மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி

விக்கிமூலம் இலிருந்து

( அங்கதக் காவியம்)[தொகு]

விநாயகர் வணக்கம்[தொகு]

எம்பெரு மானே! இணையடி பரவும்
அன்பினர் வேண்டிடும் அவையெலாம் அளிக்க
யானை நீள்கரம் ஏந்திய கடவுளே!
உலகெலாம் போற்றும் ஒருவனே! உனது
தந்தையோ,

"நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ஒரு சமுதாய அங்கதப் பாட்டாகும். நகைச்சுவையும் கிண்டலும் நிறைந்த அப்பாட்டுக்கு நிகரானதொரு ‘அங்கதப்பாட்டு’ இதுகாறும் தமிழில் தோன்றவில்லை.” -தமிழண்ணல்

அங்கதம்-மேலை நாட்டார் விளக்கம்:

“மனித இனத்தின் அல்லது தனிப்பட்ட மனிதனின் தீயகுணங்கள் அல்லது குறைபாடுகள் அல்லது மூடத்தனமான செயல்கள் ஆகியவற்றைக் கேலியாகவோ, 'குறிப்பு முரண்' (ஐரணி) ஆகவோ, வேறுவிதமாகவோ வெளிக்கொணர்ந்து, அதன்மூலம் அவற்றைத் திருத்திக் கொள்ள மனிதரைத் தூண்டும் இலக்கியப் படைப்பே அங்கதம் எனப்படும்” -பிரிட்டானிகா கலைக் களஞ்சியம்
"சமூகத்தின் போலி ஒழுக்கம், சொல்லுக்கும் செயலுக்கும் இடையேயுள்ள முரண்பாடு முதலிய சமுதாயக் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கண்டித்துத் திருத்துவதே அங்கதப் பாடல்களின் நோக்கமாகும் என்பது மேனாட்டார் கருத்து.” -முனைவர் வை. கிருஷ்ணமூர்த்தி.
நூல்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் படைப்புகள், 2007.


என்றும் கையில் தலையோ டேந்தி
இரந்து திரிவான் இருப்பிட மில்லான்,
அம்பலந் தோறும் ஆடி அலைவான்,
அமிழ்தென நஞ்சையும் அள்ளி உண்பான்,
பித்த னாகிப் பேயொடு குனிப்பான்,
நாடிய பொருளெலாம் நாசஞ் செய்வான்,
மாமனோ,
பூமக ளோடும் புவிமக ளோடும்
மதித்திட அரிய வளமெலாம் ஒருங்கு
வைகுந் திவ்விய வைகுந் தத்தில்
ஆயிரம் பணாமுடி அரவணை மீதே
அறிதுயி லமர்ந்திவ் வகில மெல்லாம்
ஆளும் பெரிய அண்ணலே யாயினும்
கபட நாடகன், கையிற் சக்கரம்
இருந்தும் எவர்க்கும் ஈயாக் கள்வன்;
ஆதலின், நீயும்
தந்தை வீடென மதிப்பிட மின்றிச்
சந்தியும் தெருவும் தண்ணீர்க் கரையும்
மரத்தி னடியும் வாழிட மாக
இருந்தனை உன்போல் இருவழி கட்கும்
இடைவழித் தங்கி இடர்ப்படும் எங்கள்
வருத்த மெல்லாம் அறிந்திட வல்லவர்
அறிந்து முற்றும் அகற்றிடும் நல்லவர்
நடுநிலை கண்ட நாயகர் வேறிங்கு
ஒருவரும் இல்லையுன் திருவடி பணிந்து
மருமக் கள்வழி மான்மியம் பாடத்
தொடங்கினன், வந்து துணைநின் றிந்நூல்
இனிது முடிய இதயம்
கனிவு செய்தெனக் காத்தருள் வாயே......(35)

எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் முன்னுரையிலிருந்து

“இம்மான்மியம், திருவனந்தபுரத்திலிருந்து முன் பிரசுரிக்கப்பட்டு வந்த தமிழன் என்ற பத்திரிகையில் 1917-ஆம் வருஷம், மார்ச்சு மாதம் தொடங்கிப் பகுதி பகுதியாக வெளிவந்து கொண்டிருந்தது. 1918-பெப்ருவரியோடு முற்றுப்பெற்றது. அக்காலத்தில் அப்பத்திரிக்கையின் ஆசிரியராயிருந்தவர்கள் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளையவர்களும், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி மலையாளப் பேராசிரியர் சி.என்.ஏ. அனந்தராமைய சாஸ்திரிகளும் ஆவார்கள்.
பத்திரிகையில் ஆசிரியர் பெயரோடு ‘மான்மியம்’ வெளிவரவில்லை. பழைய ஏட்டுச்சுவடியில் இருந்த நூலை அச்சிற் பதிப்பிக்கிற பாவனையிலே வெளியாகிக் கொண்டிருந்தது. ஆசிரியர் பெயர் காணப்பெறாவிட்டாலும், பழைய நூல் என்ற தோற்றத்தோடு பிரசுரமாகிய போதிலும் இத்தோற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு நூலிற் சிற்சில வரிகளும் சொற்களும் பொடிந்து போயின என்று குறிப்பிட்டிருந்த போதிலும் எழுதியவர்கள் இன்னார்தாமென்பது பலருக்குத் தெரிந்த இரகசியமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு பகுதியும் வெளிவர, வெளிவரத் தமிழ் மக்கள் அதனை ஆவலாய் வாங்கிப் படித்து வந்தார்கள். இலக்கியச் சுவையிலே ஈடுபட்ட ஸ்ரீ கே.ஜி. சேஷையர் முதலானவர்கள் இந்நூலின் பெருமையைப் பலரும் அறியச்செய்து வந்தார்கள்.
நாஞ்சினாட்டு வேளாள இளைஞர்கள் இதனை வாசித்து உள்ளங் கொதித்தார்கள். அவர்களில் முதியோர்கள் இதனை வாசித்த அளவில் இதிலே பொதிந்து கிடக்கும் உண்மையையும், சீர்திருத்தத்தின் அவசியத்தையும் உணர்ந்தார்கள். அந்நாட்டு ஆண்களும் பெண்களும், நூலிலுள்ள நகைச்சுவையில் ஈடுபட்டு உள்ளத்தாற் சிரித்து மகிழ்ந்தார்கள். தமிழிலே ஒரு ‘நூதன இலக்கியம்’ தோன்றிவிட்டது.
மான்மியம் ஒரு சமுதாயத்தில் சீர்திருத்தத்தை விளைத்தது, அப்படியே தமிழ்நடையிலும், கவிஞர் சமுதாயத்திலும் சீர்திருத்தத்தை இது விளைவிக்க வல்லது என்பதைத் தமிழ் அறிஞர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.” (20-11-1942)

அவையடக்கம்[தொகு]

அருந்தமிழ் அகத்தியன் ஆராய்ந் திடவும்
கேள்வியிற் பெரியநக் கீரன் கேட்கவும்
கல்வியிற் பெரியனாம் கம்பன் காணவும்
இயற்றிய நூலிதென் றெண்ணவும் படுமோ?
மருமக் கள்வழி யென்னும் வனத்தில்
புலிகள் சூழுமோர் புல்வாய் போல
வலையிற் படுமோர் மணிப்புறாப் போல
கொள்கொம் பற்றுத் துவள்கொடி போல
ஒருத்தி ஏழை ஒருதுறை யில்லாள்
தானும் மக்களும் தமிய ராகிப்
பொறியும் கலங்கிப் போதமும் கெட்டுப்
புலம்பும் பொழுது புண்ணீய சீலரே!
தொல்காப்பியமுதல் பல்காப் பியங்களும்
கற்றுத் தெளிந்த கவிவல் லோரே!
விகார முற்றும் விரவி வருதலால்
பொருட்சுவை சொற்சுவை பொருந்திவந் திடுமோ?
எதுகை மோனை இசைந்துவந் திடுமோ?
அணிகள் பற்பல அடுக்கிவந் திடுமோ?
ஆதலின், இதனைப்
பதவியும் பணமும் படிப்பு மிலாதேன்
பஞ்சப் பாட்டெனப் படித்திக ழாதீர்.
இலக்கண வழூஉக்கள் இருப்பினும் அவற்றை
வலித்தல் மெலித்தலாய் மதித்துக் கொண்மின்
நீட்டல் குறுக்கலாய் நினைத்துக் கொண்மின்
விரித்தல் தொகுத்தலாய் விளக்கிக் கொள்மின்
பழைய திரிதலாய்ப் படித்துக் கொண்மின்
இன்னும்,
அமைக்கும் விதியறிந் தமைத்துக் கொண்மின்
நாயேன்,
கொண்ட கருத்தைக் குறைவறக்
கண்டு கொள்வது பெரியவர் கடனே. (32)


பார்க்க[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
1.குலமுறை கிளத்துப் படலம்
2.மாமி அரசியற் படலம்
3.கேலிப் படலம்
4.கடலாடு படலம்
5.பரிகலப் படலம்
6.நாகாஸ்திரப் படலம்
7.கருடாஸ்திரப் படலம்
8.வாழ்த்துப் படலம்
9.கோடேறிக் குடிமுடித்த படலம்
10.யாத்திரைப் படலம்
11.கும்பியெரிச்சல் படலம்
கவிமணியின் கவிமலர்கள்