உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/ஆனை வெடி

விக்கிமூலம் இலிருந்து

டப்டப்’ பென்ற சப்தமே
நான்கு திசையும் கேட்டது.
குப்பன் உடனே தெருவிலே
குதித்து ஓடி வந்தனன்.

சீனு, ராமு இருவரும்
சேர்ந்து அங்கே நின்றனர்.
சீன வெடியைக் கொளுத்தியே
தெருவில் எறிய லாயினர்.

சீன வெடிகள் யாவுமே
தீர்ந்து போன பிறகுமே
ஆனை வெடியைக் கொளுத்தினர்.
அதனை வீசி எறிந்தனர்.

கீழே விழுந்த வெடியுமே
கிளம்பி வெடிக்க வில்லையே.
கோழை போலக் கிடந்தது!
கொஞ்சம் நேரம் ஆனது.


சப்த மில்லை, புகையில்லை,
சாது போலக் கிடப்பதைக்
குப்பன் கண்டான். கண்டதும்
கூற லானான் பிறரிடம்:

நெருப்பு அணைந்து போனது.
நீண்ட நேரம் ஆனது.
அருகில் சென்றே எடுத்திட
ஐயோ! அச்சம் கொள்வதேன்?

பயந்து நடுங்கும் புலிகளே!
பார்ப்பீர், அதனை எடுக்கிறேன்;
தயங்க மாட்டேன்” என்றனன்,
தாவி அருகில் சென்றனன்.

கிட்டச் சென்று வெடியினைத்
தொட்டுப் பார்க்கும் முன்னரே
பட்பட்’ டென்று வெடித்தது!
பாய்ந்து முகத்தில் அடித்தது!

குப்பன் அந்த இடத்திலே
குட்டிக் கரணம் போட்டனன்!
தப்பிப் பிழைத்து விட்டனன்,
சாமி புண்ணி யத்தினால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/ஆனை_வெடி&oldid=1738507" இலிருந்து மீள்விக்கப்பட்டது