது,ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே(139)
என இவனது வேந்தனையும் இவனையுங் குறித்து வரும் அடிகளால் அறியலாகும். இவ்வேந்தன் சேரன் என உரைகாரர் கூறுவர். ஆனால் 380ஆம் புறப்பாட்டு இவனைத் ‘தென்னவர் வயமறவன்’ என விசேடிக்கின்றது. ’தென்னவர்’ என்பது பாண்டியரையே சிறப்பாக உணர்த்துமாதலால், பாண்டியனே இவனது வேந்தனெனத் துணிதல் வேண்டும். ’சாதல் அஞ்சாய்’ என்ற தொடரை நோக்கும் போது, பிற்காலத்து அமைக்கப்பெற்ற ’சாவேறு, என்னும் வீரர் தொகுதியினரைப்போல் இவ்வள்ளுவன் சிறந்து மேம்பட்டவனெனக் கருதுதல் தக்கதாகலாம்.
சங்ககாலத்துக்குப் பின் சுமார் 250 ஆண்டுகளாக (கி.பி.650 வரை) நாஞ்சினாட்டுப் பகுதி சேரர்களது ஆட்சிக்குட்பட்டிருந்ததென ஊகித்தற்கிடமுண்டு. ஏனெனின், திருஞானசம்பந்த சுவாமிகளது காலத்தவரான நெடுமாறர் சேர அரசனோடு கோட்டாற்றிலும் விழிஞத்திலும் போர் செய்தனரெனப் பாண்டிக்கோவை அறிவிக்கின்றது. கோட்டாறு மதில் முதலியவற்றால் நன்கு காவல் செய்யப்பட்டு ஒரு தகரமாக முற்காலத்தில் இருந்தது. அங்கே ஒரு பெரும் போர் நிகழ்ந்தது. அதனருகில் விழிஞத்தில் கடலிடையே போரொன்றும் நிகழ்ந்தது. ’விண்டார்பட விழிஞக் கடற் கோடியுள்’ என்று கூறப்படுகின்றது ([1]இறை, உரை, செய். 30). இப்போரில் சேரனைக் காட்டகத்து வெருட்டி யோட்டி (செய். 37) அவனது தென்னாட்டை நெடுமாறர் கைக்கொண்டார் (செய்.239). இங்ஙனம் கொண்ட நாடு எவ்வளவு காலம் வரையில் மீண்டும் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததென அறியக்கூடவில்லை. ஆனால் நாஞ்சினாட்டுக்கு இயற்கை அரணாக அமைந்த மலைத் தொடராலும் பிற இடையூறுகளாலும் பாண்டியர்களுக்குத் தாம் கைப்பற்றிய நாட்டைக் காப்பாற்றுதல் அரிதாயிருந்திருத்தல் வேண்டும். ஆகவே, அவர்களிடமிருந்து சேர அரசர்கள் தாமதமின்றி நாஞ்சினாட்டை மீண்டும் பெற்றனரென்றுதான் ஊகித்தல் தகும். 10-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு இறுதியாகச் சோழ அரசர்கள் தென்னாட்டரசர்களில் தலைமை பூண்டனர்; அக்காலத்துச் சேர வமிசத்தினரிடமிருந்து சோழரிடம் நாஞ்சினாடு கைம் மாறியது. முதற் பராந்தகன், கேரளாந்தகன் என்னும் விருதுடைய முதல் ராஜராஜன்: இவர்களுடைய சாசனங்கள் நாஞ்சினாட்டில் பல இடங்களிலும் காணப்படுகின்றன. வீர சோழியம் இயற்றுவித்த வீரராஜேந்திர சோழன் (கி.பி.1062) கேரளனை வென்றதாக ஒரு சாசனங் கூறுகின்றது. முதற் குலோத்துங்கன் (கி.பி.1070-1118)
‘கன்னியுங் கைக்கொண்டு புனிதத் தென்னாட்டு
எல்லை காட்டிக் குடமலைநாட் டுள்ள
சாவேறு எல்லந் தனிவிசும்பு ஏற...
குறுகலர் குலையக் கோட்டாறு உட்பட
கெறிதொறும் நிலைகளிட்டு அருளி‘னன்
என்றும் பின்னர் ‘சோழ கேரளபுரம்‘ என்றும், புதிய பெயர்கள் உண்டாயின. கன்னியாகுமரியில் தேவியைக் குறிக்க நேரிடும் சாசனங்களில் ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தம சோழ வளநாட்டுப் புறத்தாய நாட்டுக் குமரிக் கன்னியா பகவதியார்‘ என வருகின்றது. நாஞ்சினாடு உத்தம சோழ வளநாட்டின் பிரிவாகவே ஒரு சாசனத்தில் (T.A.S. i, 163) கூறப்பட்டிருக்கிறது. சாசனங்களிற் காணும் நாட்டுப் பெயர்களுள் இந்நாஞ்சினாடு என்ற பெயரொழிய அதனோடியைந்த ஏனைப் பெயர்களெல்லாம் இப்பொழுது மறைந்துவிட்டன.
சோழ வம்சம் வலி குன்றியொழியவே, சேர அரசர்கள் மீண்டும் நாஞ்சினாட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்றியாளத் தொடங்கினர். இங்ஙனம் ஆளத் தொடங்கியது.கி.பி.15-ம் நூற்றாண்டின் முதற் பகுதியாயிருக்கலாமெனத் தோன்றுகிறது. சேர அரசர்கள் தங்கள் உரிமையை நாட்டியபோதிலும். பாண்டிய நாடு முதலியவற்றை ஆண்டு வந்த விஜயநகரப் பேரரசர்களின் பிரதிநிதிகளாலும் மதுரைப் பிரதேசத்தையாண்ட நாயக்க அரசர்களாலும் அடிக்கடி அல்லற்பட்டனர். படையெடுப்புக்கள் நிகழ்ந்த வண்ணமாயிருந்தன. நாஞ் சினாட்டுக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட பிரதேசம் அடிக்கடி கைம்மாறி வந்தது. இப்பிரதேசத்தைத் ‘திருவடி தேசம்’ என்று சாசனங்கள் குறிப்பதிலிருந்து,இது நீண்ட காலமாகச் சேர அரசர்கள் கைவசமிருந்ததெனக் கருதவேண்டியதாயிருக்கிறது. ஆனால் விஜயநகரப் பிரதிநிதிகளுள் விட்டலராயர் முதலியோரும் நாயக்கர் சேனாதிபதியான ராமப்பய்யன் முதலியோரும் திருவடி தேசத்தின் உட்பகுதிக்கே படையெடுத்துச் சென்று தங்கள் அரசரின் பெருமையை நிலைநாட்டினர். நாயக்கர் படை கொல்லம் 810 முதல் (கி. பி. 1635) நாஞ்சினாட்டை மிகவும் துன்புறுத்தியது என்றும், இது போன்ற காரணங்களால், கொல்லம் 849 முதல் 869 வரை, நிலவரி முதலியன நீக்கப்பட்டன என்றும் முதலியார் ஓலைச் சாசனமொன்று தெரிவிக்கின்றது. கி.பி. 1700-க்குப் பின்தான் நாஞ்சினாட்டில் சிறிதளவு சமாதானம் ஏற்பட்டதென்று சொல்லலாம். ஆனால் உள்நாட்டுக் கலகங்களும் திப்பு சுல்தானது படையெடுப்பால் வந்த விபத்துக்களும் நாஞ்சினாட்டினருக்குப் பெருந்துன்பம் விளைத்தன. இதுவும் நீங்கி, கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் நாடு அமைதி பெற்றிருக்கிறது.
II
மேலே விவரித்த சரித்திரத்தால் நாஞ்சினாட்டினரின் நிலை மிகவும் வருந்தத் தக்கதாயிருந்தமை எளிதின் அறியத்தகும். அவர்களிற் பல குடும்பத்தினர் பல நூற்றாண்டுகட்கு முன்னே அங்கே குடியேறியவர்கள்; ஒரு சில குடும்பத்தினர் சோழர் படையெடுப்போடு வந்தவர்களா யிருக்கலாம். இன்னும் ஒரு சில குடும்பங்கள் அதற்கு முன்பு அங்கு வந்து சேர்ந்தனவாகக்கூட இருக்கலாம்: சில பூர்வ குடிகளும் இருக்கலாம்; ஆனால் பெரும்பாலோர் பாண்டிய நாடு சோணாடுகளிலிருந்து சென்றவர்களேயாவர். நாஞ்சினாட்டினர் பொதுப்பட இங்ஙனமிருப்ப, அந்நாட்டு வேளாளர் அனைவரும் வெளி நாடுகளிலிருந்து பல நூற்றாண்டுகட்கு முன்பு அங்கே குடியேறிப் படைத் தலைமை பூண்டும் படைவீரராயமைந்தும் நாட்டின் ஆட்சி முறையில் அதிகாரம் வகித்தும் வந்தவர்களே. இவர்கள் நாஞ்சினாட்டில் பெருநிலக்கிழமை பூண்டும் இருந்தனர். பாண்டி முதலிய பிரதேசங்களிலிருந்து வரும் படைகளைத் தடுத்தும், நாட்டின் ஆட்சியில் அதிகாரம் தாங்கி அரசியல் செவ்வையாக நடைபெறுவதற்கு உதவி புரிந்தும், உழவு, வாணியம் முதலிய தொழில்களை மேற்கொண்டு நாட்டின் நலத்தைப் பேணியும் பெருந்தொண்டு புரிந்துவந்தனர். சேர அரசர்களுக்கு இன்றியமையாத பெருங்குடிகளாயமைந்தனர். அரசியல் நடைபெறுவதற்கு வேண்டும் பொருள் வருவாய் பெரும்பாலும் இந்நாஞ்சினாட்டினரிட மிருந்தே பெறக்கூடியதாயிருந்தது. சுருங்கக் கூறின் சேர ராஜ்யத்தின் உயிர் நிலையாயிருந்து. அரசு செழிக்கும்படி செய்தது நாஞ்சினாடாகும்.
ஆனால், நாஞ்சினாட்டினர்—முக்கியமாக நாஞ்சினாட்டு வேளாளர் — எப்பொழுதும் தங்கள் தாயகமாகிய சோழ பாண்டிய தேசங்களையே நோக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய வழக்க வொழுக்கங்களெல்லாம் பாண்டி நாட்டிலுள்ள வேளாளர்களுடைய வழக்க வொழுக்கங்கள். அவர்களுடைய குடும்பத் தெய்வங்கள் பாண்டி நாடு முதலிய இடங்களில் இருந்தன. அவர்களுடைய கொள்வினை கொடுப்பு வினையெல்லாம் பாண்டி முதலிய நாட்டிவரோடு நிகழ்ந்தன. அவர்கள் தாய்மொழி தமிழ்: அவர்கள் போற்றி வந்த இலக்கியங்கள் தமிழிலக்கியங்கள்; அவர்களுடைய ஆசா பாசமனைத்தும் அப் பாண்டி முதலிய நாடுகளோடு பின்னிக் கிடந்தன. இந்த நிலையில் அவர்களைத் தமது நாட்டு நிலைக் குடிகளாகச் செய்துவிட வேண்டுமென்று ஒரு சேர அரசர் எண்ணியது முற்றும் இயல்பேயன்றோ?
இதற்கேற்ப, கர்ண பரம்பரைச் செய்தியொன்று நாஞ்சினாட்டு வேளாளரிடை வழங்குகிறது. அவர்கள் தங்களுடைய பூர்வீக நாட்டிற்குப் போய்விடாதபடி ஒரு சேர அரசன் மருமக்கள்-தாயச் சட்டத்தை அவர்கள் மேற்கொள்ளும்படி செய்தனனென்பதுதான் இக்கர்ண பரம்பரை. இந்தச் செய்தி உண்மையாயின், இது அரியதோர் அரசியற் சூழ்ச்சியாகும். வேறொரு செய்தியும் வழங்குகின்றது. பாண்டியனொருவனுக்கும் சேரனொருவனுக்கும் இந்நாஞ்சினாட்டின் உரிமையைப்பற்றி விவாதம் நிகழ்ந்தது.
வஞ்சி நாடதனில் நன்செய் நாடு எனச்
செந்தமிழ் வழங்குந் தேயமொன்றுஉளது; அதன்
அந்தம்இல் பெருவனம் அறியார் யாரே?
மருதமும் நெய்தலும் மயங்கி அங்கெங்கும்
புரையறு செல்வம் நிலையெற வளரும்(II, i, 75-79)
★★★
இப்பெருந் தேயத்து எங்கும் இராப்பகல்
தப்பினும் மாரி தன் கடன் தவறா
கொண்மூ என்னுங் கொள்கலங் கொண்ட
அமிழ்தினை அவ்வயிற் கவிழ்த்தபின் செல்வுழி
வடியும் நீரேநம் மிடிதீர் சாரல்(II, i, 101–108)
★★★
தூவியால் தம்முடல் நீவிடிற் சிரிக்குஞ்
சிறுமியர் என்ன அச் செழுநில நங்கை
உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி
உடல்குழைந்து எங்கும் உலப்பறு செல்வப்
பயிர்மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவன்(II, ii; 140-144)
★★★
எங்கட்கு அந்நாடு உரித்தாம்; அங்குப்
பரவு பாடையும் விரவும் ஆசாரமும்
நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா(1I, iii, 77-79)
என்று மனோன்மணீயம் கூறுமாறு பாண்டியன் தன் கட்சியை எடுத்துரைத்தனன். மேலும் ‘பாண்டியன் அணை’ என்பதும், நாஞ்சினாட்டினர் மக்கள் தாயிகளாயிருத்தலும் அந்நாடு தனக்குரியதேயென்பதை வலியுறுத்துகின்றன என்றனன். பாண்டியன் ஒருவனது நட்பின் ஞாபகார்த்தமாகச் சேர அரசனொருவனாற் பாண்டியன் அணை கட்டப் பெற்றதென்றும் நாஞ்சினாட்டினர் மருமக்கள் - தாயிகளே என்றும் வஞ்சியர் பூபதி வாதித்தனன். முடிவில் நாஞ்சினாட்டினர் மக்கள் - தாயிகளா அல்லது மருமக்கள் - தாயிகளா என்பதைப் பொறுத்ததாயிற்று இவ்வுரிமை விவாதம். இதனை அந்நாட்டினரே தீர்க்க வேண்டியதாயிற்று. அவர்கள் எக்காரணத்தாலோ சேரர் குடிகளாய் வாழ்தலை விரும்பினர். இவ் விருப்பத்திற்கிணங்க, தாங்கள் மருமக்கள்— தாயிகளே என்றும் அத் தாய முறையைத் தங்கள் முன்னோர்கள் மேற்கொண்டு விட்டார்களென்றும் சான்றுகூறி விவாதத்தை முடித்தனர். இது நிகழ்ந்தது கொல்லம் 292-ம் ஆண்டில்[2] (அதாவது கி.பி. 1116) என்று ஸ்ரீபத்மநாப சுவாமி கோயிலிலுள்ள ஓர் ஓலைப்பத்திரம் தெரிவிக்கிறதெனத் திருவிதாங்கூர்த் தேசச் சரித்திர்ம் (Travancore State Manual) கூறுகிறது.
இங்கே கூறிய இரு செய்திகளாலும் அநாதியாக மக்கள்-தாய முறையைக் கொண்ட நாஞ்சினாட்டு வேளாளர் அரசியற் காரணங்கள் பற்றி மருமக்கள்-தாயமுறையைக் கைப்பற்றின ரென்பது உறுதியாகின்றது. பிற்கூறிய தாய முறையின் முக்கியாம்சங்கள் மிகவும் விசித்திரமானவை. ஒரு காரணவனது பூர்விகச் சொத்து அவனது சகோதரியின் குழந்தைகளுக்குத் தாயமுறைப்படி இறங்கும். அவனுடைய குழந்தைகளுக்கு ‘உகந்துடைமை’ என்னப்படும் ஒரு சிற்றுரிமையைத் தவிர வேறு யாதொரு பாத்தியதையும் இல்லை, சகோதரியின் குழந்தைகளுக்கும் பூர்விகச் சொத்தைப் பாகப் பிரிவினை கேட்க உரிமையில்லை. இந்நிலையில் தன் குழந்தைகள் ஒரு பக்கமும் தன் சகோதரிகளின் குழந்தைகள் ஒரு பக்கமுமாகக் காரணவனை அரித்துத் தின்பதுதான் நாஞ்சினாட்டுக் குடும்பத்தின் சாதாரண கதியாய் விட்டது. இயற்கையான அன்பு தன் குழந்தைகள் மீது செல்ல, செயற்கையான சட்டம் அவ் அன்பிற்கு இடங்கொடாதபடி, தன் சகோதரிகளின் குழந்தைகளுக்கு அவகாசிகள் நிலையிற் குடும்பச் சொத்தைக் கொடுக்கும்படி செய்தது. சகோதரிகளின் குழந்தைகளுக்குச் ‘சேஷகாரர்’ என்று பெயர். இவர்களின் இதம்போல் காரணவன் நடக்கத் தவறினால், அவனைக் ‘குடும்பதோஷி‘ என்று கூறிக் காரணவ ஸ்தானத்திலிருந்து நீக்கவேண்டும் வழி தேடுவார்கள். இதனால் எப்போதும் கோர்ட் விவகாரம்தான். குடும்பச் சொத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று காரணவன் நினைப்பதற்கு இடமே இல்லாமற் போய்விட்டது. குடும்பச் சொத்தும் பாழாகும் நிலையில் வந்து விட்டது. நாஞ்சினாட்டிலுள்ள பெருங் குடும்பங்களிற் பெரும் பாலன இவ்வாறாக அல்லற்பட்டுத் தவித்துக் கொண்டிருந்தன.
நாஞ்சினாட்டுப் பெண்களின் துன்பம் சொல்லி அளவிட முடியாது. பல தாரங்களை ஒருவன் மணந்து கொள்ளலாம். இங்ஙனம் பலருள் ஒருத்தியாய் வாழ்வது நாஞ்சினாட்டில் சர்வ சாதாரணமாய்ப் போயிற்று. கணவன் இறந்த பிற்பாடு. மறுமணம் செய்துகொள்ளும் உரிமை விதவைக்கு இருந்தது. இவ்வுரிமையால் பெண் மக்களின் அல்லற்பாடு மிகுந்ததேயன்றிக் குறைவுபடவில்லை. தான் மணந்த மனைவியை ஆதரித்துக் காப்பாற்ற வேண்டுமென்ற பொறுப்பைக் கணவன் அவ்வளவாக மேற்கொள்ளவில்லை. சேஷகாரர்களுக்குக் காரணவனுடைய மனைவி மனைவி மக்களைக் கவனிக்கவேண்டும் பொறுப்புச் சிறிதும் இல்லை. இவ்வாறான பல குறைகளினால் பெண்களின் நிலைமை பெரிதும் பரிதபிக்கத் தகுந்ததாயிருந்தது.
இந்நிலைமைகளையெல்லாம் நோக்கி, தங்களுக்குரிய அவகாசக் கிரமம் பற்றிய சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென்ற கருத்து நாஞ்சினாட்டில் முற்போக்கில் அவாவுள்ள மக்கள் மனத்தில் தோன்றிற்று. இக்கருத்து 30 ஆண்டுகட்கு முன்னர் மிகவும் பிரசார மெய்தியது. முற்போக்கில் ஈடுபடாத ஒரு சிலர் இதனை ரகசியமாக எதிர்க்கத் தலைப்பட்டனர். நாஞ்சினாடு இருபிளவு பட்டது. ஆனால் முற்போக்காளரே முடிவில் வென்றனர்.
ஸ்ரீ சி. தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் முற்போக்காளரில் முதன்மை பெற்றவர். ‘மலபார் குவார்ட்டர்லி ரிவியூ’ என்ற பத்திரிகையில் இவர்கள் நாஞ்சினாட்டு வேளாளரைக் குறித்து எழுதிய ஆங்கிலக் கட்டுரை அதுகாறும் உறங்கிக் கிடந்த வேளாளரின் கண்களைத் திறந்து விழிக்கச் செய்தது. பிள்ளையவர்களுடைய தூய உள்ளமும் சீரிய நோக்கமும் மனத்தைக் கவர்ந்தன. நாஞ்சினாட்டு வேளாள சமுதாயம் பலவகை இன்னல்களும் நீங்கி அதற்குரிய உயரிய நிலையை அடைய வேண்டுமென்ற ஆழ்ந்த உணர்ச்சி அவர்களுடைய சம்பாஷணைகளிலும் எழுத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. அவர்கள் தமிழ் - இலக்கியங்களில் ஊறியவர்கள்: தமிழ் மக்களுடைய சரிதத்தை நன்குணர்ந்தவர்கள்; தமிழர்களுடைய உயர்ந்த லட்சியங்களிலும் ஒழுக்க நியதிகளிலும் ஈடுபட்டவர்கள்; ஆங்கிலக் கவிஞர்களின் அறிவுரைகளில் திளைத்தவர்கள்: பிற சமுதாய சரித்திரங்களை ஊன்றி நோக்கி யுணர்ந்தவர்கள்; நாஞ்சினாட்டு இளைஞர்களுக்கு ஒரு லட்சிய புருஷராக உள்ளவர்கள்; ஆடம்பரம் சிறிதும் இல்லாதவர்கள்; ஆதலால் பிரசங்க மேடைகளிலோ பிரசாரக் கூட்டங்களிலோ அவர்களைக் காணுதல் அரிது. ஆனால் அமைதியோடும் உள்ளுணர்ச்சியோடும் தங்கள் சமுதாய நன்மையின் பொருட்டு இடைவிடாது உழைத்து வந்தார்கள். அவர்கள் உழைப்பில் சுயநலமென்பது சிறிதும் இருப்பதற்கிடமே இல்லை. தூய வாழ்க்கையுடையவர்கள்; சந்தானம் அற்றவர்கள்; எனவே அதுபற்றிய பாசபந்தங்களும் அற்றவர்கள். இல்லறத்தேயிருந்தும் துறவியே.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது(45)
என்ற வள்ளுவர் குறளுக்கு லட்சியமா யுள்ளவர்கள். எப்பொழுதும் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் கவித்வ நிவேதனத்திலும் வாழ்ந்து வருபவர்கள். தாம் ஆற்றவேண்டும் அரிய முதற்கடமையாகும் என்று நினைத்தே தமது சமுதாயச் சீர்திருத்தத்திலும் சட்டச் சீர்திருத்தத்திலும் பிள்ளையவர்கள் முனைந்தார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் நான் திருவனந்தபுரத்தில் பிள்ளையவர்கள் அருகில் வசித்து வந்தேன். ஆதலால் இங்கே எழுதுவனவெல்லாம் எனக்கு நேரில் தெரிந்தவையே. சட்டத்தைச் சீர்திருத்தும் விஷயமாகப் பல நண்பர்களும் பிள்ளையவர்களைக் கண்டு கலந்து கொண்டு சென்றார்கள்.ஸ்ரீ மூலம் பிரஜாஸபையின் அங்கத்தினர் பலர் பிள்ளையவர்கள் கூடவே தங்கியிருந்து சட்ட விஷயமாக விவாதித்துப் பரிசீலனை செய்து வந்தார்கள். தமது சமுதாயத்தினர்கள் சுயநலத்தின் காரணமாகச் சீர்திருத்தத்திற்கு இணங்காமற் போய்விடுவார்களோ என்ற கவலை பிள்ளையவர்களுக்கு இருந்தது.இக்கவலை மனத்திற் பட்டவுடன் ‘நாஞ்சினாட்டு வேளாளருக்கு ஒரு கோட்டை வினாக்கள்’ முதலிய பல துண்டுப் பத்திரங்களை வெளியிட்டார்கள். சமுதாயத்தின் பரிதாபகரமான நிலையைச் சித்திரித்துக் காட்டினால் தம்மவர்கள் உண்மை யுணர்ந்து சீர்திருத்த விஷயத்தில் ஒருமுகமாய் உழைப்பார்கள் என்று பிள்ளையவர்கள் கருதினார்கள். இதுதான் நாஞ்சினாட்டு மருமக்கள் வழி மான்மியத்தின் உற்பத்தியாகும்.
III
பிள்ளையவர்கள் வரைந்த சமுதாய சித்திரம் ஒரு நூதன இலக்கிய வகையை நமது தமிழ்மக்களுக்குக் கொடுத்தது. இவ் இலக்கிய வகையில் நகைப்பும் இகழ்ச்சியும் சோகமும் ஒன்றாகக் கலந்து வரும். பெரியதோர் பயனும் விளைவதாகும்.
மக்களுக்கு நகைப்பு-உணர்ச்சியும் இகழ்ந்துரையாடலும் இயல்பாகவுள்ளவையே. ஏதாவதொரு வகையிற் பொருத்தமற்ற மொழி அல்லது செயல் நிகழ்ந்துவிடத்து நகை யுண்டாகும். இலக்கண நூலார் நகைச்சுவை இன்னின்ன காரணங்களாற் பிறக்குமென்று அறுதியிட்டுரைப்பர். அக்காரணங்களை இங்கே ஆராயவேண்டும் அவசியம் இல்லை ஐந்து வயசுப் பையனொருவன் மிகப் பெரியதொரு தலைப்பாகை கட்டிக்கொண்டு வயது முதிர்ந்தவன் போல் நடிப்பானானால், பார்ப்பவர்களுக்கு உடனே நகைப்பு வந்துவிடும். இப்படியே மிக்க ஆடம்பரமாகச் சட்டை முதலியன அணிந்து செல்பவன் அடிசறுக்கிக் கீழே விழுவானானால் உடனே நகைப்பு உண்டாய்விடும். பேச்சிலும் இப்படி நகையுண்டாவதற்குரிய சந்தர்ப்பங்களை எளிதில் பாவித்துக் கொள்ளலாம். ஆடுசாபட்டி அஷ்டாவதானம் அம்மையப்ப பிள்ளை தம் வீட்டில் திருடர்கள் புகுந்து களவாடிக் கொண்டிருக்கும்போது அவர்களைப் பார்த்து, ‘நீவிர் பிழைத்தீர்; இனிப் பிழையீர்’ என்று கூறுதலும், இதற்குப் பதிலாகத் திருடர்கள் அவரை அடிக்கச் செல்லுவதும் நகையுணர்ச்சியைத் தோற்றுவிக்காதபடி இருக்க முடியுமா? இவ்வுணர்ச்சியை எழுப்பக்கூடிய நூல்கள் தமிழில் பல இருக்கின்றன. பம்மல் சம்பந்த முதலியாரவர்கள் இயற்றிய ’சபாபதி’ என்னும் நாடகம் நகைச்சுவையிலே தோய்ந்திருக்கிறது. வில்லியப்ப பிள்ளையின் பஞ்ச லட்சணத் திருமுக விலாசம் நகைச்சுவையின் பொக்கிஷமாகவுள்ளது. வீரமா முனிவரின் பரமார்த்த குரு கதையில் நகைச்சுவை ததும்புகிறது. கம்பராமாயணம் முதலிய காவியங்களிலும் அங்கங்கே நகைச்சுவை குமிழியிட்டொழுகுகிறது. சங்கச் செய்யுட்களிலும் ஏகதேசமாய் இந்த நகைச்சுவை தலைக்காட்டி இன்பமூட்டுகிறது. உதாரணமாக,
திருந்திழாய் கேளாய் நம் ஊர்க்கெல்லாம் சாலப்
பெருநகை அல்கல் நிகழ்ந்தது
சினிமாப்படக் கர்த்தர்களும் இந்தச் சுவையுடைய கதைகளையே படம் பிடிக்கின்றனர். ஆனால் இங்கே கூறிய நகைச்சுவைப் பகுதி யெல்லாவற்றிலும், ஆழ்ந்த உணர்ச்சி இல்லை; ஆழ்ந்த பொருளில்லை; நிலைத்த பயனில்லை. கணநேர மகிழ்ச்சியையே நமக்குத் தந்து அதனோடு ஒழிகிறது.
இகழ்ச்சிச் செயலும் இவ்வாறுதான். விருப்பு வெறுப்பு மக்களியற்கையில் ஒன்றிக் கிடப்பவையே. வெறுப்பின் உருவவேறுபாடே இகழ்ச்சி யென்பது. நமது தினசரி வாழ்க்கையில் இவ்இகழ்ச்சி அடிக்கடி புலப்படுவதொன்றே. இலக்கியங்களிலும் இது மிகுதியாகக் காணப்படுகின்றது. தமக்குப் பொருள் கொடாத ஒருவரைக் குறித்து ஒரு புலவர்.
பாரி ஓரி நள்ளி எழினி
ஆஅய் பேகன் பெருந்தோள் மலையன் என்று
எழுவருள் ஒருவனும் அல்லை, அதனால்
நின்னை நோவது எவனோ!
அட்டார்க்கு உதவாக் கட்டி போல
நீயும் உளையே நின்அன் னோர்க்கே;
யானும் உளனே தீம்பா லோர்க்கே;
குருகினும் வெளியோய் தேஎத்துப்
பருகுபால் அன்னஎன் சொல்உகுத் தேனே!
(தொல்-செய்யுளியல், 120, உரை)
முற்காலத்து இருந்ததாகத் தெரிகிறது. கம்பராமாயணத்தில் பல இடங்களிலும் இவ் இகழ்ச்சியுரை மிக்க திறம்படக் கையாளப்படுகிறது. உதாரணமாக, இராவணனை நோக்கி அனுமன்.
அஞ்சலை யரக்க பார்விட்டு அந்தரம் அடைந்தா னன்றே
வெஞ்சின வாலி மீளான் வாலும்போய் விளிந்த தன்றே
அஞ்சன மேனியான்தன் அடுகணை யொன்றால் மாழ்கித்
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான்.
(கம்ப. சுந்தர. பிணி வீட்டு.84)
இகழ்ந்து பாடுதலையே தமது தொழிலாகக் கொண்டு, அவ்வகைப் பாடலில் சிறந்துவிளங்கியவர் காளமேகம் என்று கூறுவர்.
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்—குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.
என்பது அவர் பாடல்களில் ஒன்று.
மேற்காட்டியன போன்ற இகழ்ச்சியுரைகளெல்லாம் யாரேனும் ஒருவரைக் குறித்துத் தோன்றியவை. கணநேரந் தோன்றும் மனவேறுபாட்டுக்கு ஒரு போக்கிடமா யமைந்தவை; பொருள் அற்றவை ; நன்மை அற்றவை; வசையென்ற அளவில் நல்லுணர்வுடையோரால் கொள்ளத் தகாதவை.
இகழ்ச்சியுரை வசையாக மாத்திரம் அமையாதபடி குற்றத்தைக் கண்டித்து நீக்குதலையே உண்மையான நோக்கமாகக் கொண்டதாயின் அப்போது அவ் இகழ்ச்சி ஒருபடி உயர்ந்து விடுகிறது. புராதன லத்தீன் ஆசிரியர்களுள் லுஸில்லஸ் என்பவர்தாம் இந்நோக்கத்தை முதன்முதற் கையாண்டவர் எனக் கூறுகிறார்கள். இகழ்ச்சிக் கண்டனம் ஒருவரைக் குறித்துத் தோன்றாது ஓரினத்தவரைக் குறித்து எழுமாயின், அதனால் விளையும் நன்மை மிகப் பலவாதற்கு இடமுண்டு. இனம்பற்றியெழும் இகழ்ச்சியுரையின் தோற்றுவாய் 'ஹோமர்' என்ற கிரேக்க மகா கவியின் சிருஷ்டிகளில் காணப்படுகிறதென்பர். கம்ப-ராமாயணத்தில் அது வெளிப்படும் திறம் கவனிக்கத்தக்கது. இராவணன் முதலிய அரக்கர்களால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் இந்திரன் முதலிய தேவர்கள். இத் தேவர்களின் ஏழைமை நிலை பல இடங்களிலும் வெளிப்படுகிறது. இலங்கையைச் சூழ்ந்திருந்த பொழிலுக்கு இவர்கள் காவற்காரரா யிருந்தனர். அப்பொழில் அழிந்ததைப் பற்றியும் பஞ்ச சேனாதிபதிகள். அக்ஷய குமாரன் முதலானவர்களின் வதத்தைப் பற்றியும் இராவணனுக்கு அறிவிக்கும் பொறுப்பு இவ் ஏழைத் தேவர்களுக்கு ஏற்பட்டது. இராவணன் சமூகத்திற்கு அவர்கள் உள்ளம் பறைகொட்ட நடுநடுங்கி வருதலும், அவனிடம் சொல்லுவதற்கு அஞ்சித் தடுமாறும் நிலைமையும், நகைச்சுவைபட, இகழ்ச்சிக் குறிப்புத் தோன்ற, வருணிக்கப்படுகின்றன. அடிமை வாழ்வின்மீது ஏற்படும் அருவருப்பு தேவஜாதியாரின்மீது ஏற்றி யுணர்த்தப்படுகிறது. இதனால் விளையும் சுவையும் பயனும் பெரிதும் போற்றத்தக்கவை.
இராமாயணத்தில் வருவது பழங்காலச் சரித்திரத்தில் ஓர் ஆழ்ந்த உண்மை. ஓர் ஆசிரியன் தன் காலத்து வாழ்ந்த சில இனத்தாரைப் பரிகசித்து இகழ்வதுதான் மிகுதியாகக் காணப்படுகிறது. இவ்வாறு இகழப்படுத்தற்குப் பெரும்பாலும் பெண்ணினத்தார்களும் துறவு வேடம் பூண்டவர்களுமே தக்கவர்கள் ஆவார்களென்று ஆசிரியர்கள் கருதினார்கள்.
பெண்களுடைய நடையுடை பாவனைகளையும் அவர்களுடைய சாகசத்தினையும் அறிவு நுட்பத்தினையும் ‘அளக்கவொண்ணா வஞ்சத்’தினையும் பற்றிப் பல நூல்கள் ஆங்கிலத்தில் முற்காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக தாமஸ் டெக்கர் என்னும் கவிஞர் எழுதிய ‘பிரமசாரியின் விருந்து’ (Bachelor's Banquet) என்ற நூலைக் கூறலாம் நமது நாட்டில் பெண்களைப் பழித்துரைத்தலே பிற்காலத்தில்—ஜைன பௌத்த மதங்கள் ஓங்கி நின்ற காலத்தில்—பெரு வழக்கமாக ஏற்பட்டுவிட்டது.
புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின்வேறு அல்ல—புதுப்புனலும்
மாரி அறவே அறுமே அவரன்பும்
வாரி அறவே அறும்
என்ற நாலடிச் செய்யுளும்,
உண்டியுட் காப்புஉண்டு உறுபொருட் காப்புஉண்டு
கண்ட விழுப்பொருள் கவ்விக்குக் காப்புஉண்டு
பெண்டிரைக் காப்புது இலமென்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தளர் கற்றறிந் தோரே
என்ற வளையாபதிச் செய்யுளும் தக்க உதாரணங்களாம். இங்ஙனமே ஒரு பௌத்த பிக்ஷுவையும் ஒரு காபாலிகனையும் ‘மத்த விலாஸ ப்ரஹஸநம்’ என்ற வடமொழி நாடகம் பரிகசிக்கிறது. வள்ளுவரும்,
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்(1073)
எனவும்,
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்(271)
எனவும் கயவர்களையும் கூடாவொழுக்கமுடைய துறவிகளையும் குறித்துக் கூறுகிறார்.
இங்ஙனம் பெண்டிர், பொய்த் துறவிகள் முதலாகிய இனத்தினர்களை இகழ்ந்துரைப்பதிலே அவர்கள் திருந்தவேண்டுமென்ற நோக்கமும் ஏற்பட்டு விட்டதாயின், அவ் இகழ்ந்துரை நம்மைச் சூழ்ந்துள்ள தீங்குகள் அறியாமை முதலியவற்றை நீக்குவதற்கு ஏற்ற நற்கருவியாகிவிடுகிறது. இகழ்ச்சியினால் உண்டாகக் கூடும் மனக் கசப்பு, அவ் இகழ்ச்சியோடு உடனொன்றி வரும் நகைச்சுவையினால் மாறிவிடுகிறது. நன்மை பெருகுதற்குத் தக்க வாய்ப்பு ஏற்படுகிறது. கோபத்தினால் கொறுகொறுக்கும் ஒருவன் முகத்திற்கெதிரே கண்ணாடியைக் காட்டுவது போன்ற பயன் விளைகிறது. ஆகவே நகைப்பு, இகழ்ச்சி நன்னோக்கம் ஆகிய மூன்றும் இயைந்து வரும் சரள காவியமொன்றே தமது கருத்திற்கு ஒத்ததெனப் பிள்ளையவர்கள் துணிந்தார்கள். இச் செய்யுள் வகையை ஆங்கிலத்தில் ‘ஸட்டயர்’ (Satire) என்று கூறுவார்கள். தொல்காப்பியர் ‘அங்கதம்‘ வசையொடும் நகையொடும் கூடியது என்று கூறி அது ‘செம்பொருள் - அங்கதம்‘, ‘பழி . கரப்பு - அங்கதம்' என இருவகைப்படும் என்றனர் (செய். 129, 124). ஒருகால் இது 'பழிகரப்பு-அங்கதம் என்றதில் அடங்கலாம். ஆனால் இதைப் பிரகசனம் என்று சொல்வது மிகப் பொருத்தமாகும்.
பிரகசனத்தின் இயல்பை நாம் நன்குணர்தல் வேண்டும். மக்களில் ஒரு பகுதியார் தாம் கையாண்டு வரும் ஒழுக்கங்களும் பழக்க வழக்கங்களும் நல்லவையென்று கொண்டு, அவைபற்றித் தமக்குள் தாமே திருப்தியடைந்திருப்பர். அவ்வாறு திருப்தியாயிருத்தல் தவறென்றும் அவ்வொழுக்க முதலியன திருந்துதல் அவசியமென்றுங் காட்டி நல்வழிப்படுத்துதலே பிரகசனத்தின் நோக்கமாகும். உண்மையைச் சிறிது மிகைப்படுத்திக் கூறுதல் இவ்வகை நூல்கள் மேற்கொள்ளும் பொது முறையாகும்.
இப் பிரகசனம் இருவகை நெறியிலே செல்லலாம். ஒன்று பண்பட்ட அமைதிநெறி; நல்லியற்கையினின்றும் தவறாத நெறி. இந் நெறியிலே பிரகசனத்தின் அடிப்படையில் நீதி உள்ளடங்கிக் கிடக்கும். ஆசிரியன் தான் பரிகசிக்கும் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதை மறந்துவிடுவதில்லை. தான் சமுதாயத்தினரைப் புண்படுத்த வேண்டுமென நினைப்பதேயில்லை. பரிகாசமும் மிகவும் நயமாகவும் சரளமாகவும் இருக்கும். லத்தீன் ஆசிரியர்களுள் ஹாரெஸ் (Horace) என்பவர் இந்நெறியில் பிரகசனங்கள் எழுதியமையால் இதனை ஹோரேஷியன் (Horation) நெறியென்று மேலைநாட்டறிஞர்கள் கூறுவார்கள். இந்நெறியைச் சாந்தநெறி என்று சொல்லலாம். பிறிதொரு நெறி உக்ரநெறியென்று சொல்லலாம். தீமைகளையும் குற்றங்களையும் கண்டவுடன் ஆசிரியனது உள்ளங் கொதித்துப் பொங்குகிறது; எரிமலையினின்று பொங்கி வழியும் நெருப்பாறுபோலக் கண்டனச் சொற்கள் பரந்து பாய்கின்றன. இந்நெறியில் அருவருப்பு எளிதில் உண்டாகும்படியாய் உண்மை சிறிது மிகுத்துக் கூறப்படுவதாகும். லத்தீன் ஆசிரியருள் ஜூவெனல் (Juvenal) என்பவர் இந்நெறியைக் கையாண்டமையால் இதனை ஜூவெனலியன் (Juvenalian) நெறியென்று கூறுவார்கள்.
பிள்ளையவர்களோடு பழகியவர்கள் மேற்சுட்டிய இரண்டு நெறிகளுள் சாந்த நெறியை அவர்கள் மேற்கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அந்நெறி அவர்கள் நோக்கத்தை நிறைவேற்ற வல்லதல்ல. அவர்கள் கூறுமாறு:
காரணத் தீனம் கடிய தீனம்
கண்டூரத்தில் மருந்து கருத்தாய்க்
கொடுத்தா லன்றிக் குணம் ஆகாது
(நாகாஸ்தி. 79-81)
ஆதலால் உக்ரநெறியே கைக்கொள்ளத் தக்கதாயிற்று. இந்நெறி தம் இயல்பிற்கு முற்றும் மாறாயுள்ளது; இதற்கு ஏற்றதொரு கதாபாத்திரத்தைச் சிருஷ்டித்துக் கதையும் ஒன்று அமைப்பது இன்றியமையாததாய் முடிந்தது.
கதையைச் சொல்லுவது சூத பௌராணிகரா? அல்ல. அவருக்கு நாஞ்சினாட்டுக் குடும்பத்தினரின் துன்பத்தை அளவிட முடியுமா? அத்துன்பத்தின் காரணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று அவரது உள்ளங் கொதித்தெழுமா? இரண்டும் முடியாத காரியம். அக்குடும்பத்திற் பிறந்த ஒருத்திக்குத்தான் இரண்டும் இயலும்; வாய்பேசாது மௌனமாயிருந்து துக்கங்களையெல்லாம் அடக்கியடக்கி வைப்பாள்; முடிவில் அத் துக்கங்கள் நெடுங்காலமாக அடக்கபட்டிருந்த காரணத்தினாலே, குமுறிக் கொந்தளித்து அதிவேகத்துடன் வெளிப் புறப்படும். அந்நிலையில் வருஞ் சொற்கள் உண்மையொடு பட்டனவாகும்;. கேட்டோர் இதயத்தைத் தகர்க்கத் தக்கனவாகும். இக்காரணங்களினால் நாஞ்சினட்டுக் குடும்பத்திலுள்ள பெண்ணொருத்தியின் வாய்ப் பிறப்பாகவே கதையைப் பிள்ளையவர்கள் அமைத்துள்ளார்கள். தன் சுய சரிதையையே அவளும் கூறுகின்றாள். இச் சுயசரிதையின் மூலமாக எத்தனையோ காட்சிகள் சித்திரிக்கப்படுகின்றன.
உலகமே துக்கமயமாய்கத் தோன்றுகிறது. எல்லாவகை இடையூறுகளையும் நீக்கவல்ல விநாயகக் கடவுளும் இடையூற்றால் நெஞ்சு கலங்கி வருந்தி நிற்பவர்போலத் தோன்றுகிறார். அவரும் மருமக்கள் வழியைச் சார்ந்தவராயிருக்க வேண்டும்; அதனால்தான் துன்புறுகிறா ரெனச் சுயசரிதை கூறும் கதாநாயகி நினைக்கிறாள். இக்கடவுளின் அருகே நிற்கும் ஒரு சிலரிடத்தும் துக்கம் தோன்றுகிறது; ஆனால் மனத்தில் இரக்கமில்லை; ஏழைப் பெண் புலம்புவதில் ஒரு மாத்திரை அதிகமென்று துக்கிக்கிறார்கள். இவர்கள் இலக்கண வித்துவான்கள்; தாடிபற்றி யெரியும்போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக் கேட்கிற இனத்தைச் சார்ந்தவர்கள். இவர்களைத் தனது சோகங்கலந்த சிரிப்பினால் ஒதுக்கிவிட்டுத் தனது கதையைத் தொடங்குகிறாள். துன்பத்திற்கும் வறுமைக்கும் தாயகமாயுள்ள ஒரு குடும்பத்தில் தோன்றினாள்; அநாதை. பஞ்சகலியாணிப் பிள்ளைக்கு ஐந்தாவது மனைவியாய் இவள் வாழ்க்கைப்பட்டாள்; புகுந்தகத்தில் செல்வமிருந்தது; ஆனால் துன்பத்துக்கும் குறைவில்லை. அங்கே அவளுக்குக் கிடைத்தது புழுக்கை யுத்தியோகந்தான்; சக்களத்திகளின் தலையணை மந்திரோபதேசமெல்லாம் இவள் தலையில்தான் விடிந்தது. மாமியின் கொடுங்கோலரசு; இவ்வரசி தாடகைப் பிராட்டியாரின் அவதாரம்; இவள் திருவிளையாடலெல்லாம் பத்துப் பரஞ்சோதிகள் பாடினாலும் முடிவடையாது.
இந்த ஆட்சியில் புது மருமகள்
கஞ்சியோ கூழோ காடி நீரோ
கும்பி யாரக் குடித்ததே யில்லை.
ஒருநாள் தன் மகன் கேலியாகப் பேசத் தொடங்கியது அவனுக்கே கெடுவினையாக முடிந்தது. இதனால் விளைந்த துன்பம்; இதுபோன்ற துன்பங்களிடையில் நகைப்பு - நிகழ்ச்சிகள்; தனது கணவன் மனைவியர் ஐவரோடும் குமரித் தீர்த்தம் ஆடியது (இது தேவர்களுக்கும் ஆனந்தமளிக்கும் திருக்காட்சி); கணவன் தீர்த்த மாடியதன் பயனாக மீளாவுலகம் புகுந்து மீண்டு வந்தது; தான் அடைந்த தாங்கவொண்ணாத் துன்பம்; பின்னர், கணவனது எச்சிற்சோற்றுக்குச் சக்களத்திகள் செய்த சச்சரவு: இவையெல்லாம் மழையிருளும் மின்னலும் போல மாறிமாறிக் காட்சியளிக்கின்றன. காரணவனாகிய தன் கணவனை மருமகனான அவகாசி பழித்து வைகிறான். இங்கே,
ஆரைக் கேட்டுநீர் ஐந்து கலியாணம்
அடுக்கடுக் காகச் செய்தீர் ஐயா?
பட்டப் பெயரும் பஞ்ச கலியாணிப்
பிள்ளை யென்றுநீர் பெற்று விட்டீரே
என்று மருமகன் கூறுவது நகைச்சுவையின் பேரெல்லையைத் தொட்டுவிடுகிறது. மருமகனுக்கு விடையாகக் காரணவன் தனது ஸ்தானத்தின் கௌரவமும் குடும்பத்தின் பெருமையுந் தோன்றச் சொல்லும் சொற்கள் மிகவும் சுவைபொருந்தியவை. ஆலடிமாடன் கொடை, அதில் காரணவன் ‘கணிச்மாக’ அலங்கார உடை தரித்து ஆடுதல், இழவு ‘அடியந்திரம்‘, கோயில்களில் குடும்ப கௌரவத்திற்காக ஏற்படுத்தும் கட்டளைகள், சானல் வாச்சர் (Channel Watcher) சந்தனத் தேவருக்கு ‘அட்ரஸ்‘ கொடுத்தல். மருமகன் ஏழு வருஷமாய் இங்கிலீஷ் படித்து ஏ. பி. ஸி. டி எழுதத் தெரியாமலிருத்தல், மருமகன் ராஜா திருவிளையாடல்கள் இவைகளெல்லாம் நினைக்குந்தோறும் நம்மை விளாவொடியச் சிரிக்கச்செய்கின்றன. மருமகனது தந்தை வீரபத்திர பிள்ளை வந்து அவன் மகனுக்காகச் சண்டையிட்டு
லைய வைய வைரக்கல்லும்
திட்டத் திட்டத் திண்டுக்கல்லும்
ஆகத் தன் கணவர் இருந்த காட்சி பார்ப்போருக்கு நகைக்கிடமாகவும் அவளுக்கு ஆற்றொணாத் துயரத்துக்கிடமாகவும் உள்ளது. பின் குடும்பச் சண்டை முற்றிக் கோர்ட்டுச் சண்டையாக மாறிவிடுகிறது. முதலில் இருந்த வீறாப்புக்கள் வரவரக் குறைகின்றன; குடும்பச் சொத்துக் கரைந்துபோய் விடுகிறது: காரணவருக்குத் தேகவலிமை குன்றிவிடுகிறது; கவலையும் நோயும் பீடிக்கின்றன. முடிவில்,
படிப் படியாய் இப்படி அவர் பாடு
குறைந்து குறைந்து கொண்டே வந்தது;
அண்டை வீடாகி, அறைப்புரை யாகி;
படிப்புரை யாகிப் பாயிலும் ஆனார்;
எழுந்து நடக்க இயலா தானார்?
நடந்தவர் கீழே கிடந்தார், அம்மா!
நோயும் பாயுமாய்க் கிடந்த இக்காரணவருக்கு இரண்டு மனைவியர்களே கடைசிக் காலத்தில் உதவியவர்கள். கடைசிக் காலமும் அமைதியாய்க் கழிந்த பாடில்லை. அவரது தங்கையும் மருமகனும் இருக்கிற பொருள்களைக் காவல் செய்துவைப்பதற்கு வந்து சேர்ந்தார்கள். மருமகனிடத்தில் நல்ல வார்த்தை சொல்லித் தன் மனைவி மக்களைக் காப்பாற்றும்படி சொல்லுகிறார். தங்கை இதைக் கண்டு மிகவும் கோபித்து வைப்புத் திட்டங்களெல்லாம் பூட்டி முத்திரையிடச் செய்கிறாள். கதையைச் சொல்லிவரும் ஐந்தாம் மனைவி,
கணவர்க்கு அந்திய காலம் தண்ணீர்
குடிக்கும் பாத்திரம் குடுக்கை ஆனதும்
பரந்த சட்டி படிக்கம் ஆனதும்
பாலும் அன்னப் பாலே ஆனதும்
எண்ணி யெண்ணி நெஞ்சம் குமுறுகிறாள். எல்லாவற்றிற்கும் மேலாகத் தன் கணவனது அந்திய நிலையில் அவரது ஆத்ம சாந்திக்குத் திருவாசகம் படிக்கத் தன் மகனைச் சொன்னபோது அவன் தன்னால் முடியாதென்று தமிழை இகழ்ந்து சொன்னது இப்பெண்மணியின் நெஞ்சைப் பிளந்து விட்டது. கணவர் முடிவு வந்தது;
ஏங்கி அழுத எங்களை நோக்கினர்;
வாடி அழுத மக்களை நோக்கினர்;
கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர்;
கண்ணை மூடினர், கயிலைபோய்ச் சேர்ந்தனர்.
கதாநாயகியின் துக்கம் நிரம்பிவிட்டது. அவள் கண்களிலும் இதயத்திலும் உதிரங் கொட்டுகிறது; அவள்வயிறு எரிகிறது. அனற்பிழம்பு பெருக்கெடுத் தோடுவதுபோல அவள் சொற்கள் புறப்படுகின்றன; மருமக்கள் வழி,
மனிதரைப் பேயாய் மாற்றும் பாழ்வழி
.........
நடைப்பிணம் ஆயிரம் நடக்கும் வனவழி:
வெவ்வழி, சற்றும் வெளிச்ச மிலாவழி;
இருள்வழி, செல்பவர் இடறும் கல்வழி;
.........
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென்று
அவ்வை சொல்மொழி அறியா மடவழி.
ஐயோ, இவ்வழி ஆகாது, ஆகாது;
ஆடுகள் மாடுகட்கு ஆகும் இவ்வழி
மனிதர் செல்லும் வழியாயிடுமோ?
.........
சுற்றவர் உளரோ! கற்றவர் உளரோ!
பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக்
கற்றவர் உளரோ? கற்றவர் உளரோ!
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!
வறுமைக்கு இரையாய் மக்களை விட்டிடும்
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
மாதர் கண்ணீர் மாறா நிலத்தில்
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
பொய்வழிப் பொருளைப் போக்கும்இந் நிலத்தில்
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
என்று கதறி ஓலமிடுகிறாள் நமது கதா நாயகி.
IV
இப்புதிய கண்ணகியின் ஓலம் வீணாகிப்போய் விடுமா? நாஞ்சினாட்டுப் பெருமக்கள் காதைத் துளைத்துவிட்டது. அவர்கள் இதயக்கோட்டையைத் தாக்கித் தகர்த்துவிட்டது. அவர்கள் குடும்பம் மேன்மை யடைவதற்குரிய சீர்திருத்த மசோதா கொல்லம் ஆண்டு 1101-ல் (1926) சட்டசபையில் நிறைவேறி 1102-ல் அமுலுக்கு வந்தது. இம் மான்மியமே சீர்திருத்தத்திற்குக் காரணமாயிருந்தது.
இம்மான்மியம் திருவனந்தபுரத்திலிருந்து முன் பிரசுரிக்கப்பட்டு வந்த ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் 1917-ம் வருஷம் மார்ச்சு மாதம் தொடங்கிப் பகுதி பகுதியாக வெளிவந்து கொண்டிருந்தது. 1918 பெப்ருவரியோடு முற்றுப்பெற்றது. அக்காலத்தில் அப்பத்திரிகையின் ஆசிரியராயிருந்தவர்கள் பண்டித எஸ். முத்துசாமிப் பிள்ளையவர்களும் திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரி மலையாளப் பேராசிரியர் சி. என். ஏ. அனந்தராமைய சாஸ்திரிகளும் ஆவார்கள்.
பத்திரிகையில் ஆசிரியர் பெயரோடு மான்மியம் வெளிவரவில்லை. பழைய ஏட்டுச் சுவடியில் இருந்த நூலை அச்சிற் பதிப்பிக்கிற பாவனையிலே வெளியாகிக்கொண்டிருந்தது. ஆசிரியர் பெயர் காணப் பெறாவிட்டாலும், பழய நூல் என்ற தோற்றத் தோடு பிரசுரமாகிய போதிலும், இத்தோற்றத்தை உறுதிப் படுத்துவதற்கு நூலிற் சிற்சில வரிகளும் சொற்களும் பொடிந்து போயின என்று குறிப்பிட்டிருந்த போதிலும், எழுதியவர்கள் இன்னார் தாமென்றது பலருக்குத் தெரிந்த இரகசியமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு பகுதியும் வெளிவர வெளிவர, தமிழ்மக்கள் அதனை ஆவலாய் வாங்கிப் படித்து வந்தார்கள். இலக்கியச் சுவையிலே ஈடுபட்ட ஸ்ரீ கே. ஜி. சேஷையர் முதலானவர்கள் இந்நூலின் பெருமையைப் பலரும் அறியச் செய்து வந்தார்கள். நாஞ்சினாட்டு வேளாள இளைஞர்கள் இதனை வாசித்து உள்ளங்கொதித்தார்கள்; அவர்களில் முதியோர்கள் இதனை வாசித்த அளவில் இதிலே பொதிந்துகிடக்கும் உண்மையையும் சீர்திருத்தத்தின் அவசியத்தையும் உணர்ந்தார்கள். அந்நாட்டு ஆண்களும் பெண்களும் நூலிலுள்ள நகைச்சுவையில் ஈடுபட்டு உளத்தாற் சிரித்து மகிழ்ந்தார்கள். தமிழிலே ஒரு நூதன இலக்கியம் தோன்றிவிட்டது.
மான்மியம் ஒரு சமுதாயத்தில் சீர்திருத்தத்தை விளைத்தது. அப்படியே தமிழ் நடையிலும் கவிஞர் சமுதாயத்திலும் சீர்திருத்தத்தை இது விளைவிக்க வல்லது என்பதைத் தமிழ் அறிஞர்களுக்குத் தெரி வித்துக்கொள்ளுகிறேன்.
சென்னை ஸர்வகலாசாலை, 20-11-42. |
எஸ். வையாபுரிப் பிள்ளை, |