உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/ஆரம்பப் பள்ளியும் கல்லூரியும்

விக்கிமூலம் இலிருந்து

கல்லூரி :
உயிரெ ழுத்தும் மெய்யெ ழுத்தும்
ஒன்று ஒன்றாய்க் கூறியே
உயிரெ டுக்கும் பள்ளி யேஇவ்
வுலகில் நீதான் உயர்வோசொல்?

ஆரம்பப் பள்ளி :
பெரியோர், சிறியோர் என்ற பேதப்
பேச்சு ஏனோ? நண்பரே.
பெரிய கட்டி டத்தி னாலே
பெருமை வந்து சேருமோ?

கல்லூரி :
பட்டம் பலவும் பெற்றுச் சர்க்கார்
பதவி ஏற்று வாழவே
திட்ட மான கல்வி தன்னைத்
திறமை யோடு தந்ததார்?


ஆ. பள்ளி:
கையி லுள்ள பணமும் போகக்
கடனும் வாங்கி உன்னிடம்
பையன் பட்டம் பெறவே கொட்டிப்
பலன் பெறாதோர் எத்தனை?

கல்லூரி :
நாக ரிகம் என்ன தென்று
நன்கு காட்டி மாந்தர்கள்
வேக மாக மொழியைக் கற்க
வேண்டும் சக்தி தந்ததார்?

ஆ.பள்ளி :
கழுத்தில் ‘டை’யும், தலையில் ‘ஹேட்’டும்,
காலில் ‘பூட்’ஸும் அணிவோரும்
எழுத்துக் கூட்டிக் கற்றி டாமல்
எப்ப டிமுன் னேறினர்?

கல்லூரி :
என்னி டத்தில் பட்டம் பெற்றார்
எத்த னைபேர் தெரியுமோ?
எண்ணில் லாத பேர்க ளென்று
ஏனோ அறிய வில்லைநீ?


ஆபள்ளி :
நூற்றில் ஒன்றி ரண்டு பேரே
நுழைந்தார், உன்றன் வீட்டிலே.
வீட்டி லுள்ள பால ரெல்லாம்
விரும்பி வந்த தாரிடம்?

கல்லூரி :
சின்னஞ் சிறிய பள்ளி யேநீ
சிறிதும் பணிவு இன்றியே
என்ன, எதிர்த்துப் பேசுகின்றாய்?
எண்ணிப் பேசு என்னிடம்.

ஆபள்ளி :
ஏணி யாக என்னை வைத்தே
ஏறி வந்தார், உன்னிடம்.
வீணில் ஏனோ சண்டை? நான்தான்
வித்து என்ப துணருவாய்!